“எந்த செண்டிமெண்டுக்கும் இடம் குடுக்காம, எந்தவித பற்றும் இல்லாத நிலையை இங்க்லீஸ்ல ‘ஆபதி (apathy)’னு சொல்லுவாங்க… உறவுகள் நமக்குக் குடுத்த ஏமாற்றத்தால உண்டாகுற ட்ராமா (trauma) தான் இந்த ஆபதிக்குக் காரணம்னு சைக்காலஜி சொல்லுது… எப்ப இது சைக்கலாஜிக்கல் டிஸ்சார்டரா மாறும் தெரியுமா? அன்றாட வாழ்க்கையில செய்யவேண்டிய சின்ன சின்ன வேலையில கூட நமக்கு ஆர்வம் இல்லாம போறப்பதான்… நல்லவேளை, என்னோட ஆபதியை நான் ஒய்ப்ங்கிற கேரக்டரோட கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்… கொஞ்சம் கொஞ்சமா என்னையும் சில செண்டிமெண்ட்ஸ் கவர் பண்ண ஆரம்பிச்சிடுச்சு… அதுக்குக் காரணம் அம்ரித்… யா, என்னோட ஆபதிக்கு அவன் தான் மெடிசின்… என்ன கொஞ்சம் ஹைடோஸ் மெடிசின்… அந்த மெடிசினோட வீரியத்தால ஃபியூ டேய்ஸ்ல எனக்குள்ள நடந்திருக்கிற சேஞ்சஸை என்னால நம்பவே முடியல”
– கிரிஷ்
பெவர்லி ஹில்ஸ், அமெரிக்கா…
இயக்குனர் ஜேடன் ஹெம்ஸ்வொர்த்தோடு இணைந்து சாகர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் ஹாலிவுட் திரைப்படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தான மகிழ்ச்சியில் திரையுலகப் பிரபலங்களுக்குப் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் அவர்.
அதில் பிரதான விருந்தாளி சந்தீப் சாகர் மற்றும் அவனது மனைவி நிஹாரிகா.
ஜேடன் ஹெம்ஸ்வொர்த் திரையுலக பிரபலங்களிடம் இந்தியாவின் தலை சிறந்த பிசினஸ் குடும்பங்களில் ஒன்றின் உறுப்பினர்கள் என அவர்களைப் பெருமையாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சந்தீப்பின் கருப்புவண்ண ப்ளேசர் சூட்டுக்குப் பொருந்தும்படி ஸ்கார்லட் சிவப்பு வண்ண டீ லெங்க்த் (tea length) பார்ட்டி கவுனில் செம்பொன்காரிகையாக மிளிர்ந்தாள் நிஹாரிகா.
கணவனின் தோளை அணைத்தபடி நின்றவளுக்குப் வாய்கொள்ளா புன்னகை. இப்படிப்பட்ட திரையுலக வட்டாரங்களைப் பற்றியும் பார்ட்டியைப் பற்றியும் செவிவழியாக மட்டுமே கேட்டறிந்தவளுக்கு அங்கே இருந்த ஆடம்பரமும் பிரபலத்துவமும் போதையூட்டியது. அதுவும் ராஜபோதை.
ஏதோ அறிந்தவர்களைப் போல அங்கிருந்த அனைவரிடமும் அமெரிக்க உச்சரிப்பில் அவள் பேசிய ஆங்கிலத்தில் சந்தீப்பே கொஞ்சம் அதிர்ந்துதான் போனான்.
கையில் ஒய்யாரமாகப் பிடித்திருந்த சாம்பெய்ன் நிரம்பிய கண்ணாடி குவளையை சந்தீப்பின் குவளையோடு முட்டியவள் ஒரே மிடறில் அதை காலி செய்தாள்.
சந்தீப் பெயருக்குக் கோப்பையை எடுத்துக்கொண்டானே தவிர அருந்தவில்லை. பேச்சினிடையே அருந்துவது போல பாவனை செய்து சமாளித்தான்.
ஆல்கஹால் என்றாலே அலர்ஜி அவனுக்கு. மனைவி இரண்டு முறை கோப்பையைக் காலி செய்துவிட்டு அடுத்த கோப்பை வேண்டுமென கூறவும் இது சரியில்லை என சுதாரித்துக்கொண்டான்.
