விலகல் முடிந்தொரு வியப்புப் பூக்கும்!
இவன் விழியில் அவளது விம்பம்!
கரைகள் உடைந்தொரு கங்கை வெள்ளம்!
இரு கண்கள் வழியாய் காதலைச் சொல்லும்!
சிதறும் மேகங்கள் சிநேகம் கோர்க்கும்!
அவனில் கலந்தாள் அமுதச் சொல்லாய்!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
–அட்சரனின் வேதா
“ஓகே பிருந்தா! நீங்க போயிடுவீங்களா இல்ல உங்களை டிராப் பண்ண நான் வரட்டுமா?”
அட்சரன் பேசுவதை எரிச்சலோடு கேட்டபடி நின்றாள் வேதவதி. அன்றைய தினம் அவளுக்கு ஸ்கூட்டி ஓட்டக் கற்றுத் தருவதாகச் சொல்லியிருந்தான் அட்சரன்.
காலையில் மொத்த நுங்கம்பாக்கமும் மழையில் குளித்திருந்தது. சாலைகள் எல்லாம் ஈரமாய், புத்துணர்ச்சியாய்த் தெரிந்தன.
“இன்னைக்கு நாள் செம வைப்ல ஆரம்பிச்சிருக்கு” என்றபடி ஸ்கூட்டி ஓட்டுவதற்காக அட்சரனிடம் வந்து நின்றவள், அவன் பிருந்தாவிடம் மொபைலில் பேசியதைக் கேட்டதும் கடுப்பானாள்.
“என்னமோ அவளுக்கு வாய்ல விரல் வச்சா கடிக்கத் தெரியாதுங்கிற ரேஞ்சுக்கு ஓவரா பேம்பர் பண்ணுறான். சைக்!”
மனதுக்குள் கறுவிக்கொண்டவளின் முகபாவனையை அவனும் கவனிக்காமல் இல்லை.
மொபைல் பேச்சை முடித்துக்கொண்டவன், “வா! டிரைவிங்கை ஆரம்பிக்கலாம்” என்று அழைத்துச் சென்றான். அவர்களது வீடு இருக்கும் தெருவுக்குள்ளேயே வேதவதிக்கு ஸ்கூட்டி ஓட்டக் கற்றுக்கொடுக்கத் தீர்மானித்திருந்தான் அட்சரன்.
“இப்படி உட்காரு. ஹேண்ட்பாரை வளைக்காம பிடி. வண்டி தான் ஓடுதே! நீ எதுக்கு ஆடிக்கிட்டே இருக்க” என்று பின்னே இருந்து அவன் கொடுத்த அறிவுரைகளையும், அவனது கைகள் தனது கைகளை அழுத்தியிருந்ததால் உண்டான படபடப்பையும் தாண்டி, அவளது மனம் கறுவியது என்னவோ அவன் பிருந்தாவிடம் பேசியதைத்தான்.

உர்ரென்ற முகத்தோடு ரோபோ போலத் தான் சொல்வதைச் செய்தவளை அட்சரனே ஒரு நொடி வினோதமாகப் பார்த்தான்.
“வேதா!”
“ம்ம்”
“மிளகாய் ஜூஸ் எதுவும் குடிச்சியா?”
அவன் கேட்கும்போதே வண்டி தடுமாறியது.
“ஏய் பார்த்து ஓட்டுடி!” என்று பதறியபடி அவளது கையைப் பற்றியவன், அதற்கும் ஒற்றை வார்த்தையில் பதில் வரவும் வண்டியை நிறுத்தச் சொன்னான்.
அவனைப் பார்க்காமல் தெருவில் வருவோர் போவோரைப் பார்த்தவளின் மோவாயை அழுத்திப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினான்.
“நான் இங்க இருக்குறேன்.”
“தெரியுது.”
“என்ன தான் பிரச்சனை உனக்கு?”
“எனக்கென்ன பிரச்சனை? நான் நல்லாத்தான் இருக்கேன்.”
“இல்லயே! ஏதோ தப்பா இருக்கு.”
“அது உங்க இமேஜினேஷன்.”
“உன் முகத்தை வச்சே என்ன நினைக்குறனு நான் சொல்லிடுவேன்.”
