ரிச்சர்ட் ரமிரேஜ் சீரியல் கொலைகாரன் மட்டுமல்ல, கற்பழிப்பு, வழிப்பறி என அவன் மீது ஏகப்பட்ட குற்றங்கள் உண்டு. எண்பத்து நான்கிலிருந்து ஐந்து வரை அவனால் கலிபோர்னியாவில் கொல்லப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மட்டும் பதிமூன்று. இவனை ‘நைட் ஸ்டாக்கர் (Night Stalker)’ என்று புனைப்பெயரிட்டு அழைத்தார்கள். இவன் டெக்சாஸிலுள்ள எல்பாசோவில் வளர்ந்தான். அவனைப் பற்றி கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்களின்படி ரிச்சர்ட்டின் கசின் வியட்னாம் போரில் கலந்துகொண்டு அங்கே அவன் பெண்களை கொடுமைப்படுத்தி வன்புணர்வு செய்து கொலை செய்த புகைப்படங்களை ரிச்சர்டிடம் அடிக்கடி காட்டியிருக்கிறான். ரிச்சர்டின் பதிமூன்றாவது வயதில் அந்த கசின் அவனுடைய மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதை ரிச்சர்ட் கண் முன்னே பார்த்திருக்கிறான். அதைத் தொடர்ந்து அவனால் படிப்பைத் தொடர இயலாமல் போக லாஸ் ஏஞ்சலஸ் சென்றவன் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு தொடர் குற்றங்களில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறான். 1984ல் முதல் கொலையை இவன் செய்திருக்கிறான். 79 வயதான விதவை பெண்மணி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்து கத்தியால் குத்தி கொலை செய்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே ஆண்டில் ஒன்பது வயது சிறுமியைக் கொலை செய்ததாகவும் அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவன் கொலை செய்த இடங்களில் எல்லாம் சாத்தானிஷம் தொடர்பான அடையாளங்களை விட்டு செல்வதை வழக்கமாக்கியிருக்கிறான்.
-From Britanica
மகேந்திரனும் மார்த்தாண்டனும் தங்களது காவல்துறை குழுவினரோடு காட்டில் சல்லடை போடு சலிக்காத குறையாக ஏகலைவனைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இடையிடையே வாக்கி-டாக்கி மூலம் ஒரு குழுவினர் மற்றொருவரோடு ஏகலைவன் கிடைத்தானா என்று விசாரிக்கவும் தவறவில்லை.
அவர்களின் கெட்டநேரம் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இந்நிலையில் முரளிதரனும் அவர்களுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இரு குழுவினரும் காடு முழுவதும் கால் கடுக்கத் தேடியபோதே விஷப்பூச்சிகள், சிறு விலங்குகள் எதிர்ப்பட்டன. காவல்துறையினராக இருந்தாலும் உயிர்ப்பயம் அனைவருக்கும் இருக்குமல்லவா!
இத்தனை இடையூறுகளுக்கிடையே இதன்யா குறித்து காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்தார் முரளிதரன்.
“இதன்யா மேடம் ஸ்டேசன்ல இருந்து கிளம்பிட்டாங்கல்ல?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இல்ல சார்… மேடம் ஸ்டேசனுக்கு வரவேல்ல” என்றார் ஏட்டு.
“வாட்?” என்று அதிர்ந்தவர் “ஒன்னு பண்ணுங்க, மேடம் ஜி.ஹெச் பக்கத்துல வாட்ச் பண்ணுற டீமோட இருக்காங்களானு செக் பண்ணிட்டு எனக்குக் கால் பண்ணுங்க” என்று கட்டளையிட்டவர் “அப்பிடியே போலீஸ் குவாட்டர்ஸ்ல மேடமோட ஹஸ்பெண்ட் கிட்ட அவங்க எப்ப கிளம்புனாங்கனு விசாரிங்க” என்று சொல்லும்போதே நெட்வொர்க் தகறாரில் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
முரளிதரனுக்கு ஏதோ தவறு நடக்கிறது என்று தோன்றியது. வாக்கிடாக்கி மூலமாக மார்த்தாண்டனிடம் இதன்யா அவரோடு தேடுதல் வேட்டைக்கு வந்துவிட்டாளா என்று விசாரித்தார். இல்லை என்ற பதில் கிடைக்கவே மெல்லிய பதற்றம் அவரைத் தொற்றிக்கொண்டது.
அதே நேரம் தான் இதன்யாவை ஏகலைவன் சொன்ன இடத்தில் படுக்க வைத்துவிட்டுக் காரைக் கிளப்பியிருந்தார் கலிங்கராஜன். அப்படியே காரை ஓட்டிப்போனவர் போலீஸ் குவாட்டர்ஸில் நிறுத்தினார்.
