மனப்பிறழ்வு குறைபாடு கொண்ட பெண் சைக்கோபாத்கள் மனதளவின் காயமுறும்போது அதிவேகமாகவும் சுலபமாகவும் தங்களின் ஆக்ரோசத்தை எதிராளிகளிடம் காட்டத் துணிவார்கள். அது சில நேரங்களில் அவர்களின் இணையராக இருக்கவும் வாய்ப்புள்ளது. பல நேரங்களில் அவர்கள் தங்கள் இணையரை உணர்வுரீதி, பொருளாதாரரீதி, உடல்ரீதியாக வேதனைப்படுத்த முயற்சிப்பார்கள். அவர்களின் இணையருடன் இருக்கும் உறவை யாரேனும் தகர்க்க முயன்றார்கள் என்றாலோ வன்முறையைக் கையில் எடுத்து மரியாதை குறைவாக நடந்துகொள்ள தயங்க மாட்டார்கள். இந்தப் பெண் சைக்கோபாத்கள் செக்ஸ், பாலியல் ரீதியான மயக்கம், தன்னைத் தானே அழித்துக்கொள்வேன் என பயமுறுத்துதல் போன்றவற்றை அடுத்தவர்களைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்களாகப் பயன்படுத்துவார்கள். அடுத்தவர்களை அவர்களின் விருப்பமின்றி பின்தொடர்வது, சைபர்புல்லியிங், வார்த்தைகளால் அவமானப்படுத்துவது போன்றவற்றிலும் ஈடுபடத் தயங்கமாட்டார்கள் இத்தகைய பெண் சைக்கோபாத்கள்.
– An article from Psychology today
பொன்மலை காவல்நிலையத்தில் மீண்டும் விசாரணை அறை உச்சபட்ச பரபரப்பில் இருந்தது. இரண்டாம் முறையாக அந்த அறையில் அமர வைக்கப்பட்டிருந்தான் நிஷாந்த்.
ஏற்கெனவே நீதிமன்றத்துக்கு அலைந்ததில் அவன் பாதி ஆளாக மாறியிருந்தான். அடுத்து இன்னொரு வழக்கா என்ற பயம் அவனது கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அதை விட அவனெதிரே அமர்ந்து இருந்த இதன்யாவையும் முரளிதரனையும் பார்க்கையில் பயம் இன்னும் அதிகரித்தது.
மேஜை மீது அவனது மொபைலை வைத்தார் முரளிதரன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இந்த மொபைல் உன்னோடது தானே?”
நிஷாந்தின் உடல் ஒரு நொடி அதிர்ந்தது. கண்களில் மிரட்சி தெரிய எச்சிலை விழுங்கியவனின் ஆடம்ஸ் ஆப்பிள் ஏறியிறங்கிய விதமே ‘ஐயோ மாட்டிக்கொண்டோமே’ என்ற அவனது மனதின் குரலை உடல்மொழியில் உரக்கச் சொல்லிவிட்டது.
“இதுல இருந்த சிம் கார்ட் உன் ஆதார் நம்பரை யூஸ் பண்ணி வாங்கப்பட்டிருக்கு… இந்த சிம் யூசேஜ் பொன்மலைய தாண்டி வெளிய போகல… உன் ஆதார் கார்டை, உன்னோட பயோமெட்ரிக்சை உன்னைத் தவிர வேற யாரும் யூஸ் பண்ண முடியாது… இதுக்கு மேலயும் பொய் சொல்லி கொலைகாரப்பட்டம் சுமக்காம உண்மைய சொல்லிடு… அது தான் உனக்கும் உன்னை நம்பியிருக்குற உன் அம்மாவுக்கும் நல்லது”
அவனை எச்சரித்தபடி மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டாள் இதன்யா.
“இதுக்கு மேல அமைதியா இருந்தனா கற்பழிச்சு கொலை பண்ணுனனு டபுள் க்ரைமுக்கான தண்டனைய அனுபவிக்கணும்… அதுக்குப் பதிலா உண்மைய சொல்லி உன் தண்டனைய குறைச்சுக்க” இது முரளிதரன்.
நிஷாந்த் தலையைக் குனிந்துகொண்டான். உடனே அந்த அறையிலிருந்த மார்த்தாண்டன் வெடித்தார்.
“இப்பிடி தலை குனிஞ்சு குனிஞ்சு என்ன பொய் சொல்லலாம்னு யோசிப்பான் மேடம் இவன்… கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இருக்கானு பாருங்க”
இதன்யா அவரைத் தடுக்கவில்லை. கடந்த முறை விசாரணையில் அவன் செய்ததை தானே அவர் கூறுகிறார்.
