டெட் பண்ட்டி என்ற அமெரிக்க சீரியல் கில்லருக்கு 1970களில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்குக்காக மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அவனது குழந்தைப்பருவத்தில் தாத்தாவிடம் அனுபவித்த கொடுமைகளால் மனப்பிறழ்வுக்கு ஆளானவன். அவனது அன்னை திருமணத்துக்கு முன்னரே அவனைப் பெற்றதால் சமுதாயத்தின் முன்னே அவரது தம்பியாகக் காட்டப்பட்டே வளர்க்கப்பட்டான். கூடவே அவனது அன்னையின் கணவரான ஜான் பண்ட்டியோடு அவனுக்குச் சுமூக உறவில்லாமல் போய்க் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான். எனவே இளமைப்பருவத்திலேயே சமுதாயத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் ஒதுங்கி தனிமையில் வாழ்ந்துள்ளான். இத்தனிமை அவனது மனப்பிறழ்வுக்குறைபாட்டை இன்னும் அதிகரித்து சைக்கோபாத்தான அவனை தொடர்கொலைகளில் ஈடுபட வைத்தது.
– An article from Psychology today
தலையில் யாரோ பெரும்பாரமொன்றை எடுத்து வைத்தது போல அத்துணை கனம். கண்களைத் திறக்கவே முடியவில்லை. கண்ணிமைகளோடு சேர்த்து நெற்றியும் தலையும் விண்விண்னென்று வலித்தன.
பெரும் சிரமத்தோடு முயன்று கண்களைத் திறந்து பார்த்தாள் இதன்யா. நகர முடியாதபடி கையில் ஐ.வி ஏறிக்கொண்டிருந்தது. மெதுவாகச் சுரணை திரும்பிய உடல் ஒரு இடம் பாக்கியின்றி வலிக்கத் துவங்கியதும் நடுங்கிய கரத்தை உயர்த்தி படுக்கைக்கு அருகே கண் மூடி நாற்காலியில் சாய்ந்திருந்த மயூரியைத் தொட்டாள் அவள்.
மகளின் ஸ்பரிசம் பட்டதும் திடுக்கிட்டுக் கண் திறந்தவர் இருபத்து நான்கு மணி நேரம் கழித்து அவளுக்குச் சுயநினைவு திரும்பிய சந்தோசத்தையும், என் மகளுக்கு இப்படிப்பட்ட கொடூரவிபத்து நேர்ந்துவிட்டதே என்ற சோகத்தையும் கண்ணீரில் காட்டி “இதன்யாமா” என அழுகையோடு அவளது கரத்தைப் பற்றிக்கொண்டார்.
“ம்மா…”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தலையில் தான் அடிபட்டுக் காயம் என்றாலும் தூக்கி எறியப்பட்டு பாறையில் மோதியது அவளது உடலும் தானே. உடலின் ஒவ்வொரு அணுவும் வலித்தது இதன்யாவுக்கு.
“கண்ணம்மா” அழுகையோடு மகளின் கரத்தில் முத்தம் பதித்தார் மயூரி.
அப்போது உள்ளே வந்த வாசுதேவன் மகளுக்குச் சுயநினைவு திரும்பிய மகிழ்ச்சியில் உடனே செவிலி ஒருவரை அழைத்து வந்துவிட்டார்.
வந்தவரும் இதன்யாவைப் பரிசோதித்துவிட்டு அவளது உடல்நிலை சீராக உள்ளதென கூறிவிட்டார். தொடர்ந்து வந்த மருத்துவரும் இதன்யாவின் நிலையை எண்ணி இனி பயப்படத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார். இருப்பினும் ஒரு வாரம் தங்களது கண்காணிப்பின் கீழ் வைத்து உடல்நிலை நன்கு தேறிய பிற்பாடு தான் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
இதன்யாவுக்கு அதிகச் சிரமம் கொடுக்கக்கூடாதென அறிவுறுத்தவும் மறக்கவில்லை அவர்.
மயூரிக்கும் வாசுதேவனுக்கும் சுயநினைவின்றி கண் மூடிக் கிடந்த மகள் இப்போது கண் விழித்துப் பார்த்ததே பெரிய சந்தோசம்.
“நான்… இங்க எப்பிடி?”
உடலெங்கும் வலியெடுத்ததில் தட்டுத்தடுமாறி கேட்டாள் அவள்.
