“இன்னைக்கு நான் அச்சுவோட ரேஸ் போயி வின் பண்ணிட்டேன்! நீ இருந்தா ‘சின்ன பொண்ணு ஜெயிக்கட்டும்‘னு எனக்கு வழி விடுவ, ஆனா அச்சு அப்படி இல்ல. உன்னோட அந்த பெரிய சைக்கிள் இப்ப தூசு படிஞ்சு நிக்குது.”
-வானதியின் கடிதம்…
வரவேற்பு மேடையில் அருள்மொழியுடன் நின்றுகொண்டிருந்தாள் வானதி. அவளது தோழிப்பெண்கள் அவளைப் போலவே மிண்ட், பாஸ்டல் மஞ்சள், லேவண்டர் வண்ண கவுன்களில் ஆரணங்குகளாய் மின்னினார்கள். அருள்மொழியின் இரு தோழர்களுக்கும் அவனைப் போன்ற வடிவமைப்பில் வெவ்வேறு வண்ணங்களில் உடைகள்.
அரசியல் தலைவர்கள், அரசாங்கத்தின் உயர்பதவியிலிருக்கும் அதிகாரிகள், பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவரும் வருவதும் வாழ்த்துவதும் போவதுமாக இருந்தார்கள். அலங்காரத்திற்கும் ஆடம்பரத்திற்கும் வாழ்த்திய நெஞ்சங்களுக்கும் குறைவில்லை. ஆனால் யார் இந்தக் கொண்டாட்டத்தின் நாயக நாயகியோ, அவர்களுடைய மனங்களில் எந்தவிதக் குதூகலமுமில்லை.

அருள்மொழிக்குத் துணையாய் மேடையில் நின்ற அட்சரன், வானதிக்குத் துணையாய் நின்ற வேதவதியிடம் அவளது கதை பற்றிப் பேசியபடியே கீழே இறங்கிப் போய்விட, புதுமணத் தம்பதிகள் தனியே நின்றார்கள்.
அருள்மொழிக்கு வானதியின் முகத்திலிருக்கும் கலக்கம் ஒருவித அமைதியின்மையை உருவாக்க, அவளது கையைப் பற்ற முயற்சித்தான். அவளோ விலக்கிக்கொண்டாள். அது அவனைச் சீண்டிவிட்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நியாயப்படி உன் கையை நான் பிடிக்கக்கூடாது. எல்லார் முன்னாடியும் உன்னைச் சகிச்சுக்குறது எனக்குக் கஷ்டமா இல்லங்கிறதால கையைப் பிடிச்சா நீ ஓவர் ரியாக்ட் பண்ணுற” என்றான் காட்டத்தோடு.
வானதி சட்டென அவனை நோக்கித் திரும்பினாள்.
“சகிச்சுப்பியா? கஷ்டமோ நஷ்டமோ வாழ்க்கைய வாழணும் அருள். சகிச்சுக்கக்கூடாது. அப்பிடிச் சகிச்சுக்கிட்டுப் போறது வாழ்க்கை இல்ல. நரகம்.”
“தென் வெல்கம் டூ த ஹெல்” என்றவன் கடுஞ்சீற்றமாகப் பார்க்கவும், வானதியால் அந்த விழிகளின் குற்றச்சாட்டைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
விறுவிறுவென மேடையை விட்டு இறங்கினாள் அவள். எதிர்பட்டவரிடம் “ரெஸ்ட்ரூம் போகணும்” என்று சொன்னவள், போய் நின்றதோ யாருமில்லாத இடமாக அவள் கருதிய பங்களாவின் பக்கவாட்டுத் தோட்டம்.
விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த இடத்தில் ஆட்கள் யாருமில்லை. பூச்செடிகள் மட்டுமே நிரம்பிய அந்தத் தோட்டத்தில் விருட்சங்களுக்கு ஏனோ இடமளிக்கவில்லை தோட்டக்காரர். அந்த நொடி அழுதே தீர வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு உந்துதல். அடக்கிவைத்த உணர்வுகள் யாவும் வெடித்துக் கிளம்ப, பெண்ணவளின் விழிகளில் கார்கால மேகங்களின் ஊர்வலம்.