நிஷாந்த் வேறு வழியின்றி வாயைத் திறந்தான்.
“நான் தான் இந்த மொபைலை யூஸ் பண்ணுனேன் மேடம்”
“இனியா கூட எதுக்காக ஃபேக் ஐடில பேசுன?”
“அது…” தயங்கினான் அவன்.
“சொல்லுடா… அது இதுனு இழுத்துக்கிட்டு…” மார்த்தாண்டன் ஆவேசப்படவும் மருண்டுப் போனான் அவன்.
“சொல்லிடுறேன் சார்… இனியா ஒரு சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்… அவ என்னை லவ் பண்ணுறதா சொன்னதும் என்னால நம்ப முடியல… மனசோட ஒரு மூலைல பணக்காரப்பொண்ணுங்க டைம்பாசுக்கு லவ் பண்ணுவாங்கனு ஒரு எண்ணம் வந்துச்சு… அவ என்னை ஜாலிக்கு யூஸ் பண்ண நினைக்குறாளோனு சந்தேகம்… எனக்கு இனியா என்னைத் தவிர வேற யார் கூடவும் முக்கியமா வேற பசங்க கூட பேசுறாளானு தெரிஞ்சிக்கணும்… அதுக்காக ஈ.டி.எஸ்ங்கிற பேர்ல ஃபேக் ஐடி க்ரியேட் பண்ணி அவ கூட வேற ஒருத்தன் மாதிரி பேசுனேன்… அவ அந்த ஐடி கூட சாதாரணமா பேசுறானு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அவ ப்ரபோசலை ஒத்துக்கிட்டேன்… பட் அதுக்கு அப்புறம் நான் அந்த ஐடிய யூஸ் பண்ணல”
“ஏன்? சாரோட சந்தேகம் தீர்ந்துடுச்சோ?”
நக்கலாகக் கேட்டாள் இதன்யா. இந்த ஆண்களுக்கு தான் பெண் ஒருத்தி ஊடகத்தில் இருந்தாலே அவளது ஒழுக்கத்தின் மீதும், வளர்ப்பின் மீதும் எவ்வளவு எளிதில் சந்தேகம் வருகிறது? தன்னைக் காதலிப்பவள் வேறொரு ஆண்மகனிடம் பேசுகிறாளா என உளவு பார்க்க போலியாக முகநூல் கணக்கு தொடங்குறவன் எல்லாம் எந்த வகையறா ஜந்து! விட்டால் நிஷாந்தைக் கூறு போட்டுக் கிழித்திருப்பாள் இதன்யா. இது அதற்கான நேரமும் இல்லை, தருணமும் இல்லை என்பதால் அமைதி காத்தாள்.
“பதில் சொல்லு நிஷாந்த்”
“நான் அடிக்கடி போன் யூஸ் பண்ணுறதை பாத்து அம்மா என் போனை மாமா கிட்ட பிடுங்கி குடுத்துட்டாங்க மேடம்… மொபைல் பாஸ்வேர்டை ரிமூவ் பண்ணிட்டு மாமா அந்தப் போனை வச்சுக்கிட்டார்… இவ்ளோ தான் எனக்குத் தெரியும் மேடம்… நான் இனியாவ பத்தி தெரிஞ்சிக்கத் தான் இந்த ஐடி ஓப்பன் பண்ணுனேன்… மத்தபடி வேற எந்த இண்டென்சனும் எனக்குக் கிடையாது மேடம்” என கெஞ்சினான் நிஷாந்த்.
“உன் மாமா சோசியல் மீடியால ஆக்டிவா இருப்பாரா நிஷாந்த்?”
முரளிதரன் கேட்க இல்லை என மறுப்பாய் தலையசைத்தான் நிஷாந்த்.
“மாமாக்கு ஃப்ரீயா சோசியல் மீடியா யூஸ் பண்ணுற அளவுக்குலாம் டைம் இருக்காது சார்… அவர் எப்பவுமே பிசினஸ்ல பிசியா இருப்பார்… அடிக்கடி மும்பை, சென்னை ஆபிசுக்குப் போவார்… பொன்மலைல இருக்கப்பவும் வீடியோ கான்பரன்ஸ் மூலமா பிசினஸ் மீட்டிங் அட்டெண்ட் பண்னுவார்” என்றான்.
“உன் மாமாவோட லேப்டாப்பை நீ யூஸ் பண்ணுவியா?” இதன்யா கேட்டாள்.
