விழுங்கும் பார்வையில் விழுவதே விதியாய்!
பனியாய் உருகும் தழுவலில் பற்றிய தீயாய்!
சிதறும் முத்தங்கள் சிப்பிக்குள் முத்தாய்!
கலந்து தவிக்கும் உடல்கள் கரையும் மெழுகாய்!
மின்காந்த ஈர்ப்பில் இணைகிற தாபமாய்!
காதலின் கடல்தனில் காயங்கள் கூட அணிகலனாய்!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
-அட்சரனின் வேதா
செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணை வந்துவிட்டது அன்றைய தினம். பிரியம்வதா தேர்வுக்கு விடுமுறை விடுகையில் வேதவதியோடு சேர்ந்து படிக்கும் ஐடியாவில் இருந்தாள்.
“உன் வீட்டுக்கு நான் வரலாம் தானே பேப்?”
“அஃப்கோர்ஸ். எனக்குப் புரியாததை நீ சொல்லிக் கொடு.”
“ப்ரோவும் காமர்ஸ் கிராஜுவேட் தானே. அவர் உனக்கு டவுட்டைக் கிளியர் பண்ணமாட்டாரா?”
“அவரோட வேலைல அவர் ரொம்ப பிசி. இன்டர்நேஷனல் புக் ஃபேர் முடிஞ்சுதுல்ல. அப்ப இருந்து நியூ ரைட்டர்ஸ் நிறைய பேர் அவரை அப்ரோச் பண்ணிருக்காங்க. அதனால அவங்க மூணு பேரும் செம பிசி.”
பிரியம்வதாவோடு பேசிக்கொண்டு ஸ்கூட்டி நிறுத்தி வைத்திருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள் வேதவதி. நடக்கும்போதே இன்ஸ்டாகிராமை நோண்டிக்கொண்டே வந்தவள், திடுமென ஒரு ரீல்ஸைப் பார்த்ததும் திகைத்துப் போனாள்.

“பிரியா! நாளைக்குப் பார்க்கலாம். பை.”
அவளது விழிகள் மொபைலின் தொடுதிரையில் ஓடிய ரீல்ஸைப் பார்த்ததும் பற்றியெரியாத குறை. வேகவேகமாகத் தனது ஸ்கூட்டியைக் கிளப்பியவள், நேரே போய் நின்ற இடம் ஹெல்வட்டாஸ்.
“ஹேய் வேதா!” என்று கையசைத்த இலக்கியாவுக்கு ஒரு புன்னகையையும், புதிராயப் பார்த்த சஞ்சய்க்கு ஒரு முறைப்பையும் பதிலாகத் தந்தவள், விறுவிறுவென நடந்து அட்சரன் அமர்ந்திருந்த அலுவலக அறைக்குள் போய் நின்றாள். முகமெங்கும் கோபம் பூசி வந்தவள் மூச்சு வாங்க நிற்கவும், யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தவன் நாற்காலியில் அமருமாறு கண் காட்டினான்; அவனது பேச்சைக் கேட்கும் விருப்பமில்லை வேதவதிக்கு.
அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள், தனது மொபைலின் தொடுதிரையை உயிர்ப்பித்துச் சட்டென அவனது முகத்துக்கு நேராகவே நீட்டினாள்.
“என்ன இது?”
கொஞ்சம் அவன் சுதாரிக்காவிட்டால் மொபைல் மோதிய வேகத்தில் அவனது மூக்கில் சின்ன அடியாவது பட்டிருக்கும். அட்சரன் இலாவகமாகப் பின்னே தலையை இழுத்ததால் தப்பித்தான்.
பக்கவாட்டில் தலை சரித்து “என்ன?” என்றான் முறைப்போடு.
“கேள்வி கேட்டா அதுக்குப் பதில் சொல்லணும். மறுபடி கேள்வி கேட்கக்கூடாதுனு நீங்கதான் சொல்லிருக்கீங்க. அதெல்லாம் அடுத்தவங்களுக்கு மட்டும்தானா?”
“மொபைலை மூஞ்சி முன்னாடி காட்டி என்ன இதுனு கேக்குற? அது என்னனு தெரிஞ்சுக்கத்தான் இவ்ளோ தூரம் வந்தியா?”
“நான் மொபைலைக் கேட்கல. அதுல ஓடுற ரீல்ஸைக் கேட்டேன்.”
அட்சரன் சுழித்த புருவத்தோடு அவளது மொபைலை வாங்கிப் பார்த்தவன், அதில் ஓடிய ரீல்ஸைப் பார்த்ததும் இயல்பானான். பிருந்தாவும் அவனும் இதே அலுவலக அறையில் இருந்தபோது, அவள் அவனுக்குத் தெரியாமல் எடுத்த வீடியோவை ரீல்ஸாக வெளியிட்டிருந்தாள். அதில் அட்சரனை ‘டேக்’ (Tag) செய்தும் இருந்தாள். இன்ஸ்டா பக்கம் போகாததால் அவன் அந்த ரீல்ஸைக் கவனிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அவன் அந்த ரீல்ஸை ஒலிக்க வைக்கவும் வேதவதியின் முகம் கடுப்பில் சிவந்தது.
