“ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்னு ஒரு சீரீஸ் நெட்ஃப்ளிக்ஸ்ல ஆரம்பிச்சிருக்கு அருள். அதைப் பாக்குறதுக்காக குரூப்பா சேர்ந்து ஒரு நெட்ஃப்ளிக்ஸ் ஐடியை ஓபன் பண்ணுனோம். சஞ்சய் பாஸ்வேர்டை அடிக்கடி மாத்துறான். அதை ரீஸெட் பண்ணுறதே அச்சுக்குப் பெரிய வேலையா இருக்கு. நீ ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் பாக்குறியா அருள்? அதுல கூட பசங்களோட பிரண்ட்ஷிப் தான் தீம். அதனாலதான் நாங்க அந்த சீரீஸ் கூட ஈஸியா கனெக்ட் ஆகிட்டோம்.”
–வானதியின் கடிதம்…
டெல்லி பயணம் அருள்மொழிக்கு வெற்றியின் ருசியையும், வானதிக்குத் தோல்வியின் அறிமுகத்தையும் கொடுத்தது. ஆனால் இருவரது உறவுக்கு வரமாகச் சில அழகானத் தருணங்களையும் அள்ளிக் கொடுத்திருந்தது. வெற்றி தோல்வியின் தருணங்களைக் காட்டிலும் இருவரும் ‘நாம்’ என இணைந்திருந்த தருணங்களின் இதம் மனதில் உறைந்து போய்விட்டது இருவருக்கும்.
சென்னை வந்ததும் தான் முதல் சங்கடம் ஆரம்பித்தது வானதிக்கு. அவள் மான்கடா குழுமத்திடம் மன்னிப்பு கேட்டாக வேண்டுமே!
தன் பக்கம் தவறில்லை என்றாலும் சின்னச் சின்ன கவனக்குறைவால் தவறவிட்ட வெற்றிக்குப் பலனாய் அவள் இந்தப் பொதுமன்னிப்பைக் கேட்டே தீரவேண்டும். தன்னை மனரீதியாகத் தயார் செய்துகொண்டு ஜஸ்டிஸ் டுடே அலுவலகத்தை அடைந்தாள் வானதி. முக்கிய செய்திகளுக்கு முன்னால் இந்தப் பொதுமன்னிப்பு ஒளிபரப்பானால் சிறப்பு என்பது அவளது எண்ணம்.
ஜஸ்டிஸ் டுடே ஸ்டுடியோவின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் அவள் நுழைந்தபோது ஒரு மயான அமைதி நிலவியது. பிரகாசமான ஸ்டுடியோ விளக்குகள் வானதியின் முகத்தை இன்னும் வெளிச்சமாய்க் காட்டின. அவளது மேஜையில் இருந்த ‘ஆன்-ஏர்’ (ON-AIR) விளக்கு சிவப்பு நிறத்தில் துடிக்கத் தொடங்கியது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

எப்போதும் ஒரு போர்வீரனைப் போலக் கேமரா முன் அமரும் வானதிக்கு, இன்று அந்தச் சின்னஞ்சிறு லென்ஸ் ஒரு துப்பாக்கியின் முனையைப் போலத் தெரிந்தது. நூற்றியைம்பது கோடி அபராதம் அவளை அசைக்கவில்லை. ஆனால் பல கோடி நேயர்கள் முன்னால் தான் சேகரித்த உண்மைகளை ‘பொய்’ என்று ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவளது ஊடக தர்மத்தைக் குத்திக் கிழித்தது.
வானதி தனது சந்தன நிறப் புடவையின் தலைப்பைச் சரிசெய்து கொண்டு, கேமராவைத் தீர்க்கமாகப் பார்த்தாள். அவளது கைகள் மேஜைக்குக் கீழே லேசாக நடுங்கினாலும், முகத்தில் இரும்பின் உறுதியைக் கொண்டு வந்தாள்.
“வணக்கம். இது ஜஸ்டிஸ் டுடே, நான் வானதி ஜெயசந்திரன்…”
அவளது கணீர் என்ற குரல் அந்தச் செய்தி அறையின் அமைதியைக் கிழித்தது. வழக்கமான வேகமில்லை, பாரமான நிதானம் மட்டுமே!