“இல்ல மேடம்… மாமாக்கு அவரோட திங்சை அடுத்தவங்க யூஸ் பண்ணுனா பிடிக்காது.. ரொம்ப கோவம் வரும்… ஒரு தடவை அவரோட பென்னை நான் யூஸ் பண்ணுனேன்னு ரொம்ப கோவப்பட்டார்… உனக்குப் பென் வேணும்னா என் கிட்ட கேளு, புதுசா காஸ்ட்லியா வாங்கி தருவேன், அதை விட்டுட்டு என் திங்சை யூஸ் பண்ணக்கூடாதுனு மாமா ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டுட்டார்… அதனால அவரோட திங்சை நான் யூஸ் பண்ணவேமாட்டேன்”
“ஒருவேளை அவருக்குத் தெரியாம நீ யூஸ் பண்ணிருக்கலாமே?”
சந்தேகமாக வினவினார் முரளிதரன்.
“இல்ல சார்… அப்பிடி யூஸ் பண்ணனும்னு அவசியமில்ல… நான் கேட்டா மாமா எனக்குப் புது லேப்டாப் வாங்கி தந்திருப்பார்” என்றான் அவன்.
“உன் ஃபேஸ்புக் ஐடிய நீ ஏன் டார்க்வெப் ப்ரவுசர்ல யூஸ் பண்ணுன?” அடுத்தக் கேள்வியைக் கேட்டாள் இதன்யா.
“பொதுவா கிரிமினல்ஸ், தன்னோட அடையாளம் தெரியக்கூடாதுனு நினைக்குறவங்க தான் டார்க்வெப் ப்ரவுசர்சை யூஸ் பண்ணுவாங்க… நீ என்ன நோக்கத்தோட அதை யூஸ் பண்ணுன?” என்றாள் தொடர்ந்து.
“எங்க காலேஜ்ல டார்க்வெப் பத்தி அவேர்னெஸ் ப்ரோக்ராம் ஒன்னும் கண்டெக்ட் பண்ணுனாங்க… அப்ப டார்க்வெப் ப்ரவுசர்ஸ் பத்தி சொன்னது எனக்கு கியூரியாசிட்டிய கிளப்புச்சு… அதனால தான் ஃபேஸ்புக் ஃபேக் ஐடிய அதுல யூஸ் பண்ணுனேன்”
“அந்த டார்க்வெப் ப்ரவுசர் பத்தி எப்பவாச்சும் உன் மாமா ஏகலைவன் கிட்ட நீ சொல்லிருக்கியா?”
நிஷாந்த் புருவம் சுருக்கி யோசித்தான். பின்னர் “ஆமா மேடம்… என் மொபைலை மாமா கிட்ட இருந்து வாங்கணும்னு அவர் வீட்டுக்குப் போனப்ப அதுல இருந்த ஆப்ஸ் பத்தி அவர் கிட்ட பேசுனேன்… டார்க்வெப் ப்ரவுசர்ஸ் பத்தியும் அப்ப நான் அவர் கிட்ட பேசுனேன்”
இதன்யா முரளிதரனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தாள். பின்னர் அவளே “உன் மாமாவோட லேப்டாப்ல நீ யூஸ் பண்ணுன டார்க் வெப் ப்ரவுசர் மூலமா ஈ.டி.எஸ்ங்கிற ஐடி லாகின் ஆகிருக்கு… உன் ஃபேக் ஐடி பாஸ்வேர்ட் மிஸ்டர் ஏகலைவனுக்குத் தெரியுமா?” என்று கேட்க
“தெரியும் மேடம்… நான் அந்த ஐடிய அவர் முன்னாடி டெலீட் பண்ணப்போனேன்… ஆனா மாமா அவசரமா போனை வாங்கிட்டார்… அப்ப பாஸ்வேர்ட் பத்தி சொன்னேன்”
“இந்த ஃபேக் ஐடி பத்தி ஏன் முன்னாடி நடந்த விசாரணைல சொல்லல?”
“என் மேல இன்னும் சந்தேகம் அதிகமாகும்னு மறைச்சிட்டேன் மேடம்… மத்தபடி இனியாவை நான் கொலை பண்ணல… எனக்கு அவளைப் பிடிக்கும் மேடம்…. நான் நடந்துக்கிட்ட வேணும்னா தப்பா இருக்கலாம்… ஆனா நான் இனியா மேல உயிரையே வச்சிருந்தேன்”
நிஷாந்திடம் கேட்க வேண்டிய அனைத்துக் கேள்விகளையும் கேட்டு முடித்தார்கள் சிறப்பு விசாரணை குழுவினர்.
