அந்நியப் பார்வையில் அழகியல் தெரியுதே!
குளத்தில் விழுந்ததொரு குட்டிப் பெருங்கல்லாய்,
குலைந்தவன் நெஞ்சமிதில் குளிர்ச்சியின் சொல்லாய்!
காற்றுப் புகாததொரு கானக நடுவினில்,
காணக் கிடைத்ததொரு காலை நிலவினில்…
தடைகள் தகர்ந்தபின் தன்னையவள் காட்டவே,
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தலைசாய்த்தே அவனது தனிமையைத் தீட்டவே!
-அட்சரனின் வேதா
அட்சரனின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தினமும் நூறு வரிகளாவது எழுத முயன்றாள் வேதவதி. பதின்வயது குழந்தைகள் பெற்றோருக்குக் கட்டுப்படாமல் திமிறுவது போல எழுத்துமே அவளுக்கு அடங்க மறுத்தது.
சில நேரங்களில் ஒரு வாக்கியம் மட்டுமே முழுமையடையும். சில நேரங்களில் கொஞ்சம் கருணை காட்டி ஒரு பாராவோ இரண்டு பாராவோ அவளுக்குக் கட்டுப்பட்டு எம்.எஸ் வேர்ட் டாக்குமெண்டுக்குள் குதிக்கும்.
ஆனால் தேன்மலையில் கை தேர்ந்த மந்திரவாதியின் மந்திரக்கோல் கட்டுப்பாட்டில் அகில உலகமும் அடங்குவது போல சமத்துப்பிள்ளையாய் இருந்த எழுத்தும் கதைகளும் இன்னும் கைவரவில்லை.
இருப்பினும் தினந்தோறும் முயன்றுகொண்டுதான் இருக்கிறாள் அவளும்.
எழுத்தைப் பிடிக்க போராடுவது ஒரு பக்கம் இருந்தாலும் படிப்பின் மீதான கவனம் சிதறவில்லை. அதே நேரம் உலகறிவைக் கற்பிக்கும் இடமான சூப்பர் மார்க்கெட்டும் அவளுக்கு மனிதர்களை அணுகுவதற்கான பாடங்களை அனுதினமும் கற்பித்துக் கொண்டிருந்தது.
இடமாற்றம் சில நேரம் நம்மில் குணமாற்றத்தை உருவாக்கும். மாற்றம் என்பதை முழுவதும் வேறொரு நபராக மாறுவது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். இதை ஆங்கிலத்தில் சொல்வதானால் Personality development எனலாம்.
புதியதொரு இடத்தில் நீங்கள் வாழ நேர்ந்தால் அங்கே உங்களை அறிந்தவர் தெரிந்தவர் என யாரும் இருப்பதில்லை. நாம் இதைச் செய்தால் இப்படி சொல்லுவார்களோ என்ற பிறரின் எண்ணங்களைப் பற்றிய கவலை நமக்கு எழாது. நமது சுயத்தன்மை இன்னும் விரிவடையும். அது நட்பு, பொழுதுபோக்கு, நமது பேச்சுமுறை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இதே மனரீதியான மாறுபாடுதான் வேதவதிக்குள்ளும் நடந்தேறிக்கொண்டிருந்தது. கல்லூரிகளில் பேராசிரியர்கள் கொடுக்கும் குட்டி குட்டி செமினார்களைக் கூட அச்சமில்லாமல் பிரசெண்ட் செய்யும் அளவுக்குத் தேறிவிட்டாள் அவள்.
இந்நிலையில்தான் ஒரு நாள் சூப்பர் மார்க்கெட்டில் பணியாளர்கள் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கையில் வேதவதி அவர்களுக்கு ஆலிவ் ஆயிலை வழக்கமாக சப்ளை செய்யும் விநியோகஸ்தர் ஒருவரிடம் வாதிட்டுக் கொண்டிருந்தாள்.
“இந்த பேட்ச்ல வந்த ஆலிவ் ஆயில் பேட்ச்ல முப்பது பாட்டில் டேமேஜ் ஆகி சீல் உடைஞ்சிருக்கு சார். அதை நான் திருப்பிக் குடுத்துடுறேன், என்னால இந்த பில்லுல சைன் பண்ண முடியாது. முப்பது பாட்டில் கம்மியா போட்டு புது பில் கொண்டு வாங்க”
“அது பெரிய டேமேஜ் கூட இல்லம்மா. சதா சார் இருந்திருந்தா சூழலைப் புரிஞ்சிப்பார். சின்னப்பசங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுனு சும்மாவா சொல்லுவாங்க? வியாபாரம்னா சில நீக்குபோக்கு இருக்கணும்” என்று வேதவதிக்குப் பாடம் எடுத்தார் அவர்.
