பகட்டு நகரத்தின் பளபளப்பும்
ஆணவன் பார்வையின் அலட்சியமும்
அந்நிய இடத்தின் மருட்சியும்
மொத்தமாய் அணை போட்டதில்
பேதலித்து நின்றாளே சிற்றூர்ப்பெண்!
-அட்சரனின் வேதா
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அட்சரன் ஹெல்வட்டாசுக்குக் கிளம்ப காரை எடுக்கும்வரை அவனது பெற்றோர் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. அருள்மொழி தகவல் சொன்ன நேரத்துக்குக் கிளம்பியிருந்தால் இந்நேரம் அவர்கள் வீட்டுக்கு வந்திருப்பார்கள்.
ஒருவேளை இரவில் பயணம் செய்ய வேண்டாமென முடிவெடுத்து ஏதேனும் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்திருக்கலாம் என்று மூளை சொன்னபோது அதை அட்சரனுக்கு ஒத்துக்கொள்ளவே தோன்றியது. ஏனெனில் அதெல்லாம் அவனது தந்தைக்குப் பழக்கமே!
எப்படியோ அலுவலகம் செல்லும்போது தன்னைக் கொதிப்படைய வைக்கும் எந்தச் சம்பவமும் நடக்காததில் அட்சரனுக்குச் சிறிது நிம்மதி. இப்போதுதான் அவனது மனம் கொஞ்சம் சாந்தமடைந்திருந்தது.
வீட்டிலிருந்து அதைக் கெடுத்துக்கொள்ள விரும்பாதவனாகக் காரைக் கிளப்பியவன் ஆழ்வார்ப்பேட்டையை அடைந்தபோது வழக்கம் போல அவர்களின் அலுவலகம் இன்னும் திறந்திருக்கவில்லை. காரணம், இன்னும் இலக்கியாவும் சஞ்சயும் சென்னைக்கு வந்து சேரவில்லை.
முதலில் அலுவலகம் வந்தவன் உள்ளே நுழைந்ததும் அவனது மொபைல் இசைத்தது. அழைப்பு வந்தது பிருந்தாவிடமிருந்து.
“சொல்லுங்க பிருந்தா”
“நீங்க சொன்ன லொகேசனுக்கு வந்துட்டேன் அட்சரன். கபே பக்கத்துல இருக்குற பெண்ட் ஹவுஸ் மாடல் பில்டிங் தானே?” என்று விசாரித்தாள்.
“ஆமாங்க. தி ஹெல்வட்டாஸ்னு சில்வர் லெட்டர்ஸ் இருக்கும்”
“ஹான்! பாத்துட்டேன். ஐ அம் கமிங்”
அடுத்த சில நிமிடங்களில் அவன் முன்னே நின்றிருந்தாள் அவள். அன்று கேலரியில் பார்த்தபோது அணிந்திருந்த அதே பாணி ஆடை அலங்காரத்துடன் வந்து நின்றவளைப் பார்த்ததும் தன்னையறியாமல் புன்னகைக்கத் தோன்றியது அட்சரனுக்கு.
“ஹாய் அட்சரன்! ஃப்ரெண்டின்டெ கல்யாணம் நல்லபடியாய் கழிஞ்ஞோ?” என்று தலையைச் சரித்துச் சினேகமாக விசாரித்தவளிடம் இன்முகத்தோடு பேச அவனுக்கு என்ன தயக்கம் இருந்துவிடப்போகிறது?
அவளை அமருமாறு இருக்கையைக் காட்டியவன் “இலக்கியா வந்ததும் உங்க புக் வேலைய ஆரம்பிச்சிடலாம். நான் எடிட் பண்ணச் சொன்ன இடமெல்லாம் மாத்திட்டிங்களா?”
“மாத்திட்டேன் அட்சரன். இதோ புது மேனுஸ்க்ரிப்ட். இது பழசு.”
