மௌனமொழியாய் சம்மதம் தர
மகிழ்ச்சித் தீவினில் வசந்தம் வர
மண்ணைத் தொட்ட மழையின் துளியாய்!
மனதைத் தொட்டது ஏகாந்த அலையாய்!
உதிராப்பூவின் உள்ளுறை வாசம்
உயிரில் கலந்தவளின் உன்னத நேசம்
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
விடியலை ஏற்கும் விரிந்த வானாய்!
தலைவனை ஏற்றாள் நெஞ்சத்தில் தானாய்!
-அட்சரனின் வேதா
மறுநாள் காலையில் வேதவதி செங்கோட்டை நூலகத்துக்குக் கிளம்பினாள். அவளது புத்தகத்தை அங்கே கொடுக்கவேண்டும் என்பது முன்னரே யோசித்ததுதான். அட்சரன் காரில் அழைத்துப்போவதாகச் சொன்னதும் மறுக்க வாயெடுத்தவள், தந்தையும் தாயும் வற்புறுத்தவும் கிளம்பினாள் அவனோடு.
செங்கோட்டை வந்ததும், “அந்தப் பஸ் ஸ்டாண்ட் பக்கம் காரைப் பார்க் பண்ணி வெயிட் பண்ணுங்க. நான் வந்துடுறேன்” என்றவள், அவன் காரை நிறுத்தியதும் விறுவிறுவென இறங்கிப்போனாள்.
சாலையைக் கடக்கையில் ஆரம்பித்து, ஓர் ஆள் நுழையும் வகையில் சுழல் கதவு வைக்கப்பட்ட பூங்காவின் பின்வாயிலுக்குள் வரும் வரையில் தன் பின்னே நிழல் போலத் தொடர்ந்து வந்த அட்சரனை முறைத்தாள் வேதவதி. பார்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் நூலகத்தில் புத்தகங்களைக் கொடுப்பதற்காக வந்தவள், அவன் பின்தொடர்ந்ததில் கடுப்பாகிப் போனாள்.

முத்துசாமி பூங்காவின் நடுவில் இருக்கும் யானைகளுடன் கூடிய கஜலட்சுமி சிலையின் அருகே நின்றவள், சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். அவள் முகத்தில் துளியாய்க் கோபம். சுற்றியிருக்கும் நெட்டிலிங்கம் மரங்களைத் தாண்டிச் சூரிய வெளிச்சம் இருவரையும் நனைத்தது. அட்சரன் புன்னகையோடு அவளைப் பார்த்தான்.
“எதுக்கு பின்னாடியே வர்றீங்க? நான் உங்களைக் கார்ல வெயிட் பண்ணச் சொன்னேன்.”
“எனக்கு இந்த ஊர் புதுசு. எங்கயும் தொலைஞ்சுடக்கூடாதுல்ல வேதா” என்றபடி பொய்யான பயத்தோடு வந்தவனின் தலையில் நறுக்கெனக் குட்டும் அளவுக்கு அவளுக்கு எரிச்சல். பொது இடமாகப் போய்விட்டதே! கையையும் வாயையும் அடக்கிக்கொண்டு பார்க்கின் ஒரு பகுதியில் இருக்கும் நூலகத்துக்குச் சென்றாள் அவள்.
நூலகத்திற்கே உரித்தான பழைய நூல்களின் வாசனை, நிதானமாய்ச் சுற்றும் மின்விசிறி, மர பெஞ்சுகளுடன் இருவரையும் வரவேற்றது செங்கோட்டை நூலகம். நூலகம் அமர்ந்திருக்கும் பகுதியை அடைந்த வேதவதி, நூலகரிடம் சினேகப் புன்னகையோடு வணக்கம் கூறினாள்.
“இது என்னோட புக் சார். ரிலீஸ் ஆகி ஒன் மன்த் ஆகுது. இன்னும் கொஞ்ச நாள்ல இங்கிலீஷ்லயும் பப்ளிஷ் ஆகப்போகுது. அதைக் கொரியர்ல அனுப்பி வச்சிடுறேன்.”
தனது புத்தகத்தைக் கொடுத்தாள் வேதவதி.
“ரொம்ப சந்தோஷம்மா. அப்பா நல்லா இருக்காங்களா? எப்பிடிப் போகுது தேன்மலை லைப்ரரி?”
“நல்லாப் போகுது சார். அங்கயும் புக்ஸ் வருது.”
நூலகர் அவளருகே நின்ற அட்சரனைப் புருவச் சுருக்கத்தோடு பார்த்தார். “சார் யாரு?”