ஒரு பொருளில் சீல் உடைக்கப்பட்டிருந்தால் அதைப் பயன்படுத்திய பொருளாகவோ அல்லது வீணான பொருளாகவோதானே வாடிக்கையாளர்கள் நினைப்பார்கள். இவர் சொன்னது போல அதை விற்பனைக்கு வைத்துவிட்டால் ராஜி சூப்பர் மார்க்கெட் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை உடைந்துவிடாதா?
அதை வேதவதி எடுத்துச் சொன்னபோது அந்த விநியோகஸ்தர் கேட்கத் தயாராக இல்லை.
“இங்க பாரும்மா! பார்ட் டைம் வேலைக்கு வர்ற நீயெல்லாம் எனக்கு வியாபாரம் பத்தி பாடம் எடுக்கவேண்டாம். வண்டில நீங்க திருப்பி அனுப்புன முப்பது பாட்டிலும் இருக்கு. ஒழுங்கா அதை வாங்கிட்டு பில்லுல கையெழுத்து போட்டு செக் குடு.”
அவர் கறாராகப் பேச வேதவதியோ அவரிடம் வாதிட்டுக் களைத்தாள்.
“எம்மா நீ ஒரு ஸ்டாஃப்தான். அதுக்கேத்த மாதிரி நடந்துக்க. சதா சார் தொழில் நுணுக்கம் தெரியாத உன்னை மாதிரி அரைகுறைய எல்லாம் எப்பிடி வேலைக்கு வச்சாரு?”
அந்நபர் எகிறிப் பேசியதில் அனைவரின் கவனமும் அவள் பக்கம் திரும்பியது.
“சார்! கொஞ்சம் மெதுவா பேசலாமே?”
அவள் அமைதியாகச் சொல்லும்போதே “டேமேஜ் ஆன பொருளை வித்து பேரைக் கெடுத்துக்குறதுதான் தொழில் நுணுக்கமா? இவ்ளோ நாள் தெரியாம போயிடுச்சே” என்று நக்கலாய் அட்சரனின் குரல் ஒலித்தது அங்கே.
வேதவதிக்கு ஆச்சரியத்தில் கண்கள் இமைக்க மறந்துவிட்டன.
அவன் நிதானமாக அவளருகே வந்து தோளில் கை போட்டுக்கொண்டான்.

“ஸ்டாஃப், அரைகுறைனு என்ன பேச்சு இது? எங்கப்பா தப்பான ஆள் கையில நிர்வாகத்தைக் குடுக்கமாட்டார். இவ திருப்பிக் குடுத்ததை எடுத்துட்டுப் போங்க. ஹான்! இவ்ளோ நேரம் சதா சார் சதா சார்னு பாராட்டுப்பத்திரம் வாசிச்சீங்களே, அவரோட மருமகள் இவ. நான் அவரோட பையன்”
அவன் தெளிவாகச் சொன்னதும் விநியோகஸ்தரின் முகமே மாறிப்போனது. சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றுபவர்களுக்கு அட்சரனின் முகம் கூட தெரியாது. அவன் இங்கே வந்தால்தானே தெரியும்? ஒரு சிலர் எப்போதாவது சதானந்தனின் வீட்டுக்குப் போக நேர்ந்தாலும் அட்சரனை அவர்கள் பார்த்ததில்லை.
“அதில்லங்க தம்பி…”
“ஒரு தும்பியும் வேண்டாம், எல்லாத்தையும் எடுத்துட்டுப் போங்க. இன்னொரு தடவை இந்த டோன்ல இவகிட்ட நீங்க பேசக்கூடாது. பேசுனீங்கனா நாங்க வேற டீலர் பாத்துக்குறோம். போயிட்டு வாங்க”
விநியோகஸ்தர் போன பிறகு வேதவதியைத் தோளில் கை வைத்து அணைத்தபடியே அலுவலக அறைக்குள் இழுத்துச் சென்றுவிட்டான். கழுத்தில் துண்டைப் போட்டு வடிவேலுவை இழுத்துச் செல்லும் பார்த்திபனின் நகைச்சுவை நினைவுக்கு வந்தது இக்காட்சியை வேடிக்கை பார்த்த சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்களுக்கு.
