“அப்பா அடிக்கடி ஒன்னு சொல்லுவார், மனுசங்க மேல நம்பிக்கை வைக்கிறப்ப அது கல்லுல பொறிச்ச எழுத்து மாதிரி காலத்துக்கும் நிலைச்சிருக்கணுமாம்… அவர் சித்தி மேல வச்ச நம்பிக்கை அப்பிடிப்பட்டது தான்… அவங்க ரெண்டு பேரையும் பாத்து வளந்ததால நானும் ஒருத்தரை நம்புனா ஆழமா நம்புறதுக்குப் பழகுனேன்… சாகர் மேல நான் வச்ச நம்பிக்கையும் அப்பிடிப்பட்டது தான்… அதே நம்பிக்கைய அவரும் என் மேல வைக்கணும்னு ஆசைப்பட்டேன்… அவர் என்னை நம்புனதா நானே கற்பனையும் பண்ணிக்கிட்டேன்… எல்லா கற்பனையும் ஒருநாள் நிஜம் ஆகும்… அந்த நிஜம் பாசிட்டிவா மட்டும் இருக்கும்னு நம்ம எதிர்பார்ப்போம்… என் விசயத்துல நிஜமா மாறுன கற்பனை ரொம்ப எதிர்மறையா இருந்துச்சு… I couldn’t handle such heavy disappointment… So I decided to disappear from here… எதெல்லாம் சாகரை ஞாபகப்படுத்துதோ அது எல்லாத்தையும் விட்டு தூரமா போகணும்னு ஆசைப்பட்டேன்… அந்த நேரத்துல இங்க இருந்து போயிடணும்னு மட்டும் தான் என் மனசு பரபரத்துச்சு… வேற எதையும் யோசிக்கவிடல”
-நித்திலா
சாகர் நிவாஸ்…
சந்தீப் நிஹாரிகாவின் அநாகரிகப் பேச்சுக்குக் கிருஷ்ணராஜசாகரிடமும் நித்திலாவிடமும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான்.
இருப்பினும் ஆனந்த்சாகரால் வெறும் மன்னிப்புக்காக நிஹாரிகாவின் அவமரியாதையான நடத்தையை போனால் போகட்டுமென விடமுடியவில்லை.
“சந்தீப் இனிமே நீயும் நிஹாரிகாவும் இந்த வீட்டுல இருக்கக்கூடாது… எவ்ளோ சீக்கிரம் இங்க இருந்து கிளம்புறிங்களோ அந்தளவுக்கு நம்ம உறவுல விரிசல் விழுற வேகம் குறையும்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவரது இந்தக் கட்டளையில் கிருஷ்ணராஜசாகரே அதிர்ந்து போனான்.
“டாட்” மறுப்புக்குரல் எழுப்ப வந்தவனை கையுயர்த்தி தடுத்தார் ஆனந்த்சாகர்.

“போதும் கிரிஷ்… எனக்கும் நயனியும் நித்திலாவும் வேற வேற இல்ல… இவ்ளோ அசிங்கமா பேசுற இந்தப்பொண்ணு நாளைக்கு என் மருமகளை கொலை பண்ணவும் தயங்கமாட்டா… ஏற்கெனவே நாலு வருசம் நம்மளை விட்டு விலகி இருந்தவ, இப்ப தான் வீட்டுக்கு வந்திருக்கா… அவளை இனிமே யாரும் வருத்தப்பட வைக்கக்கூடாது… உன்னையும் சேர்த்து தான் சொல்லுறேன்”
கிருஷ்ணராஜசாகரும் நித்திலாவும் பிரிந்ததற்கான காரணத்தை மைந்தன் அரசல்புரசலாக கூறிய பிறகு அவனைக் கண்டிக்காமல் விட மனமில்லை ஆனந்த்சாகருக்கு. இதுவரை எப்படியோ இனி நித்திலாவின் மனம் கோணும்படி நடக்காதே என்ற எச்சரிக்கையைக் கடைசி வாக்கியத்தில் ஒளித்து மூத்தமைந்தனின் புத்தியில் உறைக்கும்படி கூறிவிட்டார்.
நிஹாரிகா மாமனாரின் கோபாவேசத்தில் கண்களை இமைக்க மறந்து நின்றாள்.