வெடுக்கென அவனது கையிலிருந்த மொபைலைப் பிடுங்கியவள், “எப்படி எப்படி… ‘ஊர் சொல்லும் ஸ்டார் அவன், அவன் தான் என்னவனாவா?’ என்று ரீல்ஸில் வந்த பாடலைக் குறிப்பிட்டுத் கொதித்தாள்.
அட்சரன் நமட்டுச் சிரிப்போடு மொபைலைப் பிடுங்கியவன், அதன் தொடுதிரை இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கவும், அதில் வேதவதியின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று பார்த்தான். புத்தகம் பற்றி, அவளுக்குப் பிடித்த புத்தக வரிகள் பற்றிய பதிவுகள் மட்டுமே இருந்தன. கூடவே தேன்மலையின் இயற்கைக் காட்சிகளைப் பற்றிய ரீல்ஸ்.
அட்சரன் கவனித்தது என்னவோ வேதவதி யாரைப் பின்தொடர்கிறாள் என்பதை மட்டுமே. ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை மட்டுமே பின்தொடர்ந்திருந்தாள். @atcharan_helvettas – ஆம், அவனை மட்டும்தான் அவள் ஃபாலோ செய்திருந்தாள். இனியும் துளிர்த்த சிரிப்பை மறைக்கும் எண்ணமில்லை அவனுக்கு.
“முதல்ல இதுக்குப் பதில் சொல்லு. நீ என்னை ஸ்டாக் (Stalk) பண்ணுறியா இன்ஸ்டால?” என்று அவள் சற்று முன்னர் செய்தது போல அவளது முகத்துக்கு நேரே காட்டிக் கேட்கவும், வேதவதியின் முகத்திலிருந்த கோபம் வடிந்தது.
‘மாட்டிக்கொண்டோமே’ என்பது போல ஒரு நொடி விழித்தவள், பின்னர் சமாளித்துக்கொண்டாள்.
“அது ஒன்னும் ஸ்டாக்கிங் இல்லையே. எனக்கு நீங்க தானே ஏஜென்ட். அதனால ஃபாலோ பண்ணுறேன். பேச்சை மாத்தாம நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க. ஏன் அவங்க இந்த ரீல்ஸ் போட்டிருக்காங்க?”
“ஏன்னா அவ என்னைக் காதலிக்குறா.” அலட்டிக்கொள்ளாமல் அவன் பதிலளிக்கவும் வேதவதியின் விழிகளில் கலக்கம் அதீதமானது.
“அப்ப நான் யாரு?”
“நீ என்னோட ஒய்ஃப்.” இதையும் சாதாரணக் குரலில்தான் கூறினான் அவன்.
“அசிங்கமா இல்ல?”
“இல்ல! நீ எப்பவும் போல அழகாதான் இருக்குற. கோவத்துல கொஞ்சம்போல முகம் சுணங்குனாலும் யூ ஆர் லுக்கிங் பிரிட்டி.”
“கிண்டல் பண்ணுறீங்களா?”
“பதில் சொல்லிட்டிருக்கேன் உன் கேள்விக்கு. கேள்வி கேட்டா பதில் சொல்லணும்னு எதிர்பார்த்தல்ல?”
இதற்கு இவன் பதில் சொல்லாமலேயே இருந்திருக்கலாமென நினைத்தவள் மொபைலை அட்சரனிடமிருந்து பிடுங்கினாள்.
“இதை இப்பவே போய் மாமாகிட்ட சொல்லுறேன்.”
சின்னக் குழந்தைகள் சண்டையிடும்போது மிரட்டுவது போலச் சொன்னவளின் பேச்சில் அட்சரனின் சிரிப்பு இன்னுமே அதிகமானது. உட்பக்கத்துக் கன்னச் சதையை நாவினால் உந்தியபடி அவளை நெருங்கியவன், சட்டெனக் குனிந்து வேதவதியின் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவள் மருண்டு விழிக்கையிலேயே “இதையும் சேர்த்து உன் மாமாகிட்ட சொல்லு” என்றவன், மீண்டும் அவனது இருக்கையை நோக்கிச் செல்கையில், “எனக்கு உன் மாமாவைப் பார்த்து எப்பவும் பயம் இல்ல. இதையும் சேர்த்தே சொல்லு” என்று ‘இல்லை’ என்பது போலக் கையசைத்துவிட்டுப் போனான்.