வேதவதி இப்போது நேருக்கு நேராக அவனைப் பார்த்தவள், “அப்ப எதுக்கு என்கிட்ட கேக்குறீங்க? நீங்களே உங்க அறிவை யூஸ் பண்ணி கண்டுபிடிச்சுக்கோங்க” என்று சொல்ல, அட்சரன் தனது மொபைலில் அவளைப் படம் பிடித்தான்.
“எதுக்கு போட்டோ?” என்று மொபைலைப் பிடுங்க வந்தவளைப் பொறுமையாகச் சமாளித்தவன், அந்தப் புகைப்படத்தை எதிலோ பதிவேற்றம் செய்தான்.
“ஹேய் குரோக் (Grok)! எதுக்கு இந்தப் பொண்ணு உர்ருனு இருக்குனு அதோட ஃபேஸ் ரியாக்ஷன்ல இருந்து கண்டுபிடிச்சுச் சொல்லு.”
வேதவதி அவனைக் கடுப்பாய் முறைத்தாள்.
அவன் முன்னே நிற்பவளின் மனதில் என்ன இருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளச் செயற்கை நுண்ணறிவின் உதவியைத் தேடுகிறான். இவனை என்ன செய்வது?
“அட! குரோக் கன்பியூஸ் ஆகிடுச்சு. பொண்ணுங்களைப் புரிஞ்சிக்க ஏ.ஐயால கூட முடியல பாரேன்.”
“இந்த ஜோக்கை உங்க பிருந்தா கிட்ட சொல்லுங்க. கெக்கபிக்கனு சிரிக்கும். எனக்குச் சிரிப்பே வரல.”
அட்சரனுக்கு அப்போதுதான் விஷயமே புரிந்தது. இதோடு இரண்டாம் முறையாக ‘உங்க பிருந்தா’ என்ற வார்த்தை வந்துவிட்டது அவளது வாயிலிருந்து. முகத்தில் கூட கொஞ்சம் கடுப்பு தெரிகிறதே!
ஆராய்ச்சியாய் அவளை அலசின அவனது விழிகள்.
“சோ பிருந்தா கிட்ட பேசுனதுதான் நீ உர்ருனு இருக்கக் காரணம்.”
“நீங்க யார் கிட்ட பேசுனா எனக்கென்ன வந்துச்சு?” அலட்சியமாகக் காட்டிக்கொண்டாலும் அவளது கண்களில் எரிச்சலின் ரேகைகள்.
அட்சரன் நமட்டுச்சிரிப்பை மறைத்தவன், “சரி இனிமே நான் அவளைப் பத்திப் பேசல. இப்பவாச்சும் வர்றியா?” என்றதும்தான் அவள் இறங்கி வந்தாள் எனலாம்.
ஒரு வாரத்தில் தெருவுக்குள் ஓட்டப் பழகிக்கொண்டாள் வேதவதி. பின்னர் அட்சரன் சொல்லித்தந்ததில் சாலையில் ஸ்கூட்டி ஓட்டவும் தைரியம் வந்துவிட்டது அவளுக்கு. அதே நேரம் ஸ்கூட்டி ஓட்டிக் கற்றுக்கொண்ட தருணங்கள் அவர்களுக்கு நெருக்கமான தருணங்களாகவும் அமைந்து போயின.
வார்த்தைகளும், பார்வையும் பரிமாறாத எண்ணற்ற உணர்வுகளை நமக்கு அறிமுகம் செய்துவிடும் நேசிப்பவர்களின் ஸ்பரிசம். ஸ்கூட்டி ஓட்டக் கற்றுத் தருகையில் வேதவதியின் தோள் வளைவில் மோவாயைப் பதித்து அவன் பேசும் போதும், ஸ்கூட்டி தடுமாறினால் ஒரு கையால் அவளது இடையைப் பற்றி இன்னொரு கையால் ஹேண்ட்பாரைப் பிடித்து வண்டியைச் சமாளிக்கும் போதும், அவன் பேசும் போது சூடான மூச்சுக்காற்று காதுமடல்களை வருடும்போதும் தன்னையறியாமல் கனியத் தொடங்கியது வேதவதியின் மனம்.
