“நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்த. இன்னைக்கு என்னாச்சு திடீர்னு?”
ஆதித்யன் ஆதங்கத்தோடு கேட்க கண்களில் பூசியிருந்த கண்மை கரைய கண்ணீர் பெருக்கினாள் பவித்ரா.
வயிறு வலியில் துடித்துக்கொண்டிருந்தவளுக்கு என்ன பதில் சொல்வதெனப் புரியவில்லை. ஆதித்யனுக்கும் பரிதாபமாகத் தான் இருந்தது.
இன்னும் அரைமணி நேரத்தில் மகேந்திரசிங் தோனி ‘ஃபீனிக்ஸ்’ நிறுவனத்தின் ஸ்டூடியோவுக்கு வந்துவிடுவார். ஆனால் பேட்டி எடுக்கவேண்டியவளுக்கோ திடீரென வயிற்றுவலி.
அவனும் தான் என்ன செய்வான்?
“நீ டாக்டரைப் பாத்துட்டு ரெஸ்ட் எடு.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டல்ல ஏ.கே?”
பவித்ரா வலியோடு தலை தூக்கிக் கேட்டாள்.
“நீ முதல்ல டாக்டர் கிட்ட போ தாயே. இந்த மகேஷ் எங்க போய் தொலைஞ்சான்?” எனப் பதற்றத்தில் இருந்தவனிடம்
“நீயே தோனி சாரை இண்டர்வியூ பண்ணு. உனக்குக் கிரிக்கெட் பத்தி நல்ல அறிவு இருக்கு. நீ சி.எஸ்.கே டீமோட விசிறி கூட. யோசிக்காத ஏ.கே” என்று வற்புறுத்துவது போல கூறினாள் அவள்.
ஆதித்யனும் உதடு கடித்து யோசித்தான். புகைப்படக்கலைக்காக அவன் நடத்தி வரும் யூடியூப் சேனல்களின் வீடியோக்களுக்காக அவன் தானே பேசுகிறான்.
அது போல இந்த நேர்க்காணல் இருந்துவிட்டுப் போகட்டுமே என்பது பவித்ராவின் வாதம்.
“நீ நல்லா இங்கிலீஸ், ஹிந்தி பேசுவ தல” என்று மகேஷ் எடுத்துக் கொடுக்க
“ஏன்டா ஆல்ரெடி மொழிப்பிரச்சனை ஹாட் டாபிக்கா போறப்ப அதை ஞாபகப்படுத்துற? இப்ப என்ன? நான் தோனிய இண்டர்வியூ பண்ணனும்… அவ்ளோ தானே? பண்ணுறேன்”
அடுத்தச் சில நிமிடங்களில் ஆதித்யன் அணியவேண்டிய உடைகள் கொண்டுவரப்பட்டன. கொஞ்சமே கொஞ்சம் முகப்பூச்சு கேமராவுக்காக.
அவன் தயாராக பதினைந்து நிமிடங்கள் கழித்து கேரவனில் தயாராகிவிட்டு வந்த மகேந்திர சிங் தோனியை மொத்த படப்பிடிப்பு குழுவும் பிரமிப்பாகப் பார்த்தது.
ஆதித்யன் அவரை வரவேற்று நேர்க்காணலை ஆரம்பித்தான்.
வழக்கமான கேள்விகள் இல்லாமல் நண்பர்களிடையே நிகழும் ஜாலியான உரையாடல் போல அந்தப் பேட்டி அமைந்தது.
ஐ.பி.எல் விளையாட்டுப்போட்டிகளின் தன்மை, அணிகள் பயிற்சி எடுக்கும் முறைகள், சென்னை அணியின் நிர்வாகம் பற்றி இப்படியாகக் கேள்விகளும் அமைய அந்த பேட்டி சிறப்பாகவே முடிந்தது.
