தேன்மழைச் சாரலில் தேகமும் நனைய,
கால்நடைப் பாதையில் காலங்கள் கரைய,
பச்சை மலையை பிரிந்து செல்கையில்,
அச்சம் கொள்ளுதடி நங்கையின் மனமே!
-அட்சரனின் வேதா
“வேதாவை என் மருமகளா என்னோட அழைச்சிட்டுப் போறேன். அவ இனிமே எங்க பொறுப்பு. எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்குறேன். இது என் மகன் மேல சத்தியம் அண்ணா.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
உணர்ச்சிவசப்பட்டக் குரலில் கஜேந்திரனுக்கு வாக்கு கொடுத்தார் ராஜேஸ்வரி.
அருள்மொழி – வானதியின் மறுவீட்டுச் சடங்குக்காக வந்திருந்த விருந்தினர்கள், ஊர் மக்கள் முன்னிலையில் வேதவதியின் தந்தையிடம் சத்தியம் செய்திருந்தார் அவர்.

“சத்தியமெல்லாம் எதுக்கும்மா? நீங்க வேதாவை நல்லா பாத்துப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றார்கள் கனகவல்லியும் கஜேந்திரனும்.
வேதவதி தனது உடைமைகளை எடுத்து வைத்திருந்தாள் ஒரு பெரிய பேக் ஒன்றில். முகவாட்டம் கொஞ்சமும் குறையவில்லை. ஆனால் குழப்பமில்லை அவளது முகத்தில். இதுதான் அடுத்த அடி என்று தெளிவாகத் தெரிந்த பிறகு அவளது மனதில் குழப்பத்துக்கு இடமில்லை. ஆனால் சின்னதாய் ஒரு தயக்கம். அதுவும் அட்சரனை எண்ணியே!
அருள்மொழியோடு அமர்ந்திருந்த வானதி தோழியிடம் வந்தாள். அவளது இரு கரங்களையும் பற்றிக்கொண்டவள் “சாரி வேதா” என்க,
“வானு! இன்னைக்கு நீ எந்த மனக்கிலேசமும் இல்லாம சந்தோசமா இருக்கணும். எனக்கு நடந்ததை நான் அக்சப்ட் பண்ணிட்டேன். நீ ரொம்ப யோசிக்காத” என்றாள் அவளது குரலில் இருந்த குற்றவுணர்ச்சியைக் கண்டுகொண்டவளாய்.
இந்த இக்கட்டான நேரத்திலும் தனக்கு ஆறுதலாய்ப் பேசுபவளைக் கண்ணீரோடு பார்த்தாள் வானதி.
“நான் இப்படியே விட்டுடமாட்டேன் வேதா. என்னால ஆரம்பிச்ச இந்தக் குழப்பம் உன் லைஃப்ல பெரிய தடுமாற்றத்தைக் கொண்டு வந்திருக்கு. இந்தத் தடுமாற்றத்தைச் சரி பண்ண என்னால முடிஞ்சதை நான் செய்வேன்டி. பிராமிஸ்.”
சொன்னவள் அவளை இறுக்கமாக அணைத்துவிட்டு, “அச்சு… ப்ச்! அவன் ரொம்ப கோவக்காரன். ஆனா மோசமானவன் இல்லை. அவனுக்குச் சூழ்நிலை புரியலை. கத்திட்டுப் போயிட்டான். ஆனா ஒரு நாள் அவனுக்கு நிதர்சனம் புரியும்” என்றவள்,
“நல்லபடியா போயிட்டு வா. நானும் இன்னும் கொஞ்ச நாள்ல சென்னை வந்துடுவேன்” என முடிந்தவரைக்கும் தோழனைப் பற்றி நல்லவிதமாய்ச் சொல்லி வழியனுப்பி வைத்தாள்.
காரிலேயே சென்னையிலிருந்து வந்தது போல போவதும் காரிலேயே போய்விடலாமென்ற சதானந்தனின் கூற்றை ஜெயசந்திரன் மறுத்தார்.
“டிரைவரை அழைச்சிட்டுப் போங்க ஆனந்த்.”
“நானும் ராஜியும் ஷேர் பண்ணிப்போம் டிரைவிங்கை.”
வேதவதிக்கு ராஜேஸ்வரி கார் ஓட்டுவாரா என்ற ஆச்சரியம். கண்கள் அதைப் பிரதிபலிக்கவும் ராஜேஸ்வரி அவளது கரத்தைக் கனிவாகப் பற்றினார்.