இரண்டையும் அவனிடம் ஒப்படைத்தாள் பிருந்தா. ஏற்கெனவே எடிட் செய்யப்பட வேண்டிய இடங்கள் குறித்து தனது ஐபேடில் குறித்து வைத்திருந்தான். அதற்கான கோப்பு ஒன்றினைத் திறக்க முற்பட்டபோது அவனது விழிகளில் அனிச்சையாக வந்து சிக்கியது ‘வேதா கஜேந்திரன்’ என்று பெயரிடப்பட்ட கோப்பு.
அதில் வேதவதியின் கதையுடைய மேனுஸ்கிரிப்ட் இருந்தது. பெயரைப் படிக்கும்போதே நாக்கில் கசப்புச் சுவை பரவியது போல உணர்ந்தவனின் முகமும் அந்தக் கசப்பைக் காட்டிவிட்டது வெளிப்படையாக.
ஆண்களுக்கு அத்துணை எளிதில் உணர்வுகளை மறைத்துக்கொள்ளத் தெரியாது, மனதில் நினைப்பதை முகத்தில் காட்டி அடிக்கடி அவர்கள் மாட்டிக்கொள்வார்கள். அதையேதான் அட்சரனும் செய்தான் பிருந்தா இருக்கும்போது.
“என்னாச்சு அட்சரன்? எதுவும் பிரச்சனையா?”
அட்சரன் தன்னையே மானசீகமாகக் கடிந்துகொண்டான். தனது முகபாவனையை எதிரிலிருப்பவள் அறியும்வரை கட்டுப்படுத்தாமல் இருந்ததற்காக அல்ல. வேதா என்ற பெயரில் சட்டென மாறிப்போகும் அளவுக்குத் திடமற்ற மனதினனாக மாறிப்போனதற்காகத்தான்.
“அட்சரன்…” அவள் மீண்டும் அழைத்ததும் ஒன்றுமில்லை என்பது போலத் தோள்களைக் குலுக்கினான் அவன்.
“எதுவுமில்லாம முகத்துல உணர்வுகள் வந்து போகாது. நீங்க ஒரு ரைட்டரோட கண்ணை ஏமாத்த முடியாது” குறுஞ்சிரிப்போடு அவள் சொல்லவும்
“கொஞ்சம் பெர்ஷனல் ப்ராப்ளம். வேற ஒன்னுமில்ல” என்றான் சுருக்கமாக.
“அப்ப ப்ராப்ளமை சார்ட் அவுட் பண்ணிட்டு ஒர்க் லைஃபை பாருங்க. இல்லனா ரெண்டும் ஸ்தம்பிச்சிடும்”
அட்சரனுக்கு வேதவதியைப் பார்த்தபோதே தனது வாழ்க்கை ஸ்தம்பித்துப்போனதாகத் தோன்றியது அப்போது.
‘எதை எடுத்தாலும் அவளும் அவளது பெயரும் நினைவுக்கு வந்து தொலைக்கிறதே! வேண்டாமென வெறுத்து ஒதுக்க வேண்டியவர்களைத்தான் மனம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறது. காரணம், வெறுப்பதற்காகக் கூட மானசீகமாக நாம் அவர்களை நினைத்தாக வேண்டுமல்லவா!’
“ஒரு காபி குடிச்சா சரியாகிடும்னு நினைக்குறேன். உங்களுக்குக் காபி?”
“ஒய் நாட்?”
பேசியபடியே அருகிலிருக்கும் கபேயில் தனக்கும் பிருந்தாவுக்கும் சேர்த்து காபியை ஆர்டர் செய்தான். காபி சில நிமிடங்களில் அவனது அலுவலக அறைக்கே வந்து சேர்ந்தது. ஆளுக்கொரு பேப்பர் கோப்பைகளை எடுத்துக்கொண்டார்கள் இருவரும்.