அதே நேரம் மேடையில் அட்சரனிடம் கொந்தளித்துக்கொண்டிருந்தான் அருள்மொழி. “எவ்ளோ திமிரு பாரு! இங்க எல்லாரும் வேலை மெனக்கிட்டு வந்தது என்னை மட்டும் பாத்து போட்டோ எடுத்துட்டுப் போறதுக்கா? வந்த கெஸ்ட்டை அவமதிக்குறோம்ங்கிறது கூடவா புரியாது?”
“சரி சரி! ரிலாக்ஸ். நான் நதிய அழைச்சிட்டு வந்துடுறேன்” என்ற அட்சரன் வானதியைத் தேடிப் போனான்.
அருள்மொழிக்கோ மேடையில் தனித்து நிற்பது அவமானமாகத் தெரிந்தது. கவர்னரில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை வானதி என்ற ஒருத்தியின் வருகைக்குக் காத்திருக்க வேண்டிய அவசியமென்ன என்ற எண்ணம்.
ஜெயசந்திரன் மேடையேறி வந்துவிட்டார்.
“வானும்மா எங்க போனா மருமகனே?”
“ரெஸ்ட்ரூம் போயிட்டு வர்றேன்னு கிளம்புனா மாமா.”
“கவர்னர் சார் அதிக நேரம் இங்க இருக்க முடியாது. அவருக்கு வேற ப்ரோக்ராம் இருக்கு. மீடியா வேற இருக்காங்க, இதை வச்சுக் கதை கட்டுவாங்க. அவ ஆபீஸ் பிரண்ட்ஸ் எல்லாரும் வந்தாச்சு.”
ஜெயசந்திரன் அவனிடம் பேசும்போதே இராஜேந்திரன் ஓடோடி வந்தார் மொபைலுடன்.
“இங்க பாருங்க”
மொபைலில் வந்த செய்தி சேனலின் லைவைப் பார்த்ததும் ஜெயசந்திரன் உறைந்து போனார். அவருக்கு அருகே நின்ற அருள்மொழியும்தான்.
“தாலி கட்டுன புருஷன் மேடைல நிக்குறான். இவ பிரண்டு கூட சேர்ந்து தோட்டத்துல கும்மாளம் அடிச்சிட்டிருக்கா. சீ!”
“இதுக்குத்தான் முதலமைச்சர் மகளா இருந்தாலும் பரவால்லனு கல்யாணத்தை நிறுத்தியிருக்கான் அந்த ஆதர்ஷ்.”
தீப்பொறி போல எழுந்த முணுமுணுப்புகள் அவரை அதிர்ச்சியிலும் அருள்மொழியைக் கோபத்திலும் ஆழ்த்தின. தாமதிக்காமல் மேடையிலிருந்து இறங்கியவன், பெரியம்மா எதிரில் வரவும் எதையோ சொல்லி அவரைச் சமாளித்துவிட்டு, மற்றவர்களுக்கு முன்னர் விறுவிறுவெனத் தோட்டத்தை நோக்கிச் சென்றவன் மீது பாதி வழியில் வேகமாக வந்து மோதிக்கொண்டாள் வானதி.
விழப்போனவளைப் பிடித்துக்கொண்டவன் “என்ன காரியம் பண்ணிருக்க நீ?” என்று சீறியபோதே பெருங்கூட்டமொன்று தோட்டத்தை நோக்கி விரைவதைக் காண முடிந்தது. வானதிக்கோ எதுவும் புரியவில்லை.
அருள்மொழி அவளது கையைப் பற்றியவன் “தயவுபண்ணி உன் வாயைத் திறந்து எதையும் சொல்லித் தொலைச்சிடாத. வா என் கூட” என்று அவளை இழுத்துக்கொண்டே தோட்டத்தை நோக்கி விரைந்தான்.