அதிலும் அவனது பாலைப்பூவின் நறுமணம் கொண்ட பெர்ஃபியூம் அந்தப் பயிற்சி நேரத்துக்குப் பிறகு தனது உடையிலும் ஒட்டிக்கொண்டாற்போல பிரமை வேறு!
மனதில் சலனம் வந்துவிட்டதால் முன்பு போல அவனிடம் வம்பு வளர்க்கவோ, அவன் வம்பு வளர்த்தால் பதிலடி கொடுக்கவோ அவளால் இயலாமல் போனது. சின்னதொரு தடுமாற்றம் அவனது விழிகளைச் சந்திக்கவே! இதில் எங்கிருந்து பேசுவது? அவனே பேசினாலும் காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டு ஓடுவது போலப் பதிலளித்துவிட்டுப் பறந்துவிடுவாள் வேதவதி.
அவள் ஆடும் கண்ணாமூச்சி அவனுக்குத் தெரியாமல் இல்லை. அதற்காகவே அவளை இழுத்து வைத்துச் சீண்டுவான் அட்சரன்.
அப்படித்தான் சனிக்கிழமை மாலை கொஞ்சம் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிட்டவன் காபி கப்போடு ஹால் சோஃபாவில் சாய்ந்திருந்தான்.
கருப்பு வண்ணச் சம்பல்பூரி காட்டன் புடவையில் புத்தம்புது மலராய் வந்த வேதவதியைத் தன்னையறியாமல் ஏறிட்டன அட்சரனின் விழிகள். குர்தி, அனார்கலி, லாங் ஸ்கர்ட் என எத்தனை உடைகள் வந்தாலும் புடவையில் வேதவதி தனி அழகு! அதுவும் அட்சரனின் கண்களுக்கும் மனதுக்கும் அவள் புடவை கட்டினால் பேரழகு!
இத்தனைக்கும் காதுகளில் சின்னதாய் ஜிமிக்கி, கைவளையல்கள், கழுத்தில் தாலி கோர்த்த செயின் – இவ்வளவுதான் அணிகலன்கள். இதிலேயே அவளது அழகு பூரணத்துவம் பெற்றதாய் சொன்னது அவனது மனம்.
தன்னை அவன் ரசிப்பதை அறியாமல் அவள் வந்து நிற்கவும் “எங்க கிளம்புற?” என்று புருவத்தை உயர்த்தி விசாரித்தான்.
“இன்னைக்குச் சனிப்பிரதோஷம். அத்தையும் நானும் கோவிலுக்குப் போறோம். அத்தை தான் கருப்பு சாரி கட்டச்சொன்னாங்க” என்றாள் அவள் அமைதியாக.
“ஒரு சனியே சனிப்பிரதோஷத்துக்குப் போகுது. வாட் அ மிராக்கிள்!”
“என்ன?”
வேதவதி அதிர்ந்து விழிக்க, “என் வாழ்க்கையைப் பிடிச்ச சனி நீ. அதுவும் ஜென்மச்சனி. இந்த ஜென்மத்துல என்னை விட்டுப் போகமாட்டனு தெரிஞ்சு போச்சு. அட்சரன் புருசனா கிடைச்சதே உனக்குப் பெரிய வரம் தெரியுமா? இன்னும் என்ன வேண்டுதல் உனக்குச் சாமி கிட்ட?” என்றான் கிண்டலாக.

வேதவதியின் முகம் கோபத்தில் சிவக்க, அவனோ அவளைப் பார்த்துச் சிரித்தான். இத்தனை நாட்கள் தனது கண்களைச் சந்திக்காமல், நின்று பேசாமல் அவள் ஆடிய கண்ணாமூச்சிக்கு அந்நொடியில் தனது வாய்த்துடுக்கால் முடிவுரை எழுதியிருந்தான்.
“நான் சனியனா? நீங்க மட்டும் யாராம்?”
“நானா? வீனஸ்! த லவ் காட்.” கைகளை அகல விரித்து ஷாரூக்கான் போஸ் கொடுத்தவனின் புஜத்தில் கிள்ள வந்தவள், “கிளம்பலாமா வேதா?” என்று கேட்டவாறு வந்த ராஜேஸ்வரியைப் பார்த்ததும் முறைத்தபடியே வெளியேறினாள்.
