சென்னை…
அண்ணா நகரின் அமைதியான ஒரு பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு. அதன் ஒரு அறையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் அருகில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தார் ஒரு முதிய வயது பெண்மணி.
“சரி கௌசி! நீ எதும் கவலைப்படாத. அவன் அடம் பிடிக்காம சமத்தாதான் இருக்கான். என் செல்லம் எனக்கு இன்னைக்கு ஏன் கால் பண்ணவே இல்ல? சரி! நானே கேட்டுக்கிறேன். குட் நைட்” என்று போனை வைத்தவருக்கு வயது 65க்கு மேல் இருக்கும்.
உறங்கிக் கொண்டிருக்கும் பேரனை வாஞ்சையுடன் பார்த்தவர் அவனது அறையை மூடிவிட்டுத் தன் அறைக்குச் சென்றார். அங்கே இருந்த போட்டோவைப் பார்த்தார்.
அதில் அவரது மருமகள் பேரனைக் கையில் சுமந்திருக்க மகனும் பேத்தியும் கைகோர்த்தபடி நிற்க அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். பேத்தியின் முகத்தை வருடியவர் “வாயாடி! நான் உன்னைப் பாத்து எவ்ளோ நாளாச்சு. சீக்கிரமா உன்னையும் மாப்பிள்ளையையும் பாக்க நானே வர்றேன்” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடச் சென்றவர் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டதும் யார் இந்த நேரத்தில் என்று மெதுவாக நடந்து வந்து கதவைத் திறந்தார்.
அங்கே நின்றிருந்தவளை அந்நேரத்தில் அவர் அங்கே எதிர்பார்க்கவில்லை. இப்போதுதானே அவளைப் பற்றி நினைத்தோம், அதற்குள் அவளே வந்து நிற்க அவர் திகைத்தவாறே நின்றார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கதவு திறந்ததும் உள்ளே வந்தவளின் முகத்தைப் பார்த்தவருக்கு 11 வருடங்களுக்கு முன் தன் மருமகளுடன் அவள் தங்களது பக்கத்துவீட்டில் குடிபுகுந்தபோது இருந்த அதே முகபாவம் தென்பட “என்னாச்சு என் குட்டிமாக்கு?” என்று கேட்க அவரின் பரிவான குரலில் அவள் இவ்வளவு நேரம் இருந்த கோபம் மாயமாக “அம்பு!” என்று அவரின் மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள்.
பொதுவாக அவள் அழுவது சில அரிதான சந்தர்ப்பங்களில்தான். முதல் முறையாக அவளது பெற்றோரின் மரணத்துக்காக அழுதாள் என்று மருமகள் சொல்லிக் கேட்டிருக்கிறார்.
பின்னர் தனது பேரன் பிறந்து அவனைப் பார்க்க வருகையில் அவனைக் கையில் தாங்கிய நொடியில் சந்தோஷத்தில் அவள் அழ ஆரம்பித்ததை அவரே கண்கூடாகப் பார்த்திருக்கிறார். எதற்கும் கலங்காத தன்னுடைய பேத்தி இன்று இப்படி ஓயாமல் அழும் அளவுக்கு என்னதான் நடந்திருக்கும் என்று யோசித்தவர் அவளைச் சமாதானப்படுத்த மெதுவாகக் கண்ணீரைத் துடைத்தவள் “அஜ்ஜூ தூங்கிட்டானா அம்பு?” என்று கேட்கவும் அவர் ஆமாம் என்று தலையாட்டினார்.
“நீயும் போய்த் தூங்கு அவந்திகா” என்று சொன்னவரை ஏறிட்டுப் பார்த்தவள் “ம்ம்.. தூங்கத்தான் போறேன்! அம்பு யாரு என்னைக் கேட்டுக் கால் பண்ணாலும் நான் இங்க இருக்கிறதச் சொல்லாத. அவங்க யாரையும் நான் மறுபடியும் பாக்கவோ பேசவோ விரும்பல. உனக்குத் தெரியும்தான என்னைப் பத்தி” என்று சொல்ல அவரும் “சரி வாயாடி! நான் சொல்ல மாட்டேன். நீ போய் நல்லாத் தூங்கு… மத்த விஷயத்தை நாளைக்குப் பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவளது அறைக்கு அவளை அனுப்பிவிட்டு அவரும் உறங்கச் சென்றார்.
