“ஹாய்டா அச்சு! சீக்கிரமே வந்துட்ட?”
“ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க வர்றேன்.”
“காலைல ஏர்போர்ட்ல என்னடா வேலை உனக்கு?” என்றபடி அலுவலக அறைக்குள் இருந்து குரல் கொடுத்தாள் இலக்கியா.
“அருள் வந்திருக்கான்.”
அவன் பதில் சொன்னதும் இருவரும் அவனிடம் வந்துவிட்டார்கள்.

“என்னடா சொல்லுற? எப்ப வந்தான்? உன்கிட்ட மட்டும் சொன்னானா? அப்ப நாங்கல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் யாரோதானே?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இருவரும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுக்கவும், அமைதியாயப் பார்த்துவிட்டு சோஃபாவில் சரிந்தான் அட்சரன்.
“அவன் ஏதோ பிளான் வச்சிருக்குறதா சொன்னான். சர்ப்ரைஸா இருக்கட்டும்னு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு பிராமிஸ் வாங்கிட்டான். அப்படி இருந்தும் வானதி எப்படியோ மோப்பம் பிடிச்சு ஏர்போர்ட் வரைக்கும் வந்துட்டா. சரி! அதை விடுங்க. நம்ம வேலையை கவனிக்கலாம். நேத்து ஸ்ரீமயா கிட்ட இருந்து ஏதோ கதையோட மேனுஸ்கிரிப்ட் வந்ததா சொன்னியே? அதைக் குடு இலக்கியா. நான் படிக்கணும்.”
இதற்கு மேல் அரட்டைக்கு இடமில்லை என்பதால் இருவரும் அவரவர் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்கள்.
சஞ்சய் அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் நிர்வாகி. அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் எழுத்தாளர்களைச் சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்துவது, அவர்களது புத்தகங்கள் வெளியாகும்போது பல்வேறு ஊடகங்கள் மூலம் அதை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது அவனது வேலை.
இலக்கியா அந்நிறுவனத்தின் தலைமை எடிட்டர். எழுத்தாளர்கள் அனைவரும் நறுக்குத் தெறித்தாற்போல எழுத மாட்டார்கள். சில கதைகளில் தேவையற்ற பகுதிகள் இருக்கலாம்; வாக்கிய அமைப்பில் குளறுபடிகள் வரலாம். அதையெல்லாம் சரி செய்பவள் அவள். எழுத்தாளர்களுக்காகப் பெரிய பதிப்பகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கான எழுத்துலகத்தை விரிவாக்குவது அட்சரனின் பணி.
மூவருக்குமே இலக்கியம் சார்ந்த ரசனை இருப்பதால் இத்தொழிலை மனப்பூர்வமாக நடத்தி வருகிறார்கள். அட்சரன் அலுவலக அறையில் அமரவும் இலக்கியா கதையின் அச்சுப்பிரதியை அவனிடம் கொடுத்தாள்.
“தேவையில்லாம நிறைய வளவளகொளகொளானு இருக்கு அச்சு. தேறும்னு தோணல.”
அவள் சொல்லிவிட்டுப் போனதும் அச்சுப்பிரதியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான் அட்சரன். படிக்கப் படிக்க அவனுக்கே திணறல்தான். இலக்கிய முகவர் என்பது அவனது தொழிலாக இருக்கலாம்; ஆனால் அடிப்படையில் அவன் ஒரு வாசகன். அவனுக்குள் இருக்கும் வாசகனைத் திருப்திப்படுத்தாத எந்தக் கதையும் அவனது இலக்கிய முகவர் அவதாரத்தைச் சந்திக்க முடியாது.
ஏனெனில் கதைகள் எழுதப்படுவதே வாசகர்களுக்காகத்தானே! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற ரீதியில், வாசகர்களுள் ஒருவனையே ஒரு கதை திருப்திப்படுத்தாவிட்டால் அதைச் சந்தையில் பெரிய நாவலாக வெளியிட்டு விளம்பரப்படுத்துவதில் என்ன பயன்?
