பெண் சைக்கோபாத்கள் தங்களுக்கென ஒரு போலியான முகமூடியைப் போட்டுக்கொண்டு உலாவுவார்கள். அன்பான பெண், அக்கறையான மனைவி, உதவிக்கு ஆளற்ற அபலைப்பெண், சுதந்திரமனப்பாங்கு கொண்ட பெண், இரக்கமுள்ள அண்டைவீட்டார், அன்பான அன்னை என சமுதாயத்திற்காக அவர்கள் அணியும் முகமுடி சமயத்திற்கு தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருக்கும். அனைவரும் விரும்பத்தக்க ஒரு பெண்ணாக தன்னை வெளிக்காட்டிக்கொள்வதில் பெண் சைக்கோபாத்கள் மெனக்கிடுவார்கள். ஏனென்றால் அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். அவர்களுக்குச் சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அதிகமாக இருக்கும். தீவிர மனப்பிறழ்வு குறைபாடுள்ள பெண்கள் ஆண் சைக்கோபாத்களைப் போலவே ஆக்ரோசமாக உடல்ரீதியான தாக்குதல்களில் இறங்குவார்கள்”
– An article from Psychology today
காவல் நிலையத்துக்குக் கிளம்பிய இதன்யாவுடைய பைக்கின் குறுக்கே ஒரு நபர் வரவும் சட்டென ப்ரேக்கிட்டு நின்றது. வந்தவர் வேறு யாருமில்லை சாவித்திரி தான். யாரும் தன்னைக் கவனிக்கிறார்களா என சுற்றும் முற்றும் அவர் பார்க்கவும் “நீங்க சொல்ல வேண்டியதை ஏற்கெனவே சொல்லிட்டிங்களே.. இன்னும் என் கிட்ட என்ன பேசணும்?” என்று கேட்டாள் இதன்யா.
சாவித்திரி துடித்த உதடுகளைக் கட்டுப்படுத்தியபடி “என் மகனைப் போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டாங்க மேடம்… நீங்க அவனை அரெஸ்ட் பண்ணமாட்டேன்னு வாக்கு குடுத்திங்களே… இப்ப அவங்க…” என முழுவதுமாக முடிக்கத் தடுமாறினார்.
இதன்யா சாவகாசமாகப் பைக்கிலிருந்து இறங்கினாள். சாவித்ரியை குறுகுறுவெனப் பார்த்தாள்.
“உங்க மகன் ஒன்னும் தேசத்துக்காகப் போராடுன தியாகி இல்ல… ஒரு மைனர் பொண்ணை காதல்ங்கிற பேர்ல யூஸ் பண்ணிருக்கான்… அவனை எப்பிடி நாங்க விடமுடியும் மேடம்?” ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டவள் அதற்கு மேல் அவரிடம் பேச விரும்பாதவள் போல பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சாவித்திரியோ நடுத்தெருவில் பயத்தோடு நின்று கொண்டிருந்தார். அவரது மனக்கண்ணில் இரு தினங்களுக்கு முன்னர் இதன்யா அவரை பொன்மலை முருகன் கோவிலில் சந்தித்தது நினைவுக்கு வந்தது.
அவரைப் பார்த்ததும் வணக்கம் சொன்னவள் நிஷாந்தின் வழக்கு என்ன நிலையிலுள்ளதென விசாரித்தாள்.
அவர் பட்டும்படாமலும் பதிலளிக்க, இனியாவின் வழக்கில் மீண்டும் ஒரு முறை நிஷாந்த் மாட்டுவது திண்ணம் என்று சொல்லி அவரது தலையில் இடியை இறக்கினாள்.
“உங்க மகன் ஃபேஸ்புக்ல ஃபேக் ஐடி வச்சு இனியா கூட வேற ஒருத்தன் மாதிரி பேசிருக்கான்… அந்த மொபைலை மிஸ்டர் ஏகலைவன் கிட்ட குடுத்துருக்கான்… அது அட்டுமில்ல… அதே ஃபேக் ஐடிய ஏகலைவனும் அவரோட லேப்டாப்ல யூஸ் பண்ணி இனியா கிட்ட பேசிருக்கார்… இந்த உண்மைய எங்க விசாரணைல அவன் சொல்லவேல்ல… அவனும் ஏகலைவனும் சேர்ந்து தான் இனியாவைக் கொலை பண்ணிருப்பாங்கங்கிற சந்தேகத்தோட அடிப்படைல அவனை நாங்க எப்ப வேணாலும் அரெஸ்ட் பண்ணுவோம்”
சாவித்திரிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இனியாவைக் கற்பழித்ததாக மகன் மீதிருக்கும் வழக்கே இன்னும் தீராத நிலையில் கொலைப்பழியும் சேர்ந்துகொண்டால் நிஷாந்தைக் காப்பாற்றுவது அந்தக் கடவுளுக்குக் கூட கஷ்டமான காரியம் ஆகிவிடுமே.