அவரது கார் அங்கே நிற்கும்போதே பொன்மலை காவல் நிலையத்திலிருந்து ஏட்டு ஒருவரும் அங்கே வந்து சேர்ந்தார். முரளிதரன் சற்று முன்னர் ஒரு ஏட்டிடம் பேசினாரே அவரே தான்.
அந்நேரத்தில் கலிங்கராஜனை அங்கே பார்த்ததும் சந்தேகத்தோடு உறுத்து விழித்தவர் பின்னர் பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதற்கு என்று அசட்டையாக மின்தூக்கிக்குச் சென்றார்.
கலிங்கராஜன் அவரைத் தொடர்ந்து மின்தூக்கிக்குள் ஏறியவர் மெதுவாக “இதன்யா மேடமோட ஃப்ளாட் நம்பர் என்னனு தெரியுமா?” என கேட்க
“நானும் அவங்களைப் பாக்க தான் போறேன்… என் கூட வாங்க சார்” என்றார். கூடவே “உங்க பொண்ணை கொன்னவனைப் பிடிக்க தான் நாங்க எல்லாரும் தூங்காம அங்கயும் இங்கயும் அலைஞ்சிட்டிருக்கோம்… நீங்க என்ன விசயமா மேடமை பாக்க வந்திங்க?” என விசாரிக்க
“அவங்க ஹஸ்பெண்ட் எனக்கு பிசினஸ் ஃப்ரெண்ட்” என்றளவோடு உரையாடலைச் சுருக்கிக்கொண்டார் கலிங்கராஜன்.
இதன்யா மாபெரும் சிக்கலில் மாட்டியிருப்பதை அவளது கணவனிடம் தெரிவிக்க தான் அவர் வந்திருந்தார். ஏனோ காவல்துறை அதிகாரிகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இதோ இந்த ஏட்டு தன்னிடம் நல்லவர் போல பேசிவிட்டு முதுகுக்குப் பின்னே ஏகலைவனுக்கு உதவலாம்.
பல ஆண்டுகளாக அவரது வீட்டில் பணியாற்றிய ஊழியர்களே நன்றிகெட்டத்தனமாக நடந்துகொண்டபோது வெளியாட்களை மட்டும் எப்படி நம்புவார் அவர்!
ஏட்டிடம் சொல்லாமல் தளம் வந்ததும் அவரைப் பின்தொடர்ந்து இதன்யாவின் ஃப்ளாட்டை அடைந்தவர் அழைப்புமணிக்குப் பிறகு கதவு திறந்ததும் தெரிந்த ப்ராணேஷின் முகத்தைப் பார்த்ததும் பதபதைப்பாய் புன்னகைத்தார்.
ஏட்டு அவரிடம் பேசுவதற்கு முன்னரே சுதாரித்து “எப்பிடி இருக்கிங்க சார்? இதன்யா மேடம் கண்டிப்பா கில்லரைப் பிடிச்சிடுவாங்க… என் பொண்ணுக்கு நியாயம் வாங்கி குடுப்பாங்க” என்றார் அவசரமாக. ப்ராணேஷ் குழப்பமாக அவரை ஏறிடும்போதே இதன்யாவின் மொபைலை இரகசியமாகக் காட்டியவர் ஏட்டிடம் எதையும் சொல்லாதீர்கள் என்று கண்களால் சைகை காட்டினார்.
ப்ராணேஷுக்கு அவர் சொன்னதில் ஏதோ விசயமிருக்கிறது என்பது மட்டும் புரிந்ததால் சினேகப்புன்னகை பூத்தான்.
“சார் இதன்யா மேடம் எப்ப இங்க இருந்து கிளம்புனாங்க? முரளி சார் ஒரு டீமோட ஃபாரஸ்டுக்குள்ள போயிட்டார்… அங்க இன்னும் இதன்யா மேடம் வரலனு சொன்னார்” என்று ஏட்டு சொன்னதுமே அவனது புன்னகை துணி போட்டுத் துடைத்தாற்போல காணமால் போனது.
“இதன்யா இங்க இருந்து போய் ரொம்ப நேரமாகுதே… ஃபாரஸ்டுக்குள்ள போறதா சொல்லித் தான் அவ கிளம்புனா” என்றவன் பரபரப்படைய
“சரி சார்! நான் முரளி சார் கிட்ட சொல்லிடுறேன்” என்று ஏட்டு விடைபெற்றார்.
அவர் போன பிறகும் கலிங்கராஜன் நின்று கொண்டிருந்தார்.
ப்ராணேஷ் என்னவென பார்க்கும்போதே இதன்யாவின் மொபைலை அவன் கையில் திணித்தார்.