ஊடகங்களின் கேமராக்கள், ஊர் மக்களால் அந்த இடமே நிரம்பியிருக்கத் தனியொருவனாய் திணறிப்போய் நின்றிருந்தான் அட்சரன். இன்னொரு பக்கம் ஜெயசந்திரன் இறுகிய முகத்தோடு நின்றுகொண்டிருந்தார். அட்சரனையும் வானதியையும் வசைமாரி பொழிந்தவர்களைப் பார்த்து இரத்தம் கொதித்தது அருள்மொழிக்கு.
“உன் வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கு? வாயைத் திறந்து சொல்லுப்பா. முதலமைச்சர் மக எங்க போச்சு?” ஆளாளுக்குக் கேள்வி கேட்கவும் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு வந்தது அருள்மொழியின் குரல்.
“இன்னொரு வார்த்தை என் பிரண்டையோ என் பொண்டாட்டியையோ யாரும் பேசுனீங்கன்னா, திரும்பிப் போறப்ப பேசுறவன் வாய்ல நாக்கு இருக்காது.” கோபப்பிழம்பாய்த் தகித்தபடி வந்தவனின் கரம் பிடித்திருந்தது வானதியை.
அட்சரன் பரிதவிப்பாய் நண்பனைப் பார்க்கவும், “உன்னைப் பத்தி யார் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். நீ என்னோட அச்சு” என்றவன், “இங்க பாருங்க! நாங்க மூணு பேரும் கிண்டர்கார்டன்ல இருந்தே பிரண்ட்ஸ். இவங்க உறவைச் சந்தேகப்படுற உரிமையோ அருகதையோ உங்க யாருக்கும் கிடையாது” என்று அபவாதப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தனித்தான்.
“எல்லாம் சரிதான் அருள்! அப்ப நாங்க நியூஸ் லைவ்ல பார்த்தது பொய்யா? இதே கவுன், இதே ஹேர்ஸ்டைல்ல நீ தொட்டுத் தாலி கட்டுன பொண்டாட்டி இவனை கட்டி உரசிட்டிருந்ததை மொத்தத் தமிழ்நாடும் பார்த்தாச்சு. நீ அப்பாவிடா. இந்தக் குடும்பம் செஞ்ச அநியாயத்தை மறந்துட்டியா அதுக்குள்ள?”
சொந்தக்காரப் பெண்மணி அருள்மொழியைத் தூண்டிவிட, அங்கிருந்தவர்களின் விழிகளில் துரோகியாகத் தெரிந்தான் அட்சரன். அட்சரனுக்குச் சற்று முன்னர் வானதி அழுது அரற்றியதே மனதை வேதனைக்குள்ளாக்கியிருந்தது. அந்தச் சமயத்தில் அங்கே பறந்த செய்தி சேனல் ஒன்றின் ட்ரோனைக் கவனியாமல் விட்டதுதான் அவன் செய்த தவறு.
அவளைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தவனுக்கு இப்போது தன்னையும் அவளையும் இந்தக் கூட்டம் பழிப்பது திணறலைக் கொடுத்தது. போதாக்குறைக்கு வானதியை ‘வாயைத் திறக்காதே’ என்று கண்களால் தடுத்தான்.
அடுத்த நொடியே “என் கூட இருந்தது வானதி இல்ல. வேதா” என்றான் கணீரென்ற குரலில்.
வானதியோடு அருள்மொழியும் அதிர்ந்தே போனான் அவ்விடத்தில். கூட்டத்தில் நின்ற வேதவதியின் கையைப் பிடித்து இழுத்து வந்து நிறுத்தினான் அட்சரன்.