இறுதியில் ‘ஃபீனிக்ஸ்’ நிறுவன ஊழியர்கள் மகேந்திரசிங் தோனியோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்ப, அவரும் சம்மதிக்க, அந்நேரத்தில் பவித்ராவோடு மெதுவாக ஸ்டூடியோவுக்குள் எட்டிப் பார்த்தாள் நந்தினி.
அரக்கு வண்ணத்தில் காட்டன் சட்டையும், ஆலிவ் பச்சையில் காட்டன் பேண்டும் அணிந்திருந்தாள். கால்களில் ஃப்ளாட் செருப்பின் வார்களைத் தாண்டி எட்டிப் பார்த்தன மருதாணி விரல்கள். கூந்தலை உயரத் தூக்கி போனிடெயிலாகக் கட்டியிருந்தாள். காதுகளில் ஜிமிக்கிக்குப் பதிலாக முத்து கம்மல் மின்னியது.
தென்காசி கோவிலில் பார்த்தப் பெண் இவளா என்று அவன் வாயைப் பிளந்தபோதே “போதும் தல! வாய்க்குள்ள டைனோசர் போயிடப்போகுது” என்று கேலி செய்தபடி அவனருகே வந்து நின்றாள் பவித்ரா.
இப்போது அவள் தெளிவாக இருக்கவும் “உனக்கு வயித்துவலி போயிடுச்சா?” என விசாரித்தான் ஆதித்யன்.
“எனக்கு எப்ப வயிறு வலிச்சுது?” என்று நாக்கை நீட்டி அழகு காட்டிய பவித்ரா மகேந்திர சிங் தோனியிடம் நந்தினியைக் காட்டி “இவ உங்களோட பிக் ஃபேன். நாங்க ஸ்கூல் படிக்கப்ப ஐ.பி.எல் ஃபர்ஸ்ட் சீசன் ஆரம்பிச்சுது. அப்ப நியூஸ் பேப்பர்ல உங்க ஃபோட்டோவ மட்டும் கட் பண்ணி ஒரு கலெக்சனா வச்சிருந்தா” என்று சொல்ல அவரும் நந்தினியோடு புகைப்படமும், செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
அடுத்து குழுவாகப் புகைப்படம் எடுக்கையில் பவித்ராவுக்கு அடுத்து நந்தினி நிற்க அவளை அடுத்து ஆதித்யன் நின்று கொண்டிருந்தான்.
யாரோ நெருக்கியதில் அவனது தோள் நந்தினியின் தோளை உரசிவிட ஜில்லென்ற உணர்வு அவனது இதயத்தில்.
என்ன இது சிறுபிள்ளைத்தனம்! இருவரும் இவ்வாறு எண்ணிக்கொள்ள, மகேந்திர சிங் தோனியும் விடைபெற, தனியே கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி நந்தினியிடம் பேச்சு கொடுத்தான் ஆதித்யன்.
அவளது விழிகள் அவனது அலுவலகத்தை ஆச்சரியமாகப் படம்பிடித்துக்கொண்டிருந்தன.
“தென்காசில பாத்த நந்தினிய மிஸ் பண்ணுறேன்”
சட்டெனத் திரும்பிப் பார்த்தவள் அவனது குரலில் இருந்த ஏக்கத்தை உணர்ந்து கன்னம் குழிய சிரித்தாள்.
“பி அ ரோமன் இன் ரோம்… நீங்களும் படிச்சிருப்பிங்க தானே?”
“ம்ம்! இருந்தாலும் இலஞ்சில, அந்த ராத்திரி நேரத்துல, நிலா வெளிச்சத்துல, கிணத்தடில காட்டன் நைட்டியும் மிரண்டு போன கண்ணுமா என்னைப் பாத்த நந்தினிய தானே இந்த மனசு தேடுது”
“ஓஹ்! இலஞ்சில பிறந்த பொண்ணு மாடர்னா இருக்கக்கூடாதுனு சொல்ல வர்றிங்களா?”
