அவர்களை வீட்டின் வாயிலில் நிறுத்தி ஆரத்தி எடுத்தார் ஜெயசந்திரனின் ஒன்றுவிட்டத் தமக்கையான நிர்மலா. “நல்லா இருக்கிங்களா ரமாக்கா?” என்று விசாரித்துவிட்டு அவர் வெளியே செல்ல,
“எம்மா ரேகா! நீ குழந்தைய வானதி கிட்ட விட்டுட்டு வா என் கூட. சாயங்கால பூஜைக்கு அப்புறம் திருஷ்டி கழிப்புக்கு ஏற்பாடு செய்யணும். நீ போய் நமக்குச் சாப்பாட்டுக்கான ஏற்பாட்டை பண்ணு கயல். நீங்க ஏன் மசமசனு நிக்குறிங்க? அருள் கூட போங்க” என்று அனைவரையும் முடுக்கிவிட்டார் ரமா.
“பெரியப்பாக்கு டயர்டா இருக்கும். சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும். நான் என்ன சின்னப்பையனா? நான் பாத்துக்குறேன் பெரியம்மா” என்று சொல்லி கணேசனை இராஜேந்திரனோடு அனுப்பி வைத்த அருள்மொழி, அகத்தியனிடம் கண்ணால் பேசுவதை யார் கவனித்தார்களோ இல்லையோ வானதி கவனித்துவிட்டாள்.
அவனைத் தொடர்ந்து போகலாம் என்றாலோ ஜெயந்தனை அவளிடம் கொடுத்துவிட்டார்கள். போதாக்குறைக்கு உறவுக்காரப்பெண்களில் அவள் வயது இளசுகள் அவளைச் சூழ்ந்துகொள்ள, அகத்தியனும் அருள்மொழியும் தனியே போவதைத் தவிப்போடு பார்த்தபடி நின்றவளை மூன்றாவது தளத்திற்கு இழுத்துப்போனார்கள் பெண்கள்.
என்னென்னவோ கேலிகள்! விளையாட்டுப் பேச்சுகள்! இடையே ஜெயந்தனை ஆள் மாற்றி ஆள் கொஞ்சவும் மெதுவாக அவர்களிடமிருந்து விலகி வெளியேறிய வானதி அருள்மொழியைத் தேடிக்கொண்டு போனாள். அவனைப் பற்றி யாரிடமாவது கேட்டால் கிண்டல் செய்வார்கள் என்பதால் அகத்தியனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்து இரண்டாம் தளத்தில் அருள்மொழிக்கான அறையை நோக்கிச் சென்றாள்.
அந்தத் தளத்தில் யாருமேயில்லை. அறைக்கதவும் அரைகுறையாக மூடியிருக்க, உள்ளே செல்ல எத்தனித்தவள் அருள்மொழியின் குரல் கேட்டு நிதானித்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ரொம்ப தேங்க்ஸ்ணா. இவங்க எல்லாரையும் நான் நாளைக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமா பேசி கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணிடுறேன். என் அப்பாவோட ஆதரவாளர்கள் எனக்குத் துணையா நின்னா தான் என் நோக்கம் நிறைவேறும்.”