“இவ… இந்த வேதவதிதான் என் கூட இருந்தா. உடனே அதுக்கும் தப்பர்த்தம் கண்டுபிடிச்சிடாதிங்க. இந்தப் பொண்ணு எழுதுறானு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். இவளோட லிட்டரரி ஏஜெண்ட் (Literary agent) நான். அதைப் பத்திப் பேச நாங்க இங்க வந்தோம். அப்ப எதையோ பார்த்து இவ மிரண்டு போனதால கட்டிப்பிடிக்க வேண்டிய கட்டாயம். அந்த நேரத்துல ட்ரோன் அங்க வந்து எங்களைக் கவர் பண்ணிடுச்சு. இவ கவுனும் வானதியோட கவுனும் ஒரே டிசைன். இந்த லைட் வெளிச்சத்துல ரெண்டு கவுனும் ஒரே மாதிரி பாஸ்டல் கலராதான் தெரியும். அதனால நீங்க எல்லாரும் குழம்பிட்டிங்க.”
“கேட்டீங்கல்ல? என்ன ஏதுனு தெரியாம என் பிரண்டோட ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கப் பார்த்தீங்களே? இப்ப என்ன பண்ணப்போறீங்க? ஒவ்வொருத்தரா வந்து அவன் கால்ல விழுவீங்களா?” – அருள்மொழி.
ஜெயசந்திரன் இந்த இடத்தில் மருமகனை அமைதிப்படுத்த முயன்றார். “ஏதோ ஆதங்கத்துல பேசிட்டாங்க. ரிசப்ஷனை கவனிப்போம்.”
அடுத்து அவரிடமே காய்ந்தான் அருள்மொழி.
“இதே மாதிரி உங்க மகனோட ஒழுக்கத்தை யாராச்சும் கேள்விக்குறியாக்குனா அடுத்த வேலைய பார்க்க கிளம்புவீங்களா? இதோ இவளையும் நீங்கதானே பெத்தீங்க. இவன் கூட சேர்த்துவச்சு இவங்க எல்லாரும் அசிங்கப்படுத்துனது இவளையும்தானே? நியாயப்படி நீங்க கொதிக்கணும் இந்த இடத்துல.”
கூட்டத்தில் இருந்த சிலர் அட்சரன் சொன்னதையும் பிரச்சனையாக்குவார்கள் என அவன் மட்டுமில்லை அருள்மொழி கூட நினைத்துப் பார்க்கவில்லை. கடந்த மூன்று நாட்களில் வேதவதியோடு அவன் இருந்த சமயங்களில் கண்ணில் பட்ட காட்சிகளை வைத்து அட்சரனையும் அந்தப் பெண்ணையும் வேதனைக்குள்ளாக்கினார்கள். அட்சரனின் சீற்றத்தையும் வேதவதியின் கண்ணீரையும் மதிக்க அங்கே ஒரு ஜீவனும் இல்லை.
“ஏன் தம்பி நீங்க ஏஜெண்டா இருக்குற எல்லாருக்கும் இடுப்பைத் தடவி சந்தனம் பூசி விடுவியளா? இல்ல கையைப் பிடிச்சுக் கதை பேசுவியளா? அதை விடுங்க. ஏஜெண்டா இருந்துட்டு உங்க கிட்ட கதை கொடுத்த புள்ளைய தனி ரூம்ல உதட்டோட உதட்டை வச்சு முத்தம் குடுப்பியளா?”
தேன்மலையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தவறான சூழல்களில் அட்சரனையும் வேதவதியையும் பார்த்துவிட்டுத் தப்பான குற்றச்சாட்டை எழுப்பினார். அட்சரன் அன்றைய தினம் வேதவதிக்கு மின்சாரம் தாக்கி அவள் மூர்ச்சையானதால் சி.பி.ஆர் (CPR) கொடுத்ததாகச் சொன்னதை யாருமே அங்கே நம்பவில்லை. வேதவதிக்கு இந்த சி.பி.ஆர் விவகாரம் தெரியாது போல. அவளும் அதிர்ந்தாற்போல நின்றாள்.
