பெண் சைக்கோபாத்கள் நெருங்கிய உறவுகளிடம் நிலையான அன்பைக் காட்டுவதில்லை. குடும்பத்துடன் இருந்தாலும் அவர்கள் மற்றவர்களிடம் விலகலைக் கடைபிடிப்பார்கள். அக்கறையற்ற, அஜாக்கிரதையான, வன்முறையைக் கையாளும் நபராக தன் குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத்துணைவரிடம் நடந்துகொள்ள கூட அவர்கள் தயங்குவதில்லை. சைக்கோபதி கொண்ட நபர்கள் யாராயினும் அவர்களுக்கு சக மனிதர்கள் மீது அக்கறையோ இரக்கமோ இருக்காது. எந்த ஆழமான அன்பையும் உறவையும் மதிக்கும் தன்மை அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு அமைதியற்ற சூழலை உருவாக்கப் பிடிக்கும். சைக்கோபாத் பெண்கள் தங்களது நடவடிக்கையால் சமுதாய அல்லது குடும்ப அமைதி குலைந்தாலும் அது குறித்து கவலை கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு குற்றவுணர்ச்சியோ வெட்கமோ கிஞ்சித்தும் இருக்காது.
– An article from Psychology today
பொன்மலை காவல் நிலையம்…
இதன்யா ஏகலைவனைப் பற்றி மார்த்தாண்டன் சேகரித்து வைத்திருந்த தகவல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அன்று மாலை மாஜிஸ்திரேட்டைச் சந்தித்து கைது ஆணையை வாங்கிவிட்டால் ஏகலைவன் மற்றும் கிளாரா இருவரையும் கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிடலாம்.
முத்து மற்றும் ஜானை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான அதே தினத்தில் இவர்களையும் ஆஜர் படுத்துவதற்குள் இருவரிடமிருந்தும் உண்மையை வாங்கியாக வேண்டும்.
விசாரணைக்குழுவிலிருந்த நால்வரும் அதற்காக பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் தான் விசாரணைக்குழுவின் அலுவலக அறைக்கதவைத் தட்டி அனுமதி பெற்றுவிட்டு உள்ளெ நுழைந்தார் கான்ஸ்டபிள் கனகசுப்புரத்தினம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வந்தவர் சல்யூட் வைத்துவிட்டு “கலிங்கராஜன் வீட்டு தோட்டக்காரர் வந்திருக்கார்… மேடம் கிட்ட முக்கியமா எதுவோ பேசணும்னு சொல்லுறார்” என்றார்.
இதன்யா புருவம் சுழித்துவிட்டு “அவரை வரச் சொல்லுங்க” என்றதும் வெளியேறினார். அவர் வெளியேறிய அடுத்த சில வினாடிகளில் கலிங்கராஜன் வீட்டு தோட்டக்காரரான கோபால் உள்ளே நுழைந்தார்.
“வணக்கம் மேடம்” அவரது வதனத்தில் பவ்வியம் தெரிந்தது. தோட்டக்கலை படிப்புக்கான தகுதியோடு பணக்கார செல்வந்தர் ஒருவரின் தோட்டத்தில் நாள் முழுவதும் செடி கொடிகளுக்குக் காவல் கிடந்தாலும் வாங்குகிற அதீத ஊதியத்தின் விளைவால் செழிப்பாக வாழ்வதை அவரது பருத்த சரீரமும் சட்டைக்குள் மூச்சு முட்டிக்கொண்டு இருக்கும் தொப்பையும் சொல்லாமல் சொல்லின.
“என்ன விசயமா என்னை பாக்க வந்திருக்கிங்க?”
இதன்யா கறார்க்குரலில் கேட்டாள்.
“கிளாரா மேடம் பத்தி பேசுறதுக்காக” என்ற நபருக்கு நாற்காலியைக் காட்டி அமரும்படி கூறினாள்.
அமர்ந்தவர் அங்கே இருந்த மற்ற மூவரையும் தயக்கத்துடன் பார்த்தார்.