“சென்னைக்குப் போனதும் உனக்குக் கார் டிரைவிங் கத்துத் தர்றேன். லைசென்சும் வாங்கிடலாம். சரியா?” என்றவர், “அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டு வா! பேக்கைக் குடு” என்று வாங்கிக் காரில் வைத்தார்.
வேதவதி தனது பெற்றோரிடமும், யாழினியிடமும் விடைபெற வந்தாள். அவளது அண்டை வீட்டுப் பெண்மணியான சித்ரா வேதவதியிடம் தனது உறவுக்காரப் பெண்மணியின் எண்ணைக் கொடுத்தார்.
“எதுவும் அவசரம்னா இவங்களை உதவிக்கு அழைச்சிக்க. முன்ன பின்ன தெரியாத ஊருக்குப் போறோம்னு பதறக்கூடாது. உன் மாமனார் மாமியார் கூட குணமானவங்களா தெரியுறாங்க. எதுனாலும் போன் பண்ணு.”
“சரிக்கா.”
“வா! ரெண்டு ஆச்சி கிட்டவும் ஆசிர்வாதம் வாங்கிக்க.”
கனகவல்லி சொன்னதும் யாழினியின் ஆச்சியான மீனாட்சி, அவரது தோழமையான வேங்கடம்மாளிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள் வேதவதி.
“உன் வாழ்க்கை சிறக்கணும். பத்திரமா போயிட்டு வா தங்கம்.”
மோவாயைக் கிள்ளி முத்தமிட்டு ஆசிர்வதித்தார்கள் மூதாட்டிகள்.
கஜேந்திரன் மகளிடம் வந்தவர், “எதுவா இருந்தாலும் உனக்குத் துணையா அப்பா இருக்குறேன். நீ என்னைக்கும் எங்களுக்குச் சுமையில்லை. போயிட்டு வாடா” என்று சிகையைக் கோதி நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார் மகளை.
காரிலேறியதும் தோழியர்களுக்கும், பெற்றோருக்கும் விடைபெறுவது போல கையசைத்தாள் வேதவதி. கார் வேகமெடுத்ததும் மனதில் ஏதோ பாரம் ஏறி அமர்வது போல இருந்தது.

ஜெயவிலாசமும் ஊர் மக்களின் முகங்களும் தூரமாகத் தூரமாக அந்தப் பாரத்தின் சுமை அதீதமாய்! ஒரு காலத்தில் ரசித்த தேன்மலையின் குளிர்க்காற்றும், மஞ்சுக்கூட்டங்களும், பசிய மலைச்சிகரங்களும் ஒன்று சேர்ந்து வழியனுப்புவதாய் ஒரு பிரமை!
“வேதா! தண்ணி குடிக்குறியாம்மா?”
பிறந்து வளர்ந்த ஊரை விட்டுச் செல்லும் சோகத்தில் அவளையறியாது கண்ணீர் விட்டிருந்தாள் வேதவதி. அதைக் கவனித்து அவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினார் ராஜேஸ்வரி. அவளும் வாங்கிக் குடித்தாள். பாட்டிலைத் திருப்பிக் கொடுக்கும்போது அவளது மனதை அழுத்திய சந்தேகத்தைக் கேட்டுவிட்டாள்.
“எந்த நம்பிக்கைல நான் உங்க மகனுக்குப் பொருத்தமா இருப்பேன்னு நினைச்சு அழைச்சிட்டுப் போறீங்க? உங்களுக்கு என் மேல கோவமே இல்லையா?”
அப்பாவித்தனமானக் கேள்வியாய்ப் பட்டது ராஜேஸ்வரிக்கு.
“வாய் வார்த்தை மூலமா ஒருத்தரைப் புரிஞ்சுக்கிறதை விட அவங்களோட உடல்மொழில புரிஞ்சுக்கிறதுதான் துல்லியமான புரிதல் வேதா. அந்தப் பிரச்சனை நடந்த சமயத்துல யார் உன்னைக் கவனிச்சாங்களோ இல்லையோ நான் கவனிச்சேன். நீ உலகம் தெரியாத அப்பாவி. உன் இடத்துல யாழினியோ வானதியோ இருந்திருந்தா நிலைமையே வேற. நீ அவங்களை விட இளையவ தானே? அம்மா அப்பாவோட அரவணைப்புக்குள்ள, அந்தக் குட்டிக்கிராமத்துக்குள்ள வாழ்ந்த உனக்கு இன்னும் இந்த உலகத்தோட இன்னொரு பக்கம் தெரியல. ஆரம்பிச்சு வச்சது நான் பெத்த மகன். இதுல எங்க இருந்து உன் மேல நான் கோவப்படுறது? பெத்த மகனா இருந்தாலும் நியாயம் தர்மம் என்னவோ அதைத்தான் ஃபாலோ பண்ண முடியும். இன்னொன்னும் சொல்லட்டுமா?”