அதே நேரம் கபூர் குடும்பத்தில் அவந்திகா கிளம்பிச் சென்றதும் அனைவரும் குழப்பத்தில் ஹாலில் குழுமியிருந்தனர்.
தொப்பென்று விழுந்த அந்த சூட்கேஸைப் பார்த்ததும் சிலையானாள் தியா..
அங்கே நின்ற ராகவின் கண்ணில் தெரிந்த கொலைவெறியில் வீட்டில் உள்ள அனைவரும் உறைந்து போய் நின்றனர். ராதிகாவும் பிரியாவும் வீணாவை முறைக்க அவரோ குற்றவுணர்ச்சியில் தலை குனிந்தார்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்சி வந்துடும். உன்னோட லக்கேஜை எடுத்துட்டுப் போய்ட்டே இருக்கணும். அத விட்டுட்டு இன்னும் ஏதாச்சும் டிராமா கிரியேட் பண்ணா நான் உன்னைக் கொல்லக் கூடத் தயங்க மாட்டேன்” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன் வாசலில் டாக்சி சத்தம் கேட்டதும் லக்கேஜைத் தூக்கிக்கொண்டு தியா சென்றதைப் பார்த்துவிட்டுத்தான் தன் அறைக்குச் சென்றான்.
அங்கே அவர்களின் ரிசப்ஷன் போட்டோ அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது. அதன் அருகில் வந்தவன் “கொஞ்சம் நேரம் நான் சொல்றதக் கேக்கக் கூட உன்னால முடியாதா? ப்ளீஸ் சீக்கிரமா வந்துடு” என்று வலியுடன் கூறிக்கொண்டிருக்கையில் அறை வாசலில் நின்றுகொண்டிருந்தவர்கள் அவனை வருத்தத்தோடு பார்த்துக்கொண்டே உள்ளே வந்தனர்.
அவர்களைக் கண்டதும் முகத்தைச் சீராக்கியவன் சிரிக்க முயற்சி செய்து தோற்றான். ராதிகாவால் தன் மகனின் இந்நிலையைப் பார்க்க இயலவில்லை.
சோஃபாவில் அமர்ந்தவரின் மடியில் படுத்துக்கொண்டவன் “மா! நான் ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் இன்னைக்கு வெளையாட்டா அவந்திகாகிட்ட சொன்ன பொய்தான் அவளோட இந்த டிசிஷனுக்கு நானும் ஒரு காரணம்தான். இப்போ நான் என்ன பண்ணி அவளைச் சமாதானப்படுத்தப் போறேன்?” என்று கேள்வியுடன் பார்த்தவனை எப்படிச் சமாதானம் செய்வது என்றே அவருக்குப் புரியவில்லை.
அவனைப் பார்க்கும்போது பொம்மையைத் தொலைத்த சிறுவன் போலத் தோன்றவும் அவனது தலையை வருடிக்கொடுத்தவர் “அவளால உன்கூட சண்டை போடாம இருக்க முடியாது. நாளைக்கு காலைலேயே வந்து நின்னா கூடா ஆச்சரியம் இல்ல. நீ வேணும்னா பாரு” என்று மகனைத் தேற்றியபடியே அவருக்கும் தைரியம் சொல்லிக் கொண்டார்.
அவர் சென்றதும் வருணும் உஷாவும் அவனிடம் அவந்திகாவுக்குப் போன் பண்ணிப் பார்க்குமாறு கூற அவளுக்குக் கால் போகவே இல்லை.