ஏற்கெனவே சாகர் குழுமத்திலிருந்து சந்தீப்பைக் கௌரவமாகத் துரத்திவிட்டார். இப்போது வீட்டிலிருந்தும் துரத்துகிறார். எல்லாவற்றுக்கும் காரணம் இந்த நித்திலாவும் அவளது கணவனும் தான்.
மொத்த ஆத்திரமும் கிருஷ்ணராஜசாகர் மீது திரும்பியது. இவனைச் சும்மாவிடக்கூடாதென்ற வன்மம் நிஹாரிகாவின் மனதுக்குள் வெறி போல ஏறியது.
அங்கே நிற்கப் பிடிக்காமல் விறுவிறுவென அவளது அறையை நோக்கி சென்றவளை முதல் முதலாக வெறுப்பு மண்ட பார்த்தான் சந்தீப்.
தலையைக் குனிந்தபடி அவனும் சென்றுவிட ஆனந்த்சாகர் நித்திலாவை அழைத்துச்செல்லும்படி கிருஷ்ணராஜசாகருக்குக் கட்டளையிட்டார்.
அவர்கள் இருவரும் கிருஷ்ணராஜசாகரின் அறையை அடைந்த போது நித்திலா எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்க நினைத்தாள். ஆனால் அவளையும் மீறி கிருஷ்ணராஜசாகரிடம் கேட்டுவிட்டாள்.
“எதுக்கு அங்க பொய் சொன்னிங்க சாகர்?”

அவனோ காது கேளாதவனைப் போல அணிந்திருந்த ஃபார்மல் சட்டையைக் கழற்றிவிட்டு வார்ட்ரோபை நெருங்கினான்.
“நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லல சாகர்”
பேசியபடியே அவனுக்கும் வார்ட்ரோபுக்கும் குறுக்கே நின்றாள் நித்திலா.
கிருஷ்ணராஜசாகர் சலிப்போடு நிமிர்ந்தான்.
“என்ன பொய்? நான் சொன்னது உண்மை தானே… நீயும் நானும் நயனிக்காக கல்யாணம் பண்ணுனோம்.. அவ ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் பிரிஞ்சிடுவோம், மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசன் ஃபைல் பண்ணணும்னு கூட பேசி வச்சோம்.. சொன்ன மாதிரியே அவ கியூர் ஆனதும் நீ பெட்டிசன்ல சைன் பண்ணிட்டுக் கிளம்பிட்ட… இது தானே நடந்துச்சு?”
நித்திலா இப்போதும் அவன் ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’ என்ற வார்த்தையை இலாவகமாகத் தவிர்ப்பதில் எரிச்சலுற்றாள்.
“நான் இங்க இருந்து போனதுக்கு உண்மையான காரணம் என்னனு அன்னைக்கே சொல்லிட்டேன் சாகர்… நீங்க அதுக்கு எனக்கு விளக்கமும் குடுத்திட்டிங்க”
“அதை அப்பிடியே எங்கப்பா கிட்ட சொன்னா, சந்தீப் நிஹாரிகா மாதிரி நம்மளையும் வெளிய துரத்தி விட்டுடுவார்… அதான் உண்மையான காரணத்தைச் சொல்லல… பை த வே, உனக்குள்ள இருந்த இன்ஃபீரியாட்டி காம்ப்ளக்சும் ஈகோவும் தான் நீ என்னை விட்டுப் பிரியறதுக்குக் காரணம்னு நினைச்சிட்டிருந்தேன்… பட் உன்னோட முட்டாள்தனமும் அவசரபுத்தியும் அதுக்குக் காரணம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு உன் கூட வீணா சண்டை போட்டு டைம் வேஸ்ட் பண்ண தோணல”
“நான் முட்டாளா?”
“ஆப்வியஸ்லி”
அவளை எரிச்சலூட்டும் வகையில் அவன் அழுத்தமாக உரைக்க நித்திலா கடுப்பில் விலகப் போனவள் அப்போது தான் அவனது வயிற்றுப்பகுதியில் இருந்த வடுவை கவனித்தாள்.
வயிற்றின் பக்கவாட்டில் பதினைந்து சென்டிமீட்டருக்குக் குறையாமல் கருப்பாக இருந்த வடு கட்டாயம் தையல் போட்டதால் உண்டான வடுவாகத் தான் இருக்கவேண்டும்.
