“வாழ்க்கையின் நோக்கம் வாழ்வதுதானே தவிர பிறர் மெச்சுவதற்காகத் தனது சின்னச் சின்ன ஆசைகளைத் தியாகம் செய்வதும், துயரத்தில் உழல்வதைத் தியாகமெனச் சிலாகிப்பதும் அல்ல. எந்த இடத்தில் விட்டுக்கொடுக்க வேண்டும், யாருக்காக விட்டுக்கொடுக்க வேண்டும், எப்படி அந்த விட்டுக்கொடுத்தல் தனது மகிழ்ச்சியைப் பாதிக்காதவண்ணம் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதில்தான் வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்வதற்கான ரகசியம் ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டுகொண்டால் நீங்கள் வாழப்போகிற ஒரே ஒரு வாழ்க்கை நிம்மதியாய் இருக்கும்.”
-வசுமதி
வளைகாப்பு எவ்வித ரசாபாசமுமின்றி இனிதே முடிவடைந்தது. உறவுக்காரர்கள் யாவரும் அவரவர் ஊருக்குக் கிளம்பிவிட சர்வானந்தனின் குடும்பமும் திருச்செந்தூருக்குச் சென்றுவிட்டார்கள்.
வசீகரனுக்கு அன்று மாலை திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குப் பேருந்தில் பயணச்சீட்டு முன்பதிவாகியிருந்தது. கிளம்புவதற்கான ஆயத்தங்களில் அவன் ஈடுபட்டிருந்தபோது அன்னையும் தங்கையும் அவர்களுக்குள் பேசிக்கொள்வதைக் கேட்க நேரிட்டது.
“எல்லாருக்கும் மதினி ஏன் வரலனுதான் கேள்வியே. குரும்பூர் அத்தை நாலு தடவை கேட்டுடுச்சும்மா.” இது மகிழினியின் ஆதங்கமான பேச்சு.
“ஹூம்! நாம குடுத்து வெச்சது அவ்ளோதான் மகிழ். இவளுங்க மனசுல எல்லாம் கல்யாணம் ஆனதும் ஆம்பளைப் பையனை அப்பிடியே லட்டு மாதிரி தூக்கி இவளுங்க கையில குடுத்துடணும்னு எண்ணம். அப்பா அம்மா உடன்பிறந்தவங்கனு எல்லாரையும் கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன்காரன்கிட்ட இருந்து அத்துவிட்டுடணும். இவளுங்களும் நல்லது பொல்லாதது எதுலயும் தலைகாட்டக் கூடாது. பொண்ணைப் பெத்தவ பஞ்சு மெத்தையில, பையனை பெத்தவ வெளித்திண்ணையிலனு சும்மாவா சொன்னாங்க” – குமுதவல்லி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“மதினி நம்மகூட பேசியே நாளாகுதுனு சொன்னா யாரும் நம்புனாதானே? என்னமோ நாமதான் கொடுமைக்காரிங்க மாதிரி ஆளாளுக்குக் கிசுகிசு பேசுறாங்க. மதினியோட அல்பப்புத்தி உனக்கும் எனக்கும்தானே தெரியும்”
டீ-ஷர்ட்டை மடித்துக்கொண்டிருந்த வசீகரனின் கரம் அந்தரத்தில் அப்படியே நின்றது. இதுவரை அவர்கள் பேசியதாவது வசுமதி வராத ஆதங்கத்தின் விளைவு என்று விட்டுவிடலாம். ஆனால் இப்போது மகிழினி சொன்னது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு.
அவனறிந்தவரை வசுமதி எந்தக் காலத்திலும் உறவுகள் விஷயத்தில் அற்பமில்லை. அன்னையும் தங்கையும் மாறிமாறி தன்னைத் தூண்டிவிடுவதாக எண்ணி அவர்களிடம் ஒதுங்கிய காலத்தில்கூட அவர்களுக்கு அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே எனத் தடுத்ததில்லை அவள்.
எந்த விஷயத்தில் அவள் அற்பப்புத்தியுள்ளவளாகத் தெரிந்தாள்?
