“காலேஜ் முடிஞ்சு கடைசி நாள் வெளிய வரும்போது மனசே சரியில்ல. நம்ம குழந்தைத்தனத்தோட ஒரு பாதியை ஸ்கூல் முழுங்கிடுச்சுனா இன்னொரு பாதியை காலேஜ் முழுங்கிடுது. இனிமே எனக்கான அடையாளத்தைத் தேடி நான் ஓடணும். நீயும் லண்டன்ல இப்பிடித்தானே ஃபீல் பண்ணுவ?”
–வானதியின் கடிதம்…
அருள்மொழியின் மென்மையான மிரட்டலுக்கு ஜெயசந்திரன் அடிபணிந்தாக வேண்டிய கட்டாயம். அருள்மொழி கட்சியில் இணையப் போகிறான் என்ற செய்தி கட்சிக்குள்ளும் ஊடகங்களிலும் மெதுவாகப் பரவியது, கட்சி உறுப்பினர்களுக்கும் விசுவாசிகளுக்கும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது முக்கியக் காரணம்.
தேர்தலுக்காக உறுப்பினர்களைக் கூட்டி மாநாடு நடத்துவது தமிழக முன்னேற்றக் கழகத்தின் வழக்கம். அந்த வழக்கத்தின்படி திருச்சியில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் அருள்மொழி கட்சியினர் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டான்.
கட்சிக்குள் சுந்தரமூர்த்திக்கு இருக்கும் ஆதரவை அவன் மேடையில் ஏறியதும் கரகோஷத்தாலும் ஆர்ப்பரிப்பாலும் வெளிக்காட்டினார்கள் அவரது விசுவாசிகள். அந்தக் கரகோஷமும் ஆர்ப்பரிப்பும் ஜெயசந்திரனுக்குக் கொடுத்த எரிச்சலை வார்த்தையால் விவரிக்க முடியாது. இதே போல ஒரு மாநில மாநாட்டில் சுந்தரமூர்த்தியை இதே கூட்டம் கொண்டாடியது அவரது கண்களில் படமாய் ஓடியது.
கூப்பிய கரங்களை உயர்த்திப் பெருங்கூட்டத்தை நோக்கி வணங்கினான் அருள்மொழி. கூட்டத்தினரோடு அமர்ந்திருந்த அகத்தியனுக்கு அவனை மேடையில் பார்ப்பதே இமாலய மகிழ்ச்சியாய்!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஜெயசந்திரன் கட்சியின் துண்டினை அவனது கழுத்தில் போட்டுக் கட்சியின் முக்கிய உறுப்பினனாய் அருள்மொழியை அங்கீகரிக்கவும், அலைகடல் எனத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஆரவாரம்! கட்சியின் முக்கியத் தலைவர்கள், பேச்சாளர்களின் அடுக்குமொழி அரசியல் பேச்சை மேடையில் அமர்ந்தபடி கேட்ட அருள்மொழிக்கு, அவர்களின் பேச்சில் தனது தந்தையின் பெயர் வந்து போன ஒவ்வொரு முறையும் அவனையறியாமல் கண்கள் கலங்கின.
இறுதியாய் அவனது முறை! அவனுக்கு இந்த அடுக்குமொழி அரசியல் பேச்செல்லாம் வராது. ஆனால் இப்போது இருக்கும் நெகிழ்ச்சியும் தந்தைக்கு நடந்த துரோகத்தால் உண்டான வேதனையும் அவனைப் பேசுவதற்கு உந்தின. மைக் முன்னே வந்து நின்றவன் கைகூப்பி வந்திருந்தவர்களை மீண்டும் ஒரு முறை வணங்கினான்.
“இங்க கூடியிருக்குற கழகத் தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டோட தலையெழுத்தையே தீர்மானிக்கப் போற இந்தத் திருச்சி மண்ணுல கூடியிருக்கிற பெரியவங்க, தாய்மார்கள் எல்லாருக்கும் என்னோட முதல் வணக்கம்!