“பயப்படாதிங்க… நாங்க எல்லாருமே ஒரு டீம் தான்… உங்களை என்கொயரி பண்ண சாந்திவனம் வந்தப்ப பாத்திருப்பிங்களே! எங்களை நீங்க தாராளமா நம்பலாம்” இதன்யா உறுதியளித்த பிற்பாடு தயக்கம் அகன்றதோடு அவரது வாய்ப்பூட்டும் திறந்தது.
“என் பேரு கோபால் மேடம்… நான் கலிங்கராஜன் சார் வீட்டுல பதினேழு வருசமா கார்டன் மெயிண்டனன்ஸ் ஒர்க் பண்ணுறேன்… இதுவரைக்கும் இப்பிடி ஒரு சம்பவம் நடந்ததேயில்ல மேடம்… என் கண்ணை என்னால நம்பவே முடியல”
அந்நபர் பலத்த பீடிகை போடவும் இதன்யாவோடு சேர்ந்து மற்ற மூவருக்கும் ஆர்வம் பிறந்துவிட்டது.
“நேத்து நைட் கிளாரா மேடம் தோட்டத்துல ஒரு மூலைல இருக்குற மரத்தடில எதையோ புதைச்சு வச்சாங்க மேடம்”
இதைச் சொல்லத் தான் இவ்வளவு பீடிகையா என அனைவரும் எரிச்சலுறும்போதே அந்நபர் பீடிகைக்கான காரணத்தைக் கூறிவிட்டார்.
“கிளாரா மேடமுக்கு கையில துளி மண் பட்டாலும் பிடிக்காது… அவங்க ரொம்ப சுத்தம் பாப்பாங்க… சொந்தக் குழந்தைங்க மண்ல விளையாடிட்டு வந்தா கூட தொட்டுத் தூக்கமாட்டாங்க… அப்பிடிப்பட்டவங்க மண்ணைத் தோண்டி புதைக்குறதுலாம் ரொம்ப அதிசயம்… அதனால நான் அவங்க எதை புதைச்சாங்கனு பாக்க அங்க போனேன் மேடம்… போய்ப் பாத்தா…” என நிறுத்தியவர் எச்சிலை விழுங்கிக்கொண்டார்.
“மண்ணைத் தோண்டி பாத்தப்ப அங்க ஒரு பாட்டில், சின்னதா ஒரு ஹாக்சா ப்ளேடு, கொஞ்சம் முடி இதெல்லாம் ஒரு ப்ளாஸ்டிக் பையில கட்டி புதைஞ்சு இருந்துச்சு மேடம்”
இப்போது நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
சொன்னவர் தான் கொண்டு வந்த துணிப்பையிலிருந்து அந்த ப்ளாஸ்டிக் கவரை எடுத்து மேஜை மீது வைத்தார்.
அதைப் பார்த்ததும் நால்வருமே திடுக்கிட்டுப்போனார்கள்.
மீடியம் சைசில் உள்ளே இருப்பதை அப்படியே காட்டும் பாலிதீன் கவர் அது. ஆங்காங்கே மண்ணின் பழுப்பு வண்ணம் ஏறியிருந்தாலும் உள்ளே இருந்த பொருட்கள் தெளிவாக தெரிந்தன. அதிலிருந்த கண்ணாடி பாட்டில் மேஜை மீது கவரை வைத்ததும் ‘க்ளிங்’ ஓசையை எழுப்பியது. கவரை வைத்ததுமே மெல்லிய மட்கிப்போன துர்மணம் வீசியது.
அதைப் பிரிக்கப்போனவரிடம் “வேண்டாம்… டச் பண்ணாதிங்க… இதுக்கு முன்னாடி கவரைப் பிரிச்சுப் பாத்திங்களா?” என்று கேட்டார் முரளிதரன்.
“இல்ல சார்… இது என்ன ஏதுனு தெரியாம பிரிச்சுப் பாக்க பயமா இருந்துச்சு” என்றார் அந்த கோபால்.
