ரிச்சர்ட் ரமிரேஜ் தன்னை ஒரு சாத்தானிஷ்டாக வெளிப்படுத்திக்கொண்டான். அவனது விசாரணைகளின் போது கூட சாத்தான் பற்றிய குறிப்புகள் பலவற்றை அவன் கூறியுள்ளதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். அவனது மணிக்கட்டில் ‘பெண்டாக்ராம்’ எனப்படும் நட்சத்திரத்தைச் சுற்றி வட்டம் இருப்பது போன்ற அடையாளத்தை டாட்டூவாகப் போட்டிருந்தான். அது சாத்தான் வழிபாட்டில் இருக்கும் ஒரு சின்னமாகும். அவன் செய்த குற்றங்களுக்கான விசாரணை 1989ல் ஆரம்பித்தது. அந்தாண்டு செப்டம்பரில் பதிமூன்று கொலைகள் மற்றும் இதர பிற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ரமிரேஜ் செய்த குற்றங்கள் மனிதர்களால் புரிந்துகொள்ளக்கூடிய அளவைத் தாண்டிய குரூர குணத்துக்கும், அலட்சியத்துக்கும், தீய எண்ணங்களுக்கும் காலங்காலமாக உதாரணமாக இருக்கும் என்றார். தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது கூட ரமிரேஜ் அதற்காக வருந்தவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்டு சான் – க்விண்டின் மாகாண சிறைச்சாலையில் இருந்தபோது ரமிரேஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவனது மரண தண்டனை வரிசை வரும் முன்னரே 2013ல் இறந்து போனான். புத்திச்சாலித்தனமாக செய்த குற்றங்களை மறைக்கலாம். ஆனால் கடவுளின் தண்டனையிலிருந்து யாரும் தப்ப முடியாதென்பதற்கு ரமிரேஜ் உதாரணமாகிப்போனான்.
-From Britanica
இதன்யா கடுங்கோபத்தோடு எழுந்து அமர்ந்தாள். குகையைச் சுற்றி பார்த்தவளுக்கு இது அவர்கள் சோதனையிட்ட காட்டு குகையில்லை என்பது புரிவதற்கு அதிக நேரமெல்லாம் ஆகவில்லை.
அங்கே ஆளுயரத்தையும் தாண்டி நின்ற சாத்தான் சிலையின் அமானுஷியத்தைக் காட்டு குகையிலும் பார்த்திருக்கிறாள். அப்படி என்றால் இது எந்த இடம்?
ஏகலைவன் அவளைத் தூக்கி வருகையில் முகத்திரையில் கண்களுக்கு மட்டும் இருக்கும் மெல்லிய துணி வழியே கண்களைத் திறந்து பார்த்தால் அவனுக்குச் சந்தேகம் வந்துவிடக்கூடாதென கண் மூடியே வந்து சேர்ந்தாள்.
இப்போது இது என்ன இடமென புரியாமல் அவள் குழம்பிய போதே ஏகலைவனின் ஆணவப்பேச்சு ஆரம்பித்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“முபீனாவை வச்சு உன்னை இங்க வரவழைச்சிடலாம்னு திட்டம் போட்டேன்… ஆனா நீ வழிய வந்து மாட்டிக்கிட்ட இதன்யா… இந்தத் தடவை என் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது… என்ன? பயமா இருக்கா?” என்றான் அவன்.
இதன்யா ஒரு நொடி திகைத்து விழித்தவள் பின்னர் சுதாரித்தாள். இவனிடம் எனக்கென்ன பயம் என்ற அவளது பழைய கம்பீரம் மீண்டது.
அலட்சியமான உதட்டுவளைவுடன் “உன் மேல எனக்குப் பயம் இருந்தா நான் ஏன் இங்க வந்திருக்கப்போறேன்? ஃபர்ஸ்ட் ஆப் ஆல், பயப்படுற அளவுக்கு நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? நீயே ஒரு சைக்கோபதி பேஷண்ட்… போதாக்குறைக்கு உனக்கு போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸ்சார்டர் வேற இருக்குதாமே… த்சூ… உன்னை மாதிரி ஆளுங்களைப் பாத்தா எனக்குப் பயம் வராது ஏகலைவன்… பரிதாபம் தான் வரும்” என்று சொன்னவள் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவனைத் தைரியமாகப் பார்த்தாள்.
