மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் சைக்கோபாத்களில் ஆண்கள் பெண்களை விட அதிகம் இருக்கின்றனர். காரணம் பெண் சைக்கோபாத்கள் உடல்ரீதியான கொடூரங்களில் ஈடுபடுவதை விட வார்த்தைகளால் வதைப்பதில் கைதேர்ந்திருப்பதே. அதனால் வன்முறையான குற்றங்களில் அவர்கள் ஈடுபடுவது குறைவு. பெண் சைக்கோபாத்களில் ஒட்டுண்ணித்தனமும் பொறாமையும் அதிகம். அடுத்தவர்களின் சந்தோசத்தைக் கண்டு அவர்களால் பொறுக்கவே முடியாது. அடுத்தவர்களுக்குச் சொந்தமானதை தனது உடைமையாக்கிக்கொள்ள பயமுறுத்துதல், மிரட்டல் போன்ற காரியங்களில் இறங்குவார்கள் சைக்கோபாத்கள். பெண் சைக்கோபாத்கள் அனைவரும் ஃபேட்டல் அட்ராக்சன் திரைப்படத்தில் வரும் நடிகை க்ளென் குளோசின் கதாபாத்திரம் போல இருப்பார்கள் என்று சொல்லிவிடமுடியாது. ஏனெனில் அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடுவதில் வல்லவர்கள்.
– An article from Psychology today
தனது பைக்கிலிருந்து இறங்கிய இதன்யா ஏகலைவனின் பங்களாவுக்குள் எவ்வித தயக்கமுமின்றி நுழைந்தாள். அவளுக்கு அதிகச் சிரமம் வைக்காமல் முகப்பிலிருந்த தூணில் படர்ந்திருந்த ராமபாணக்கொடியைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் அவன்.
இதன்யாவைக் கண்டதும் ஒரு நொடி அவனது அவனது விழிகள் யோசனையில் இடுங்கி பின்னர் இயல்புக்குத் திரும்பின. அதை கவனித்தபடி அவனருகே வந்து நின்றவள் போலியான புன்னகையோடு “உங்க கிட்ட விசாரணைய ஆரம்பிக்கலாம்னு வந்திருக்கேன்” என்றாள்.
இரண்டு நாட்களுக்கு முன்னரே காவல்துறை விசாரணைக்கு அவன் ஒத்துழைப்பு நல்கவேண்டுமென நோட்டீஷ் அனுப்பியாயிற்று. ஏகலைவனும் அதற்கு சம்மதித்திருந்தான்.
ஞாயிறன்று வேறெந்த வேலையும் இல்லாமல் பார்த்துக்கொண்டவன் இதன்யாவிடம் விசாரணையை ஆரம்பிக்கும் முன்னர் தனது வழக்கறிஞர் வரட்டுமென கூற அவளுக்கோ உள்ளே இருக்கும் புகைச்சல் வெளிப்பட்டுவிடுமோ என்ற தவிப்பு.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதை மறைத்தபடியே “உங்களுக்குக்காக உங்க லாயருக்காக வெயிட் பண்ண தானே என்னை ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்ல ஆபிசரா அப்பாயிண்ட் பண்ணிருக்காங்க” என சிரித்தபடியே குத்தலாகச் சொல்லவும் ஏகலைவனின் முகத்தில் ஏகத்திற்கும் ஏமாற்றம்.
அதைப் பரிபூரண திருப்தியோடு பார்த்துவிட்டு “என்கொயரிய இங்க வச்சுக்கலாமா? இல்ல..” என கண்களால் தோட்டத்தை ஆராய்ந்தாள்.
“இங்கயே வச்சுக்கலாம்… என் அனுமதியில்லாம இந்த தோட்டத்துக்கு மேல ஒரு காக்கா குருவி கூட பறக்க முடியாது” என்றான் அவன் கர்வத்துடன்.
இதன்யா கண்களில் சுவாரசியம் ஏற “ஓஹ்! பட்சி பாஷை கூட உங்களுக்குத் தெரியுமா? நான் கூட ஓநாய் மாதிரி ப்ரிடேட்டர்சை கண்ட்ரோல் பண்ண மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன்” என்று கிண்டலாய்க் கேட்டுவிட்டு நக்கல் சிரிப்போடு நிறுத்தவும் அவனது புருவங்கள் கேள்வியாய் உயர்ந்தன.