உள்ளே வந்ததும் “அந்தாளு கால்கால்னு கத்துறான். அவன்கிட்ட போய் கொஞ்சி பேசிட்டிருக்க. மூஞ்சில அடிச்ச மாதிரி கொண்டு போய்யா உன் டேமேஜ் பீஸைனு விட்டெறிய வேண்டியதுதானே?” என்று கடுகடுத்தான் அவன்.
“ப்ச்! அப்பிடியெல்லாம் நினைச்ச இடத்துல நினைச்ச மாதிரி பேசிடமுடியாது. எவ்ளோ கஸ்டமர்ஸ் இருந்தாங்க, பாத்தீங்கல்ல. அவங்க முன்னாடி நான் அப்பிடி பேசுனா சூப்பர் மார்க்கெட் பத்தி நினைப்பாங்க?”
“சூப்பர் மார்க்கெட் குவாலிட்டி விசயத்துல ரொம்ப கறார்னு நல்லவிதமாதான் நினைப்பாங்க. சரினு தோணுற ஒரு விசயத்துக்காகச் சத்தமா பேசலாம். அதை விட்டுட்டு ஹஸ்கி வாய்ஸ்ல பேசிட்டிருக்க”
வேதவதியின் முகத்தில் அவளையறியாமல் புன்னகை அரும்பியது.
“இங்க ஜோக்கா காட்டுறேன் உனக்கு?” என அதற்கும் சீற்றம்.

“நீங்க எல்லாம் பிறக்குறப்ப ஏகே 47 வாயோட பிறந்தவங்க. நான் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மூணாவது மனுஷங்களை அணுக கத்துக்கிட்டிருக்கேன். உங்க பேச்சும் என் பேச்சும் ஒன்னு போல இருக்கணும்னு எதிர்பாக்குறதே பேராசை.”
“லாஜிக்? அதுவும் என்கிட்டயே? பொழைச்சுப் போ” என்றவன் “உனக்கு இன்ஸ்டால ஐடி இருக்கா?” என்றான் திடுமென.
“இருக்குதே” என்றவள் மொபைலைத் திறந்து காட்டினாள்.
அதைப் பார்த்தவன் “ப்ச்! இதுல ஃபாலோயர் கவுண்டிங் கம்மி. நான் அஃபிஷியல் ஐடி ஒன்னு சஞ்சயை ஓப்பன் பண்ணச் சொல்லிடுறேன். புக் ரிலீஸ் அப்ப நீ அடிக்கடி வீடியோ போட வேண்டியதா இருக்கு. உன் அக்கவுண்ட் வேண்டாம். அதுல ரீச் இருக்காது. பெருசா புரமோட் பண்ணுனாலும் அல்காரிதம் உன் அக்கவுண்டை நிறைய பேர்கிட்ட கொண்டு போய் சேர்க்காது” என்றான் மடமடவென.
“இவ்ளோ இருக்கா ஒரு புக் ரிலீஸ்ல?” கண்களை அகலமாய் விரித்தாள் வேதவதி.
“எங்க தரப்புல இவ்ளோதான். பப்ளிஷிங் ஹவுஸஸ் எல்லாம் இன்னும் பலவிதமான புரமோஷன்ஸ், மார்க்கெட்டிங் பண்ணுவாங்க.”
இதெல்லாம் புதிதாக இருந்தது அவளுக்கு. ஆனால் இதற்காகவா இங்கே வந்தான் இவன்?
மனதின் குரலை வார்த்தையில் கேட்டதும் அட்சரன் மறுப்பாய்த் தலையசைத்தான்.
“நீ இங்க மேனேஜரா இருக்கியா டேமேஜரா இருக்கியானு செக் பண்ண வந்தேன். நாட் பேட். ரொம்ப பொறுமையாதான் ஹேண்டில் பண்ணுற. பட் எல்லா இடத்துலயும் பொறுமையா அமைதியா இருக்கணும்னு அவசியமில்ல”
“ம்ம்”
“ஓகே! நான் கிளம்புறேன்” என்று உடனடியாக விடைபெறவும் செய்தான்.