“இது என்ன வடு?”
கை நீட்டி கேட்டாள் அவள்.
ஒரு நொடி கிருஷ்ணராஜசாகரின் முகம் கலங்கி தெளிவானது.

“அது உனக்குத் தேவையில்லாதது… தள்ளிப் போ”
அவளை விலக்கி நிறுத்த எத்தனித்தான். ஏனோ பிரிவுக்கான காரணத்தை அறிந்த பிற்பாடு நித்திலாவிடம் முன்பு போல கடுமையாக நடந்துகொள்ள மனம் வரவில்லை அவனுக்கு. இருப்பினும் தன்னைப் பற்றிய செய்திகள் எதுவும் அவளுக்குத் தெரிவதில் அவனுக்கு விருப்பமில்லை.
அவன் விலக்க முயன்றும் நித்திலா நகராமல் தன்னை விலக்க முயன்ற கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
“பதில் சொல்லலைனா நான் உங்க கையை விடமாட்டேன் சாகர்”
உலகில் மிகவும் முக்கியமான விசயமாக அந்த வடுவுக்கான காரணம் அப்போது அவளுக்குத் தோன்றியது.
இது என்ன பிடிவாதமென கிருஷ்ணராஜசாகர் எரிச்சலடைவது புரிந்தாலும் அவனது கையை விடாமல் நின்றாள் நித்திலா.
வேறுவழியின்றி காரணத்தைக் கூறினான்.
“நானும் ராகுலும் போன கார் ஆக்சிடெண்ட் ஆனப்ப உண்டான காயம் அது… இப்பவாச்சும் கையை விடுறியா?”
“ஆக்சிடெண்டா? எப்ப நடந்துச்சு?”
“ப்ச்! ஃபோர் இயர்ஸ் பேக்… எல்லாத்தையும் உன் கிட்ட விலாவரியா சொல்லணுமா? தள்ளிப் போ”
“எனக்கும் உங்க கிட்ட நெருக்கமா நின்னு பேசணும்னு ஆசை இல்ல சாகர்… என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டிங்கனா போயிடுவேன்… ஃபோர் இயர்ஸ் பேக்னா நான் போனதுக்கு அப்புறமாவா?”
அவள் தோண்டித் துருவி கேட்கவும் கிருஷ்ணராஜசாகர் பொறுமையிழந்தான்.
“தெரிஞ்சு என்ன பண்ணப்போற? உனக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்ல… இதை தெரிஞ்சிக்கிறதுக்குப் பதிலா அம்ருவ என் கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டுப் போவேன்னு சபதம் போட்டியே அதுல கான்சென்ட்ரேட் பண்ணு… போ”
உதாசீனம் போல காட்டிக்கொண்டாலும் அவனைப் பற்றிய எந்த விவரத்தையும் தன்னிடம் கூறிவிடக்கூடாதென்ற பிடிவாதம் தான் கிருஷ்ணராஜசாகரை இவ்வாறு பேசவைக்கிறதென புரிந்துகொண்ட நித்திலா அதற்கு மேல் அவனிடம் வாதிடாமல் உண்மையைக் கேட்டறியும் எண்ணத்தோடு நர்மதாவைத் தேடி சென்றாள்.
அவர் அம்ரித்துடன் பேசிக்கொண்டிருந்தார். மருமகளைக் கண்டதும் அவரது முகத்திலிருந்த சிரிப்பு தொலைந்துவிட்டது.
“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ஆன்ட்டி”
அமைதியாக நின்றவர் அம்ரித்தை ஸ்ரீநயனியோடு விளையாடும்படி அனுப்பி வைத்தார். மகளுக்கும் அம்ரித்தைப் பார்த்தால் கொஞ்சம் கோபம் குறையுமென்ற எண்ணம்.
டேபுடன் அவன் சென்றதும் மருமகளிடம் என்ன விசயமென பட்டும் படாமலும் கேட்டார்.
“உங்களுக்கு என் மேல இருக்குற கோவம் இன்னும் குறையலையா ஆன்ட்டி?”
“உன் மேல கோவப்பட நான் யாரும்மா?” தாமரை இலை தண்ணீர் போல பேச்சு!