இப்போது தான் நிஷாந்தை மட்டும் இனியாவின் வழக்கிலிருந்து காப்பாற்றிவிட்டால் முடிக்காணிக்கை தருவதாக முருகனிடம் அழுது அரற்றி வேண்டுதல் வைத்துவிட்டு வந்தார். இப்போது முருகனே அடுத்தச் சோதனையாக இன்னொரு பழியை மைந்தன் மீது போடப் பார்க்கிறாரே என அன்னையுள்ளம் துடித்தது.
பளிங்கு போல உணர்ச்சிகளை மறைக்காமல் காட்டிய முகத்தின் உதவியால் சாவித்திரியின் மனதில் கொந்தளிக்கும் உணர்வுகளை இதன்யாவால் புரிந்து கொள்ள முடிந்தது.
“உங்க மகனை இந்தக் கேஸ்ல காப்பாத்த ஒரு வழி இருக்கு” என்று மெதுவாக அவருக்கு வலை விரித்தாள் அவள்.
“என்ன வழி? சொல்லுங்க மேடம்… என் மகனுக்காக அந்த வழில நான் முயற்சி பண்ணி பாக்குறேன்” என பரபரத்தார் சாவித்திரி. அன்னையுள்ளம் மகனுக்கு அவள் உதவுவாளா என்று கூட யோசிக்கவில்லை. நீதிமன்றத்துக்கு அலைந்து மனமுடைந்து போன மகனின் முகம் நினைவில் வரவும் கிடைப்பது துரும்பாக இருந்தாலும் பற்றிக்கொண்டு கரையேறிவிடுவோம் என்ற மனநிலை வந்துவிட்டது சாவித்திரிக்கு.
இதன்யா இதற்கு தானே காத்திருந்தாள்.
“உங்க மகன் மேல எந்தத் தப்புமில்ல, மிஸ்டர் ஏகலைவன் தான் எல்லா தப்பையும் செஞ்சார்னு சொல்லிட்டா நிஷாந்தை காப்பாத்திடலாம்” என அவள் முடிக்கவும் சாவித்திரியின் கண்கள் கலங்கிப் போயின.
“தம்பிய எப்பிடிம்மா சொல்ல முடியும்? அவன் தான் எங்களுக்கு எல்லாவுமா இருக்கான்… என்னையும் என் மகனையும் கௌரவமா வாழ வைக்குற சாமி ஏகலைவன்.. அவனுக்கு ஒன்னுனா எனக்கு வலிக்கும்” என்றபடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
இதன்யா இதை எதிர்பார்த்திருந்தாள். இருக்கும் ஒரு ஆதரவான ஏகலைவன் மீது சாவித்ரிக்கு எக்கச்சக்க விசுவாசம் உண்டு என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதிலும் கடவுள் என்கிறாரே!
“அவருக்கு இருக்குற செல்வாக்கை பயன்படுத்தி ஏகலைவன் இந்தக் கேஸை ஒன்னுமில்லாம ஆக்கிடுவார்மா… அவர் மேல பழி சொல்ல விருப்பமில்லனா இன்னொரு வழியும் இருக்கு… பட் அதுக்கு நான் கேக்குற கேள்விகளுக்கு நீங்க உண்மையான பதிலை சொல்லணும்” என்று இதன்யா கூற சாவித்ரியும் வேறு வழியின்றி அவளது கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆரம்பித்தார், அவள் தன்னிடம் ஏகலைவனைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறாள் என்ற ஸ்ரமணை சுத்தமாக இல்லாமல்.
“மிஸ்டர் ஏகலைவனோட நடத்தை எப்பிடிப்பட்டது?”