பார்ட்டியிலிருந்து பாதியில் விடைபெறுவது நாகரிகமில்லை என்பதால் சிறிதுநேரம் பொறுத்துப் பார்த்தவன் நிஹாரிகாவால் சமாளிக்கமுடியாது என்றதும் ஜேடன் ஹெம்ஸ்வொர்த்திடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றான்.
காரிலேறியதும் நிஹாரிகா “ஏன் இவ்ளோ சீக்கிரம் கிளம்பணும் சந்தீப்? ஐ லவ் திஸ் பார்ட்டி” என்று கொஞ்சினாள்.
போதை தலைக்கேறும் அளவுக்கெல்லாம் அவள் குடிக்கவில்லை. நிதானமாகவே இருந்தாள்.
“இது சரியில்ல நிஹி”
கண்டிப்புடன் கூறியபடி வெளியே வேடிக்கை பார்த்தான் சந்தீப்.
அவ்வளவு தான், நிஹாரிகாவின் முகம் மாறிவிட்டது.
ஓட்டுனரைப் பார்த்துவிட்டு அவனிடம் திரும்பினாள்.
“எது சரியில்லனு சொல்லுறிங்க?”
“இப்பிடி கண் மண் தெரியாம ட்ரிங் பண்ணுறது”
குற்றம் சாட்டும் குரலில் கூறினான் சந்தீப்.
“வாட்? கம் அகெய்ன்”
தோள்களைக் குலுக்கி அவள் கேட்ட விதம் சந்தீப்பை எரிச்சலுக்குள்ளாக்கியது.
“நம்ம டாக்டர் கிட்ட போனப்ப அவங்க என்ன சொன்னாங்க? ஸ்டே அவே ஃப்ரம் ஆல்கஹால்… மறந்துட்டியா?” என்றான் காற்றில் பறந்த சிகையைக் கோதியபடி.
நிஹாரிகா மதுவின் வசம் இருந்ததால் சினத்தோடு சிரித்தாள்.
“ஒரு நாள் ட்ரிங் பண்ணுறதால என் ஃபெர்ட்டிலிட்டிக்கு எந்த பாதிப்பும் வராது சந்தீப்… எதையுமே அனுபவிக்காம வாழ்ந்து என்ன பண்ணப்போறோம்?”
அலட்சியம் வழிய சொன்னவளை வெளிப்படையாக கடிந்துகொள்ள முடியவில்லை அவனால். காரணம் அவளை அந்தளவுக்குக் காதலிக்கிறான் சந்தீப்.
“ஒரு பாத்திரத்துல இருக்குற பால்ல துளி விசம் கலந்தாலும் அந்தப் பாலை குடிக்கமுடியாது நிஹி”
“ஷப்பா! ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் சந்தீப்… அட்வைஸ் பண்ணி கொல்லாதிங்க”
அதற்கு மேல் அவளிடம் வாதிட விரும்பாமல் அமைதியாய் ஹோட்டல் வரும் வரை வெளியே வேடிக்கை பார்க்கத்தொடங்கினான் சந்தீப்.
பல நேரங்களில் நிஹாரிகா இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதால் அவமானப்படுபவன் சந்தீப்பே.
அமெரிக்கா வருவதற்கு முன்னால் சாகர் குழுமத்தின் பங்குமாற்றம் பற்றிய பேச்சு ஆரம்பித்த போதும் இப்படிதான் பேசி கிருஷ்ணராஜசாகரின் கோபத்தைத் தூண்டி அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே விரிசலுக்கான பிள்ளையார்சுழியைத் திவ்வியமாக போட்டாள் நிஹாரிகா.
ஆனந்த்சாகருக்கு இரு மகன்களும் இரு கண்கள் போல. ஸ்ரீநயனியோ அவரது உயிருக்கு ஒப்பானவள்.
மூவருக்கும் சாகர் குழுமத்தின் மேலாண்மையில் முக்கியப்பொறுப்பைக் கொடுக்க விரும்பியவர் தலைமைப்பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் தான் தடுமாறினார்.
கிருஷ்ணராஜசாகரும் ஸ்ரீநயனியும் குணத்தில் ஒரே மாதிரி. இருவருக்கும் தற்சமயம் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் குடும்பம் பந்தபாசத்தில் பிடிப்பில்லை.