ஏகலைவனின் முகத்தில் இவ்வளவு நேரம் இருந்த ஆணவச்சிரிப்பு மங்கியது. புருவங்கள் நெறிய இதன்யாவை வெறித்தவன் “இன்னும் கொஞ்சநேரத்துல யாரோட நிலமை பரிதாபமாகப் போகுதுனு பாக்கலாமா? துப்பாக்கி இருக்குற தைரியத்துல பேசுறியா? அதை எடுத்து வச்சுட்டு பேசுடி.. அப்ப ஒத்துக்குறேன் நீ தைரியசாலினு” என்று சவால் விட்டான்.
இதன்யா அணிந்திருந்த புர்காவைக் கழற்றி ஒழுங்காக மடித்து வைத்தாள். முபீனாவுடையது. திருப்பிக் கொடுக்கும்போது வாங்கிய போது எப்படி இருந்ததோ அப்படியே கொடுப்பது தானே முறை.
அவள் தனது சவாலைக் கண்டுகொள்ளவேயில்லை என்றதும் ஏகலைவனுக்குள் மெதுவாக கோபம் சுடர்விட ஆரம்பித்தது.
“சைக்கோபாத்தோட முதல் ஆயுதம் அவனோட இரையோட பயம்… அந்தப் பயத்தை தன்னோட பலமா மாத்திப்பான்… அதனால அவனை ஃபேஸ் டூ ஃபேஸ் சந்திக்குற சூழல் வந்தாலும் பயப்படக்கூடாது… நியாயப்படி ஒரு சைக்கோபாத் பரிதாபத்துக்குரியவன் தான்”
இனியாவின் கொலைக்காக முன்பே இதன்யா சைக்கோபதி பற்றி கேட்டறிந்த அதே மனநல நிபுணரின் அறிவுரை இது. கொலைகாரன் சைக்கோபாத் என்றதுமே அவரிடம் வாங்கிய அறிவுரைகளில் இதுவும் ஒன்று.
பயத்தை வெளிக்காட்டாமல் நின்றவள் “எதுக்காக துப்பாக்கிய எடுத்து வச்சுட்டு உன் கிட்ட நான் மோதணும்? சினிமால நீ மானமுள்ள ஆம்பளைனா ஒண்டிக்கு ஒண்டி மோதுனு வில்லன் சவால் விடுவானே, அதே போல சார் ட்ரை பண்ணுறிங்க… வெரி குட்… பட் உன்னோட இந்தச் சில்லறை சவாலை ஏத்துக்கிட்டுத் தான் நான் தைரியமானவனு ப்ரூவ் பண்ணவேண்டிய அவசியம் எனக்கு இல்ல… நீ என்னை முபீனாவை வச்சு ட்ராப் பண்ணி இங்க வரவழைக்க நினைச்சது எதுக்காக? என்னைக் கொலை பண்ணுறதுக்குத் தானே? கம் ஆன், முயற்சி பண்ணி தான் பாரேன்” என்று அவனைச் சீண்டிவிட கொஞ்சம் கொஞ்சமாக அவனது கோபம் அதிகரித்துக்கொண்டே போனது.
“சைக்கோபாத்தோட அடுத்த ஆயுதம் சாமர்த்தியமான பேச்சு… அவங்களால பேசி பேசி ஒருத்தரோட மைண்டை மேனிபுலேட் பண்ணிட முடியும்… அவங்க பேச்சு சாமர்த்தியத்துல விழாம இருக்குறது நம்ம உயிருக்கு நல்லது… சில நேரம் அவங்க அப்பாவித்தனமா பேசி அழ வச்சு காரியம் சாதிச்சுப்பாங்க… சில நேரம் பேச்சுலயே பயமுறுத்தி நினைச்சதை நடத்திப்பாங்க… அவங்களோட மேனிபுலேட்டிவ் ஸ்பீச்ல விழுந்துடக்கூடாது”
‘அட்வைஸ் நம்பர் டூ’
ஏகலைவன் நெறித்த புருவங்களுடன் இதன்யாவை நெருங்கி வர அவள் இடையில் உறங்கிய துப்பாக்கி இப்போது விழித்துக்கொண்டு கரத்தில் ஏறியமர்ந்தது.
“சரண்டர் ஆகிடு ஏகலைவன்… அது தான் உனக்கு நல்லது” என்றாள் கடமை தவறாத காவல் அதிகாரியாக.
அவனைச் சுட்டுப் பிடிக்கும் ஆணை இன்னும் அவள் கைக்கு வரவில்லை. முடிந்த வரை அவனைச் சரணடைய செய்ய முயல்வோமே என நினைத்தாள்.