சுர்ரென ஏறிய கோபத்தோடு கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தங்கை – அன்னையின் முன்னே போய் நின்றான்.
“ட்ரெஸ் எடுத்து வெச்சிட்டியா அண்ணா? எனக்கு முத்து வெச்ச கம்மல் வாங்கணும்னு சொன்னேனே. அம்மாகிட்ட சொல்லு அண்ணா”
பிள்ளைத்தாய்ச்சி ஆசையாய்க் கேட்டால் மறுக்கமாட்டான் என்ற எண்ணம். அண்ணனிடம் உரிமையாய்த் தங்கை கேட்பதில் என்ன தவறிருக்கிறது? ஆனால் பணம் கொடுக்க வேண்டியவனின் மனமோ ‘உன் மனைவி ஆசைப்பட்ட எதையாவது நீ வாங்கிக் கொடுத்தாயா? ஒவ்வொன்றுக்கும் பிள்ளைப்பேறு, பிள்ளை வளர்ப்பைக் காரணம் காட்டித் தங்கைக்கு மட்டும் தவறாமல் செய்தாயே! இதெல்லாம் எவ்வளவு பாகுபாடான மனநிலை” என்று அர்ச்சித்தது அவனை.
வசீகரனுக்கும் பணம் கொடுக்க வருத்தமில்லை. அவனது மனைவிக்கு ஆசையாய் ஒரு சாக்லேட் வாங்கிக் கொடுத்தால்கூட அவள் அதற்கான பணத்தை ஜிபே செய்யும் காட்சி மனதில் ஓடியது.
அத்துணை வைராக்கியமாய் அவள் மாறிப்போக நானும் இவர்களும் மட்டும்தானே காரணம் என மண்டையில் சுத்தியலால் அடித்ததுபோல உறைத்தது இப்போது.
கூடவே கணக்கு வழக்கு பாராது இத்துணை தூரம் தனக்காகச் செய்யும் அண்ணனின் மனைவியைத் தரக்குறைவாகப் பேசுவது அண்ணனைப் பேசுவதற்குச் சமமென மகிழினிக்குத் தோன்றாததுகூட தான் வசுமதி விஷயத்தில் காட்டிய அலட்சியத்தால்தான் எனப் புரிந்துபோனது அவனுக்கு.
கணவன் தனது மனைவியை மதியாவிட்டால், அலட்சியம் செய்தால் அவனது குடும்பத்திலிருக்கும் துரும்புகூட அவளை இகழுமாம்! இதுதான் நிதர்சனம். அதைக் கண்கூடாகப் பார்த்தவனின் இதயம் கசந்து வழிந்தது.
“அதுக்கு முன்னாடி ஒரு கேள்விக்குப் பதில் சொல்லு. வசு எந்த விதத்துல அல்பம்?”
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவன் வினவிய விதத்தில் அன்னையும் மகளும் முதலில் அதிர்ந்துபோனார்கள். வசுமதியைப் பற்றி போனில் அவ்வளவு குறைகள் சொன்னாலும் வாயை மூடிக்கொண்டு கேட்பவனா இவன்?
“இன்னும் பதில் வரல. எந்த வகையில என் பொண்டாட்டி உன் கண்ணுக்கு அல்பமா தெரிஞ்சா?”
மகிழினி மலங்க மலங்க விழித்தாள். அவளுக்குச் சட்டெனப் பதில் சொல்ல வரவில்லை. தொண்டையை யாரோ இறுகப் பற்றிப் பேசவிடாது செய்ததுபோல அப்படி ஒரு திணறல்.
“அவ பேசுறதை நீங்களும் கேட்டுக்கிட்டு சும்மா இருந்தீங்க. எந்த வகையில வசு அல்பமா நடந்துக்கிட்டானு சொல்லுங்கம்மா” இப்போது குமுதவல்லியின் முகம் மாறிப்போனது.
“விடுய்யா! புள்ளத்தாய்ச்சி ஏதோ வேகத்துல பேசிட்டா” எனச் சமாளிக்கப் பார்த்தார்.
வசீகரனின் கோபம் இன்னும் அதிகமானது அவரது சமாளிப்பில்தான்.