“ராகவ் லவ் பத்தி நீ என்ன நெனைக்கிற?” என்று கேட்டவளின் முகம் அவனறியாமல் அவன் கண் முன் தோன்றி அவனை இம்சை செய்ய அவனது உதடுகள் உச்சரித்த வார்த்தை “அவந்திகா”
அவளது கேள்விக்குப் பதிலும் அதுவே என்று அக்கணம் அவன் மனதில் தோன்றியது.
அவள் நினைவில் இதழ்கள் விரிய “ஃபர்ஸ்ட் நீ இப்பிடிச் சிரிக்காத! எனக்கு எல்லாமே மறந்து போயிடுது மேன்” என்ற அவளின் புகாரும் நினைவுக்கு வந்தது..
மனதைத் தேற்றியபடி உறங்கச் சென்றவனுக்கு அவன் அருகில் படுக்கை காலியாக இருப்பதைப் பார்த்தவனுக்குத் தூக்கம் கூடத் தூரச் சென்றது…
காலையில் எழுந்ததும் முதல் வேலையாகக் கௌசல்யாவுக்குக் கால் செய்தான் ராகவ். நடந்ததைப் பொறுமையாக விளக்கியவன் அவந்திகா வீட்டை விட்டுச் சென்றதை இறுதியாகத்தான் கூறினான்.
“என்ன? ஆனா என் பொண்ணு இங்க வரலயே! ராகவ் எனக்கு எதோ பயமா இருக்கு… ராத்திரி முழுக்க என் பொண்ணு எங்க இருந்தாளோ?” என்று அவர் பதறத் தொடங்கவும் அவரை அமைதிப்படுத்துவதற்குள் ராகவ்தான் திண்டாடிப் போனான்.
“கௌசிமா! ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க! என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல. அவந்திகாவ நான் உங்ககிட்ட பத்திரமாக் கூட்டிட்டு வர்றேன்” என்று நம்பிக்கை கொடுத்தவனுக்கு அவளை எங்கே தேடுவது என்றே தெரியவில்லை.
உஷா மட்டும் கொஞ்ச நேரம் யோசித்தவள் அவனிடம் ஏதோ சொல்ல அவனது முகம் தெளிவடைந்தது.
“நீங்க சொன்ன மாதிரி இருந்தா ரொம்பச் சந்தோஷம் பாபி” என்று சொன்னவன் தன் அறைக்குச் சென்றான்.
காற்றில் அசைந்தாடிய அவர்களின் ரிசப்ஷன் போட்டோ அவனை வரவேற்பது போலத் தோன்ற அதன் அருகில் சென்று அவந்திகாவின் சிரித்த முகத்தை வருடிக்கொடுத்தான்.
“ஜான்சி ராணி! என்னை விட்டு உன்னால எவ்ளோ தூரம்தான் போக முடியும்? ஐ மிஸ் யுவர் அய்ஸ். எஸ்பெஷலி தட் நிக் நேம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பத் தயாரானான்.
அதே நேரம் அவந்திகா சென்னையில் பாட்டி வீட்டில் தூக்கம் கலைந்தவள் அம்புஜாவிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று யாரோ வரும் அரவம் கேட்க ஃப்ரிட்ஜின் பின்னே ஒளிந்துகொண்டாள் அவள்.
“அம்பு! என்னோட டூத்ப்ரஷ் எங்க” என்று தூக்கக் கலக்கத்துடன் கேட்டுக்கொண்டே வந்த ஐந்து வயது சிறுவனின் கண்களை மூடினாள் அவந்திகா. அம்புஜாவிடம் வாயில் விரல் வைத்து “மூச்” என்று சொல்லவும் அவரும் அமைதியானார்.
“யாருப்பா அது? கண்ணைத் தொறந்துவிடலனா நான் எங்க மம்மிகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்” என்று அவன் மிரட்டவும் கையை எடுத்தவள் அவன் முன்னே சென்று நிற்கவும் அர்ஜூன் வாயைப் பிளந்தான்.
“அஜ்ஜு குட்டி! என்னைப் போயா நீ மாட்டி விடப் போற?” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவளைக் கட்டிக்கொண்டான் அவளது அஜ்ஜூ.
