சைக்கோதெரபி மட்டும் மனப்பிறழ்வுக்குறைபாடான சைக்கோபதியைக் குணப்படுத்த போதாது. சைக்கோஃபார்மோதெரபியானது நரம்புயிரியல் செயல்பாடுகளை இயல்புக்குக் கொண்டு வர உதவியாக இருக்கும். லித்தியம் சமூகவிரோதப்போக்கு, முரட்டுத்தனம் மற்றும் தாக்கும் குணம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு பங்காற்றுகிறது. ஹோலண்டர் என்பவர், மனநிலையை நிதானமாக்கும் மருந்துகளான டைவல்ப்ரோயெக்ஸ், SSRI, MAOI மற்றும் நியூரோலெப்டிக்ஸ் போண்றவை முரட்டுத்தனம் மற்றும் விரோத மனப்பாங்குடன் கூடிய மனப்பிறழ்வு நோயாளிகளைக் கட்டுக்குள் வைப்பதில் சிறப்பாக வேலை செய்வதாக ஆவணப்படுத்தியுள்ளார். சைக்கோபதியை எந்தளவுக்கு சைக்கோஃபார்மாதெரபி குணமாக்கும் என்பது பற்றி இன்னும் போதுமான ஆய்வுகள் நடத்தப்படாததால் தரவுகளும் குறைவாகவே உள்ளன. மூளைப்புறணியின் குறைவான தூண்டுதல், அனிச்சைச்செயலைப் புரிந்துகொள்வதில் உள்ள குறைபாடுகளைப் போக்க நியூரோ ஃபீட்பெக் எனப்படும் நரம்பியல் கருத்தறிக்கைகள் முறை உதவிகரமாக உள்ளது.
-From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens
“நிஜமா நீ சொன்ன மாதிரி நடக்குமா? இல்ல குருட்டாம்போக்குல எதையாச்சும் உளறுறியா?” என்று சற்று கண்டிப்பான குரலில் கேட்டாள் கிளாரா.
அவளெதிரே பவ்வியமாக நின்று கொண்டிருந்த ஜான் இன்னும் பணிவான குரலில் “எல்லாம் நிஜம் தான் மேடம்… என் புள்ளை உயிருக்கு டாக்டருங்க கெடு வச்சாங்க.. அந்தச் சாத்தானோட சக்தியால தான் என் புள்ளை இன்னைக்குப் பரிபூரணமா குணமாகிருக்கா மேடம்” என்று சொல்ல கிளாராவின் முகத்தில் ஒளிவட்டம்.
அவளது மனவோட்டத்தைப் புரிந்துக்கொண்ட ஜான் மறைந்திருந்து தங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நவநீதத்திடம் வெற்றிக்குறி காட்டவும் அவள் குயுக்தியுடன் சிரித்தாள்.
கிளாரா சில நொடிகள் யோசித்தாள். பின்னர் ஏதோ முடிவு செய்தவளாக “இந்த மாசம் நானும் உங்க குரூப் கூட்டத்துல கலந்துக்குறேன்… அதை பத்தி பேச ரோஷணை வீட்டுக்கு வரச் சொல்லிடு” என ஜம்பமாகக் கட்டளையிட்டுவிட்டுச் சென்றுவிட, அவள் போனதும் நவநீதத்திடம் வந்து கிளாரா தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவாளென நம்பிக்கையோடு உரைத்தார் ஜான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அந்தம்மா இப்பவும் உன் கிட்ட அதிகாரமா தான் பேசுது பாரு” என நவநீதம் குறைபட
“போகப்போக அந்தம்மா நம்ம கண்ட்ரோலுக்கு வந்துடும்… புருசன் இருக்கப்ப இன்னொரு ஆம்பளைய வளைச்சுப் போட பாக்குதுல்ல, அந்த உண்மை நமக்குத் தெரிஞ்சுதுனா கட்டாயம் முதலாளி கிட்ட சொல்லிடுவோம்னு பயந்து நம்ம இஷ்டத்துக்கு ஆடும்” என்றார் ஜான்.