அவனது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் “இந்த கேஸ் சம்பந்தமா கோர்ட்டுல ஆஜராகச் சம்மன் வரும்… நீ வரணும்… ஏதாச்சும் சாக்குபோக்கு சொல்லி எஸ்கேப் ஆகணும்னு நினைச்ச, அப்புறம் நீ ரொம்ப வருத்தப்படுவ” என மார்த்தாண்டன் நிஷாந்தை எச்சரித்து அனுப்பிவைத்தார்.
அவன் சென்றதும் “எனக்கு இன்னும் இவன் மேல நம்பிக்கை இல்ல மேடம்… அந்தப் பொண்ணைக் காட்டுக்கு அழைச்சிட்டுப் போய் ஆசைக்கு இணங்க வச்சிருக்கான்… ஃபேக் ஐடி யூஸ் பண்ணி அவளைக் கண்காணிச்சிருக்கான்… இதை எப்பிடி காதல்னு நம்புறது?” என்றார் அவர்.
“அட போங்க சார்… இந்தக் காலத்து பசங்க இப்பிடி தான்… ஆஃப்லைன்ல ஒரு மாதிரி, ஆன்லைன்ல ஒரு மாதிரினு ரெட்டை வாழ்க்கை வாழுறாங்க… அதனால அவங்களுக்கு யார் மேலயும் நம்பிக்கை வர்றதில்ல” என மகேந்திரன் சொல்ல மார்த்தாண்டனும் அதை ஏற்றுக்கொண்டார்.
இதன்யா முரளிதரனிடம் “சோ இங்க கல்ப்ரிட் ஏகலைவன் தான்னு தெளிவா தெரியுது… ஜான் முத்துவோட சாட்சியம் அடிப்படைல கிளாராவையும் ஏகலவனையும் அரெஸ்ட் பண்ணியே ஆகணும் சார்… அந்த லேடி செஞ்ச கேடுகெட்ட காரியம் கொலை செய்யுற தைரியத்தைக் குடுத்திருக்கலாம் தானே?” என்றாள்.
“எனக்கும் அந்த எண்ணம் தான் மேடம்… கிளாராவும் ஏகலைவனும் தங்களோட உறவை மறைக்கணும்னு இனியாவைக் கொன்னுருக்கலாம்… பட் அவ ரெண்டு பேரால பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதா பி.எம் ரிப்போர்ட் சொல்லுதே? ஒரு ஆள் நிஷாந்த்னு கண்டுபிடிச்சாச்சு… இன்னொரு ஆள் ஏகலைவனா இருக்கலாமா? கிளாராவ காதலிச்ச ஆள் எப்பிடி இனியாவ பாலியல் ரீதியா நெருங்கிருக்க முடியும்?” என்று தனது சந்தேகத்தைக் கேட்டார் முரளிதரன்.
“சமுதாய ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்ட உறவுல ஈடுபடுறவங்க எந்த மாதிரி வக்கிரத்தையும் செய்வாங்க முரளி சார்… ஜெண்டில்மேன்னு ஊரை நம்ப வச்சிட்டு யாருக்கும் தெரியாம கிளாரா கூட அஃபயர் வச்சிருந்த ஆள் எப்பிடி பெண்கள் விசயத்துல கண்ணியமா இருக்க முடியும்? இனியாவ வன்புணர்வு பண்ணுன ரெண்டாவது ஆள் மிஸ்டர் ஏகலைவனா மட்டும் தான் இருக்கமுடியும்… கொலை நடந்த ஸ்பாட்ல கட்டாயம் கிளாரா இருந்திருக்க மாட்டாங்கனு தோணுது… அந்த தைரியத்துல கூட ஏகலைவன் இப்பிடி செஞ்சிருக்கலாம்” என்று தனது ஊகத்தைக் கூறினாள் இதன்யா.
ஏகலைவனையும் கிளாராவையும் கைது செய்வதற்கான ஆணையை வாங்குவதற்காக மாஜிஸ்திரேட்டிடம் இனியா படுகொலை வழக்கு பற்றிய அறிக்கையை அளித்துவிட்டு வந்த பிற்பாடு தான் நிஷாந்தை அவள் விசாரிக்கத் துவங்கினாள்.
நிஷாந்தின் வாக்குமூலத்தை வைத்துப் பார்த்தால் ஏகலைவன் மீதான சந்தேகம் இன்னும் வலுத்தது. இருவரையும் கைது செய்ய, ‘பெயிலற்ற கைது ஆணையை’ அளிக்குமாறு மாஜிஸ்திரேட்டிடம் கேட்டுக்கொண்டது எவ்வளவு பெரிய நன்மை என்பது இப்போது அவளுக்குப் புரிந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

