“சின்ன வயசுல இருந்து எனக்கு வலிய தாங்கிக்கிற அளவுக்குத் தைரியம் கிடையாது… ஸ்கூல் யூனிஃபார்ம்கு துப்பட்டா குத்துறப்ப கையில ஊக்கு குத்திடுச்சுனா அதை நினைச்சு அரைமணிநேரம் அழுத வரலாறுலாம் இருக்கு… பொண்ணா பிறந்துட்டு வலிய பொறுத்துக்க முடியலனா எப்பிடினு எங்கம்மா கிண்டல் பண்ணுவாங்க… ப்ச்… அதுக்கு அப்புறம் நான் ரொம்ப வேதனை அனுபவிச்சேன்… வலியால உடம்பே சல்லடையா மாறிடுமோனு மிரண்டு போற அளவுக்கு உச்சபட்ச வலி அது… அந்த வலிய அனுபவிச்சதுக்கு அப்புறமா வாழ்க்கையில வேற எந்த வலியையும் தாங்கிக்கிற தைரியம் எனக்கு வந்துடுச்சு”
-நித்திலா
கெட்வெல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சிம்லா…
நித்திலா வலி குறைந்து படுத்திருந்தாள். விக்ரம் மருத்துவரோடு பேசிக்கொண்டிருந்தான். நித்திலாவின் மருத்துவ அறிக்கைகளைப் பரிசோதித்தவர் பயாப்சி ரிப்போர்ட்டுக்காக காத்திருந்தார்.
செவிலி ஒருவர் பயாப்சி ரிப்போர்ட்டைக் கொண்டு வரவும் அதை வாங்கிப் படித்தவரின் முகம் படுதீவிரமாக மாறியது.
நித்திலாவின் முந்தைய மருத்துவ அறிக்கைகளையும் அதையும் ஒப்பிட்டுப் பார்த்தவர் பெருமூச்சை வெளியிட்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

“என்னாச்சு டாக்டர்?” விக்ரமின் குரல் பதற்றத்துக்குத் தாவியது.
“என்னோட சந்தேகம் சரி தான்… மிஸ் நித்திலாக்கு வந்திருக்கிற டியூமர் கேன்சர் தான்”
விக்ரம் அதிர்ந்துபோனான். தலைசிறந்த ஆங்காலஜிஸ்டே நித்திலாவுக்குப் புற்றுநோய் வந்துவிட்டது என்றதும் அவனால் அதிராமல் இருக்க முடியவில்லை. கடைசியில் நித்திலாவின் பயம் பலித்துவிட்டதே! இந்நாள் என்றாவது வந்துவிடுமோ என்ற பயம் எப்போதுமே நித்திலாவுக்கு உண்டு.
ஏனெனில் அவள் ஒரு ‘கேன்சர் சர்வைவர்’. ஆம்! பதினைந்தாவது வயதில் ‘ஆஸ்டியோசர்கோமா’ எனும் எலும்பு புற்றுநோயால் கால் மூட்டு பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மூன்றாண்டுகள் அதோடு போராடி மீண்டவள்.
கால்மூட்டிலிருந்த புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக செய்த Limp salvage surgery எனும் அறுவை சிகிச்சையில் தான் அவளது காலில் புற்றுநோய் செல்களால் பாதிக்கப்பட்ட எலும்பு அகற்றப்பட்டது.
பின்னர் செய்யப்பட்ட மாற்று அறுவைச்சிகிச்சையில் உண்டான பின்விளைவால் Limb Length Discrepancy எனும் குறைபாட்டுக்கு ஆளானவள்.
புற்றுநோய் கட்டியின் வேதனை, கீமோதெரபியால் ஏற்பட்ட பக்கவிளைவு வலி, அறுவைச்சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான குறைபாடு என அனைத்தையும் அனுபவித்து அவள் பழைய நித்திலாவாக மாறியது பதினெட்டு வயதில்.
பின்னரே பொதுத்தேர்வுகளை எழுதி இளங்கலை முடிக்கும் வயதில் பள்ளிப்படிப்பை முடித்தது, முதுகலையில் சேரும் வயதில் கல்லூரிப்படிப்பில் அடியெடுத்து வைத்தது என அவளது உடல்நலத்தோடு மூன்றாண்டு படிப்பையும் புற்றுநோய் எனப்படும் கொடிய அரக்கன் விழுங்கிக்கொண்டான்.