ஏகலைவனின் திட்டமோ வேறு! கண்கள் பளபளக்க அவளை நெருங்கியவன் துப்பாக்கியைப் பறிக்க முயல இருவருக்குமிடையே இழுபறி ஆரம்பமானது. அதில் இதன்யாவின் கை துப்பாக்கியின் விசையை அழுத்திவிட்டது.
பெரும் சத்தத்தோடு துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா குகையின் மேல்பகுதியில் மோதியது. இருவருக்கும் காயமில்லை. ஆனால் துப்பாக்கியின் குண்டுக்கு இணையான எதிர்விசை அவர்களைக் கொஞ்சம் தடுமாற்றம் கொள்ள வைத்தது. அதில் சுதாரித்த இதன்யா துப்பாக்கியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஏகலைவனைக் கீழே தள்ளினாள்.
அவன் தடுமாறி விழுந்ததை பயன்படுத்திக்கொண்டு அவனருகே முட்டிக்காலிட்டு அமர்ந்து துப்பாக்கியை அவனது நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தியவள் “சரண்டர் ஆகிடு ஏகலைவன்… உனக்கு நான் குடுக்குற கடைசி சான்ஸ் இது” என்று எச்சரித்த அடுத்த நொடியில் அவளது கன்னம், காது, தலையின் பக்கவாட்டை அசுரத்தனமாகத் தாக்கியது பாறைத்துண்டு ஒன்று.
தலைக்குள் பூகம்பம் நடந்தது போல அதிர்ச்சியும் வேதனையும் அவளை ஆட்கொள்ள பாறைத்துண்டு மோதிய வேகத்தில் இரத்தம் பீறிட்டு முகத்தின் பக்கவாட்டில் வழிந்தோட கண்கள் இருட்டி பார்வை மங்கி மயங்கிவிழுந்தாள் இதன்யா.
“அட்வைஸ் நம்பர் த்ரீ… எக்காரணத்தை கொண்டும் சைக்கோபாத் நம்மளை நெருங்காம பாத்துக்கணும்… ஏன்னா அவங்க மூளை சின்ன இடைவெளிய பயன்படுத்தி கூட நம்மளை காயப்படுத்தி அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர அசுரத்தனமா யோசிக்கும்… எப்பவுமே தப்பிக்கணும்னு நினைக்குறவனை விட கொல்லணும்னு நினைக்குறவனுக்குத் தான் தப்பிக்குற வழிகள் என்னென்னனு தெளிவா தெரியும்… அந்த வழி அத்தனையையும் அடைச்சு இரையை தாக்குறதுக்கான உபாயத்தையும் கண்டுபிடிப்பான் அவன்… அவன் நம்மளைத் தாக்குற தொலைவுக்கு வர்றதுக்கு முன்னாடி சமயோஜிதமா யோசிச்சு தூரத்தை அதிகப்படுத்திக்கணும்… தப்பிக்க என்னென வழி இருக்குனு சடுதியில யோசிக்கணும்… இதெல்லாம் விட அவன் நம்ம கிட்ட சண்டைக்கு வந்தா தப்பிச்சு ஓட நினைக்கணுமே தவிர நம்மளோட புஜபல பராக்கிரமத்தைக் காட்ட கிடைச்ச வாய்ப்பா அதை நினைக்கக்கூடாது”
மூன்றாவது அறிவுரையை முறையாகக் கடைபிடித்திருந்தால் இதன்யா சாமர்த்தியமாக ஏகலைவன் அவளை நெருங்கியபோதே முழங்காலில் சுட்டுவிட்டு எதிர்த்திசையில் ஓடி குகையின் வாயிலுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அவள் அதை விடுத்து அவனை இன்னும் நெருங்கவிட்டுவிட்டாள். பலன் இதோ இப்போது விழுந்து கிடக்கிறாள்.
அவள் உதிரம் வழிய சரிந்ததும் வெற்றிப்புன்னகையோடு எழுந்தான் ஏகலைவன்.
“தேவா! ஏமாறிப் பழகாத நான் உனக்காக யோசிச்சு இதுவரை மூனு தடவை ஏமாந்துட்டேன்… முதல் ரெண்டு தடவை என்னை ஏமாற்றத்துக்கு ஆளாக்குனவங்களுக்குத் தகுந்த பாடத்தைக் கத்துக் குடுத்துட்டேன்… இவ எனக்கு ஏமாற்றத்தைக் குடுத்த மூனாவது ஆள்… இவளுக்கும் பாடம் கத்துக் குடுத்தா தானே வருங்காலத்துல தேவா பேரைச் சொல்லி ஏகலைவனை ஏமாத்துற தைரியம் யாருக்கும் வராது”
கண்கள் பளபளக்க அவளைப் பார்த்தவன் குகையில் தயாராக வைத்திருந்த பெரிய பாறையை எடுத்தான்.