“புள்ளத்தாய்ச்சிங்கிற ஒரு காரணத்தை வெச்சு இவ என்ன வேணும்னாலும் பேசலாமா? இவ பேசக்கூடாத பேச்செல்லாம் பேசுனதாலதான் சர்வா இன்னைக்கு வரைக்கும் கோவமா இருக்குறார். இப்ப என் பொண்டாட்டியைப் பத்தியும் தரக்குறைவா பேசுறா. கேட்டுட்டு நீங்களும் குறை சொல்லுறீங்க? எங்க வாழ்க்கையில நீங்க ரெண்டு பேரும் தலையிடுறதுல அவளுக்கு விருப்பமில்ல. உங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு, சில நேரம் என்னோட சுபாவத்தால நான் வசுவை நிறைய காயப்படுத்திட்டேன். அந்த ஆதங்கத்துலதான் அவ ஒரேயடியா உங்ககிட்ட பேசுறதை நிறுத்திட்டா. பணத்தைப் பணமா நினைக்காம நான் இங்க அள்ளிக் குடுத்திருக்கேன். ஆனா இன்னைக்கு என் பொண்டாட்டி என் புள்ளையைச் சுமந்துட்டிருக்கா. அவளுக்கு என்னால எதுவுமே செய்யமுடியல. குமுதவல்லி பெத்த மகன்கிட்ட இனிமே அவ எந்நாளும் பழைய வசுமதியா வாழத் தயாரா இல்ல. அந்த நிலைமையிலயும் வளைகாப்புக்குப் போகக் கூடாதுனு அவ சொல்லலை. அல்பப்புத்தி உள்ளவ அப்பிடித்தானே சொல்லியிருப்பா. வீணா செலவு பண்ணாத, பேறுகாலத்துக்கு ஆகும்னு தினமும் சொல்லுவீங்க. இப்ப நான் சேர்த்து வெச்ச ஒரு ரூபாயைக்கூட என் புள்ளைக்காக நான் பயன்படுத்த முடியாத நிலைமையில நிக்குறேன். ஆனா உங்க ரெண்டு பேருக்கும் என் பொண்டாட்டியை குறை பேசியே ஆகணும்ல”
மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தான் வசீகரன். குமுதவல்லியும் மகிழினியும் பேயறைந்தாற்போல அமர்ந்திருந்தார்கள். என்ன பதில் பேச முடியும் அவர்களால்?
தாங்கள் வசுமதியைப் பற்றி என்ன பேசினாலும் மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே தான் சிக்கிக்கொள்ளக் கூடாதென ஒதுங்கி நின்ற வசீகரனைத்தானே அவர்களுக்குத் தெரியும்.
முதல் முறையாக மனைவிக்காகப் பரிந்து பேசும் வசீகரன் இப்போதுதான் அவர்களுக்கு அறிமுகம். இவனைச் சமாளிக்க அவர்கள் யோசிப்பதற்குள் அடுத்த இடியை இறக்கினான் வசீகரன்.
“இவ சர்வாவகிட்ட அருவருப்பான வார்த்தைகளைப் பேசி அதோட பலனாதான் இங்க வந்து உக்காந்திருக்கா. இவ வாழ்க்கையும் அந்தரத்துலதான் தொங்குது. இந்த நிலைமையிலக்கூட என் பொண்டாட்டியைப் பத்தித் தரக்குறைவா பேசுறானா இவளுக்கு நான் ரொம்ப இடம் குடுத்துட்டேன்னு நினைக்குறேன். இனி இந்த வீட்டுல யாரும் என் பொண்டாட்டியைப் பத்தி மோசமா பேசுனீங்கனா அதோட இந்த வீட்டுக்கும் எனக்குமான உறவு முடிஞ்சுதுனு நினைச்சுக்கோங்க. அவளும் நானும் வேற வேற இல்ல. அவளைக் கேவலமா பேசுறது என்னைக் கேவலப்படுத்துறதுக்குச் சமம். புரிஞ்சுதா?”
