பெண் சைக்கோபாத்கள் யாருக்கும் விசுவாசமாக இருக்கமாட்டார்கள். அனைவரையும் தனது தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வது தன் உரிமை என்ற மனப்பாங்கு அவர்களுக்கு இருக்கும். உங்களது துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். மகிழ்ச்சியில் அவர்கள் சிரிப்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். வேண்டுமென்ற அடுத்தவர்களின் உடமைகளைத் திருடுவதும் பெண் சைக்கோபாத்களில் சிலர் செய்வார்கள். தப்பித் தவறிப் பிடிபட்டுவிட்டால், தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைத் திரித்து கட்டுக்கதை ஒன்றை கூறி தங்களது தகாத செயலைக் கூட நியாயப்படுத்துவார்கள். கடைசியில் உங்கள் மீதே பழியைத் திருப்புவார்கள். செய்த இழிகாரியத்துக்கு அவர்கள் எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.
– An article from Psychology today
“பொதுவா ரோஷணுக்கு மாத்திரை போடுறது தடைபட்டா ஹலூசினேசன் வரும்… அப்பலாம் சாத்தான் என் கண்ணுக்குத் தெரியுறார், என்னை அவர் கிட்ட கூப்பிடுறார்னு உளறுவான்… அன்னைக்கும் அவன் அப்பிடிப்பட்ட சிச்சுவேசன்ல தான் இருக்கான்னு ராக்கி பேசுறப்ப புரிஞ்சிக்கிட்டு ஃப்ராக்சன் ஆப் செகண்ட்ஸ்ல பழிவாங்குற திட்டத்தைப் போட்டேன்… செங்கோடன்ங்கிற பொய்யான அடையாளத்தோட போலீஸ் ஸ்டேசனுக்குள்ள வந்தேன்…. இன்ஸ்பெக்டர் யாருனு விசாரிச்சப்ப அவசரசத்துக்கு சக்கரவர்த்தி எஸ்டேட் பேரை யூஸ் பண்ணிக்கிட்டேன்… என் திட்டப்படி மாத்திரை கவரை ரோஷண் கிட்ட குடுக்குறப்பவே பயமுறுத்துற மாதிரி சாத்தான் அவனோட நேரம் முடிஞ்சதா சொல்ல சொன்னார்னு அவனுக்கு மட்டும் கேக்குற குரல்ல பேசுனேன்… நான் சொன்னது, அவனோட மனநிலை, ஹைடோஷ் மருந்து எல்லாமுமா சேர்ந்து ஹலூசினேசன் வந்து அவனே தற்கொலை பண்ணிக்கிட்டான்… இல்ல இல்ல, நான் அவனைத் தற்கொலைக்குத் தூண்டுனேன்… இதுக்காக நான் வருத்தப்படவே இல்ல மேடம்… நான் காதலிச்ச பொண்ணை அவன் கொன்னுருக்கான்… அதே மாதிரி அவனைத் துடிக்க துடிக்க கொல்லணும்னு ஆசைதான்… ஆனா போலீஸ், கேஸ், கோர்ட்னு அலைஞ்சு எனக்கு பாலிவுட்ல கிடைக்கப்போற சான்ஸை கெடுத்துக்க விரும்பல… தந்திரமா அவனைச் சாகடிச்சிட்டேன்னு சந்தோசப்பட்டேன்… அதோட சாத்தான் குழுவுக்கு என்னைத் தலைவரா ஆக்குனதுக்கு அப்புறம் இனியா இறந்த துக்கத்தைத் தாண்டி ஒரு சந்தோசம் வந்துச்சு”
மூச்சு விடாமல் ரோஷணைத் தற்கொலை முடிவுக்குத் தள்ளிய வரலாற்றைச் சொல்லி முடித்தான் முத்து.
இதன்யா அனைத்தையும் கேட்டு முடித்தவள் “இப்ப முருகையா மர்டர் கேசுக்கு வருவோம்… உனக்கும் ஜானுக்கும் அவர் மேல விரோதம் இருந்துச்சு… ஆனா அது கொலைக்கான வலுவான காரணமில்லங்கிறது என்னோட அனுமானம்” என்றாள் நிதானமாக.
மகேந்திரனிடம் திரும்பியவள் “ஜானை அழைச்சிட்டு வாங்க சார்” என்றாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அடுத்த சில நிமிடங்களில் ஜானுடன் அவர் விசாரணை அறையில் ஆஜரானார்.
முத்துவுக்கு அருகே அமரவைக்கப்பட்டார் ஜான்.