உங்கள்ல நிறைய பேருக்கு இந்தக் கேள்வி வரலாம். ‘லண்டன்ல அவ்வளவு வசதியா வாழ்ந்துட்டு இருந்த இந்த அருள்மொழிக்கு, இங்க என்ன வேலை’னு. அவங்க எல்லாருக்கும் நான் ஒன்னு சொல்லிக்கிறேன். நான் இங்க ஒரு தனி மனுஷனா வரல. இந்த இயக்கத்துக்காகத் தன்னோட ரத்தத்தையும் வியர்வையையும் சிந்துன என் அப்பா சுந்தரமூர்த்தியோட பாதியா வந்திருக்கேன்!
அப்பா அடிக்கடி சொல்லுவார்: ‘அரசியல்ங்கிறது பதவியைப் பிடிக்கிறதுக்கான இடம் மட்டுமில்ல, ஓட்டு போட்ட மக்களுக்கு வேலை செய்யுறதுக்கான இடமும் கூட’னு சொல்லுவார். அவர் எந்த இடத்துல தன்னோட வேலையைப் பாதியில விட்டாரோ, அங்க இருந்து அவரோட பயணத்தைத் தொடரத்தான் நான் வந்திருக்கேன்.

என் அப்பா விட்டுட்டுப் போன கனவுகள், அவர் போட்ட திட்டங்கள், இந்த மாநிலத்தோட கடைசி மனுஷனுக்கும் போய் சேர வேண்டிய உரிமைகள். இதையெல்லாம் நான் பாதியில விடமாட்டேன்” என உறுதியானக் குரலில் சொன்னவன் மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருக்கும் ஜெயசந்திரனைத் திரும்பிப் பார்த்தான் புன்னகையோடு.
“இந்த இயக்கத்தோட தலைமையோட சேர்ந்து, ஒரு புதுப் பாதையை, நேர்மையான பாதையை நாம உருவாக்கப் போறோம். துரோகம் தற்காலிகமா ஜெயிக்கலாம், ஆனா தர்மம் மட்டும்தான் என்னைக்குமே நிலைச்சு நிக்கும். என் அப்பா சுந்தரமூர்த்தி பேரைச் சொல்ற ஒவ்வொரு தொண்டனும் என் சொந்தச் சகோதரன்தான். உங்க வீட்டுப் பிள்ளையா, உங்களோட நம்பிக்கையா, அப்பாவோட லட்சியங்களை நிறைவேத்த இதோ நான் களம் இறங்கிருக்கேன். வாங்க! நாம இணைஞ்சு வேலை செய்யலாம்!”
அவனது முதல் அரசியல் பேச்சு வெகு இயல்பாய்ப் பாமர மக்களுக்கும் புரியும் விதமாய் அமைய, அன்றைய தினம் முதல் கட்சியில் அருள்மொழிக்கான அலை அடிக்க ஆரம்பித்தது. ஜெயசந்திரனோ திருடனுக்குத் தேள் கொட்டியது போல கமுக்கமாக இருந்தார். இடையே தர்மலிங்கத்திடம் காயவும் தவறவில்லை.
“அவனுக்கு எப்பிடி நம்ம கணக்கு வழக்கு பத்தி தெரிஞ்சுது? என்ன? ஒரே நேரத்துல ரெண்டு பேருக்கும் விசுவாசமா தர்மா?”
“என்னைப் பத்தி நீங்க இப்பிடி பேசலாமா தலைவரே? உங்களுக்கு லண்டன்ல தம்பிக்கு இருக்குற பவர் பத்தி தெரியல. எப்பிடியோ மோப்பம் பிடிச்சிட்டார் தலைவரே! நீங்க எப்பவும் என்னை நம்பலாம். நான் வேணும்னா அருள் கிட்ட பேசட்டுமா?”
“இனி பேசி என்ன பிரயோஜனம்? அவன் கட்சிக்குள்ள நுழைஞ்சிட்டான். சுந்தரமூர்த்தி நியாயம் நேர்மைனு பேசுவான். இவன் எமகாதகனா இருக்கான். இவனை அவ்ளோ ஈசியா டீல் பண்ண முடியாது. நான் உளவுத்துறைய வச்சு அவனைப் பாத்துக்குறேன். நீ கணக்கு வழக்கை கவனமா பாத்துக்க.”