“நீங்க புதிர் போட்டுப் பேசுற மாதிரி தோணுது மேடம்” என்றபடி பெரிய தூங்குமூஞ்சி மரத்தினடியில் கிடந்த மர பெஞ்சில் அமர்ந்தவன் இதன்யாவையும் அமரும்படி அடுத்த பெஞ்சைக் கண்ணால் காட்டினான்.
“உங்களோட நடவடிக்கைய விட என் பேச்சு புதிரா இருக்க வாய்ப்பில்ல மிஸ்டர் ஏகலைவன்” என்று மீண்டும் ஒரு குத்தலுடன் முடித்தபடியே அமர்ந்தாள்.
தன்னை அவளது எந்தக் குத்தல்களும் பாதிக்கவில்லை என்பது போல காட்டிக்கொண்ட ஏகலைவன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு விசாரணைக்குத் தயார் என சொல்லாமல் சொன்னான்.
இதன்யாவும் காலதாமதம் செய்யாமல் வந்த வேலையை ஆரம்பித்தாள்.
“முருகையா கொலை கேஸ்ல கலிங்கராஜனோட டிரைவர் ஜானையும் அவரோட ஃப்ரெண்ட் முத்துவையும் ப்ரைமரி அக்யூஸ்டா அரெஸ்ட் பண்ணிருக்கோம்… இனியா கொலை செய்யப்பட்ட விதமும் முருகையா கொலை செய்யப்பட்ட விதமும் ஒன்னு போல இருக்குறதால இந்த ரெண்டு பேருக்கும் இனியா மர்டர்லயும் சம்பந்தம் இருக்குமோனு நாங்க சந்தேகப்படுறோம்… அதோட ப்ரைமரி அக்யூஸ்ட்ல ஒருத்தனான முத்துவ விசாரிச்சப்ப அவன் சில உண்மைகளைச் சொன்னான்… அவன் வீட்டுல எங்களுக்குக் கிடைச்ச லேப்டாப்பும் மொபைலும் இனியா மர்டரோட சம்பந்தப்பட்ட ஒரு மர்ம நபரோட அடையாளத்தை எங்களுக்குக் காட்டிருச்சு.. அந்த மர்ம நபர் நீங்க தான்ங்கிறது என்னோட அனுமானம்… எதுக்காக உங்க லேப்டாப்பும், நிஷாந்தோட மொபைலும் முத்து கிட்ட போச்சு?”
தனது கேள்வியால் ஏகலைவன் அதிர்வான் என்றெல்லாம் இதன்யா யோசிக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் இருக்கிறான். கட்டாயம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் வித்தை அவனுக்குத் தெரிந்திருக்கும் என்பதால் மற்ற கைதிகளைப் போல முகம் பார்த்து உணர்வறிவதெல்லாம் ஏகலைவனின் விவகாரத்தில் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்தே அவனது பதிலுக்காக காத்திருந்தவள் தூரத்தில் தெரிந்த ராமபாணக்கொடியை மட்டும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“நான் முத்து கிட்ட மொபைலையும் லேப்டாப்பையும் குடுத்ததுக்கு என்ன ஆதாரம் வச்சிருக்கிங்க?” நிமிர்வாகக் கேட்டபடி கால் மேல் கால் போட்டுக்கொண்டான் ஏகலைவன்.
அவன் கேட்டதும் உண்மையைக் கூறுவான் என இதன்யாவும் எதிர்பார்க்கவில்லை. சி.சி.டி.வி வீடியோ ஆதாரத்தைக் கலைத்த விவகாரத்திலேயே எந்தப் பிரச்சனை வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற அவனது அலட்சியம் வெளிப்படையாகத் தெரிந்ததே!
“இங்க விசாரணை யார் கிட்ட நடக்குது மிஸ்டர் ஏகலைவன்? கேள்விக்குப் பதில் சொல்லாம எதிர்கேள்வி கேக்குறவங்க உண்மைய மறைக்குறதுல ஜெகஜால கில்லாடியா இருப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்.. யூ காண்ட் மேனிபுலேட் மீ… என் கேள்விக்குப் பதில் வரணும்”
ஏகலைவனிடமிருந்து குறுஞ்சிரிப்பு பதிலாகக் கிடைத்தது.
