தலைக்கனம் வீழ்ந்தது தரைதனில் இன்று!
தவறை உணர்ந்தான் தன்னிலை வென்று!
ஆணவப்பாறை அன்பினில் உருக
ஆயிரம் பிழைகள் கரைந்து மறைய
வார்த்தை முட்களைத் தூக்கி எறிய
கௌரவம் கொன்று காதலை மீட்க
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கண்ணீர்த்துளியில் வேதனை தீர்க்க
மன்னிப்பெனும் மாபெரும் வரம்
கிடைக்குமா இனி அவனது வாழ்வில்?
-அட்சரனின் வேதா
அட்சரன் அலுவலக அறைக்குள் அமைதியிழந்து குட்டி போட்ட பூனையைப் போல நடந்துகொண்டிருப்பதைக் கவனித்த இலக்கியா சஞ்சயிடம் கூறிவிட்டாள்.
“வேதா இன்னைக்கு ஊருக்குப் போயிட்டானு நதி கால் பண்ணுனப்ப சொன்னா. காத்தால இருந்து அச்சு நடவடிக்கை சரியில்ல. ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கான். என்னனு போய்க் கேப்போமா? இல்ல புருசன் பொண்டாட்டி விவகாரம்னு தள்ளி நின்னுடுவோமா?”

“நானும் அவனைக் கவனிக்காம இல்லடி. ஏதாச்சும் சின்னப் பிரச்சனையா இருந்து நாம போய்ப் பேசி இன்னும் பெருசாகிடுச்சுனா என்ன செய்யுறது? ரெண்டு நாள் பாக்கலாம்”
“ரெண்டு நாள் இவன் தாக்குப்பிடிக்க மாட்டான் சஞ்சய். அதான்டா சொல்லுறேன்”
இருவரும் யோசனையோடு அட்சரனைத் தேடி வந்தார்கள்.
“எதுவும் பிரச்சனையா அச்சு?” கவலையாய்க் கேட்டவர்களைப் பார்த்ததும் நடையை நிறுத்தினான் அவன்.
“வேதா ஊருக்குப் போயிட்டா. அவ மேரேஜ் அரேஞ்ச்மெண்டை நிறுத்தச் சொல்லிட்டா. கூலிங் ஆஃப் பீரியட்ல இருந்து அப்பிடியே பிரிஞ்சிடுவோம்னு சொல்லிட்டா”
சஞ்சய்க்கும் இலக்கியாவுக்கும் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. அதிலும் கூலிங் ஆஃப் பீரியட் என்ற வார்த்தை அவர்களை அதீத அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
“என்ன உளறுற அச்சு? கூலிங் ஆஃப் பீரியட்னா? அப்ப இத்தனை நாளா நீங்க குளோஸா இருந்தது எல்லாம் என்ன கணக்கு? புரியல அச்சு”
அட்சரன் அவர்களிடம் முதலில் இருந்து நடந்ததை ஒருவரி விடாமல் சொல்லிவிட்டான்.
முழுதாய் கேட்ட பிறகு இருவரது முகங்களிலும் அதிருப்தியும் கோபமும்.
“பைத்தியமாடா நீ??” வெளிப்படையாகவே வெடித்தான் சஞ்சய்.
“சஞ்சய்” அவனை அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினாள் இலக்கியா.
“இல்லடி! அந்தப் பொண்ணு இவன் மேல எவ்ளோ லவ் வச்சிருந்தானு தெரியுமா? கிறுக்கன் மாதிரி பேசிருக்கான். ஈகோவாம்! என்ன ஈகோ? அந்த ஈகோவால மயிராப் போச்சா வாழ்க்கை!”
கோபத்தோடு கைகளை அகல விரித்து ஆற்றாமையைக் காட்டினான் சஞ்சய்.
அட்சரன் அசையாமல் நின்று தோழனைப் பார்த்தவன் தனது மொபைலை அவனிடம் கொடுத்தான்.
“வாட்ஸ்அப் ஓப்பன் பண்ணிப் பாரு. இண்டிமேட் சாட் எல்லாம் இருக்காது. நார்மலாத்தான் பேசிருப்போம்”
சஞ்சயும் எடுத்துப் பார்த்தான். அட்சரன் அனுப்பிய கடைசி செய்தியை வேதவதி பார்க்கவில்லை. மொபைலை அவனிடமே திருப்பிக்கொடுத்தான்.
