காலையிலேயே வீடு கலவரக்கூடமாக மாறி கூச்சல்கள் எழும்புவதைக் கேட்டபடி கண் விழித்தான் அட்சரன். ஞாயிறு என்றால் சற்று நேரம் கூடுதலாக உறங்குபவனின் காதருகே வந்து யாரோ மைக் வைத்துக் கத்துவது போலப் பரபரப்பான பேச்சுக்குரல்கள் விழ, எங்கிருந்து உறங்குவது?

கடுப்போடு எழுந்து படுக்கையில் அமர்ந்தான். அந்தக் கலவரம் நடப்பது அவனது அறைக்கு அடுத்து இருக்கும் அறையில்தான்.
“டி வேதா! அசையாம உட்காரேன்” – கீச்சுக்குரலில் ஒரு பெண் பேசியது கேட்டது.
“இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கேனே” என்றபடி தனது அறையை விட்டு வெளியே வந்தவன் பக்கத்து அறைக் கதவைத் தட்டினான். கதவு கொஞ்சம் போலத் திறந்து ஒரு தலை மட்டும் வெளியே தெரிந்தது.
“வாட் ப்ரோ?” என்றபடி தலையை மட்டும் காட்டிய பிரியம்வதாவை முறைத்தான் அட்சரன்.
“இப்ப எதுக்குக் காலங்காத்தால அலறிட்டு இருக்கீங்க? எங்க அவ? ஏய் வேதா!” என்று கதவைத் திறக்க முயற்சிக்க, பிரியம்வதா திறக்க அனுமதிக்கவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“லேடீஸ் இருக்குற ரூம்ல அத்துமீறி நுழையுறது தப்பு ப்ரோ.”
“யாரு? நீங்கல்லாம் லேடீஸா? அம்புட்டும் மினியன் கூட்டம். அப்படி என்ன பண்ணுறீங்க எல்லாரும்?”
“இன்னைக்கு எங்க ஃப்ரெண்டுக்கு தாஜ் கோரமண்டல்ல எங்கேஜ்மென்ட். எங்க வீட்டுல இருந்து ரெடியாகி ஹோட்டலுக்குப் போறதுக்குள்ள டிராவல், சென்னை வெதர்ல மேக்கப் கலைஞ்சிடும். அதான் எல்லாரும் வேதாவோட வீட்டுக்கு வந்து ரெடியாகிட்டு இருக்கோம்.”
“வேதாவோட வீடா? இப்படித்தான் சொல்லி வச்சிருக்காளா அவ? ஏய் வேதா! இந்த மினியனை ஏவிவிட்டுட்டு நீ கமுக்கமா உள்ள பதுங்கி இருக்கியாடி?”
அவன் போட்ட கூச்சலில் ராஜேஸ்வரியே வந்துவிட்டார்.
“என்னடா உன்னோட பெரிய ரோதனையா இருக்கு? சண்டே லேட்டாதானே முழிப்ப? இன்னைக்கு என்ன அவசரம்னு இப்பவே முழிச்சு அந்தப் புள்ளைங்ககிட்ட சண்டை போட்டுட்டு இருக்க?”என அவர் அங்கலாய்க்க,
“யாரு நானா? இந்த மினியன் கூட்டத்தோட அலறல்ல பயந்து கண் முழிச்சு வந்திருக்கேன். விட்டா வீட்டையே கவிழ்த்துப் போட்டுடும் இதுங்க. என்னா சத்தம்!” என்று முகத்தைச் சுழித்தான் அட்சரன்.
“சில் பண்ணுங்க ப்ரோ! ஏன் இவ்ளோ ஹைப்பர் ஆகுறீங்க? ஆண்ட்டி, எதுக்கும் ப்ரோக்கு பிபி செக் பண்ணிடுங்க. காத்தாலயே பீஸ்ட் மோட்ல இருக்காரு.”
