அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டின் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போது அது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும் சேதங்கள் மிகவும் மோசமாக இருக்கும். அதை போல தான் கோபமும் நம் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வரை யாருக்கும் எந்த சேதமும் உண்டாகாது. எப்போது அது கட்டுப்பாட்டை உடைத்து கரை தாண்டுகிறதோ அப்போது நம்மோடு சேர்ந்து நமக்கு நெருங்கியவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
– அன்பனின் சிந்தனை சிதறல்கள்
சி.சி.எஸ் (சென் கன்சல்டன்சி சர்வீஸ்)…
இந்தியாவிலிருக்கும் சேவை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் தலையாய நிறுவனம். மென்பொருள் வடிவமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் வணிகம் தொடர்பான அவுட்சோர்சிங் செயல்பாடுகள் போன்றவற்றில் கொடி கட்டிப் பறக்கும் இந்நிறுவனத்தில் பணிக்குச் சேர்வது அச்சமயத்தில் ஒவ்வொரு கணினி பொறியியல் படித்த இளைஞனுக்கும் கனவாக இருந்தது.
அப்படி அந்நிறுவனத்தில் SAP ABAP டெவலப்பராக சேர்ந்தவன் தான் அன்பரசன். ABAP என்பது SAP என்ற ஜெர்மானிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உயர்ரக நிரலாக்க மொழியாகும் (High level Programming language).
முதலில் டெவலப்பராக ஆரம்பித்த அவனது பணியில் அனுபவம் கூடி இப்போது சீனியர் SAP கன்சல்டண்ட் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வணிகத்திற்கு பயன்படும் செயலிகளை உருவாக்குவதே அவர்களின் முக்கியவேலை.
டெவலப்பர்கள் கோடிங் மற்றும் யூனிட் டெஸ்டை முடித்ததும் அவற்றை ரிவியூ செய்து Functional Consultant உடன் இணைந்து டெஸ்டிங்கை முடித்து அப்ரூவல் அளிப்பதே அன்பரசனின் பணி.
வாங்குகிற சம்பளத்துக்கு ஏற்றபடி பணிச்சுமையும் அதிகம். அவனது தந்தை அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊரான ஆலங்குளத்தில் மனோ ஃப்ரூட் ஸ்டால் என்ற பழக்கடையை நடத்திவந்தார். ஊரில் நிலநீச்சுகள் கொண்ட குடும்பம் என்றாலும் சும்மா இருக்க பிடிக்காமல் அதை நடத்தினார் மார்த்தாண்டன்.
நாம் பசுமை விகடனில் அடிக்கடி படிப்போமே ‘ஐ.டி கம்பெனி வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் கலக்கும் இளைஞர்’, ‘ஐ.டி கம்பெனி வேலையை விட்டுவிட்டு கால்நடை வளர்ப்பில் கோடிக்கணக்கில் இலாபமீட்டும் பெண்’ – இந்த மாதிரி நபர்களில் ஒருவராக வரவேண்டுமென்ற ஆசை அன்பரசனைத் தீவிரமாக ஆட்கொண்டிருந்த சமயம் அது.
ஒவ்வொரு விடுமுறைக்கும் ஊருக்குப் போகும்போதும் அவர்களின் வயலைப் பார்வையிடப் போகிறவனுக்கு விவசாயத்தில் நாட்டமில்லை. அதற்கு மாறாக மார்த்தாண்டன் நடத்தும் பழக்கடையின் மீது அன்பரசனின் பார்வை படிந்தது.
கடந்த இரண்டாண்டுகளாக அதை விரிவுப்படுத்தி நவீனரக தொழிலாக செய்யப்போகிறேன் என்று தந்தையிடம் நச்சரித்துக்கொண்டே தான் இருக்கிறான். ஆனால் மனோகரி அவனது நச்சரிப்பை ஒரே வாதத்தில் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்.
“சொந்த தொழில் செய்யுறவனுக்கு டக்குனு பொண்ணு கிடைக்காது அரசு… மாசமானா டாண்ணு சம்பளம் வர்ற பசங்களுக்குத் தான் டக்கு டக்குனு பொண்ணு அமையுது… இந்த வருசம் மட்டும் பொறுத்துக்கோய்யா”
இப்படி சொல்லி சொல்லியே இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இம்முறை அன்பரசன் உறுதியாக இருந்து மனோ ஃப்ரூட் ஸ்டாலை ஜூஸ் பாராக மாற்றும் திட்டத்துக்குச் செயல் வடிவம் கொடுத்து தந்தையிடம் கொடுத்துவிட்டான்.