ஸ்ரீமயா – அதுதான் நாவலாசிரியையின் பெயர். ஃபேண்டசி நாவல் என்று குறிப்பிட்டு ஒரு வருடத்தை அதில் செலவழித்திருக்கிறாளாம். ஆனால் அந்தக் கதையில் ஃபேண்டசி உலகத்திற்கான எவ்வித விசுவலைசேசனும் இல்லை. வெறும் எழுத்துக் குவியலாக மட்டுமே அந்தக் கதை அட்சரனின் பார்வைக்குத் தெரிந்தது.
ஃபேண்டசியின் பெரிய பலமே மாயாஜால உலகத்தை எழுத்தால் உருவாக்கி, அதை வாசகனின் கண் முன்னே கொண்டு வருவதுதான். ஆனால் ஸ்ரீமயா அதில் சறுக்கிவிட்டாள். அந்த மாயாஜால உலகத்தைக் கட்டமைப்பதற்காக வாக்கியங்களைச் சரிவரக் கோர்க்காமல் தடுமாறியிருந்தாள். கிட்டத்தட்ட எட்டாம் வகுப்பு மாணவியின் கிறுக்கல் போல என்று மானசீகமாகச் சொல்லிக்கொண்டவன், பொறுமையை வரவழைத்து நூற்று எண்பது பக்கங்களை வாசித்து முடித்தான்.
முடித்தவன் அவளது கதையின் மென்பிரதியைத் தனது மடிக்கணினியில் இருக்கும் ‘டர்னிட்டின்’ (Turnitin) என்ற மென்பொருளில் பதிவேற்றம் செய்து பார்த்தான். அது பிளேகியரிசம் எனப்படும் கதை/ஆவணத் திருட்டைக் கண்டறியும் மென்பொருள். அதில் ஸ்ரீமயாவின் நாவல் நாற்பது சதவிகிதம் ஒரு ஆங்கில ஃபேண்டசி நாவலைத் தழுவி எழுதப்பட்டிருப்பதாக முடிவு வரவும், அந்த ரிப்போர்ட்டைப் பிரதி எடுத்துக்கொண்டான். தாமதிக்காமல் அச்சுப்பிரதியில் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்ரீமயாவின் மொபைல் எண்ணுக்கு அழைத்தான்.
“நான் அட்சரன் பேசுறேன். உங்க கதையை வாசிச்சேன்.”
“வாசிச்சீங்களா சார்? உங்களுக்கு அது பிடிச்சிருக்கா? நீங்க ஃபேண்டசிய விரும்பி படிப்பீங்கனு ராஜி ஆண்டி சொன்னாங்க. என்னோட ஒரு வருஷ கனவு சார் இந்தக் கதை.” மூச்சு விடாமல் பேசினாள் ஸ்ரீமயா.

“வெயிட் வெயிட்! முதல்ல நான் பேச வர்றதைக் கேளுங்க” அவன் இடைமறித்து அழுத்தமாயச் சொல்லவும் அவள் அமைதியானாள்.
“அம்மாவோட பிரண்ட் டாட்டர்ங்கிறதால உங்க கதையை நான் அனுப்பச் சொல்லலை. நிஜமாவே புது எழுத்தாளர்களை அடையாளம் கண்டுபிடிச்சு அவங்களுக்கான அங்கீகாரத்தை உருவாக்கணும்ங்கிறது எங்க கம்பெனியோட நோக்கம். அதுக்காகத்தான் அனுப்பச் சொன்னேன். உங்க கதையைப் படிச்சேன். ஒரு ஃபேண்டசி நாவலுக்கான எந்த அடிப்படை தகுதியும் உங்க கதைக்கு இல்ல ஸ்ரீமயா. உங்ககிட்ட கடுமையான கற்பனை வறட்சி இருக்கு. டிராகன்களை வச்சு, மந்திரக்கோல்களை வச்சு ஏகப்பட்ட ஹாலிவுட் மூவீஸ் வந்தாச்சு. அதையே உங்க கதையிலயும் படிக்கிறப்ப சலிப்பு வருது. உங்க மூளையில கற்பனைல உருவான ஃபேண்டசி உலகமா இது எனக்குத் தோணல. நிறைய ஹாலிவுட் படங்கள், ஃபேண்டசி சீரீஸ்களோட வாடை ஹெவியா அடிக்குது.”
