“இந்த புராஜெக்டோட பேஸ்லைனையும் ப்ராக்ரசையும் கம்பேர் பண்ணி பாக்குறப்ப டெட்லைனுக்குள்ள முடிச்சிடுவோம்னு நம்பிக்கை இருக்கு. இதுல க்ரிட்டிக்கல் பாத் எல்லாம் ஆல்ரெடி கம்ப்ளீட் பண்ணிட்டோம்”
புராஜெக்ட் மேனேஜரான முக்தா பானர்ஜி பேசி முடிக்கவும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு புதிய மென்பொருள் ஒன்றை வடிவமைத்துக்கொண்டிருக்கும் புராஜெக்ட் குழு உறுப்பினர்கள் அவரவர் இருக்கைக்குக் கிளம்பினார்கள்.
அவர்களில் நந்தினியும் ஒருத்தி. மற்றவர்கள் போனதும் முக்தாவிடம் இன்னும் சில சந்தேகங்களைக் கேட்டுவிட்டு வெளியேறப் போனவளை “உன்னோட லவ்வர் பாய் என்ன சொல்லுறார்?” என்று சினேகமாக விசாரித்தாள் அவள்.
இருவரும் பொறியியல் முடித்து ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் டெக்னோசிஸில் நுழைந்தவர்கள். இருவருமே மைசூரு கிளையில் ஒன்றாகப் பயிற்சியெடுத்து இரண்டாண்டுகள் பணியாற்றிவிட்டுச் சென்னைக்குப் பணியிடமாறுதல் வாங்கிவிட்டு வந்து ஓராண்டு நிறைவுற்று விட்டது.
மூன்றாண்டுகள் கடந்தும் அவர்களின் நட்பு கிஞ்சித்தும் மாறவில்லை. நந்தினி – குமரனின் காதல் விவகாரம் முக்தாவுக்கு நன்றாகத் தெரியும்.
அந்த உரிமையில் விசாரித்தாள். நந்தினி இரயில் நிலையத்திலிருந்து நேரே அலுவலகம் வந்துவிட்டதால் இலஞ்சியில் நடந்த எதுவும் அவளது தோழிக்குத் தெரியவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஹூம்! ப்ரேக்ல சொல்லுறேன் முக்தா… ஒர்க் நிறைய இருக்குடா”
அவளிடம் சொல்லிவிட்டுத் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தவள் மெய்யாகவே வேலையில் மூழ்கினாள்.
மதிய உணவு இடைவேளையின் போது முக்தாவுடன் ‘ஃபுட் கோர்ட்டுக்கு’ வந்து சேர்ந்தவள் குமரன் தனக்குச் செய்த துரோகத்தைச் சொல்லி முடித்தாள்.
“சீ! துரோகி… நீ அவனைச் சும்மாவா விட்ட?”
“வேற என்ன செய்ய சொல்லுற முக்தா? ஆசையா அவன் வீட்டுக்குப் போனேன்… அங்க அவனும் அவனோட பொண்டாட்டியும் ஒன்னா உக்காந்து பால் பழம் சாப்பிட்டிருந்தாங்க. அவன் என் காதலை நிராகரிக்க கூட நேரம் எடுத்துக்கல முக்தா. ரொம்ப ஈசியா தூக்கியெறிஞ்சிட்டுக் கல்யாணமே பண்ணிக்கிட்டான். அவன் பொண்டாட்டி வினிதா எங்க ஊர்ல பெரிய பணக்காரரோட மகள். என்னைப் பாத்து கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாம ‘சாப்பிட்டுட்டுப் போ நந்தினி’னு சொன்னான் குமரன். அப்பவே எனக்குள்ள இருந்த காதல் உடைஞ்சு போயிடுச்சு”
“அதுக்குனு அவனை அப்பிடியே விடமுடியுமா? மூனு வருசமா அவன் கேட்டப்ப எல்லாம் நீ பணம் அனுப்பிருக்க. அவனை வெளிநாட்டுக்கு அனுப்ப, அங்க படிக்க, புக் வாங்க அதுக்கு இதுக்குனு உன் காசு வேணும். கல்யாணம் மட்டும் பணக்காரிய பண்ணிப்பானா? அவனுக்குச் செலவு பண்ணுன பணத்துக்கு என்ன பதில்?”