நவநீதத்தின் முகத்தில் இதைக் கேட்டதும் குற்றவுணர்ச்சி பரவியது.
“நம்ம முதலாளிக்குத் துரோகம் பண்ணுறோமேய்யா… இது தப்பில்ல?”
“தப்பேயில்ல… இந்தப் பொம்பளையோட உண்மையான குணம் ஐயாக்கும் தெரியட்டுமே… ஐயாவையும் நம்ம சாத்தான் குரூப்புல சேர்த்துவிடணும்… அதுதான் ஐயாவோட உதவிக்கு நான் செலுத்துற நன்றிக்கடனா இருக்கும்… சாத்தானோட சக்தியால ஐயாவோட பிசினசும் ஓஹோனு வரணும்… ஐயாவோட நல்ல குணத்தைப் புரிஞ்சிக்காம புத்திய அலைய விடுற கிளாரா மாதிரி பொம்பளையோட உண்மை முகத்தை அவருக்குக் காட்டவேண்டாமா நவநீதம்?”
உணர்ச்சி மேலிட கத்தியே விட்டார் ஜான். உடனே பதறிய நவநீதம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஜானின் வாயைப் பொத்தினாள்.
“கத்தாதய்யா… குமாரி சூனியக்காரி இங்கனக்குள்ள சுத்திட்டு இருந்தானா நம்ம பேசுறதைக் கேட்டு கிளாராம்மா கிட்ட போட்டுக் குடுத்துடுவா” என எச்சரித்தாள் அவள்.
ஜானும் இனி ஜாக்கிரதையாக வார்த்தைகளை வெளியிடவேண்டுமென நினைத்துக்கொண்டார்.
சொன்னபடி அந்த மாத சாத்தான் வழிபாட்டுக்குழு கூட்டத்தில் கிளாராவும் கலந்துகொண்டாள். அக்குழுவில் இணைந்தும் விட்டாள்.
அங்கே இணைந்த பிற்பாடு ஜான் – நவநீதத்திடம் கொஞ்சம் கொஞ்சமாக கிளாராவின் நெருக்கம் அதிகரிக்க, குமாரி தனித்துவிடப்பட்டார்.
அவர் புகைச்சலோடு சாந்திவனத்துக்குள் வலம் வருவதைக் கண்டு ஜானும் நவநீதமும் மனதுக்குள் குதூகலித்துக்கொண்டனர்.
இந்நிலையில் தான் இனியாவின் பள்ளியில் சர்வதேச பெண்கள் தினத்திற்கான மாறுவேடப்போட்டி மேல்நிலை மாணவிகளுக்கு வைக்கப்பட்டது. ஆளுமையான பெண் தலைமைகளின் வேடத்தை யார் தத்ரூபமாகப் போட்டு அவர்களைப் பிரதிபலிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று சுற்றறிக்கை வந்ததும் இனியா உற்சாகமாக தனது பெயரை அளித்துவிட்டாள்.
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் வேடத்தை அவள் போட ஆசைப்பட்டாள். அவளுக்கு மிகவும் பிடித்த பெண் ஆளுமைகளில் அவரும் ஒருவர். முபீனா மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் கௌரி லங்கேஷின் வேடம் அணிய விரும்பினாள்.
இருவரும் இணையத்தில் அந்தப் பெண் ஆளுமைகளின் புகைப்படங்கள் நடை உடை பாவனைகளைப் பார்த்துத் தெரிந்துகொண்டார்கள். போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. எனவே இரு பெண்களும் வீட்டினரின் சம்மதத்தோடு நகரத்திற்கு சென்று போட்டிக்குத் தேவையான உடைகளை வாங்கிக்கொண்டார்கள்.
முபீனாவுக்கு அந்தக் கதாபாத்திரத்திற்கு உருமாறுவதில் பெரிய சவால்கள் எதுவுமில்லை. ஆனால் இனியாவோ இந்திரா காந்தியின் பாவனைகளைப் பிரதிபலிக்க மிகவும் சிரமப்பட்டாள்.