“ஓஹ்! அங்க இருந்து ரிப்ளை வரலனதும் இங்க மனசு அடிக்குது” என்றான் கிண்டலாக.
“இதை நான் எப்பிடி எடுத்துக்குறது? அவ என்னை அவாய்ட் பண்ணுறா”
“நீ செஞ்ச வேலைக்கு உன்னைக் கட்டிப்பிடிச்சு முத்தமா குடுப்பாங்க?” இதைக் கேட்டவள் இலக்கியா.
எரிச்சல் மண்டியிருந்தது அவளது குரலில். பிருந்தாவின் பார்வை மாறியதிலிருந்து வேதவதியை அவள் எச்சரித்திருக்கிறாள். ஏன்? அட்சரனையும் மிரட்டாத குறை. ஆனால் இவன் அவளைக் காதலிப்பதாகச் சொன்ன பொய்யை நியாயப்படுத்தியிருக்கிறான்.
“நீ செஞ்ச மாதிரி வேதாவும் எவனோ ஒருத்தனைக் காதலிக்குற மாதிரி டிராமா பண்ணிருந்தா என்ன பண்ணிருப்ப அச்சு? ஆரம்பத்துல இருந்தே நீ அவளை ஈசி டார்கெட்டா யூஸ் பண்ணுற. உனக்குப் புரியுதா? வானதி கல்யாணத்துல ஆரம்பிச்சு இந்தப் பிருந்தா காதல் நாடகம் வரைக்கும் உன் ஈகோவ ஈசியா சாட்டிஸ்ஃபை பண்ணுறதுக்கு வேதாவ நீ யூஸ் பண்ணிருக்க. சுயமரியாதை உள்ள எந்தப் பொண்ணும் இப்பிடித்தான் நடந்துப்பா. இங்க பாரு அச்சு! ஒன்னு ஹீரோவா இரு. இல்ல வில்லனா இரு. ரெண்டுக்கும் நடுவுல சுத்துற ஆன்டி ஹீரோவா இருக்க நினைச்சனா உன் வாழ்க்கைல நீ நிறைய அடிபடுவ”
சஞ்சய் சலித்துக்கொண்டான்.
“விடுடி! நாம சொன்னா மட்டும் இவன் மாறவா போறான்? அவனுக்கா தோணணும் இதெல்லாம். ஈகோ எல்லா மனுஷனுக்கும் முக்கியம்தான். ஆனா அதை யார்கிட்ட காட்டுறோம்ங்கிறதுலதான் ஒரு மனுஷனோட பக்குவம் வெளிப்படும். உன் ஈகோவோட டார்கெட் வேதா. ஏன்டா பொண்டாட்டிகிட்டவா ஈகோவ காட்டுவ? அப்ப என்னத்தக் காதலிச்சுக் கிழிச்ச?”
கடுப்போடு அங்கிருந்து வெளியேறியவன் திரும்பி வந்தபோது அவன் கையில் ஐபேட் ஒன்று இருந்தது.
“பிடி! முடிஞ்சா இதுல வேதாங்கிற ஃபோல்டர்ல இருக்குற வீடியோவப் பாரு. வேதா கஜேந்திரனுக்கு மார்க்கெட்டிங் கேம்பெய்ன் ரன் பண்ணுறதுக்காக ஷூட் பண்ணுன ரீல்ஸ் வீடியோக்கு நடுவுல ரெக்கார்ட் ஆன ஃபூட்டேஜ். அந்தப் பொண்ணு உன் மேல எவ்ளோ காதல் வச்சிருந்தானு புரியும்.” என்றவன் இலக்கியாவை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.
அட்சரனுக்கு அதைப் பார்க்கவா வேண்டாமா என்று இரட்டை மனநிலை. காலையில் இருந்து வேதவதியைப் பார்க்காமல் அவளுடன் பேசாமல் பரிதவித்த மனது ‘பாரேன்’ என்று ஊக்கினாலும் இன்னொரு பக்கம் அவனது ஈகோ திமிறிக்கொண்டு எழுந்தது.