வேதவதி அவனது உதடுகள் பதிந்த கன்னத்தைப் பிடித்தபடி நின்றவள் பற்களைக் கடித்தாள். “நீங்க வீட்டுக்கு வாங்க. மாமாகிட்ட செமத்தியா வாங்குவீங்க.” மிரட்டியவள் எந்த வேகத்தில் வந்தாளோ அதே வேகத்தில் வெளியேற, அட்சரன் சிரிப்போடு தனது நாற்காலியில் சாய்ந்து கொண்டான். ஏதோ தோன்றவும் பிருந்தாவின் எண்ணுக்கு அழைத்தான்.
அவள் பேச இடமளிக்காமல் “எனக்கும் வேதாக்கும் என் பேரண்ட்ஸ் ரிசப்ஷனுக்கு டேட் பார்த்துட்டிருக்காங்க. அடுத்த மாசம் அவளுக்குச் செமஸ்டர் இருக்கு. முடிஞ்சதும் ரிசப்ஷன் இருக்கும். நீங்க ஃப்ரீயா இருந்தா வரணும் பிருந்தா. இது என்னோட பிரெண்ட்லியான இன்விடேஷன்” என்றான்.
மறுமுனையில் பிருந்தா திணறினாள் பதில் சொல்லத் தெரியாமல்.
“உங்க… உங்க ரெண்டு பேரையும்… புரிஞ்சிக்கவே முடியல என்னால.”
கணவன் மனைவியிடையே இடைவெளி இருந்தால் அவர்கள் வாய் விட்டுச் சொல்லாமலேயே அந்த இடைவெளி மூன்றாவது நபரின் கவனத்தைக் கவர்ந்துவிடும். அப்படித்தான் பிருந்தாவும் அட்சரன்-வேதவதி உறவைப் பற்றி ஊகித்திருந்தாள்.
அவளது திணறலுக்கான காரணத்தை ஓரளவுக்கு ஊகித்தவனாய் மேற்கொண்டு பேச ஆரம்பித்தான் அட்சரன்.
“பார்க்கிற எல்லாத்தையும் புரிஞ்சிக்கணும்னு அவசியமில்லை. சில விஷயங்கள் நம்ம புரிதலுக்கு அப்பாற்பட்டுச் சின்ன மிஸ்டரியோட இருக்கும். அந்த மிஸ்டரிதான் அந்த விஷயத்தோட அழகு. அடையாளம்னு கூடச் சொல்லலாம். நீங்க சொன்னதுதான் பிருந்தா. உங்களால மட்டுமில்ல, யாராலயும் என்னையும் வேதாவையும் புரிஞ்சிக்க முடியாது. ஐ லவ் ஹெர் மேட்லி. இவ்ளோ தான் எனக்குத் தெரிஞ்சது.”
இதற்கு மேலும் கனவு காணவேண்டாமென மறைமுகமாகப் பிருந்தாவிடம் சொன்ன பிறகு அட்சரனின் மனமும் நிம்மதியடைந்தது. வேதவதியைச் சீண்டியிருக்கிறானே! அவள் ஒருவேளை மெய்யாகவே கோபப்பட்டிருப்பாளோ?
அன்று இரவு வீட்டுக்கு வந்ததும் பால்கனியில் அமர்ந்தவாறு மடிக்கணினியில் அடுத்தக் கதைக்கான சின்னச் சின்ன ஹிண்ட்களை (Hints) எடுத்து வைத்துக்கொண்டிருந்தவள், அட்சரனின் விசில் சத்தம் கேட்டு அவன் பக்கம் திரும்பினாள்.
“என்ன? உங்க காதலி கிட்ட பேசி வீடியோவை ரிமூவ் பண்ணச் சொல்லிட்டீங்க போல” சிடுசிடுப்புடன் கேட்டாள் அவள்.
“பிரேக்கப் அது இதுனு சொல்லிட்டு இப்ப அவ ரீல்ஸ் போடுறாளாம், இவனை டேக் பண்ணுறாளாம். கடைசில நான் தான் கிறுக்கி.”
“நீ மைண்ட் வாய்ஸ்னு நினைச்சுச் சத்தமா பேசுறடி.”
“காதுல விழட்டும்னு தான் பேசுனேன்.”
“அவ ஏதோ ஒரு நப்பாசையில போட்டுட்டா. விடேன்.”
“அப்படியெல்லாம் விடமுடியாது.” மடிக்கணினியை மூடி பீன்பேக்கில் வைத்துவிட்டு எழுந்தவள் பால்கனியின் சுவரருகே வந்து நின்றாள்.
சில அடிகள் கூட இடைவெளி இருக்காது இருவரிடையே!
“இனிமே விளையாட்டுக்குக் கூட அவளை நீங்க காதலினு சொல்லக்கூடாது. சொன்னா என்னை மறந்துடுங்க.”
இதைச் சொன்னபோது வேதவதியின் குரல் தீவிரத்துக்குத் தாவியிருந்தது.
அதைக் கேட்டவனின் முகமே மாறிப்போனது.