அவரவர் வேலை, தொழிலில் மூழ்கி தங்களைச் சுற்றி சுவரெழுப்பி வாழ்ந்து வருபவர்களிடம் தலைமைப்பொறுப்பை ஒப்படைத்தால் அவர்களுக்குப் பின்னர் யார் இந்த தொழில்களை வழிநடத்துவது?
இந்தக் கேள்விக்கு விடையாய் அவர் தேர்வு செய்தது சந்தீப்பை.
அவனது மேலாண்மை திறனில் எந்தக் குறையும் சொல்ல முடியாது.
ஆனால் பெரும்பாலான அவனது முதலீட்டு சம்பந்தப்பட்ட முடிவுகள் நஷ்டத்தில் முடிந்ததை சுட்டிக்காட்டினான் கிருஷ்ணராஜசாகர்.
நிஹாரிகாவுக்கு அது பிடிக்கவில்லை. கிருஷ்ணராஜசாகர் தனியே ஆரம்பித்த ‘ராந்த்வா காஸ்மெட்டிக்ஸ் அண்ட் ஸ்கின்கேர் ப்ரைவேட் லிமிட்டட்’ இப்போது இந்தியாவில் தலைசிறந்த சருமபாதுகாப்பு பொருட்கள் நிறுவனம்.
அப்படி இருக்கையில் சாகர் குழுமத்தின் தலைமைப்பொறுப்பையும் அவனிடம் கொடுப்பது எவ்வகையில் நியாயம் என ஆனந்த்சாகரிடம் கேள்வி எழுப்பினாள் அவள்.
அது கிருஷ்ணராஜசாகருக்குப் பிடிக்கவில்லை. ஏனோ நிஹாரிகா சந்தீப்பை தலையாட்டி பொம்மையாக வைத்திருப்பதாக அவனுக்கு ஒரு எண்ணம்.
ஆனந்த்சாகர் சந்தீப்பிடம் கருத்து கேட்க அவனுக்கும் சேர்த்து பதிலளிக்க நிஹாரிகா குறுக்கிட கிருஷ்ணராஜசாகர் மனதில் இருப்பதை வெளிப்படையாகவே கூறினான்.
“எதுக்குச் சந்தீப்பைச் சேர்மன் ஆக்கணும்னு நீ துடிக்கிற? அவனை பொம்மை சேர்மனா வச்சிக்கிட்டு நீ உன் இஷ்டத்துக்குச் சாகர் குரூப்பை ஆட்டிவைக்கலாம்னு திட்டம் போடுறியா? உனக்கு பிசினஸ் பத்தி என்ன தெரியும்னு எங்க பேச்சுல மூக்கை நுழைக்கிற?”
அதில் நிஹாரிகாவின் முகம் கறுத்தது.
“நானும் எம்.பி.ஏ படிச்சிருக்கேன்… எல்லாரையும் உங்க ஒய்ப் மாதிரி திறமையில்லாதவங்கனு நினைக்கவேண்டாம்”
கிருஷ்ணராஜசாகருக்கு வந்த கோபத்தில் அவன் கரங்கள் முஷ்டியாகி முன்னே கிடந்த டீபாயை ஓங்கி குத்தியதில் அதன் கண்ணாடி சிலீரென்ற சத்தத்தோடு உடைந்தது இப்போது நடந்தது போல சந்தீப்பின் மனக்கண்ணில் தோன்றியது.
“உங்களுக்குனு சொந்தமா ஒரு கம்பெனிய உருவாக்கி வளத்துட்டிங்க… சாகர் குரூப்லயும் சேர்மன் பொசிசன் வேணும்னா என்ன அர்த்தம்? இப்பிடி எல்லா அதிகாரத்தையும் உங்க கைக்குள்ள வச்சு என்ன பண்ணப்போறிங்க? பேர் சொல்லுறதுக்குப் பிள்ளையும் இல்ல, தோள் சாயுறதுக்குப் பொண்டாட்டியும் இல்ல… தனிக்காட்டுராஜாவா வாழுறவருக்கு ஏன் இவ்ளோ அதிகாரவெறி?”
