“பெண் சைக்கோபாத்கள் கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்கள். தந்திரமும், வஞ்சகமும் அவர்களின் இயல்பு. அவர்கள் தங்களது செயல்கள் உண்டாக்கும் விளைவுக்கான பொறுப்பை ஏற்கவே மாட்டார்கள். சுரண்டல் மனப்பான்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் இளம் வயதிலேயே உணர்வுரீதியாகச் சுரண்டப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வழிப்பறி, போதைப்பொருட்கள் சார்ந்த குற்றங்களிலும் ஈடுபட வாய்ப்புண்டு. சைக்கோபாத் தன்மை இல்லாத ஒரு குற்றவாளியிடம் இதில் ஏதோ ஒரு குற்றம் மட்டுமே இருக்கும். அதோடு பெண் சைக்கோபாத்களாலும் ஒரு தடவை ஒரு தவறு செய்து அதில் ருசி கண்டுவிட்டால் மீண்டும் அத்தவறைச் செய்யாமல் இருக்க முடியாது. மீண்டும் மீண்டும் செய்யும் தூண்டுதல் அவர்களுக்குள் அடங்காமல் இருக்கும். ஒருமுறை தண்டனை அனுபவித்த மற்ற குற்றவாளிகள் மனம் திருந்துவது போல சைக்கோபாத்கள் மனம் திருந்துவதில்லை. மாறுவதுமில்லை.
– An article from Psychology today
இதன்யாவும் முரளிதரனும் சைபர் காவல்நிலையத்திலிருந்து அடுத்து வந்த ஃபேக்ஸ் தகவலைப் படித்துவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்தனர். மடிக்கணினியின் சீரியல் எண்ணை வைத்து அது எந்த முகவரிடம் வாங்கப்பட்டது, அது எந்த மின்னஞ்சலில் பதிவு செய்யப்பட்டது போன்ற விவரம் அச்செய்தியில் இருந்தது.
திருநெல்வேலியில் இருக்கும் பிரபலமான கணினி ப்ராண்டின் எலக்ட்ரானிக் உபகரணங்கள் விற்கும் முகமை நிறுவனத்தில் தான் அந்த மடிக்கணினி விற்கப்பட்டிருக்கிறது. மின்னஞ்சலைப் பார்த்ததும் நால்வருக்கும் பெரிய ஆதாரமொன்றை கண்டுபிடித்துவிட்ட திருப்தி.
ஏனெனில் அது சக்கரவர்த்தி குழுமத்தின் அலுவலக பயன்பாட்டுக்கான மின்னஞ்சல்.
“இனியும் ஏகலைவனை விசாரிக்கத் தயங்குனோம்னா அந்தாளு இந்தக் கேஸை குழப்பி ஆதாரத்தைக் கலைச்சிடுவார்” என்றபடி எழுந்த இதன்யா
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நான் திருநெல்வெலிக்குப் போய் இந்தச் சீரியல் நம்பர்ல லேப்டாப் வித்த டேட், பையர் டீட்டெய்ஸ், வவுச்சர் காப்பி எல்லாம் வாங்கிட்டு வர்றேன்… இனிமே அந்தாளை நான் கவனிச்சிக்கிறேன்” என்றாள்.
“அவசரப்படாதிங்க மேடம்… இது மட்டும் வச்சு அவரை அரெஸ்ட் பண்ணணுறது ரிஸ்க்” என முரளிதரன் தடுக்க
“அவர் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் ஐ டோண்ட் கேர் முரளி சார்… கோர்ட் ஆர்டர்படி நம்ம விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கலனா அரெஸ்ட் பண்ணி ஸ்டேசன்ல வச்சு விசாரிக்கப்போறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் இதன்யா.
ஏனோ முரளிதரனுக்கு இதன்யா அவசரப்படுவதாகத் தோன்றியது. ஏகலைவன் போன்ற பண முதலைகளை அவ்வளவு எளிதில் நெருங்கிவிடமுடியாது. நீதித்துறை வேண்டுமானால் அவனது செல்வாக்குக்குத் தலைவணங்காமல் இருக்கலாம். ஆனால் அரசியல்வாதிகளும், அரசாங்கங்களும் இம்மாதிரி தொழிலதிபர்களின் செல்வாக்குக்குப் பணிந்தேயாக வேண்டும்.