“அவன் அப்படித்தான்! நீங்க எல்லாம் ரெடியாகுங்க பொண்ணுங்களா” என்ற ராஜேஸ்வரி அட்சரனைக் கையோடு அழைத்து வந்து அவனது அறையில் விட்டார்.
“நீங்க அவளுக்கு ரொம்ப இடம் குடுக்குறீங்கம்மா. அவ வந்ததுல இருந்து வீட்டோட அமைதியே போச்சு” என்றவனை நமட்டுச் சிரிப்போடு பார்த்தவர், “பெண் குழந்தைகள் இருக்குற வீடு கலகலப்பா இருக்கும்டா அச்சு” என்று சொல்ல,
“அவ குழந்தையா? அவகூட இருக்குதுங்களே அதுங்களும் குழந்தைகளா? ஒவ்வொன்னும் தலையில கொம்பு முளைக்காத சைத்தான்” என்றான் அவன் கடுகடுப்போடு.
“சரி சரி! உன் ஃப்ரெண்ட்ஸ் இந்த வீட்டுக்கு வர்றப்ப வேதா ஏதாச்சும் சொல்லுறாளா? அவ ஃப்ரெண்ட்ஸை மட்டும் நீ ஏன் கத்துற? போய் பிரஷ் பண்ணு. உனக்குக் காபி கொண்டு வர்றேன்.”
அட்சரன் அன்னையின் கூற்றிலிருந்த உண்மையை உணர்ந்து அமைதியானவன், “சரி! ஆனா கீழ வந்து காபி குடிச்சுக்கிறேன். இதுங்க போடுற கூச்சல்ல எனக்குக் காபியே புரையேறிடும் போல” என்று சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.
பின்னர் அவன் கீழ்த்தளத்துக்கு வந்தபோது காபி தயாராக இருந்தது. அதை ஒரு மிடறு அருந்தியபோதே மாடிப்படியில் இறங்கி வந்தார்கள் வேதவதியும் பிரியம்வதாவும். கூடவே அவளது வகுப்புத் தோழிகள் நான்கு பேரும். ஒரே மாதிரியான உடை வெவ்வேறு வண்ணங்களில் அணிந்திருந்தார்கள். சொல்லி வைத்து வாங்கியிருப்பார்கள் போல என்று எண்ணிக்கொண்டான் அட்சரன்.
“ரொம்ப அழகா இருக்கீங்க எல்லாரும்” – ராஜேஸ்வரி சொல்ல,
“இதைப் பார்க்குறப்ப எனக்கு வடிவேலு சொல்லுவாரே ‘மிஸ் தென்காசி போட்டி’ அதுதான் ஞாபகம் வருது” என்றான் நமட்டுச் சிரிப்போடு.
பெண்கள் அனைவரும் வாயடைத்துப் போக, வேதவதியோ அவனை முறைத்தாள்.
“உன் ஊரு தென்காசி பக்கம்தானே? காமெடிக்கும் இந்த டிரஸ்ஸுக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கு. கிளம்புங்க கிளம்புங்க! தேர்ட் வேர்ல்ட் வார் நடக்குற மாதிரி ஒரே சத்தம்” என்று கிளம்புமாறு வாசல் பக்கம் கை காட்டினான் அட்சரன்.
“யூ ஆர் டாக்சிக் ப்ரோ” பிரியம்வதா தோள்களைக் குலுக்கியவள், “எப்படி நீ இவரை மாதிரி ஒரு ரெட் ஃப்ளாக்கைக் கல்யாணம் பண்ணுன வேதா?”என்று கிண்டல் செய்ய,
“ஆசைப்பட்டா பண்ணுனேன்? தலைவிதி” என்று கேலிச் சிரிப்போடு நெற்றியில் கோடிழுத்த வேதவதி, அட்சரனுக்குப் பதிலடி கொடுத்த திருப்தியில் அமர்த்தலாகப் பார்வையொன்றை வீசினாள் அவனிடம்.