முறைத்தவளைப் பார்த்து அவன் கண் சிமிட்டவும் திடுக்கிட்டு ஓட, அட்சரன் சத்தமாகவே நகைத்துவிட்டான். இப்படி அவளே ஒதுங்கினாலும் இழுத்து வைத்து வம்பு வளர்க்க அவனுக்குப் பிடித்திருந்தது.
இந்த நிலையில் தான் அட்சரனும் இலக்கியாவும் சொன்ன மாற்றங்களுடன் பதிப்பகத்துக்கு அனுப்பப்பட்ட வேதவதியின் நாவல், ‘ஃபீனிக்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்’ பதிப்பகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பதிப்பகத்தின் சென்னை பிரிவு ஆசிரியரை நேரில் சந்திக்குமாறு ஹெல்வட்டாசுக்குத் தகவலும் கொடுக்கப்பட்டது.
இந்த நற்செய்தியை அட்சரன் வேதவதியிடம் பகிர்ந்துகொண்டான். அவளுக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டன. அடுத்த நொடியே “எனக்கு அங்க எப்படிப் பேசணும்னு தெரியாதே? நீங்க சொல்லித் தருவீங்களா?” என்று கேட்டாள் கூச்சத்தோடு.
அட்சரன் பதில் சொல்லும் முன்னரே, “நீங்க ஒரு தடவை சொல்லிக் கொடுத்தீங்கனா நான் பிக்கப் பண்ணிப்பேன். உங்களுக்குத்தானே பப்ளிகேஷன் சர்க்கிள்ல எப்படிப் பழகணும் எப்படிப் பேசணும்னு தெரியும்” என்றாள்.
அட்சரனும் அவளுக்குச் சொல்லித் தரச் சம்மதித்தான். கல்லூரி முடிந்ததும் ஹெல்வட்டாசுக்கு வந்து விடுமாறு கூறியும் விட்டான்.
மறுநாள் அவன் சொன்னது போலக் கல்லூரியிலிருந்து ஸ்கூட்டியில் ஹெல்வட்டாசுக்கு வந்து சேர்ந்தாள் வேதவதி.
சஞ்சயும் இலக்கியாவும் அவளை வாழ்த்தினார்கள். அவர்களிடம் நன்றி சொல்லிவிட்டு அட்சரனின் அலுவலக அறைக்குள் வந்தவளுக்கு, அன்றொரு நாள் இதே அறையில் அவனுடன் சண்டை போட்ட தருணத்தின் நினைவு மனதில் சின்னதொரு நினைவலையாய்!
தலையை உலுக்கிச் சமாளித்தவள் உள்ளே நுழையும்போதே சிகரெட்டின் நெடி!
அவள் வந்த அரவம் கேட்டு அவசரமாகச் சிகரெட்டை ஆஷ் டிரேயில் கழுத்தை அழுத்திக் கொலை செய்தான் அட்சரன்.
“வா! உனக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன்” என்பவன் சூயிங்கம்மை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.
தன்னைக் கண்டதும் அவன் சிகரெட்டை அணைத்த விதம் வேதவதிக்குப் பிடித்திருந்தது. அதை அவன் தனக்குத் தரும் மரியாதை என எண்ணியது அவளது மனம்.

சிரித்த முகமாய் வந்து அமர்ந்தவளுக்கு, அடுத்த சில நொடிகளில் வெகு அருகில் அட்சரன் வந்து அமர்ந்ததும் படபடப்பு. சமீப காலமாகத் தன்னை அலைக்கழிக்கும் இந்த உணர்வுகளை எப்படியாவது தடுக்க வேண்டும் என அவளும் முயற்சிக்கிறாள். பலன் என்னவோ தோல்விதான்.
அவனிடமே பேசிவிடலாம் என்றாலோ எங்கே தன்னைத் தவறாக எண்ணிவிடுவானோ என்ற பயம். மீண்டும் ஒரு முறை அவனது கோபாவதாரத்தைத் தாங்கும் தைரியம் அவளுக்கு இல்லை.