எனவே தான் விக்ரமிடம் அம்ரித்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வாயா என அடிக்கடி கேட்பாள். அப்படி எல்லாம் ஆகாது என எத்தனை முறை விக்ரம் தைரியம் கொடுத்திருப்பான். அனைத்தும் வீண் தானா?
இன்றைய நவீன மருத்துவத்தில் புற்றுநோய் ஒன்றும் தீர்க்கப்படாத வியாதி இல்லை தான்!
“ஹவ் இஸ் இட் பாசிபிள் டாக்டர்? அவளுக்கு ஃபுல்லா க்யூர் ஆகிடுச்சுனு சொன்னாங்களே… இத்தனை வருசம் கழிச்சு எப்பிடி வரும்?”
“அப்பிடி எந்த கேரண்டியும் சொல்லமுடியாது விக்ரம்… ரொம்ப ரேர் சிச்சுவேசன்ல குணமானதா நினைச்ச கேன்சர் திரும்பியும் வர வாய்ப்பிருக்கு… அதை மெடிக்கல் ஃபீல்ட்ல ‘கேன்சர் ரெகரன்ஸ்’னு சொல்லுவோம்… சிலருக்கு ரெண்டு வருசம் கழிச்சு வரும், சிலருக்கு ஃபைவ் ஆர் டென் இயர்ஸ் கழிச்சு கூட திரும்ப வரும்… மிஸ் நித்திலாவுக்கு வந்த கேன்சர் ‘ஆஸ்டியோசர்கோமா’… மோஸ்ட்லி இந்த வகை கேன்சர் குணமாகி ரெண்டு மூனு வருசத்துல திரும்ப வரும்… இது ரொம்ப ரேரா இருக்கு… பட் கீமோதெரபியால கண்ட்ரோல் பண்ண முடியும்… அவங்க வாழுற காலத்தை நீட்டிக்க முடியும்”
விக்ரமை நிராசை சூழ்ந்தது. புலி வருகிறது வருகிறது என பயந்து இறுதியில் வந்தேவிட்டது. இதை நித்திலாவிடம் எப்படி சொல்வது?
பரிதவித்தது விக்ரமின் மனம். ஏற்கெனவே மரணத்தை விட பிள்ளை தனியாய் நின்றுவிடுவானோ என்று எண்ணி அஞ்சுபவளுக்கு இச்செய்தி எத்தகைய வலியைக் கொடுக்கும்?
நினைக்கும் போதே கண்கள் கலங்கிவிட்டது. மருத்துவரிடம் எப்போது அவளை மருத்துவமனையில் சேர்க்கவேண்டுமென கேட்டான் அவன்.
கீமோதெரபிக்காக அவளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேதியைக் கூறி அனுப்பி வைத்தார் மருத்துவர்.
விக்ரம் நித்திலாவைத் தேடி வந்தவன் அவள் எழுந்து அமர்ந்திருக்கவும் மௌனமாய் அவளை ஏறிட்டான்.
“டாக்டர் என்ன சொன்னார் விக்கி?”
விக்ரம் அவளைப் பார்ப்பதை தவிர்த்தவாறு “கேன்சர் ரெகரன்ஸாம்… கீமோதெரபிக்காக நெக்ஸ்ட் வீக் வரச் சொல்லிருக்காங்க” என்றான்.
நித்திலா பேச்சு மூச்சற்று சிலையாய் சமைந்து போனாள்.
மரணத்தை விட கொடியது மரணத்திற்கு பிறகு தன்னைச் சார்ந்தவர்களின் நிலை என்னாகுமோ என்ற கவலை. அந்தக் கவலை அவளைத் தின்ன தொடங்கியது.
எங்கு நோக்கினும் வெறுமை! இலக்கில்லா வெறுமை! மரணத்திற்கு பிந்தைய நிலையும் வெறுமை தானோ! முன்னே பின்னே செத்தால் தானே தெரியும்!
விரக்தியான சிரிப்பொன்று நித்திலாவின் இதழில் உதயமானது.

“கீமோக்கு அப்புறம் நான் குணமாகிடுவேனா?”
விக்ரமைப் பார்த்து கேட்டாள் அவள். ஆனால் அங்கே விக்ரமுக்குப் பதிலாக வேறு யாரோ நின்றார்கள். காட்சியும் காலமும் பின்னோக்கி சென்றதை போன்று பிரமை.