“பொன்மலைக்காரர் ஒருத்தர் தான் உன்னை பாறை கிட்ட பாத்துட்டு ஆம்புலன்சுக்குக் கால் பண்ணி சொல்லிருக்கார்மா… அவர் தான் நாங்க வர்ற வரைக்கும் உனக்குத் துணையா இருந்தார்…. நேத்து நைட் அவரோட மனைவி சாப்பாடு குடுத்துவிட்டாங்க… கெட்டதுல ஒரு நல்லது மாதிரி இப்பிடிப்பட்ட நல்ல மனுசனோட அறிமுகம் கிடைச்சிருக்கு பாரு” என்றார் வாசுதேவன்.
“யாரு..ப்பா?”
“அவர் பேரு ரசூல்… நல்ல மனுசன்”
ரசூல் பாய் பெயரைக் கேட்டதும் இதன்யாவின் விழிகளில் நன்றியுணர்ச்சி மின்னியது.
“உனக்கு கான்சியஸ் வந்ததும் கால் பண்ணச் சொன்னார் இன்ஸ்பெக்டர் மார்த்தாண்டன்… நான் அவர் கிட்ட பேசிட்டு வந்துடுறேன்”
வாசுதேவன் வெளியேற மயூரி மகளைக் கண்ணீர் மின்னும் விழிகளோடு பார்த்தபடி அமர்ந்தார்.
வாசுதேவன் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மார்த்தாண்டனோடு வந்தார்.
இதன்யாவைப் பார்த்ததும் மார்த்தாண்டன் வருத்தத்தோடு “பாத்து போகக்கூடாதா மேடம்?” என்று விசாரித்தபடி இன்னொரு நாற்காலியில் அமர்ந்தார்.
“நான்… கவனமா போனேன் மார்த்…தாஆ..ண்டன்”
சிரமத்தோடு முணுமுணுத்த இதன்யாவுக்கோ கடைசியில் காலனாய் வந்த லாரியின் நினைவைத் தவிர வேறேதும் ஞாபகம் இல்லை. லாரியின் எண்ணோ, அதிலிருந்த ஓட்டுனரின் பார்வையோ அவளது நினைவுக்கு வரவேயில்லை.
“பரவால்ல மேடம்… அந்த இடத்துல சி.சி.டி.வி கேமராவும் இல்ல… நம்ம ஊருக்கு அந்த நேரத்துல வர்றது சக்கரவர்த்தி டீ எஸ்டேட்ல இருக்குற தேயிலையை மலைக்குக் கீழ ஃபேக்டரிக்குக் கொண்டு போகுற லாரி தான்… அதை வச்சு விசாரணையை ஆரம்பிச்சிடலாம்”
“ம்ம்”
பின்னர் வாசுதேவனிடம் திரும்பியவர் “இங்க பாருங்க சார், என்ன உதவியா இருந்தாலும் தயங்காம என் கிட்ட நீங்க கேக்கலாம்… இங்க இருந்து சென்னைக்குப் போற வரைக்கும் ரசூல் பாய் வீட்டுல நீங்களும் அம்மாவும் தங்கிக்கோங்க… இன்னும் கொஞ்சநேரத்துல பாயும் அவரோட ஒய்பும் வந்துடுவாங்க… நீங்களும் அம்மாவும் அவர் வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க… மேடம் பாதுகாப்புக்காக ரூமுக்கு வெளிய கான்ஸ்டபிள் ஒருத்தர் இருப்பார்”
“ரொம்ப நன்றி சார்”
வாசுதேவன் தழுதழுத்தக் குரலில் கரம் கூப்பவும் “பெரிய வார்த்தை பேசாதிங்க சார்… இப்ப முடிஞ்சுதே அந்த கேஸ்ல மேடமோட இன்வெஸ்டிகேசன் டீம்ல என்னைச் சேர்த்துக்கிட்டதால தான் டிப்பார்ட்மெண்டல் என்கொயரில இருந்து நான் சுலபமா வெளிய வந்தேன், என் வேலையும் தப்பிச்சுது… என்னால வேற எந்த வகைல மேடமுக்கு உதவ முடியும் சொல்லுங்க” என்று பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் அவர்.
இப்போது அவள் காவல்துறை அதிகாரி இல்லை என்பதைக் கூட கணக்கில் வைக்கவில்லை மார்த்தாண்டன். நல்ல மனிதர்கள் எங்கும் இருப்பார்கள். ஒரு சிலரை வைத்து ஒரு இடத்தையோ ஊரையோ தவறாக நினைப்பது அறியாமை.