அவளது உணர்ச்சிக் கொந்தளிப்பை அறிந்தவனைப் போல, அட்சரனும் அவளுக்கு ஆசிரியரிடம் எப்படிப் பேச வேண்டுமெனச் சிறுபிள்ளைக்குப் பாடம் நடத்துவது போலச் சொல்லிக் கொடுத்தான்.
ஆனால் வேதவதி தடுமாறினாள்! எதையும் சொன்னதும் புரிந்துகொள்பவள் இம்முறை மலங்க மலங்க விழித்தாள். ஏதோ ஒரு தடை அவளிடம். இது வெட்கமா? பயமா?
அட்சரன் அவளை நேருக்கு நேர் பார்த்தான். கொஞ்சம் கறார்த்தனமான பார்வை தான். ஆனால் துளி போலக் கனிவும் எட்டிப் பார்த்தது அந்தக் கூர்விழிகளில்.
அந்தக் கண்களைச் சந்திப்பது தான் வேதவதிக்குப் பெரும் போராட்டமாக இருந்தது. அவளது பார்வை அங்கிங்கென இடம் மாறுவதைக் கவனித்தவன், அவளது கண்களின் முன்னே விரல்களைச் சொடுக்கினான்.
அதில் சட்டென அவன் பக்கம் பார்வையைப் பதித்தவள், “என்ன?” என்று வினவ,
“புதுசா ஒருத்தரைச் சந்திக்குறப்ப நம்ம கண்கள் அவங்களோட கண்களை நேருக்கு நேரா பாக்கணும். உதட்டுல சின்னதா சிரிப்பு ஒட்டியிருக்கணும். அதுதான் வலிமையான உடல்மொழி. இங்க வெக்கம், பயத்துக்கு இடம் கிடையாது. புரியுதா?” என்றான் அழுத்தமான குரலில்.
“ம்ம்.”
“சரி! என் கண்ணைப் பார்த்துப் பேசு. ‘ஃபீனிக்ஸ் பப்ளிஷிங் ஹவுஸோட’ எடிட்டர் உன் கதையோட ‘யூனிக் செல்லிங் பாயிண்ட்’ (Unique Selling Point – USP) என்னனு கேட்டா, உன் பதில் எப்படி இருக்கணும்? என்கிட்ட சொல்லு.”
வேதவதி அருகிலிருந்த தம்ளர் தண்ணீரை முழுவதுமாகக் காலி செய்தாள்.
“அது… அது… ஒரு பொண்ணோட மனப்போராட்டத்தைப் பத்தின கதை சார்… அவளோட தனிமை…” எனத் தடுமாறினாள்.
“சார் இல்ல… அட்சரன்” எனத் திருத்தியவன், “முதல்ல இந்த டென்ஷனைக் குறை. நான் உன்னோட லிட்டரரி ஏஜெண்ட். என்கிட்டவே இவ்ளோ தடுமாறுனா நீ எப்படி எடிட்டர் கிட்ட பேசுவ? முதல்ல நீ என் கண்ணைப் பார்த்துப் பேசு வேதா.”

வேதவதி கைகளைப் பிசைந்தபடி அவனை ஏறிட்டவள், முன்பு போலத் தடுமாற்றமின்றி அவனது பார்வையைச் சந்திக்கும் வலுவின்றித் தலையைக் குனிந்துகொண்டாள். அவனது அண்மையில் அவள் தைரியமாகவும் வலுவிழந்தவளாகவும் ஒரே நேரத்தில் உணர்ந்தாள் என்றால் அது ஆச்சரியம்தானே!
“என்னால முடியல! நீங்களே எனக்குப் பதிலா அவங்க கிட்ட பேசிடுங்களேன்” என்றாள் சின்னக் குரலில்.
“உனக்காக நான் பிட்ச் (Pitch) தான் அனுப்புவேன் வேதா. அங்க உன் கதைக்காக நீதான் பேசணும். என்னதான் முடியும் உன்னால? அம்மா கூட அவங்க பிரெண்ட்ஸ் வீடு, கோவில், குளம்னு போய் ஹஹஹானு சிரிக்க முடியும். அந்த மினியன் கூட்டத்தோட சேர்ந்து ஆட்டம் போட முடியும். உன்னோட புக்குக்காகப் பேச முடியாதா?” என்று கடுகடுத்துவிட்டான் அவன்.