“ரிலேட்டிவ் மேரேஜுக்காக வந்திருக்கேன் அட்சரன். பக்கா கேரளா கல்யாணம். வர்றீங்களா? உங்களுக்குச் சின்னதா ஒரு சேஞ்ச் கிடைக்கும்”
அட்சரனுக்குக் குடித்துக்கொண்டிருந்த காபி புரையேறியது.
‘ஒருமுறை திருமணத்துக்குச் சென்று அவதியுற்றது போதாதா? பூஞ்சிறகு முளைத்த சிறு பறவை உற்சாகமாகப் பறக்கத் துடித்தபோது தவறி முட்கள் அடர்ந்த செடி மீது விழுந்து தன்னைப் புண்ணாக்கிக் கொண்டது போன்ற நிலை அவனுடையது. முட்களில் இருந்து தன்னையும் தனது சமநிலையையும் காப்பாற்றி சென்னை வந்து சேர்ந்தவன் இன்னொரு முட்புதரில் போய் விழுவானா?’
“என்னாச்சு?” என்று பிருந்தா அவசரமாக டிஷ்யூவை எடுத்து நீட்ட, வாங்கிக் கொண்டவன் சட்டையில் சிதறிய காபித்துளியைத் துடைத்தான்.
“நத்திங் பிருந்தா! நாளைக்கு இலக்கியாவும் சஞ்சயும் வந்துடுவாங்க. உங்க புக் வேலைல நாங்க இறங்கிட்டோம்னா ஒரு மாசத்துக்கு எங்களால எங்கயும் நகர முடியாது” என்று பணிவாக மறுத்துவிட்டான்.
“இட்ஸ் ஓ.கே! இஃப் யூ ஆர் ஃப்ரீ, லெட் மீ நோ. வீ குட் கோ சம்வேர் (நீங்க ஓய்வா இருந்திங்கனா சொல்லுங்க. நாம எங்கயாச்சும் போகலாம்)”
கள்ளமற்ற நட்பு அழைப்புதான் இன்றைய நாகரிகத்தில். ஆனால் அட்சரனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு இடறல் மனதுக்குள். இருந்தாலும் முகத்திலடித்தாற்போல மறுக்காமல் சரியென்றான்.
பிருந்தா அங்கிருந்து கிளம்பியதும் பெருமூச்சுவிட்டான். சிகையைப் பின்னோக்கித் தள்ளிக் கோதிக்கொண்டான். வேதா கஜேந்திரன் என்ற பெயரே தன்னை இப்படிப் பாதிக்கிறது என்றால் அவளை நேரில் பார்த்தால் எப்படிச் சமாளிக்கப் போகிறான்?
மீண்டுமொரு முறை கோபம் கொண்டு சுற்றியுள்ளவர்களைத் தீய்த்தெடுக்க அவனுக்கே விருப்பமில்லை. ஆனாலும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வித்தையையும் அவன் கற்றுக்கொள்ளவில்லையே!
‘ஏன் அம்மாவும் அப்பாவும் என்னை இத்தகையச் சிக்கலானச் சூழலில் சிக்கவைக்கப் பார்க்கிறார்கள்?’
தவிப்போடு எண்ணிக்கொண்டவனுக்குப் பிறகு பிரெஞ்சு மொழிபெயர்ப்பு செய்வது தொடர்பான வேலைகளில் தன்னை மூழ்கடித்துக்கொண்டான். அன்று காலையும் சாப்பிடவில்லை. காபியோடு சரி. மதியம் சாப்பிடத் தோன்றவில்லை. மாலையில் வீடு வந்து சேர்ந்தவனுக்குத் தந்தையின் கார் தரிப்பிடத்தில் நிற்பதைப் பார்த்ததும் சுள்ளென்று கோபம் தலைக்கேறியது.
விறுவிறுவென வீட்டுக்குள் வந்தவன் ஹால் சோஃபாவில் சாவகாசமாகச் சாய்ந்து யாரோ சப்ளையரிடம் பேசிக்கொண்டிருந்த தந்தையைப் புருவம் சுழிக்க முறைத்தான்.