“ஹேய் வேதா! நான் சும்மா ஃபன்னுக்குச் சொன்னேன்.”
“என்ன ஃபன்? ஒருத்தர் எமோஷனோட விளையாடுறது உங்களுக்கு ஃபன்னா?” வெடித்தவளுக்குக் கண்கள் கலங்கிப்போக, “நீ இவ்ளோ சீரியஸா எடுத்துப்பனு நான் நினைக்கல வேதா” என்றவனின் குரலில் சின்னதாய் வருத்தம் எட்டிப் பார்த்தது.
“எப்படியோ போங்க.”
சலிப்போடு சொன்னவள் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் போய்விட்டாள். அட்சரன் திகைத்துப் போய் நின்றான். இரவுணவின் போதும் அவனிடம் அவள் முகம் காட்டவே ராஜேஸ்வரியும் சதானந்தனும் என்ன பிரச்சனையென ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
அன்றைய தினம் காலையில் அட்சரன் அவள் சொன்னது போலக் கோடு போட்ட லினன் சட்டை அணிந்து எதிரே அவனைக் காணாதவளைப் போல விலகப் போனாள்.
அட்சரன் அவளது மோவாயை இறுகப் பற்றி இன்னொரு கரத்தால் இழுத்துத் தன்னருகே சேர்த்து அணைத்துக்கொண்டவன், “இனிமே எப்படிப் கோவப்படுறனு பார்ப்போம்” என்க, வேதவதி அவனது கையில் அடித்தாள்.
“எங்க வச்சு என்ன பண்ணுறீங்க?”
அவர்கள் நிற்பது மாடியில் இருவரது அறைக்கும் இடைப்பட்ட வராண்டாவில்.
“எல்லாம் தெரிஞ்சுதான் பண்ணுறோம். நீ மூஞ்சியைத் தூக்கிட்டுப் போனா அப்படியே விட்டுட முடியுமா? நேத்து உனக்காகக் கால் பண்ணி பிருந்தா கிட்ட பேசுனவனை நீ கோவமா முறைப்பியா?”
வேதவதி இன்னும் சுணக்கத்தோடு நிற்கவும் அவளை இறுக்கமாகவே அணைத்துக்கொண்டான் அட்சரன்.

“இங்க பாரு! என்னோட பாஸ்ட், பிரசன்ட், ஃபியூச்சர் எல்லாமே நீ மட்டும்தான். ரொம்ப குழப்பிக்காத நம்ம ரிலேஷன்ஷிப்பை. நாம முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இன்னும் கொஞ்சநாள் தான் இருக்கு. அதை மட்டும் மனசுல வச்சுக்க. சரியா?”
அவனது அணைப்புக்குள் அடங்கியதும் வேதவதியின் மனதிலிருந்த ஆதங்கமும் அடங்கிப்போனது. சரியெனத் தலையசைத்து வைத்தாள். இன்முகத்துடன் இருவரும் அவரவர் கல்லூரி, பணியிடத்துக்குக் கிளம்பினார்கள்.
அன்று வேதவதிக்குக் கல்லூரி செமஸ்டரின் முடிவுநாள். பிரியம்வதாவுடன் ரெஸ்டாரண்ட் போய் கொண்டாடித் தீர்த்தாள். கூடவே பிருந்தா போட்ட ரீல்ஸ் பற்றியும் பகிர்ந்துகொண்டாள் அவளிடம்.
“நான் ஒரு ஐடியா தரட்டுமா பேப்?” பிரியம்வதா கண்கள் பளபளக்க விவரித்த ஐடியாவைக் கேட்டுவிட்டு உற்சாகமாகச் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்தவள், அதைச் செயல்படுத்த நான்கு மணிக்கே ஹெல்வட்டாசுக்குக் கிளம்பிவிட்டாள்.
அவள் கிளம்பிய நேரத்தில் மழை பிடித்துக்கொண்டது. அவள் சென்னைக்கு வந்து ஆறு மாதங்களில் அடிக்கடி மழை வந்துகொண்டே இருக்கிறது. நியாயப்படி இப்போது வெயில் கொளுத்த வேண்டும். பருவநிலை மாற்றம் போல. ஹெல்வட்டாஸின் தரிப்பிடத்தில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தபோது சஞ்சயும் இலக்கியாவும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.
“மழையில நனைஞ்சிட்டே வந்தியா?” என இலக்கியா கடிந்துகொண்டாள் வேதவதியை.
“ஊர்ல எங்கம்மா நனையவே விடமாட்டாங்க. இங்க வந்ததுக்கு அப்புறம் தான் இதுக்கெல்லாம் சுதந்திரம் கிடைச்சிருக்கு” என்று சொல்லிவிட்டு அட்சரனின் அலுவலக அறைக்குள் போனவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுத் கிளம்பினார்கள் இருவரும்.