இடுப்பில் கையூன்றி முறைத்தவளிடம் பட்டெனக் கரம் குவித்தான் ஆதித்யன்.
“அம்மா தாயே! யார் அப்பிடி சொன்னாங்க? என் மனசுல உன்னோட உருவம் பதிஞ்சு போனதால அப்பிடி சொன்னேன். மத்தபடி நான் ஒன்னும் ஸ்டீரியோடைப் பண்ணுற ஆம்பளை இல்ல”
அவனது விளக்கம் நந்தினிக்குப் பிடித்திருந்தது.
சில நேரங்களில் குமரன் அவளை ஸ்டீரியோடைப் செய்து பேசியதுண்டு. முக்கியமாக அவனிடம் ஆங்கிலத்தில் உரையாட முற்படுகையில் அவனது கேலி பயங்கரமாக இருக்கும்.
“அடேங்கப்பா, ப்ரிட்டிஷ் ராஜகுடும்பத்து இளவரசி மாதிரி இங்கிலீஸ் துள்ளுது… என்ன உருண்டாலும் நீ இலஞ்சிக்காரி தான்”
ஏனோ சுருக்கெனத் தைத்துவிடும் அவனது வார்த்தைகள்.
ஒரு பெண் தன்னை திறமைச்சாலியாகக் காட்டிக்கொள்வதில், தனக்குப் பிடித்தபடி உடையணிவதில், முயன்று ஆங்கிலத்தில் பேசுகையில் ஏன் இந்த ஆண்களின் பாதுகாப்பின்மை உணர்வு விழித்துக்கொள்கிறது என்று அனேக முறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறாள்.
இப்போதும் அவள் உடையணிந்த விதத்தை ஆதித்யன் கேலி செய்வதாகத்தான் எண்ணிவிட்டாள். ஆனால் அவன் மெனக்கிட்டு அளித்த விளக்கம் அவனை மற்ற ஆண்களில் இருந்து தனியே காட்டிவிட புன்னகைமயமானது நந்தினியின் வதனம்.
“இந்த வீக்கெண்ட் நீ ஃப்ரீயா?”
திடுமென ஆதித்யன் கேட்டதும் கண்களைச் சுருக்கினாள் நந்தினி.
“துணி துவைக்கணும். நல்லெண்ணெய் தேய்ச்சு நிதானமா தலைக்குக் குளிக்கணும். மதியம் குட்டியா ஒரு தூக்கம் போடணும். என்னோட வீக்கெண்ட்ல நான் பிசி. உங்க கூட டேட் வர்ற அளவுக்கு எனக்கு நேரமில்ல”
அமர்த்தலாகப் பதிலளித்தவளைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தான் ஆதித்யன்.
“நீ ஃப்ரீயானு தான் கேட்டேன். உன்னை நான் டேட்டிங்குக்குக் கூப்பிடலையே? சென்னை பையன்னா எல்லா பொண்ணுங்களையும் டேட்டிங் கூப்பிடுவான்னு நீ எப்பிடி என்னை ஸ்டீரியோடைப் பண்ணலாம்?”
நந்தினி நாக்கைக் கடித்துக்கொண்டாள். பின்னர் அசட்டுச்சிரிப்போடு “சாரி” என்றாள்.
“மன்னிச்சிட்டேன்”
கையை உயர்த்தி ஆசிர்வதிப்பது போல காட்டியவன் “எங்கம்மா கிட்ட உன்னை அறிமுகப்படுத்தலாம்னு நினைச்சேன். வேற ஒன்னுமில்ல” என்றான்.
நந்தினியின் விழிகள் திகைப்பில் மலர்ந்தன.
“அம்மா கிட்டவா? என்னனு அறிமுகப்படுத்துவிங்க?”