“இதை உடனே ஃபாரன்சிக் லேபுக்கு அனுப்பணும் முரளி சார்… பாட்டில், ஹாக்சா ப்ளேட்… இந்த காம்பினேசன் பாத்ததும் முருகையா மர்டர் தான் ஞாபகம் வருது… மார்த்தாண்டன் இதை லேப்ல குடுத்துட்டு வாங்க… இனியா அண்ட் முருகையா மர்டர் ஸ்பாட் சேம்பிள்ஸ் கூட கம்பேர் பண்ணி ரிப்போர்ட் வேணும்னு சொல்லுங்க… எவ்ளோ சீக்கிரம் ரிப்போர்ட் வருதீஓ அவ்ளோ சீக்கிரம் கேஸ் ஒரு முடிவுக்கு வரும்” என்று சற்றும் தாமதிக்காமல் மார்த்தாண்டனிடம் கொடுத்தனுப்பினாள் இதன்யா.
அவர் கிளம்பியதும் கோபாலிடம் இன்னும் ஏதேனும் பொருட்கள் கிடைத்ததா என விசாரித்தார் முரளிதரன்.
“வேற எதுவும் கிடைக்கல சார்”
“நீங்க போனப்ப மண்ணை ஃப்ரெஷ்சா தோண்டி மூடுன அடையாளம் இருந்துச்சா?”
“ஆமா மேடம்… மண்ணோட பொருபொருப்பையும் இலகுத்தன்மையையும் வச்சு பாத்தா கொஞ்சநாளுக்கு முன்னாடி ஏற்கெனவே அதைத் தோண்டிருக்கணும்னு தோணுச்சு”
“அங்க கிளாரா மட்டும் தான் வந்தாங்களா? அவங்க கூட வேற யாரும் இருந்தாங்களா?”
“மேடம் மட்டும் தான் வந்தாங்க… நைட் வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி நான் தோட்டத்தை ஒரு தடவை பார்வையிடுறது வழக்கம்… அதுக்காக போனப்ப தான் மேடம் இந்தக் காரியத்தைப் பண்ணிட்டிருந்தாங்க… அவங்களோட நிழலா எப்பவுமே கூட இருக்குற குமாரி கூட அப்ப அங்க இல்ல”
“இதுக்கு முன்னாடி உங்க மேடம் இதே போல சந்தேகத்துக்கு இடமா எதையும் செஞ்சிருக்காங்களா?”
இதன்யா விசாரித்தாள். இல்லையென மறுத்தார் கோபால்.
“மேடம் எப்பவுமே பெர்ஃபெக்டா இருப்பாங்க… சின்ன சின்ன வேலை கூட அவங்க செய்யமாட்டாங்க… அப்பிடி எதாச்சும் வேலை ஆகணும்னா சர்வெண்ட்சை வச்சு செஞ்சுப்பாங்க… ஃபர்ஸ்ட் டைம் அவங்களே முன்வந்து இந்த மாதிரி ஒரு வேலைய செஞ்சிருக்காங்க”
“நீங்க குடுத்த தகவலுக்கு தேங்க்ஸ்… ஒருவேளை நீங்க கொண்டு வந்த பொருட்கள் நாங்க ரொம்ப நாளா தேடுற ஆதாரங்களா கூட இருக்கலாம்… அப்பிடி இருக்குற பட்சத்துல நீங்க கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல வேண்டியதா இருக்கும்… உங்களுக்கு அதுல ஒன்னும் பிரச்சனை இல்லையே?”
“நோ ப்ராப்ளம் மேடம்… எப்ப வேணும்னாலும் நான் வரத் தயாரா இருக்கேன்”
கோபால் கிளம்பியதும் இதன்யா முரளிதரனிடம் பேச ஆரம்பித்தாள்.
“இது மட்டும் இனியாவ கொலை பண்ண யூஸ் செஞ்ச வெப்பன்சா இருந்தா, கிளாராவ யாராலயும் சட்டத்தோட பிடில இருந்து காப்பாத்த முடியாது மேடம்” என்றார் அவர்.
“எனக்கு என்னவோ கிளாரா இன்னும் நிறைய ஆதாரங்களை மறைச்சு வச்சிருப்பாங்களோனு சந்தேகமா இருக்கு… அரெஸ்ட் வாரண்டோட சேர்த்து சர்ச் வாரண்டும் வாங்கி அவங்க வீட்டை மொத்தமா சர்ச் பண்ணியே ஆகணும் முரளி சார்… கொலை செய்யப்பட்ட பொண்ணோட வீடுங்கிறதால நாம இது வரைக்கும் அங்க எதையும் தேடிப் பாக்கல… பட் கொலைக்கு பயன்படுத்துன பொருட்கள் அங்க கிடைச்சுதுங்கிற பட்சத்துல வீ ஹேவ் டூ சர்ச் தேர்” என்று தனது எண்ணத்தைக் கூறினாள் இதன்யா.