கட்சிக்குத் தேர்தல் நிதியாக மட்டும் எவ்வளவு வாங்குறார்கள்? பின்னர் தொழிலதிபர்கள் நடத்துவது தானே இங்கே ராஜ்ஜியம். முரளிதரனுக்கு ஏகலைவனை நெருங்குவது அவ்வளவு சுலபமென தோன்றவில்லை.
இந்தக் கொலையை ஏகலைவன் செய்திருந்தாலுமே அவனை அவ்வளவு எளிதில் சட்டத்தின் முன்னே நிறுத்த முடியாது. இந்தியச் சட்டங்களை எப்படி வளைப்பதென அறிந்தவர்கள் தொழிலதிபர்கள்.
இதன்யா கொஞ்சம் நிதானிப்பது நல்லதென முரளிதரன் யோசிக்க மார்த்தாண்டனும் மகேந்திரனும் இதன்யா சொல்வதே சரியென்றனர்.
“நிஷாந்துக்கு எதிரா ஆதாரம் இருக்கக்கூடாதுனு அந்தாளு இப்பிடி பண்ணுனாரா இல்ல அவருக்கு எதிரா ஆதாரம் இருக்கக்கூடாதானு பண்ணுனாரானு யாருக்குத் தெரியும் சார்? அவரை இத்தனை நாள் விசாரணைக்குக் கூப்பிடாம விட்டதே தப்புனு தோணுது… அவரோட அபிஷியல் மெயில் ஐடில ரிஜிஸ்டர் பண்ணுன லேப்டாப், அவரோட மருமகன் யூஸ் பண்ணுன மொபைல் ரெண்டுமே ஒரு கொலைகாரன் கிட்ட இருந்திருக்கு… அந்தக் கொலைகாரனுக்கு வேலை வாங்கித் தர்றதா இவர் சொல்லிருக்கார்… அதுக்கு நன்றிக்கடனா முத்து இந்த மொபைலையும் லேப்டாப்பையும் ஒளிச்சு வச்சிருந்திருக்கலாமே? இதை அவர் எப்பிடி மறுப்பார்? கட்டாயம் அவரை நம்ம கஸ்டடிக்கு எடுக்கணும்… இல்லனா கஷ்டம்”
மார்த்தாண்டன் உச்சஸ்தாயியில் பேசியது விசாரணை அறையையும் தாண்டி வெளியே கேட்டுவிட்டது. இதன்யா போகிற அவசரத்தில் கதவைச் சரியாக மூடாமல் போனதை வெகு தாமதமாகக் கவனித்தார் முரளிதரன்.
மார்த்தாண்டனிடம் அமைதியென சைகை காட்டிவிட்டுக் கதவை அடைத்துவிட்டு வந்தார்.
“இந்த ஸ்டேசன்ல ஃபாதர் பவுலுக்கும், ஏகலைவனுக்கும் யாரோ இன்ஃபார்மர் இருக்காங்க… நீங்க சத்தமா பேசுனதை அவங்க கேட்டிருந்தாங்கனா உண்மையாவே ஏகலைவன் குற்றவாளியா இருந்தா அந்தாளுக்குத் தப்பிக்குறதுக்கான வழிய நீங்க காட்டிட்டிங்கனு அர்த்தம்”
கடினமானக் குரலில் அவர் சொல்லவும் தான் மார்த்தாண்டனுக்குச் சூழல் புரிந்தது. உடனே அமைதியானவர் “சாரி சார்” என்றார் பணிவாக.
“இட்ஸ் ஓ.கே சார்… ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க, பணக்காரங்க கிட்ட மோதணும்னா முழு ஆதாரமும் நம்ம கைக்கு வந்த அப்புறம் தான் மோதணும்… இல்லனா நம்ம நிலமை கவலைக்கிடமா ஆகிடும்… இதன்யா மேடம் ஆழம் தெரியாம காலை விடுறாங்க”
முரளிதரன் இவ்வளவு தூரம் ஏன் தயங்குகிறார் என்ற எண்ணம் தான் அப்போதும்.
அதே நேரம் இதன்யாவோ திருநெல்வேலிக்குத் தனது பைக்கிலேயே கிளம்பிவிட்டாள்.
ஏகலைவன் மீது அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே சந்தேகம். சாட்சியைக் கலைத்தவன் மீது சந்தேகம் வராமல் இருந்தால் தான் தவறு. ஆனால் அவர்களின் அதிகாரம் பாயும் தூரத்தைத் தாண்டிய உயரம் அவனுடையது. சரியான ஆதாரமில்லாமல் சந்தேகப்பட்டியலில் கூட அவனுடைய பெயரை முன்னிறுத்த முடியாத நிலை.
