சைக்கோபதியைப் பூரண குணமடையச் செய்வது என்பது இயலாத காரியம். ஆனால் சில சிகிச்சை முறைகளை வைத்து அதை அபாயகரமான நிலையிலிருந்து கட்டுக்குள் கொண்டு வரலாம். அதன் மூலம் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட நபரால் யாருக்கும் ஆபத்து வராத வண்ணம் தடுக்க முடியும். அதில் முதல் வகை சிகிச்சை Cognitive Behaviourial Therapy. இது பாதிக்கப்பட்ட நபரின் சிந்தனைகள், உணர்வுகள், நடவடிக்கைகள் போன்றவற்றைச் சீர்செய்ய உதவும் சிகிச்சை ஆகும். சைக்கோபதி அல்லது நடத்தை சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு தனி நபருக்கு இம்மூன்றும் சீரற்ற முறையில் இருப்பதால் உண்டாகும் தூண்டுதல்களே அவரை அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடச் செய்யும். இந்தத் தெரபியானது அந்நபரின் சிந்தனை, உணர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் இம்மூன்றையும் நேர்மறையாக்கி நல்லவிதமானத் தூண்டுதல்களை உருவாக்க வழிவகுக்கும்.
-From therapy.com
கிளாராவிற்கு அன்றைய விடியலே சோதனையாக அமைந்தது. தலைவலியால் கபாலம் பிளந்துவிடுமோ என்று எண்ணுமளவுக்குக் கொடூரவலி. மிச்செல்லின் பள்ளியில் ‘பெற்றோர் ஆசியர் சந்திப்பு’ இருப்பதாகச் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.
அதற்கு வழக்கமாகக் கிளாராவும் குமாரியும் தான் இணைந்து போவார்கள். விடியலிலேயே தலை வலித்தால் எங்கிருந்து பள்ளிக்குப் போவது?
சலித்தபடியே எழுந்த கிளாரா பிள்ளைகள் மூவரும் பள்ளிக்குக் கிளம்பி ஹாலுக்கு வரவும் அவளும் அங்கே வந்தாள்.
அப்போது நவநீதம் எதிர்ப்படவும் “சூடா இஞ்சி டீ போட்டுக் கொண்டு வா நவநீதம்… தலைவலி தாங்க முடியல” என்றபடி சோபாவில் அமர்ந்தவளிடம்
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இன்னைக்குப் பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் இருக்கும்மா… வருவிங்க தானே?” எனச் சந்தேகமாக வினவினாள் மிச்செல்.
தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த கிளாராவுக்கோ எரிச்சல் தாளவில்லை.
“எல்லாத்துக்கும் நான் தான் வந்து நிக்கணுமா? போய் உங்கப்பா கிட்ட கேளு… இருக்குற தலைவலி பத்தாதுனு இது வேற… நீ நல்லா தான படிக்குற? இல்ல செத்துப் போன உன் அக்கா மாதிரி காதல் கீதல்னு எவன் கூடவும் சுத்துறியா? அப்பிடி மட்டும் எதுவும் விவகாரம் இருக்குறதா என் காதுக்குச் சேதி வந்துச்சுனா பெத்தப் பொண்ணுனு கூடப் பாக்கமாட்டேன்… கழுத்தைத் திருகிப் போட்டுடுவேன்… ஒழுங்கா ஸ்கூலுக்குப் போனியா வந்தியானு இருக்கணும்… எவன் கூடவும் காதலை வளர்த்துக்கிட்டு காட்டுப்பக்கம் ஒதுங்கணும்னு ஆசை வந்துச்சுனா உன் அக்காவ ஞாபகம் வச்சுக்க… குடும்பமானத்தைச் சந்தி சிரிக்க வச்சுட்டு அவளும் கொடூரமா செத்துப்போனால்ல, அதே கதி தான் உனக்கும் வரும்” என்று நிஷ்டூரமாகப் பெற்ற மகளிடமே நாகரிகமற்ற வார்த்தைகளை உதிர்த்தாள்.