“அவளை அழைச்சிட்டு வந்திருக்கிங்களா?” கோபத்தை அடக்கிய குரலில் கேட்டான்.
‘யாரடா சிறுவன் நீ’ என்ற ரீதியில் கண்களைச் சுழற்றி அவனது பார்வையைத் தவிர்த்துக்கொண்டார் சதானந்தன். அவ்வளவுதான்! புகைந்துகொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதறியது.
“அம்மாஆஆஆ”
அவனது அலறலில் ஓடி வந்தார் ராஜேஸ்வரி.
“ஏன் அச்சு வீடே இடியுற மாதிரி கத்துற?”
“என் வாழ்க்கைய அழிக்குற மாதிரி நீங்க முடிவெடுத்தா நான் கத்தாம என்ன பண்ணணும்?”
“உன் வாழ்க்கை என்னடா ஆச்சு? எதுவும் குடி முழுகல. அமைதியா உக்காரு. காபி கொண்டு வர்றேன்.”
“யாருக்கு வேணும் காபி? எங்க அவ?”
“அவ தான் வேணுமாடா?”
“ம்மாஆஆ”
பற்களை நறநறத்தவனின் தாடை இறுக ராஜேஸ்வரியைப் பார்த்த சதானந்தன் ‘இன்று கலவரம் நிச்சயம்’ என்று கைகளால் சைகை செய்துவிட்டு எழுந்தார்.
“நான் சூப்பர் மார்க்கெட்டுக்குக் கிளம்புறேன் ராஜி. நைட் வர லேட் ஆகும்”
‘நான் ஒருவன் கத்திக்கொண்டிருக்கிறேன்! இவர் சாவகாசமாகக் கிளம்புகிறார்’
நெஞ்சு வெடிக்கும் அளவுக்குக் கோபம் அட்சரனுக்கு.
அதே கோபத்தோடு “வேதா! ஏய் வேதா! எங்கடி ஒளிஞ்சிருக்குற? இப்ப நீ என் கண்ணு முன்னாடி வரல, நடக்குறதே வேற” என்று தொண்டை நரம்புகள் புடைக்கக் கத்தினான்.
அதே நேரம் அவனது அறையில் இருக்கும் சோஃபாவில் அமர்ந்திருந்த வேதவதிக்கோ தூக்கிவாரிப்போட்டது. எவ்வளவு நேரம் அவன் பேசுவது காதில் விழாத மாதிரி நடிப்பது? வேறு வழியின்றி எழுந்தவள் தயக்கத்தோடு அவனது அறையிலிருந்து வெளியேறி மாடி வராண்டாவுக்கு வந்தாள். அதற்கு மேல் நடக்க பயம்.
சரியாக அந்நேரத்தில் அண்ணாந்து பார்த்த அட்சரனின் விழிகளில் சிக்கிக்கொண்டாள். அவனது கோப முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை அவளுக்கு. கண்களை மூடிக்கொள்ளலாமா என்று எண்ணியபோதே “அட மகாராணி! அங்க நின்னு தான் பாப்பிங்களா? வாங்க! கீழ இறங்கி வாங்க” என்று போலியான மரியாதையுடன் அவன் அழைக்க, வேறு வழியின்றி இறங்கி வந்தாள் வேதவதி.
சரியாக அவனுக்கு எதிரே வந்து நின்றதும் ‘அவர்கள் பேசிக்கொள்ளட்டும்’ என ராஜேஸ்வரி சமையலறைக்குச் சென்றுவிட, போர்க்களத்தில் தனித்துவிடப்பட்ட அப்பாவி குழந்தையின் நிலை வேதவதிக்கு.
முத்து முத்தாய் நெற்றியில் வியர்வை துளிர்க்கச் சுடிதார் துப்பட்டாவின் நுனியிலிருந்த டேஜல் ஒன்றை திருகியபடி பதற்றத்தோடும் பயத்தோடும் அவள் நின்ற கோலம் அட்சரனைத் துளி கூட அசைக்கவில்லை.