“கீமோக்கு அப்புறம் சர்ஜரி பண்ணுவாங்க… அதுக்கு அப்புறம் நித்தி குட்டிக்குச் சரியாகிடும்”
நம்பிக்கையூட்டும் விதமாக ஒலித்தது கம்பீரக்குரல் ஒன்று. அதனுள் வேதனை ஒளிந்திருப்பதை அறிந்தவள் நித்திலா மட்டுமே!
“அப்பிடியும் சரியாகலைனா?”
“சரியாகிடும்டா… அப்பா இருக்கேன்ல… பயப்படக்கூடாது”
சொன்னவரை அணைத்துக்கொண்டாள் நித்திலா.
“கால் ரொம்ப வலிக்குப்பா… தாங்க முடியல”
கம்பீரக்குரல் உடைந்து அம்மனிதரும் அழ ஆரம்பித்தார்.
“நித்தி நித்தி”
யாரோ அவளை உலுக்க மாயையிலிருந்து விடுபட்டவளாக மலங்க மலங்க விழித்தாள் நித்திலா.
எதிரே விக்ரம் நின்றுகொண்டிருந்தான்.
“விக்கி இப்ப நான் என்ன செய்யணும்?”
அழுகையை அடக்கிக்கொண்டு கேட்டாள் அவள்.
என்ன கூறுவான் அவன்? எதுவும் பேச வாய் வரவில்லை. மனமோ நிலையின்றி தவித்தது.
அவனுக்கு அதிக சிரமம் கொடுக்காமல் எழுந்தவள் செருப்பை அணிய தடுமாற விக்ரம் உதவிக்கு வந்தான். அவனைத் தடுத்தவள் தானே போட்டுக்கொண்டாள்.
வீட்டுக்குப் போனால் அம்ரித் இருப்பான். அவனிடம் என்ன கூறுவாள்?
இந்தக் கேள்வியோடு விக்ரமின் காரில் ஏறினாள்.
ஏற்கெனவே வாழ்வா சாவா என அல்லாடிவிட்டு திரும்பிய ஜீவன் அவளுடையது. நவீன மருத்துவம் அவள் வாழ்நாள் நீடிக்க எழுபது சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது என நம்பிக்கையளித்திருந்தது.
அதை நம்பி இத்தனை வருடங்கள் கழித்துவிட்டாள். எத்தனையோ புற்றுநோய் பாதித்தவர்களுக்கு நம்பிக்கையும் அளித்திருக்கிறாள். ஆனால் அவளுக்குள் நீ அதிகநாட்கள் வாழப்போவதில்லை என்ற எண்ணத்தை உடனிருந்தே உட்புகுத்திய சிலரின் சொற்கள் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டதோ என்னவோ மற்றவர்களுக்கு அளித்த நம்பிக்கையைத் தன் மீது அவள் வைக்கவில்லை.
எனவே ஆயுள் நிரந்தரமில்லை என்ற எண்ணம் அவளுக்குள் வலுபெற்றுவிட்டது. இத்தனை நாட்கள் எழுபது சதவிகிதம் வாய்ப்பிருக்கிறதே என்ற நம்பிக்கை ஏதோ ஒரு ஓரத்தில் அவளுக்குள் உயிர்ப்போடு இருந்தது. தன்னைப் போலவே அந்த நம்பிக்கைக்கும் ஆயுள் குறைவு போல!
மீண்டும் விரக்தியான சிரிப்பு இதழில்! லாங்வுட்டை அடைந்து காரில் அவளது வீட்டின் வாயிலில் நிற்க அங்கே சாவித்திரியோடு நின்றுகொண்டிருந்த அம்ரித் காரை நோக்கி ஓடோடி வந்தான்.
காரிலிருந்து இறங்கிய நித்திலாவைக் கட்டிக்கொண்டான்.
அவனைத் தூக்கிக் கொஞ்ச விரும்பினாலும் விரக்தி நித்திலாவைச் செயல்படவிடாமல் தடுத்தது.
சிலையாய் நின்ற அன்னையை அவன் விசித்திரமாகப் பார்க்க விக்ரம் அம்ரித்தைத் தூக்கிக்கொண்டான்.
“நித்திம்மா”
அவனது அழைப்பு நித்திலாவின் மனதை உலுக்கியது.
“என்ன அம்ரு?”
“நீங்க போனதுக்கு அப்புறம் இப்ராஹிம் அங்கிள் கால் பண்ணுனாங்க” என்றான் அவன்.