காரிலேறியவனுக்கு விநியோகஸ்தர் வேதவதியிடம் பேசியதையே அசை போட்டபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
“ம்மா! சூப்பர் மார்க்கெட்ல ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் வேதாகிட்ட ரொம்ப ரஃபா பேசுனாரு. அப்பாகிட்ட சொல்லிடுங்க. அந்த ஆளுகிட்ட இனிமே டீலிங் எதுவும் வச்சுக்க வேண்டாம்னு”
எடுத்ததும் வியாபாரத்தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு மகன் சொன்னதும் ராஜேஸ்வரி அங்கலாய்த்தார்.
“அப்பிடியெல்லாம் சட்டுனு எந்த முடிவையும் எடுத்துட முடியாது அச்சு. எப்பிடி பிசினஸ் பண்ணுறவங்களுக்குள்ள காண்டாக்ட் இருக்குதோ அதே மாதிரி டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு இடையிலயும் காண்டாக்ட் இருக்கும். ஒருத்தரை விலக்கிட்டு இன்னொருத்தர்கிட்ட அவ்ளோ ஈசியா போக முடியாது. போனாலும் அவங்க நம்மகூட டீல் வச்சுக்க யோசிப்பாங்க”
“ம்மா! அந்தாளு வேதாவ ஸ்டாஃப், அரைகுறைனு பேசுறான். அவன்கூடல்லாம் என்ன பிசினஸ் டீலிங் வேண்டியது கிடக்கு?”
சீற்றமாய் மகன் பேசுவது ராஜேஸ்வரிக்கே ஆச்சரியமாய்!
“நீயா வேதாவுக்காகப் பேசுற அச்சு?”
“நான்தான். அவ எப்ப அவளுக்காகப் பேசிருக்கா? அவளுக்கு மவுத் பீஸா ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொருத்தர் இருக்கோமே”
இலகுவாகச் சொல்லிவிட்டுத் தோள்களைக் குலுக்கியவன் வேதவதியை நடத்தும் முறையில் தன்னிடம் வந்த மாற்றத்தை உணரவில்லை. ஆனால் ராஜேஸ்வரிக்கு மைந்தனின் இந்தச் சின்ன மாற்றமே பெரும் மகிழ்ச்சியாய்த் தோன்றியது.
இரவில் வந்ததும் கணவரிடம் கூறிவிட்டார் அனைத்தையும். கட்டாயம் விநியோகஸ்தரிடம் பேசுவதாகச் சொன்னார் சதானந்தன்.
அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் இரவுணவுக்குப் பிறகு ஆசுவாசமாக அமர்ந்து சதானந்தன் – ராஜேஸ்வரியோடு பேசிக்கொண்டிருந்தாள் வேதவதி.
“நீ அச்சுவ சிடுமூஞ்சினு சொல்லுற. உன் மாமா மட்டும் என்னவாம்? இப்பதான் ராஜி ராஜினு வர்றார். முன்னாடி எல்லாம் கல்லுதான்”
“இது பொய். நான் நம்பமாட்டேன்”
வேதவதி மறுக்க “பாத்துக்க! மருமக என் பக்கம்” என்று சத்தமாய் நகைத்தார் சதானந்தன்.
இவர்களின் பேச்சுச்சத்தம் கேட்டு மாடியிலிருந்து எட்டிப் பார்த்தான் அட்சரன். தனது பெற்றோரிடம் இயல்பாய் வேதவதி பொருந்திய விதம் அவனுக்கே ஆச்சரியமாய்!
முன்பென்றால் அவனும் தவறாமல் அமர்ந்திருப்பான். இடையில் வந்த பிரச்சனையால் இந்தச் சனிக்கிழமை இரவு நேரத்து உரையாடலைத் தவிர்த்திருந்தான். இப்போது போய் பேச ஆசைதான். ஆனால் இன்னும் இரண்டு நாட்களில் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி.
அதோடு பிருந்தாவோடு புத்தகம் விசயமாக முக்கியமாகப் பேசவேண்டியது இருந்தது. அதனால் போக முடியாத நிலை அவனுக்கு.
இரவில் இதெல்லாம் முடித்துவிட்டு உறங்கவே வெகு நேரமாகிவிட்டது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