மார்த்தாண்டன் சொன்னது போல சிறிது நேரத்தில் இனியாவுக்குப் பத்தியச்சாப்பாடும், காய்கறி சூப்பும் கொண்டு வந்தார்கள் ரசூல் பாயும் அஸ்மத்தும்.
“நீங்க வீட்டுக்குப் போங்கம்மா… மேடமை நான் பாத்துக்குறேன்” என அஸ்மத் சொல்ல இதன்யாவும் பெற்றோரை ரசூல் பாயோடு அனுப்பிவைத்தாள்.
அஸ்மத் இதன்யாவுக்குச் சாப்பாடு ஊட்டிவிட்டு சூப்பைப் பருகவைத்தார். எதையும் கடனே என்று செய்யவில்லை. சொந்த சகோதரிக்குச் செய்வது போல பாசத்தோடு செய்தார் அப்பெண்மணி.
பிரானேஷுடனான திருமணவுறவு முறிந்த பிற்பாடு பெற்றோரைத் தவிர வேறு யாருடனும் உறவை வளர்த்துக்கொள்ள அவள் விரும்புவதில்லை.
காரணம் இத்தகைய பிணைப்பு தனக்கு தீராவேதனையைக் கொடுத்துவிடுமென்ற பயம்.
அந்தப் பயத்தை அஸ்மத்தின் பரிவு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.
சாப்பிட்ட பிற்பாடு இதன்யா தூங்குவதற்காக மருந்து கொடுத்தார் செவிலி.
அஸ்மத் அவளுக்குக் காவலாய் அங்கேயே இருந்தார்.
இப்படியே இதன்யாவின் மருத்துவமனை நாட்கள் கழிந்தன.
ஒருநாள் கலிங்கராஜனோடு மிச்செல், ஜென்னி மற்றும் நித்திலன் மூவரும் அங்கே வந்தார்கள். இதன்யாவிடம் நலம் விசாரித்த கலிங்கராஜன் ஓரமாக நின்று கொள்ள குழந்தைகள் மூவரும் அவளிடம் பெரிய மனிதர்களைப் போல விசாரிக்கவும் புன்னகையோடு பதிலளித்தாள் அவள்.
சிறிது நேரம் அவர்கள் பேசிவிட்டுப் போனதும் நிம்மதியாக உணர்ந்தாள் இதன்யா.
அவர்கள் கிளம்பியதுமே “மாப்ளை கால் பண்ணி நீ எப்பிடி இருக்கனு விசாரிச்சார்மா” என்றார் மயூரி.
உடனே இதன்யாவின் விழிகளில் கண்டனம்.
“முறைக்காதம்மா.. எனக்கு அவரை மாப்ளைனு கூப்பிட்டுப் பழகிடுச்சு… விவாகரத்து கேஸ் நடந்தா விரோதம் பாராட்டணும்னு எதுவும் சட்டம் இருக்கா? என அவர் படபடக்கவும் வாசுதேவன் மனைவியை அமைதியாய் இரு எனக் கண்களால் வேண்டினார்.
அதன் பின் அவரும் அமைதியாகிவிட்டார்.
இதன்யாவுக்கு மறுநாள் டிஸ்சார்ஜ் என தலைமை மருத்துவர் கூறியிருந்தார்.
அவளுக்கு தலையில் மட்டும் வலி இருந்தது. ஸ்கேன் எல்லாம் பார்த்துவிட்டு பயப்படும்படி எதுவுமில்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டாலும் இரவில் தூங்கும்போது கனவில் அவளை விபத்துக்குள்ளாக்கிய லாரி வந்து திகிலூட்டியது.
விபத்துக்குப் பின்னர் வரும் மன அழுத்தம் கொடுமையானது. அதை கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கடக்க முடியும். எப்பேர்ப்பட்ட மனவலிமை படைத்த மனிதனும் அங்கே கொஞ்சம் தேங்கிவிடுவான். அது இயற்கையும் கூட. அதற்கு இதன்யா மட்டும் விதிவிலக்காக இருப்பாளா என்ன?
சில நேரங்களில் அந்த மன அழுத்தம் அவளைக் கோபம் கொள்ள வைத்தது. இன்னும் சில நேரங்களில் எப்படி இருந்த நான் இப்படி முடங்கிக் கிடக்கிறேனே என கழிவிரக்கத்தில் தள்ளி வேடிக்கை பார்த்தது. நேர்மை தராசின் முள் அங்குமிங்கும் நகராது வேலை செய்தபோதும் செய்யாத தவறுக்கு இப்படி பணியிடைநீக்கம் செய்யப்பட்டேனே என மனம் பொருமினாள்.