“என்ன காரணத்துக்காக முருகையாவ கொலை பண்ணுனிங்க?”
இதன்யா நிதானமாகக் கேட்க இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். முத்து ஜானிடம் நீயே சொல்லென கண்களால் சைகை காட்ட ஜானும் காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
“சாத்தான் குரூப்போட இந்த மாசக்கூட்டம் காட்டுக்கு கைல நடந்துச்சு மேடம்… அது முடிஞ்சதும் எல்லாரும் குகையில தான் போதையோட கிடப்பாங்க… இந்தத் தடவை நானும் முத்துவும் எந்தப் போதைப்பொருளும் எடுத்துக்கல… எங்க சுபாவத்தைப் போதைப்பொருள் மாத்துதுனு புரிஞ்சிக்கிட்டோம்… எல்லாரும் போதைல மட்டையானதும் நானும் முத்துவும் மட்டும் குகைல இருந்து பொன்மலைக்குக் கிளம்புனோம்… நேர்வழில போனா ஊர்க்காரங்க பாத்துடுவாங்கனு எப்பவும் பயன்படுத்துற ரகசிய வழில போனோம்… அந்த வழிக்குப் பக்கத்துல தான் முருகையா வீடு இருக்கும்… எப்பவும் அந்நேரத்துல முதலாளி வீட்டுல இருக்குற மனுசன் அன்னைக்குனு வீட்டுல இருந்திருக்குறார்… அது தெரியாம கால் வலிக்குதுனு அவர் வீட்டு திண்ணைல உக்காந்த நாங்க சாத்தான் குரூப் பத்தி பேசிக்கிட்டோம்… ஒரு கட்டத்துல ரோஷணைத் தற்கொலைக்குத் தூண்டுனதைப் பத்தி முத்து சொல்லிட்டான்… ரொம்ப பெருமையா அவனை மேல அனுப்பிட்டு அவன் இடத்துல இருக்குறேன் பாத்தியாண்ணேனு சொல்லிட்டிருக்கப்பவே கதவு திறக்குற சத்தம் கேட்டுச்சு”
அடுத்து நடந்த சம்பவம் இருவர் மனக்கண்ணிலும் திரைப்படம் போல ஓட ஆரம்பித்தது.
முருகையா தூக்கம் விலகாத கண்களோடு வெளியே வந்தார்.
இருவரையும் கோபத்தோடு பார்த்தவர் “கொலைகாரப்பாவிங்களா! சின்னம்மாவ கொன்னவன் யாருனு தெரிஞ்சும் இத்தனை நாள் கமுக்கமா இருந்திருக்கிங்களேடா… இவன் யாரோ எவனோ? நீ முதலாளிக்கு விசுவாசமா இல்லாம போயிட்டியேடா… இதை நான் இப்பவே முதலாளி ஐயா கிட்ட சொல்லப்போறேன்” என்று அந்தக் காரிருளையும் பொருட்படுத்தாமல் சாந்திவனத்துக்கு நடக்க ஆரம்பித்தார்;
“இந்தக் கிழவன் அங்க போகக்கூடாதுண்ணே”
சொல்லிக்கொண்டே முத்து எழுந்து முருகையாவைத் தடுக்க ஓடினான். ஜானும் துணையாக ஓடியவர் முதியவரைப் பிடித்து நிறுத்தினார்.
“விடுடா என்னை”
ஜானின் கன்னத்தில் பளாரென அறைந்தார் முருகையா.
“இங்க பாருங்க பெரியவரே..” என ஆரம்பித்த முத்துவின் கன்னத்திலும் பெரியவரின் கைத்தடம் வேகமாகப் பதியவும் அவனுக்குள் இருந்த மூர்க்கத்தனம் விழித்துக்கொண்டது.
“கெழவா என்னையா அறையுற?” என தனது ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி அவரை அறைந்தான் அவன்.
வயோதிக உடம்பு வலுவான அடியைத் தாங்கவியலாது வேரற்ற மரமாய் சரிந்தது.
“கெழவனை என்ன செய்ய முத்து?”
ஜான் தவிப்புடன் கேட்டார்.