“ஐ மிஸ் யூ சோ மச் அந்து” என்று சொல்லவும் அவனை விலக்கியவள் “டேய்! உன்னை எத்தனை தடவை சொல்லிருக்கேன்? அந்து பொந்துனு கூப்டாதனு. நிக் நேம் வைக்கிறதுல உன்னோட அக்கா குயின். ஆனா நீ இப்பிடி மொக்கையா நேம் வைக்கிற?” என்று அவனுடன் சண்டைப் பிடித்தாள்.
“அதுல்லாம் எனக்குத் தெரியாது. நான் உன்னை அந்துனுதான் கூப்பிடுவேன்..” என்று அவன் பிடிவாதம் பிடிக்கவும் “சரி கூப்பிட்டுட்டுப் போ” என்று பெரிய மனசுடன் அனுமதித்தாள்.
அவர்களின் சண்டையைப் பார்த்துச் சிரித்த அம்பு “ஏய் வாயாடி! மாப்பிள்ளை எப்போ வர்றாரு” என்று கேட்க அவந்திகா காளி சொரூபத்துக்குச் சென்றாள்.
“இப்போ எதுக்கு அம்பு அவனை நியாபகப்படுத்துற? இந்நேரம் அவன் ஆபிஸ் கெளம்பிப் போயிருப்பான். அப்புறம் மாப்பிள்ளை கீப்பிள்ளைன்னு சொன்னா நான் பொல்லாதவளா மாறிடுவேன் பாத்துக்கோ” என்று கடுப்பாக உரைக்க “அட போடி! இப்போ மட்டும் நீ அப்பிடியே ரொம்ப நல்லவளாவா இருக்க? இந்த வாய் இருக்கே! இதை எப்பிடித்தான் மாப்பிள்ள சமாளிக்கிறாரோ?” என்று அங்கலாய்த்தார் அம்புஜா.
அவரை அலட்சியமாகப் பார்த்த அவந்திகா “அம்பு! அவனைப் பத்தி உனக்குத் தெரியல. அவன் பேசி அடுத்தவங்களை மெஸ்மரைஸ் பண்ணுறதுல கிங்! இதுல என்னையச் சமாளிக்கிறதா அவனுக்குக் கஷ்டம்?” என்று கேலி செய்ய அம்புஜா “சொல்லாமக் கொள்ளாமக் கல்யாணம்தான் பண்ணிகிட்ட! எங்க ரெண்டு பேருகிட்டயும் மாப்பிள்ள போட்டோவதானே காட்டுன.. என்னிக்காச்சும் அவரைக் கண்ணுல காட்டிருக்கியா?” என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.
அவந்திகா உதட்டைச் சுழித்தபடி “அப்போ அவன் போட்டோவ நீ என்ன உன்னோட காது வழியாவா பாத்த?” என்று கேட்கவே அவர் “இதுக்கு ஒன்னும் குறை இல்ல.. கௌசல்யா உன்னைத் திட்டுறதுல ஒரு தப்பும் கெடையாது” என்று வெட்டிக்கொண்டார்.
“அட போ அம்பு! அதுக்குலாம் நான் என்னிக்காச்சும் கவலைப்பட்டிருக்கேனா? ஆமா இன்னைக்கு என்ன சமையல்?”
“புருஷன் வீட்ல சண்டை போட்டுட்டு வந்த வருத்தம் இல்லாம எப்போ பாரு சாப்பாடு சாப்பாடுனு”
“நான் சாப்டாமப் பட்டினி கெடந்தா மட்டும் என்ன ஆகப் போகுது? கம் ஆன் அம்பு. நீயும் டிபிக்கல் கிழவி மாதிரி பேசாத. யூ ஆர் அ மாடர்ன் லேடி, யூ நோ” என்று சொல்ல அம்பு தலையிலடித்துக் கொண்டார்.