இந்நிலையில் அவள் டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய தினத்தன்று காலை அவள் விரும்பத்தகாத நபர் ஒருவர் ‘’கெட்வெல் சூன்’ என்ற செய்தியுடன் கூடிய பூங்கொத்தோடு அவளைச் சந்திக்க வந்தார். அந்நபர் வேறு யாருமில்லை, ஏகலைவன்.
அவனைப் பார்த்ததுமே விருப்பமின்மை முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டது இதன்யாவுக்கு.
அழையா விருந்தாளியை நடத்தும் முறை பற்றி இதுவரை அறியாதவள் அதை செயலில் காட்டினாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
“எப்பிடி இருக்கிங்க இதன்யா மேடம்? துறுதுறுனு ஓடியாடி வேலை செஞ்ச உங்களை இப்பிடி ஹாஸ்பிட்டல் பெட்ல பாக்க மனசு வலிக்குது… இந்த பொக்கேவ வாங்கிக்கோங்க… சீக்கிரம் நீங்க ரெகவர் ஆக கடவுளை வேண்டிக்கிறேன்”
கேட்கும்போது நலம்விரும்பியின் பேச்சு போல ஒலித்தாலும் ஏகலைவன் பேசிய தொனியில் இருந்தது ஏளனம் மட்டுமே.
அதைப் புரிந்துகொள்ள முடியாதவள் இல்லை இதன்யா.
“தேங்க்ஸ்” என்று சுருக்கமாகப் பதிலளித்தவள் இவனை எப்படி கான்ஸ்டபிள் இந்த அறைக்குள் அனுமதித்தார் என எரிச்சல்பட்டாள் மனதுக்குள்.
ஏகலைவனோ “சஸ்பென்சன்ல இருக்கிங்க போல… இந்த சஸ்பென்சன் இதோட முடிஞ்சிடும்னு நினைக்குறிங்களா?” என கிண்டலாகக் கேட்டபடி கால் மேல் கால் போட்டுக்கொள்ளவும் சுறுசுறுவென கோபம் மூண்டது அவளுக்கு.
“தட் இஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்… வந்திங்க பொக்கே குடுத்திங்க… நலமும் விசாரிச்சிங்க… இப்ப நீங்க கிளம்பலாம்” என கம்பீரமாகக் கதவைக் காட்டினாள்.
இன்னும் சிறிது நேரம் ஏகலைவனின் ஏளனச்சிரிப்பு தொடருமாயின் அவளுக்குக் கோபமல்ல கொலைவெறியே பிறந்துவிடும் அவன் மீது.
அவளது உதாசீனமான சொற்களைக் கேட்ட பிற்பாடும் அசையாமல் சிலை போல அங்கேயே அமர்ந்திருந்தவனை வெளியே விரட்ட கான்ஸ்டபிளை அழைக்க முடிவு செய்தாள் இதன்யா.
“கா…”
“ஹான்! இதானே வேண்டாம்ங்கிறது… பேச்சு பேச்சா இருக்கிறப்ப அதென்ன ஆளைக் கூப்பிட்டு விரட்டச் சொல்லுறது? நீங்க என் வீட்டுக்கு வந்து என்னைப் பத்தி கன்னாபின்னானு பேசுனப்ப கூட நான் இப்பிடி அநாகரிகமா பிஹேவ் பண்ணலையே… ஐ.பி.எஸ் ட்ரெய்னிங்ல மரியாதையா எப்பிடி நடந்துக்கணும்னு சொல்லித் தரமாட்டாங்களா?”
எப்போதும் பேசுவதை விட எகத்தாளம் கூடுதலாகத் தெரிந்தது அவனது பேச்சில். இனியா கொலை வழக்கில் அபராதம் செலுத்தியதோடு தப்பித்துவிட்ட மமதையா? அல்லது தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியவளைப் பணியிடைநீக்கம் செய்ய வைத்த பணத்திமிரா? எது இவனை இவ்வளவு தெனாவட்டாகத் தன் முன்னே அமர வைத்திருக்கிறது?
இதன்யா யோசிக்கும்போதே ஏகலைவனின் முகம் ஏளனத்தைத் தொலைத்தது.