“இந்தாளு உன் முதலாளி கிட்ட போய் நடந்ததை சொல்லாம விடமாட்டான்… அப்பிடி மட்டும் நடந்துச்சுனா உன் வேலைக்கு ஆபத்து வரும்… நான் ஜெயில்ல களி திங்கணும்… பாலிவுட்ல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகணும்ங்கிற என் கனவு நிராசையா போயிடும்… அடுத்த வாரம் என்னை நிஷால் அகர்வால் பி.ஏ மும்பைக்கு வரச் சொல்லிருக்கார்… இதுக்காக தான சாத்தான் கிட்ட உடம்பை வருத்தி வேண்டுதல் வச்சேன்… இந்தக் கனவு நிறைவேறுற வரைக்கும் என் இமேஜ் டேமேஜ் ஆகிடக்கூடாதுனு மாறுவேசத்துல திரிஞ்சேன்… இத்தனை கஷ்டத்தையும் இந்தக் கெழவன் அர்த்தமில்லாம பண்ணிடுவான்… இவனை முடிச்சிடுவோம்ணே… என்னைக்கு இருந்தாலும் இவன் உனக்கு இம்சை தான்”
இளக்கமின்றி உரைத்தான் முத்து. ஜான் தயங்கினார். கொலை என்ன இட்லி அவிப்பது போல இலேசுப்பட்ட காரியமா? அல்லது அவர் தான் தொழில்முறை கொலையாளியா? வயிற்றுப்பாட்டுக்கு வாகனம் ஓட்டுபவர். அமைதியான இயல்பை மீறி சிற்சில சமயங்களில் கோபப்படுவார்,. அவ்வளது தானே தவிர கொலை எல்லாம் அவரது அகராதியில் கற்பனை கூட செய்ய முடியாத வார்த்தை.
அவரது தயக்கம் முத்துவுக்கு எரிச்சலூட்டியது.
“என்ன முழிக்குற? நீ ஒன்னும் பயப்படாத… இவனை நம்ம கொல்லப்போற முறையால போலீசுக்கு நம்ம மேல சந்தேகம் வராது” என்றான் அவன்.
அவன் ‘நம்’ என்றதும் குளிர்ந்த சூழலிலும் குப்பென வியர்த்தது ஜானுக்கு.
“எ…ப்..பிடி?”
தந்தியடித்தது குரல், குளிரால் அல்ல! பயத்தால்!
“இனியாவை ரோஷண் கொன்ன மாதிரியே இவனை நம்ம கொல்லப்போறோம்” என்றான் நிஷ்டூரமாக.
ஜானுக்குத் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. தலையைச் சொறிந்தார்.
“புரியலையா? நீ முதல்ல காட்டுக்குகைல உருண்டுக்கிட்டு கிடக்குற எல்லாரையும் அடிச்சு துரத்து… போலீஸ் வர்றாங்கனு சொன்னா அவனுங்களே ஓடிடுவானுங்க” என்றவன் பெரியவரை முதுகில் உப்புமூட்டை போல தூக்கிக்கொண்டான்.
“இந்தாளு அதுக்குள்ள முழிச்சுக்கிட்டா என்ன செய்ய?”
“கெழம் அவ்ளோ சீக்கிரம் முழிக்காது… நான் அடிச்ச அடி அப்பிடி”
கர்வமாகச் சொன்னவன் காட்டு குகை வரை அவரை முதுகில் சுமந்தே வந்து சேர்ந்தான். ஜான் அவன் சொன்னபடி காவல்துறையினர் குகையில் நள்ளிரவு சோதனை போட வருவதாகச் சொன்னதும் அங்கிருந்த இருபது முப்பது நபர்களும் அடித்துப் பிடித்து ஓடினார்கள்.
அவர்கள் ஓடும் வரை காத்திருந்த முத்து பெரியவரோடு குகைக்குள் போனான்.
அவரைப் பொத்தென சாத்தான் சிலைக்கு முன்னே போட்டான்.
“இருளின் இளவரசனான சாத்தானே! உன்னை நம்புனதோட பலனா இன்னும் ஒரு வாரத்துல எனக்கு மும்பைல பெரிய வேலை கிடைக்க போகுது… என் கனவு நிறைவேற காரணம் நீ தான்… அதுக்கு உனக்குக் காணிக்கை தர்றது தானே நியாயம்…. எல்லாரும் உனக்கு ஆடு, கோழி பலி குடுப்பாங்க… ரோஷண் முதல் தடவை நரபலி குடுத்தான்… இப்ப என் முறை… இந்தக் கெழவனை உனக்குக் காணிக்கையா பலி குடுக்கப்போறேன்… சுருங்குற நரம்புல ஓடுற விசுவாசமான ரத்தத்தோட சுவைய ருசி பாரு சாத்தானே”
வெறி பிடித்தவனைப் போல கத்தியவன் போதைப்பொருளை எடுத்து முருகையாவின் வாயில் திணித்தான்.