“என் காதலே போச்சு. காசா முக்கியம்?”
அதற்கு மேல் முக்தா அவளிடம் விவாதிக்கவில்லை. நந்தினியின் கையில் சிவந்த மருதாணிக்குக் குமரனின் காதலைக் காரணம் சொல்லி அனுப்பிவைத்தவள் அவள்.
இப்போது அதே கரங்களைப் பார்த்தவள் “உன் மருதாணியோட சிவப்புக்குக் காரணமான காதல் குமரனோடது இல்ல நந்து. உனக்கானவன் வருவான்” என்று சொல்லவும் நந்தினியின் மனதுக்குள் ஆதித்யனின் முகம் வந்து போனது.
“ஒருவேளை நான் உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டேனா?” என்று கேட்டான் இப்போதும்.
‘நீ போ’ என மனதுக்குள் பேசி விரட்டிவிட்டாலும் அவனும் சென்னையில் தானே இருப்பான் என்ற எண்ணம் மட்டும் போவேனா என அடம்பிடித்தது.
அதே நேரம் தேனாம்பேட்டையில் இருக்கும் ‘ஃபீனிக்ஸ் சமூக ஊடக மேலாண்மை நிறுவனத்தின்’ அலுவலகத்தில் மும்முரமாக வேலையில் ஆழ்ந்திருந்தான் ஆதித்யன்.
அங்கே தனித்தனி கேபின் எல்லாம் கிடையாது. ஒரு மீட்டிங் அறை போக அனைவரும் ஒரே அறையில் நீளமான மேஜை ஒன்றை தனித்தனியே தடுத்து நாற்காலிகளைப் போட்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வது, சமூக ஊடகங்களில் இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் யூடியூபர்களின் கணக்குகளைப் பிரபலப்படுத்துவது, அவர்களின் கணக்குகளை நிர்வகித்து பிரபல நிறுவனங்களிடமிருந்து ‘புரமோசன்’ வகை விளம்பரங்களை வாங்கி கொடுப்பது, இன்ஃப்ளூயன்சர்களுக்கு வீடியோக்கள் எடுக்க, அதை எடிட் செய்ய உதவுவது போன்ற பணிகளைச் செய்து வருகிறார்கள் இந்நிறுவனத்தினர்.
அவர்களின் வாடிக்கையாளர்களாக பெரிய பெரிய தொழில் நிறுவனங்களும், பிரபல இன்ஃப்ளூயன்சர்களும் இருப்பதால் தொழில் சிக்கலின்றி நடந்து கொண்டிருக்கிறது.
தொழிலுக்கான முதல் போட்டவன் என்ற முறையில் ஆதித்யன் தான் முதலாளி.
இந்நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் புகைப்படக்கலை மற்றும் வீடியோகிராபியோடு வீடியோ எடிட்டிங்கையும் ‘ஃப்ரீலாஞ்சிங்’ முறையில் செய்து கொடுத்து வருமானம் ஈட்டிகொண்டிருந்தான் அவன்.
படித்த படிப்பு புகைப்படக்கலை என்பதால் அது தொடர்பான வேலைகளை மட்டுமே செய்தவனின் யூடியூப் சேனல் ‘வளரும் புகைப்படக்கலைஞர்களுக்கு’ இலவசமாக புகைப்படக்கலையைக் கற்றுத் தரும் தகவல் களஞ்சியமாக இருக்கிறது.
அதிலிருந்தும் வருமானம் வருகிறது. இக்கால இளைஞர்கள் சரியான முறையில் சமூக ஊடகங்களைக் கையாண்டால் அவர்களின் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாதென்பதற்கு உதாரணம் ஆதித்யனும் அவனுடைய நண்பர்களும்.