“ப்ளீஸ்பா… எனக்கு ஆசையா இருக்கு… என்னை நம்பி உங்க பழக்கடைய குடுங்க… உங்க நம்பிக்கைய காப்பாத்துவேன்” என்று பேசிப்பேசி மார்த்தாண்டன் மனதைக் கரைத்து ஒப்புதலும் வாங்கிவிட்டான்.
இம்முறையும் தொழில் செய்பவனுக்குப் பெண் கிடைக்காது என்று சொல்ல வாயெடுத்த அன்னையிடம் “இன்னும் மூனு மாசம் எனக்கு நோட்டீஸ் பீரியட்… அதுக்குள்ள பொண்ணு பாருங்க… அந்தப் பொண்ணு கிட்ட இப்ப நான் ஐ.டில ஒர்க் பண்ணுறேன்… பட் என்னோட ட்ரீம் பிசினஸ் பண்ணுறதுனு சொல்லி அதுக்கு அந்தப் பொண்ணு ஒத்துக்கிட்டா மட்டும் தான் கல்யாணம் நடக்கும்” என்று கறாராகச் சொல்லிவிட்டான்.
வாழ்க்கைத்துணை பற்றி அவனுக்கென எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவனுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதை எதிர்பார்ப்பு என்று சொல்வதை விட ‘ஃபேண்டசி’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
ஒரு பெண்ணின் முதல் காதலாகவும், ஒரு ஆணின் கடைசி காதலாகவும் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்ற சொலவடை ஒன்று உண்டு.
இருபாலரின் காதலையும் பொதுமைப்படுத்திய விதமே நடப்புக்குச் சற்றும் பொருந்தாதுதான். ஆனால் அன்பரசன் அதில் முதல் பாதியைத் தன் இணையிடம் எதிர்பார்ப்பாக வைத்திருந்தான்.
‘எனக்கு வரப் போகிற மனைவிக்கு முதல் காதலாக நான் இருக்கவேண்டும்’ என்பதே அவனது எதிர்பார்ப்பு.
ஏற்கெனவெ காதல்வயப்பட்ட பெண்ணால் தன்னை முழு மனதாக நேசிக்க முடியாது என்ற எண்ணம் அவனுக்குள் பதின் வயதிலேயே வேரூன்றி போயிருந்தது.
அதை விட முக்கியமான ஒரு கொள்கை வேறு அவனுக்கு இருந்தது. மார்த்தாண்டனும் மனோகரியும் நிதர்சனத்துக்கு ஒத்துவராதென தலை தலையாக அடித்துக்கொண்ட போதிலும் அன்பரசன் அக்கொள்கையையும் மாற்றிக்கொள்ளவில்லை.
அவன் நேசிப்பவர்களிடத்தில் பொய் சொல்லமாட்டான். அவர்களும் தன்னிடம் சின்னதொரு பொய் கூட சொல்லக்கூடாது என்பது அவனது எதிர்பார்ப்பு. அதைத் தாண்டி பொய் சொன்ன சில நட்புகளை அவன் தன்னை விட்டு விலகிய சம்பவங்களும் நடந்தேறியிருந்தன.
‘பொய்மையும் வாய்மையிடத்து’ என்று வள்ளுவரே எழுதி வைத்திருந்தாலும் அவனுக்கு என்னவோ பொய் சொல்பவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை.
இதுவரை பெண் பார்க்க சென்ற இடங்களில் எல்லாம் இந்த இரண்டு எதிர்பார்ப்புகள் நிறைவேறாததன் காரணமாகவே திருமணப்பேச்சுவார்த்தை தடைபட்டது.
அதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படவில்லை.
“அந்தப் பொண்ணுக்கு ஆல்ரெடி லவ் ஃபெயிலியர் ஆகிருக்கு… ஆனா பொண்ணு பாக்க போனப்ப அவ கிட்ட யாரையும் லவ் பண்ணிருக்கிங்களானு கேட்டதுக்கு இல்லனு சொன்னா… அட்லீஸ்ட் அவ உண்மைய சொல்லிருந்தா கூட அந்த நேர்மையான குணத்துக்காக நான் கல்யாணம் பண்ணிருப்பேன்” என்று அமர்த்தலாக உரைத்தவனை வளர்ந்துவிட்டான் என்ற ஒரே காரணத்துக்காக அடிக்காமல் விட்டார் மனோகரி.