“இந்தப் போதை கிழவனை எழுந்திருக்கவிடாது… நீ இவனைப் பாத்துக்கண்ணே… நான் கொஞ்சம் பொருளை எடுத்துட்டு வர்றேன்” என கிளம்பினான்.
சில மணி நேரங்கள் கழித்து திரும்பி வந்தவன் கையில் அமில பாட்டில் ஒன்று இருந்தது.
ஜான் அதிரும்போதே அதை முருகையாவின் முகத்தில் ஊற்றினான். போதையில் கிடந்தாலும் முதியவருக்கு உணர்விருந்ததே. வலியால் கத்தினார். துடித்தார்.
அதை முத்துவோடு சேர்ந்து ஜானும் ரசிக்க ஆரம்பித்தார்.
விசுவாசமில்லாதவன் என எத்தனை முறை குத்திக்காட்டி நக்கல் அடித்தாய் கிழவா என மானசீகமாகக் கொக்கரித்தார்.
இவ்வளவு நேரமிருந்த பயம் முருகையாவின் கதறலைக் கண்டதும் ஆவியானது. சந்தோசத்தில் துள்ளியது அவரது மனம்.
முகம் முழுவதும் அமிலத்தால் வெந்து போன பெரியவரின் கதறலைக் கேட்டுக் காட்டிலிருந்த புள்ளினங்கள் உறக்கம் தொலைத்தன.
அடுத்தடுத்த கொடூரங்களாக ஹாக்சா ப்ளேடால் அவரது முகத்தின் தோல் உரிக்கப்பட ஜானுக்கு ஆனந்தமோ ஆனந்தம்! போதைப்பழக்கத்தால் வரும் மனப்பிறழ்வு எத்துணை கொடூரமானது என அவரைப் பார்த்தால் கண்டுகொள்ளலாம்.
முத்து இரக்கமின்றி பெரியவரின் உடலில் ஹாக்சா ப்ளேடால் குத்தியவன் அவரது உயிர் இன்னும் போகவில்லை என்றதும் “அண்ணே இந்தாளை முடிச்சிடு” என கழுத்தை நெறிப்பது போல காட்ட ஜானும் வெறிகூடிப்போனவராக முருகையாவின் கழுத்தை நெறித்தார்.
பெரியவர் மூச்சுக்குத் திணறி வேதனையில் துன்பப்பட்டுப் பரிதாபமாக இறந்து போன பிறகும் ஜானின் ஆத்திரம் அடங்கவில்லை.
“நானா விசுவாசமில்லாதவன்? நீ மட்டும் என்ன ஒசத்தி? சின்னம்மா சின்னம்மானு கொடி பிடிப்பல்ல, அந்தச் சின்னம்மா கிட்டவே போய்ச் சேரு கெழட்டு நாயே”
கத்திக்கொண்டே ஹாக்சா ப்ளேடால் பெரியவரின் உடலில் குத்திக் குத்தி வெறியைத் தணித்துக்கொண்டார்.
இப்போது இதன்யாவிடம் பேசியபோதும் அதே வெறி அவரது முகத்தில்! மகேந்திரனே ஒரு கணம் மிரண்டு போனார்.
அடுத்து தானும் முத்துவும் பெரியவரைக் குகையிலிருந்து காட்டுப்பாதையில் இனியா இறந்த இடத்தில் போட்டது, குகையைக் கழுவி விட்டது என அனைத்தையும் கூறினார்.
“இப்பிடிலாம் செஞ்சா போலீஸால எங்களைக் கண்டுபிடிக்க முடியாதுனு நினைச்சோம்… சாத்தான் அவரோட சக்தியால ரோஷண் மேல தப்பில்லனு சொல்ல வச்ச மாதிரி எங்களையும் காப்பாத்துவார்னு கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டோம்… ஆனா போலீஸ் என்னைக் கண்டுபிடிச்சிட்டாங்க” எனச் சொல்லி முடித்தார் அவர்.
முத்து சிலையாகச் சமைந்திருந்தான்.