“என் தம்பிய மாதிரி ஒழுக்கமானவனை இந்தப் பொன்மலைல நீங்க தேடிக் கூட கண்டுபிடிக்க முடியாது… அவனுக்கு இருக்குற அந்தஸ்துக்கும், பணத்துக்கும் எல்லா வழிலயும் பணத்தை வாரியிறைக்கலாம்… ஆனா என் தம்பி அப்பிடி செய்யுறவன் இல்ல… ரொம்ப கட்டுக்கோப்பா வாழுறவன்.. உழைக்குறதை தவிர வேறு எதுலயும் அவனுக்கு ஈடுபாடு கிடையாது… ஒருத்திய உயிருக்கு உயிரா காதலிச்சான்… அவ இல்லனு ஆனதும் அவளோட நினைப்போடவே பிரம்மச்சாரியா கல்யாணம் பண்ணிக்காம வாழ்க்கைய கழிக்குறான்… அவனோட ஒழுக்கத்தைக் கேள்வி கேக்குற தகுதி யாருக்குமே கிடையாது மேடம்”
மூச்சு வாங்க சொல்லி முடித்தார் சாவித்திரி. ஏகலைவனின் முன்னாள் காதல் பற்றிய தகவல் இதன்யாவுக்கு என்னென்னவோ சந்தேகங்களைக் கிளப்பியது.
“ஓஹ்! குட்… அவரோட காதலி என்ன ஆனாங்க? வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?”
“இல்ல மேடம்… அவளைக் கொலை பண்ணிட்டாங்க” முடிக்கும்போதே அழுகை வந்துவிட்டது சாவித்திரிக்கு.
கொலையா? புருவங்களைச் சுருக்கிக்கொண்டாள் இதன்யா.
“ஏகலைவன் காதலிச்ச பொண்ணு அவனை மாதிரி பணக்கார குடும்பத்து பொண்ணு இல்ல… அவ கவர்மெண்ட் ஜாப் பாத்துட்டிருந்தா…. பேரு தேவசேனா… ரொம்ப தைரியமான பொண்ணு அவ…. கொலை எல்லாம் நடந்தா கைரேகை ஆதாரம் எல்லாம் எடுப்பாங்களே அந்த வேலை பாத்துட்டிருந்தா அவ”
சாவித்திரி இதைச் சொன்னதும் தான் இதன்யவின் மூளைக்குள் அலாரம் அடித்தது.
‘தடயவியல் அறிவு உள்ளவன் – ஏனெனில் இனியாவின் உடலில் நிஷாந்தின் டி.என்.ஏக்கள் கிடைத்த அளவுக்கு அவனுடையது கிடைக்கவில்லை. தடயவியல் அறிவை வைத்து கைரேகை முதற்கொண்டு கலைத்திருக்கிறான்’
அவள் யூகித்து வைத்திருந்த முதல் பாயிண்டிற்கும் ஏகலைவனுக்கும் ஒத்துப் போகிறதோ? மூளை பரபரவென யோசித்து இனியாவுக்கும், ஈ.டி.எசுக்கும் நடந்த சாட்களின் சில பகுதிகளை நினைவுக்குக் கொண்டு வந்து ஆராய்ந்தது.
அச்சிறுபெண்ணுக்குத் தடவியல் நிபுணராக வேண்டுமென்ற ஆசை இருந்திருக்கிறது. தனக்குத் தடவியல் துறை பற்றிய அறிவு உண்டு என்று சொல்லிய பிறகே அவளிடம் சாட் செய்ய ஆரம்பித்திருக்கிறான் ஈ.டி.எஸ்.
இங்கோ மரணித்துப்போன ஏகலைவனின் காதலி தடவியல் துறையில் நிபுணராகப் பணியாற்றியிருக்கிறாள். அவள் ஏன் அவனுக்குப் பணி விவரங்களை, பணி நுணுக்கங்களைச் சொல்லியிருக்கக்கூடாது?