அட்சரன் பதில் சொல்லும் முன்னர் முந்திக்கொண்ட வேதவதி, “இவர் என்னோட லிட்டரரி ஏஜெண்ட். பேர் அட்சரன்” என்றாள் அழுத்தமாய்.

“ஓஹ்! எங்க ஊர்ப் பொண்ணோட படைப்பைத் தேர்ந்தெடுத்து, அதைப் புத்தகமா வர்றதுக்கும் வேலை பாத்திருக்கீங்க. ரொம்பச் சந்தோஷமா இருக்கு. எந்த ரைட்டர் எல்லாம் உங்ககூட டை-அப் வச்சிருக்காங்க?”
வேதவதி தன்னை வெறும் இலக்கிய முகவர் என்று அறிமுகம் செய்ததால் உண்டான புகைச்சலை மறைத்துக்கொண்டவன், தன்னுடன் இணைந்திருக்கும் எழுத்தாளர்களைப் பற்றி கூறினான்.
“கவிநேசன் புத்தகம் இப்ப இன்டர்நேஷனல் புக் ஃபேர்ல ரிலீஸ் ஆச்சே? அதுக்கு நீங்கதான் ஒர்க் பண்ணுனீங்களா? சூப்பர். இன்னும் நிறைய எழுத்துகளை நீங்க நல்ல பதிப்பகங்களுக்கு அறிமுகப்படுத்தணும் அட்சரன்.”
“கண்டிப்பா சார்.”
வேதவதி அவன் நூலகரிடம் உரையாடுவதைக் கேட்டபடி நின்றாள். ஒரு பக்கத்துப் புருவத்தை உயர்த்தியபடி சிரிப்பை உதட்டுக்குள் அடக்கிக்கொண்டு நின்றவளின் பார்வையில் மெச்சுதல் தெரிந்தது. அவனது பார்வை இடையிடையே அவள் பக்கம் திரும்பியபோது மட்டும் அந்த மெச்சுதல் பார்வை மறைந்தது.
நூலகரிடம் பேசிவிட்டு வெளியே வந்தபோது, “எதுக்கு என்னை லிட்டரரி ஏஜெண்ட்னு சொன்ன?” என விறைப்பாக வினவினான் அட்சரன்.
“வேற என்ன சொல்லிருக்கணும்? காலேஜ்ல ஃபர்ஸ்ட் டே சொன்னேனே, அவர் என் ஹஸ்பெண்ட்னு. அதே மாதிரி அசட்டுச் சிரிப்போட சொல்லிருக்கணுமோ?” கடுகடுவென எரிந்து விழுந்தபடி நடந்தாள் அவள்.
“வேதா…”
“ஷ்ஷ்! கத்தக் கூடாது. நிரந்தரமில்லாத உறவைச் சொல்லிக்க எனக்கு விருப்பமில்ல. காலேஜ்ல சொன்னப்ப நான் ரொம்ப அப்பாவியா இருந்துட்டேன். இப்ப அறிவு வந்துடுச்சு.”
அவள் படபடவெனப் பேசிவிட்டு முன்னே நடக்க, பின்னே வந்தவனோ ஆயாசமாய்ப் பெருமூச்சு விட்டான். அவன் அப்படியே நின்றுவிடவும் திரும்பிப் பார்த்தவள், “வர்றீங்களா? இல்ல நான் பஸ் பிடிச்சுப் போகட்டுமா?” என்று கேட்டாள் வெடுக்கென.
“தொண்டை வறளுது வேதா. ஏதாச்சும் ஜூஸ் வாங்கி குடு.”
பேருந்து நிலையத்தின் அருகே இருக்கும் கரும்புச்சாறு கடை அருகே போய் நின்றார்கள் இருவரும். வேதவதி தனக்கும் அவனுக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டாள் கரும்புச்சாறு அடங்கிய தம்ளர்களை.

அட்சரன் அதை ஒரு மிடறு அருந்திவிட்டு, “ப்பா! பயங்கர ரெஃப்ரெஷிங்கா இருக்கு” என்றவன், கரும்புச்சாறு கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தான். ஒரு நாளுக்கு எவ்வளவு வியாபாரம், கரும்பு வாங்குமிடம் என்று அவன் பாட்டுக்குப் பேச, வேதவதி தொண்டையைச் செருமினாள்.
திரும்பிப் பார்த்தவன் என்னவென வினவ, “லிட்டரரி ஏஜெண்ட் வேலையை விட்டுட்டுக் கரும்புச்சாறு கடை வைக்கப் போறீங்களா?” என்று கிண்டலாய்க் கேட்டாள் அவள்.