“என்ன ஆன்ட்டி?”
“ஆன்ட்டியா? அதெல்லாம் உன் தோழிப் பொண்ணுங்களுக்கு. நீ சொன்னா உதை விழும்” போலியாய் மிரட்டினார் மருமகளை.
வேதவதி அவர் சொன்ன விதத்தில் சிரித்தாள்.
“சரி! சொல்லுங்க அத்தை.”

“குட் கேர்ள்!” – அவளது கன்னத்தில் தட்டிச் சிலாகித்தார் ராஜேஸ்வரி.
கார் ஓட்டிக்கொண்டிருந்த சதானந்தனும் உடன் சேர்ந்து சிரித்தார்.
“வேற என்னம்மா உங்க அத்தை யோசிச்சிருப்பா? இப்படி அதிரடியா நடக்கலைனா அவ பெத்த மகனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே நடந்திருக்காதுனு யோசிச்சு நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பா” என்று சொல்லி மனைவியைக் கிண்டல் செய்தார் அவர்.
“ஏன் அங்கிள் அப்படி?” சின்னதொரு ஆர்வம் அட்சரனைப் பற்றி அறிந்துகொள்வதில்.
“அவ மட்டும் அத்தை. நான் மட்டும் அங்கிளா?”
“மாமானு கூப்பிடுறேன் இனிமே.”
ராஜேஸ்வரி அவளது முகத்தை வருடி நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்தார்.
“சமத்துப்பொண்ணு! அச்சு இருக்கானே, அவன் கல்யாணப் பேச்சு எடுத்தாலே தட்டிக் கழிச்சிட்டே இருப்பான். இருபத்தெட்டுல கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டதுக்கே குழந்தை திருமணம் பண்ணச் சொல்லுறீங்களானு கேட்பான். இந்தக் கல்யாணம் நடந்த விதத்துல நான் கொஞ்சம் நிம்மதியா உணரக் காரணம் அவனோட இந்த மறுப்புதான்.”
இப்படி மறுக்கிறவன் தன்னை எப்படி அணுகுவான் என்ற கேள்வி வேதவதிக்குள் பூதாகரமாய்!
அதே நேரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தங்களின் வீட்டில் இன்னுமே கோபம் அடங்காமல் நடமாடிக்கொண்டிருந்தான் அட்சரன். கிட்டத்தட்ட பதினொன்றரை மணி நேரம் காரை நிறுத்தாமல் உறங்காமல் ஓட்டி வந்திருக்கிறான். மனதில் எரியும் கோபத்தீ உடலின் அலுப்பை உணர விடவில்லை. குறுக்கும் நெடுக்குமாய் அமைதியின்றி அலைந்தவனுக்கு அருள்மொழியிடமிருந்து அழைப்பு வந்தது மொபைலுக்கு.
“சொல்லுடா.”
அழைப்பை ஏற்றபோதே கோப அனல் அட்சரனின் குரலில்.
“சென்னை ரீச் ஆகிட்டியா அச்சு?”
“ம்ம்.”
“நாளைக்கு மார்னிங் அல்லது ஆஃப்டர் நூன் அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்துடுவாங்க. அவங்க வேதாவை அழைச்சிட்டு வர்றாங்க.”
அந்த நிமிடம் அட்சரனின் இரத்தம் நெருப்புக்கடலாய்க் கொதிக்க ஆரம்பித்தது.
“வாட்? எவ்ளோ தைரியம் இருந்தா அவளை இங்க அழைச்சிட்டு வருவாங்க? வரட்டும்டா. அவ இந்த வீட்டுல ரெண்டு நிமிஷம் கூட இருக்கமாட்டா. திஸ் இஸ் மை சேலஞ்ச்.”

“அச்சு! கொஞ்சம் அமைதியாகுடா. நிதானமா யோசி.”
“நிதானமா? அதை வச்சு என்ன செய்யுறது? என்னோட சில மணி நேர அமைதியைச் சாதகமா மாத்தி என் தலையில ஒருத்தியைக் கட்டிட்டாங்க. இன்னும் நான் நிதானமா இருக்கணுமா?”
“அதுக்காக அந்தப் பொண்ணை அப்படியே விட்டுடணுமா? என்னடா உளறுற?”
“ப்ச்! சரி! தேன்மலை, வேதா, எல்லாத்தையும் மறந்துடு. கொஞ்ச நேரம் தூங்கு. எழுந்திருச்சு ரெஃப்ரெஷ் ஆகு. உன் வேலைய கவனி.”