“சார்… அது… நான் இன்ஸ்பிரேஷன்…”
“இன்ஸ்பிரேஷன்! வாட் அ ஃப..” என ஆரம்பித்தவன் “வாட் த ஹெல்? ஹாக்வார்ட்ஸ்ங்கிற உலகத்தை உருவாக்கி அதுல ஹாரி பாட்டரை உலாவ விட்டவங்க ஜே.கே.ரௌலிங். இன்ஸ்பிரேஷன்ங்கிற பேருல அதே ஹாக்வார்ட்ஸை வச்சு நீங்க ஒரு கதை எழுதுறீங்கனு வைங்க, அதுக்குப் பேர் காப்பி. பிளேகியரிசம். உங்க நாவல்ல நிறைய ஃபேண்டசி படங்களோட காட்சி அப்பட்டமா இருக்கும்மா. இது வெளிவந்துச்சுனா சட்டப்படி பெரிய சிக்கலாகும். நீங்க முப்பதாவது அத்தியாயத்துல நாலாவது பேராகிராப்ல எழுதுனது அப்படியே லார்ட் ஆப் த ரிங்ஸ் சீரீஸ் புக்ல வர்ற வரிகள். உங்க கதையை என் ஆபீஸ் சாப்ட்வேர்ல போட்டுப் பார்த்தா நாற்பது சதவிகிதம் பிளேகியரிசம்னு ரிப்போர்ட் தருது.”
ஸ்ரீமயா ஏதோ சொல்ல வர, அதற்குள் அவசரமாய் இடையிட்டான் அட்சரன்.
“ஹெல்வட்டாஸ் ஒரு பிராண்ட். இங்க இருந்து ஒரு பதிப்பகத்துக்கு ஒரு கதை போகுதுனா அதுல கற்பனை ரத்தமும் சதையுமா இருக்கணும். உங்க கதை வெறும் காகிதக் குப்பை. இதை படிச்சு என் நேரத்தை வீணாக்குனதுக்கு நீங்க எனக்கு ஸ்பெஷல் சார்ஜ் தரணும்.”
அதிகாரமாய், அலட்சியமாய் ‘இதுதான் உன் கதையின் லட்சணம்’ என அவன் மொழிந்த விதத்தில் கட்டாயம் ஸ்ரீமயாவுக்கு மறுமுனையில் மனம் உடைந்திருக்கும். தமிழில் வாக்கியங்களை கோர்த்து எழுத வருகிறது என்பதால் மட்டும் ஒருவர் எழுத்தாளர் ஆகிவிட முடியாது என்ற உண்மையைத் தனது கறார் வார்த்தைகளால் கசப்பு மருந்து போல அவளுக்குப் புகட்டிவிட்டான் அட்சரன்.
“சார் பெரிய பப்ளிகேஷன் கூட வேண்டாம். சின்னதா…”
“லுக்! சென்னைல ஏகப்பட்ட பப்ளிஷிங் ஹவுஸ் இருக்கு. நீங்களே உங்க மேனுஸ்கிரிப்டை அனுப்பிப் பாருங்க. ஆனா அங்கயும் நான் சொன்ன பதிலைத்தான் சொல்லுவாங்க. ஏன்னா உங்களால கற்பனை பண்ண முடியல; திருடத்தான் முடியுது. மேனுஸ்கிரிப்டை அம்மா கிட்ட குடுத்துடுறேன். வாங்கிக்கோங்க.”
மொபைல் அழைப்பைத் துண்டித்துவிட்டு வலித்த தலையைத் தடவிக்கொண்டான் அட்சரன். அவன் உரத்த குரலில் கடுமையாயப் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த சஞ்சய் உள்ளே வந்தபோது, அவனது கரத்தில் காபி கோப்பை இருந்தது.