போதாக்குறைக்கு ஊர்க்காரப் பெண்ணுக்கு அட்சரனிடம் நியாயம் வாங்கித் தருமாறு சாந்தா என்ற பெண்மணி நியாயம் கேட்க, ஜெயசந்திரனுக்கோ தனது சுயசரிதை புத்தகத்தைப் புறக்கணித்த அட்சரனுக்குப் பாடம் கற்பிக்கக் கிடைத்த வாய்ப்பை இழக்க விருப்பமில்லை. அட்சரன் வேதவதியிடம் நடந்ததைச் சொல்லுமாறு கேட்க, பாவம் அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத பெண் அதிர்ச்சியில் அழுதாளேயொழிய வாய் திறக்கவில்லை. வேதவதிக்கு ஆதரவாக யாழினி பேச வந்ததையும் தடுத்து விட்டார்கள்.
“அது எப்படி விட முடியும்? நானும் ஒரு பொண்ணைப் பெத்தவன்”
ஜெயசந்திரன் நேரே சதானந்தனிடம் போய் நின்றார்.
”நீங்க மெச்சூர்டானவர். கிராமத்தாளுங்க வெள்ளந்தியானவங்க. அதைப் பயன்படுத்திக்கிட்டு அவங்களை மேனிபுலேட் பண்ண யார் நினைச்சாலும் அது தப்புதானே?”
சதானந்தனும் ராஜேஸ்வரியும் ஏற்கனவே குழம்பிப் போயிருந்தார்கள். இதில் ஜெயசந்திரன் வேறு இவ்வாறு பேசவும் மூச்சுத் திணறியது போல இருந்தது இருவருக்கும்.
“சார்! அச்சுவை பத்தி உங்களுக்குத் தெரியாதா?”
தவிப்போடு சொன்னாலும் அட்சரனின் தந்தை சதானந்தன் முகத்தை மூடி அழுத வேதவதியைப் பரிதாபத்தோடு பார்த்தார். பெண்பிள்ளையைப் பெறவில்லை என்றாலும் அவளது அழுகையும் தவிப்பும் அவரைக் கண்கலங்க வைத்தது.
மனைவி ராஜேஸ்வரியிடம் அவர் பேச, இருவரும் வேதவதியைப் படிக்க வைப்பதாகவும் படிப்பு முடிந்ததும் அட்சரனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும் வாக்கு கொடுத்தார்கள். அட்சரன் அதை ஏற்காமல் கோபத்தில் கொந்தளிக்க, இறுதியில் ராஜேஸ்வரி தனது மாமியாரின் மாங்கல்யத்தை எடுத்து வந்து மகனின் கையில் கொடுத்தார்.
“பைத்தியமா உங்களுக்கு? யார் என்ன சொன்னாலும் நீங்க எனக்காகப் பேசணும்மா. ஆனா நீங்களே…”
“தம்பி இதைத் தவிர இப்ப வேற வழியில்ல. இங்க பிரஸ் பீப்பிள் நிறைய இருக்காங்க. நீங்க இப்ப வேதாவைக் கல்யாணம் பண்ணிக்கலனா நீங்க அவளுக்கு ஏஜெண்டா வேலை செய்யுறதைக் காரணமா வச்சுச் செக்சுவலா அந்தப் பொண்ணை மேனிபுலேட் பண்ணிட்டீங்கனு செய்தி பரவும். இப்ப பாலியல் ரீதியான குற்றங்களுக்குத் தண்டனை ரொம்ப சிவியர். என் மருமகனோ மகளோ நினைச்சா கூட இந்தச் சூழ்நிலையில உங்களைப் பாதுகாக்க முடியாது.”
ஜெயசந்திரன் கணக்குப் போட்டுக் காய் நகர்த்த, ராஜேஸ்வரியின் கண்ணீரும் சதானந்தனின் கண்டிப்பும் அட்சரனை வேதவதியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவிக்கச் செய்துவிட்டது விதி. அதோடு விறுவிறுவென அங்கிருந்து போய்விட்டான் அட்சரன்.