அரைமணி நேரம் நடந்த போராட்டத்தில் நேசம் கொண்ட மனம் ஈகோவை வென்றுவிட ஐபேடில் வீடியோவை ஓடவிட்டான் அட்சரன்.
ஒவ்வொரு வீடியோவிலும் வெள்ளந்தியான சிரிப்போடு பேசிக்கொண்டிருந்த வேதவதி அவனுக்குள் குற்றவுணர்ச்சியைத் தீயாய் மூட்டிவிட்டாள்.
ரீல்ஸ் வீடியோக்கள் அவளது இன்ஸ்டாகிராம் எழுத்தாளர் கணக்குக்காகப் படம்பிடிக்கப்பட்டவை. ஒவ்வொன்றிலும் அற்புதமாகத் தனது கதையையும் கதை மாந்தர்களையும் பற்றிப் பேசியிருந்தாள் அவள்.
எதிர்மறை கதாபாத்திரங்களுக்குக் கூட ஒரு நியாயமான பக்கமுண்டு என்று அவள் விவரித்தபோது எதிலும் கெட்டதைப் பார்க்க விரும்பாதப் பெண் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
இறுதியாய் ஒரு வீடியோ. அதைப் ப்ளூப்பர்ஸ் என்று பெயரிட்டிருந்தான் சஞ்சய்.
அதைத் திறந்தவன் அதில் வேதவதி இயல்பாய் உரையாடுவதைக் காண நேர்ந்தது.
“If a writer falls in love with you, you can never die but live foreverனு மார்க் எவரெட் சொல்லிருக்கார். ஏன்னா தன்னோட காதல், காதலிச்சவங்களோட ஞாபகங்கள், அவங்க கூட இருந்த தருணங்களை அந்த ரைட்டர் தன்னோட மட்டுமில்லாம தன் எழுத்தோடவும் பிணைச்சுப்பாங்க. காலம் மாறலாம். வயசாகலாம். நாம எல்லாரும் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போயிடுவோம். ஆனா அந்த ரைட்டரோட எழுத்து மூலமா அவங்களோட காதலும், அவங்களால காதலிக்கப்பட்ட நபரும் இந்தப் பூமில வாழ்ந்துக்கிட்டே இருப்பாங்க, சிரஞ்சீவி மாதிரி!”
கண்களில் மெல்லிய காதலோடு சொன்னவளைப் பார்க்கையில் அட்சரனுடைய கண்கள் அவனையறியாமல் கலங்கின.

“அப்ப அச்சு குடுத்து வச்சவன்னு சொல்லுற?” கிண்டல் செய்த சஞ்சயின் குரலும் பதிவாகியிருந்தது.
அதற்கு அவள் சிரித்தாள். பார்த்துக்கொண்டிருந்தவனின் இதழ்கள் முறுவலித்தன அவனது கண்களில் ததும்பியிருந்த கண்ணீரையும் மீறி!
“அஃப் கோர்ஸ்ணா! என்னோட கதைகள்ல எழுதுன கதாநாயக பிம்பம் எல்லாமே எனக்குள்ள எங்கயோ ஒளிஞ்சிருந்த லைஃப் பார்ட்னர் பத்தின கனவுகளோட துணுக்குகள்தான். இவ்ளோ நாள் கனவுல மட்டுமே இருந்த எதிர்பார்ப்புகள் இந்த ஆறு மாசமா நிஜத்துல நடக்குறதை நான் பாக்குறேன்ல. ஹீரோக்குனு நான் உருவாக்கி வச்ச மோல்டுல கச்சிதமா பொருந்துன ஆள் அவர். ஃப்ரெண்ட்லியா அடாவடியா கொஞ்சம் கிறுக்குத்தனமா என்ன மாதிரி மனுஷன்னே கணிக்க முடியாத ஒரு டைப் அவர். ஃபைனலி, ஹீ இஸ் மை ஹீரோ! இனி நான் எழுதப்போற ஒவ்வொரு கதையோட ஹீரோக்கள்லயும் இனி அட்சரனை நீங்க பாக்கலாம். எங்க காலத்துக்கு அப்புறமும் என் எழுத்து அவரைப் பத்தி பேசிட்டிருக்கும்”
“அவ்ளோ பிடிக்குமா அச்சுவ?”