அருள்மொழியின் அரசியல் பிரவேசமும் அரசியல் ஈடுபாடும் வளர்ந்தது போலவே அவனுக்கும் வானதிக்குமான உறவும் அழுத்தமாய் முன்னேறியது. அவன் கொடுத்த பட்டியலில் இருப்பவர்களை எல்லாம் நேரிலோ தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு என்னென்ன பிரச்சனைகள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததென விசாரித்துக் கொண்டிருந்தாள் வானதி.
அவளுக்குக் கிடைத்த பதில்கள் – கட்சியில் சுந்தரமூர்த்திக்கு ஆதரவு பெருகியதில் ஜெயசந்திரனுக்கு உண்டான அதிருப்தியால் அவர் சுந்தரமூர்த்தியின் குடும்பத்தை அழிக்க நினைத்திருக்கலாம். சுந்தரமூர்த்தியின் பெற்றோரும் ஜாதிப் பெருமையில் ஊறித் திளைத்திருந்ததால் இது கௌரவத்துக்காக நடந்தேறிய படுகொலையாக இருக்கலாம்.
இரண்டுக்குமிடையே சிக்கிக்கொண்டாள் வானதி. அவளுக்கு நினைவிருந்தது எல்லாம் இருவரும் நட்பாய்ப் பழகிய தருணங்களே! சுந்தரபாண்டியபுரத்தில் சுந்தரமூர்த்தி கட்டிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்வு நேற்று நடந்தது போல ஞாபகம் இருந்தது.
“பூ வைக்கத் தான் விடேன்.”
“தலை வலிக்குது மீனா அத்தை.”
“கொஞ்ச நேரம் தான், ஃபங்ஷன் முடிஞ்சதும் எடுத்துடலாம் வானும்மா.”

மீனாட்சி அவளைக் கொஞ்சிய தருணங்களின் நினைவலைகள்! தந்தையும் சுந்தரமூர்த்தியும் எப்போதும் போல ஜோக் அடித்துச் சிரித்தது, மீனாட்சியும் கயல்விழியும் ஒன்றாய் வந்தவர்களை வரவேற்றது, திருவிழா போல வந்த கூட்டம் என எதுவுமே அன்றைய இரவில் நடந்தேறவிருக்கும் மாபெரும் விபத்துக்கான அறிகுறியே இல்லை.
அருள்மொழி கொடுத்த பட்டியலில் இருப்பவர்கள் ஊகமாகவோ தீர்மானமாகவோ குற்றம் சாட்டியது ஜெயசந்திரனை. ஆதாரப்பூர்வமான பதில்கள் எதுவுமில்லை. தந்தைக்கும் சுந்தரமூர்த்திக்கும் இடையிலான நட்பை நேரில் கண்டவளுக்கு ஊகங்களை நம்பத் தோன்றவில்லை.
அந்தப் பட்டியலில் மிச்சமிருந்தவர் அருள்மொழிக்குச் சிகிச்சையளித்த மருத்துவர் மட்டுமே! அவரைத் தொடர்புகொள்ள முயன்ற போதெல்லாம் அவர் வெளிநாடுகளில் இருப்பதாகப் பதில் வந்தது. அவரது இந்திய வருகைக்காக அவள் காத்திருந்தாள். அந்த இடைவெளியில் ஆதித்யன் தங்கையின் மனதைக் கலைப்பதற்கான வேலையில் ஈடுபடலானான்.
“உனக்கு வாழ்க்கை குடுக்குறேன்னு வந்தவன் இன்னைக்குக் கட்சியையே முழுங்கப் பாக்குறான். அவன் உன்னை மேனிபுலேட் பண்ணுறான்னு மான்கடா கேஸ் விசயத்துலயே தெரியுது. நீதான் அருள் அருள்னு பைத்தியம் மாதிரி பினாத்துற. அவன் ரொம்ப தெளிவா உன்னை பயன்படுத்துறான்.”