வானதியின் பார்வை பெற்றோருடன் அழுதுகொண்டே அங்கிருந்து செல்லும் வேதவதியின் மீதுதான். ஜெயசந்திரனும் சதானந்தனும் பேசி கூட்டத்தைக் கலைத்துவிட்டார்கள்.
கயல்விழி மகளை ஆறுதல்படுத்தும்போதே ரமா வந்து அழைக்க, இருவரும் தனியறைக்குப் போய்விட்டார்கள்.
வானதி ஸ்ரீநிதியோடு இணைந்து ஜஸ்டிஸ் டுடேவிலிருந்து தனது அழைப்பை ஏற்று வரவேற்பிற்கு வந்திருந்தவர்களை வழியனுப்பி வைத்தாள். மனமெங்கும் குற்றவுணர்ச்சியும் தவிப்பும்.
ரமா அவளிடம் வந்தவர் “கயல் கிட்ட வேற புடவை கொடுத்திருக்கேன். இந்தப் புடவைய மாத்திட்டுப் போ” என்றார்.
“எங்க போகணும்?”

“அதோ அங்க தெரியுதுல்ல, அந்தக் காட்டுக்கு.” கடுப்பாய்ச் சொல்லிவிட்டு ரமா போய்விட, வானதியோ விண்விண்னெனத் தெறித்த நெற்றிப்பொட்டைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். புடவையை அணிந்துகொண்டாள்.
முதலில் அவளால் நடந்த அனர்த்தம் வெளியே கசியாமல் தடுக்க வேண்டும். அனைத்தும் ஆரம்பித்தது அவளிடமிருந்து. அதற்கான பொறுப்பை அவள் ஏற்றாகவேண்டும். நேரே தந்தையின் அறையை நோக்கிச் சென்றாள் வானதி. உள்ளே நுழையும் முன்னர் அறைக்குள்ளிருந்து அருள்மொழியின் குரல் கேட்டது அவளுக்கு.
“என்கிட்ட இருக்குற துருப்புச்சீட்டை நான் பயன்படுத்திக்கிற நிலைமைக்கு என்னைக் கொண்டு போயிடமாட்டிங்கனு நம்புறேன்.”
காட்டமான குரலில் தந்தையிடம் பேசுபவன் மீது திகைப்பும் கடுப்பும் ஒருசேர எழுந்தது. கதவை ஓங்கித் தட்டப்போனவள் அது திறந்து அவன் வெளியே வரவும் உக்கிரமாக முறைத்தாள். அதை அவன் கண்டுகொண்டால் தானே! முதுகைக் காட்டிக்கொண்டு போய்விட்டான்.
நேரே தந்தையிடம் போனவள் அவரருகே அமர்ந்துகொண்டாள்.
“நீங்க கிடைச்ச சந்தர்ப்பத்தை உங்க ஈகோவைத் திருப்திப்படுத்த யூஸ் பண்ணிக்கிட்டீங்கப்பா. அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் நினைச்சுப் பாருங்க. கடைசி நொடி வரைக்கும் நீங்க இந்த ஊர்க்காரங்க வாயை அடைப்பீங்கனு நான் நம்புனேன். நீங்க என் நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைச்சிட்டீங்க.”
அவள் மனக்குமுறலைக் கொட்டவும், ஆதித்யன் தந்தைக்காகத் தங்கையிடம் எகிற ஆரம்பித்தான். வரவேற்பு மேடையில் இருந்தவள் பாதியில் போனதுதான் பிரச்சனைக்குக் காரணமென்றான் அவன்.

வானதியின் முகம் இறுகிப்போனது. கண்கள் கலங்கிப்போனது அவளுக்கு. அவளது மனதில் குற்றவுணர்ச்சி தீவிரமாக மையம் கொண்டிருந்திருக்கையில், இயலாமையின் விகிதாச்சாரம் அதீதமாய் இருக்கையில், தன்னைப் பற்றியும் தனது நட்பைப் பற்றியும் சந்தேகிக்கும் சூழல்.