இதை விட அவனை விசாரிக்கத் தகுந்த சூழல் இனி உருவாகாது. இப்போது அவனுக்குத் தகவல் கசிந்தால் இதிலிருந்து கூட தப்பிவிடும் அபாயம் உள்ளது.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள இதன்யாவின் மனம் பரபரத்தது. மலையை விட்டு இறங்கியதும் வெயில் வாட்டியதைக்கூட பொருட்படுத்தாமல் மடிக்கணினியை விற்பனை செய்த ‘வெல் கம்ப்யூட்டர்ஸ்’ என பெயர்ப்பலகையோடு வரவேற்ற முகமை நிறுவனத்தின் கிளை முன்னே பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினாள்.
அவளது சீருடையைப் பார்த்ததும் உள்ளே நல்ல மரியாதை தான். அங்கே. வந்த விவரத்தை அனைவரிடமும் சொல்லமுடியாதே!
“ஐ அம் இதன்யா வாசுதேவன்… ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம், க்ரைம் ப்ராஞ்ச்” என அறிமுகப்ப்டுத்திக்கொண்டவள் “ஐ வாண்ட் டூ மீட் மேனேஜர்… ஒரு கேஸ் விசயமா பேசணும்” என்றாள் ஊழியர் ஒருவரிடம்.
அவர் கிளைமேலாளர் அறைக்கு அழைத்துச் சென்றார். இதன்யாவைக் கண்டதும் மேலாளரிடம் சின்ன பதற்றம்.
“எதுவும் பிரச்சனையா மேடம்?”
காவல்துறை சீருடையைக் கண்டால் அனிச்சை செயலாக அனைவருக்கும் வரக்கூடிய பதற்றம் தான் அது. இதன்யா அதைப் புரிந்துகொண்டவளாக “டென்சன் ஆகாதிங்க சார்… இந்த சீரியல் நம்பர் உள்ள லேப்டாப் இங்க தான் சேல் ஆகிருக்கு.. அதை ரிஜிஸ்டர் பண்ணுன மெயில் ஐ.டி டீடெயில் இது… யாருக்குச் சேல் பண்ணுனிங்கங்கிற விவரம் வேணும்… இது ரொம்ப சீரியசான விவகாரம்… கான்ஃபிடன்சியலானதும் கூட… ஐ ஹோப், இந்த விசயம் வெளிய கசியாது”
மேலாளர் இன்னும் பதற்றம் அடங்காதவராக “கண்டிப்பா மேடம்” என்றவர் விற்பனையான பொருட்கள் குறித்த விவரங்கள் அடங்கிய தரவுகளைப் பராமரிக்கும் ஊழியரை அழைத்து சீரியல் எண்ணையும், மின்னஞ்சலையும் கொடுத்தார்.
“இந்தச் சீரியல் நம்பர் உள்ள லேப்டாப் இந்த தேதில சேல் ஆகிருக்கு… மெயில் ஐடி இருக்கு…. வவுச்சர் டீடெய்ல் மட்டும் கொண்டு வாங்க”
கட்டளையிட்டவர் “என்ன சாப்பிடுறிங்க மேடம்?” என்று விருந்துபச்சாரத்தில் இறங்கவும் இதன்யா பணிவாக மறுத்தாள்.
அவரிடம் நிறுவனம் குறித்துப் பொதுவான தகவல்களைக் கேட்க ஆரம்பித்தாள். சாதாரண பேச்சுவார்த்தையாகவே அது ஒலிக்கவும் மேலாளரும் பதற்றம் அடங்கி இயல்பாக பேச ஆரம்பித்தார்.
“கிட்டத்தட்ட இருபது வருசம் பாரம்பரியம் உள்ள டீலர்ஷிப் எங்களோடது… திருநெல்வேலில முதல்ல வெல் கம்ப்யூட்டர்ஸ் டீலர்ஷிப்பை ஆரம்பிச்சது எங்க கன்சர்ன் தான்”
“வாவ்! நல்ல வளர்ச்சிதான்… இங்க உங்களுக்குப் பெருசா போட்டினு யாரும் இருக்கமாட்டாங்கல்ல?”