“டே டு டே லைஃப் சவாலா இருக்குறவங்ககிட்ட எனக்குப் பேசப்பிடிக்கும். சந்தனம் அரைச்ச தாத்தா கிட்ட பேசுன மாதிரி.”
வேதவதிக்குக் குடித்துக்கொண்டிருந்த கரும்புச்சாறு புரையேறியது. இருமியதில் கையில் வைத்திருந்த தம்ளரில் இருந்த கரும்புச்சாறு அவளது குர்தியில் சிந்தியது. அவள் துப்பட்டாவால் துடைக்கப் போக, அதற்குள் கைகுட்டையை எடுத்துக் கொடுத்தான் அட்சரன்.
அதை வாங்கிக்கொண்டவள் துடைத்துவிட்டுத் திருப்பிக்கொடுக்க, “துவைச்சுக் குடு. இப்ப நீயே வச்சுக்க” என்று அமர்த்தலாக மொழிந்தான் அவன்.
“இவ கிட்ட காசு வாங்கிக்கோங்கண்ணா.”
வேதவதி காசு கொடுத்துவிட்டுச் சாலையைக் கடந்தாள் அவனோடு.
காரிலேறி மீண்டும் தேன்மலைக்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும். வந்ததும் உடை மாற்றிக்கொண்டவள் மடிக்கணினியோடு கிளம்பவும், அட்சரன் தானும் அவளோடு வருவதாகக் கூறினான்.
“நான் காட்டுக்குள்ள போறேன். வர்றீங்களா?”
“கண்டிப்பா வருவேன்.”
இவனோடு பெருந்தொந்தரவாக இருக்கிறதெனச் சலித்துக்கொண்டு கிளம்பினாள் அவள்.
“பாத்து கவனம்! அட்டைப்பூச்சி இருக்கும். கால்ல ஒட்டுச்சுனா எடுக்க முடியாது.”
“நீ பயமுறுத்துனாலும் நான் வருவேன்.”
இருவருமாய் சேர்ந்து தேன்மலை கானகத்தின் நடுவே இருக்கும் நதியின் கரையில் உயர்ந்து வளர்ந்திருந்த பெரும் விருட்சத்தின் கீழே, மரத்தின் தண்டில் சாய்ந்து காலை நீட்டி லேப்டாப்பை மடியில் வைத்தபடி அமர்ந்து கொண்டாள் வேதவதி. அவளருகே அட்சரனும் அமர்ந்துகொண்டான். அவள் கதையைத் தட்டச்சு செய்ய, அவனோ ஓடும் நதியையும் மேலே விரிந்திருக்கும் மரங்களையும் பார்த்துப் பொழுதைப் போக்கினான்.
திடுமென, “இந்தக் காட்டுலதான் நான் உன்னை ஃபர்ஸ்ட் பார்த்தேன். சாயங்கால நேரம் கொஞ்சம் கொஞ்சமா இருட்டு பரவுன நேரத்துல வனமோகினி மாதிரி இருந்த. அழகு! ஆனா பயங்கரமான அழகு!” என்றான் ரசனையோடு.
வேதவதி தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.
“நான் கூட உங்களை யட்சன்னு நினைச்சுப் பயந்தேன். அதே சுருண்ட முடி, அதே கலர். பெட்ரோல் பங்க் எங்கனு கேக்கலனா அந்த இடத்துலயே பயந்து மயங்கி விழுந்திருப்பேன்.”
“யட்சனா?” என ஆச்சரியப்பட்டவன், “பட் வனமோகினியும் யட்சனும் செம பேர்ல” என்று சிலாகித்து அவளது கன்னத்தைக் கிள்ளினான்.
சட்டென விலகியவள், “கை கை!” என்று பற்களைக் கடித்துக் கண்களால் அவனது கையைச் சுட்டிக்காட்டினாள்.
அட்சரன் கடுப்போடு கையை விலக்கிக்கொண்டான்.

“கையை காலை வச்சுக்கிட்டுச் சும்மா இல்லனா விரட்டி விட்டுருவேன்.”
அருகிலிருந்த புல் ஒன்றை எடுத்தவன் அதை வைத்து அவளது கையில் வருடியபடி, “அப்பிடியெல்லாம் இருக்க முடியாது. இந்தக் காடு என்ன உன் சொத்தா?” என்றான் கேலியாக.
வேதவதி அவனிடம் பேசி நேரவிரயம் செய்ய விரும்பாதவளாய் மீண்டும் கதையைத் தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.
“புதுக்கதையா?”
“ம்ம்.”
“இந்த ஹீரோவுக்குள்ளயும் நான் இருக்குறேனா?”