இவர்கள் நால்வரும் அந்நிறுவனத்தின் தூண்கள். இவர்களைத் தவிர்த்து பன்னிரண்டு ஊழியர்கள் அங்கே வேலை செய்கிறார்கள். அவரவர் படிப்பு, திறமைக்கேற்ப வீடியோ எடிட்டிங், டேட்டா அனாலிசிஸ், மார்க்கெட்டிங், வலைதள வடிவமைப்பு போன்ற வேலைகளைக் குழுக்களாகப் பிரிந்து செய்வார்கள்.
அவர்களது நிறுவனத்தில் சிறிய ஸ்டூடியோ ஒன்றும் உண்டு. அதை ஆதித்யன் அவனது யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாக்ராம் வீடியோக்களின் படப்பிடிப்புக்குப் பயன்படுத்திக்கொள்வான்.
அவர்கள் நால்வரில் பவித்ரா பேட்டி எடுப்பதில் திறமை வாய்ந்தவள்.
சினிமா பிரபலங்கள், விளையாட்டுத்துறை வல்லுனர்கள், அரசியல் புள்ளிகள், சமூக வலைதள பிரபலங்கள் என அனைவரையும் ‘ஃபீனிக்ஸ் நிறுவனத்தின்’ பிரத்தியேக யூடியூப் சேனலுக்காகப் பேட்டி எடுத்திருக்கிறாள்.
பல சினிமா பிரபலங்கள் தங்களது பட வெளியீட்டிற்கு முன்னால் இவர்களுக்குப் பேட்டி கொடுத்து தங்களது படத்தை விளம்பரம் செய்வார்கள்.
தொலைக்காட்சியை விட சமூக வலைதளங்கள் குறிப்பாக யூடியூப் மாபெரும் விளம்பர ஊடகமாக வளர்ந்திருப்பதன் பலனை ஃபீனிக்ஸ் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் அறுவடை செய்கின்றன.
இதோ இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் விளையாட்டுப்போட்டி தொடங்கவுள்ளது. அதற்கு முன்னர் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களைப் பவித்ரா பேட்டி எடுப்பதற்கான ஏற்பாடுகள் அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தன. கிரிக்கெட் அணியின் சார்பாக முன்னெடுக்கப்படும் விளம்பர வகையறா வீடியோ அது. ஆனால் பார்ப்பதற்கு நேர்க்காணல் போல இருக்கும்.
“ஏன் தல, நீயே தல டோனிய இண்டர்வியூ பண்ணலாமே?” வீடியோ எடிட்டிங்கில் மும்முரமாக இருந்த ஆதித்யனிடம் முக்கியமானக் கேள்வியொன்றைக் கேட்டவாறு வந்து நின்றான் தருண்.
“நானும் சொல்லி சொல்லி சலிச்சிட்டேன் தருண். உன் வாய்ஸ் ரொம்ப கம்பீரமா இருக்கு ஏ.கே. நீ மட்டும் இண்டர்வியூ, பாட்காஸ்டிங் எல்லாம் பண்ணுனா வேற மாதிரி வரவேற்பு கிடைக்கும்” என்று தன் பங்குக்கு அவனைத் தூண்டிவிடும் பணியைச் சிறப்பாகச் செய்தாள் பவித்ரா.
“எனக்கு அதுல்லாம் செட் ஆகாது”
சுருக்கமாக மறுத்துவிட்டுக் கழுத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி வலியைக் குறைக்க முயன்றான் ஆதித்யன்.
சென்னைக்கு அவனும் அவனது தோழமைகளும் வந்து அன்றோடு நான்கு நாட்களாகி இருந்தது.
அவனது யூடியூப் சேனலில் புகைப்படக்கலை பற்றிய முக்கியமான வீடியோ ஒன்றை பதிவேற்ற வேண்டும். அதற்கான படப்பிடிப்பை ஃபீனிக்ஸ் நிறுவன ஸ்டூடியோவில் முடித்தவன் நான்கு நாட்களாக எடிட் செய்கிறான்.
இருப்பதிலேயே கடினமான வேலை ‘வீடியோ எடிட்டிங்’. மக்கள் தங்களது வீடியோவை ‘ஸ்க்ரோல்’ செய்துவிடக்கூடாதென ஏகப்பட்ட ‘ஹூக்’ வைத்து வீடியோவை எடிட் செய்வார்கள் அந்த வீடியோ எடிட்டர்கள்.