பின்னர் நிஹாரிகா நிறைய பேசினாள். தேவையில்லாமல் ஏகப்பட்ட வார்த்தைகளை இறைத்தாள். அவை அனைத்தும் கிருஷ்ணராஜசாகருக்குள் வெறுப்பை விதைத்திருக்குமென சந்தீப்புக்குத் தெரியும்.
அவன் அந்த வெறுப்பை இனி எப்படியெல்லாம் காட்டுவானோ என்ற சலிப்பு வேறு சந்தீப்பை ஒருவழியாக்கிக் கொண்டிருந்தது.
எண்ணங்களின் பீடிகையிலிருந்து அவன் வெளிவந்த போது அவர்களின் ஹோட்டலும் வந்துவிட்டது.
மூவரில் மூத்தவன் கிருஷ்ணராஜசாகர் தனக்கு வேண்டியதை சண்டை போட்டேனும் சாதித்துக்கொள்ளும் ரகம். கடைக்குட்டி ஸ்ரீநயனி நியாயம் தர்மம் பார்ப்பவள், யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்ட அஞ்சாதவள்.
தான் மட்டும் ஏன் எதை சொல்லவும் தயங்கும் குணத்தோடு பிறந்து தொலைத்தோம்? தன்னைத் தானே கடிந்துகொண்டு ஹோட்டல் அறைக்குள் நுழைந்தவனுக்கு சென்னையில் அண்ணன் வைத்திருக்கும் சர்ப்ரைசால் தனது வாழ்க்கையில் இன்னும் எத்தனை கஷ்டங்களை நிஹாரிகா உண்டாக்கப்போகிறாள் என்பது தெரியாதல்லவா!
*******
கெட்வெல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை…
கீமோதெரபிக்காக விக்ரமோடு மருத்துவமனைக்கு வந்திருந்தாள் நித்திலா. மேனியெங்கும் ஒருவித நடுக்கம். மனம் மகனைக் காண தவியாய் தவித்தது.
அம்ரித்தின் முகத்தை வீடியோ காலில் பார்த்தால் நன்றாக இருக்குமென தோன்ற அவனது டேப் எண்ணுக்குத் தனது மொபைலில் இருந்து அழைத்தாள்.
உடனே அழைப்பை ஏற்றவன் ஆசையாக அன்னையிடம் பேச ஆரம்பித்தான்.
“இன்னைக்கு அப்புறம் உங்களுக்கு லெக் பெய்ன் வராதுல்ல நித்திம்மா?” என கனிவாகக் கேட்டான்.
“தெரியல அம்ரு… அதை டாக்டர் அங்கிள் கிட்ட தான் கேக்கணும்”

“நீங்க லெக் பெய்ன் சரியானதும் இங்க வந்துடுவிங்கல்ல நித்திம்மா… நீங்க வந்ததும் உங்களுக்கு நான் ப்ளேஸ்டேசன்ல விளையாட சொல்லித் தர்றேன்… நர்மு பாட்டியும் நானும் இங்க இருக்குற பான்த்ல லோட்டஸ் வளக்கப்போறோம்… அதை உங்களுக்குக் காட்டுறேன்”
“பான்த் இல்ல அம்ரு… பாண்ட்”
மகனின் உச்சரிப்பைத் திருத்தினாள் நித்திலா.
அவனோ அவளை சென்னைக்கு வரும்படி அழைப்பதிலேயே குறியாய் இருந்தான்.
“நீங்களும் நம்ம வீட்டுக்கு வாங்க நித்திம்மா… இங்க பெரிய டிவி இருக்கு… நிறைய டாய்ஸ் இருக்கு… நம்ம வீட்டை விட இது பெருசா இருக்கும்மா”
குழந்தைக்குச் சாகர் நிவாசின் பிரம்மாண்டம் கொடுத்த பிரமிப்பு இப்போதைக்குத் தீராது. இவ்வளவு ஏன், நித்திலாவுக்கே வீட்டின் தோட்டத்தில் இருக்கும் செய்குளம் மிகவும் பிடிக்குமே!
வீட்டிற்கு என்ன குறை? வீட்டின் தலைமகனைத் தவிர!
“டாக்டர் அங்கிள் என்னை ட்ராவல் பண்ணக்கூடாதுனு சொல்லிருக்காங்க அம்ரு… நான் எப்பிடி அவ்ளோ தூரம் வரமுடியும்?”