இப்படி நாட்களைக் கழித்தவன் அவனது நோட்டீஸ் பீரியடின் கடைசி காலத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்துக்கொண்டு இருந்த போது ஒரு நாள் மனோகரி வாட்சப்பில் ஒரு பெண் விவரத்தை அனுப்பிவைத்தார்.
கூடவே அவனது எண்ணுக்கு அழைப்பும் விடுத்தார். பிசியாக கோட் ரிவியூவில் ஆழ்ந்திருந்தவனுக்கு அன்னையிடமிருந்து மீண்டும் மீண்டும் வந்த அழைப்புகள் எரிச்சல் மூட்டின.
மொபைலை சுவிட்ச் ஆப் செய்தவன் டெஸ்டிங் எல்லாம் முடிந்த பிற்பாடு பேன்ட்ரிக்குச் சென்று ஒரு கப் காபியோடு மொபைலுக்கு உயிர் கொடுத்தான்.
ஒரு மிடறு காபி உள்ளே போனதும் பணி கொடுத்த அழுத்தம் காபியின் இதமான சூட்டில் பனியாய் கரைந்து போவதைப் போல உணர்ந்தான்.

அடுத்த நொடி அன்னையின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.
மனோகரி அழைப்பை ஏற்றதும் “எதுக்கும்மா கால் பண்ணுனிங்க?” என்றவன் அவர் வாட்சப்பில் பெண்ணின் புகைப்படம் மற்றும் ஏனைய விவரங்களை அனுப்பியிருப்பதாகச் சொல்லவும் அவசரமாக மறுப்புரை வாசிக்க ஆரம்பித்தான்.
“எனக்கு இந்த மாசத்துல ஆஃப் கிடையாதும்மா… வீக்கெண்ட் எல்லாம் ரொம்ப ஹெக்டிக்கா போவும்… ஊருக்கு வந்து பொண்ணு பாக்குறதுலாம் சரி வராது… நீங்க அவங்க கிட்ட வேண்டாம்னு சொல்லிருங்க”
“ஐயா அரசு கொஞ்சம் மூச்சு விட்டுக்க… பொண்ணைப் பாக்க நீ நம்ம ஊருக்கு வரவேண்டாம்… பொண்ணும் மெட்ராசுல தான் வேலை பாக்குது… ஊருல வந்து பொண்ணு பாக்குறதுல அதுக்கும் உடன்பாடு இல்லையாம்… அதான் அங்க வச்சே ஒரு கோவில்ல ரெண்டு பேரும் பாத்து பேசி பிடிச்சிருந்தா எங்க கிட்ட சொல்லுங்க… மத்ததை நாங்க பாத்துக்குறோம்”
அன்பரசனுக்கோ ஆச்சரியம்! அவர்கள் பக்கங்களில் இம்மாதிரி பொது இடங்களில் பெண் பார்க்கும் பழக்கம் எல்லாம் இப்போதும் வழக்கத்தில் இல்லை. பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் அவர்களின் வீட்டுக்குப் போவது தான் வழக்கம்.
“பரவால்லயே… நீங்க இதுவரைக்கும் பாத்த தலையாட்டி பொம்மைங்களுக்கு மத்தில ஒரே ஒரு அறிவாளி… எந்தக் கோவில்ல வச்சு அந்தம்மாவ நான் மீட் பண்ணனும்?” என்று கிண்டலாகக் கேட்டான் அவன்.
“பொண்ணோட விவரம் எல்லாம் உனக்கு வாட்சப்ல அனுப்பியாச்சு அரசு… நீங்களா பேசி ஒரு இடத்துல மீட் பண்ணுங்க”
அன்பரசனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
“நீங்களா பேசுறிங்க?”
“நானே தான் பேசறேன்யா… பொண்ணு வீட்டுல எங்க முன்னாடி நீ பேசுற பேச்சுக்கு இந்த ஜென்மத்துல எனக்கு மருமக வருவாளானு சந்தேகமா இருக்கு… அதனால இந்த தடவையும் அதே மாதிரி அனுபவத்துக்கு நானோ உன் அப்பாவோ தயாரா இல்ல… நீயும் பொண்ணும் நேர்ல பாத்து பேசிக்கோங்க… ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன் அரசு, அந்தப் பொண்ணு உனக்கு நல்ல வாழ்க்கைத்துணையா வருவாளானு மட்டும் யோசி… உப்புக்கு ஆவாத கொள்கைய எல்லாம் பேசி இந்தப் பொண்ணையும் ஓடவிட்டுடாதய்யா”
மனோகரி கிட்டத்தட்ட கெஞ்சிப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். அன்பரசனோ யார் என்ன சொன்னாலும் என் கொள்கையையும் நிபந்தனையையும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்ற பிடிவாதத்தோடு தனது மொபைல் வாட்சப்பைத் திறந்தான்.