“என் ஃப்ரெண்ட்னு சொல்லுவேன். ரொம்ப தைரியமானப் பொண்ணுனு சொல்லுவேன். உதவுற மனப்பான்மை அதிகமுள்ளவனு சொல்லுவேன். இப்பிடி நிறைய இருக்கு நந்து”
“இன்னொன்னையும் சேர்த்துக்கோங்க. மனுசங்களைச் சரியா எடை போடத் தெரியாத தத்தி”
சொல்லி முடிக்கையில் அவளது சொற்களில் கசப்பு பரவிய உணர்வு!
“முழுசா அப்பிடி சொல்லிட முடியாது. என்னை நீ நல்லபடியா தான் எடை போட்டிருக்க”
“சாருக்கு எப்பிடி தெரியும்?”
“என்னைச் சரியா எடை போடலனா இந்நேரம் இவ்ளோ உரிமையா என் கூட நீ அரட்டை அடிக்க மாட்ட. ஏதோ ஒன்னு உன்னைத் தடுத்திருக்கும்”
தன்னை இவ்வளவு எளிதில் எப்படி கணித்தான் என்று நந்தினிக்கு அவ்வளவு ஆச்சரியம்.
“டீ அண்ட் சமோசாவோட உன் சிந்தனைய தொடரலாம்”
தேநீர் கோப்பையோடு இருவரும் பால்கனிக்கு வந்தார்கள்.
அங்கிருந்து கீழே தெரிந்த காட்சிகளைப் பார்க்க நந்தினிக்குப் பிடித்திருந்தது.
“டீ ரொம்ப நல்லா இருக்கு”
“சுகர் கொஞ்சம் அதிகம்”
“காபில தித்திப்பு கம்மியா இருக்கணும். டீல கொஞ்சம் அதிகமா இருக்கணும். இதுதான் என்னோட டேஸ்ட் ப்ரிஃபரன்ஸ்”
அவள் சொல்ல மனதில் குறித்துக்கொண்டான்.
“அம்மா எப்பிடி இருக்காங்க?”
யுவராணி குறித்து மெய்யான அக்கறையோடு விசாரித்தான் ஆதித்யன்.
“இப்ப பரவால்ல. பட் மனக்குறை தீரல அவங்களுக்கு”
“நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி அவங்க மனக்குறைய தீர்த்துடலாம். நீ வருத்தப்படாத”
குடித்துக்கொண்டிருந்த தேநீர் புரையேறியது நந்தினிக்கு.
“எ…என்னது? க…கல்யாணமா?”
இருமி முடித்துவிட்டுக் கேட்டவளின் விழிகளில் அதீத அதிர்ச்சி!
“க.கல்யாணம் இல்ல. ஆதித்ய கரிகாலன் – நந்தினியின் திருமணம்” என்றான் அவன் புன்னகையோடு.
“ஆதித்ய கரிகாலனா? அது யாரு?”
“சாட்சாத் நானே தான். ஆதித்ய கரிகாலன் அலையஸ் ஏ.கே”
நந்தினி சத்தமாகச் சிரித்துவிட்டாள்.
“சிரிக்காதம்மா. என் மம்மி பொன்னியின் செல்வன் நாவல்ல ஆதித்ய கரிகாலனோட ஃபேன். ஆசையா இந்தப் பெயரை எனக்கு வச்சாங்க. பட் ஸ்கூலுக்காக ஆதித்யன்னு சுருக்கியாச்சு. அம்மாக்கு நான் எப்பவும் ஆதி தான். ஃப்ரென்ட்ஸ்கு ஷார்ட்டா ‘ஏ.கே’. நமக்குள்ள பெயர்ப்பொருத்தம் ஜோரா இருக்குல்ல?” பெருமிதமாகக் கேட்டான் ஆதித்யன்.
நந்தினியால் தான் பதில் சொல்ல முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னர் எட்டாண்டு கால காதலை இழந்த மனது இன்னொரு காதலில் சட்டெனத் திளைக்க மறுத்தது. மருண்டு பின்வாங்கியது. மீண்டும் ஒரு ஏமாற்றம், மீண்டும் ஒரு துரோகத்தை என்னால் தாங்க இயலாது என்று அரற்றியது.