திடுமெனத் தன் முன் வந்து நின்றவளைத் திகைப்போடு பார்த்தான் அட்சரன். அதுவும் நனைந்த கோலத்தில்.
“மழை விட்டதுக்கு அப்புறம் வரவேண்டியதுதானே?” என்று கடுகடுத்தவனின் கைப்பற்றி ஹெல்வட்டாஸின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாள் வேதவதி.
இன்னும் மழை நிற்கவில்லை. அவனோ மழையில் நனைய விரும்பாதவனாய் ஒதுங்கி நிற்க, செடிக் கூட்டங்களுக்கு நடுவே போனவள் அவனை அழைத்தாள்.
“நான் வரல. எனக்கு ஜலதோஷம் பிடிச்சுதுனா ஒரு மாசம் வச்சுச் செய்யும்” என்றான் அவன் ஜாக்கிரதையாக.
வேதவதி முறைத்தபடியே அவனருகே வந்தவள், “ஒழுங்கா என் கூட வாங்க. அந்த மழைல நனைஞ்சுக்கிட்டே நாம ரீல்ஸ் வீடியோ ஷூட் பண்ணனும்” என்று முரண்டு பிடிக்க, அட்சரன் தலையிலடித்துக் கொள்ளாதக் குறை.
“உனக்கு எப்ப ரீல்ஸ் பைத்தியம் பிடிச்சுதுடி?”
“பிருந்தா மட்டும்தான் ரீல்ஸ் போடுவாங்களா? நானும் போடுவேன்.”
“இந்த ஐடியாவை கொடுத்த அறிவாளி சிங்கம் யாரு?”
“பிரியா.”
சட்டெனக் கைத்தட்டினான் அட்சரன்.
“எனக்குத் தெரியும். மினியன் சைஸுல இருந்துக்கிட்டு ‘பேப் பேப்’னு சொல்லி உன்னை பிரைன் வாஷ் பண்ணுற வேலையை எல்லாம் அவ தான் செய்வா. மழை கொட்டுது. இதுல ரீல்ஸாம். லூசு மாதிரி பண்ணாத. ப்பே.”
அலட்சியமாய் அவன் கையசைத்ததும் வேதவதி ஓடிவந்து அவனது கையைப் பிடித்து வேகமாக இழுத்தாள்.
“வேண்டாம் வேதா. நீ ஓவரா பண்ணுற.”
“நீங்க என்ன பூனைக்குட்டியா? தண்ணியைப் பார்த்து இவ்ளோ பயப்படுறீங்க?” என்று விசையாக அவனைப் பிடித்து இழுத்ததில், அட்சரனும் சன் ஷெட்டிலிருந்து வெளியே தடுமாறி மழையில் நனைந்துவிட்டான்.
“ஏய் லூசு” என்று அவன் பொங்கும் முன்னர் கையளவு மழைநீரைப் பிடித்து அவன் முகத்தில் எறிந்தாள் வேதவதி.
“என்னடி பண்ணுற? இதெல்லாம் ரொம்ப ஓவர்” என்றபடி விலகப் போனவனின் காலரைப் பற்றி இழுத்துத் தன்னருகே நிறுத்திக்கொண்டாள்.
“போயிடுவீங்களா நீங்க? ம்ம்.”
அவனை நிமிர்ந்து ஏறிட்ட முகத்தில் மழைநீர் தெறிப்பது, அவளது செவ்விதழ்களில் வழிந்து ஓடுவதையும் பார்த்தவனுக்கு விலகவா தோன்றும்!
மிரட்டும் பாவனையில் மின்னிய கண்களில் எதைக் கண்டானோ, விலக விரும்பாதவனாய் மழையில் நனைந்தான் அவளோடு இணைந்து.

வேதவதி கரம் குவித்து மழைநீரை அள்ளி வீசி விளையாடியபடியே, “என் மொபைல்ல வீடியோ ரெக்கார்டு ஆகுது” என்க,
“நீ பைத்தியம்தான் வேதா” என்றான் அட்சரன் சிரித்தபடியே.
“ஆமா! உங்க மேல” என்றவளை இடையோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் அவன்.

“முடிஞ்சுதா ஷூட்டிங்?” நீர் சொட்டும் சிகையை உலுக்கியபடி கேட்டவனுக்கு வேதவதியின் செயலால் உண்டான சிரிப்பு மட்டும் அகலவில்லை.
சொன்னது போல மழையில் நனைந்தபடி எடுத்த வீடியோவைப் பிருந்தா வைத்த அதே பாடலில் இணைத்து ரீல்ஸ் போட்ட பிறகுதான் வேதவதிக்கு அன்றிரவு உறக்கமே வந்தது.
அடுத்தடுத்த நாட்களில் அவள் தேர்வுக்குத் தயாரானாள். தேர்வுக்காலங்களில் அட்சரனும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. சரியாகக் கடைசித் தேர்வுக்கு முந்தைய நாட்களில் வேதவதிக்கு ஒரு எண்ணம் உதித்தது மனதில்.