“இப்ராஹிமா? அது யாரு?”
அவள் இருந்த மனநிலையில் பிள்ளையைத் தவிர மற்றவர் எவருமே நினைவில் இருக்கமாட்டார்கள் என்கையில் இப்ராஹிம் மட்டும் ஞாபகத்திற்கு வருவானா என்ன?
“அது டாடி…” என பேச வந்த அம்ரித்தை வீட்டுக்குள் அழைத்துச் செல்லும்படி சாவித்திரி விக்ரமிடம் கூற அவனும் வேகமாக உள்ளே போய்விட்டான்.
சாவித்திரி நித்திலாவின் தோளை தொட அவளோ அவனது டாடி என்ற வார்த்தையில் உடைந்துவிட்டாள். என்னைப் பற்றிய கவலையே இல்லாதபடி என் பிள்ளையை மாற்றிவிட்டானே என முன்னாள் கணவனை வேதனையோடு எண்ணிக்கொண்டாள்.
தனக்கு எப்படியோ, மகனைக் கட்டாயம் கிருஷ்ணராஜசாகர் பரிதவிக்கவிட்டிருக்கமாட்டான் என நம்பினாள்.
“அம்ரு கிட்ட அவங்கப்பா பேசுனாரா?” என்று கேட்டாள் அவள்.
தன் வேதனை ஒரு புறம் இருந்தாலும் மகனின் நிம்மதி முக்கியமென எண்ணியது நித்திலாவின் தாயுள்ளம்.
“அவரோட பி.ஏ பேசுனார்னு ரியா சொன்னா… உன் ஹஸ்பெண்ட்”
“எக்ஸ் ஹஸ்பெண்ட்…”
அந்நிலையிலும் அழுத்தமாகக் கூறினாள் நித்திலா. சாவித்திரி அவளது கையை ஆதுரமாகப் பற்றினார். “ரிலாக்ஸ்” என்றார் மெதுவாக.
நித்திலா இனி ஆசுவாசமடைய என்ன இருக்கிறதென யோசித்தாள்.
“மிஸ்டர் கிருஷ்ணராஜசாகர் பிசினஸ் ட்ரிப் போறாராம்… சோ அவரால நாளைக்கு வரமுடியாதுனு சொன்னார்மா”
சாவித்திரி சொல்லி முடித்தார்.
நித்திலா எதுவும் பேசவில்லை. வீட்டுக்குள் அவரோடு வந்தவள் “அம்ருவ பாத்துக்கோங்க… எனக்கு தூக்கம் வருது” என்றாள்.
சாவித்திரியும் விக்ரமும் அம்ரித்தைக் கவனித்துக்கொள்ள நித்திலா அவளது அறைக்குள் சென்று முடங்கினாள்.
அதே நேரம் இப்ராஹிமுக்கு சிம்லா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது.
நித்திலாவை சற்று முன்னர் பரிசோதித்த அதே ஆங்காலஜிஸ்ட் தான்.
“சொல்லுங்க சார்… வேலை முடிஞ்சுதா?”
“முடிஞ்சாச்சு சார்… நெக்ஸ்ட் வீக் கீமோதெரபிக்கு வரச் சொல்லிருக்கேன்… அவங்க நான் சொன்னதை நம்பிட்டாங்க”
இப்ராஹிம் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருப்பதை அறிந்து மொபைலை வாங்கினான் கிருஷ்ணராஜசாகர்.
“செகண்ட் ஒபீனியனுக்கு வேற எங்கயும் போயிடமாட்டாங்களே?” என சந்தேகமாக வினவினான் மருத்துவரிடம்.
“வாய்ப்பே இல்ல… ஆல்ரெடி கேன்சர் வந்து ரெகவர் ஆன பேஷண்டுக்கு மறுபடி வருமோங்கிற பயம் எப்பவுமே இருக்கும்… மிஸ் நித்திலாக்கும் அந்தப் பயம் கண்டிப்பா இருக்கும் சார்… அவங்க செகண்ட் ஒபீனியனுக்கு எங்கயும் போகமாட்டாங்க… சோ அவங்களுக்கு வந்திருக்கிறது நார்மலான கட்டி தான், கேன்சர் டியூமர் இல்லனு அவங்களுக்குத் தெரிய வாய்ப்பில்ல”
“உங்க நம்பிக்கை பலிச்சா உங்களுக்கும் நல்லது, எனக்கும் நல்லது”
“சார் அப்பிடியே என்னோட எய்ம்ஸ் கனவு…”
அந்த மருத்துவர் இழுக்கவும் எக்காளமாக ஒரு சிரிப்பு கிருஷ்ணராஜசாகரிடம். அதை கேட்டதும் நியாயப்படி அந்த மருத்துவர் வெட்கி தலைகுனிய வேண்டும். நேர்மையானவராக இருந்தால் அது தான் நடந்திருக்கும்.