“இதன்யா மேடம் இப்ப அந்த ஏகலைவன் பிடில சிக்கிருக்காங்க… இதுல அவங்க கூட என்கொயரி டீம்ல உள்ளவங்க நம்பர் இருக்கு… அவங்களுக்குக் கால் பண்ணி இதன்யா மேடமை காட்டுக்குகைக்கு ஏகலைவன் தூக்கிட்டுப் போனதைச் சொல்லச் சொன்னாங்க”
ப்ராணேஷ் சந்தேகமாகப் பார்த்தபடி மொபைலின் தொடுதிரையில் கடவுச்சொல்லைத் தட்டினான்.
முரளிதரனின் எண்ணுக்கு அழைப்பு போகையிலேயே “இதெல்லாம் உங்களுக்கு எப்பிடி தெரியும்?” என்று கேட்டான் கலிங்கராஜனிடம்.
“அவங்களை அவன் கிட்ட ஒப்படைச்சதே நான் தான்” என அவர் சொன்னதும் ப்ராணேஷின் விழிகள் கலப்படமற்ற கோபத்தைக் கக்கின.
அதே நேரம் முரளிதரன் அழைப்பை ஏற்று “ஹலோ” என்றதும் ப்ராணேஷ் அவரிடம் கலிங்கராஜன் தன்னிடம் கூறிய அனைத்தையும் சொன்னான்.
மறுமுனையில் முரளிதரன் படபடக்க ஆரம்பித்தார்.
“அந்தாளு ரொம்ப மோசமானவன் சார்.. அவன் கிட்ட எதுக்குக் கலிங்கராஜன் ஏன் மேடமை ஒப்படைச்சிட்டு வந்து நிக்குறார்? அவர் கிட்ட போனை குடுங்க ப்ராணேஷ் சார்” என்றார் அவர்.
கலிங்கராஜனிடம் மொபைல் கொடுக்கப்பட்டதும் “என்ன காரியம் செஞ்சிருக்கிங்க நீங்க?” என சீறினார் முரளிதரன்.
“சார் ப்ளீஸ்! கோவப்படாம நான் சொல்லுறதை கேளுங்க” என்ற கலிங்கராஜன் இதன்யாவோடு தானும் நிஷாந்தும் பேசிக்கொண்ட தருணத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
தன் பிள்ளைகளைக் காப்பாற்ற முபீனாவைக் கடத்தியே ஆகவேண்டுமென கலிங்கராஜன் முகம் கசங்க உரைத்ததும் நிஷாந்த் புருவம் சுருக்கி யோசித்துவிட்டுப் பின்னர் சொன்ன உபாயம் தான் முபீனாவுக்குப் பதிலாக இதன்யா புர்கா அணிந்து கலிங்கராஜனுடன் செல்லவேண்டும் என்பது.
கலிங்கராஜன் முதலில் பயந்தார்.
“அந்தாளுக்கு இந்த ஊர் முழுக்க உளவாளிங்க இருக்காங்க… நான் அவன் சொன்னதைக் கேக்காம உங்களுக்கு உதவுறது தெரிஞ்சா கட்டாயம் என் பிள்ளைங்களை அவன் கொன்னுடுவான்… என்னால முடியாது மேடம்” என பிதற்ற ஆரம்பித்தார்.
நிஷாந்தும் இதன்யாவும் அவரைத் துச்சமாகப் பார்த்தார்கள்.
“பைத்தியமா உங்களுக்கு? அவன் இனியாவை என்ன நிலமைக்கு ஆளாக்குனான்னு தெரியும் தானே உங்களுக்கு? முபீனா சின்னப்பொண்ணு… அவளுக்கும் இனியா நிலமை வரணுமா? இவ்ளோ சுயநலமா யோசிக்குறிங்க, சீ” என்று நிஷாந்த் வெடிக்க கலிங்கராஜனின் வதனம் சுருங்கியது.
“இது சண்டை போடுறதுக்கான டைம் இல்ல.. ஏகலைவனுக்கு உதவுன ஆளுங்க எல்லாரும் இப்ப எங்க கஷ்டடில இருக்காங்க… அதனால அவனுக்கு யாரும் நம்ம திட்டத்தைச் சொல்லுவாங்களோனு நீங்க பயப்பட வேண்டாம் கலிங்கராஜன்… நான் முபீனா மாதிரி அவன் இருக்குற இடத்துக்குப் போக தயாரா இருக்கேன்… நீங்க கொஞ்சம் விசாலமா யோசிக்க பழகுங்க… உங்களோட குறுகுன புத்தி, குறுக்குவழில யோசிக்குற மூளை, இதுக்குலாம் மத்தியில இதயத்துல ஈரம்னு ஒன்னு இருந்துச்சுனா இந்தத் திட்டத்தை செயல்படுத்த எனக்கு உதவுங்க” என்றாள் இதன்யா.