இருவருமே மாஜிஸ்திரேட்டைச் சந்தித்து தேடுதல் ஆணை பற்றி பேசிவிட்டு அதோடு சேர்த்து கைதாணையையும் வாங்கிக்கொண்டு வருவதற்காகக் கிளம்பினார்கள்.
அதே நேரம் ஏகலைவன் தனது வழக்கறிஞரோடு தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தான்.
“போலீஸ் தரப்புல ஸ்ட்ராங்கான ஆதாரம் இல்லாத பட்சத்துல அரெஸ்ட் வாரண்ட் வாங்கமாட்டாங்க சார்… ஒருவேளை நீங்க சொல்லுற மாதிரி போலீஸ் யாருக்கும் விலை போயிருந்தாங்கனா அவங்க பொய்ச்சாட்சி, போலியான ஆதாரங்களை உருவாக்கி அதோட அடிப்படைல உங்களை அரெஸ்ட் பண்ண வாய்ப்பிருக்கு… அரெஸ்ட் வாரண்ட் கூட நான்-பெயிலபிளா இருக்கலாம்” என்றார் வழக்கறிஞர் மனுவேந்தன்.
ஏகலைவன் எரிச்சலோடு சோபாவில் சாய்ந்து கொண்டான்.
“கோர்ட் மேட்டரை ஃபேஸ் பண்ணிக்கலாம் லாயர் சார்… ஆனா அந்த லேடி ஆபிசர் நானும் மிசஸ் கலிங்கராஜனும் அஃபயர்ல இருக்கோம்னு சொன்னாங்க பாருங்க, ஐ குட் நாட் டைஜஸ்ட் தட் அலிகேசன்… என்ன பண்ணுனாலும் சீக்கிரம் பண்ணுங்க… இந்தக் கேவலமான பழிய என்னால ஏத்துக்கவே முடியாது” என்று ஆணையிட்டான்.
தமிழகத்தின் தலை சிறந்த குற்றவியல் வழக்கறிஞர் அவர். அவர் இதுவரை யாருக்காக வாதாடினாலும் அந்நபரின் வழக்கு தோற்றதேயில்லை.
எனவே நம்பிக்கையுடன் “கவலைப்படாதிங்க சார்… அவங்க உங்களை அரெஸ்ட் பண்ணுனாலு,ம் கஸ்டடில வைக்க முடியாதபடி எல்லா ஏற்பாடும் பண்ணிடுறேன்… நீங்க ரிலாக்சா இருங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் மனுவேந்தன்.
அவர் போனதும் எழுந்த ஏகலைவன் தனது அறைக்குச் சென்றான். அறை என்று அதை குறிப்பிட்டால் கட்டிடக்கலைஞர்கள் கோபம் கொள்ள வாய்ப்புண்டு.
ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பம் தங்கும் வீடு அளவுக்கு விரிந்து கிடந்தது அந்த அறை. இந்த ஒப்பீடு எல்லாம் அளவுக்கு மட்டுமே. உள் அலங்காரமோ பணக்காரத்தனமான எளிமையில் டாலடித்தது.
சாவகாசமாக சென்று சோஃபா கம் பெட்டில் சாய்ந்தான் ஏகலைவன்.
எதிரே புன்னகையோடு கண்கள் கனிய ஓவியமாக மாட்டப்பட்டிருந்த தேவசேனாவை ரசிக்க ஆரம்பித்தான். இவ்வளவு நேரமிருந்த எரிச்சல் கலந்த மனநிலை அகன்று ஜில்லென்ற குற்றாலச்சாரல் அவனது மனதுக்குள்.