அவள் பேசப்பேச மிச்செல்லின் கண்கள் கலங்கி நாசி விடைத்து அழுகைக்குத் தயாரான தருணத்தில் “சீ! வாயை மூடு” என இடிமுழக்கமாகக் கேட்டது கலிங்கராஜனின் குரல்.
அப்போது தான் தோட்டத்தில் நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்குள் வந்தவர் மனைவி உதிர்த்த அருமையான வார்த்தைகள் காதில் தேனைப் பாய்ச்சாத குறையாக விழவும் அவள் முன்னே வந்து நின்றார்.
அவரைப் பார்த்தவுடன் கிளாராவின் ஆட்டம் அடங்கிவிடுமென நினைத்தால் அது தவறு. அவரைக் கண்டதும் தான் அவள் அளவுக்கதிகமாகக் கத்த ஆரம்பித்தாள்.
“நான் ஏன் வாயை மூடணும்? நீங்க ஒழுங்கா நல்ல தகப்பனா இருந்திருந்தா உங்க மகள் வழி தவறி எவன் கூடவோ போய் கெட்டுச் சீரழிஞ்சு செத்திருப்பாளா? உங்க அன்புக்கு ஏங்கி ஏங்கி அது கிடைக்காதுனு நினைச்சு வெளியாள் கிட்ட அதை தேடிக்கிட்டா… அவ தேடுனது அன்பை மட்டுமில்ல அவ சாவையும் தான்னு தெரிஞ்சிக்காமலே போய் சேர்ந்துட்டா… அந்தக் கதி என் மகளுங்களுக்கு வரக்கூடாதுனா நான் கொஞ்சம் கண்டிப்பு காட்டித் தான் ஆகணும்” என்று தனது அநாகரிகமான வார்த்தைகளுக்குக் கண்டிப்பு எனும் சாயம் பூச ஆரம்பித்தாள் கிளாரா.
கலிங்கராஜனுக்கு அரசல் புரசலாக வந்த செய்திகளை வைத்து கிளாராவின் நடத்தை மீது சந்தேகம் இருந்தது அல்லவா! அவள் தன்னைக் குற்றம் சாட்டியதும் அதை ஆயுதமாகப் பயன்படுத்தத் துணிந்தார் அம்மனிதர்.
“தான் திருடி பிறரை நம்பாள்னு ஒரு பழமொழி உண்டு… உன் புத்தி சாக்கடையா மாறுனதால நீ பிள்ளைங்களை அசிங்கமா நினைக்குற, அசிங்கமா பேசுற… அவங்க உடம்புல ஓடுறது என் இரத்தமும் தான்.. அது அவங்களை ஒழுக்கம் தவறவிடாது” என்றார் கலிங்கராஜன் கர்வமாக.
கிளாராவின் நிலையோ தேள் கொட்டிய திருடனின் நிலை.
ஆவேசம் கூடிப்போய் சோபாவிலிருந்து எழுந்தவள் “ஒழுக்கம் எல்லாம் சரி தான்.. ஆனா கொஞ்சம் வாளிப்பான பொண்ணைப் பாத்ததும் நீங்க மயங்கிப் போன மாதிரி தானே உங்க ரத்தமும் மயங்கி வழிதவறி உயிரை விட்டுச்சு.. அதே ரத்தம் என் புள்ளைக்கும் ஓடுறதால தான் எனக்குக் கவலையா இருக்கு” என வார்த்தைகளைத் தீக்கங்குகளாக அள்ளி வீசினாள்.
“நீ ஒழுக்கம் கெட்டு அலைஞ்சு என்னைச் சொல்லுறியாடி?” என கலிங்கராஜன் கிளாராவை அறையப்போக
“சார் பசங்க உங்க சண்டைய பாத்துட்டிருக்காங்க” என்று சொன்னபடி அங்கே வேகமாக வந்து நின்றார் குமாரி.
அவரைப் பார்த்ததும் கரத்தை இறக்கிக்கொண்டார் கலிங்கராஜன். அழுது கொண்டிருந்த மிச்செல்லின் கண்ணீரைத் துடைத்தவர் “மூனு பேரும் என் கூட வாங்க” என்று சொல்லி பிள்ளைகளைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார்.