“இப்ப நிறைய ஏஜென்சீஸ் வருது மேடம்… ஆனா எங்க கிட்ட ஒரு தடவை பொருள் வாங்குனவங்க இன்னொரு இடத்துக்குப் போகமாட்டாங்க… சில வாடிக்கை எல்லாம் தலைமுறை கடந்து கூட எங்க கிட்ட தான் வெல் கம்பெனியோட எலக்ட்ரானிக் கஜட்ஸ் வாங்குறாங்க”
இதன்யா மெதுவாக “ஓ! தட்ஸ் க்ரேட்… அப்ப சக்கரவர்த்தி டீ எஸ்டேட் ஃபேமிலியும் உங்க நிரந்தர வாடிக்கை தான் போல?” என்று கேட்க
“ஆமா மேடம்! அவங்க ஆபிசுக்கு தேவையான கம்ப்யூட்டர்ஸ், லேப்டாப் எல்லாமே எங்க கிட்ட தான் வாங்குவாங்க… அதுலயும் லாஸ்டா நிறைய பொருட்கள் வாங்குறதுக்காக ‘ரதி டீ ப்ராண்டோட’ ஓனர் இருக்கார்ல, அவரோட பி.ஏவே வந்தார்”
இதன்யாவின் சகஜமான பேச்சால் மதிமயங்கி மேலாளரும் கதை பேச ஆரம்பித்தார்.
அப்படி என்றால் அந்த முறை ஏன் ஏகலைவன் மடிக்கணினியை வாங்கியிருக்கக்கூடாது? இதன்யா யோசிக்கும்போதே பழச்சாறு வந்தது.
“இதுல்லாம் எதுக்கு சார்?”
“பரவால்ல மேடம்… எடுத்துக்கோங்க”
பணிவாகப் பதிலளித்த மேலாளரிடம் அவரது பெயர் விவரமெல்லாம் கேட்டுக்கொண்டாள் இதன்யா.
இருபது நிமிட காத்திருப்புக்குப் பிறகு மடிக்கணினியை விற்றபோது போடப்பட்ட விற்பனைச்சீட்டும், பதிவு செய்யப்பட்ட விவரமும் கைக்கு வந்து சேர்ந்தது.
கிளம்பும் முன்னர் விவரங்களை எடுத்துக்கொடுத்த ஊழியரின் பெயரையும் விசாரித்துவிட்டு நம்பிக்கையோடு கிளம்பினாள் இதன்யா.
மீண்டும் ஒருமுறை சூரியனின் சுட்டெரிக்கும் கோபக்கதிர்களில் குளித்து பொன்மலைக்கு வந்து சேர்ந்தவளுக்கு மலைவாசஸ்தலத்தின் காற்று மேனியில் பட்டதும் செண்ட்ரல் ஏ.சி அறைக்குள் நுழைந்த உணர்வு.
அங்கே விசாரணை குழுவின் அலுவலக அறைக்குள் நுழைந்ததும் ஏனைய மூவரிடமும் சேகரித்த விவரத்தைக் காட்டினாள் இதன்யா.
“இதுக்கு மேல ஏன் வெயிட் பண்ணனும்? நிஷாந்தையும் ஏகலைவனையும் அரெஸ்ட் பண்ணிடலாம்” என்றாள் இதன்யா.
“மேடம் முதல்ல விசாரிச்சுட்டு அப்புறமா..”
முரளிதரன் நிதானமாகக் கூறவும் “ஏன் சார்? நம்ம கிட்ட இருக்குற எவிடென்ஸ் வச்சு என்னால வாரண்ட் இல்லாம கூட அந்தாளை அரெஸ்ட் பண்ண முடியும்… எதுக்காக வெயிட் பண்ண சொல்லுறிங்க? நோட்டீஷ் அனுப்பி விசாரணைக்குக் கூப்பிட்டா மட்டும் அந்தாளு உண்மையவா சொல்லப்போறார்?” என்றாள் இதன்யா கோபமாக.
