“சாலை குமாரரை நினைச்சுக்கிட்டுப் பொண்ணு கழுத்துல மாங்கல்யத்தைக் கட்டுங்கோ”
ஐயர் தாலியை எடுத்துக்கொடுக்கவும் சாலைக்குமார சுவாமி சன்னதியில் உற்றார் உறவினர் புடைச்சூழ மணக்கோலத்தில் நின்ற தேவயானியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் சரவணன்.

அட்சதையும் பூக்களும் தூவ இரு கண்களும் அவன் கண்களோடு ஒட்டி உறவாட மனம் முழுவதும் நிரம்பி வழியும் காதல் கனவுகளோடு அவன் கட்டிய மாங்கல்யத்தை ஏற்றுக்கொண்டாள் தேவயானி.
மாங்கல்யதாரணம் முடிந்ததும் அருகிலிருக்கும் பாலன் ஹோட்டலின் மேல்தளத்திலிருந்த மினி ஹாலில் மற்ற சடங்குகள் நடைபெறுவதாக இருந்தது. மணமக்கள் அதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
நதியூர், ஆழியூரிலிருந்து இரு வீட்டாரின் உறவினர்களும் திருமணத்திற்கு வருகை தந்திருந்தார்கள். கூடவே சரவணனின் கடை இருக்கும் பகுதியில் அவனுக்குப் பழக்கமானத் தோழமைகள், தேவயானியின் பணியிடத்தோழமைகளும் வந்திருந்தார்கள்.
திருமண வைபவத்துக்குப் பிந்தைய சடங்குகள் நடந்தேறிய பிறகு பெரியவர்களும் உறவினர்களும் மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு மொய் கொடுப்பார்கள். அதற்காக சிறிய மேடையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர வைக்கப்பட்டிருந்தார்கள் சரவணனும் தேவயானியும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இருவருக்கும் எக்கச்சக்க பதற்றம். அதை வெளிக்காட்டாமல் உறவினர்களோடு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
“மாமாவோட நெத்தில அந்தத் தாத்தா பெருசா திருநீறு பூசிட்டார். அதைத் துடைச்சு விடுக்கா” தேவயானியின் காதைக் கடித்தாள் அவளது ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி.
“ப்ச்! நான் எப்பிடி துடைச்சு விடுறது?” சங்கடமாய் முணுமுணுத்தாள் அவள்.
“இதுக்கேவா? இன்னைக்கு நீ ஊட்டி விட்டுத்தான் மாமா சாப்பிடணும். அதுக்கு என்ன பண்ணப்போற?”
“மதினி போட்டோக்குப் போஸ் குடுங்க” சரவணனோடு நின்ற சுரேஷ் கேலி செய்தான்.
தேவயானி முகபாவனையை மாற்றிக்கொண்டாள். அவளும் சரவணனும் உறவினர் கொடுத்த மொய்ப்பணத்தை வாங்கிக்கொண்டார்கள்.
மலர் தூவி ஆசிர்வதித்தவர்கள் புகைப்படம் எடுத்துவிட்டு நகரவும் “நீயும் உன் தங்கச்சியும் அப்பிடி என்ன சீக்ரேட் பேசுறிங்க?” என்று தேவயானியின் காதில் கிசுகிசுத்தான் சரவணன்.
“அது… உங்க நெத்தில திருநீறு பட்டை மாதிரி இருக்கு” என்று சொன்னவளிடம் குனிந்து நெற்றியைக் காட்டினான் அவன்.
“என்ன?” மலங்க மலங்க விழித்தாள் அவள்.
“கரெக்டா துடைச்சு விடு”
சன்னப்புன்னகையோடு சொன்னவனைத் திகைப்பாய் பார்த்தவளின் கையில் கைக்குட்டையைத் திணித்தாள் அவளது ஒன்றுவிட்ட தங்கை. தேவயானி நடுங்கும் விரல்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு சரவணனின் நெற்றியில் பெரிய பட்டையாக இருந்த திருநீறை சிறிய கீற்றாகத் துடைத்துவிட்டாள்.