“என் டயலாக்கை நீ பேசுற” என்றான் அவன் அலட்சியமாக. அவன் வாய் உதிர்த்த அலட்சியத்தை விழிகள் மறுத்திருந்தன.

துரோகம் செய்த விழிகளின் பார்வை மொத்தமாய்க் குவிந்தது என்னவோ வேதவதியின் மீதுதான். அவள் அணிந்திருந்த பட்டு லெஹங்காவை அளவிடும் பார்வை பார்த்தான். ஆரஞ்சும் மெஜந்தாவும் கலந்த உடை அவளது நிறத்துக்குப் பொருத்தம்தான். கூடவே கழுத்தை ஒட்டிய காசுமாலை சோக்கர் ஒன்றும், காதுகளில் காசுகளால் வடிவமைக்கப்பட்ட காதணியும் எளிமையாக இருந்தாலும் அந்த உடைக்கேற்றவையாய் மின்னின.
மினியன் கூட்டம் செய்திருந்த மேக்கப்பின் உபயத்தால் அழகியாகவே தெரிந்தாள். என்னதான் மேக்கப் அணிந்தாலும் கண்களின் மென்மையும், உதடுகளின் முறுவலும் போலியாக மாறிவிடவில்லை.
இருவரும் எதிரெதிரே நின்று வசனம் பேச, பெண்களோ நேரமாகிவிட்டதெனப் பரபரத்தார்கள். வேதவதி அட்சரனின் பார்வை மாற்றத்தைக் கவனிக்கவில்லை.
அவள் தோழிகளோடு இடத்தைக் காலி செய்ததும், “ஷப்பா! இப்பதான் காதுக்கு உயிர் வந்திருக்கு” என்றவன் சோஃபாவில் சாய்ந்துகொண்டான்.
ஆனால் மதியம் நிச்சயதார்த்தம் நிகழ்வு முடிந்ததும் ராஜேஸ்வரிக்கு வேதவதியிடமிருந்து மொபைல் அழைப்பு.
“அத்தை இங்க மழையா இருக்கு! கேப் எதுவும் கிடைக்கல. எல்லாரும் மழைய காரணம் காட்டி ரைடை அவாய்ட் பண்ணுறாங்க”
“ஒன்னும் பிரச்சனை இல்லடா. உன் ஃப்ரெண்ட்ஸுங்க இருக்காங்களா? அவங்க கூட இரு. நான் அச்சுவ வரச் சொல்லுறேன்”
மருமகளிடம் பேசியவர் மகனிடம் வந்து நின்றார். தாஜ் கோரமண்டலுக்குப் போய் வேதவதியையும் அவளது தோழியரையும் காரில் அழைத்து அவரவர் வீட்டில் இறக்கிவிடுமாறு கூறினார்.
“அந்த மினியன் கூட்டம் ஏறுனா என் கார் என்னாகுறது? மழை வேற. ஏன்மா படுத்துறீங்க?” என்று குறை சொன்னபடி காரைக் கிளப்பியவன் தாஜ் கோரமண்டலை அடைந்தான்.
“போங்க போங்க! கார்ல ஏறுங்க” என்று கார்க்கதவைத் திறந்துவிட்டவன் வேதவதி பின்னிருக்கையில் அமரும் முன்னர் கதவை அடைத்துவிட்டான்.
“நீ முன்னாடி உக்காரு” என்றபடி கதவைத் திறந்துவிட்டு அவனது இருக்கையில் அமரப் போய்விட்டான்.
வேதவதியும் வந்து அமர கார் கிளம்பியது. அவரவர் வீட்டில் அனைத்து பெண்களையும் இறக்கிவிட்ட பிறகு இருவரோடு சாலையில் மிதந்து கொண்டிருந்தது.
“மழையில நனைஞ்சியா?”