“அரெஸ்ட் பண்ணுனாலும் இதான் நடக்கும் மேடம்… நீங்க அரெஸ்ட் பண்ணுன கொஞ்சநேரத்துல ஹெல்த் செக்கப்ங்கிற பேருல எனக்கு உடம்பு சரியில்லனு காரணம் சொல்லி அவர் நம்ம கஷ்டடிக்கு வராம நழுவிடுவார்… மத்த சஸ்பெக்ட்ஸ் மாதிரி அவரை நம்மளால ட்ரீட் பண்ண முடியாது… ஹீ இஸ் நாட் அ டேரக்ட் அஃபெண்டர்… சர்கம்ஸ்டான்ஷியல் எவிடென்ஸ் வச்சு அவரை அரெஸ்ட் பண்ணுனா ஈசியா தப்பிச்சிடுவார் மேடம்… நம்ம அரெஸ்ட் பண்ணி வச்சிருக்குற ரெண்டு பேர்ல முத்து வாயைத் திறந்து மொபைலையும் லேப்டாப்பையும் குடுத்தவர் ஏகலவைன்னு சொன்னாதான் நம்மளால அவரை அரெஸ்ட் பண்ண முடியும்”
நிலமையின் தீவிரத்தைப் புரியவைத்தார் முரளிதரன்.
இதன்யாவும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தாள்.
“யூ ஆர் ரைட் முரளி சார்… முத்து அவன் வாயால ஏகலைவன் பேரைச் சொல்லிட்டான்னா எந்தப் பிரச்சனையும் இல்ல… அவன் சொல்லுவான்… உங்களோட சைக்காலஜி அவன் கிட்ட வேலை செஞ்சிருக்கும்”
முரளிதரனோடு ஏனையவர்களும் சரியென்ற பிறகு ஏற்கெனவே குழம்பியிருந்த முத்துவை விசாரணை அறைக்கு அழைத்துவரச் சொன்னாள்.
அவனது முகத்தில் ஜீவனேயில்லை..
“உக்காரு”
அமர்ந்தான்.
“உனக்கு ரெண்டு ஆப்சன் இருக்கு… ஒன்னு உன் கிட்ட லேப்டாப்பையும் மொபைலையும் குடுத்தவன் யார்னு சொல்லணும்… ரெண்டு இனியாவ கொலை பண்ணுன கில்லர் நீ தான்னு ஒத்துக்கணும்… சர்கம்ஸ்டான்ஷியல் எவிடென்ஸ் எல்லாம் உனக்கு எதிரா இருக்கு… உன்னோட மெண்டல் கன்டிசனை வச்சு நீ தான் இனியாவ கொடூரமா கொலை பண்ணுனனு என்னால நிரூபிக்க முடியும்”
இதன்யா அமைதியாகச் சொல்லவும் முத்துவிற்குள் ஏகப்பட்ட உணர்வுக்கலவரங்கள். முகத்திலோ பயம் கொப்புளித்தது. அவனது தவிப்பைக் காணும்போதே கட்டாயம் உண்மையைச் சொல்லிவிடுவான் என்று நம்பினாள் இதன்யா.
முத்துவோ மடிக்கணினியைக் கொடுத்தவர் யாரென உண்மையைச் சொன்னால் ஒரு கொலைக்கான தண்டனை மட்டுமே; அதை மறைத்தாலோ இரட்டைக்கொலைக்கான தண்டனையை அனுபவிக்கவேண்டுமென எண்ணி பயந்தான். இருதலைக்கொள்ளி எறும்பாக பரிதவித்தான்.
அவனது பரிதவிப்பும் பயமும் இதன்யாவுக்குத் தான் சாதகமாக முடிந்தது.
எச்சிலை விழுங்கியபடியே பயம் நிறைந்த விழிகளோடு “ஏகலைவன் சார் தான் லேப்டாப்பையும் மொபைலையும் என் கிட்ட ஒப்படைச்சார் மேடம்” என்றான் அவன்.
இதன்யாவின் இதழில் வெற்றிப்புன்னகை. இனி ஏகலைவனை அவள் விசாரணைக்குள் கொண்டுவருவதை யார் தடுக்க முடியும்?
வீடியோ பதிவு ஆரம்பித்தது
“ஏகலைவன் சார் ஆக்ட்ரஸ் நிஷா அகர்வால் கிட்ட எனக்கு மேக்கப்மேன் வாய்ப்புக்காக சிபாரிசு பண்ணுறதா சொன்னார்… அதுக்காக…”
அவன் பேசுவது அனைத்தும் பதிவாக ஆரம்பித்தது. முத்துவின் வாக்குமூலத்தால் ஏகலைவன் இனியா கொலைவழக்குக்குள் பிணைக்கப்படுவானா? அல்லது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிப்பானா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