“ஆன்ட்டி ப்ளீஸ்… நான் வந்த நாள்ல இருந்து நீங்க என் கிட்ட பேசாம இருக்குறது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? எங்கம்மாக்கு அப்புறம் நீங்க மட்டும் தான் என்னை புரிஞ்சிக்கிட்டிங்கனு நினைச்சேன்… ஆனா நீங்களும் பேசாம இருந்து என்னை ஹர்ட் பண்ணுறிங்க”
நர்மதா நித்திலாவின் பேச்சில் சிரித்தார்.
“உங்கம்மாவை மாதிரி நீ என்னை நினைச்சிருந்தனா என் கிட்ட சொல்லாம இங்க இருந்து போயிருக்கமாட்ட நித்திலா”
“ஆன்ட்டி அப்ப என்னோட நிலமை அப்பிடி… நான் மனசு உடைஞ்சு போயிருந்தேன்… என்னால எதை பத்தியும் யோசிக்க முடியல… சாகர் கிட்ட இருந்து விலகுனா போதும்னு மட்டும் தான் தோணுச்சு”
“நயனி என் கிட்ட எல்லாத்தையும் சொன்னா”
நர்மதாவின் பேச்சில் அதிர்ந்து விழித்தாள் நித்திலா. ஐயோ! இது கிருஷ்ணராஜசாகருக்குத் தெரிந்தால் அதற்கு வேறு சண்டை போடுவானே!
“என் மகன் உன்னைப் பாத்து அப்பிடி ஒரு வார்த்தைய சொல்லிருப்பான்னு என்னால நம்ப முடியல”
ஒரு அன்னை தனது மகனுக்கு ஆதரவாகப் பேசுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? எல்லா அம்மாக்களுக்கும் அவர்களின் மகன்கள் நல்லவர்கள் தான்!
அதே போல தான் நர்மதாவும் கருதுகிறார். அப்படி என்றால் தனது பேச்சு பொய்யாகிவிடுமே!
“அப்ப நான் பொய் சொல்லுறேன்னு நினைக்கிங்களா ஆன்ட்டி?”
“இல்ல… நீ கிரிஷை எவ்ளோ காதலிச்சனு எனக்கு நல்லா தெரியும்… காதலிச்ச அளவுக்கு நீ அவனைப் புரிஞ்சிக்கலனு மட்டும் தெள்ளத்தெளிவா தெரியுது நித்திலா… கல்யாண வாழ்க்கையில காதல் சீக்கிரமா வந்துடும்… ஆனா கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க நிறைய நாளாகும்… நீயும் கிரிஷும் அந்தப் புரிதலுக்கான அவகாசத்தை எடுத்துக்காம ரொம்ப அவசரப்பட்டுட்டிங்க… உங்க பிரிவுக்குக் காரணம் அது தான்மா”
நர்மதா கூறுவது உண்மை தானோ என்று கூட ஒரு நொடி நித்திலாவுக்குத் தோன்றிவிட்டது. தோன்றிய அடுத்த நொடியே அந்த எண்ணம் மறைந்தும் போனது. வந்த காரியத்தை மனதின் வைத்து அவரிடம் பேச ஆரம்பித்தாள்.
“சாகரோட வயித்துல இருக்குற வடு ஆக்சிடெண்டால வந்ததுனு சொன்னார் ஆன்ட்டி… என்ன ஆக்சிடெண்ட்? எப்பிடி ஆச்சு? ராகுலும் அவரோட இருந்ததா சொல்லுறார்”
“அது தொழில் விரோதத்தால நடந்த ஆக்சிடெண்ட்மா… அதுல இருந்து கிரிஷ் ரெகவர் ஆக ரொம்ப கஷ்டப்பட்டான்… ரெகவர் ஆனதுக்கு அப்புறம் உன் சம்பந்தப்பட்ட எதுவும் இந்த வீட்டுல இருக்கக்கூடாதுனு சொல்லிட்டான்… இதுக்கு இடையில நீ வீட்டை விட்டுப் போனதுக்குக் கிரிஷ் தான் காரணம்னு நயனி எங்க எல்லார் கிட்டவும் கோச்சுக்கிட்டு அமெரிக்கா போயிட்டா… ஹூம்! இந்த நாலு வருசத்துல நிறைய நடந்து போச்சும்மா”
நல்லவேளையாக தன்னால் தான் விபத்தானது என சொல்லவில்லை என்று நித்திலா சற்று நிம்மதியுற்றாள். இருப்பினும் விபத்தினால் கிருஷ்ணராஜசாகர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் என்பதை யோசிக்கும் போது வருத்தம் வந்தது என்னவோ உண்மை!