அவன் கேட்டதும் சட்டெனத் திரும்பிப் பார்த்தவளின் விழிகளில் மெல்லிய அலைக்கழிப்பு. “என்ன உளறுறீங்க?” என்றாலும் குரலில் காட்டமில்லை.
அட்சரன் அவளது கையைப் பற்றியவன், “இந்த எழுத்தாளினியால காதலிக்கப்படுறதே அதிர்ஷ்டம்னு நினைக்குறேன். உன்னோட கதை மூலமா காலகாலத்துக்கும் சிரஞ்சீவி மாதிரி என்னோட நினைவுகள் இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஐ வாண்ட் டூ பி யுவர் ஹீரோ ஃபாரெவர். அதுக்காக நீ எதை விடச் சொன்னாலும் விடுறதுக்குத் தயாரா இருக்குறேன் வேதா. நான் வெறும் வாய் வார்த்தையா இதைச் சொல்லலடி” என்றான் அந்தக் கையைத் தனது இடப்பக்க மார்பின் இதயத்துடிப்பை அவள் உணரும்படி வைத்தவனாய்.

வேதவதியின் கண்கள் கலங்கின. கலங்கிய விழிகளை அவனிடம் காட்டப் பிரியமின்றி வேறெங்கோ பார்வையைத் திருப்பினாள்.
“இந்தக் கதையோட ஹீரோ திமிரு பிடிச்சவன். ஈகோயிஸ்ட். கோவம் வந்தா யாரைப் பத்தியும் கவலைப்படாம வார்த்தையை வாரியிறைச்சிடுவான். மொத்தத்துல ரத்தக்கொதிப்புக்குப் பிறந்தவன்” என்றாள் உர்ரென்ற முகத்தோடு.
அட்சரன் அவள் சொன்னதைக் கேட்டதும் பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தான்.
“என்ன சிரிப்பு? அசிங்கமா இல்ல.”
“இல்ல” என்றவன் பாதி சிரித்துவிட்டு, “உண்மையத் தானே எழுதுற. எழுது எழுது. வரலாறு முக்கியம்ல பொண்டாட்டி மேடம்” என்று சொல்லிவிட்டு அவளை அணைக்க வர, பட்டெனத் தள்ளிவிட்டாள் அவனை.
சற்று தள்ளி தடுமாறி அமர்ந்தவனிடம், “டோண்ட் டச் மீ” என மிரட்டிவிட்டுக் கதையைத் தட்டச்சு செய்வதில் பிசியானாள்.
சிறு படபடப்பும் தடுமாற்றமும் கொண்ட மனம் எழுத்தில் ஒரு நிலையானது. அப்போது ஆரம்பித்த படபடப்பு மறுநாள் திருமணத்துக்காகப் புபுடவை அணிந்து தயாராகும் வரை அவளை விட்டுப் போகவில்லை. இரவெல்லாம் அட்சரன் கானகத்தில் சொன்னதையே எண்ணி எண்ணி உறக்கமின்றி தவித்த கண்கள் எரிந்தன. ஆனால் அவளது கையைப் பற்றிக்கொண்டு நன்றாக உறங்கி எழுந்த அட்சரன் படு உற்சாகமாக இருந்தான்.
வயலட்டும் மெஜந்தாவும் கலந்த மல்மல் புடவையை அணிந்தவள், தன்னைக் கானகத்தில் சந்தித்தபோது அவன் அணிந்திருந்த உடையை இப்போதும் அணிந்திருப்பதைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினாள்.
“என்ன பாக்குற? இந்த ரெண்டு டிரஸ்ஸும் நாம சந்திச்ச மொமண்ட்டை உனக்கு ஞாபகப்படுத்திட்டே இருக்கணும்.”
“ஞாபகப்படுத்திட்டாலும்…” உதட்டைச் சுழித்து அழகு காட்டியவள் அன்னை குரல் கொடுத்ததும் அட்சரனோடு வெளியேறினாள்.
“கிளம்பலாமா?” என்று கஜேந்திரன் கேட்க, மூவரும் அவரோடு கிளம்பினார்கள்.
அன்பான கணவன் போலத் தோளோடு அணைத்து வேதவதியைக் காரின் முன்னிருக்கையில் திணித்துக் கதவை அடைத்துவிட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன், மாமனார் மாமியார் ஏறியமர்ந்ததும் காரைக் கிளப்பினான்.
பண்பொழி திருமலைக்கோவில் முருகனின் சன்னதியில்தான் திருமணம் நடக்கவிருக்கிறது. மணமகள் தேன்மலைக்காரி. பண்பொழியை அடைந்து காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, குடும்பமாக மலையில் இருக்கும் படிகளில் ஏறத் தொடங்கினார்கள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