அவன் கர்ஜித்ததில் அதிர்ந்துபோன மகிழினிக்கு அழுகையே வந்துவிட்டது. வசீகரன் அதைக் கண்டு சிறிதும் இளகவில்லை. ஒரு காலத்தில் இவள் சொல்வதை எல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றிய சர்வானந்தனை என்னவெல்லாம் பேசிவிட்டு வந்திருக்கிறாள் என்ற கடுப்புதான் இப்போதும்.
“இங்க பாரு மகிழ்! வாயை அடக்கக் கத்துக்க. உன்னால நல்லபடியா பேசமுடியாதுனா நீ ஒரேயடியா பேசாமலே இருந்துடு. அசிங்கமா பேசி நம்மளைப் பெத்தவங்க வளர்ப்பைக் கேள்விக்குறியாக்காத. வயித்துல புள்ளை இருக்குறப்ப மனசுல நல்ல எண்ணம் இருக்கணும். இல்லனா அதுவும் புள்ளையைப் பாதிக்கும். கொஞ்சமாச்சும் பக்குவமா மாறப் பாரு” என்று எச்சரிக்கும் தொனியில் தங்கைக்கு அறிவுரை சொன்னவன் அடுத்து திரும்பியது அன்னையிடம்.
“நீங்க சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டுனதுக்கு என் பொண்டாட்டிக்கு நல்ல மரியாதையைக் குடுத்திட்டீங்கம்மா. ரொம்ப சந்தோஷம்” என்று கரம் கூப்பிச் சொன்னவன் விரக்தியோடு திரும்பியபோது இங்கே நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்ற தந்தையைப் பார்த்துத் திகைத்துப்போனான்.
தன்னைத் தவறாக எண்ணிவிடுவாரோ என்ற பதபதைப்பு அவனது நரம்புகளில் ஓடியபோதே கமலநாதன் மகனின் தோளில் தட்டிக்கொடுத்தார்.
“இதெல்லாம் நீ சொன்னா மட்டும்தான் இவங்களுக்கு உறைக்கும் வசீ. இன்னைக்குத்தான் நீ நல்ல காரியம் பண்ணிருக்க. பஸ்ஸுக்கு டைமாகுது. நீ கிளம்பு. நான் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வர்றேன்” என்றார் முகம் விகசிக்க.
வசீகரன் ஆமோதிப்பாய்த் தலையாட்டிவிட்டுத் தனது அறைக்குள் போய்விட்டான். கூடத்தில் அமர்ந்திருந்த குமுதவல்லியையும் மகிழினியையும் அதிருப்தியாய்ப் பார்த்த கமலநாதன் தனது தோளில் கிடந்த துண்டை உதறிவிட்டு அங்கிருந்து போனார்.
அதே நேரம் ‘ப்ளூட்டோ ரெசிடென்ஷியல் கம்யூனிட்டி’யில் நிதானமாய்ப் பழச்சாறைப் பருகிக்கொண்டிருந்தாள் வசுமதி. உபயம் காமாட்சி. இது காபி டைம். ஆனால் குழந்தைக்கு கஃபைன் ஆகாது என்பதால் இப்போதெல்லாம் வசுமதி காபி அருந்துவதில்லை.
பழச்சாறு, சூப் என்று தனது உணவுமுறையைக் குழந்தைக்காக மாற்றிக்கொண்டாள். வெளிச் சாப்பாடு, துரித உணவு, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனி என அனைத்துக்கும் நூற்றி நாற்பத்து நான்கு தடையுத்தரவு அந்த வீட்டில்.
முலாம்பழத்தைச் சாறு பிழிந்து ப்ரஷாந்தியிடம் கொடுத்துவிட்டிருந்தார். அதைத்தான் அவள் அருந்திக்கொண்டிருந்தாள்.
ப்ரஷாந்தி அவளுக்காகச் சமையலறையில் இனிப்பு அவல் செய்துகொண்டிருந்தாள். நெய் வாசனையுடன் தேங்காய், வெல்லம், ஏலக்காய் நறுமணத்தோடு நாவுக்குத் தித்திப்பாய் வயிற்றுக்கு நிறைவாய் இருக்கும் இனிப்பு அவல் வாரத்தில் ஒருநாள் மாலைச் சிற்றுண்டி வசுமதிக்கு.