ஜெயசந்திரனுக்கு மகளின் கண்ணீரைக் காணத் தாங்கவில்லை. “இப்படி வருத்தப்படுறதுக்காகவா ஊரை அழைச்சு உனக்குக் கல்யாணம் பண்ணுனேன்? இப்ப நான் என்ன செய்யணும்? நீ சொல்லு” என்றார் பாசக்காரத் தந்தையாக.
“இங்க நடந்த எதுவும் வெளிய கசியக்கூடாதுப்பா. மீடியா நியூஸ்னு எங்கயும் அச்சுவோட பேர் கெட்டுப்போகக் கூடாது. என்னை யாரும் தப்பா பேசிடக்கூடாதுங்கிற டென்ஷன்ல அவன் செஞ்ச காரியம் அவனுக்கு பிளாக் மார்க்கா மாறிடக்கூடாது. இதுல எந்த வகையிலயும் சம்பந்தப்படாதவ வேதா. ஆனா இந்த நிமிஷம் என்னை விட அவ மோசமா மனசு நொந்து போயிருப்பா. இதுக்கு மேல அவளை யாரும் வார்த்தையால நோகடிச்சிடக்கூடாது. ப்ளீஸ்பா!”
ஜெயசந்திரன் யோசிக்கக்கூட அவகாசம் எடுக்கவில்லை. அவரது மகளின் வேண்டுகோள் அவருக்குக் கட்டளையாகவே ஒலிக்கும். அதை நிறைவேற்றுவதில்தான் தனது தந்தைமையின் மகத்துவமே அடங்கியிருக்கிறது என்று எண்ணுபவர்.
உடனடியாக ஆதித்யன் மூலமாக வந்திருந்த அனைத்து ஊடகவியலாளர்களிடம் பேசி, ஜெயவிலாசத்தில் நடந்த திருமணம், வரவேற்பு தாண்டிய எந்தக் கிசுகிசுப்பும் வதந்தியும் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படக் கூடாது என்று கட்டளையிட்டார். மீறிச் சமூக ஊடகங்களில் அல்லது பிரதான காட்சி ஊடகங்களில் ஏதேனும் தகவல்கள் கசிந்தால், தனிநபரின் தனியுரிமை மீறலாக அது கருதப்பட்டுச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கூடவே ஆதித்யன் மூலமாய் விருந்தினராய் வந்தவர்களுக்கும் இத்தகவலை அனுப்பிவிட்டார் ஜெயசந்திரன். எல்லாம் அவரது மகளின் கண்ணீருக்காக மட்டுமே! அதன் பின்னரே வானதி நிம்மதியுற்றாள் எனலாம்.
அதே நேரம் அட்சரன் சென்னைக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தான். இலக்கியா அவனைப் போகவிடாமல் செய்ய என்னென்னவோ சொல்லிப் பார்த்தாள்.
“அம்மாவும் அப்பாவும் வேதா வீட்டுக்குப் போயிருக்காங்க. அவங்க வர்ற வரைக்கும் வெயிட் பண்ணு அச்சு.”
“முடியாது.”
வேதவதி பாவமென அவனுக்குப் புத்திமதி சொன்ன இலக்கியாவும் சஞ்சயும் இந்த பிடிவாதத்தைக் கண்டு திகைத்தார்கள். உடைமைகளை அள்ளிப் போட்டுக்கொண்டு அவன் காரைக் கிளப்பிக்கொண்டு வெளியேறவும், அவனது பெற்றோர் வேதவதியின் வீட்டில் பேசிவிட்டு வரவும் சரியாக இருந்தது.
அட்சரனின் கார் கிளம்பியதைப் பார்த்துவிட்டுக் கீழே ஓடிவந்த அருள்மொழியிடம் இருவரும் வேதவதியின் பெற்றோரிடம் பேசி நாளை அவளைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல அனுமதி வாங்கிவிட்டதாகச் சொல்லவும் ஒரு சின்ன திருப்தி அவனுக்கு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