பேசும் போது இடையில் நகைச்சுவை நடிகரின் வசனங்களை இடம்பெற வைப்பது, அனிமேசன்கள் மூலம் காணொளியை வித்தியாசப்படுத்துவது எல்லாம் அவ்வளவு எளிதான வேலை இல்லை.
ஃபீனிக்ஸின் வாடிக்கையாளராக இருக்கும் இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் யூடியூபர்களின் வீடியோக்கள் தரமாக எடிட் செய்யப்படுவது ஆதித்யனின் எடிட்டிங் பற்றிய நுண்ணறிவால் மட்டுமே!
அதனாலேயே எடிட்டிங் மற்றும் வீடியோக்ராபியோடு தனது பணிகளைச் சுருக்கிக்கொள்வான் ஆதித்யன்.
“எனக்கு இண்டர்வியூ எல்லாம் பண்ண வராது. தெரிஞ்ச வேலைய தப்பு இல்லாம செஞ்சு மனதிருப்தியோட சேர்த்து காசையும் சம்பாதிச்சிட்டிருக்கேன். இது உங்களுக்குப் பொறுக்கலையா?” என்றான் அவன்.
“அப்பிடி இல்ல தல. உன் குரல்ல என்னவோ இருக்கு. உன் யூடியூப் சேனலோட கமெண்ட் செக்சனை நீ பாக்கவே மாட்டியா? அரவிந்த்சாமி குரலுக்கு அப்புறம் உன் குரல் தான் கம்பீரமானதுனு சப்ஸ்கிரைபர்ஸ் எத்தனை பேர் சொல்லிருக்காங்க தெரியுமா?” இது மகேஷ்.
“நீங்கல்லாம் ஒரு முடிவோட தான் இருக்கிங்க. நான் உங்க வலையில சிக்கமாட்டேன்”
தந்திரமானப் புன்னகையோடு மீண்டும் வீடியோ எடிட்டிங்கில் கவனமானான் ஆதித்யன்.
சிறிது நேரத்தில் கண்கள் எரிச்சல் எடுக்க ஆரம்பித்தன.
தோழமைகளும், பணியாற்றும் ஊழியர்களும் காபி, டீ என அருந்தி கொண்டிருந்த சமயத்தில் கண்களுக்கு ஓய்வு கொடுக்க அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான்.
தொழில் நிறுவனங்கள் மட்டும் இயங்கி வந்த வளாகத்தில் முளைத்திருந்த அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்றின் மூன்றாவது தளத்தில் இயங்கி வந்த ‘ஃபீனிக்ஸ்’ நிறுவனத்தின் பால்கனியில் நின்று சும்மா வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
“ஹேய் நந்து… எப்ப ஊர்ல இருந்து வந்த?” என பவித்ராவின் குரல் கேட்டதும் ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்தான்.
நந்தினியோடு மொபைலில் உரையாடியபடி பால்கனிக்கு வந்தாள் பவித்ரா.
‘நந்தினி! அவள் சென்னைக்கு வந்துவிட்டாளா? என் காதலை வெறும் ஈர்ப்பு என்று சொல்லி பாடம் எடுத்தவளுக்கு எனது பெயராவது ஞாபகம் இருக்குமா?’
யோசித்துக்கொண்டிருந்த ஆதித்யனின் கரத்தில் மொபைலைத் திணித்தாள் பவித்ரா.
“என்ன?”
“நந்து லைன்ல இருக்கா”
“அதுக்கு என்ன?”
“உன் கிட்ட பேசணுமாம்”
“ஓஹ்!”
மொபைலை வாங்கி காதில் வைத்தவன் “சொல்லுங்க மேடம்” என்றதும் மறுமுனையில் நந்தினியின் செவியோர குறுமுடிகள் சிலிர்த்துப் போயின.
ஒருவனின் குரல் இத்தகைய உணர்வை உண்டாக்குமா? தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். நல்லவேளை உளறி வைக்கவில்லை என்று பாராட்டியும் கொண்டாள்.