“அவ குமுதம் ரிப்போர்ட்டர்ஸ்ல கட்டுரை கூட எழுதுனா மேடம்… அதுல்லாம் புக்கா வந்து நல்ல சேல்ஸ் ஆச்சு… அவங்கம்மாக்கு பப்ளிகேசன் தரப்புல இருந்து நிறைய பணம் குடுத்தாங்க… அதை வச்சு தான் அந்தம்மா சாகுற வரைக்கும் ஜீவனம் பண்ணுனாங்க… என் தம்பி உதவி செய்யுறேன்னு போனப்ப கூட வேண்டாம்னு பிடிவாதமா மறுத்துட்டாங்க”
இதன்யா சாவித்ரியின் பேச்சில் குறுக்கிட்டாள்.
“என்ன காரணத்துக்காக தேவசேனாவ கொலை பண்ணுனாங்க? அவங்களைக் கொன்னவனைக் கண்டுபிடிச்சாங்களா?”
“இல்ல மேடம்… அவ ஏதோ ஒரு சீரியசான கேசுக்காக ஆதாரம் கலெக்ட் பண்ணிட்டிருந்தா அந்தச் சமயத்துல… அது சம்பந்தமா பெரிய இடத்துல இருந்து ப்ரஷர் நிறைய வந்துச்சு அவளுக்கு… தேவசேனா நியாயமான பொண்ணு… எதுக்கும் அசைஞ்சு குடுக்கலனதும் ஆதாரத்தை அழிச்சிட்டு அவளையும் ஆள் வச்சு கொன்னுட்டாங்க… அவ மரணத்தால என் தம்பி உடைஞ்சு போயிட்டான்… தன்னோட செல்வாக்கை வச்சு என்னென்னவோ செஞ்சு பாத்தும் கொலைகாரன் யாருனு அவனால கண்டுபிடிக்க முடியல… அவனும் தனிமரமா நின்னுட்டான்… கல்யாணப்பேச்சை எடுத்தாலே தேவாவ தவிர வேற யாரையும் மனசால கூட நினைக்க மாட்டேன்னு சொல்லுவான்… நானும் எத்தனையோ தடவை சொல்லி பாத்தேன்… தேவா இன்னொரு தடவை பிறந்து வந்தா பாக்கலாம்கானு விளையாட்டா அந்தப் பேச்சைத் திசை திருப்பிடுவான்… அவளுக்கு ராமபாணப்பூ ரொம்ப பிடிக்கும்… அவ ஞாபகார்த்தமா அந்தக் கொடிய வச்சு வளக்குறான்”
இதன்யாவுக்கு எதுவோ புரிந்தது போல இருந்தது. காதலியின் அகால மரணம் ஏகலைவனைப் பாதித்திருக்கலாமென நினைத்தாள். அடுத்து நிஷாந்துக்கும் அவனுக்குமான உறவைப் பற்றி விசாரித்தாள்.
தனக்கு வாரிசு இல்லாததால் நிஷாந்தைத் தனது சொத்துக்கள் மற்றும் தொழிலுக்கான வாரிசாக அறிவிக்க விரும்புவதாக ஏகலைவன் எப்போதோ சொல்லிவிட்டானாம். எனவே தான் அவன் என்ன தவறு செய்தாலும் முந்திக்கொண்டு வந்து காப்பாற்றிவிடுகிறான் போல.
“என் மகன் மட்டுமில்ல, என் தம்பியும் கூட யாருக்கும் துரோகம் நினைக்காதவன்… அவனுக்கு இந்தக் கேஸ்ல சம்பந்தமே கிடையாது… நிஷாந்தோட அவசரபுத்தியால தான் அவன் பேர் இதுல சிக்கிடுச்சு… இது என் தம்பியோட கௌரவத்துக்கு ஒரு கறுப்புப்புள்ளி… அவனால இதை சுலபத்துல அழிச்சிட முடியும்.. ஆனா கலங்கப்பட்டதை மாத்த முடியாதுல்ல… ப்ளீஸ் மேடம்! அவங்க பக்கம் இருக்குற நியாயத்தையும் யோசிங்க… எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் நான் சொல்லிட்டேன்… நான் எதையும் உங்க கிட்ட மறைக்கல”
சாவித்திரியிடமிருந்து விடைபெற்ற இதன்யா செய்த முதல் காரியமே தேவசேனாவின் மரணம் குறித்த தகவல்களைச் சேகரித்தது தான். மிகவும் நேர்மையான தடவியல் நிபுணராகப் பணியாற்றியிருக்கிறாள் தேவசேனா. சில முக்கிய வழக்குகளில் அவளது தடவியல் அறிவு குற்றவாளிகளைக் கண்டறிய உதவியிருக்கிறது.