“நீ ஏன் ஃபாதரைப் பாக்க அன்னைக்கு நைட் சர்ச்சுக்குப் போன? பாவமன்னிப்புனு கதை விடாத… நீ ஒரு சாத்தானிஷ்ட்… உனக்கும் கிறிஸ்தவர்கள் மேல பெருசா பிடித்தம் இருக்காதுனு எனக்குத் தெரியும்… உண்மைய சொல்லு”
“அது… வந்து… அவர் தான் ரோஷணை இனியா கொலைல இருந்து காப்பாத்துனார்னு தோணுச்சு மேடம்… அதான் அவரை நான் போய் சந்திச்சா நீங்க அவரையும் கேஸ்ல சேர்த்துடுவிங்கனு ப்ளான் பண்ணி அவரைச் சந்திச்சேன்”
இதன்யா அவனை மெச்சுதலாகப் பார்த்தாள்.
“மாட்டுவோம்னு உனக்கே தோணிருக்கு”
“ஆமா மேடம்… சாத்தான் என்னை ஜெயில், சிறை தண்டனைலருந்து காப்பாத்துவார்ங்கிற நம்பிக்கையும் இருந்துச்சு… இப்பவும் இருக்கு”
பைத்தியக்காரன் என்ற ரீதியில் மகேந்திரன் அவனைப் பார்க்க, இதன்யா விசாரணையை முடித்துக்கொண்டு வெளியே வந்தாள்.
மனிதர்கள்தான் எத்துணை கொடூரர்கள்! இன்னொரு உயிர் அணுவணுவாகத் துடித்துச் சாவதை ரசிக்க வேண்டுமென்றால் அந்த மனிதனின் மனதில் எவ்வளவு குரூரம் நிறைந்திருக்க வேண்டும்! இது கட்டாயம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய சமாச்சாரம் இல்லை. முத்து மற்றும் ஜான் இருவருமே அளவுக்கு மீறிய போதைப்பொருள் உபயோகத்தால் மனச்சிதைவுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகித்தாள் அவள்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டிய அறிக்கையில் அந்தச் சந்தேகத்தையும் பதிவு செய்தாள் அவள்.
முத்துவின் வீட்டில் தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டு மார்த்தாண்டனும் வந்து சேர்ந்தார். அவரிடம் ஒரு மடிக்கணினியும் மொபைலும் இருந்தன.
“வேற எதாச்சும் சிக்குச்சா?” என்றவளிடம்
“இவன் திறமையான மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ங்கிறதுக்கு அடையாளமா அவன் மாறுவேசம் போட யூஸ் பண்ணுன திங்ஸ் கிடைச்சிருக்கு மேடம்”
இதன்யா மடிக்கணினியையும் மொபைலையும் சைபர் காவல் நிலையத்துக்கு அனுப்பி அதில் ஏதாவது ஆதாரம் சிக்குமா என விசாரிக்கச் சொல்லிவிட்டு முரளிதரன் வருகைக்காக காத்திருந்தாள்.
அவரும் வந்து சேர்ந்தார்.
“சந்தேகப்படுற மாதிரி எதுவும் நடக்குதா சார்?”
“நீங்க சொன்ன மூனு பேரையும் ஓரளவுக்குக் கண்காணிச்சிட்டேன் மேடம்… விசாரணை பண்ணுறதா நான் சாந்திவனம் போனதும் கிளாராவோட முகம் மாறிடுச்சு… முத்துவ பத்தி கலிங்கராஜன் கிட்ட பேசுனப்பவும் அவங்க முகத்துல அவ்ளோ பயம்”
“ஃபாதர் பவுல்?”
“அவர் எப்பவும் போல இருக்கார் மேடம்… சந்தேகப்படுற மாதிரி எதுவும் பண்ணல”
“அப்புறம் ஏகலைவன்?”
அழுத்தமாக அவள் நிறுத்தியதும் “அவர் சென்னைல இருந்து இன்னைக்கு தான் வந்ததா சொன்னார்… அவரும் சஸ்பெக்ட் லிஸ்டுல இருக்குறதால எப்ப வேணாலும் விசாரிக்க வருவோம்னு சொன்னதும் சிரிச்சார் மேடம்,… அந்தாளுக்கு ராமபாணக்கொடி மேல ஒரு தனி பாசம்… நான் அவரோட வீட்டுக்குப் போனப்ப தோட்டக்காரர் கிட்ட ஏன் ஒழுங்கா கொடிக்குத் தண்ணி ஊத்தலனு சண்டை போட்டுக்கிட்டிருந்தார் மனுசன்”
இதன்யாவுக்கு ஏனோ ஏகலைவன் வேண்டுமென்றே தன்னை நியாயவானாகவும், பெர்ஃபெக்சனிஸ்டாகவும் காட்டிக்கொள்வதாகத் தோன்றியது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