“அது… நாளைக்கு உங்க ஆபிசுக்கு தோனி வர்றார்னு கேள்விப்பட்டேன்”
“ஆமா”
“எனக்கு அவரைப் பாக்கணும் ஆதி. ப்ளீஸ்! நாளைக்கு நான் உங்க ஆபிசுக்கு வரலாமா?”
ஆதித்யனுக்கு ஆச்சரியத்தில் வார்த்தைகள் வரவில்லை.
‘இவளுக்குச் சமீபத்தில் காதல் முறிந்திருக்கிறது. அந்தத் துக்கத்தில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். இவளிடம் நான் காதலைக் கூறியிருக்கிறேன். இதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு தோனியைப் பார்க்க ஆசைப்படுகிறாளே!’
அவன் பதில் சொல்ல நேரமெடுக்கவும் “உங்களுக்கு விருப்பமில்லனா வரல” என்று பின்வாங்கினாள் நந்தினி.
ஆதித்யன் அவசரமாகக் குறுக்கிட்டான்.
“தாராளமா வரலாம். நோ ப்ராப்ளம்” என்று அனுமதியும் கொடுத்தான்.
“தேங்க்யூ சோ மச் ஆதி”
குதூகலத்தோடு ஒலித்தது அவளுடைய குரல்.
‘இந்தப் பதிலைச் சொன்னபோது அவள் முகம் தாமரையாய் மலர்ந்திருக்குமா? மை தீட்டிய விழிகளில் மகிழ்ச்சி பரவியிருக்குமா? எப்போதும் அவளது செவிமடலுக்கும் கன்னத்துக்கும் இடையேயானப் பகுதியில் ஊசலாடி என்னைப் பொறாமைப்படுத்தும் அந்தக் குட்டி ஜிமிக்கி இப்போதும் அந்த வேலையைச் செய்திருக்குமா?’
“அவ்ளோ தானா?”
இதயத்தில் உறைந்திருந்த ஏக்கம் அவனையும் அறியாமல் வார்த்தைகளில் வெளிப்பட்டுவிட்டது.
“புரியல”
“ப்ச்! நடிக்காத. நீ குழந்தை பாரு. சும்மா புரியல தெரியலனு டயலாக் பேசவேண்டியது”
ஆதித்யனின் சலிப்பு நந்தினிக்குச் சிரிப்பை வரவழைத்தது.
“என்னை நினைச்சா சிரிப்பா இருக்குல்ல?” என்றவன் பவித்ராவிடம் ‘உள்ளே போ’ எனக் கண்களால் சைகை காட்டினான். அவள் முறைத்துக்கொண்டே அங்கிருந்து போய்விட்டாள்.
உடனே “நீ சொன்ன மாதிரி நான் ஒன்னும் உன்னை மறக்கல. நல்லா தெளிவா உன்னை ஞாபகம் வச்சிருக்கேன். உன்னை மட்டுமில்ல, உன்னோட மருதாணி விரல், ஜிமிக்கி ஆடுற குட்டி காது, சிரிக்குறப்ப குழி விழுற கன்னம், அந்தக் கன்னத்தைக் கிஸ் பண்ணி என்னைப் பொறாமைப்படுத்துற முடினு ஒவ்வொன்னும் ஞாபகத்துல இருக்கு. யெஸ், திஸ் இஸ் லவ்”
“ஆதி”
சங்கடமாய் ஒலித்தது நந்தினியின் குரல்.
தன்னை ஒருவன் அணுவணுவாய் நினைவு வைத்திருப்பதாக வாக்குமூலம் அளிப்பதைக் கேட்டுச் செவிமடலோடு சேர்ந்து கன்னமும் சிவந்து போனது. இதயம் தடதடக்க கை விரல்களோ நடுங்கின.
இது என்ன புதிய வகையான உணர்வு?
குழம்பிப் போனாள் பெண்ணவள்.
“ஐ லவ் யூ நந்தினி. அவ்ளோ தான். அதுக்கு மேல நான் எதையும் யோசிக்கல” அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் நந்தினியின் இதயத்தில் தடதடத்து ஓடிய பரவசம் எனும் இரயில்வண்டியோ நிற்காமல் ஓடத் தொடங்கியிருந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