“ஆக்சிடெண்டுக்குக் காரணமானவங்களை போலீஸ் பிடிச்சிட்டாங்களா ஆன்ட்டி?”
“இல்லம்மா… அது ராந்த்வா வளந்த நேரம்… கிரிஷ் பிழைக்கவே மாட்டான்னு அவனோட போட்டி கம்பெனி ஃபேக் நியூஸ் பரப்புனாங்க… ஷேர் மார்க்கெட்ல ராந்த்வா ஷேர்ஸ் பயங்கரமா விலை இறங்குச்சு… அதனால ஆக்சிடெண்ட் கேஸை பெருசுப்படுத்தாம ரெகவர் ஆகுறதுல வேகம் காட்டுனான் கிரிஷ்… சீக்கிரமா குணமாகி வந்து சரிஞ்சு கிடந்த ராந்த்வாவ மறுபடியும் பழையநிலமைக்குக் கொண்டு வர்றதுக்குள்ள அவன் ரொம்ப மாறிட்டான்… இன்னும் அந்த தொழில் விரோதம் முடிவுக்கு வரல… பாத்தல்ல, வீட்டுக்கு எவ்ளோ பாதுகாப்புனு”
நித்திலா அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒருவேளை விபத்தாகி மருத்துவமனையில் இருந்த நேரத்தில் தனது திடீர் மறைவை எண்ணி வருந்தியிருப்பானோ? போலி பயாப்சி அறிக்கை கொடுத்து தன்னைக் கலங்கடிக்கும் அளவுக்குக் கிருஷ்ணராஜசாகர் கல்நெஞ்சனாக அவனை மாற்றியது தனது பிரிவு தானோ?
“க்கும்! அதுல்லாம் பொண்டாட்டி மேல உயிரா இருக்குற புருசனுக்குத் தான் ஃபீல் ஆகும்… அவன் எப்ப உன் மேல உயிரா இருந்தான்?”
தவறான நேரத்தில் சம்மனின்றி ஆஜரான மனசாட்சி சரியான பாதையில் யோசித்த நித்திலாவை மீண்டும் தவறான கோணத்தில் யோசிக்க வைத்து குதூகலித்தது.
அதுவும் சரி தான்! தொழில் வீழ்ச்சியைக் கண்ட அதிர்ச்சி அவனைக் கல்நெஞ்சக்காரனாக மாற்றியிருக்கும். முன்பே தன்னைக் கண்டால் ஆகாதவனுக்குப் பிள்ளையைத் தன்னிடமிருந்து பிரிக்கும் வன்மம் அதனால் தான் வந்திருக்கும்!
அதே நேரம் ஸ்ரீநயனியோடு விளையாடிக்கொண்டிருந்த அம்ரித் டேபில் விக்ரமிடமிருந்து வீடியோ அழைப்பு வரவும் உற்சாகமாக அழைப்பை ஏற்றான்.
“ஹாய் அம்ரு குட்டி”
விக்ரமும் சாவித்திரியும் கையசைத்தனர்.
“அத்தை விக்கி அங்கிளை பாரு”
டேபை ஸ்ரீநயனியிடம் நீட்டினான் அவன்.
ஸ்ரீநயனியும் வாங்கியவள் விக்ரமுக்கு வணக்கம் போட்டாள். அவனோடு இருந்த சாவித்திரியிடம் நலம் விசாரித்தாள்.
இருவரும் கேட்டது ஒரே ஒரு கேள்வியைத் தான்.
நித்திலாவும் அம்ரித்தும் எப்போது சிம்லாவுக்குத் திரும்புவார்கள்?
“அதுக்கு அம்ரித் தான் மனசு வைக்கணும் மிஸ்டர் அலர்ட் ஆறுமுகம்” கேலி போல கூறினாள் ஸ்ரீநயனி.
விக்ரம் அம்ரித்திடம் பேசினான்.
“ஏன்டா சிம்லாவுக்கு வரமாட்டியா நீ?”