“யாஹ்! நான் தான் அதை முத்து கிட்ட குடுத்தேன்… நிஷாந்தை காப்பாத்த எனக்கு இருந்த எல்லா வழியையும் நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்… அது எனக்குத் தப்பா தோணல” என்றான் அவன் அசராமல்.
“உங்களுக்கு அது தப்பா தோணாம போயிருக்கலாம்.. பட் சட்டப்படி நீங்க வழக்கைத் திசை திருப்ப முயற்சி பண்ணுனது, ஆதாரங்களை அழிச்சு மறைச்சதுல்லாம் பெரிய குத்தம்… அப்பிடி என்ன நிஷாந்த் மேல உங்களுக்குப் பாசம்?”
“எனக்குனு ரத்த உறவுகள் யாருமில்ல, சாவித்ரி அக்காவ தவிர.. அவங்க மகன் தான் எனக்கு அப்புறம் என் தொழில் சாம்ராஜ்ஜியத்தைப் பாத்துக்கணும்னு எப்பவோ நான் முடிவு பண்ணிட்டேன்.. சக்கரவர்த்தி குடும்பத்தோட வாரிசு மேல எந்தக் களங்கமும் இருக்கக்கூடாதுனு தான் சி.சி.டி.வி ஃபூட்டேஜசை நான் டெலீட் பண்ணுனேன்.. போனையும் லேப்டாப்பையும் முத்து கிட்ட ஒப்படைச்சதும் அதுக்காக தான்”
“இதுக்காக நான் உங்களை அரெஸ்ட் பண்ணலாம் மிஸ்டர் ஏகலைவன்”
“என் தரப்பு நியாயத்தைக் கோர்ட்ல சொல்லி என்னால இந்தக் கேசை உடைச்சு வெளிய வந்துட முடியும் மேடம்”
பணிவு போல தெரிந்தாலும் உண்மையில் இது ஆணவம்! அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் செல்வந்தன் ஒருவனின் திமிர்த்தனமான எதிர்வினை! இதன்யாவை அது சீண்டிவிட எரிச்சலோடு ராமபாணக்கொடியிலிருந்து பார்வையை அவன் பக்கம் திருப்பினாள்.
“நிஷாந்தோட மொபைல்ல உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் ஐடி ஈ.டி.எஸ்… அது உங்க லேப்டாப்ல டார்க்வெப் ப்ரவுசர் மூலமா லாகின் ஆகிருக்கு… உங்களோட பெர்சனல் யூஸேஜ்காக வச்சிருந்த லேப்டாப்ல அந்த ஐ.டி எப்பிடி வந்துச்சு? இதுக்கு என்ன சமாளிப்பு வச்சிருக்கிங்க?”
இவ்வளவு நேரம் இருந்த அமர்த்தல் தொனி விடைபெற்றது ஏகலைவனிடம். சில நொடிகள் அமைதியில் கழிய இதன்யாவின் பொறுமையோ கற்பூரத்தை விட வேகமாகக் கரைந்து கொண்டிருந்தது.
அவள் குத்தலாக ஏதோ ஆரம்பிக்கும் முன்னர் “என் லாயர் வந்ததுக்கு அப்புறமா எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்றபடி எழுந்தான் ஏகலைவன்.
இதன்யாவின் முகத்தில் அலட்சியச்சிரிப்பு முகிழ்த்தது.
“பொய் சொல்லுறதுக்கு லாயர் துணை வேணுமா என்ன? இந்த கேசோட ஆரம்பத்துல இருந்து நீங்க பொய் மட்டும் தானே சொல்லிட்டிருக்கிங்க மிஸ்டர் ஏகலைவன்… கொஞ்சம் உண்மைய பேசலாமா?”
சீண்டலாக அவள் குரல் ஒலித்ததும் ஏகலைவன் பொறுமையை இழந்த தொனியில் “என்ன பேசணும்?” என்றான்.
அவனது குரலில் இருந்த சீற்றத்தைத் தனது வெற்றியாக எடுத்துக்கொண்டாள் இதன்யா.