“அவ்ளோ ஈசியா அவளை மறந்துட முடியுமா? நெவர். தோஸ் பீப்பிள் ஆர் பிளேயிங் வித் மை மேல் ஈகோ (Male Ego). எந்தப் பதிலடியும் கொடுக்காம விட்டா நானெல்லாம் என்ன ஆம்பளை?”
“டேய்! மடத்தனமா பேசாத. எதிர்ல இருந்தேன்னா பளார்னு ஒன்னு விடுவேன் உன் கன்னத்துல. வானதியைக் காப்பாத்தணும்னா வேதாவைப் பலி கொடுப்பியா நீ? ரொம்ப செல்ஃபிஷான மூவ் நீ செஞ்சது. அதை நீ எப்படி மறக்கலாம்?”
“நான் அங்க நடந்ததா சொன்னது ஒன்னும் ஒழுக்கக்கேடான விஷயமில்லை. அவளோட ஏஜென்ட்டா நான் அங்க அவ கூடப் பேசினாலோ, ஏதோ ஒரு காரணத்துக்காக அவ அணைச்சதா சொன்னாலோ என்னடா பிரச்சனை? கட்டிப்பிடிச்சதுக்கே கல்யாணம் பண்ணி வைக்கணும்னு குதிக்கிறாங்க? இவங்கெல்லாம் இன்னும் எண்பதுகள்ல தேங்கி நிக்கிறாங்க.”
அவன் படபடவெனப் பொரிய, மறுமுனையில் அருள்மொழிக்கு ஆயாசமாக இருந்தது.
“பிரச்சனை நீ கட்டிப்பிடிச்சதா சொன்னியே, அது இல்லடா. அதுக்கு முன்னாடியே நீ வேதா கூட குளோஸா பழகுனதை அந்த லேடி பார்த்திருக்கு.”
“குளோஸா பழகுனேனா? அப்படிச் சொல்லாத அருள், அப்புறம் நான் வெறியாகிடுவேன் பார்த்துக்க. என்னடா குளோஸா பழகுனேன்? ஆக்சுவலி கரண்ட் ஷாக் அடிச்சு பல்ஸ் குறைஞ்சு அந்த ரூம்ல கிடந்தவளைச் செத்துத் தொலைனு அப்படியே விட்டுட்டு வந்திருக்கணும். ஐயோ பாவமேனு சி.பி.ஆர் கொடுத்து அந்த நேரத்து டென்ஷனை அனுபவிச்சதுக்கு நல்ல பரிசு கிடைச்சதுடா எனக்கு.”
“உங்களோட பழக்கமோ உன்னோட நோக்கமோ தப்புனு நான் சொன்னேனா? எங்க எல்லாருக்கும் உன்னைப் பத்தியும் வேதாவ பத்தியும் தெரியும்டா. ஆனா அங்க பேசுன லேடிக்கு, அங்க இருந்த கெஸ்டுக்கு, பிரஸ் பீப்பிளுக்கு நீங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் யங்ஸ்டர்ஸ்தான். அவங்க பார்வைக்கு உங்க பழக்கம் நெருக்கமா தான் தெரியும். நீ சென்னை மாதிரி தேன்மலையை எடைபோடாத அச்சு. மெட்ரோபொலிட்டனுக்கும், ரிமோட் வில்லேஜுக்கும் வித்தியாசம் இருக்குடா.”
அட்சரன் கொஞ்சம் அமைதியானான். ஆனால் அவனுக்கு இழைக்கப்பட்டது அநீதி என்ற முடிவில் அவனுக்கு மாற்றமில்லை. பெருந்தன்மையாக யோசிக்கத் தெரியாத குறுகிய மனம் படைத்த ஆட்களால் தனது வாழ்க்கையில் சிக்கல் வந்துவிட்டதாகவே அவன் மனம் இப்போதும் கருதியது.
“நான் சொன்னபடி தூங்கு. ரெஃப்ரெஷ் ஆகு. அப்புறமா உன் ரொட்டீன் வேலைய கவனி. நாளைக்கு அவங்க வரட்டும், அப்புறமா பேசிக்க.”
அட்சரனின் பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான் அருள்மொழி.
என்னதான் ஆயிரம் விளக்கங்களோடு சூழ்நிலையின் தீவிரம் விளக்கப்பட்டாலும் அட்சரனுக்கு அதை ஏற்றுக்கொள்ளும் எண்ணமிருந்தால் மட்டும்தானே அந்த விளக்கங்களை அவன் ஆராய்ந்து பார்ப்பான்! அவனுக்குத்தான் ஏற்றுக்கொள்ளும் எண்ணமே இல்லையே!