“செய்திகளுக்குள் செல்வதற்கு முன்னால் ஒரு முக்கியமான அறிவிப்பு. கடந்த சில வாரங்களாக எங்களது தொலைக்காட்சியில் ‘நிர்வான் வனம்’ மற்றும் மான்கடா குழுமம் தொடர்பாக ஒளிபரப்பப்பட்ட புலனாய்வுச் செய்திகள் குறித்து, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த உரையை வழங்குகிறேன்.”
வானதி ஒரு நொடி கேமராவிலிருந்து பார்வையை விலக்காமல் இமைகளை அசைத்தாள். ஸ்டுடியோவின் இருட்டில் நின்றிருந்த டெக்னீஷியன்கள் கூட மூச்சைப் பிடித்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மைத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து வழங்க வேண்டியது ஒரு ஊடகத்தின் தார்மீகக் கடமை. அந்த வகையில், மான்கடா குழுமத்தின் மீது நாங்கள் முன்வைத்த சில குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் போதுமான உண்மைத்தன்மை அற்றவை என்றும், சில தரவுகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சட்டத்தின் மேன்மையை மதிக்கும் பொறுப்புள்ள ஓர் ஊடகமாக, நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.”
அவளது தொண்டை ஒரு கணம் வறண்டது. மேஜையின் கீழ் இருந்த தனது நகங்களை உள்ளங்கையில் அழுத்தி அந்த வலியைப் பொறுத்துக் கொண்டாள்.
“எனவே, மான்கடா குழுமத்தின் மீதான அந்தச் செய்திகளால் அவர்களுக்கு ஏற்பட்ட நற்பெயர் இழப்பிற்கு, ‘ஜஸ்டிஸ் டுடே’ தொலைக்காட்சி நிர்வாகம் சார்பாகவும், தனிப்பட்ட முறையில் நிருபரான நானும் எங்களது நிபந்தனையற்ற பொதுமன்னிப்பைக் கோருகிறோம். பிழைகளைச் சரிசெய்து கொண்டு, தொடர்ந்து உண்மையை உரக்கச் சொல்லும் பயணத்தில் எங்களது அறம் தொடரும். இந்தப் பிழை இனியொரு முறை தொடராது. எந்தச் சிறு தரவிலும் இனி ஜஸ்டிஸ் டுடே கவனக்குறைவாக இருக்காது என்ற உறுதியை உங்களுக்கு வழங்கி விடைபெறுகிறேன். இனி இன்றைய தலைப்புச் செய்திகள்…”
எந்த இடத்திலும் கலங்காமல் நிதானமிழக்காமல் நீதிமன்றத் தீர்ப்பை மதித்து மன்னிப்பு கேட்டவள், இறுதியில் தங்களது நிறுவனத்தின் தொழில் தர்மத்தையும் தனது ஆளுமையையும் பதிவு செய்துவிட்டே அந்த உரையை முடித்துக்கொண்டாள்.
ஸ்டுடியோவிலிருந்து வெளியேறியவளை ஓடி வந்து அணைத்துக்கொண்டாள் ஸ்ராவணி. அவளது முதுகில் தட்டிக்கொடுத்தாள்.
“வீ வில் பவுன்ஸ் பேக் முன்னாடி விட ஸ்ட்ராங்கா!” என அவள் சொல்ல, வானதியும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள். அன்றைய தினம் அவளுக்குள் இழையோடிய சங்கடத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தன்னால் நிறுவனத்துக்கும் பண நஷ்டம் அல்லவா!
அந்த மனநிலை மாலையில் வீடு திரும்பும் வரை நீடித்தது. வீட்டுக்கு வந்தவளுக்கு அருள்மொழி இன்னும் வீடு திரும்பாததே ஆச்சரியமாய் இருந்தது. எப்போதும் அவளுக்கு முன்னரே வந்து மடிக்கணினியைத் தட்டிக்கொண்டிருப்பான் அவன்.
அதை விட அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அவனும் அகத்தியனும் அவனுடைய அலுவலகத்தில் ஏதோ முக்கியமான வேலை குறித்துப் பேசுவதாக ஆதித்யன் சொன்னது தான். வானதிக்குள் சின்னதாய் ஒரு கலக்கம்.
எப்போதெல்லாம் அருள்மொழியும் அகத்தியனும் இணைந்து பேசுகிறார்களோ அப்போதெல்லாம் ஏதோ ஒன்று தவறாய் நடந்தேறுவதாய் அவளுக்குள் ஓர் உள்ளுணர்வுத் தூண்டல்.