“வாங்க! ட்ராவல் எல்லாம் ஸ்மூத்தா இருந்துச்சா?” தலை சாய்த்துக் கண்கள் பளபளக்க அவன் கேட்டதும் பாவம் குழம்பிப்போனாள் அவள்.

“ஹான்! நல்லா இருந்துச்சு” சின்னக்குரலில் சொல்லி தலையாட்டவும், “அறைஞ்சேன்னா… என்ன நக்கலாடி உனக்கு?” என்று அவன் நெருங்கவும் தன்னையறியாமல் “அத்தை” என்று கத்திவிட்டாள் வேதவதி.
அடுத்த நொடி “அச்சு” என்று அதட்டலோடு மீண்டும் அங்கே வந்து நின்றார் ராஜேஸ்வரி. வேதவதி ஓடிப்போய் அவரருகே நின்று கொண்டாள்.
“இவளைப் பாக்கப் பாக்க எனக்கு வெறுப்பா வருது. என்னை வெறுப்போட திரிய வைக்கணும்னு அழைச்சிட்டு வந்திங்களா?” என்று அவரிடமே எகிறினான் அட்சரன்.
ராஜேஸ்வரி அவனைப் போல நிதானமிழக்கவில்லை. மருமகளின் கழுத்திலிருந்த தாலி கோர்த்த முத்துமாலையைத் தொட்டுக் காட்டினார்.
“இதைக் கடமைக்காக இவ கழுத்துல போடச் சொல்லல. இவளை அப்பிடியே விட்டுட்டு வந்தா அந்தப் பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நம்ம குடும்பத்தைச் சும்மா விடாது. மனுசன் பாவ புண்ணியத்துக்கு அஞ்சணும் அச்சு”
“பாவம், புண்ணியம் – மை ஃபூட்! எனக்கு எதைப் பத்தியும் கவலை இல்ல. இவ இங்க இருக்கக்கூடாது.”
“இது என் புருசன் உழைச்சு அவரோட சொந்தச் சம்பாத்தியத்துல கட்டுன வீடு. எங்க மருமகள் இங்க இருக்குறதுக்கு முழு உரிமை இருக்கு”
“மருமகளா? ம்மா! நீங்க கெட்ட வார்த்தை சொல்லி கூட என்னைத் திட்டுங்க. இவளை உங்க மருமகள்னு சொல்லாதிங்க.” என்றவன் தனது அன்னையின் புடவை முந்தானையைப் பிடித்தபடி நின்ற வேதவதியிடம் வந்தான்.
“ஏய்! ஒழுங்கா வீட்டை விட்டு வெளிய போடி. உன்னோட கிராமத்துக்கே ஓடிப் போயிடு. போறதுக்கு முன்னாடி இதை…” என்றவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவளது கழுத்தில் அவன் போட்டுவிட்ட முத்துமாலையைக் கழற்றினான்.
“அச்சு” என்றபடி ராஜேஸ்வரி ஏதோ சொல்லும் முன்னர் அதைத் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டான். அன்னையைக் கவனிக்காமல் அவனது விழிகள் வேதவதியை மட்டுமே நோட்டமிட்டன.
“இங்க பாரு! நீ என்ன ஐடியாவோட இங்க வந்திருக்கியோ அது நடக்காது. நான் போட்ட செயினை நானே கழட்டிட்டேன். கிளம்பு”
வேதவதிக்கு என்ன செய்வதெனப் புரியாத நிலை. ராஜேஸ்வரியைப் பார்த்தவள் “நான் எங்க வீட்டுக்குப் போயிடட்டுமா?” என்று கேட்க, அவருக்கோ முகம் மாறிப்போனது.
அட்சரனின் இதழில் வெற்றிப்புன்னகை! தனது வெறுப்பை அவள் மனதில் ஸ்திரமாகப் பதியவைத்துவிட்ட திருப்தியும்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