ஆளுக்கு ஒரு கிண்ணத்தில் அவலும் ஸ்பூனுமாய் யூட்டிலிட்டி ஏரியாவில் அமர்ந்தபோது வசுமதியின் மொபைலில் நோட்டிஃபிகேஷன் வந்தது. வாட்ஸ்அப் செய்தியை அனுப்பியிருந்தான் வசீகரன்.
தான் திருநெல்வேலியிலிருந்து கிளம்பிவிட்டதாக அனுப்பியிருந்தான். வளைகாப்பு நல்லபடியாக முடிந்தது என்ற தகவலையும் சொல்லியிருந்தான்.
“சரி! வாங்க”
அவ்வளவுதான் அவளுடைய பதில். உடனடியாக ஊதா நிற டிக் வந்தது. வசுமதியின் இதழ்கள் நக்கலாய் வளைந்தன.
இவ்வளவு அக்கறையும் கவனமும் தனக்காக அவன் கொடுப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் ஆற்றாமை எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. இந்த அக்கறையும் தனிப்பட்ட பிரத்தியேக கவனமும் வேண்டுமென திருமணமான புதிதில் அவள் போராடியிருக்கிறாள்.
அப்போதெல்லாம் வசீகரனின் பார்வைக்கு அது சிறுபிள்ளைத்தனமாய்த் தெரிந்தது. இப்போது அவளது கவனம் தனக்கு வேண்டுமென அவன் போராடுகிறான். வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போல அவனது இடத்தில் அவளையும் அவளது இடத்தில் அவனையும் மாற்றி வைத்திருந்தது.
வசுமதியின் சிரிப்பை வைத்தே அவளது மனவுணர்வுகளைக் கிரகித்துக்கொண்டாள் ப்ரஷாந்தி. அவள் மணமாகி வந்ததிலிருந்து இதோ இப்போது வரை அவளுடன் நட்பு பாராட்டுபவளுக்கு ஓரளவுக்கு அவளது உடல்மொழி அத்துப்படி.
அவளுக்கும் வசீகரனுக்குமிடையே ஏதோ ஒன்று சரியில்லை என்பதை காமாட்சியும் ப்ரஷாந்தியும் அறிந்தே இருந்தார்கள். வசுமதியிடம் அதைப் பற்றிக் கேட்டு அவளைச் சங்கடத்துக்குள்ளாக்க விரும்பாமல் அவளிடம் இயல்பாய்ப் பழகுவது, மனதுக்கு இதம் தரும் இடங்களுக்கு அவளை அழைத்துச் செல்வதென அவளை முடிந்தவரை மகிழ்ச்சியாய் நடமாட வைத்தார்கள்.
இதோ இப்போது அவள் சிரித்ததுகூட மகிழ்ச்சியால் இல்லை. அதில் ஒரு ஓரமாய் ஏதோ ஒரு விரக்தி ஒளிந்திருக்கிறது. ஆனால் இப்போதும் ப்ரஷாந்தி அதைப் பற்றி வினவவில்லை.
“ஆர்.ஜே ஹர்ஷா இருக்குறான்ல, அவன் ஃப்ரைடே நமக்கு ட்ரீட் தரப்போறான். லஞ்ச், டின்னர் ரெண்டுமே.”
“எதுக்கு?”
“அவனுக்குக் கல்யாணம் வசு. லவ் மேரேஜ்”
ப்ரஷாந்தி கண்சிமிட்டியதும் சட்டென நகைத்துவிட்டாள் வசுமதி.
“பாவம்! இவ்ளோ நாள் சந்தோஷமா இருந்தான்” போலியானச் சோகத்தோடு சொன்னாள் அவள்.
“ஏன் வசு காதல், கல்யாணம் எல்லாம் அவ்ளோ மோசமானதா?” – ப்ரஷாந்தி.
வசுமதியிடம் நீண்டதொரு பெருமூச்சு.