ஆணித்தரமான குரலில் கை தேர்ந்த ராஜதந்திரியைப் போல அருள்மொழி பேசுவதைக் கேட்டவளுக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
“கவனம் அருள்! தலைவருக்கு நீ தனியா மூவ் பண்ணுறது தெரிஞ்சா பிரளயமே வரும்” என எச்சரித்தான் அகத்தியன்.
அவன் மீது வானதிக்கு வந்த கோபத்துக்கு அளவேயில்லை. ‘என் தந்தை இவனுக்குக் கட்சியில் பொறுப்பு கொடுத்திருக்கிறார். ஆனால் இவன் என் தந்தைக்குத் தெரியாமல் அருள்மொழிக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவுகிறான்.’
“இன்னும் ஆறு மாசத்துக்குத்தான் அவர் தலைவர். அப்புறம் அந்தத் தலைவர் பதவியும், கட்சித்தலைமையும் அவருக்கும் சொந்தமில்ல. அவரோட மகனுக்கும் சொந்தமில்ல. நாட்டுலயே ஜனநாயக ஆட்சிதான் நடக்குது. கட்சிக்குள்ள மட்டும் ஏன் மன்னராட்சி மாதிரி குடும்ப ஆளுங்க இருக்கணும்? அவரால என்னை எதுவும் பண்ணிட முடியாதுண்ணா. நீங்க டென்ஷன் ஆகாதிங்க. மிச்சத்தை நான் பாத்துக்குறேன்.”
தனது தந்தையிடமிருந்து கட்சிப் பொறுப்பைப் பறிக்கப்போகிறானா அருள்மொழி? அதிர்ந்தே போனாள் வானதி. இந்தக் கட்சிக்காக அவளது தந்தை கடினமாக உழைத்ததை அவள் அறிவாள்.
ஏன் அருள்மொழியே சொன்னானே, பகுதி நேர தந்தை முழு நேர அரசியல்வாதியென. அது நூறு சதவிகித உண்மை! கட்சிக்காகவும் கட்சி நிர்வாகிகளுக்காகவும் பாடுபடுபவர் ஜெயசந்திரன். அவரிடம் அருள்மொழிக்கு என்ன விரோதம்?
இந்த விரோதத்தை முன்னிறுத்தியே கல்யாணத்துக்குச் சம்மதித்திருப்பானோ? அந்த நொடியில் வானதி தன்னைத் துர்பாக்கியசாலியாக உணர்ந்தாள். சரியாக அதே நொடியில் கதவைத் திறந்துகொண்டு அகத்தியனும் வெளியே வர, உள்ளே நின்ற அருள்மொழி வானதியைப் பார்த்துவிட்டான்.
அவன் முகத்தில் துளி கூட அலட்டல் இல்லை. சன்னச் சிரிப்போடு “நீ எப்ப வந்த?” என்று சினேகமாய் பேசியவனைப் பார்க்கவே எரிச்சலாய் இருந்தது அவளுக்கு.
அகத்தியன் போனதும் அந்த அறைக்குள் வந்தவள், “உனக்கு என் அப்பா கிட்ட என்ன விரோதம் அருள்?” என நேரடியாக வினவ,
“எனக்கு என்ன விரோதம்? கட்சிய அவரோட குடும்பச் சொத்து மாதிரி நினைக்குறார்ல. அது எனக்குப் பிடிக்கல” என்றான் தோள்களை அலட்சியமாய்க் குலுக்கியவனாய்.
வானதி வேண்டுமென்றே ஏளனமாய் அவனை ஏறிட்டு, “இந்தக் கட்சிக்காக என் அப்பா உழைச்ச மாதிரி யாரும் உழைக்கல. அவர் குடும்பச் சொத்தாவே ட்ரீட் பண்ணுனாலும் என்ன தப்பு? முதல்ல இதெல்லாம் கேக்க உனக்கு என்ன உரிமை இருக்கு அருள்?” என்று வினவ,
“இந்தக் கட்சிக்கு உங்கப்பா மட்டும் உழைக்கல. கட்சில இருக்குற ஒவ்வொருத்தரும் உழைச்சிருக்காங்க. அவங்களை விட்டுட்டு உன் அப்பா கட்சித்தலைமைக்குப் போக என்ன காரணம் தெரியுமா? உன் அப்பாவோட குறுக்குப்புத்தி மத்த யாருக்கும் இல்ல. இந்தக் கட்சியைச் சதர்ன் தமிழ்நாடுல வளர்த்தவர் என் அப்பா. நார்த் தமிழ்நாடு பக்கம் இராஜேந்திரன் மாமாவும் அகத்தியன் அண்ணாவும் போகாத மாவட்டம் இல்ல. இத்தனை பேர் உழைப்பை உன் அப்பா உறிஞ்சுக்கிட்டிருக்கார்னு சொல்லு. பொருத்தமா இருக்கும்” என்றான் அருள்மொழி கடினமான குரலில்.
வானதி மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டாள்.
“இப்ப என்ன? என் அப்பாவ கட்சித் தலைமைய விட்டுத் தூக்குவியா? உன்னால அது முடியுமா?”
அருள்மொழி கோணலாகச் சிரித்தவன், “நான் என்ன பண்ணப்போறேன்னு சொல்லிட்டுச் செய்யுறது என் பழக்கமில்ல. என் கூட தானே இருக்கப்போற. பாத்துத் தெரிஞ்சிக்க” என்றான் அங்கே கிடந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவனாய்.

வானதிக்குச் சுறுசுறுவெனக் கோபம் வந்தது.
“இதைக் காரணமா வச்சே நான் கல்யாணத்தை நிறுத்துவேன்.”
“போய் நிறுத்தேன். நான் உன்னைத் தடுக்கல.”
எவ்வளவு திமிர் இவனுக்கு. கடுப்போடு அந்த அறையை விட்டு வெளியேறியவள் தந்தையைத் தேடிச் சென்றபோது, ஜெயசந்திரன் முகங்கொள்ளாப் புன்னகையோடு மொபைலில் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது.
“ஆமா! கண்டிப்பா வந்துடுங்க. இந்தக் கல்யாணம் அரசியல்லயும் சொந்த வாழ்க்கையிலயும் எனக்கு ஒரு பெரிய பெஞ்ச்மார்க். நான் எடுத்து வச்ச முக்கியமான அடின்னு கூட சொல்லலாம். இதுல என் கௌரவமும் அடங்கியிருக்கு.”
வானதியின் வாய் தந்தையின் பேச்சைக் கேட்டதும் மூடிக்கொண்டது. எதிர்க்கட்சித் தலைவரின் நையாண்டியான பேச்சு நினைவுக்கு வந்தது. மீண்டும் திருமணம் நின்றால் என் தந்தை அல்லவா அசிங்கப்படுவார்?
தந்தையிடம் அருள்மொழியைப் பற்றிச் சொல்லும் எண்ணத்தைக் கைவிட்ட வானதி தனது அறைக்குச் செல்ல படியேற, அவளுக்கு எதிரே படியிறங்கி வந்தான் அருள்மொழி.

“என்ன சொல்லிட்டியா? கல்யாணத்தை நிறுத்திடுவோமா?” என நக்கலான கேள்வியோடு அவன் புருவத்தை ஏற்றியிறக்கியதில் கோபம் தலைக்கேற முறைத்தவள், அவன் முன்னே நிற்க விரும்பாமல் படியேறிப் போய்விட்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