அதை ஆதித்யனிடம் வெளிப்படையாகச் சொல்ல முயன்றாலோ மரக்கட்டை போல ஏதோ ஒன்று தொண்டைக்குழியிலிருக்கும் குரல் நாணை பிடித்து இறுக்கியது.
அவளால் பேச்சுக்குக் கூட ஆதித்யனிடம் அவ்வாறு சொல்ல இயலாது. இது என்ன மாய உணர்வு? பேதை தனக்குள் தவிக்க, ஆணவனோ அவளது சம்மதத்திற்காக தவம் இருந்தான்.
தனது தவிப்பை மறைத்துக்கொண்டு “இந்த வீக்கெண்ட் நான் அம்மாவ பாக்க வர்றேன். அதுக்காக நான் உங்களை லவ் பண்ணுறேன்னு நினைக்கக்கூடாது” என்று நிபந்தனை விதித்தவளைக் கண்களால் அள்ளிக்கொண்டான் ஆதித்யன்.
“நோ நோ! அப்பிடியெல்லாம் நான் நினைக்கமாட்டேன். நீ வந்தா மட்டும் போதும்”
அன்று ஃபீனிக்ஸ் நிறுவனத்திலிருந்து விடைபெற்ற நந்தினியின் மனதில் வாரயிறுதி எப்போது வரும் என்ற ஆவல் அப்போதே எழுந்துவிட்டது.
“நந்தினி வீக்கெண்ட்ல நம்ம வீட்டுக்கு வர ஓ.கே சொல்லிட்டாம்மா”
“ரொம்ப சந்தோசம். மருமகளுக்கு வெஜ் பிடிக்குமா? நான்வெஜ் பிடிக்குமா?”
ஆரம்பத்திலேயே மலர்விழி அமர்க்களமாகக் கேட்க ஆதித்யனோ பதறினான்.
“ஐயோ அம்மா! இப்பிடியெல்லாம் அவ கிட்ட பேசி வச்சுடாத. அவ என்னோட ஃப்ரெண்டா தான் நம்ம வீட்டுக்கு வர்றா. அவ மனசளவுல காயப்பட்டிருக்காம்மா. இந்த நேரத்துல அவ பலகீனமா இருக்குறதை உபயோகப்படுத்தி அவளை அப்ரோச் பண்ண எனக்குப் பிடிக்கல. அதுக்காக என் காதலை மறைக்கவும் மாட்டேன். நீ மருமகளேனு சொன்னா அவளால மறுக்க முடியாது. ஆனா மனசுக்குள்ள தவிப்பா. அதனால பவி வந்தா எப்பிடி நடத்துவியோ அப்பிடியே அவளையும் நடத்து.”
“அடப்போடா! சில காயத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் தான் சரி. நீ என்னமோ சொல்லுற. அதுவும் வாஸ்தவம்னு தோணுது. ஆனா போட்டோல ரத்தினக்கட்டி மாதிரி அந்தப் பொண்ணைப் பாத்ததும் உன்னையும் அவளையும் மணக்கோலத்துல நிக்க வச்சு ரசிச்ச மனசுக்கு இந்த நியாயம் புரியலையே?”
“கொஞ்சநாள் தானேம்மா?”
அன்னையைத் தாஜா செய்தவன் தந்தை அவரை எதற்கோ அழைப்பது மொபைல் பேச்சில் கேட்டதும் “நான் உன் கூட பேசுனாலே இவருக்கு மூக்கு வேர்க்குது. போயிட்டு வாங்க திருமதி மதியழகன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
நூலிழந்து தவித்தப் பட்டத்தை மீண்டும் வானில் சிறகடித்துப் பறக்க வைக்க ஆவல் கொள்கிறான் அவன்! அவனது ஆசை நிறைவேற பட்டமும் மனது வைக்க வேண்டுமே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