இன்னும் இரு தினங்களில் அவனும் அவளும் ஃபீனிக்ஸ் பதிப்பகத்தின் அக்யூயரிங் (Acquiring) எடிட்டரைச் சந்திக்க வேண்டும். இந்தப் பெண் வெறும் அறிமுகத்துக்கே தடுமாறுகிறாளே என்ற எரிச்சல் அவனுக்கு!
“அவங்கல்லாம் என்னோட குளோஸ்ட் சர்க்கிள். நான் பேசுவேன்.”
“அப்ப உன் குளோஸ்ட் சர்க்கிள்ல உள்ளவங்களைப் பப்ளிகேஷன் ஆரம்பிக்கச் சொல்லி புக் போட்டுக்க.”
“உங்க கிட்ட வர்ற ரைட்டர்ஸ் எல்லாரையும் இப்படித்தான் ஹேண்டில் பண்ணுவீங்களா?”
“இதுவரைக்கும் உன்னை மாதிரி ஒரு ரைட்டரைச் சந்திச்சதே இல்லடி. எதுக்கெடுத்தாலும் யாருக்குப் பின்னாடி ஒளியலாம்னு இடம் தேடுறது. ஷப்பா!”
இருவரும் ஒருவரையொருவர் முறைத்தார்கள். அந்தக் கணத்தில் வேதவதியின் கண்கள் தடுமாறுவதைக் கண்டுகொண்டான் அட்சரன். அவளது உயரத்துக்குக் குனிந்தவன், தனது நீண்ட கரத்தில் அவளது கரத்தைப் பொதிந்துகொண்டான்.
“என்னாச்சு உனக்கு? நல்லாதானே இருந்த? என்ன பிரச்சனை உனக்கு?”
மென்மையாகவே வினவினான். பதில் வரவில்லை என்றதும் அவளுக்குச் சூழலைப் புரியவைக்க ஆரம்பித்தான்.
“உன் கதை உன்னோட குழந்தை மாதிரி. ஒரு குழந்தையைப்பத்தி அதோட அம்மாக்குத் தான் எல்லாமே தெரியும்.”
வேதவதி சட்டெனத் தலையை உயர்த்தியவள், “அப்பாக்கும் தெரியும்” என்றதும் பொறுமை கழன்று கொண்டது அட்சரனிடமிருந்து.
“எல்லாம் ஒரு அளவுக்குத்தான் வேதா. ஒரு உவமைக்குச் சொன்னா அதுல வந்து லாஜிக் பாக்குறியா? இதெல்லாம் வக்கணையா பேசு. பேச வேண்டியவங்க கிட்ட ஆயிரம் தடவை வாயால டைப் பண்ணு. போடி.”
எரிச்சலோடு எழுந்திருக்கப் போனவனின் லினன் சட்டை அவளது கைவிரல்களில் சிக்கிக்கொள்ள, “விடு வேதா” என்றான் முதல் முறை மிரட்டலாக.
“ம்ஹூம்.” தலையாட்டி மறுத்தவள் இன்னும் இறுக்கமாகச் சட்டையைப் பற்றி இழுத்தாள், முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு.
அட்சரனுக்கு அந்நொடியில் அவனை அறியாமல் சிரிப்பு வந்துவிட்டது.
அப்படியே இருக்கையில் அமர்ந்தவனை நெருக்கித் தனது இருக்கையை நகர்த்திக்கொண்டவள், சட்டென அவனது கழுத்தோரம் சாய்ந்துகொள்ள, அவனது கரமும் அவளை அணைத்துக்கொண்டது.

எந்த உரிமையில் அவனது கழுத்தோரம் சாய்ந்தோம் என்ற கேள்வி வேதவதிக்குள் வரவில்லை. இப்போதெல்லாம் இந்தப் பெண் ஏன் தடுமாறுகிறாள் என்ற கேள்வி அட்சரனுக்குள்ளும் உதயமாகவில்லை. படபடத்த மனதுக்குச் சின்னதொரு ஆறுதல் என அவன் எண்ணிக்கொள்ள, அவனில் ஒன்றியவளோ அவனையே தனது தைரியத்துக்கான பற்றுக்கோளாகப் பிடித்துக்கொண்டாள்.