“இப்ப தானே வீட்டுக்கு வந்த? அதுக்குள்ள எங்க போற?” கயல்விழி கேட்டதற்கு, அருள்மொழி தன்னை அலுவலகத்துக்கு அழைத்திருப்பதாகப் பொய் சொல்லிவிட்டுக் காரைக் கிளப்பினாள் வானதி.
அதே நேரம் ஆக்சன் லீகல் சேம்பர் நிறுவனத்தின் வரவேற்பு லாபியோடு சேர்ந்த அறை, நவீனத்தின் உச்சமாக மின்னினாலும் அங்கு நிலவிய நிசப்தம் ஒரு புயலுக்கான முன்னறிவிப்பாக இருந்தது. கண்ணாடி சுவருக்கு அப்பால் தெரிந்த நகரத்தின் இரைச்சல், உள்ளே நுழைய முடியாமல் தவித்தது. அகத்தியனும் அருள்மொழியும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். மேஜையில் இருந்த காபி கோப்பைகளில் ஆவி பறந்து கொண்டிருந்தது.
“காபி எடுத்துக்கோங்கண்ணா” அவன் சொல்லவும் அகத்தியன் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டான். இருவரது உடற்சோர்வைப் போக்கும் உற்சாக பானமாய், எரிபொருளாய் அந்தக் காபி அந்நேரத்தில் அமைந்துவிட, ஒரு மிடறு காபி உள்ளே போனது.
“நான் லண்டனுக்கு ஹனிமூன் போறதா இருக்குறேன்ணா. ஹனிமூன்ங்கிறது ஒரு பேருக்குத்தான். நான் போறது என் மாமனார் வருமானத்துக்கு அதிகமா சேர்த்த சொத்துகளை எங்கெல்லாம் முதலீடு பண்ணிருக்கார்ங்கிற தகவலைச் சேகரிக்குறதுக்குத்தான்.”
அகத்தியனுக்குக் குடித்துக்கொண்டிருந்த காபி புரையேறியது. இருமி முடித்தவன் அதிர்ச்சியாய் அருள்மொழியைப் பார்த்தான்.
“என்னடா இது? இதெல்லாம் தேவையா? எந்த அரசியல் தலைவர் இதெல்லாம் செய்யல? அரசியல் தலைவர்னு இல்ல, பிசினஸ்மேன், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர்னு எல்லாரும் இந்த வேலையைச் செய்யுறாங்களே. தலைவர் ஒன்னும் புதுசா செய்யலையே?”
அருள்மொழி அகத்தியனை ஆழ்ந்து நோக்கினான். அகத்தியனுக்கும் அவனது தந்தைக்கும் தமிழக முன்னேற்றக் கழகத்தின் மீது இருக்கும் விசுவாசத்தை அவன் அறிவான். இது நிச்சயம் அகத்தியனுக்கு உவப்பாக இருக்காதென அவனுக்குத் தெரியும். மெதுவாய்க் கண்களைக் கூர்மையாக்கி அவனை நோக்கி குனிந்தான்.

“அதெல்லாம் சரிதான்ணா. ஆனா எந்த அரசியல் தலைவன் தன்னோட கட்சிக்கு உழைச்ச ஒரு திறமையான அரசியல்வாதிய குடும்பத்தோட கருவறுத்தான்னு சொல்லுங்க. அப்பிடி ஒரு சம்பவம் தமிழ்நாட்டு அரசியல் வரலாறுல யாருக்கும் நடந்திருக்காது. எங்கப்பா சுந்தரமூர்த்தியைத் தவிர.”
அகத்தியனிடம் பரிபூரண அதிர்ச்சி. அருள்மொழி பொய் சொல்லமாட்டான் என அவன் அறிவான்.
அருள்மொழி சொன்ன சம்பவம் நடந்தபோது அகத்தியனுக்கு வெறும் இருபது வயதுதான். சுந்தரமூர்த்தி பழகுவதற்கு எளியவர் என்பதால் அடிக்கடி அவரது வீட்டுக்குக் கட்சிப் பணிக்காகப் போக வர இருப்பான் அகத்தியன். அவனுக்கும் அருள்மொழிக்குமான சகோதர பந்தம் அப்போதிருந்தே வலுவானதுதான்.
சுந்தரமூர்த்தி மீது இருக்கும் மரியாதைக்குச் சற்றும் குறைவில்லாத மரியாதையை ஜெயசந்திரன் மீதும் அகத்தியன் வைத்திருக்கிறான். அருள்மொழியின் பேச்சை அவனால் சீரணிக்க முடியவில்லை.