பீனிக்ஸ் பப்ளிஷிங் ஹவுஸிலிருந்து அவளுக்கான ராயல்டி தொகை கணக்கிலேறி இருந்தது அல்லவா! பெற்றோருக்கு அதில் ஒரு பகுதியை அனுப்பிவைத்தவள், மாமியாருக்கும் மாமனாருக்கும் அதில் புத்தாடைகள் எடுத்துக்கொண்டாள்.
“எங்களுக்கு எதுக்கு? இன்னும் மூணு நாள்ல அச்சுக்குப் பர்த்டே வருது அவனுக்குக் கிப்ட் கொடுக்கலாமேடா.”
“அவருக்குத் தனியா வாங்கிக்கலாம். இது உங்களுக்கும் மாமாவுக்கும். நான் ரொம்ப ஆசையா வாங்கிருக்கேன். வேண்டாம்னு சொல்லக்கூடாது.” மிரட்டி ராஜேஸ்வரியிடம் கொடுத்துவிட்டாள் புத்தாடைகளை.
அட்சரனின் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வாங்கலாமென இணையத்தை அலசி, இறுதியாக அவள் தேர்வு செய்தது ஒயிட் மற்றும் பிங்க் கோல்டில் கருப்பு வைரம் பதிக்கப்பட்ட மெல்லிய பிரேஸ்லெட் ஒன்றை.
அந்த இணையத்தளத்தை நடத்திய நகை வடிவமைப்பாளரின் கடையைத் தேடிக் கண்டுபிடித்து வாங்கவும் செய்துவிட்டாள்.
“இதுல லேசர் வச்சு AVனு போட்டுத் தர முடியுமா?” என்று கேட்டுப் பூவடிவத்தில் உட்பக்கம் இருவரது பெயர்களின் முதல் எழுத்தையும் லேசரால் எழுதியும் வாங்கிக்கொண்டாள்.
சரியாக அவள் வீடு திரும்பலாமெனக் கிளம்பிய நேரத்தில் வானதியிடமிருந்து மொபைல் அழைப்பு.
“ஜி.பி.எம் ஹாஸ்பிட்டலுக்கு வா வேதா.”
மருத்துவமனைக்கு வானதி அழைத்ததும் பதற்றம் தொற்றிக்கொண்டது வேதவதிக்கு. என்னவோ ஏதோ என்று பதறியடித்து ஓடிப்போய்ப் பார்த்தால், வானதி வந்தது மகப்பேறு மருத்துவர் ஒருவரைப் பார்ப்பதற்காகவாம்! பதற்றம் அந்நொடியில் சந்தோஷமாக மாறிவிட்டது.
“நிஜமாவா வானு? எவ்ளோ நாளாச்சு?” எனப் படபடத்தவளிடம்,
“வீட்டுல கிட் வச்சு செக் பண்ணி பார்த்தேன். பட் அதுல நூறு சதவிகிதம் சரியா வரும்னு சொல்ல முடியாதுல்ல. அதான் இங்க வந்தேன். இவங்க கிட்ட தான் அண்ணி பி.சி.ஓ.எஸ்க்கு ட்ரீட்மெண்ட் எடுத்தாங்க” என்றாள் வானதி.
ஆனால் இரு பெண்களும் காத்திருந்ததுதான் மிச்சம்! மகப்பேறு மருத்துவர் வரவில்லை. ஏதோ அவசர வேலையாக அவர் கிளம்பிவிட்டதாகக் கூறினார்கள் மருத்துவமனையில்.
“நாம வேற ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணிக்கலாமா வானு?”
“இல்லடி! இவங்க கிட்ட பார்த்துட்டா நல்லா இருக்கும்னு ஒரு செண்டிமெண்ட். நாளைக்கு மார்னிங் வரலாம். நீயும் வருவதானே? வரணும்” என்று கண்டிப்பாய்ச் சொன்னபடி கார்க்கதவைத் திறந்தாள் வானதி.
அவள் காரிலேறியதும் “பார்த்து டிரைவ் பண்ணு. ப்ச்! நான் கார் ஓட்டக் கத்துக்காதது இப்பதான் தப்புனு தோணுது. உன்னைத் தனியா அனுப்ப மனசேயில்ல வானு” என்று ஆயிரம் முறைகள் கவனம் சொல்லி வழியனுப்பிவைத்துவிட்டு நுங்கம்பாக்கத்துக்குக் கிளம்பினாள் வேதவதி.
நகை கடையில் இருக்கும்போதே தனக்காகக் காத்திருக்காமல் உறங்குமாறு மாமியாருக்கு வாட்சப்பில் தகவல் அனுப்பியிருந்தாள். அவளிடம் வீட்டுச்சாவி ஒன்று உண்டு. வீட்டை அடைந்ததும் அதைப் போட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றவள், அட்சரனின் அறையில் விளக்கு எரியாததை வைத்து அவன் உறங்கியிருப்பான் என ஊகித்துக்கொண்டாள்.