“ம்ம்!” மேலும் கீழுமாகப் பொம்மை போலத் தலையாட்டுகையில் அவள் முகத்திலிருந்த பூரிப்பு அவன் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கையின் விளைவு! அதுதானே இப்போது உடைந்துவிட்டது.
கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தவனின் நினைவடுக்குகளில் வேதவதி கடைசியாய் அவனை வெளியே தள்ளிக் கதவை அடைத்தபோது சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலித்தன.
“ஸ்டே அவே ஃப்ரம் மை லைஃப் அண்ட் ஸ்டே ஆன் யுவர் லிமிட்”
இதுதான் முடிவா? ஆம் என்பது போல அவனைப் பார்த்துச் சிரித்தன வாட்ஸ்அப்பில் வேதவதியால் படிக்கப்படாத அவனது செய்திகளின் கீழே விழுந்திருந்த இரு கருமைநிற டிக் மார்க்குகள்.
அதே நேரம் தேன்மலையில் வேதவதி வீட்டின் முற்றத்தில் அவளோடும் அவளது பெற்றோரோடும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் யாழினியின் ஆச்சியான மீனாட்சியும் வேங்கடம்மாளும். கூடவே பக்கத்து வீட்டுச் சித்ராவும்.
“அங்க போனதுல வேதாகிட்ட நல்ல மாற்றம் வந்திருக்கு மதினி. புள்ளை முகத்துலயே அது தெரியுது. நீதான் உன் மாமனாரோட சூப்பர் மார்க்கெட்டைப் பாத்துக்குறியாமே? இங்க நாலு ஆளுங்க சேர்ந்து வந்தாப் பேசப் பயப்படுவ. யாரு குடுத்த தைரியம் இது? தம்பியா?”
அட்சரனைக் குறிப்பிட்டுக் கிண்டல் பேச்சு எழவும் மெய்யாகவே முறுவலித்தாள் வேதவதி.

“அவங்கதான்! உனக்காக நீதான் பேசணும்னு அடிக்கடி சொல்லுவாங்க.”
“தம்பி ஏன் வரல?”
“அவங்களுக்கு அங்க வேலை அதிகம்கா. எனக்கும் தனியா வரப் பழகணும்ல”
வேதவதி சொன்ன அனைத்தையும் மற்றவர்கள் நம்பினாலும் சற்று தள்ளி அமர்ந்திருந்த யாழினி நம்பவில்லை. வேதவதியின் ஒவ்வொரு அசைவுக்கும் அவளுக்கு அர்த்தம் தெரியும்.
“நானும் மெட்ராசுக்காரங்க சும்மா வாய் வார்த்தைக்கு மகள் மாதிரிப் பாத்துக்குறோம்னு சொன்னதா நினைச்சேன். ஆனா உன் மாமனாரு உன்னை நம்பி ஒரு சூப்பர் மார்க்கெட்டையே ஒப்படைச்சு நிர்வாகம் பண்ணச் சொல்லிருக்காரு. இந்தக் காலத்துல யாரு இதெல்லாம் செய்வாங்க?” சித்ரா ஆச்சரியமாய்ச் சொல்ல அதற்குத் தலையசைத்தாள் வேதவதி.
கனகவல்லியும் கஜேந்திரனும் நிம்மதியாய் இருப்பதை அவர்களின் உடல்மொழியே காட்டிக்கொடுத்தது அவளுக்கு. அந்த நிம்மதியைக் குலைக்க விரும்பவில்லை அவள்.
செங்கோட்டை பேருந்து நிலையத்தில் இறங்கிய நொடியில் பூரிப்போடு வந்து அவளது உடைமைகளை வாங்கிய கஜேந்திரன் கேட்ட முதல் கேள்வியே இதுதான்.
“அங்க எல்லாரும் நல்லா வச்சிருக்காங்களாம்மா? எதுவும் பிரச்சனைனா யோசிக்காம இங்க வந்துடு. அப்பா இருக்கேன்”
இந்த வார்த்தைகளை எந்தத் தகப்பனும் அவ்வளவு எளிதில் உதிர்ப்பதில்லை. தந்தை கேட்டதே அவளுக்குப் பெரும் பலமாய்! அதனாலேயே மனவுளைச்சலை மறைத்துச் சிரிக்கவும் முடிந்தது.