“நீ இப்பிடியே பேசிட்டு இரு. அங்க மாப்பிள்ளைய வேற யாராச்சும் கொத்திட்டுப் போகப் போறாங்க”
“அய்யோ அம்பு! இவ்ளோ அப்பாவியா இருக்கியே! உன் மாப்பிள்ளையச் சும்மாக் குடுத்தா கூடப் பெங்களூர்ல யாரும் வாங்க மாட்டாங்க”
“நானும் பாக்கிறேன்… இந்த வாய்ல்லாம் இன்னும் எவ்ளோ நாளுக்குன்னு? உண்மையா சொல்லு மாப்பிள்ளைப் பையன உனக்குப் பிடிக்கவே பிடிக்காதா?”
அவளைக் குறுகுறுவென்று பார்த்த அம்புவைப் பார்த்துப் பல்லைக் கடித்த அவந்திகா “பிடிக்காது அம்பு. எத்தனை தடவை கேட்டாலும் நான் இதத்தான் சொல்லுவேன்” என்று பிடிவாதமாகக் கூற அம்புஜா திகைத்தார்.
“உனக்கு இவ்ளோ பிடிவாதம் ஆகாது. இந்தப் பிடிவாதத்தை விட்டாதான் உன்னோட இந்தப் பிரச்சனை தீரும்”
“அஹான்! இப்போ நான் பிடிவாதத்த விட்டுட்டா மட்டும் உன்னோட மாப்பிள்ளை கம் பேரன் இங்க ஓடிவந்துருவான் பாரு” என்று அவள் சொல்லவும் கதவு தட்டும் சத்தம் கேட்கவே அம்பு வேகமாக கதவைத் திறக்கச் செல்ல அவந்திகா அவரின் பின்னே சென்றாள்.
கதவைத் திறந்ததும் அங்கே நின்றவனைப் பார்த்ததும் இருவருக்குமே அதிர்ச்சிதான். ஆனால் அம்புவிற்கு மட்டும் ஆனந்தமான அதிர்ச்சி…
அங்கே கையில் சூட்கேசுடன் நின்றுகொண்டிருந்தவன் ராகவ். அவனைப் பார்த்துச் சிரித்த அம்புவின் காலில் விழுந்தவன் “எப்பிடி இருக்கீங்க தாதிம்மா?” என்று கேட்க அம்பு சரளமாக அவனுடன் ஹிந்தியில் பேசவும் அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது..
“நல்லா இருக்கேன்…” என்று என்ன முறை சொல்லி அழைப்பது என்று திகைத்தவரைப் பார்த்து “நீங்க என்னை ராகவ்னே கூப்பிடலாம் தாதிமா” என்று சொல்லவும் அம்புவுக்கு வாயெல்லாம் பல்.
கூடவே அவந்திகாவின் காதில் “மாப்பிள்ளை ரொம்பத் தங்கமானவரா இருக்காரு” என்று சொல்ல அவளோ அவரை முறைத்துவிட்டு உள்ளே செல்ல முயன்றவளை ராகவின் “ஜான்சி ராணி” என்ற குரல் தடுத்து நிறுத்த அவள் கொலைவெறியானாள்.
நேரே அவனிடம் சென்றவள் “இங்க பாரு! ஒழுங்கு மரியாதையா என்னை அவந்திகானு கூப்பிடு. இல்லன்னா அவ்ளோதான்” என்று விரலை நீட்டி மிரட்ட அவளது விரலைப் பிடித்தவன் “அதே மாதிரி இந்த விரல் நீட்டுறத நிறுத்திக்கோ” என்று சொல்லக் கையை அவனிடமிருந்து உருவிக்கொண்டாள்.
பின்னர் அவனே “இந்த லக்கேஜை யாரு உள்ளே கொண்டு போவாங்க?” என்று புருவம் உயர்த்திக் கேட்டவனை எரிப்பது போலப் பார்த்துவிட்டு அவள் உள்ளே சென்றாள்.