தனது அறை இருளில் குளித்திருக்க விளக்கைப் போட வந்தவள், திடுமெனக் காலடி சத்தம் கேட்டுத் திகைத்துத் திரும்பினாள். வரிவடிவமாய் அந்த அறைக்குள் வந்த உருவம் அட்சரனுடையது என்பதை அறிந்துகொள்ள அதிக நொடிகள் தேவைப்படவில்லை அவளுக்கு.
அவசரத்தில் இரவு விளக்கின் ஸ்விட்சைத் தட்டியதில் மெல்லிய வெளிச்சம் அறைக்குள் பரவியிருந்தது. அவனும் அப்போதுதான் வந்திருக்க வேண்டும். இன்னும் மோக்கா பிரவுன் சட்டை, வெண்ணிற பேண்ட் என ஃபார்மல்ஸில் இருந்தான்.
அவளே இப்போதுதான் அறைக்கதவைத் திறந்து கொண்டு வருகிறாள். இவன் எப்படி நுழைந்திருப்பான் என யோசிக்கையில், பின்னே பால்கனி கதவு திறந்திருப்பதைப் பார்த்துவிட்டாள்.
“பால்கனி வழியாவா வந்தீங்க?”
“ம்ம்! ரொம்ப நாள் ஆசை அந்த வழியா குதிக்கணும்னு” சொன்னவனின் கண்களில் குமிழிட்ட குதூகலத்துக்கு அப்படியே எதிர்மாறாய் அவளது விழிகளில் சின்னதாய் ஒரு அச்சம்.
“குதிக்குறப்ப விழுந்தா என்னாகுறது?”
“அதெல்லாம் விழமாட்டேன். இத்துனியூண்டு இடத்தைத் தாண்டுறதெல்லாம் ஒரு விஷயமா? லைஃப்ல அப்பப்ப இந்த மாதிரி சின்னச் சின்னதா அட்வென்சர் இருக்கணும். இல்லனா போரடிக்கும் வாழ்க்கை.”
பேச்சுவாக்கில் அவர்கள் நெருங்கி நிற்க, வேதவதி சுவரில் சாய்ந்து நின்றாள். சுவர் முதுகில் இடித்ததும் தான் கால்கள் பின்னோக்கி வந்ததே அவளது புத்தியில் உறைத்தது.
“எங்க போயிட்டு இவ்ளோ லேட்டா வர்றீங்க மேடம்?”
“வானதிகூட ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்தேன்.”
“நதிக்கு என்னாச்சு?” பரபரப்பு அவனது குரலில்.
“வானதிக்கு ஒன்னும் இல்ல.”
“அப்ப உனக்கு என்னாச்சு?” பாதாதி கேசம் கவலையோடு அவனது விழிகள் அவளது உடலைப் பரிசோதித்தன. அவளது மோவாயைப் பற்றிய அவனது கரம் முகத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பிப் பார்த்தன.
வேதவதி அவனைக் கையமர்த்தினாள். “எனக்கும் ஒன்னுமில்ல. உடம்பு சரியில்லனாதான் ஹாஸ்பிட்டலுக்குப் போவாங்களா என்ன?”
“நாங்க உடம்பு சரியில்லனா மட்டும்தான் போவோம். தேன்மலைக்காரங்க ஹாஸ்பிட்டலுக்குப் பிக்னிக் போவீங்களோ?” கிண்டலாய் வினவினான் அட்சரன்.
வேதவதியின் இதழ்களிலும் சிரிப்பின் சாயல்.
“வானதிக்கு பிரெக்னென்சி டெஸ்ட் எடுக்கப் போனோம்.”
அவள் சொன்னதும் அட்சரனின் விழிகளில் விகசிப்பு.
“டாக்டர் இல்லனு திரும்பி வந்துட்டோம். மார்னிங் மறுபடி வரச் சொல்லிருக்கா வானு.”
“நோ! நீ போகவேண்டாம். அருள் போகட்டும்.”
“ஆனா வானு என்னைத்தான் வரச் சொன்னா. ப்ரோக்கு ஏதோ வேலை இருக்குனு சொன்னா.”
“பொண்டாட்டிய ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறதைவிட அவனுக்குப் பெரிய வேலை எதுவும் இருக்காது. நீ போனா நதி அவனைக் கூப்பிடமாட்டா. ரெண்டு பேரும் அவ்ளோ ரோசக்காரங்க. நீ போகாத. அவங்களுக்கான மொமெண்ட் இது. அனுபவிக்கட்டும். சரியா?”
வேதவதியின் தலை சரியென அசைந்தது.