கருங்கற்சிற்பம் போல உருமாறிய முகத்தில் கோபத்தின் ரேகைகள்!
சாய்ந்தவண்ணம் அமர்ந்திருந்தவளை தீக்கங்கு போன்ற விழிகளால் ஏறிட்டவன்
“ஏகலைவன் கிட்ட மோதுனா என்ன ஆகும்னு இப்ப உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்… என்னைப் பத்தி அசிங்கமா பேசுனது, செய்யாத தப்புக்கு என்னைக் கோர்ட் படி ஏற வச்சது, என்னைப் பத்தி கண்ட கண்ட பத்திரிக்கை எல்லாம் தப்பான செய்திய போட்டது, எல்லாத்துக்கும் காரணம் நீ… உன்னோட தப்பான அனுமானம்… உன் அனுமானத்தால போனது என் மானம் மட்டுமில்ல, யாராலயும் நெருங்க முடியாதவன்னு பொன்மலைல நான் உருவாக்கி வச்சிருந்த என்னோட பிம்பமும் தான்… அதை மறுபடி உருவாக்குறது எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல… ஆனா என்னைச் சீண்டுனவளைச் சும்மா விட்டுட்டா என்னோட ஈகோ பயங்கரமா காயப்பட்டுப்போயிடுமே! அதுக்காக தான் நீ என் போட்டி கம்பெனிஸ் கிட்ட லஞ்சம் வாங்குனதா பொய்ப்பழி போட்டேன்… எனக்கும் கிளாராக்கும் இடையில அஃபயர் இருக்குனு சொன்னப்ப நான் எந்தளவுக்கு அருவருப்பையும் வலியையும் அனுபவிச்சேனோ அதை விட ஆயிரம் மடங்கு நீ அனுபவிக்கணும்னு நினைச்சுக் காய் நகர்த்துனேன்.. என் கிட்ட அதிக டைம் இல்ல… பட் குறுகுன நேரத்துல சக்சஸ்ஃபுல்லான ப்ளானைப் போடுறதுல நான் கில்லாடி… உனக்கும் ஸ்கெட்ச் போட்டேன்… தூக்குனேன்… ப்ச்… உன் மேல தப்பில்லனு நீ நிரூபிச்சிடுவ… ஆனா உன் மேல விழுந்த கறை விழுந்தது தான்… அதை நினைச்சு தினமும் ஒரு தடவையாச்சும் நீ வருத்தப்படணும்… அதுதான் என்னோட வெற்றி” என்று பழிவெறியோடு சொல்லிவிட்டு எழுந்தான்.
கண்களில் கனல் மின்ன அமர்ந்திருந்த இதன்யாவை நோக்கி கிண்டலாய் சலாம் வைத்துவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான் ஏகலைவன்.
ஆனால் இதன்யாவோ அவனது பேச்சின் இறுதிப்பகுதியில் முகம் சுருக்கி புருவம் ஏறியிறங்க யோசனையில் ஆழ்ந்தாள்.
“குறுகுன நேரத்துல சக்சஸ்ஃபுல்லான ப்ளானை போடுறதுல நான் கில்லாடி”
ஏகலைவனே மீண்டும் மீண்டும் சொல்வது போன்ற பிரமை.
“ஷார்ட் டைம்ல இவ்ளோ அழகா ஒரு கொலைய செஞ்சு முடிச்சது அவனோட பெர்ஃபெக்சனைக் காட்டுது… ஆதாரத்தை அழிச்ச விதம் அவன் புத்திசாலியா இருக்கலாம்னு தோணவைக்குது… குரூப் ஆப் பீபிளை வச்சு கொலை பண்ணிருந்தான்னா அவன் கட்டாயம் லீடர்ஷிப் குவாலிட்டி உள்ளவனா இருக்கணும்… சிலரால ஹெக்டிக்கான நேரத்துல கூட பல வேலைகளை ஆர்கனைஸ்டா செஞ்சு முடிக்க முடியும்”
முரளிதரன் விசாரணைக்குழுவின் அலுவலக அறையில் இனியாவைக் கொன்ற கொலையாளி எப்படிப்பட்டவன் என யூகித்துச் சொன்ன வார்த்தைகளும் உடன் சேர்ந்து ஒலிக்க இதன்யாவின் முகம் பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டு பின்னர் எதையோ தீர்மானித்த பாவனைக்கு வந்து நின்றது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