ஆனால் பதவிக்காக தொழில் தர்மத்திலிருந்து விலகுபவர்களுக்கு வெட்கமேது? கிருஷ்ணராஜசாகரின் திட்டமே புற்றுநோயைக் காரணம் காட்டி சிலநாட்களுக்கு நித்திலாவிடம் இருந்து அம்ரித்தை பிரிப்பது தானே! அவளது மரணத்தை காரணம் காட்டி மனதளவில் பலவீனமாக்கிப் பிள்ளையை வாங்கலாம் என்ற எண்ணம்.
அவள் உண்மை தெரிந்து சுதாரித்துக்கொள்வதற்குள் மைந்தனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாமென தீர்க்கமான நம்பினான் அவன். சென்னையில் இருந்தால் தந்தையின் பாசம் கிடைக்குமென அம்ரித்தை நம்ப வைத்துவிட்டால் போதும்.
அதற்கு ஏழு நாட்கள் அதிகமென நினைத்தான் கிருஷ்ணராஜசாகர். அவனது திட்டப்படி கீமோதெரபி சிகிச்சைக்குப் போகும் முன்னர் அவளிடம் ஏதாவது சொல்லி கரைத்து அம்ரித்தைத் தன்னோடு சென்னைக்கு அழைத்து வந்துவிடவேண்டும்.
ஏழு நாட்களுக்குப் பிறகு அவள் சிகிச்சைக்கு சென்ற இடத்தில் இன்னொரு பரிசோதனை என்ற பெயரில் தவறான பயாப்சி ரிப்போர்ட் வந்ததாக கூறி அவளுக்குப் புற்றுநோய் எல்லாம் இல்லை, சாதாரண கட்டி தான் என்று கூறிவிடவேண்டும்.
இந்தப் புற்றுநோய் நாடகம் எல்லாம் தேவையா? கிருஷ்ணராஜசாகர் பத்து நாட்கள் சிம்லாவின் தங்கினால் அம்ரித் தந்தையின் பாசத்தை உணர்ந்துகொள்வான் என்பதே இப்ராஹிமின் வாதம்.
ஆனால் அவனோ இந்தப் புற்றுநோய் நாடகம் நித்திலாவுக்கு அவன் கொடுக்கும் சிறு தண்டனை என்று நியாயப்படுத்தினான்.
மருத்துவருக்கு அவன் இட்ட கட்டளையில் பாதியை அவர் செய்து முடித்துவிட்டார். இனி மீதியை தென்கொரிய பயணத்தை முடித்துவிட்டு கிருஷ்ணராஜசாகர் தான் கவனித்துவேண்டும்.
“கவலைப்படாதிங்க… மினிஸ்டர் கிட்ட ரெகமண்ட் பண்ணுறேன்” என அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்தான். கிருஷ்ணராஜசாகர்.
நேர்மை என்ற கடிவாளத்தைப் பூட்டிக்கொண்டு திரிந்த அந்த மருத்துவ குதிரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பதவி எனும் கேரட்டைக் காட்டி காரியத்தை முடித்திருந்தான்.
“தேங்க்யூ சார்”
அழைப்பைத் துண்டிக்கப்போனவரிடம் “பை த வே, இன்னொரு தடவை நித்திலாவை மிஸ் நித்திலானு சொல்லாதிங்க… ஷீ இஸ் மிசஸ் கிருஷ்ணராஜசாகர்” என அமர்த்தலாக உரைத்துவிட்டு அவனே அழைப்பைத் துண்டித்தான்.

அவனது மிசஸ் கிருஷ்ணராஜசாகரில் இப்ராஹிமுக்கு மயக்கம் மட்டும் தான் வரவில்லை.
கிருஷ்ணராஜசாகருக்கு அவள் இன்னும் திருமதி என்ற எண்ணமே மனதில் இருக்க நித்திலாவோ அவளை முன்னாள் கணவன் என அழுத்தமாக பதிவு செய்துவிட்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