அவர்கள் நால்வரும் போனதும் குமாரி கிளாராவிடம் என்ன இதெல்லாம் என்ற ரீதியில் கண்களால் கேள்விக்கணை தொடுக்க அவளோ சலிப்பாக கையசைத்துவிட்டு மீண்டும் அவளது அறையை நோக்கி நடந்தாள்.
கலிங்கராஜன் வீட்டு வாசலைத் தாண்ட காலடி எடுத்து வைத்த நொடி, கிளாரா அவளது அறைக்குள் நுழைய போன அதே தருணத்தில் இதன்யா கைது ஆணையோடு சாந்திவனத்துக்குள் பிரவேசித்தாள்.
அவளைப் பார்த்ததும் கலிங்கராஜனின் கால்கள் ப்ரேக் போட்டாற்போல நின்றுவிட அவளுடன் வந்த சக காவலர்களிடம் “ஒரு இடம் விடாம தேடுங்க… சின்னதா சந்தேகம் வந்தாலும் என் கிட்ட சொல்லுங்க” என ஆணையிட்டாள் இதன்யா.
அவளது ஆணைக்குக் காத்திருந்தவர்கள் வேகமாக வீட்டுக்குள் நுழைய கலிங்கராஜனும் கிளாராவும் அதிர, பிள்ளைகளோ என்னவோ ஏதோ என மிரண்டனர்.
“மேடம் என்ன நடக்குது இங்க?” என்ற கலிங்கராஜனிடம் சோதனையிடும் ஆணையைக் கொடுத்தாள் இதன்யா.
“உங்க வீட்டைச் சோதனை போட சர்ச் வாரண்ட்டோட வந்திருக்கேன் சார்”
“ஏன்?” குழம்பியபடி அதை படித்தார் கலிங்கராஜன்.
“இனியாவை கொலை பண்ண யூஸ் செஞ்ச வெப்பன்ஸ் இங்க மறைச்சு வைக்கப்பட்டிருக்கலாம்னு எங்க விசாரணைக்குழு சந்தேகப்படுது”
நிதானமாக இதன்யா முடிக்கையில் அந்த வீட்டிலிருந்த அனைவருமே அதிர்ந்து போயினர். அதிலும் கிளாராவின் நிலை கவலைக்கிடம். கிட்டத்தட்ட உறைபனியில் உறைந்தவளைப் போல வெளிறிய முகத்தோடு அசையாமல் நின்றவளை நக்கல் சிரிப்போடு பார்த்தாள் இதன்யா.
பின்னர் தான் அவளை விட அதிர்ச்சியோடு நின்ற பிள்ளைகள் இதன்யாவின் கவனத்தில் விழுந்தார்கள். சிறுவயதில் இக்காட்சிகளை எல்லாம் பார்த்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடுமென புரியாதவள் இல்லை இதன்யா.
அதிலும் மிச்செல்லின் முகம் வாட்டத்தின் உச்சத்திலிருந்தது.
அவளருகே போனவள் “உன் ப்ரதர் சிஸ்டரோட கிளம்புமா… ஸ்கூல் வேன் வந்தாச்சு” என்றதும் தலையாட்டிவிட்டுக் கிளம்பினாள் மிச்செல்.
நித்திலனும் ஜென்னியும் திரும்பி திரும்பி பார்த்தபடியே போன காட்சி இதன்யாவின் மனதை உலுக்கிவிட்டது.
அவர்களைப் பெற்றவளோ ஆடாமல் அசையாமல் சிலையாய் சமைந்திருப்பதே என் கடன் என்பது போலல்லவா நின்று கொண்டிருந்தாள்.
இதன்யா அவளைப் பொருட்படுத்தாமல் தன் வசம் மிச்சமிருந்த கைதாணையை கலிங்கராஜனிடம் நீட்டினாள்.