அவனது சட்டையின் பட்டனைத் திருகியபடியே, “இந்த நாவல் திருமணமாகுற ஒவ்வொரு பொண்ணுக்குள்ள இருக்குற சின்னச் சின்ன ஏக்கங்களோட நீட்சி. அவங்களோட ஒவ்வொரு மௌனத்தையும் நான் எழுத்தா மாத்தியிருக்கிறேன். இது காதல் கதையோ குடும்பக்கதையோ இல்ல. ஒரு பொண்ணோட சின்னக் கனவுகளோட தொகுப்பு. அதை அவளோட வாழ்க்கைத்துணை புரிஞ்சிக்கிட்டா, அந்த உறவுக்கு அவ எடுக்குற மெனக்கிடலை அந்தப் பார்ட்னரும் எடுக்க ஆரம்பிச்சா வாழ்க்கை எவ்ளோ அழகா மாறும்ங்கிற எதிர்காலம் குறித்த கற்பனை. இதுதான் என் கதையோட யூனிக் செல்லிங் பாயிண்ட். இது ரொமான்ஸையும் காதலையும் மட்டும் பேசாது. ஒரு பொண்ணுக்குள்ள இருக்குற பேசப்படாத உணர்வுகளை என் எழுத்து மூலமாப் பேச வச்சிருக்கேன்” என்றாள் தெளிவான குரலில்.
சொல்லி முடித்ததும் மூச்சு வாங்கிய உணர்வு அவளுக்கு. அட்சரனிடம் ஒரு நொடி மௌனம். அவனது முகத்தில் திருப்தியான புன்னகை அரும்பியது.
“தட்ஸ் மை கேர்ள்! இந்த டோன் (Tone) தான் நான் எதிர்பார்த்தது. இதே போல எடிட்டர் முன்னாடி நீ பேசுனா அவரால உன் கதையை நிராகரிக்கவே முடியாது.”
தோளில் தட்டிக்கொடுத்தான் பாராட்டாக.
“நாளைக்கு இதே ஸ்டைல்ல ஒரு மாக் இன்டர்வியூ (Mock Interview) பண்ணுவோம். நீ இன்னும் சூப்பரா பேசிடுவ பாரு” என்றான் ஊக்கமளிக்கும் விதமாக.
கண் மூடி அவனது கழுத்து வளைவுக்குள் புதைந்து கிடந்தவளின் மனதில் அலையாய் எழுந்த பேசப்படாத உணர்வுகள் இன்னும் அவனது செவிகளுக்கும் இதயத்துக்கும் கடத்தப்படவில்லை. அந்த உணர்வுகளின் பாரத்தைத் தாங்கியிருக்கும் ஒற்றை இதயம் வேதவதியுடையது.
‘இன்னும் எத்தனை நாட்களடி பெண்ணே’ என்று அந்த இதயம் சுணங்கிக்கொள்ள, சொல்லும் தைரியமோ வாய்க்கவில்லை அவளுக்கு. அவளது தோளில் தட்டிக்கொடுத்தவனுக்கோ இதயம் ஹிப் ஹாப் ஆடியது என்றுதான் சொல்ல வேண்டும். அவனுக்கும் அவளைப் பிடிக்கும். அவளைச் சீண்டவும், தீண்டவும், உரிமையோடு கரம் கோர்க்கவும், தோளணைக்கவும் தனக்கு ஏதோ பிறப்புரிமை உள்ளது போல நடந்துகொள்பவனாயிற்றே!
‘டோன்ட் டச் மீ’ என்பவள் அவளாகவே தன்னை நெருங்கியதும், தன்னிடம் தைரியம் பெறுவதும் அவனுக்குக் கர்வமாய்! ஓரளவுக்கு அவளது தயக்கத்துக்கான காரணமும் படபடப்புக்கான மூலமும் அறிந்துகொண்டான் அட்சரன். அதைத் தீர்க்க வேண்டியது தன் பொறுப்பு என்று உணர்ந்தவன் ஒரு முடிவை எடுத்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