கன்னக்கதுப்பு, காது மடல் எல்லாம் சிவந்து தவித்தபோது திடுமெனச் சரவணனின் கரம் இறுக்கமாக அவளது கரத்தைப் பற்றியதும் திடுக்கிட்டுப் போனாள்.
“சரவணன்?”
அவனது உடலிலும் இறுக்கம்! இரும்பை உருக்கிக் குடித்தவனைப் போல அப்படி ஒரு இறுக்கம். சற்று முன்னர் என்னிடம் தலைகுனிந்து கண்களில் விசமம் தொனிக்கக் கட்டளையிட்டவனா இவன் என தேவயானி குழம்பியபோதே அவர்கள் நிற்கும் சிறிய மேடையில் ஏறினார்கள் ஒரு வாலிபனும் ஒரு இளம்பெண்ணும்.
இளம்ரோஜாவண்ண அனார்கலி அணிந்து கூந்தலை மேலே மட்டும் க்ளட்ச் போட்டு மல்லிகை சூடி விரித்து விட்டிருந்தாள். நெற்றியில் சின்னதாகப் பொட்டு அதன் கீழே விபூதி கீற்று. காதுகள், கைகளில் தங்க ஆபரணங்கள். கழுத்திலும் பொன்னின் வாசம். அழகாக இருந்தாள்.
அதெல்லாம் தேவயானியின் பிரச்சனை அல்ல. அவள் சரவணனுக்கு மறுபுறம் போய் நின்று புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்கும் சாக்கில் கண்களில் சோகத்தைத் தேக்கிக்கொண்டு நின்றதுதான் பிரச்சனை. திருமணவீட்டுக்கு வந்தவர்களின் முகத்தில் இப்படியொரு சோகம் இருக்க வாய்ப்பேயில்லை.

“யாருக்கா இது? அவ கூட வந்த பையன் கூட நிக்காம மாமாவுக்கு அந்தப் பக்கம் போய் நிக்குறா?”
“தெரியலடி”
இவ்வளவு சம்பாஷணைகள் நடந்தபோதும் சரவணன் தேவயானியின் கரத்தை விடுவிக்கவில்லையே. அந்தப் பெண் அவனிடம் ஏதோ பேச வர சட்டெனத் தேவயானியின் தோளை அணைத்தவன் “எங்க கல்யாணத்துக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி. விக்கி! நீயும் உன் தங்கச்சியும் சாப்பிட்டுட்டுத்தான் போகணும்” என்றான் அவளை ஒரு பொருட்டாக மதியாமல்.
அந்தப் பெண்ணின் முகம் சுண்டியது ஏனோ தேவயானிக்கு இன்பமாக இருந்தது. கணவனோடு சேர்ந்து இன்னும் கொஞ்சம் அந்தப் பெண்ணின் முகத்தைச் சுண்டவைக்கும் ஆவல் எழுந்தது.
“ஆமாங்க! சாப்பிட்டுத்தான் போகணும். சரவணன் – தேவயானி பெயர்ப்பொருத்தத்தை ஞாபகம் வச்சிருக்கிங்களோ இல்லையோ இந்தக் கல்யாணச்சாப்பாட்டோட டேஸ்டை ஞாபகம் வச்சுப்பிங்க. எல்லாமே நானும் சரவணனும் பாத்து பாத்து மெனு செலக்ட் பண்ணிருக்கோம்”
பேச்சோடு பேச்சாகச் சரவணனின் மார்பில் அவள் சாய்ந்துகொள்ள அந்தப் பெண்ணுக்கோ முகம் ஜிவுஜிவுவெனச் சிவக்காதக் குறை.
“வாண்ணா போகலாம்” அவளது தமையன் விக்னேஷை அழைத்துக்கொண்டு இடத்தைக் காலி செய்துவிட்டாள். போகும் முன்னர் சரவணனின் கையில் பரிசு பெட்டி போல ஒன்றைத் திணித்துவிட்டுச் சென்றாள்.
அது என்ன என்று தேவயானி கண்களால் கேட்க “நைட் நம்ம ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து ஓப்பன் பண்ணி பாக்கலாம். உன் கிட்ட மறைக்குற அளவுக்கு எந்த ரகசியமும் இல்ல” என்று சொல்லி அவளது மனதைக் குளிரவைத்தான் சரவணன்.