அதை வாங்கியவர் “மேடம்…” எனத் தயங்க
“உங்க மூத்தமகள் இனியாவை கொலை பண்ண உடந்தையா இருந்த காரணத்துக்காக உங்க மனைவி கிளாராவை அரெஸ்ட் பண்ண வந்திருக்கேன் கலிங்கராஜன் சார்” என இதன்யா சொன்னதும் கலிங்கராஜனுக்கு மாரடைப்பு வராத குறை.
“இல்ல… நான் இனியாவை கொலை பண்ணல… என் மேல பொய்ப்பழி சுமத்துறாங்க” என நின்ற இடத்திலேயே அலறி அழ ஆரம்பித்தாள் கிளாரா.
இதன்யா நிதானமாக அவளை நெருங்கியவள் “நீங்க கோ-ஆப்ரேட் பண்ணுனா ஹேண்ட்கஃப் இல்லாம மரியாதையா அழைச்சிட்டுப் போவேன் மிசஸ் கலிங்கராஜன்” என்றதும் அவள் முகம் மீண்டும் இரத்தமிழந்து வெளிறியது.
கலிங்கராஜனோ நீயா என் மகளைக் கொல்ல உடந்தையாக இருந்தவள் என கண்கள் கசிய இடப்பக்க நெஞ்சைப் பிடித்தபடியே கிளாராவைப் பார்த்தார்.
“அப்பிடி பாக்காதிங்க.. நான் இனியாவ ஒன்னுமே செய்யல… இந்தப் பொம்பளை பொய் சொல்லுறா… நான் போய் எப்பிடி நம்ம பொண்ணை கொல்லுவேன்?” என அழுது அரற்றிய கிளாரா கலிங்கராஜனின் காலில் விழுந்தாள்.
அவரோ அதிர்ச்சியின் உச்சத்தில் கண்ணீர் விட்டார். மூத்தமகளைப் பற்றி காலையில் கிளாரா அபவாதம் பேசியதெல்லாம் காதில் ஒலிக்க அவளது கரத்தை காலில் இருந்து விலக்கினார்.
இரு கரங்களையும் யாசகம் கேட்பவரைப் போல இணைத்து “அம்மா இல்லாத பொண்ணுக்கு எல்லாவுமா இருந்தியேடி, எப்பிடி கொலை பண்ணுற அளவுக்குத் துணிஞ்ச? அவளைக் கொல்லணும்னு யோசிக்கிறப்பவே உன் நெஞ்சு பதறல?” என்று சொல்லி அழ ஆரம்பித்தார் மனிதர்.
கிளாரா கூறிய சமாதானங்கள் அனைத்தும் செல்லாக்காசாகிப் போயின.
தரையில் மடங்கி அமர்ந்து கதறியவளின் புஜத்தைப் பற்றி எழுப்பினாள் இதன்யா.
“மேடம்..”
கலிங்கராஜன் அழைக்கவும் “அவங்களை கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணுவோம் சார்… லாயர் வச்சு எதுவா இருந்தாலும் பேசிக்கோங்க” என்றவள் கான்ஸ்டபிள் ஓடி வரவும் பார்வையைக் கூர்மையாக்கிக்கொண்டாள்.
அவரது லத்தியில் ஒரு பெரிய சால்வை போன்ற துணி தொங்கிக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் வெண்மையாக இருந்தேன் நான் என்று அதன் ஓரங்கள் சொல்ல பெரும்பாலான சால்வையோ ஒருவித அடர் பழுப்பு வண்ணத்தில் மாறிப்போயிருந்தது.
மெல்லிய முடைநாற்றம் அதிலிருந்து வீச இதன்யா நாசியை நிமிண்டிக்கொண்டாள்.
“இது யாரோட சால்வை?” என கேட்டாள்.
“கிளாராவுக்கு நான் வாங்கிக் குடுத்த சால்வை” உணர்ச்சியற்ற குரலில் சொன்ன கலிங்கராஜனின் முகத்தில் வேதனை.
கிளாராவோ “இது காணாம போயிடுச்சுனு சொன்னேன்.. மறந்துட்டிங்களா?” எனத் தன்னை நிரூபித்துக்கொள்ளும் வேகத்தில் கேட்க அவர் அவளைப் பார்த்தால் தானே!