அம்புவிடம் திரும்பியவன் “தாதிம்மா! என்னோட ரூம்?” என்று கேட்க அவர் அவந்திகாவின் அறையைக் காட்டிவிட்டுச் சென்றார். அதற்குள் அவனுக்கு என்ன பிடிக்கும் என்று எல்லா விவரத்தையும் கேட்டுவிட்டுச் சென்றார்.
உள்ளே நுழைந்தவனின் பார்வை அவந்திகாவைத் தேட அவளோ கையைக் கட்டிக்கொண்டு முறைத்தபடியே நின்றாள்.
“அவந்திகா” என்று அவன் அருகே வரக் கட்டிலில் இருந்த தலையணையை எடுத்து வீச அதைக் கேட்ச் பிடித்தவன் “கம் ஆன்! நான் சொல்ல வர்றதக் காது குடுத்துக் கேளு” என்று சொல்ல அதற்குள் ஷெல்ஃபில் இருந்த புக்கை வரிசையாக வீச அனைத்தையும் கேட்ச் செய்தவன் “உனக்குப் பைத்தியமா ஜான்சி ராணி? பாசத்தோட பாக்க வந்தவனை இப்பிடிச் சாகடிக்கப் பாக்கிறியே?” என்று கூறினான்.
“நானாடா உன்னை வரச் சொன்னேன்? முதல்ல நான் இங்க இருக்கறது உனக்கு எப்பிடித் தெரிஞ்சுது” என்று படபடக்கவும் அவளின் அருகில் வந்தவன் அவளின் கையைப் பிடித்துத் தன் நெஞ்சில் வைத்தவன் “இது சொல்லுச்சு” என்று அவனது மாயப்புன்னகையைச் சிந்தத் தன் கைகள் உணர்ந்த அவனது இதயத்துடிப்பும், கண்கள் ரசித்த அந்த அழகிய சிரிப்பும் அவளை எப்போதும் போல ஆட்கொள்ளத் தன்னை மறந்து புன்னகைத்தாள் அவந்திகா.
அவந்திகா கோபம் மறந்து சிரித்ததைப் பார்த்ததும்தான் ராகவின் மனதிற்கு இதமாக இருந்தது. அவள் முகத்தைத் தன் கைகளால் தாங்கியவன் “கொழந்தைக்கு கோவம் போயிடுச்சா?” என்று கேட்கவும் அவந்திகா சுயநினைவுக்கு வந்துவிட்டாள்.
தன் எதிரே சிரித்தமுகத்துடன் நிற்பவனைப் பார்த்ததும் நேற்று மாலை தோட்டத்தில் நடந்தது நினைவில் வர முகத்தைத் தாங்கியிருந்த கையைத் தட்டி அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டவள் “நீ என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு. அதான் உனக்கு நல்லது” என்று கோபத்துடன் கூறினாள்.
அவளின் கோபத்தை எதிர்பார்த்தே வந்தவன் என்பதால் ராகவுக்கு இது ஒன்றும் புதிதாகத் தோணவில்லை. அதனால் சாதாரணமாகத் தன்னுடைய சட்டையை உதறிவிட்டு “எனக்கு உன்னோட கோவம் நல்லாவே புரியுது. பட் நடந்தது என்னன்னு கேட்டா உனக்குக் கோவம் வராது. சிரிப்புதான் வரும்” என்று அமைதியாகக் கூறினான்.
அவனைப் பார்த்து அலட்சியமாக உதட்டைச் சுழித்தவள் “எனக்கு அது எதையும் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்ல. நான்தான் நடந்ததை என் கண்ணால பாத்தேனே. யுவர் எக்ஸ் வாஸ்” என்று கூறியவள் நிறுத்திவிட்டு “ப்ச் தப்பாச் சொல்லுறேனே! யுவர் கேர்ள் ஃப்ரெண்ட் வாஸ் ஹக்கிங் யூ. அண்ட் அந்த லவ்வபிள் மொமன்ட்ல நான் குறுக்க வந்து காரியத்தையே கெடுத்துட்டேன். இதான நடந்துச்சு. நீ என்னதான் பூசி மெழுகுனாலும் இனிமே நீ சொல்லப் போற எந்த வார்த்தையையும் நான் நம்பப் போறதில்ல” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தான் ராகவ்.