“சுந்தரமூர்த்தி ஐயாவுக்கும் தலைவருக்கும் இருந்த நட்பைப் பத்தி தெரிஞ்சுமா இப்பிடி பேசுற அருள்?” என்று ஆற்றாமையோடு வினவினான்.
அருள்மொழி சத்தமாய் நகைத்தான்.
“ஏன்ணா நீ இப்பிடி இருக்குற? உன்னைச் சொல்லி குத்தம் இல்ல. மொத்த அரசியல் வட்டாரமும் இப்பிடித்தானே ஜெயசந்திரனைப் பத்தி நினைச்சிட்டிருக்கு” என்றான் அவன் கசப்பாக.
அகத்தியன் காபி கோப்பையை மேஜையில் வைத்தான். அவனது கண்களில் பரிதவிப்பு. அது அருள்மொழிக்கானது என்று தனியாய் சொல்லத் தேவையில்லை.
“அருள்! சுந்தரமூர்த்தி ஐயாவுக்கு, உன் குடும்பத்துக்கு நடந்தது விபத்துடா.”
“நீங்களும் நானும் அஞ்சு பேருக்கு மலர்வளையம் வச்சிட்டு வந்தோமே, அவனுங்க தான் என் குடும்பத்தைக் கொன்னவனுங்க. இதோ இந்தத் தழும்பு அவனுங்க எனக்குக் குடுத்த காயத்தோட அடையாளம். அவங்களை என் குடும்பத்தை அழிக்க அனுப்புனது உங்க தலைவர் ஜெயசந்திரன்.”
அகத்தியன் அதிர்ச்சியில் எச்சில் விழுங்க, அவனது ஆடம்ஸ் ஆப்பிள் ஏறியிறங்கியது அழுத்தமாய்.
“எப்பிடி? இதெல்லாம் உனக்கு எப்பிடி ஞாபகம்…” தடுமாறினான்.
“என் தலையில அடிபட்டதால எல்லா ஞாபகமும் போயிடுச்சுனு நான் சொன்னது பொய்ணா. நான் எதையும் மறக்கல. ஹாஸ்பிட்டல்ல அனஸ்தீசியாவோட அரைகுறை மயக்கத்துல நான் கிடந்தப்ப உன் தலைவர் அங்க வந்தார்ணா. எனக்கு ட்ரீட்மெண்ட் குடுத்த டாக்டர் கிட்ட அவர் என்ன சொன்னார் தெரியுமா? நான் பழைய ஞாபகங்களோட கண் முழிச்சா ட்ரீட்மெண்ட் ஃபெயிலியர் மாதிரி காட்டி என்னைச் சந்தேகம் வராத விதத்துல கொல்லச் சொன்னதை என் காதால நான் கேட்டேன். அந்த அஞ்சு பேரும் அவர் அனுப்பி வந்தவங்கதான். அந்த முயற்சில நான் தப்பிச்சதால இன்னொரு விதத்துல என்னைக் கொல்ல நினைச்சார் ஜெயசந்திரன். அதனால தான் ஞாபகமறதி நாடகத்தை நான் போட்டேன். அப்பவும் அவருக்கு என்னை நினைச்சு மனசுக்குள்ள ஒரு கலக்கம் இருந்துச்சு. கயல் அத்தை எனக்காக இருந்தாங்க. அவங்க பாசம் தான் என்னைக் காப்பாத்துச்சு. அவரோட கேவலமான முகம் அவங்களுக்குத் தெரிய வர்றதுல அந்தாளுக்கு விருப்பம் இல்ல. தர்மா மாமாவோட என்னை லண்டனுக்கு அனுப்பிவச்சது பாசத்துல இல்ல. ஒருவேளை எனக்குத் தப்பித் தவறி ஞாபகம் வந்தாலும் அங்க வச்சே என்னைப் போட்டுத் தள்ளிடலாம்ங்கிற கணக்குலதான்.”
அகத்தியன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். அருள்மொழி வெளியிட்ட ஒவ்வொரு உண்மையும் அவனைப் பதற்றத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. வேறு யாரேனும் ஜெயசந்திரனைப் பற்றிச் சொல்லியிருந்தால் அவன் நம்பியிருக்க மாட்டான்.
அருள்மொழி சொல்லும்போது நம்பிக்கையையும் தாண்டி மனம் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தது.