ஆனாலும் தேவயானியின் மனதை உறுத்தும் வண்ணம் ஒவ்வொரு சம்பவமாக நடந்து கொண்டிருந்தது. முதலில் அந்தப் பெண்ணும் அவளுடைய தமையனும் இடத்தைக் காலி செய்ததும் மேடைக்குப் படபடப்புடன் ஓடி வந்த கனகவல்லி சரவணனிடம் ஏதோ கிசுகிசு பேசிவிட்டு நகர்ந்தது தேவயானிக்கு வினோதமாக இருந்தது. அவனருகே நின்று கொண்டிருந்த சுரேஷ் அந்தப் பெண்ணைக் கொலைவெறியோடு பார்த்தது வேறு அடுத்த சம்பவம்.
‘யாரோ ஒருத்தி தனது திருமணத்துக்கு வந்து சோகவயப்படுகிறாள். அவளைக் கண்டால் கணவனின் உடல் இறுகி இரும்பாகிறது. மாமியார் பரபரப்பாகிறார். கணவனின் வலதுகரம் வன்மப்பார்வை வீசுகிறான். அந்த மினி ஹாலே அவளது வருகைக்குப் பின்னர் அசாதாரண அமைதியில் ஆழ்கிறது. அவள் யார்?’
இதே சிந்தனையோடு மாலை வரவேற்பு வரை தேவயானி உழன்று கொண்டிருக்க, அனைத்து நிகழ்வுகளும் எவ்வித பிரச்சனையுமின்றி இனிமையாகவே நடந்தேறின. இரவின் தனிமையில் சரவணனோடு இருக்கும்போது சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுபவனாக பரிசுப்பெட்டியோடு அவன் வந்தான்.
கொஞ்சம் பெரிய சைஸ் பெட்டிதான். அப்படி உள்ளே என்ன பரிசு இருக்குமென ஆர்வம் உந்தித் தள்ள அதைத் தனது கைகளில் வாங்கி பிரிக்க ஆரம்பித்தாள் தேவயானி.
ஜிகினா காகிதத்தைப் பிரித்துவிட்டுப் பெட்டியைத் திறந்தவள் அதற்குள் ஒரு சில்க் காட்டன் சேலை, அனார்கலி சுடிதார் ஒன்று, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஒரு சிறிய நகைப்பெட்டியில் வெள்ளி மோதிரம் ஒன்று – இவ்வளவும் இருக்கவே, அவற்றை மெத்தையில் பரப்பிவிட்டுக் கணவனை முறைத்தாள்.
“என்ன இது?” இடுப்பில் கையூன்றி அதிகாரத்தொனியில் அவள் கேட்க சரவணனுக்குத் தொண்டை அடைத்துப்போன உணர்வு.
“இதெல்லாம்…”
“அவ தான் உங்க பவித்ராவா?”

“ஆமா”
“என்ன ஆமாவா? இப்பவும் அவளை ‘உங்க பவித்ராவா’ தான் நினைக்குறிங்களா?”
“ஐயோ! அப்பிடி இல்ல தேவா. நீ டக்குனு கேட்டதும்…”
தேவயானி சலிப்புடன் அறைக்கதவைத் திறந்து வெளியேறினாள்.
அவர்கள் வீட்டில் சரவணனின் படுக்கையறை தோட்டத்தைப் பார்த்து கதவுகளுடன் அமைந்திருந்தால் ஹாலின் பக்கவாட்டில் இருக்கும் அவனது பெற்றோருக்கு இங்கே நடந்தது தெரியாது. மனைவியின் பின்னே ஓடினான் அவன்.
அங்கிருந்த எலுமிச்சை மரங்களில் கல்யாணத்திற்காக கட்டப்பட்டிருந்த மஞ்சள் வண்ண எல்.ஈ.டி பல்பு சரங்கள் மின்மினிப்பூச்சிகளைப் போல மின்னிக்கொண்டிருந்தன. மைசூர் மல்லியின் நறுமணம் நாசியை நிமிண்டியது. ஆனால் தேவயானியின் மனமோ நூறு டிகிரி செல்சியசில் கொதித்துக்கொண்டிருந்தது.