மெல்லிய புன்னகை இதழ்க்கடையில் முகிழ்க்க “உஃப்… நீ மட்டும் என் கூட இருந்திருந்தா இந்தப் பிரச்சனையெல்லாம் வந்திருக்குமா தேவா? உன் ஒருத்தியோட இழப்பு என்னை எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பாரு… நான் புலம்பிட்டிருக்கேன்… நீ ஜாலியா சிரிக்குற… விதி எவ்ளோ கொடூரமானதுல்ல… நீ இல்லாம நான் மட்டும் தனியா உன்னை நினைச்சுப் புலம்புற அளவுக்கு என்னை ஆளாக்கி வச்சிடுச்சு பாரேன்” என்றவனின் மனத்தாங்கலை ஓவியம் காது கொடுத்தா கேட்கப் போகிறது!
ஆனால் அவன் ஓயமாட்டான். நடந்ததை மனப்பாடம் செய்து குழந்தை தாயிடம் ஒப்பிப்பது போல அந்த ஓவியத்திடம் ஒப்பித்தால் தான் ஏகலைவனின் நாள் முழுமையுறும்.
சொல்லப்போனால் இது தினசரி நடக்கும் வாடிக்கையான சம்பவமே! எப்போதுமே அந்த ஓவியத்தைத் தேவசேனாவாக உருவகப்படுத்திக்கொண்டு அன்றாடம் நடந்ததை ஒப்பித்துவிடுவான் அவன். அவனுக்குச் சென்னை மற்றும் மும்பையிலும் வீடுகள் உண்டு. அங்கேயும் தேவசேனா ஓவியமாக இருக்கிறாள். அவனது புலம்பலில் இருந்து அந்த ஓவியத்துக்கு விடுதலையும் கிடையாது, விடுமுறையும் கிடையாது.
“சொல்ல மறந்துட்டேனே, உன் ஃபேவரைட் ராமபாணக்கொடி இன்னைக்குக் கொஞ்சம் அதிகமா மொட்டு விட்டுருக்கு தேவா… இன்னும் ரெண்டு நாள்ல நம்ம தோட்டமே அதோட மணத்துல திக்குமுக்காடப்போகுது பாரேன்… ஹேய்! அந்த லேடி ஆபிசர் இருக்கால்ல, அவளுக்குக் கூட உனக்கு ராமபாணப்பூ ரொம்ப பிடிக்கும்னு தெரிஞ்சிருக்கு… உன்னை மாதிரியே கொஞ்சம் போல்டான விமன்… அதனால குத்தலா பேசுனா கூட நான் கண்டுக்காம ஒரு தடவை ஹெல்ப் பண்ணிருக்கேன்… ஆனா இந்தத் தடவை ஷீ க்ராஸ்ட் ஹெர் லிமிட் தேவா… என்னைப் போய் அந்தக் கிளாரா கூட சேர்த்து வச்சு பேசுறா… இதுக்காக நான் அவளைச் சும்மாவிடப்போறதில்ல தேவா… உன்னைத் தவிர வேற யாரையும் பத்தி யோசிக்காத என்னைப் போய் கிளாரா கூட அஃபயர் வச்சிருக்கேன்னு சொல்லிட்டா… ஷிட்”
ஏகலைவன் தேவசேனாவின் ஓவியத்திடம் மனக்குமுறலை முறையிட்டுக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவனைக் கைது செய்வதற்கான ஆணையில் மாஜிஸ்திரேட் கையெழுத்திட்டார். கைதாணை கையெழுத்தாவது அவனுக்கு மட்டுமல்ல கிளாராவுக்கும் சேர்த்து தான்.
இதன்யாவின் கோரிக்கையின் பேரில் கூடுதலாகச் சாந்திவனத்தைச் சோதனையிடவும் ஆணையொன்றைப் பிறப்பித்துக் கையெழுத்திட்டார் மாஜிஸ்திரேட். சம்பந்தப்பட்டவளான கிளாராவோ தீவிர மனக்குழப்பத்திலிருந்தாள் சாந்திவனத்தில். செய்த தவறுக்கான தண்டனையாக இந்த மனக்குழப்பத்தொடு பெரும் மனவேதனையையும் அனுபவிக்கப்போகிறாய் நீ என விதி குரூரமாகச் சிரித்தது அவளது காதுகளில் விழவில்லை, பாவம்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