“எனக்குத் தலை சுத்துதுடா. தலைவரை விடு, சித்தப்பாவுமா இதுக்கு உடந்தை?” என்று கலக்கமாய் வினவினான்.
“தர்மா மாமா எனக்குப் பாதுகாப்பா தான் இருக்கார். அவரோட வேலை என்னைக் கண்காணிக்குறது மட்டும்தான். கொலை பண்ணுற அளவுக்கு அவர் மோசமானவர் இல்ல. நான் லண்டன்ல ஜெயசந்திரனோட கைதியா வாழ்ந்திருக்கேன். அவர் இங்க ராஜா மாதிரி வாழ்ந்திட்டிருக்கார். எப்பிடி என்னால அதை பொறுத்துக்க முடியும்?”
பேசி முடிக்கையில் அகத்தியன் அதிர, அதே நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தாள் வானதி. அருள்மொழி உச்சரித்த கடைசி இரு வாக்கியங்களை மட்டும் கேட்டவளுக்கு, அருள்மொழிக்குத் தனது தந்தையின் மீது இவ்வளவு வெறுப்பா என்ற அதிர்ச்சியோடு கோபமும் முகிழ்த்தது. அவனைவிட அவனொடு அமர்ந்திருந்த அகத்தியன் மீது கோபம் அதிகமாய்ப் பாய்ந்தது. புயலாய் அங்கே வந்தவளின் சீற்றத்தை இரு ஆண்களும் எதிர்பார்க்கவில்லை அந்நேரத்தில்.
“வானதி!” அருள்மொழி எழுந்திருக்க, அவளோ அகத்தியனை வெறுப்பாய் நோக்கினாள்.
“நீங்க தான் இவனைத் தூண்டிவிடுறீங்களா? உங்க கூட இருக்குறப்ப எல்லாம் இவன் நல்லவிதமா எதையும் பேசுறதில்ல. எங்கப்பாக்கு எதிரா இவனை வச்சு நீங்க என்ன நாடகம் நடத்துறீங்க? தலைவரே தலைவரேனு என் அப்பா காலடியில நாய் மாதிரி சுத்தி வந்துட்டு, பின்னாடி இவனை வச்சுச் சதி பண்ணுறீங்களா?” என்று கோபத்தில் அவள் கத்த, அவளது அவமரியாதையான வார்த்தைகளை அருள்மொழியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“ஏய்!” என்று கோபத்தோடு கை ஓங்கிவிட்டான் அவளிடம். வானதியின் கன்னத்திற்கும் அவனது கரத்திற்குமான இடைவெளி சில மில்லிமீட்டர்களே!
வானதி அதிர்ந்துவிட, “அருள்!” என்று அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டான் அகத்தியன்.
“விடுண்ணா என்னை. என்னமோ இவ அப்பனும் அண்ணனும் உத்தமன் மாதிரி இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணுறா.” என அருள்மொழி சீற, வானதியோ அவன் தன்னை அடிக்கக் கை ஓங்கியதை அவமானமாகவே எண்ணிவிட்டாள். அகத்தியனிடமிருந்து கைகளை உருவிக்கொண்டவன் வானதியின் எதிரே வந்து நின்றான்.
“நீ பேசுன மரியாதைக்குறைவான வார்த்தைகளுக்கு இப்பவே அண்ணா கிட்ட மன்னிப்பு கேளு.”
வானதி கடுஞ்சீற்றமாய் அவனை முறைத்தாளேயொழிய, மன்னிப்பு கேட்க முனையவில்லை அவள்.
“உங்கப்பாவைத் தலைவரா நினைச்சு விசுவாசமா உழைக்கிறவரை நாய்னு சொல்லுற. என்னடி மனுஷி நீ? அது சரி! ஜெயசந்திரன் ரத்தம் தானே இங்கயும் ஓடுது. அதே கேவலமான பேச்சு, மரியாதைக்குறைவான நடத்தை. சீ! என் கண்ணு முன்னாடி நிக்காத. வெளிய போ.”
வானதி முறைப்போடு அங்கிருந்து நகர எத்தனிக்க, சட்டென அவளது கையைப் பற்றினான் அருள்மொழி.
“ஞாபகம் வச்சுக்க. உன்னோட இந்தப் பேச்சுக்கான பதிலடியை உன் அண்ணனும் அப்பனும் சந்திப்பாங்க. இன்னைக்கு நீ பேசுன பேச்சை மொத்த தமிழ்நாடும் உன் அப்பனையும் அண்ணனையும் பாத்துப் பேசுற மாதிரியான சூழ்நிலையை நான் உருவாக்குவேன். இது நடக்கக்கூடாதுனா மன்னிப்பு கேட்டுட்டு இங்க இருந்து கிளம்பு.”