அவளுக்குச் சரவணனின் முன்னாள் காதல் பிரச்சனை இல்லை. ஆனால் இவ்வளவு சுவாதீனமாக அவனது முன்னாள் காதலி அவர்களின் திருமணத்துக்கு வந்தது பிரச்சனை. கூடவே அவள் பரிசாகக் கொடுத்த பொருட்கள் தேவயானியை இன்னும் எரிச்சலுக்குள்ளாக்கின.
“அதுல்லாம் லவ் பண்ணுனப்ப அவளுக்கு நான் குடுத்த கிப்ட்ஸ் தேவா”
சரவணன் சொன்னதும் தேவயானி தனக்குள் பொங்கிய கோபத்தைப் பெருமூச்சு விட்டுத் தணித்துகொண்டாள்.
கண்களை இறுக மூடித் திறந்தவள் “அவ எதுக்கு…” என்று உச்சபட்ச டெசிபலில் கத்தவும் சரவணன் அவளது உதட்டில் கை வைத்து ‘கத்தாதே’ என்று எச்சரித்தான்.
கூடவே பக்கவாட்டில் தெரிந்த ஜன்னல்களைக் காட்டி “அது ஹால் ஜன்னல். நீ கத்துனா ஹால்ல படுத்திருக்குற சொந்தக்காரங்க காதுல விழும்” என்றான் மெதுவானக் குரலில்.
தேவயானி அமைதியானாள். அவள் கண்களில் இன்னும் கொஞ்சம் கோபத்தின் சூடு மிச்சமிருந்தது.
“இவ்ளோ நாள் குடுக்காம கரெக்டா நம்ம கல்யாணத்துக்கு வந்து இதை எல்லாம் குடுக்கணும்னு என்ன அவசியம் சரவணன்? இதைப் பார்த்து நீங்க காதல் நினைவுகள்ல மூழ்கணும்னு நினைக்குறாளா? இல்ல நீங்க மூழ்குறதைப் பாத்து நான் கண்ணீர் விடணும்னு ஆசைப்படுறாளா?” ஆவேசமாக அதே நேரம் சின்னக்குரலில் கேட்டாள் தேவயானி.
சரவணனின் கண்களில் கலக்கம்.
“அவ வருவானு நான் எதிர்பாக்கல தேவா”
“அப்ப அழைப்பு இல்லாம வந்தாளா?”
“அப்பிடி இல்ல. அவளோட அப்பாவும் எங்கப்பாவும் ஃப்ரெண்ட்ஸ். அந்த மரியாதைக்காகவும், அவ அண்ணன் என்னோட ஃப்ரெண்ட்ங்கிறதுக்காகவும் அப்பா பத்திரிக்கை குடுத்தார். அதான் அவளும் விக்னேஷும் வந்திருந்தாங்க”
“அவ வந்தது எனக்குப் பிரச்சனை இல்ல. ஆனா இந்த கிப்ட்ஸ்… இதெல்லாம் பாக்குறப்ப எனக்கு மண்டை அப்பிடியே சூடாகுது. அவ மட்டும் எதிர்ல வந்தா கழுத்தை நெறிச்சுக் கொல்லுற அளவுக்கு ஆத்திரம் வருது”
“தேவா தேவா… ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்” மனைவியை அமைதிபடுத்தினான் சரவணன். அவள் அசிரத்தையாக உச்சு கொட்டவும் அவளது கரங்களைப் பற்றிக்கொண்டான்.
“நம்ம ரிலேசன்ஷிப்ல நீ முழுசா நம்பிக்கை வைக்குறதா சொன்னல்ல. அப்ப ஏன் இவ்ளோ கோவம்?”
தேவயானி கணவனைக் கலக்கத்தோடு ஏறிட்டாள்.
“உங்க மேல மலையளவுக்கு எனக்கு நம்பிக்கை இருக்குங்க. ஆனா நானும் ஒரு பொண்ணுதானே? எனக்கும் என் புருசன் என்னைத்தான் முதல்ல காதலிக்கணும்னு ஆசை இருக்கும்ல? நீங்க ஏன் என்னை ஃபர்ஸ்ட் காதலிக்கல?”