“இதை பத்திரமா எடுத்துட்டு வாங்க” என்று கான்ஸ்டபிளிடம் சொன்னவள் வலுக்கட்டாயமாகக் கிளாராவைச் சாந்திவனத்திலிருந்து இழுத்துச் சென்றாள்.
“விடுங்க என்னை… ராஜ் என்னை நம்புங்க,… நான் இனியாவை கொலை பண்ணல”
கையை விலக்க முயன்றவாறு இதன்யா இழுத்த இழுப்புக்குக் கதறியபடியே சென்றாள் கிளாரா.
நல்லவேளையாகப் பிள்ளைகள் அங்கே இல்லை. பள்ளி வாகனம் வரவும் அதிலேறிப் போயிருந்தார்கள் போல.
கிளாராவை வலுக்கட்டாயமாகக் காவல் வாகனத்தில் அமர வைத்த இதன்யா கான்ஸ்டபிளிடம் “ஸ்டேசனுக்குக் கிளம்புங்க… அடுத்து இன்னொருத்தரை அரெஸ்ட் பண்ணனும்… அந்த வீட்டு முன்னாடி வந்துடுங்க” என்று சொன்னவாறு ஏகலைவனின் வீட்டைச் சுட்டிக்காட்ட அவரோ அதிர்ச்சியோடு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார்.
காவல் வாகனம் போக போக கிளாராவின் அலறல் சத்தம் குறைந்து ஒரு கட்டத்தில் மறைந்தே போனது.
இதன்யா ஏகலைவனின் வீட்டைப் பார்த்தாள். இனி நீ தப்பிக்கவே முடியாதென மனதிற்குள் கர்வமாகச் சொன்னபடி அந்த வீட்டை நோக்கி முன்னேறினாள்.
ஆச்சரியம் தரும் விதமாக வீட்டுத்தோட்டத்திலேயே ஏகலைவன் நின்று கொண்டிருந்தான்.
அவனது விரல்கள் மலராத ராமபாண மொட்டுகளை வருடிக்கொண்டிருந்தன. ஷூ கால்களின் சத்தத்தில் ரசனை கலைந்து திரும்பியவன் கையில் கைது ஆணையுடன் நின்று கொண்டிருந்த இதன்யாவைப் பார்த்ததும் உடல் விறைத்துப்போனான்.
“கூடிய சீக்கிரம் உங்களை அரெஸ்ட் பண்ண வருவேன்னு நான் சொன்னேன்ல… சொன்ன மாதிரி வந்துட்டேன் மிஸ்டர் ஏகலைவன் சக்கரவர்த்தி”
கைதாணையை அவனிடம் நீட்டினாள்.
ஏகலைவன் அதை வாங்கி வாசித்துப் பார்த்தவன் “கிளம்பலாமா?” என்று கேட்டபடி முழுக்கை சட்டையின் ஸ்லீவை மடித்துவிட்டதில் இப்போது குழம்பியவள் இதன்யா தான்.
ஏகலைவன் அவளது குழம்பிய தோற்றத்தை ஏளன முறுவலுடன் பார்த்தபடி நெருங்கி வந்தவன் “தேவை இல்லாம என் கிட்ட மோதிட்டிங்க இதன்யா… இதுக்கான விளைவுகளைச் சந்திக்க தயாராகுங்க… பை த வே, நான் என் கார்ல வரலாம் தானே?” என்று புருவம் உயர்த்தி கேட்க
“ஸ்டேசன்ல இருந்து ஜீப் வரும்… அதுல தான் உங்களை அழைச்சிட்டுப் போக முடியும்” குழப்பம் நீங்கி கம்பீரமாய் ஒலித்தது இதன்யாவின் குரல். ஏகலைவனின் ஏளனச்சிரிப்பைச் சவாலாய் பார்த்தவளின் செவியில் காவல் வாகனத்தில் ஒலி விழுந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


 Written by
Written by