“யார் சொன்னாங்க மோசம்னு? அதெல்லாம் அற்புதமான விஷயம் ப்ரஷா. ஆனா பிரச்சனை எங்க உருவாகும் தெரியுமா? காதலிக்கிறப்பவும் கல்யாணம் முடிஞ்ச அப்புறமும் அந்த உறவுல ஒருத்தரோட நேசம் இன்னொருத்தரால அலட்சியப்படுத்தப்படுறப்பதான். அவங்களிப் பின்னாடி தள்ளிட்டு ப்ரையாரிட்டி லிஸ்டுல மத்த எல்லாரையும் முன்னிறுத்துறப்பதான் பிரச்சனையாகும். ஒரு அழகான குடும்பத்தை உருவாக்கணும்னு இணைஞ்ச ரெண்டு பேருக்கும் அவங்களோட லைஃப் பார்ட்னர்தான் எப்பவும் முக்கியமான நபரா இருக்கணும். அதுதான் நியாயமும்கூட. மத்த எல்லாரும் அதுக்கு அப்புறம்தான். இதைப் புரிஞ்சுக்கிட்டா காதலும் மோசமாகாது. கல்யாணமும் மோசமாகாது”
அவள் சொல்லி முடிக்கவும் கைதட்டினாள் ப்ரஷாந்தி.
“ஆர்.ஜே ஆனதுல இருந்து நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் முத்து முத்தா இருக்கு. நீதான் இந்தக் காலத்துக்கு ஏத்த ரிலேஷன்ஷிப் அட்வைசர்.”
“பின்ன? எங்க ஊரு பக்கத்துல எல்லாம் புதுசா கல்யாணம் ஆனவங்களுக்குள்ள பிரச்சனை வந்துச்சுனா பழைய தலைமுறை ஆளுங்க என்ன சொல்லுவாங்க தெரியுமா? அவன் எவ்ளோ நாள் இப்பிடி இருந்துடுவான்? அவங்கம்மா அப்பா போன அப்புறம் எல்லாம் உன் கைக்கு வரும்னுவாங்க. ஒரு மனைவி சந்தோஷமா வாழணும்னா தன்னோட மாமனார் மாமியார் சாகுற வரைக்கும் காத்திருக்கணும்ங்கிறது எவ்ளோ அபத்தம்? அதை விட அபத்தம், பெரியவங்கனு சொல்லிக்கிறவங்க செத்தாதான் அந்த வீட்டுக்கு வந்த மருமகள் நிம்மதியா வாழமுடியும்ங்கிற கசப்பான நடைமுறைதான். இதெல்லாம் நடந்து முடியுறப்ப அந்த மனைவிக்கு நாற்பது வயசு கடந்துடும். கல்யாணம் ஆன ஆரம்பக் கட்டத்துல இருந்த அபிலாஷைகளும், கனவுகளும் அவங்க மனசுல இருந்து மறைஞ்சே போயிடும். அதுக்கு அப்புறம் புருஷன் தனக்கு முன்னுரிமை குடுத்தா என்ன குடுக்காட்டி என்னங்கிற விரக்தி வந்துடும். இப்பிடி பிரச்சனையோடவும் விரக்தியோடவும் வாழுறதுதான் வாழ்க்கைனா அந்த வாழ்க்கை எவ்ளோ கொடுமையானது? பொறுமையா காத்திரு, அட்ஜஸ்ட் பண்ணுனு சொல்லிச் சொல்லி நம்மளை அவங்க நகர்த்துறது கடனேனு வாழுற ஒரு வாழ்க்கைக்குத்தான். நாம புத்திசாலித்தனமா இருந்தா அந்த விரக்தியான வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயம் நமக்கு இல்ல பாரு”
சொல்லிவிட்டு ப்ரஷாந்தியிடம் ஃபிஸ்ட் பம்ப் கொடுத்தாள் வசுமதி.
சரியாய் அந்நேரத்தில் அவளது எண்ணங்களையும் கனவுகளையும் மதிக்கும் ஒருவனாய், தனக்காக இனி எக்காலத்திலும் துணைநிற்கும் ஒருவனாய் மாறி வசீகரன் சென்னைக்குத் திரும்பப் பேருந்து ஏறியிருந்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