தேன்மலையின் காற்று முகத்திலடித்ததும் மனக்கிலேசங்கள் அடங்கின. அன்னையின் அணைப்பில் இரு தினங்களாய்க் காயம்பட்ட மனம் ஆசுவாசமடைய வேதவதியும் இயல்புக்குத் திரும்பியிருந்தாள்.
தேன்மலையின் செல்ஃபோன் டவர்களின் உபயத்தால் ஏறி ஏறி இறங்கும் நெட்வொர்க்கின் கருணையில் எப்படியோ ஊர் வந்து சேர்ந்ததை மாமனார் மாமியாரிடம் தெரியப்படுத்திவிட்டாள்.
ஆனால் அட்சரனின் செய்தியைப் பார்க்கத் தோன்றவில்லை. அவனே இறங்கி வந்தாலும் அவள் முறுக்கிக்கொள்வதாக உங்களுக்குத் தோன்றலாம்.
ஆனால் இது பெண்களின் உடற்கூறு சார்ந்த விடயம். பெண்கள் ஒரு சண்டையின் முடிவில் விலகலைக் கடைப்பிடிப்பது இன்னுமே நாடகமாகவும் திமிராகவுமே ஆண்களால் கருதப்படுகிறது.
உண்மையில் சண்டையின் போது அவர்களின் நரம்புமண்டலம் டிஃபென்சிவ் மோடுக்குச் சென்றுவிடும். கிட்டத்தட்ட உறைந்த நிலை இது. இதற்குக் காரணம் டார்சல் வேகல் என்ற நரம்பு தூண்டப்படுவதே!
அதனால் மொத்த நரம்புமண்டலமும் தற்காப்புக்காக அமைதியாகிவிடும். இந்த டிஃபென்சிவ் மோடிலிருந்து அவர்கள் நரம்பு மண்டலம் விடுபடும்வரை அவர்களால் பழையபடி இயல்பாக நடந்துகொள்ள முடியாது.
விலகி நிற்பது அவர்களை அமைதியாக்கும். இயல்பாக்கும். அதுவே வேதவதிக்கும் நடந்துகொண்டிருந்தது.
அந்த நாள் முழுவதும் அட்சரனின் அண்மையில்லாத விலகலே அவளை அமைதிப்படுத்தப் போதுமானதாய்!
ஊர்க்கதைகள் பேசி முடித்து இரவுணவுக்குப் பிறகு படுக்கையில் சரிந்தவள் வாட்ஸ்அப்பைத் திறந்து பார்த்தாள். இன்னும் இரண்டு செய்திகள் அட்சரனிடமிருந்து கூடுதலாய் வந்திருந்தன.
“சென்னைக்கு எப்ப ரிட்டர்ன்? ட்ரெயின் ஆர் பஸ்? எதுல டிக்கெட் போட்டிருக்க? நீ வர்ற டைம் சொல்லு. நான் பிக்கப் பண்ணிக்க வர்றேன்”
இது காலையில் அனுப்பியிருந்த செய்தி.
“தேன்மலை எப்பிடி இருக்கு? வீட்ல எல்லாரும் ஓகேவா?” இது இரவு ஏழு மணிக்கு வந்த செய்தி.
“ஏதாச்சும் பேசு வேதா” இது சற்று முன்னர் வந்த செய்தி.

வேதவதி பெருமூச்சு விட்டாள். இயல்பாய் வெகு இயல்பாய் அவன் காட்டிகொண்ட விதமே அவளுக்கு இன்னும் எரிச்சல் மூட்டுவதாய்! அவள் என்ன நல்ல மனநிலையிலா இங்கே வந்திருக்கிறாள்? பிறந்த வீட்டுக்குச் சென்ற மனைவியிடம் கணவன் பேசுவது போல அத்துணை சாதாரணமாய் செய்தி அனுப்பியிருக்கிறான்.
அதுவும் ‘இனி என்னை விட்டு விலகி நில்’ என்று சொன்ன பிறகும்! பற்களைக் கடித்தாள்.