அவளை ஏகலைவன் காதலித்த விவரமும் கிடைத்தது. அவர்கள் மணமுடிக்கவிருந்த சமயத்தில் அமைச்சர் ஒருவரின் மகன் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் தடயவியல் ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறுப்பிலிருந்தபோது தான் தேவசேனா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.
ஆச்சரியம் என்னவென்றால் அவளது சடலத்திலிருந்தும் எந்தவிதமான கைரேகை ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை. அதனால் கொலையாளி யார் என்பது கடைசி வரை தெரியாமல் போய்விட்டது. இன்றுவரை தேவசேனாவின் மரணத்துக்குக் காரணமானவன் யாரென்ற உண்மை வெளியே வராமல் அவளோடு சேர்ந்து புதையுண்டு போய்விட்டது.
இதன்யா அதோடு நிற்கவில்லை. தனது விசாரணை குழு கூட்டாளிகளிடம் இதைப் பற்றி கலந்துரையாடினாள். அந்தக் கலந்துரையாடலின் முடிவில் ஈ.டி.எஸ் என்பவன் ஏகலைவனே தான் என்பது உறுதியானது அவளுக்கு.
சட்டப்படி அவனுக்கு விசாரணைக்கான நோட்டீஷ் அனுப்பியிருந்தது வசதியாய்ப் போய்விட சேகரித்த விவரங்களைக் கோர்வையாக்கி வழக்கின் சம்பவங்களோடு பொருத்திப் பார்க்கவும் இத்தனை நாட்கள் புதிராக இருந்த வழக்கில் ஒரு முடிவு தெரிந்தது.
அவள் ஊகித்த வரையில் தேவசேனாவின் மரணத்தால் ஏகலைவன் வாழ்வை வெறுத்து திருமணம் செய்யாமல் நாட்களைக் கழித்திருக்கிறான். கிளாராவைச் சந்தித்ததும் அவனுக்குள் மாற்றம். அவளுக்காகத் தான் கலிங்கராஜனின் தொழிலில் கூட முதலீடு செய்யும் முடிவை எடுத்திருக்க வேண்டும். கிளாராவுக்கும் அவனுக்குமான உறவை வலுப்படுத்தியபோதே இனியாவிடம் ஈ.டி.எஸ் என்ற பெயரில் பேசியிருக்கிறான். அவளுக்குத் தேவசேனாவைப் போல தடயவியல் துறை பற்றிய ஆர்வம் இருந்ததால் அவன் அவளிடம் பேச்சை வளர்த்திருக்கலாம். இந்நிலையில் கிளாரா – ஏகலைவனின் உறவு பற்றி இனியாவுக்குத் தெரிந்ததும் அவளைக் கொலை செய்து தனக்கிருந்த தடயவியல் அறிவைப் பயன்படுத்தி ஆதாரங்களைக் கலைத்திருக்கிறான்.
சூழல் சார்ந்த ஆதாரங்களை வைத்து அவனைக் குற்றவாளி கூண்டில் ஏற்றிவிடும் முடிவோடு தான் ஏகலைவனை அவனது வீட்டில் சந்தித்து விசாரித்தாள் இதன்யா. விசாரணையின் முடிவு எச்சரிக்கையாகவும் சவாலாகவும் முடிந்த அதே நேரத்தில் மார்த்தண்டன் நிஷாந்தை அவனது இல்லத்தில் கைது செய்திருந்தார்.
பதபதைத்த மனதோடு இதன்யாவைக் காண காவல்நிலையம் ஓடிய சாவித்திரி அவளே எதிர்படவும் மனவேதனையைக் கூறியது, அதற்கு இதன்யாவின் எதிர்வினை எல்லாம் நமக்குத் தெரிந்ததுதான்.
இதோ கூடிய விரைவில் கைது செய்வதற்கான வாரண்டுடன் ஏகலைவனின் வீட்டுக்குள் மீண்டும் நுழையப்போகிறாள் இதன்யா. கொலையாளி ஏகலைவனே தான் என நூறு சதவிகித உறுதியுடன் அடுத்தடுத்த வேலைகளில் ஆழ்ந்த இதன்யா இனியாவுக்கு நியாயம் வாங்கி தருவாளா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