“ரிலாக்ஸ் எம்.டி சார்! காபி குடிங்க.”
தோளில் தட்டியவனிடம் “குப்பை மாதிரி ஒரு கதை. ஷப்பா! கண்ணைக் கட்டுது எனக்கு. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆன மாதிரி இப்ப மொபைலும் லேப்டாப்பும் கையில வச்சிருக்குறவனெல்லாம் எழுத வந்துடுறான். ஐம்பது படத்தைப் பாத்து ஐம்பத்தொன்னாவதா கதையும் எழுதிடுறான். மூணு வருஷமா ஆன்லைன்ல எழுதுறாளாம் இந்தப் பொண்ணு. அமேசான்ல பெஸ்ட்செல்லர் வேற. இந்த ஆன்லைன் எழுத்தாளர்கள் தமிழ் வெகுஜன இலக்கியத்துக்கு வந்த சாபக்கேடு” என்று கடுகடுத்தபடியே காபியைக் குடித்து முடித்தான் அட்சரன்.
ஸ்ரீமயாவின் மேனுஸ்கிரிப்டின் கடைசிப் பக்கத்தில் தனது மென்பொருளில் இருந்து எடுத்த பிரதியை இணைத்து வைத்தான். அந்த மேனுஸ்கிரிப்டின் முன்பக்கத்தில் ‘REJECTED’ என்று சிவப்பு மையால் அழுத்தமாய் முத்திரையிட்டான். அந்த முத்திரை அவனது தொழிலும் வாசிப்பிலும் அவனுக்கு இருக்கும் சமரசமற்ற தன்மையைப் பறைசாற்றியது.

அட்சரனுடைய தொழில் உலகம் தர்க்கங்களால் (LOGIC) ஆனது. அதில் ‘சரி’, ‘தவறு’ இந்த இரண்டு மட்டும்தான் முடிவுகளாக வரும். அவனது மனமோ உறவுகளின் சிக்கலானப் பிணைப்பைத் தள்ளி நின்று பார்த்தே பழகிப்போனது. காதலைக் கதைகளில் வரும் கற்பனை உணர்வாகவும், ஹார்மோன்களின் விபத்தாகவும் மட்டுமே பார்ப்பவன் அவன். காதல் சார்ந்த உறவையும் குடும்பம் என்ற அமைப்பையும் வீண் சுமையாகக் கருதி முப்பொழுதிலும் இலக்கிய வாசனையோடு வாழும் ‘மிஸ்டர் பெர்பெக்ட்’ அவன்.
ஆனால், வறண்ட நிலத்தில் பெய்யக் காத்திருக்கும் மாமழை போல ஒரு புதிய எழுத்துப்புயல் அவனது தர்க்கங்களை உடைக்க எங்கோ உருவாகிக்கொண்டிருந்தது. ஆன்லைன் குப்பை என்று எதை ஒதுக்கினானோ, அந்தக் களத்திலிருந்து வீசப்போகும் தென்றலொன்று அவனது கொள்கைகளைப் புரட்டிப்போட காத்துக்கொண்டிருந்தது.
ஹார்மோனின் விபத்தாய் அவன் எண்ணும் காதல், எழுதுகோலைத் துணையாய்க் கொண்டு இயங்கும் பெண்ணொருத்தியின் ரூபத்தில் அவனை உருக்கி அவளுக்காய் ஏங்க வைக்கச் சங்கல்பம் செய்து கொண்டிருந்தது. இந்த இறுமாப்பையும் இறுக்கத்தையும் உடைக்கவல்லவளான வேதவதி, பின்னாட்களில் அட்சரனின் வேதாவாக மாறப்போகிறவள், தனது கற்பனை உலகப் பயணத்தைக் கதைகளின் அத்தியாயமாக மடிக்கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள் தேன்மலை எனும் மலைக்கிராமத்தில்! வானதியின் திருமணம் நடைபெறப்போகும் அதே மலைக்கிராமத்தில்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