முதலில் ஸ்திரமாக மறுத்தவள் நாட்கள் செல்ல, தன்னை உண்மையைத் தேடச் சொன்னது கூட மேனிபுலேஷனின் இன்னொரு வடிவமோ என யோசிக்க ஆரம்பித்திருந்தாள். முதல் நான்கு மாதங்களில் தெளிவாய் நடுநிலையாய் யோசித்த அவளது மனம் அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு பக்கமாய்ச் சாயத் தொடங்கியது.
குறிப்பாய் அவள் தென்காசி சென்று விசாரித்து விட்டுத் திரும்பிய தினத்தில் அருள்மொழி அவளிடம் பேசியபோது அவளது ஆற்றாமை பதிலாய் வெடித்துவிட்டது.
“அங்க எல்லாரும் உன் தாத்தா பாட்டியை ஜாதி வெறி பிடிச்சவங்கனு சொன்னாங்க. பிரணதி சித்தி செஞ்ச காரியத்தால அவமானப்பட்டதா நினைச்சு அவங்க கூட ஆள் வச்சு உன் ஃபேமிலிய கொல்லச் சொல்லிருக்கலாம்.”
“நான் தான் சொன்னேன்ல. உண்மை தெரிஞ்சா கூட நீ ஒத்துக்கமாட்டனு. பாசம் இருக்கலாம். ஆனா உனக்கு இருக்குறது கண்மூடித்தனமான நம்பிக்கை” என வெடித்தான் அருள்மொழி.
“உன்னையும்தான் நான் கண்மூடித்தனமா நம்புறேன். ஆனா நீ வேணும்னே என்னை மேனிபுலேட் பண்ணுறியோனு தோணுது.”
“என்ன மேனிபுலேட் பண்ணிட்டேன் உன்னை? சொல்லுடி.”
அருள்மொழி கோபத்தில் கொந்தளிக்க, வானதி அவனது காதலை நாடகமென்று சொன்ன அடுத்த நொடியில் அவனது பார்வையில் அசாதாரணமான இறுக்கம். மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டவன்
“நடிச்சேனா? நான் உன் கூட வாழுறதா நம்புறேன். உனக்கு நடிச்சதா தோணுதுனா அடிப்படையிலயே உனக்கு நம்ம ரிலேஷன்ஷிப்ல நம்பிக்கை இல்லனு தெரியுது. இனி உன் கிட்ட எந்த உண்மையையும் நான் அழுத்தமா சொல்ல விரும்பல. உன்னைப் பத்தி யோசிச்சு என் டைமை நான் இனி வேஸ்ட் பண்ணிக்குறதா இல்ல. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு” என்றான் மறைக்கப்பட்ட ஆத்திரத்தோடு.
“நீ ஏன் யோசிக்கணும்? உன் டார்கெட் கட்சிக்குள்ள நுழையுறது. அது நடந்ததுக்கு அப்புறம் உனக்கு நான் ஏன் யூஸ் ஆகப்போறேன்? ஆனா ஒன்னு, கட்சில காலடி எடுத்து வச்சதால மட்டும் நீ பெரிய அரசியல் அடையாளமா மாறிடலாம்னு கனவு காணாத. அரசியல்ல ஏபிசிடி கூட தெரியாத நீ செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைத் தூரமா நின்னு போட்டோ எடுக்குறதோட சந்தோஷப்பட்டுக்க.”
அந்த உரையாடலுக்குப் பிறகு அதிகம் பேசிக்கொள்ளாமல் போனார்கள் இருவரும். இந்நிலையில்தான் வானதிக்கு மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போனது நினைவுக்கு வந்தது. உறுதி செய்யாமல் யாரிடமும் பகிரவேண்டாம் என்ற எண்ணம். தனியே மருத்துவமனைக்குச் செல்ல விருப்பமின்றி வேதவதியைத் தன்னோடு அழைத்துக்கொண்டு போனாள். ஆனால் மருத்துவர் வராததால் மறுநாள் தள்ளிப்போனது கர்ப்ப உறுதி சோதனை. முகிலகத்திற்குப் பத்திரமாக வந்துவிட்டாளா என்று விசாரித்த வேதவதியிடம் அழைப்பை முடித்துக்கொண்டாள் வானதி.
“சரி வேதா, நாளைக்குப் பாக்கலாம். நீ தூங்குடி.”