நடந்த அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் பரபரப்பு மட்டுமே அவனுக்கு இருந்தது. பெரிய தாம்புக்கயிற்றால் யாரோ அவனை வேதவதியோடு பிணைத்துத் தண்டனை அளித்தது போல வேடிக்கையாய் ஒரு கற்பனையும் வந்து தொலைத்தது. அந்தப் பிணைப்பு தனது விருப்பத்துக்கு எதிரே அளிக்கப்பட்ட தண்டனையாகவே அவன் கருதினான். அதை அறுத்தெறியவே அவனது உடல், பொருள், ஆவி அனைத்தும் துடித்தது.
வற்புறுத்தலாலும் வாய் சாமர்த்தியத்தாலும் வலுவான அடித்தளமின்றித் துரிதமாக உருவான இந்த உறவில் அட்சரனின் மனம் இணையவும் இசையவும் மறுத்தது. ஏதோ ஒரு விதத்தில் முந்தைய இரவில் தனது நடத்தையைக் கேலிக்கூத்தாக்கி அதை வைத்தே சம்மதமற்ற உறவொன்றில் தன்னைப் பிணைத்து வைத்த அத்தனை பேர் மீதும் அவனுக்குப் பெருங்கோபம்.
அச்சம்பவத்தை அநீதியாக மட்டுமன்றி அவமானமாகவும் பாவித்தான் அட்சரன். அவமானத்தைத் துடைத்தெறிய எந்த அணுகுமுறையைக் கையாளுவது என்ற தெளிவு அவனுக்கு இல்லை. அவனது இப்போதைய நோக்கமெல்லாம் வேதவதி தனது வீட்டில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்பது மட்டுமே. ஒருவேளை அவள் வந்து அவன் கண் முன்னே நடமாடினாள் என்றால் அங்கே மீண்டுமொரு முறை அவனது நடத்தை மட்டுமன்றி சுயமரியாதையும் கேலிக்கூத்தாகும்.
என்ன செய்து வேதவதியின் வருகையைத் தடுக்கலாம் என்ற யோசனையில் இறங்கியவன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். எந்த யோசனையும் பிடிபடவில்லை. அருள்மொழி சொன்னது போல சிறிது நேரம் ஓய்வெடுத்தால் மூளையின் சூடு குறையும் எனத் தோன்றியது.
மளமளவெனக் குளித்து இலகு உடைக்கு மாறியவன் படுக்கையில் சரியப்போன சமயத்தில் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்ததற்கான நோட்டிபிகேஷன் சத்தம். எடுத்துப் பார்த்தவன் செய்தியை அனுப்பியவள் பிருந்தா நாயர் என்றதும் தாமதிக்காமல் அதைப் படித்தான்.
“அட்சரன் ஃப்ரெண்டோட கல்யாணம் முடிஞ்சுதா? ரொம்ப பிசியா? நான் கால் பண்ணுனேன். அட்சரன் அட்டெண்ட் பண்ணலையே” என்று அனுப்பியிருந்தாள் அவள்.

அட்சரன் திருமண பிஸியில் அவனது மொபைலை அறையில் வைத்துவிட்டு உலாவிய சமயத்தில் அழைத்திருந்தாள் பிருந்தா. அவனும் உடனே அழைத்துப் பேசாவிட்டாலும் இலக்கியாவிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தான். அவள் பேசியிருப்பாள் என்று நினைத்தான்.
“இலக்கியா கால் பண்ணலையா?”
செய்தியைத் தட்டச்சு செய்து அனுப்பினான். அவள் படித்ததற்கான அறிகுறியாய் இரு நீலநிற டிக்மார்க்குகள்!
“இலக்கியா பேசுனாங்க. ஆனா நான் பேசணும்னு நினைச்சது உங்களோட. நீங்க எப்ப ஃப்ரீனு சொல்லுங்க. மீட் பண்ணலாம். நான் சென்னைல இருக்கேன்.”
பதில் வந்ததும் வாசித்தவன், “நாளைக்கு ஹெல்வட்டாஸ்ல மீட் பண்ணலாம்” என்று பதிலனுப்ப, ‘தம்ஸ் அப்’ எமோஜி பதிலாய் வந்தது பிருந்தாவிடமிருந்து.
மொபைலை டீபாய் மீது வைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தவனுக்குப் பிருந்தாவை வைத்தே அவன் காய் நகரப்போகிறான் என்ற ஆரூடம் அப்போது தெரியாது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