“எப்பிடி போனேனோ அப்பிடி வரத் தெரியும். நீங்க என்னைப் பிக்கப் பண்ண வரவேண்டாம். எனக்குக் கேப் புக் பண்ணி வரத் தெரியும். இவ்ளோ தூரம் இறங்கி வந்து எனக்கு மெசேஜ் அனுப்புறப்ப உங்க ஈகோ ஹர்ட் ஆகாதது ஆச்சரியமா இருக்கு. உங்களுக்குப் பேசப் பிடிச்சிருக்கலாம். எனக்குப் பிடிக்கல. யாரோ போல தெரியுறீங்க நீங்க. யாரோவாவே இருந்துடுங்க எப்பவும்.”
மடமடவெனத் தட்டச்சு செய்து அனுப்பியவள் இணையத்தொடர்பையும் துண்டித்துவிட்டுக் கண் மூடிப் படுக்கையில் விழுந்துவிட்டாள். சொந்த ஊரின் சீதோஷ்ணம் அன்னை மடி போல இதமாக இருந்ததால் போராட்டத்துக்கு அவசியமின்றி உறக்கமும் வந்துவிட்டது அவளுக்கு.
ஆனால் அவளது செய்தியைப் படித்தவனுக்கோ சொல்லவொண்ணா பரிதவிப்பு.
பால்கனியில் அமர்ந்து எப்போதும் வேதவதி அமர்ந்திருக்கும் பக்கத்துப் பால்கனியின் பீன்பேக்கை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
அவர்களின் இதமான உரையாடல்கள் அனைத்தும் அரங்கேறும் இடமாயிற்றே! யாரோவாக அறிமுகமாகி யாவும் நீயென ஆன பின்னர் மீண்டும் யாரோவாக மாறிப் போய் நிற்கிறார்கள் இருவரும்.
வேதவதி தன்னை அன்னியப்படுத்துவதை அட்சரனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
‘ஹீ இஸ் மை ஹீரோ’ என்று சொன்னபோது அவளது கண்களில் தெரிந்த அப்பாவித்தனமான காதலை இழந்துவிட்டோமோ என்று யோசித்துப் பித்து பிடித்த நிலை இப்போது!
தனது ஈகோவையும் தாக்கியிருந்தாள் அல்லவா! பேசியதை மறந்து இயல்பாய் அவளிடம் உரையாடும்போது காயப்படாத ஈகோ என்றோ யாருடைய தந்திரத்தாலும் கெட்ட எண்ணத்தாலும் அரங்கேறிய சம்பவத்தால் மட்டும் காயப்பட்டுவிட்டதா என்ன?
‘உன்னை நான் நல்லதொரு சூழலில் சந்தித்திருக்கலாம். நமக்குள் இயல்பாய் காதல் மலர்ந்திருக்கலாம். ஏன் இப்படியொரு சிக்கலான சூழலில் காலம் நம்மைப் பிணைத்தது?’
யோசித்தவனின் தலையில் நறுக்கெனக் குட்டி அறிவுரை சொல்ல யாருமில்லை.
தவறானச் சூழலில் சந்தித்தாலும் சந்தித்தவர்களின் உள்ளங்கள் ஒன்றையொன்று விரும்பிப் பிணையும்போது அந்தச் சூழல் அங்கே மறக்கப்படவேண்டும். விருப்பமும் பிணைப்பும் மட்டுமே பிரதானமாகத் தெரியவேண்டும்.
ஒருவேளை அப்படித் தெரியவில்லை என்றால் காலமே அடித்து உதைத்து அதைத் தெரியவைக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு.
இதோ இப்போது அட்சரனுக்குப் புரியவைத்ததைப் போல!
“யாருக்குத்தான் அவமானச்சின்னம்னு சொன்னவன் கூட வாழப் பிடிக்கும்? அவ பேசுனது நியாயம்தான். எனக்கு அவ பழைய வேதாவா வேணும். என்கூட வார்த்தைக்கு வார்த்தை பதிலடி குடுக்குற அந்த வேதா வேணும். இப்பிடி விலகி நிக்குறது எனக்குப் பிடிக்கல.”
வாய்விட்டே புலம்பியவனுக்குத் தீவிர மனப்போராட்டத்தில் உடலும் உள்ளமும் சோர்ந்தபோது உறக்கமும் வந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