“கொஞ்சமாச்சும் மூளையோட பேசு அவந்திகா. என்னோட மொத்த குடும்பமும் ஹால்ல இருக்கிறப்போ கூடவே என் வைஃபும் இருக்கிறப்போ இன்னொரு பொண்ணை ஹக் பண்ணிட்டு நிக்கிறதுக்கு நான் என்ன பைத்தியமா? லாஜிக் இல்லாமே பேசாத ஓகே! ஏய் நீ என்ன கேக்குறது? இனிமே நான் உன்கிட்ட எதையும் விளக்கப் போறதே இல்ல. எப்போ உனக்கா தெரிஞ்சுக்கணும்னு தோணுதோ அப்போ வரைக்கும் நான் எதையும் உன்கிட்ட சொல்லப் போறதும் இல்ல. அதோட இன்னொரு விஷயம் நீயில்லாம நான் பெங்களூர் திரும்பப் போறதில்ல. எத்தனை நாள் ஆனாலும் சரி” என்று சொல்லிவிட்டுச் சென்றவனை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள் அவந்திகா.
அவன் வருவான் என்று அவந்திகா கனவில் கூட நினைக்கவில்லை. வந்தவன் அவள் இல்லாமல் கிளம்புவதாக இல்லையென்று கூறவே அவளுக்கு எரிச்சல்தான் அதிகமானது. மனதில் ஒருத்தியை வைத்துக்கொண்டு தன்னுடன் குடும்பம் நடத்தும் அளவுக்கு ஒன்றும் அவள் தாழ்ந்து போகவில்லை என்று எண்ணியவள் தனக்கும் ராகவுக்கும் இடையே உள்ள உறவில் ஏற்பட்ட குழப்பங்களை நினைத்துச் செய்வதறியாது நின்றாள்.
ஆனால் அம்புவோ அவனை விருந்துக்கு வந்த மாப்பிள்ளை போல் தாங்க அவளுக்குக் கடுப்பாக இருந்தது. ராகவும் அதற்குப் பின் அவளைக் கண்டுகொள்ளாமல் அஜ்ஜூவிடம் விளையாடியவன் அவனைப் பள்ளிக்குத் தயார் செய்து அனுப்பும் வேலையைச் செய்ய அவந்திகாதான் அதைப் பார்த்து வாயைப் பிளந்தாள்.
“பெங்களூர்ல பண்ணுற அட்டகாசம் என்ன! இங்க நல்ல பையனாட்டம் போடுற சீன் என்ன! மைதா மாவு நீ தலைகீழே நின்னாலும் நான் உன்கூட வர மாட்டேன்” என்று மனதில் சூளுரைத்துக் கொண்டாள்.
மதியம் சாப்பிடும்போது அம்பு அவனுக்குப் பிடித்ததாக நான்வெஜ் சமைக்க அவந்திகா அம்புவிடம் சண்டைப் பிடித்தாள்.
“நீ எப்பிடி நான் வெஜ் சமைப்ப அம்பு? என்கிட்ட என்ன சொன்ன… எனக்குப் பிடிச்ச ஐட்டம்ஸ் பண்ணுவேனுதான சொன்ன. இப்போ அந்த மைதாமாவு வந்ததும் சிக்கன் செஞ்சிருக்க. இப்போ நான் என்ன சாப்பிடுறது?” என்று முகத்தைத் தூக்க “நீதான் எங்க எல்லாரோட மூளையையும் சேத்துச் சாப்பிடுறியே? இப்போ என்ன வாயாடி? நீ சிக்கன் சாப்ட வேண்டாம். ரசம் இருக்கு. அதை ஊத்திச் சாப்டுட்டுப் போதலைனா தயிர் சாதம் சாப்டுக்கோ போ!” என்று சொல்லிவிட்டு ராகவுக்காக உணவை எடுத்துவைக்க ஆரம்பித்தார் அவர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