அதில் அன்னை அனுப்பிய விவரங்களைப் பார்த்தான். இண்டர்நெட்டின் உபயத்தால் புகைப்படம் இன்னும் தரவிறக்கம் ஆகாமல் சண்டித்தனம் செய்தது.
அதற்குள் விவரத்தை வாசிப்போமென ஆரம்பித்தவன் அடுத்த சில நொடிகளில் புகைப்படம் தரவிறக்கம் ஆகி தெளிவாய்த் தெரிந்ததும் வாசிக்க மறந்தான்.
காட்டன் சுடிதார், பக்கவாட்டில் சரிந்த குதிரைவால், காதுகளில் தங்கத்தில் சிறிய நிலா வடிவ தோடுகள், புருவ மத்தியில் கடுகினும் சிறியதாக கருப்பு வண்ணத்தில் பொட்டு, அதற்கு கீழே திருநீறு கீற்று – இவையனைத்தையும் தன்னுள் அடக்கி புன்னகையைப் பூட்டி அமைதியின் திருவுருவாய் தெரிந்தாள் ஆரபி.
அன்பரசனால் அவள் புகைப்படத்தில் பதித்த கண்களை அகற்ற முடியவில்லை. உலகம் இதுவரை காணாத பேரழகி என்ற எண்ணத்தில் அவன் அந்தப் புகைப்படத்தைக் கண்டு மெய்மறக்கவில்லை.
அவன் பணியாற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அவளைக் காட்டிலும் பேரழகியாகக் காட்டிக்கொள்ளும் எத்தனையோ பெண்களிடம் சகஜமாகப் பேசிவிட்டு நகர்பவன் தானே!
ஆனால் ஆரபியிடம் இருக்கும் ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது. ஒப்பனையற்ற அழகு என்ற கற்கால பூமர்த்தனமான காரணத்தை எல்லாம் அவன் சொல்லமாட்டான். அவளது கண்களில் சிரிக்கும் காஜலும் ஒப்பனையில் சேர்த்தி என்பதை அறியுமளவுக்கு ஓரளவுக்கு பெண்களின் ‘மேக்கப்’ பற்றிய அறிவு அவனுக்கு உண்டு.
அவளது முகத்தில் ஒருவித அமைதி! ஒரு பூவைப் பார்த்தாலோ, அமைதியாய் உறங்கும் குழந்தையைப் பார்த்தாலோ நமக்கு வருமே ஒருவித ரசிப்புத்தன்மை அதை உருவாக்கக் கூடிய வதனம் அவளுடையது.
இவ்வளவு நேரம் யோசித்ததில் அவளது பெயர் மற்றும் விபரங்களைப் படிக்கவில்லையே என்று வேகமாக வாசித்தான்.
‘பெயர் : G. ஆரபி’
“வித்தியாசமான பேரா இருக்கே… முதல்ல இதுக்கு என்ன மீனிங்னு கூகுள்ல தேடணும்”
அவசரமாக கூகுளைத் தொந்தரவு செய்தவனுக்கு ‘ஆரபி என்பது ஒரு கர்நாடக இசை ராகம், சுத்தசாவேரிக்கு மிக நெருக்கமான ராகம், ஆரபி ராகத்தில் இயற்றப்பட்ட தமிழ்த்திரைப்படப்பாடல்கள்’ என எண்ணற்ற இணைப்புகளைக் கொட்டியது கூகுள்.
அதில் ஆரபி என்பது கர்நாடக இசை ராகம் என்பதை மட்டும் பிடித்துக்கொண்டவன் அவளது குடும்பத்தில் யாருக்கோ இசையில் ஆர்வம் இருக்கும்போல என்றெண்ணிக் கொண்டான்.
‘தந்தை பெயர் : K. ஞானசேகரன்
தாயார் பெயர் : G. சுடர்விழி
வயது : 24
படிப்பு : B.com CA (Computer Application)
வேலை : Customer relationship executive – Agarwal Share trading Ltd, சென்னை’
இவற்றை எல்லாம் கடகடவென வாசித்தவனுக்கு கண் என்னவோ ஆரபியின் மொபைல் எண் மீது தான் இருந்தது.
அதை தனது மொபைலில் ‘ஆரு’ என்ற பெயர்ச்சுருக்கத்தோடு சேமித்துகொண்டான் அன்பரசன். இன்னும் இருவரும் பார்த்துப் பேசி எதையும் முடிவு செய்யவில்லை. அதற்குள் பெயர்ச்சுருக்கம் வரை போய்விட்டாயா என்று மனசாட்சி கேள்வி செய்தது.