வானதி மொபைலை வைத்த சமயத்தில் அந்த அறைக்குள் பிரவேசித்தான் அருள்மொழி.
புருவங்கள் நெரிய அவளைப் பார்த்தவன் “ஹாஸ்பிட்டல் போனியா நீ?” என்று கேட்க,
“ஆமா” என அசிரத்தையாகச் சொன்னவள் அவனை அலட்சியம் செய்ய முற்பட்டாள்.
“ஒருத்தர் பேசுறப்ப அவங்க கண்ணைப் பாத்து பதில் சொல்லணும்னு வியாக்கியானம் பேசுவியே. இப்ப நீ என்ன செய்யுற?” என்று எரிச்சலோடு கேள்வியொன்று பிறந்தது அவனிடம்.
வானதி அவனது கண்ணைப் பார்த்து “ஆமா! ஹாஸ்பிட்டலுக்குப் போனேன். போதுமா?” என்று சொல்லிவிட்டு நகர, அருள்மொழி கடுப்போடு அவளது கரத்தைப் பற்றி இழுத்ததில் வேகமாக வந்து அவன் மீது மோதிக்கொண்டாள் வானதி.
அந்த வேகத்திலும் அனிச்சை செயல் போல அவளது ஒரு கரம் வயிற்றைப் பிடித்துக்கொண்டதுதான் ஆச்சரியம்.
“என்ன தான் பிரச்சனை உனக்கு?” என்று ஆரம்பித்தவனின் புஜத்தில் பலமாக அடித்தவள்
“முதல்ல என் கையை விடு. மலைமாடு மாதிரி வளர்ந்தா மட்டும் போதுமா? அறிவு வேண்டாம்?” என்று சிடுசிடுத்தவண்ணம் விலகினாள்.
அப்போதும் அவளது ஒரு கரம் வயிற்றில் படிந்திருக்கவும் யோசனையோடு “வயிறு எதுவும் வலிக்குதா? அதுக்குத்தான் ஹாஸ்பிட்டல் போனியா” என வினவினான் அருள்மொழி.
“நான் ஹாஸ்பிட்டல் போனதைச் சொன்ன ஸ்பை எதுக்குப் போனேன்னு சொல்லலையா?”
“ஸ்பை எல்லாம் இல்ல. அச்சு தான் சொன்னான். எதுக்குனு சொல்லுறதுக்குள்ள எனக்கு ஒரு கால் வந்திடுச்சு. பேசிட்டே நான் இங்க வந்துட்டேன். இப்ப நீ சொல்லு. எதுக்காகப் போன?”
வானதி சொல்வேனா என்பது போல பிடிவாதமாக நிற்கவும் “நீ என் மண்டையைச் சூடாக்குற வானதி. எதுக்குப் போனனு சொல்லித் தொலை. இல்லனா நான் அச்சுவுக்கே கால் பண்ணிக் கேட்டுக்குறேன்” என்றவன் பொறுமையின்றி மொபைலை எடுத்து அட்சரனின் எண்ணுக்கு அழைக்க ஆயத்தமானான்.
“எனக்கு நான் பிரெக்னெண்டா இருக்குறேனோனு டவுட்டா இருந்துச்சு. அதான் செக் பண்ணிக்கப் போனேன்.”
வானதியிடமிருந்து பதில் வரவும் மொபைலை டீப்பாய் மீது வைத்தான் அருள்மொழி.
அதனருகே நின்றபடியே வானதியைப் பார்த்தவன் “என் கிட்ட சொன்னா நானும் வந்திருப்பேனே?” என்றான்.
“எனக்குச் சொல்லப் பிடிக்கல. சொல்லல.”
தலையைச் சிலுப்பிக்கொண்டு வேறு பக்கம் பார்த்தாள் வானதி. அருள்மொழி வேக எட்டுகளுடன் அவளருகே வந்தவன் “என் கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்ல பிடிக்கும் உனக்கு?” என்று கேட்க, “இதுக்கு நான் வேற ஒருத்தன் பேரைச் சொன்னா நீ தாங்க மாட்ட அருள்” என்றாள் அவள் கண்களில் கோபம் பளபளக்க.