மொபைலில் தீவிரமாக யாழினியிடம் சாட் செய்துகொண்டிருந்தவள் ஆம் என்க “நனையுறது தப்பில்ல. ஆனா என்ன மாதிரி ட்ரஸ் போட்டிருக்கோம்னு கொஞ்சம் யோசிச்சிட்டு இந்த ஜெனிலியா வேலை எல்லாம் செய்யலாம்” என்றான் அவன் கிண்டலாக.

“இந்த ட்ரஸ்சுக்கு என்ன?” என்றவள் குனிந்து பார்க்க அவளது நேவி ப்ளூ வண்ண ஷிபான் தாவணி மழையால் நனைந்து உடலோடு ஒட்டியிருப்பதையும், ப்ளவுசின் ஸ்வீட் ஹார்ட் கழுத்து இறங்கி அந்த ஷிபான் தாவணியில் கண்ணாடி போல தெரிவதையும் கண்டவள் சட்டென அதைச் சரிசெய்யப் போக அவள் முகத்தில் வந்து விழுந்தது டவல் ஒன்று.
“காஜல் எல்லாம் கலைஞ்சிருக்கு. கண்ணாடி பாத்து துடைச்சுக்க”
வேதவதிக்குத் திகைப்பு. தோழிகள் இருந்தபோது இவனது பார்வை சாலையில்தானே இருந்தது. இதையெல்லாம் எப்போது கவனித்தான்?
“ஏறுனப்பவே கவனிச்சிட்டேன். அந்த மினியன் கூட்டம் முன்னாடி சொல்ல விருப்பமில்ல”
தனது மனதில் நினைத்ததை அவன் சொன்னதும் வாயடைத்துப் போனவள் கலைந்திருந்த காஜலை டவலின் நுனியை வைத்துத் துடைக்க முயற்சி செய்தாள். அது இன்னும் அகலமாய் அழிந்து அவளை சந்திரமுகியாக்கியதுதான் சோகம்.
அட்சரன் இதை எல்லாம் கவனித்தவன் காரை ஓரம் கட்டினான்.
“அதைக் குடு” அவள் கொடுக்கும் முன்னரே டவலை வாங்கிக்கொண்டவன் “என்னைப் பாரு” என்க வேதவதியும் அசையாதப் பதுமையாய் நோக்கினாள் அவனை.
மோவாயை அழுத்தமாக ஒரு கையால் பிடித்து இன்னொரு கையால் கண்ணோரம் கலைந்திருந்த காஜலைத் துடைத்தான்.
அவனது கரம் இறுக்கமாய் மோவாயைப் பிடித்ததில் உதடுகள் குவிந்திருக்க சரியாக அவனது பார்வை குவிந்த உதடுகளில் விழுந்தது.
உதட்டுச்சாயத்தின் வண்ணம் மறைந்திருந்தாலும் அழகாய்க் குவிந்திருந்த செவ்விதழ்களின் ரேகைகளை அத்துணை நெருக்கத்தில் பார்த்ததும் முதல் முறையாக அட்சரனின் மனதில் சின்னதாய் ஒரு சலனம்.
அவளது அழகான கண்கள் கடல் போல் விரிந்து தன்னை விழுங்க நினைப்பது போல உணர்ந்தவனுக்குத்தான் அவளை ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தாமதமாகவே புரிந்தது.
சட்டெனத் தலையை உலுக்கிக்கொண்டவன் டவலை அவள் முகத்தில் மீண்டும் வீசினான்.
“நீயே துடைச்சுக்க” காரைக் கிளப்பியவனின் மனசாட்சி அவனைக் கலாய்த்துத் தள்ளியது ஒரு பக்கம். ‘துடைத்தவளிடமிருந்து டவலை பிடுங்கியது யாராம்?’ குழப்பத்தோடு மானசீகமாகக் குறை சொன்ன வேதவதி அட்சரனின் படபடப்பையும், அவனே தடுத்தாலும் முரண்டு பிடித்து அவளிடம் பாய்ந்த அவனது விழிகளின் கள்ளத்தனத்தையும் அறியாமல் கண்மையைச் சரி செய்வதில் கண்ணானாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