கிருஷ்ணராஜசாகருக்குக் கொடுத்த வாக்கு நினைவில் வந்துவிடவும் மகனுக்குப் பொய் நம்பிக்கை கொடுக்க விரும்பாமல் மருத்துவரைக் காரணம் காட்டினாள் நித்திலா.
குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள். எப்பேர்ப்பட்ட சிக்கலுக்கும் அவர்களிடம் தீர்வு இருக்கும். அம்ரித்தும் அன்னையின் இப்பிரச்சனைக்குத் தீர்வு கூறினான்.
“டாடி உங்களைத் தூக்கிட்டு வந்துடுவாங்க நித்திம்மா”
நித்திலாவுக்கு அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தது.
“உன் டாடி என்ன ஹனுமானாடா? இங்க இருந்து என்னைத் தூக்கிட்டுப் பறந்து சென்னைக்கு வருவாரா?”
“டாடியால எல்லாமே செய்யமுடியும் நித்திம்மா… த்ரீ டேய்ஸ் க்ரூ ஷிப்ல என்னைக் கூட்டிட்டுப் போனாங்க தெரியுமா?”
க்ரூவா என அவள் யோசித்தவள் பின்னர் தான் அவன் க்ரூஸ் என்ற சொகுசு கப்பலைக் கூறுகிறான் என்பதே புரிந்தது.
மூன்று தினங்கள் சொகுசு கப்பலில் சென்னையிலிருந்து திரிகோணமலை வரை சென்று மீண்டும் சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஊர்ப்பெயர்களை சரியாக உச்சரிக்காவிட்டாலும் புரிந்துகொண்டாள் நித்திலா.
இம்மாதிரி சொகுசு கப்பல்களில் ஒரு நபருக்குக் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வரை கட்டணம் வசூலிப்பார்கள் என கேள்விப்பட்டிருக்கிறாள் நித்திலா.
மூன்றே முக்கால் வயது சிறுவனுக்கு இதெல்லாம் பிரமிப்பையும் ஆர்வத்தையும் ஊட்டுமல்லவா! பின் ஏன் அவன் மீண்டும் சிம்லாவுக்கு வர விரும்பப்போகிறான்?
கடந்த ஏழு நாட்களாக கிருஷ்ணராஜசாகர் அலுவலகத்துக்குப் போகவில்லையாம்! அம்ரித்தோடு வீட்டில் இருந்தானாம்! இருவரும் ப்ளேஸ்டேசனில் விளையாடினார்களாம்! அவன் விரும்பியதை எல்லாம் கிருஷ்ணராஜசாகர் வாங்கிக் கொடுத்திருக்கானாம்! சொகுசு கப்பலில் அழைத்து சென்றானாம்!
அம்ரித் கதை கதையாக வாய் ஓயாமல் பேசினான்.
தன்னை அம்ரித் தேடிவிடக்கூடாதென கிருஷ்ணராஜசாகர் ஒவ்வொரு காயையும் சாமர்த்தியமாக நகர்த்துகிறான் என்ற எண்ணமே அவளுக்குக் கசந்தது.
ஆனால் அவனுடன் இருந்தால் மைந்தனின் எதிர்காலம் பாதுகாப்பாகவும் செழிப்பாகவும் இருக்கும். அது போதுமென அழைப்பைத் துண்டித்தவள் விக்ரம் மருத்துவரின் அறையிலிருந்து கோபத்தோடு திரும்பி வரவும் என்னவென விசாரித்தாள்.
அவன் சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியும் கழிவிரக்கமும் ஆட்கொள்ள உடல் நடுங்க அழத்துவங்கினாள்.
மனம் பதபதைத்தது. அழுகையை நிறுத்த முடியவில்லை. எத்தகைய அனர்த்தம் அரங்கேறிவிட்டது?
அழுகையோடு எழுந்தவள் விறுவிறுவென மருத்துவரின் அறைக்குள் சென்றாள்.
அவர் முன்னே ஆவேசத்தோடு நின்றாள். கூடவே விக்ரமும்.
“சாரி… இது கவனக்குறைவால நடந்த தப்பு”
சிம்லாவின் தலைசிறந்த புற்றுநோய் நிபுணரின் மன்னிப்பு நித்திலா ஏழு நாட்கள் அனுபவித்த நரகவேதனையைத் துளி கூட குறைக்கவில்லை.