“அங்க மட்டும்தான் போனீங்களா? உன் பேக் எல்லாம் கொண்டு போயிருக்க?” சந்தேகமாய் வினவினான் அட்சரன்.
வேதவதி அவசரமாக அவளது பேக்கைப் பற்றிக்கொண்டாள்.
“அது வானுக்குத் தண்ணி..” பொய் சொல்ல வரவில்லை அவளுக்கு. அதுவே அட்சரனுக்குச் சிரிப்பை வரவழைப்பதாய். இம்மாதிரியான தருணங்களில் அவளைச் சீண்டிப் பார்ப்பதில் அவனுக்கு அலாதி பிரியம் உண்டு.
“நம்மளோட மேரேஜ் பண்ணுனவங்க, தப்பு தப்பு… அவங்க கல்யாணத்துலதான் நமக்கும் கல்யாணம் ஆச்சு. பிரெக்னென்சி வரைக்கும் போயாச்சு. நாம இன்னும் முத்தத்துக்கே காய்ச்சல் வந்து மிரண்டு முழிக்குறோம்.”
“வானுக்கு ட்வென்ட்டி ஃபைவ் ஆகுது. அது பிரெக்னென்சிக்குக் கரெக்டான வயசு. நான் எப்படி?” என்றவள் அவனது முகபாவனையை ஆராய்ந்தவளாய், “நீங்க விளையாட்டுக்குத்தானே சொல்லுறீங்க?” என்க,
“ஐ அம் சீரியஸ்லி ஸ்பீக்கிங். என் அம்மா அப்பாக்கும் பேரப்பிள்ளைங்களைப் பார்க்கணும்னு ஆசை இருக்கும்ல” என்றவனின் விஷமப் பார்வையில் வேதவதிக்கு மூச்சு முட்டாதக் குறை.
நெருக்கமாய் நின்றவனின் ஆகிருதியில் தனது இந்தத் திணறலும் தவிப்பும் கரைந்துவிடாதா என்ற ஏக்கம் அவளுக்குள்! அட்சரன் அவளது தவிப்பை அறிந்தவனாகக் கன்னத்தில் தட்டினான்.

“ரொம்ப பயந்துடாத. இப்போதைக்கு எனக்கு அந்த ஐடியா இல்ல. முப்பத்திரண்டுல கல்யாணம்னு பிளான் வச்சிருந்தவனுக்கு இருபத்தேழுல சைல்டு மேரேஜ் பண்ணி வச்சிட்டாங்கங்கிற குறையே எனக்கு இன்னும் தீரல. இதுல எனக்கு ஒரு குழந்தையா? காட்! அதெல்லாம் மெதுவா பெத்துக்கலாம்.”
அவன் சொன்னதுதான் தாமதம், வேதவதிக்கு முகங்கொள்ளா சிரிப்பு.
“எனக்குத் தெரியும்! அதனால தான் விளையாடுறீங்களானு கேட்டேன்” என்றபடி அவனது புஜத்தில் கிள்ளப் போனவள்,
“குழந்தை மட்டும் தான் லேட்டா பெத்துக்கலாம்னு சொன்னேன். நீ வேண்டாம்னு சொல்லவே இல்ல” என்று அட்சரன் புருவம் உயர்த்திச் சிரிப்போடு சொல்ல, கிள்ளப் போன கையை இழுத்துக்கொண்டாள் தன் வசம்.
கண்களில் கள்ளத்தனத்தோடு அவன் இவ்வாறு பேசினால் அவளது கட்டுப்பாடும் நொறுங்கிவிடும். சுதாரித்துக்கொண்டவள், “எனக்கு இன்னும் ஒரு எக்ஸாம் இருக்கு” என்று நினைவூட்டினாள்.
“அதெல்லாம் ஞாபகம் இருக்கு இங்க. ஆனா இங்க இப்பவே ஒரு கிஸ் வேணும்னு சொல்லுதே” தனது மார்பைத் தொட்டுக் காட்டிப் பரிதாபமாய்ப் பேசியவனின் கண்களில் தாபம்.
வேதவதி அவனது கழுத்தைப் பற்றித் தன்னருகே இழுத்தவள், அழுத்தமாய் அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“போதுமா? கிளம்புங்க. எனக்குத் தூக்கம் வருது.”
அட்சரன் ரசனையோடு கன்னத்தைத் தடவிக்கொண்டான். “இப்படி கிஸ் பண்ணுனதுக்கு அப்புறம் எனக்கு எங்க இருந்து தூக்கம் வரும்?” என்று கொஞ்சியவனை விடாப்பிடியாக இழுத்துப் போய் அறையின் வெளியே தள்ளினாள் வேதவதி.
அவன் போனதும் தனது தோளில் கிடந்த பேக்கில் இருக்கும் பிரேஸ்லெட்டை வெற்றிகரமாக அவனிடம் மறைத்த திருப்தியோடு உறங்கத் தயாரானாள் வேதவதி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