வானதியிடம் நியாயபுத்தி உண்டு. தனது வார்த்தைகள் தன்னுடைய ஆதங்கத்தின் விளைவு என்று அவளால் அழுத்தமாய்ச் சொல்ல முடியவில்லை. அதீதமாய்ப் பேசிவிட்டாள். அதுவும் மரியாதையின்றி! அதைவிட முக்கியமானதாய் அருள்மொழியின் சீற்றம் அவளுக்கு நல்லதுக்கான அறிகுறியாய்த் தெரியவில்லை. அகத்தியனைத் திரும்பிப் பார்த்தாள்.
“ஐ அம் சாரி. நான் கோவத்துல பேசிட்டேன். மன்னிச்சிடுங்க.”
அகத்தியன் இதெல்லாம் எதிர்பார்க்கவில்லை. அவனை விட எட்டு வயது சிறுபெண். தலைவர் மீது உயிரையே வைத்திருக்கும் மகள். அவளது கோபம் அவனுக்குத் தவறாய்த் தோன்றவில்லை.
“பரவால்லம்மா. நீ கிளம்பு.”
அருள்மொழி அவளது கையை உதறவும், வானதி விறுவிறுவென அங்கிருந்து போய்விட்டாள்.
அகத்தியன் பெருமூச்சு விட்டான்.
“ஏன்டா இப்பிடி? சுந்தரமூர்த்தி ஐயாவோட மகன் பொண்டாட்டி கிட்ட கை ஓங்கலாமா?” என அங்கலாய்த்தான்.
அருள்மொழி மூர்க்கமாய் மறுத்தான்.
“அவளை அடிக்கக் கை ஓங்குனது பொண்டாட்டிங்கிற எண்ணத்துல இல்ல. அவ என்னோட பிரண்ட். அவ தப்பு பண்ணுனா நான் அந்தத் தப்பைக் கண்டிக்கணும்ணா. அதைத்தான் செஞ்சேன். எவ்ளோ விஷமா இருக்குறா? பாம்புக்கு முயல் குட்டியா பிறக்கும்? பாம்புக்குட்டி இது.”
அகத்தியன் அவனைத் கண்டிக்கும் விதமாய்ப் பார்த்தான்.
“அந்தப் பொண்ணு ரொம்ப நியாயமானவ அருள். தலைவர் மேல கண்மூடித்தனமான பாசம் வச்சிருக்கா. அது தப்பில்ல. எந்த மகளுக்கு அப்பாக்கு எதிரா பேசுறவங்களைப் பிடிக்கும்? அந்தப் பொண்ணைச் சமாதானப்படுத்து. நீ இன்னைக்கு என்கிட்ட சொன்ன எல்லாத்தையும் நான் என் மனசுல வச்சுக்குறேன். நம்புறதா வேண்டாமாங்கிறதை ஒதுக்கிட்டு என்னால உனக்குத் துணையா இருக்க முடியும்ங்கிறதை மட்டும் சொல்லிக்கிறேன் அருள். தலைவர் மேல இருபத்திரண்டு வருஷ விசுவாசம் எனக்கு. மனசு அவரை மோசமானவரா அவ்ளோ சீக்கிரம் ஏத்துக்காது. கொஞ்சம் டைம் குடு.”
அருள்மொழி சரியெனத் தலையாட்டினான். அகத்தியன் அங்கிருந்து கிளம்பியதும் அருள்மொழியும் முகிலகத்துக்குக் கிளம்பினான். இரவுணவின்போது வானதியின் முகம் உர்ரென்று இருப்பதைக் கவனித்தவனாய் தேனிலவு பற்றி குறிப்பிட்டான் ஜெயசந்திரனிடம்.
“நானே உங்க கிட்ட பேசலாம்னு இருந்தேன். தர்மாவோட சம்சாரம் உங்களைப் பாக்க ஆசைப்படுறாங்க. போயிட்டு வாங்களேன்” என்று சொல்லிவிட்டார் அவர்.
இரவுணவுக்குப் பிறகு அறைக்குத் திரும்பியதும் வானதியிடம் எந்தத் தேதி அவளுக்குத் தோதுவாக இருக்குமென வினவினான் அருள்மொழி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