“இவ்ளோ ஈசியா சொல்லுறிங்களே… இந்த ஏழு நாள்ல நான் எவ்ளோ மன உளைச்சலுக்கு ஆளானேன்னு உங்களுக்குத் தெரியுமா சார்? மரணத்தை விட மரணபயம் கொடூரமானது சார்”
“மிசஸ் நித்திலா, உங்க நேம்ல இன்னொரு பேஷண்ட் இருந்திருக்காங்க… அவங்களுக்குக் கேன்சர் ரெகரன்ஸ்… உங்களுக்கு வந்திருக்கிறது சாதாரண டியூமர்… இதை நார்மல் சர்ஜரில ரிமூவ் பண்ணிடலாம்… ப்ளீஸ் இதை பெருசுப்படுத்தாதிங்க”
விக்ரமுக்குக் கோபம் வந்தது.
“இதே கவனக்குறைவோட நித்திலாக்குக் கீமோ குடுத்திருந்திங்கனா அவ நிலமை என்னாகிருக்கும்னு யோசிங்க… இதை நான் சும்மா விடமாட்டேன்”
“சார் ப்ளீஸ்! கோவப்படாதிங்க… நாங்க செஞ்ச தப்புக்காக மிசஸ் நித்திலாக்கு ஆகுற சர்ஜரி செலவை எங்க ஹாஸ்பிட்டலே ஏத்துக்கும்… ப்ளீஸ் இதை பெரிய பிரச்சனை ஆக்கிடாதிங்க”
நித்திலாவின் நிலை படுமோசம். தனக்குப் புற்றுநோய் இல்லை என்பதற்காக மகிழவா? தவறான மருத்துவ அறிக்கையால் பயந்து அம்ரித்தின் பொறுப்பை நிரந்தரமாகக் கிருஷ்ணராஜசாகரிடம் ஒப்படைத்ததை எண்ணி வருந்தவா?
புரியாமல் கண்ணீருடன் நின்றாள். விக்ரம் மருத்துவரோடு சண்டையிட அவனைத் தடுத்தவள் “நீயும் நானும் சண்டை போட்டு எதையும் சாதிக்கமுடியாது விக்கி… என் பிள்ளையே என்னைவிட்டுப் போயிட்டான்… இனிமே சண்டை போட்டு நான் என்ன செய்யப்போறேன்?” என்றாள் வேதனையோடு.
மருத்துவரோடு நின்று கொண்டிருந்த செவிலி நடந்த அனைத்தையும் வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
எய்ம்ஸ் கனவுக்காக தொழில் தர்மத்தை மீறி மருத்துவர் கிருஷ்ணராஜசாகரின் திட்டத்திற்கு உடந்தையாக இருந்தது அவருக்கும் தெரியும். செவிலிக்கும் பணம் போயிருந்தது. பிள்ளைக்காக என்று சொல்லித் தான் கிருஷ்ணராஜசாகரும் திட்டத்தை போட்டிருந்தான்.
அப்போது கரன்சி நோட்டில் வீசிய வாசனை இப்போது ஒரு தாயின் கண்ணீராகவும் வலியாகவும் தெரிந்தது. அவரும் ஒரு குழந்தைக்குத் தாய்!
பணத்தைச் சம்பாதிப்பது பெரிய காரியமில்ல. அந்தப் பணத்தை எந்த வழியில் சம்பாதிக்கிறோம் என்பதே முக்கியம். தவறான வழியில் சம்பாதித்த பணம் நம்மை பாதிக்கிறதோ இல்லையோ நமது வாரிசுகளைப் பாதித்துவிடும்.
நித்திலாவை அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்த அழைத்துச் சென்றவரின் நாக்கு உண்மையைச் சொல்லத் துடித்தது. ஆனால் மருத்துவர் வந்துவிடவே அமைதியாகிவிட்டார்.
நித்திலாவும் அதிர்ச்சியை ஜீரணித்துக்கொண்டு அறுவைசிகிச்சைக்குத் தயாரானாள். அச்சமயத்தில் கூட கிருஷ்ணராஜசாகர் மீது அவளுக்குச் சந்தேகம் வரவில்லை என்பதுதான் வேடிக்கை
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