இந்திரா காந்தியின் வதனத்தில் துலங்கும் கம்பீரத்தை அச்சிறுபெண் எத்துணை முயன்றும் தனது வெள்ளந்தி முகத்தில் கொண்டுவர முடியவில்லை.
போட்டியில் பேச வேண்டிய கருத்துகளைத் தயார் செய்தவள் முகபாவனைக்கும் கம்பீரத்துக்கும் எங்கே போவாள்? பாவம்! அச்சிறுபெண் சோர்ந்துவிட்டாள்.
குமாரியிடம் கேட்டதற்கோ “இன்னும் கொஞ்சநாள்ல போர்ட் எக்சாம் ஆரம்பிக்கப்போகுதுல்ல… அதுக்குப் படி இனியாம்மா… இந்தப் போட்டில கலந்துக்கணும்னு என்ன அவசியம்?” என அவர் அலட்சியமாகக் கூறிவிட்டார்.
ஆனால் இக்காட்சியை போற போக்கில் கண்டுவிட்ட நவநீதமோ இனியாவையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் பேராசையோடு ஜானிடம் பேசினாள்.
“உன் ஃப்ரெண்ட் முத்து தம்பி இருக்காருல்ல, அவரு பாம்பேல பெரிய மேக்கப்மேனா இருந்தாருல்ல… அவரை அழைச்சிட்டு வந்து இனியாம்மாக்கு மேக்கப் போட்டு மாறுவேச போட்டிக்கு உதவி செய்ய சொல்லுவோமாய்யா?” என ஆர்வமாகக் கேட்டாள் அவள்.
“ஸ்கூல்ல நடக்குற மாறுவேசப்போட்டிக்கு ஏன் மேக்கப்மேனோட உதவி வேணும்? போய் ஆகுற வேலைய கவனி நவநீதம்” என ஜான் அசட்டையாகக் கூற
“உனக்கு விவரமே பத்தலய்யா… இனியா பொண்ணுக்கு இப்ப அந்த வேசத்தைப் போட்டேயாகனும்னு வெறி… அவ முகம் அதுக்குப் பொருத்தமா இருக்காதுனு நினைக்குது… நம்ம இப்ப அதுக்கு உதவுனோம்னா நாளைக்கு நமக்கு ஒரு பிரச்சனைனா அந்தப் பொண்ணு நமக்கு ஏந்துகிட்டுப் பேசும்யா… இப்ப புரியுதா?” என நவநீதம் கூற ஜானுமே அவள் கூறியதற்கு சம்மதித்து முத்துவிடம் முதலாளியின் மகளுக்கு உதவுவாயா என கேட்டார்.
அவன் முதலில் முரண்டு பிடித்தான்.
“என் மேக்கப் திறமைக்கு இதுல்லாம் ஒரு வேலையாண்ணே? நீ என்னை இன்சல்ட் பண்ணுற” என்றவனிடம்
“என் முதலாளி மக சோசியல் மீடியால ரொம்ப ஃபேமசு முத்து… நீ மட்டும் அதுக்கு உதவி பண்ணுனா உன் பேரு இன்னும் பிரபலமாகும்” என்று ஆசையைத் தூண்டிவிட்டார் ஜான்.
பிரபலம் என்ற ஒரே வார்த்தையில் முத்து விழுந்துவிட்டான். இனியாவிடம் அவனைப் பற்றி கூறி ஜானும் நவநீதமும் அவளது நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டார்கள்.
மார்ச் எட்டாம் தேதி சாந்திவனத்துக்கே வந்து இனியாவை இந்திரா காந்தி வேடத்திற்கு தயார்ப்படுத்துவதாக வாக்களித்தான் முத்து.
கலிங்கராஜன் அந்தச் சமயத்தில் கேரளாவுக்குச் செல்லவேண்டியதிருக்க இம்முறை அவர் கிளாராவைத் தன்னோடு அழைத்தார். சில நாட்கள் கழித்துப் போனால் இனியாவுக்கும் தேர்வு முடிந்துவிடும், அவளையும் தங்களோடு அழைத்துச் செல்லலாமே என்றாள் கிளாரா.