ஒரு வழக்கில் குற்றம் செய்திருக்கலாமென ஊகிக்கப்படும் சந்தேகத்துக்குரிய நபர் தெளிவாகப் பொய் சொல்லும்போது அவரிடமிருந்து உண்மையை வாங்குவது என்பது கல்லிலிருந்து நார் உறிப்பது போல கடினமான காரியம். அவரது நிதானமும் தெளிவும் உடைய வேண்டும். ‘ப்ரோக்கன் பாய்ண்ட்’ என்பார்களே அந்தப் புள்ளியில் அவரைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். அதீத அழுத்தத்தால் அவரது தெளிவும் நிதானமும் சுக்குநூறாக உடையும்போது உண்மை உடைப்பெடுத்து வெளியே வந்துவிடும். அதையே ஏகலைவனிடம் எதிர்நோக்கினாள் இதன்யா.
எனவே அவனது நிதானத்தைத் தனது சொற்களில் பூசிக்கொண்டு கண்கள் பளபளக்க “உங்களுக்கும் கிளாராக்கும் இருந்த அஃபயர் பத்தி பேசலாமா?” என்றாள்.
“என்ன சொல்லுறிங்க நீங்க?” ஏகலைவனின் குரலில் எரிமலைக்கு நிகரான வெம்மை.
“ஓஹ்! வெறுமெனே அஃபயர்னு சொன்னதும் புரியலையா சார்? எக்ஸ்ட்ரா மேரீட்டல் அஃபயர் அலையஸ் ஈ.எம்.ஏ இப்ப புரியுதா? இதைப் பகிரங்கமா சொல்லணும்னா கள்ளத்தொடர்பு, கொஞ்சம் நாகரிகமா சொல்லணும்னா திருமணம் தாண்டிய உறவு”
அவள் நிறுத்தி நிதானமாக வார்த்தைகளை உதிர்த்து அவனது நிதானத்தின் கடைசி செங்கல்லை உடைத்தெறிய ஏகலைவனின் கண்கள் அக்னிப்பழங்களைப் போல சிவந்து ஜொலித்தன.
“வார்த்தைல கவனம் மேடம்” ஆட்காட்டி விரலை நீட்டி அவளை வெளிப்படையாக மிரட்டினான் அவன்.
“எனக்குக் கிளாஸ் எடுக்குறதை விட்டுட்டு ஏன் இனியா கிட்ட ஈ.டி.எஸ்ங்கிற பேர்ல சாட் பண்ணுனிங்கனு சொல்லுங்க மிஸ்டர் ஏகலைவன்… நீங்களும் இனியாவும் பேசுன சாட் லிஸ்ட்டை எப்பவோ சைபர் போலீஸ் எங்க டீம் கிட்ட ஒப்படைச்சிட்டாங்க… டைம் வேஸ்ட் பண்ணாம உண்மைய ஒத்துக்கிட்டிங்கனா வசதியா இருக்கும்”
“எனக்கு யார் கூடவும் எந்தத் தவறான உறவும் கிடையாது… கேஸை ஸ்பீடா முடிக்கணும்னு நீங்க என் நடத்தைய கேள்விக்குறி ஆக்கப்பாக்குறிங்க… இதுக்காக நான் உங்க மேல டிஃபமேசன் சூட் போடலாம்… எந்த ஆதாரத்தை வச்சு மிசஸ் கலிங்கராஜனுக்கும் எனக்கும் அஃபயர் இருந்துச்சுனு நீங்க தீர்மானிச்சிங்க? ஆதாரமில்லாம நீங்க உதிர்க்குற ஒவ்வொரு வார்த்தைக்கும் எனக்குப் பதில் சொல்லியே ஆகணும்… நீங்க என்னை மட்டும் இல்ல, மூனு குழந்தைங்களுக்கு அம்மாவான ஒரு பெரிய குடும்பத்து லேடியோட கேரக்டரையும் சேர்த்து அசிங்கப்படுத்துறிங்க… மறந்துடாதிங்க”
இதன்யா அவனது கோபமும் ஆவேசமான பேச்சும், மிரட்டலும் தன்னை இம்மியளவுக்குக்கூட பாதிக்கவில்லை என்பது போல சுண்டுவிரலால் காதைக் குடைந்தாள்.