சிறுபிள்ளைக்குரிய கோபத்தை அவளிடம் கண்டவன் சங்கடமானப் புன்னகையோடு அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
“வாழ்க்கைல கடவுள் எல்லாருக்கும் முதல்லயே சந்தோசத்தைக் குடுத்துடமாட்டார். கஷ்டத்தைக் குடுத்து அல்லாட வைப்பார். அவன் ஆய்ஞ்சு ஓய்ஞ்சு போறப்ப முழு சந்தோசத்தையும் அவனுக்குக் குடுப்பார். அப்பிடி எனக்குக் கிடைச்ச பெரிய சந்தோசம் நீ! பவித்ராங்கிற சூறாவளியால சின்னாபின்னமான என் இதயத்தை இதமாக்க வந்த தென்றல் நீ! இனிமே பவித்ரா நம்ம வாழ்க்கையில வரப்போறதில்ல. நீயும் நானுமா வாழப்போற இந்த வாழ்க்கையில மூனாவது நபருக்கு இடம் இல்ல”
கணவனின் அணைப்புக்குள் சிறு திமிறலுடன் அடங்கிய தேவயானிக்கு பரிசுப்பெட்டியைப் பார்த்ததில் உண்டான கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.
அவனது சட்டையின் முதல் பட்டனைத் திருகியவள் “உங்களை அவ பாத்த விதம் கூட எனக்குப் பிடிக்கலங்க” என்றாள் மனத்தாங்கலோடு

“அவ யாரோ ஒருத்தினு நினைச்சுக்க தேவா. எனக்கு அவளோட பார்வை, அவ கொண்டு வந்த கிப்ட் எதுவும் எந்த விதமான உணர்ச்சியையும் குடுக்கல. ஏன்னா அவளை நான் யாரோ ஒருத்தியா பாக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாகுது. நீயும் அப்பிடி நினைக்கப் பழகிக்க.”
“அந்த யாரோ ஒருத்தி குடுத்தது எதுக்கு நம்ம பெட்ரூம்ல இருக்கு?”
சட்டென விலகி நின்று கேட்டாள் தேவயானி.
“நானா அதை பெட்ல பரப்பி வச்சேன்?”
சரவணன் புருவம் உயர்த்தி வினவினான்.
தேவயானி நாக்கைக் கடித்துக்கொண்டவள் “இப்பவே அதெல்லாம் எடுத்துட்டு வர்றேன். ரெண்டு பேரும் சேர்ந்து அந்த கிப்டுக்கு போகி கொண்டாடிட்டு அப்புறமா ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடலாம்” என்றாள் ஆர்வத்தோடு.
சரவணன் சன்னச்சிரிப்போடு மனைவியைக் கரங்களில் அள்ளிக்கொண்டான்.
“என் மக்கு பொண்டாட்டி! இப்ப தீ எரிச்சா எல்லாரும் என்னவோ ஏதோனு பதறிடுவாங்க. அதனால நாளைக்குக் காத்தால பொறுமையா அதையெல்லாம் எரிக்கலாம். இப்ப போய் தூங்கலாம். நான் ரொம்ப டயர்டா இருக்கேன்”
பேசியபடியே தனது படுக்கையறைக்குச் செல்லும் படிகளில் ஏறினான் சரவணன்.
“தூங்கணுமா?” உதட்டைப் பிதுக்கி தேவயானி கேட்ட விதத்தில் சிரிப்பு பீறிட்டது அவனுக்கு.
அவன் சிரிப்பை ரசித்தவள் “போனா போதும்னு பரிதாபப்பட்டுத் தூங்க விடுறேன். நல்லா தூங்கிக்கோங்க. அதுக்காக இதே சால்ஜாப்பை அடிக்கடி சொன்னிங்கனா தேவயானி மகிஷாசுரமர்த்தினியா ஆகிடுவேன்” என்று மிரட்ட
“நீ கோவப்பட்டாலே அந்த அவதாரம் வந்துடுதே” என்று கேலி செய்தபடி படுக்கையறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான் சரவணன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