கலிங்கராஜனுக்கும் யோசிக்க அதிகநேரமில்லை. எனவே சம்மதித்தார். பின்னர் இதன்யா நிஷாந்தை அவனது வீட்டுக்கு அனுப்பிவைக்க அவளை அழைத்துச்சென்று சக்கவர்த்தி தேயிலை தோட்டத்தின் பின்னே புதராகக் கிடந்த இடத்தில் படுக்கவைத்துவிட்டுக் காரோடு கிளம்பி வந்த வரலாறைச் சொல்லி முடித்தார் அவர்.
முரளிதரன் அனைத்தையும் கேட்டவர் “ஏகலைவன் அந்தக் காட்டு குகைக்குத் தான் போனானா? அதை நீங்க பாத்திங்களா?” என்று கலிங்கராஜனிடம் கேட்க
“மேடமை அங்க படுக்க வச்சதும் நான் கிளம்பிட்டேன் சார்… அவன் காட்டு குகைக்கு தான் முதல்ல என்னை வரச் சொன்னான்.. ஒருவேளை அவனுக்கு நீங்க எல்லாரும் காட்டுக்குள்ள அவனைத் தேடுறது தெரிஞ்சதால என்னை வரவிடாம பண்ணி அவனே மேடமை அங்க அழைச்சிட்டுப் போயிருப்பான்” என்றார் அவர்.
முரளிதரன் மொபைலை ப்ராணேஷிடம் கொடுக்கச் சொன்னார்.
ப்ராணேஷ் “சொல்லுங்க சார்” என்றதும்
“ரெண்டு டீம் இப்ப காட்டுக்குள்ள அவனைத் தேடிட்டிருக்கோம்… கலிங்கராஜன் சொன்னதை வச்சு பாத்தா அவன் காட்டு குகையில தான் இருக்கணும்… நாங்க அவனை சுத்தி வளைச்சு துப்பாக்கி முனைல பிடிச்சிடுவோம்… இதன்யா மேடமும் ப்ளான் இல்லாம அவன் கிட்ட போயிருக்கமாட்டாங்க… சோ நீங்க டென்சன் ஆகாதிங்க… நான் மேடமை பத்திரமா கூட்டிட்டு வருவேன்” என்று வாக்கு கொடுத்தார்.
“நான் வேணும்னா உங்க கூட வரட்டுமா சார்?”
ப்ராணேஷின் குரலில் பதற்றம் மட்டுமே நிரம்பியிருந்தது
“வேண்டாம் சார்… அது இன்னும் எங்க வேலைய சிக்கலாக்கும்”
ப்ராணேஷுக்குப் புரிந்தது. எனவே இதன்யாவுக்காகக் காத்திருக்க ஒப்புக்கொண்டான் அவன்.
கலிங்கராஜன் அவனிடம் “உங்களுக்கு பிரச்சனை இல்லனா மேடம் வர்ற வரைக்கும் நான் உங்க கூட இருக்கலாமா? அவங்களை அந்த சைக்கோ கிட்ட விட்டுட்டு வந்ததுல இருந்து மனசு பதறுது… அவங்களை நேர்ல பாக்குற வரைக்கும் இந்த பதற்றம் எனக்குப் போகாது சார்” என்று வேண்டுகோள் விடுக்க அவனும் சரியென்றான்.
கலிங்கராஜன் குமாரியின் எண்ணுக்கு அழைத்து பிள்ளைகளைச் சாப்பிடவைத்து உறங்கும்படி கூறிவிட்டார். முக்கியமான வேலை காரணமாக வந்த இடத்தில் தங்க நேரிட்டதால் காலை வருவதாகக் கூறி அழைப்பை முடித்துக்கொண்டவர் இதன்யா எவ்வித பிரச்சனையுமின்றி ஏகலைவனைக் கைது செய்து அழைத்துவர வேண்டுமென பொன்மலை முருகனிடம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தார்.
அதே நேரம் காட்டுக்குகையில் இதன்யாவின் முகத்திலிருந்த முகத்திரையை வேகமாக பிய்த்தெறிந்தான் ஏகலைவன். அவள் விழிகளைத் திறக்கவும் அவன் இதழ்களில் குரூரச் சிரிப்பு.
“தூண்டில்ல புழுவை வச்சு மீனை பிடிக்கலாம்னு நினைச்சேன்… ஆனா இங்க மீனே தானா வந்து தூண்டில்ல மாட்டிடுச்சு… எல்லாம் அந்தக் கடவுளோட கருணை” என்றவன் உடனே மறுப்பாகத் தலையசைத்துவிட்டு “தப்பான டயலாக்ல… எல்லாம் இந்தச் சாத்தானோட கருணை” என்று கை நீட்ட இதன்யாவின் பார்வை அவன் கைநீட்டிய திசையில் சென்று அங்கே பிரம்மாண்டமாக நின்றது ஆட்டுத்தலை கொண்ட சாத்தானின் சிலை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