“ஷப்பா! ஆதாரம் இல்லாம உங்களை மாதிரி அதிகாரவர்க்கத்து ஆள் முன்னாடி வந்து நிக்க நான் என்ன முட்டாளா ஏகலைவன்? கிளாரா உங்களோட ப்ளேசரைக் கட்டிப்பிடிச்சு கண் சொருக நின்னதை நானே என் கண்ணால பாத்திருக்கேன்… அது மட்டுமில்ல, உங்களை அடையணும்னு கிளாரா சாத்தான் வழிபாட்டு குரூப்ல கொடூரமான சடங்கு ஒன்னை செஞ்சிருக்காங்க… அதுக்கு முத்துவோட வாக்குமூலம் ஆதாரம்”
ஏகலைவன் எரிச்சலோடு நெற்றியில் கை வைத்துக்கொண்டான்.
“இதுல்லாம் அந்தம்மா செஞ்ச கேவலமான காரியத்துக்கான ஆதாரம்… இதுல நான் எங்க கனெக்ட் ஆகுறேன்?”
“உங்க லேப்டாப்ல இருந்து ஈ.டி.எஸ்ங்கிற பேர்ல நீங்க இனியா கிட்ட சாட் பண்ணுனப்பலாம் அதை டெலீட் பண்ணிருக்கிங்க.. அவளையும் டெலீட் பண்ணச் சொல்லிருக்கிங்க… உங்க பெர்சனல் லேப்டாப்பை, உங்களுக்கு மட்டுமே பாஸ்வேர்ட் தெரிஞ்ச லேப்டாப்பை வேற யார் யூஸ் பண்ணிருக்க முடியும்? நீங்க இனியாவ தனியா வரச் சொல்ல காரணம், அவளை கொலை பண்ணுறதுக்காக”
“முதல்ல ஈ.எம்.ஏ… இப்ப மர்டர்… என்னைப் பாத்தா லோ க்ளாஸ் லோஃபர் மாதிரி தெரியுதா உங்களுக்கு?”
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர்… ஹை க்ளாஸ்ல இருக்குறவங்கலாம் ஒழுங்கா? அதுலயும் ஆதாரத்தைக் கலைக்குறது, ஒளிச்சு வைக்குறதுமா இருக்குற நீங்க க்ளாஸ் பத்திலாம் பேசலாமா? நீங்க இனியாவை தனியா வரச் சொல்லி கொலை பண்ண நினைச்சிருக்கிங்க… அந்தப் பொண்ணுக்கு உங்களுக்கும் கிளாராவுக்கும் இடையில இருந்த கேவலமான உறவு பத்தி சந்தேகம் வந்திருக்கு… படிப்படியா காய் நகர்த்தி நிஷாந்தை வச்சு அவளைக் காட்டுக்குள்ள வர வச்சு கொன்னுருக்கிங்க”
“எதை வச்சு இப்பிடி தான் நடந்திருக்கும்னு உறுதியா சொல்லுறிங்க?”
“உங்களுக்கும் இனியாக்கும் இடைல நடந்த சாட்ஸ் அடிப்படைல சொல்லுறேன்” என நிறுத்தியவள் “நீங்க அவ கிட்ட ஈ.டி.எஸ்சா பேசுன விசயங்கள் எல்லாமே ஃபாரன்சிக் டிப்பார்ட்மெண்ட், க்ரைம்ஸ் பத்தி மட்டும் தான்… உங்களுக்கு ஃபாரன்சிக் ஃபீல்ட்ல அடிப்படை நாலெட்ஜ் இருக்கு… அதை அவ கிட்ட ஷேர் பண்ணிருக்கிங்க… இனியாக்கும் அதுல ஆர்வம் இருந்ததால உங்க கூட ஃபேஸ்புக்ல ஃப்ரெண்டா இருந்திருக்கா… எங்க விசாரணைல கிடைச்ச சில டேட்டா அடிப்படைல இனியாவ கொலை பண்ணுன கில்லருக்கு ஃபாரன்சிக் ஃபீல்ட் பத்தி நாலெட்ஜ் இருந்திருக்கு… இப்ப என்ன சொல்லப் போறிங்க? வார்த்தையே வரல?”
நக்கலாக இதன்யா கேட்டதும் ஏகலைவனின் முகத்தில் கோபமும் ஆத்திரமும் கலந்த சிரிப்பு.