அம்ரித் எதையோ யோசித்தவன் “நானும் நித்திம்மாவும் சீக்கிரமா வந்துடுவோம் அங்கிள்” என்று கூறவும் ஸ்ரீநயனிக்கு அதிர்ச்சி.
விக்ரமுக்கும் தான். இத்தனை நாட்களில் இந்தக் கேள்வி கேட்டால் அம்ரித்தின் பதில் “நீங்க இங்க வாங்க” என்பது தான். அதாவது அவனது தந்தையைப் பிரிந்து அவன் வர விரும்பவில்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிடுவான்.
ஆனால் இன்று மாற்றி கூறுகிறானே! ஸ்ரீநயனியின் அதிர்ச்சியைக் கவனிக்காமல் தனது அதிர்ச்சியை மறைத்தவனாகப் பேசிக்கொண்டே போனான் விக்ரம். சாவித்திரியும் தான்.
“தேவ் தாத்தா உனக்காக ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கார்”
“என்ன சர்ப்ரைஸ்?”
“சர்ப்ரைஸை யாராவது முன்னாடியே சொல்லுவாங்களா? நீ இங்க வர்றப்ப உனக்குத் தெரியும்”
அம்ரித் அவர்களிடம் அன்பாக உரையாடுவதை பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீநயனிக்கு தன்னைத் தேடி வரும் போதே அவன் முகம் வாடியிருந்தது நினைவில் வந்தது.
குழந்தை மனம் எதையோ நினைத்து வருந்துகிறது. அந்த வருத்தம் சென்னையில் இருக்கவேண்டாமென அவனைச் சொல்லவைத்து விட்டது.
இது அண்ணிக்குத் தெரிந்தால் நிச்சயம் மகிழ்வாள்! ஆனால் அண்ணனின் கதி?
அம்ரித் விசயத்தில் கொஞ்சம் ஏறுக்குமாறாக நடந்துகொண்டாலும் அவன் என்றால் கிருஷ்ணராஜசாகருக்கு உயிர். மகனைப் பிரிந்தால் ஏற்கெனவே இறுகிப்போய் இருப்பவன் இன்னும் இறுக்கமாகிவிடுவான்.
மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடியதில், வீடியோ அழைப்பைப் பேசி முடித்துவிட்டு அம்ரித் அமைதியாக அமர்ந்திருப்பதை கூட கவனிக்கவில்லை ஸ்ரீநயனி.
“அத்தை”
மூன்றாவது முறையாக அழைத்து அவளது கரத்தைச் சுரண்டினான் அம்ரித்.
கனவு கலைந்ததை போல மலங்க மலங்க விழித்தவள் “ஹான், சொல்லுடா” என்றாள்.
“நானும் நித்திம்மாவும் சிம்லாவுக்குப் போகணும்னு டாடி கிட்ட சொல்லுவியா அத்தை?”
“ஏன்டா கண்ணா, உனக்கு எங்க யாரையும் பிடிக்கலையா?”
“எனக்குப் பிடிக்குது… ஆனா இங்க வந்ததுல இருந்து நித்திம்மா கிட்ட டாடி சண்டை போடுறாங்க, இன்னைக்கு அந்த ஆன்ட்டி நித்திம்மாவ அழவச்சாங்க… சிம்லால நித்திம்மாவ யாருமே திட்டமாட்டாங்க, அழவைக்கமாட்டாங்க… நாங்க அங்க ஹேப்பியா இருப்போம்”
அனைத்தும் முடிந்ததென தோன்றியது ஸ்ரீநயனிக்கு. எந்த நாள் வராதென கிருஷ்ணராஜசாகர் இறுமாந்திருந்தானோ அந்நாள் வந்துவிட்டது.
தன் அன்னையை மதிப்பு குறைவாக இங்குள்ளவர்கள் நடத்துவதை கண்டுகொண்டான் அம்ரித். அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவனுக்கு இந்தச் சம்பவங்களை நினைத்து அச்சமாகக் கூட இருந்திருக்கும். வேறு வழியில்லை! அண்ணனிடம் பேசி அண்ணியையும் அம்ரித்தையும் சிம்லாவுக்கு அனுப்பிவைக்க வேண்டியது தான் என்ற முடிவுக்கு கனமான மனதுடன் வந்தாள் ஸ்ரீநயனி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