“தெரியுதுல்ல. நான் ஹர்ட் ஆகுறேன்னு தெரிஞ்சும் ஏன்டி உனக்கு இவ்ளோ ஈகோ? நீ தேவையே இல்லாம என் மேல கடுப்பாகுற. விலகி நிக்குற. இதெல்லாம் லூசுத்தனம்னு தோணல?” குனிந்து கைகளை அசைத்து அவன் கேட்டான்.

“உன்னால தான் தப்பே செய்யாதப்ப கூட நான் டெலிவிஷன்ல மன்னிப்புக் கேட்டு அசிங்கப்பட்டேன். அதைப் பத்தி நீ என்னைக்காச்சும் யோசிச்சிருக்கியா? நான் விலகி நிக்கல. உன் சுயலாபத்துக்காக என்னை யூஸ் பண்ணிட்டு விலக்குனது நீதான்.”
“புரொஃபஷனையும் பெர்சனலையும் ஒன்னா சேக்காதனு ஆயிரம் தடவை சொல்லிச் சலிச்சுப் போயிட்டேன் வானதி.”
“எனக்கு அவ்ளோ மெச்சூரிட்டி இல்ல. நான் இப்பிடித்தான். உனக்கு ஞாபகம் இருக்கா? ஸ்கூல்ல பலூன் உடைக்குற காம்படிஷன்ல என்னோட பலூனை என் கிளாஸ்மேட் ஒருத்தன் உடைச்சிட்டான். அந்த நாள்ல இருந்து எனக்கு அவனைச் சுத்தமா பிடிக்காது. அவன் ஃப்ரெண்ட்லியா பேச வந்தா கூட சீ போனு வந்துடுவேன். இப்ப உன்னைப் பாத்தாலும் எனக்கு அப்பிடித்தான் ஆத்திரமா வருது.”
கைகளை நெறித்தபடி சொன்னவள் பின்னர் தன் கன்னங்களில் அடித்துக்கொண்டாள் மெதுவாக.
“ரிலாக்ஸ்! ரிலாக்ஸ் வானதி. கோவப்படாத. டென்ஷன் ஆகாத.”
அருள்மொழிக்கு அவள் செய்வது சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்தது. யாரோ இடையில் புகுந்து குட்டையைக் குழப்பியிருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டான்.
“இங்க பாரு! அந்தப் பலூன் கதை நடந்தப்பவே உன் தலையில நறுக்குனு கொட்டி லூசு மாதிரி பிஹேவ் பண்ணாதனு சொன்னவன் நான். பன்னிரண்டு வயசுல பண்ணுன கிறுக்குத்தனத்தை இருபத்து நாலு வயசுலயும் பண்ணுவேன்னு நீ அடம் பிடிச்சா அப்புறம் நானும் பிடிவாதம் பிடிக்க வேண்டியதா இருக்கும். நாளைக்கு நாம ஒன்னா சேர்ந்து ஹாஸ்பிட்டலுக்குப் போறோம். நீ ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணனும்னு கனவு கூட காணாத. இதெல்லாம் ஒரு ஆம்பளைக்கு பிரீசியஸான மொமெண்ட். என் கிட்ட இருந்து பறிக்கலாம்னு நினைக்காத. எப்பவும் நான் அட்வைசிங் மோட்லயே இருக்கமாட்டேன். சொல்லிட்டேன்.”
கறாராகச் சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் போய்விட்டான் அருள்மொழி.
மறுநாள் அவனோடு மருத்துவமனைக்குச் சென்றவள் கருவுற்றிருப்பதை உறுதி செய்தார் மருத்துவர். வழக்கமான அறிவுரைகள், மாத்திரைகளோடு அங்கிருந்து கிளம்பியவர்கள் முகிலகத்தினரிடம் இச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்கள்.
“நான் அச்சுவை பாத்துட்டு வர்றேன்” என்று அருள்மொழி கழன்றுகொண்டான். கயல்விழியும் ஜெயசந்திரனும் நெகிழ்ச்சியோடு மகளை அரவணைக்க, அவளுடன் இருக்க வேண்டியவனோ நண்பனைத் தேடிப் போயிருந்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