“ஐ அம் அ பிசினஸ்மேன்.. எனக்கும் ஃபாரன்சிக் ஃபீல்டுக்கும் சம்பந்தமே கிடையாது… என்னைக் கட்டம் கட்டி இந்தக் கேஸ்ல உள்ள தள்ள என் தொழில் எதிரிங்க உங்களுக்குக் காசு குடுத்திருப்பாங்களோனு சந்தேகமா இருக்கு” என்றான் அவன் கண்கள் வெறியில் மின்ன.
இதன்யா பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்த சிரமப்படுவதைப் போல நடித்தாள். பின்னர் நிதானமாக ராமபாணக்கொடியைக் காட்டினாள்.
“உங்களுக்கு ரொம்ப பிடிச்சதுல்ல அந்தப் பூ? இனியாக்கும் பிடிக்கும்னு கேஸ் ஃபைல்ஸ் பாத்தப்ப தெரிஞ்சுக்கிட்டேன்” என நிறுத்தியவள் அவனை கூர்மையாகப் பார்த்தபடியே “இது தேவசேனாக்கும் பிடிச்ச பூ” என்றாள்.
ஏகலைவனின் முகம் தேவசேனா என்ற பெயரைக் கேட்டதும் கொந்தளிப்புக்கு இடமானது.
“ஏய்… என் தேவா பத்தி உனக்கு எப்பிடி தெரியும்?” என்று பரபரத்தபடி அவளை நெருங்கினான் அவன்.
இதன்யா சீருடையில் வரவில்லை என்றாலும் துப்பாக்கியைக் கொண்டு வந்திருந்தாள். அதை எடுத்தவள் தன்னை நெருங்கியவனின் நெஞ்சில் துப்பாக்கி முனையை வைத்து அழுத்தினாள்.
“ஒரு இன்ச் முன்ன வந்தாலும் இதுல இருக்குற புல்லட் எல்லாம் உன் இதயத்துக்குள்ள போய் ரத்தம் குடிக்க ஆரம்பிச்சிடும்” என எச்சரித்தாள் அவனை.
ஏகலைவன் கடித்த பற்களும், சிவந்த கண்களுமாக ஆளே மாறிப்போய் நின்றான். அவனை உணர்ச்சிக்கொந்தளிப்பு ஆளாக்கியதில் வெற்றி கண்டவள் வெகு நிதானமாக
“ஈ.டி.எஸ்சோட விரிவாக்கம் என்னனு கூட எனக்குத் தெரியும்… ஈ ஃபார் ஏகலைவன், டி அண்ட் எஸ் ஃபார் தேவசேனா… தொண்ணூறுகள்ல தமிழ்நாட்டுல இருந்த திறமையான ஃபாரன்சிக் ஆபிசர்ல ஒருத்தவங்க, குமுதம் ரிப்போர்ட்டர்ஸ்ல ஃபாரன்சிக் சம்பந்தமா இருபது வாரம் அவங்க எழுதுன ஆர்ட்டிக்கிள்ஸ் பின்னாட்கள்ல புக்கா வெளிவந்து சக்கை போடு போட்டதும் எனக்குத் தெரியும்… அந்த தேவசேனா உங்களோட காதலினும் தெரியும் மிஸ்டர் ஏகலைவன்… இப்ப எல்லா புள்ளியும் இணையுதா?” என்று கேட்க அவனோ சிலையாய் நின்றான்.
துப்பாக்கியை அவன் மார்பிலிருந்து எடுத்தவள் “ஆதாரமில்லாம உங்களை மாதிரி ஆளுங்களை நெருங்குறது பாசிபிள் இல்லனு எனக்குத் தெரியாதா? வெய்ட் பண்ணுங்க, அரெஸ்ட் வாரண்டோட வந்து நானே விலங்கு மாட்டி இழுத்துட்டுப் போய் என்ன ஆதாரம்னு விளக்கம் சொல்லுறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கம்பீரமாக கிளம்பிச் சென்றாள்.
ஏகலைவனோ செல்பவளைப் பார்த்தபடியே சிலையாய் நின்றான். ராமபாணக்கொடியை அவள் கடக்கும்போது அவனது இதழில் எக்காளமான சிரிப்பொன்று ஏறியமர்ந்தது. கண்களை மூடிக்கொண்டவன் “தேவா” என்றான் ஆழ்ந்த காதலுடன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