அந்தப் பெரிய பாறையைச் சாதாரணமான உடல் கொண்ட ஆண்மகனால் அசைக்கக்கூட முடியாது. ஏகலைவனின் கட்டுக்கோப்பான உடலும், சைக்கோபதி பாதிப்பு கொடுத்த அசுரபலமும் அப்பாறையைத் தூக்க அவனுக்கு உதவியது.
“இனியாவை உருக்குலைச்சு கொன்னேன்… இன்னொருத்திய இருந்த இடம் தெரியாம அனுப்பி வச்சிட்டேன்… ஆனா உனக்கு ரெண்டும் கலந்த சாவைப் பரிசா குடுக்கப்போறேன்… இந்தப் பாறை உன்னை உருக்குலைச்சிடும், உன் உடம்புல இருந்த பாகங்களை இருக்குற இடம் தெரியாம நசுக்கிடும்… என் கண்ணு முன்னாடி ஒருத்தன் கூட ரொமாண்டிக்கா போஸ் குடுத்தியே, அவன் உன்னை பொட்டலம் கட்டி தூக்கிட்டுப் போவான்டி… நான் தூக்கிட்டுப் போக வைப்பேன்” என்று வெறியோடு சொன்னபடி இதன்யா மீது பாறையைத் தூக்கி வீசப் போனவன் அடுத்த நொடி தடுமாறி கீழே விழுந்தான்.
பாறையோ அவனது தலைமாட்டில் ‘டொம்’மென்ற சத்தத்தோடு விழுந்து உருண்டு போனது.
தன்னை நெருங்கியவனின் காலைத் தனது காலால் இடறி இவ்வளவு நேரம் மயங்கி கிடந்தவளைப் போல நடித்த இதன்யா முடிந்தளவு வேகமாக எழுந்தாள். நல்லவேளையாக விழுந்தவளின் துப்பாக்கி அவளது உடலின் அடியில் தான் கிடந்தது.
அதை எடுத்துக்கொண்டவள் அவன் எழுந்து நிற்கவும் தட்டுத்தடுமாறி துப்பாக்கியால் ஏகலைவனின் காலைக் குறி வைத்தாள். அவன் சுதாரிக்கும் முன்னர் முழங்காலுக்குக் கீழே சுடவும் செய்தாள்.
“ஆஆஆஆஆ”
ஏகலைவனின் அலறல் சத்தம் அந்தக் குகையெங்கும் எதிரொலித்தது. காலில் துளைத்த தோட்டாவின் வலியை விட இதன்யாவை உயிரோடு விடுகிறோம் என்ற எண்ணம் கொடுத்த வலியே அவனுக்கு அதிகம்.
அதன் விளைவாக கால் வலியையும் மீறி பேய்பலத்தோடு இதன்யாவை நோக்கி வந்தவன் ஓடி வந்தவன் க்ஷண நேரத்தில் அவளது கழுத்தைத் தனது வலிய கரத்தால் நெறிக்க ஆரம்பித்தான்.
இதன்யா மூச்சுக்குத் திணறி கையிலிருந்த துப்பாக்கியைத் தவறவிட வெறிகொண்டவனைப் போல சிரித்தான் ஏகலைவன்.
“நீ செத்துப் போயிடு இதன்யா… அப்ப தான் ஜெயிச்ச சந்தோசத்தோட என்னால மீதி நாளை ஜெயில்ல கழிக்க முடியும்… நீ சாகலனா ஏகலைவா நீ ஒரு ஏமாளிடானு காலம் முழுக்க என் மனசாட்சி என்னைக் கேலி பேசும்… தி கிரேட் ஏகலைவன் ஏமாளியா நாளைக் கழிக்கலாமா? ஹான்?”
சிவந்த கண்களை உருட்டி அவன் உறுமிய விதம் விசாரணையின் போது ஒவ்வொரு சாட்சியும் ஏகலைவனைச் சாத்தான் விளித்தது ஏன் என்று புரியவைத்தது இதன்யாவுக்கு. சரியாகச் சாத்தானின் சிலைக்கு நேராக நின்று அவளது கழுத்தை நெறித்துக்கொண்டிருந்தவனின் தலைக்கு மேலே அச்சிலையின் தலையிலிருந்த கொம்புகள் தெரிய இப்போது மெய்யாகவே இதன்யாவின் கண்களுக்குச் சாத்தானாகத் தெரிந்தான் ஏகலைவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