ஆனால் கலிங்கராஜன் பிடிவாதமாக அவளையும் பிள்ளைகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு கேரளாவுக்குப் பறந்தார். கிளாரா உதவிக்கென குமாரியையும் தன்னோடு இழுத்துச் சென்றுவிட இனியாவின் போட்டிக்கு உதவி செய்ய முத்துவும் அங்கே வந்து சேர்ந்தான்.
வந்தவனின் பார்வை இனியாவைப் பார்த்ததும் மாறுவதை ஜான் கவனித்துவிட்டார்.
இரகசியமாக அவனது காதைக் கடித்தார்.
“எங்க முதலாளியோட மக முத்து… பாத்து கவனமா நடந்துக்க… நாளைக்கு எதுவும் எசகுபிசகா நடந்துச்சுனா ரொம்ப கஷ்டம்” என்றவரிடம் அலட்சியச்சிரிப்பை உதிர்த்தான் அவன்
“உன் ஊருக்காரங்களுக்கு என்னை யாருனு கூட தெரியாது… சாத்தான் வழிபாடு கூட்டத்துக்கு நைட்டோட நைட்டா வந்து ஓடிருறேன்… இப்ப என்னை இந்தக் கெட்டப்புல பாத்தா எவனாலயும் கண்டுபிடிக்க முடியாதுண்ணே… நான் வெறும் மேக்கப்மேன் மட்டுமில்ல… என் மேக்கப் திறமையால முகத்தோற்றத்தையே மாத்த தெரிஞ்சவன்… இன்னும் கொஞ்சநேரத்துல அதை நீ பார்ப்ப” என சவால் விட்டவன் சொன்னபடியே இனியாவுக்கு மேக்கப் செய்து முடித்ததும் ஜானும் நவநீதமும் வாயடைத்துப்போனார்கள்.
அவர்கள் மட்டுமில்லை, இனியாவும் கூட. தன் தோற்றத்தை கண்ணாடியில் பார்த்துக் குதூகலித்தவள் ஜானின் கைவண்ணத்தில் இந்திரா காந்தியின் கம்பீரம் வந்துவிட்ட முகத்தை நம்ப முடியாமல் அதிசயித்தாள்.
“ஐ காண்ட் பிலீவ் திஸ்… எப்பிடி இதுல்லாம் பாசிபிள்?” என கண்கள் மின்னக் கேட்டவளிடம்
“மேக்கப்னா வெறும் அழகுப்படுத்துறது மட்டுமில்ல, அது ஒரு ஆர்ட்… ஒரு சில மேக்கப் ஆர்ட்டிஸ்ட் தான் அதை ஆர்ட்டா பாக்குறாங்க… மத்தவங்களுக்கு அது வெறும் பணங்கொழிக்கிற பிசினஸ் மட்டுமே” என்றான் முத்து.
இனியாவைப் பார்த்ததுமே விழுந்துவிட்டது அவன் மனம். எதையாவது பேசி அவளது கவனத்தை ஈர்க்க நினைத்தான். அதன் விளைவாக தான் மேற்சொன்ன வாக்கியங்கள் அவனால் உதிர்க்கப்பட்டன.
முடிவு என்னவோ அவனுக்குச் சாதகம் தான். ஆம்! முத்துவின் பேச்சினால் கவரப்பட்ட இனியா அவனது கையைப் பற்றி “ஆல் த பெஸ்ட்…. உங்க திறமைக்கு இன்னும் நிறைய உயரத்துக்கு நீங்க போவிங்க” என்று பாராட்டியதோடு அவனோடு சேர்ந்து மேக்கப் திறமையைப் பாராட்டி இன்ஸ்டாக்ராமில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்தாள்.
“எனக்கு ஓரளவுக்கு ஃபாலோயர்ஸ் இருக்காங்க… கண்டிப்பா உங்க திறமைக்கேத்த சான்ஸ் கிடைக்கும்” என்று வாய்நிறைய வாழ்த்தியவள் முத்துவின் கண்ணுக்குத் தேவதையாகவே தெரிந்தாள்.
உடனடியாக அவளை இன்ஸ்ட்ராகிராமில் ஃபாலோ செய்தான் அவன். செய்த வேலைக்கான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு சாந்திவனத்திலிருந்து கிளம்பியவன் பூங்குன்றத்தில் அவனது வீட்டில் அடைபட்டான்.
இனியாவின் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பார்த்து நேரத்தைக் கழித்தவன், அவள் மாறுவேடப்போட்டியில் ஜெயித்த செய்தியை புகைப்படத்தோடு இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்ததும் அதற்கு இதய லைக் கொடுத்து வாழ்த்துகளும் தெரிவித்தான்.
அவன் அடிக்கடி இனியாவைப் பின்தொடர்வதை ஒருகட்டத்தில் ஜான் கண்டுகொண்டார். முத்துவிடம் கேட்டதற்கு அவன் இனியாவை ஒருதலையாகக் காதலிப்பதாகச் சொல்லி அவர் தலையில் இடியை இறக்கினான்.
மாபெரும் பிரச்சனைக்கான பிள்ளையார்சுழியை அவனது ஒருதலை காதல் அங்கே போட்டுவிட்டதை அறியாதவராக முதலாளிக்குப் பயந்து முத்துவிற்கு அறிவுரை கூறி அவனது மனதை மாற்ற முயன்றார் ஜான்.
ஆனால் முத்து பிடிவாதமாக இருக்கவும் வேறு வழியின்றி இனி அவன் தலையெழுத்து என ஒதுங்கிகொண்டார். பின்னர் தான் அவருக்கும் முத்துவுக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமொன்று நடந்தேறியது.
ஆம்! இனியாவும் நிஷாந்தும் காதலிப்பதைத் தெரிந்துகொண்டார் ஜான். முத்துவிடம் சொன்னபோது அவன் நம்பவேயில்லை. இருவரும் முருகன் கோவிலில் சந்தித்துப் பேசிக்கொள்வதையும், இனியா கோவிலைப் பெருக்கிச் சுத்தம் செய்யப்போகும் போது அங்கே நிஷாந்த் ஆஜராவதையும் முத்துவிடம் நேரிலேயே காட்டினார் அவர்.
இனியாவும் நிஷாந்தும் சேர்ந்து கோவில் சுற்றுப்புறத்தைக் கழுவிவிடுவது, சிரித்துப் பேசிக்கொள்வதைப் பார்த்த முத்துவின் கண்கள் கோபத்தில் கோவைப்பழங்களாய் சிவந்து போயின.
கை முஷ்டி இறுக, கண்கள் இடுங்க “எனக்குக் கிடைக்காதவளை யாருக்கும் கிடைக்கவிடமாட்டேன்” என பற்களைக் கடித்துக் கூறியவனைப் பார்த்தபோது ஜானுக்கே பயம் வந்துவிட்டது. கூடவே முதலாளியிடம் இனியாவின் காதலைப் பற்றி சொல்லியே ஆகவேண்டுமென்ற உறுதியும் பிறந்தது.
அப்போது தான் “சின்னம்மா” என்று அழைத்தபடி அங்கே வந்தார் முருகையா. அவரைப் பார்த்ததும் ஜான் அதிர நிஷாந்தும் இனியாவும் எந்தவித முகமாறுபாடுமின்றி நின்றார்கள். ஜான் மனதுக்குள் “ஓ! இந்தக் கிழவனுக்கு இனியாவோட காதல் லீலை பத்தி தெரியுமா? விசுவாசம் அது இதுனு ஓவரா ஆடுவான்… இப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணிருக்கான்… இதை வச்சே இவனை முதலாளி கிட்ட மாட்டிவிடணும்” எனச் சொல்லிக்கொண்டார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