உடனே ‘ஆரு’ என்ற பெயர்ச்சுருக்கத்தைத் திருத்தி ‘ஆரபி’ என்றே தட்டச்சு செய்தான் அன்பரசன்.
“சப்போஸ் இவளுக்கு முன்னாள் காதல்னு ஒன்னு இருந்துச்சுனா எனக்குச் செட் ஆகமாட்டா” என்று வேறு சொல்லிக்கொண்டான், அரைமனதுடன் தான்.
“ஐயா அரசு உன் உப்புக்குப் பெறாத கொள்கைய பேசி இந்தப் பொண்ணையும் ஓடவிட்டுடாதய்யா” என்று அவனது மனக்கண்ணில் சொல்லிவிட்டுப் போனார் அவனது அன்னை மனோகரி.
அன்பரசன் முதலில் ஒரு தெளிவுக்கு வந்தான். இந்தப் பெண்ணிடம் முதல் காதல் இருக்கிறதா என்று எடுத்தவுடனே ஆரம்பிக்கவேண்டாம். முதலில் பேசிப்பார்த்துவிட்டு அவளது பேச்சில் நாடகத்தனம் இல்லை என்றால் இக்கேள்வியைக் கேட்போம்.
ஒருவேளை இன்னொரு காதல் இருந்தது, அது முடிந்து போனது என்று இவள் உண்மையாகப் பதிலளித்தால் இவளைத் தான் மணக்கவேண்டுமென எண்ணிக்கொண்டான்.
“அதென்ன இவளுக்கு மட்டும் விதிவிலக்கு?” என்று மனசாட்சி இடையில் புகுந்து குறுக்கு விசாரணை செய்தது.
“இப்ப நான் மூனாவது மனுசன்… என் கிட்ட அவன் உண்மைய சொல்லுறான்னா அவளுக்குப் பொய் சொல்லுற புத்தி இருக்காதுனு அர்த்தம்… மூனாவது மனுசன் கிட்டவே உண்மைய சொல்லுறவ புருசன் கிட்ட பொய் சொல்லி அவன் மனசை உடைக்கமாட்டா… அவ என் கிட்ட காட்டப்போற அன்புலயும் பொய் இருக்காது” என்று சாக்குப்போக்கு சொன்னான் அன்பரசன்.
அப்படி உண்மையைப் பேசுபவர்கள் யாருடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு உண்மையாகவே இருப்பார்கள். எனவே அவர்கள் நேசிப்பவர்களின் உணர்வுகளை வைத்து விளையாடி அவர்களை முட்டாளாக்க மாட்டார்கள்.
இப்படியெல்லாம் தனது கொள்கைகளைத் தளர்த்திக்கொண்டு மிகுந்த எதிர்பார்ப்போடு ஆரபியின் மொபைல் எண்ணுக்கு வாட்சப் தகவல் ஒன்றை அனுப்பினான் அன்பரசன்.
“ஹாய்! நான் அன்பு, உங்க வீட்டுல என் டீடெய்ல்ஸ் எல்லாம் வாட்சப்ல அனுப்பிருப்பாங்கனு நினைக்குறேன்… நீங்க அதை பாத்திங்களானு தெரியல… சப்போஸ் பாத்திருந்திங்கனா என் நம்பரை சேவ் பண்ணிக்கோங்க… அப்பிடியே நம்ம எங்க மீட் பண்ணலாம்னு சொன்னிங்கனா என்னோட வீக்கெண்ட் ஒர்க்குக்கான ப்ரிப்பரேசன்ஸ் எல்லாம் முடிச்சு கொஞ்சம் ஃப்ரீ ஆகிடுவேன்”

செய்தியை அனுப்பிவிட்டுப் பதில் வருமா என்று காத்திருக்குமளவுக்கு அவன் ஃப்ரீயாக இல்லை. ஆனால் வேலைக்கு இடையே மொபைலை எடுத்துப் பார்த்து நோட்டிபிகேசன் பகுதியில் வாட்சப் சிம்பல் தெரிகிறதா என பார்த்துக்கொண்டே இருந்தான். அதே நேரம் தனது மொபைலின் தொடுதிரையில் கிட்டத்தட்ட அரைமணி நேரமாக அன்பரசன் அனுப்பிய செய்தியை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தாள் ஆரபி. அவள் முன்னே இருந்த கணினியின் திரையில் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லும் சிவப்பு மற்றும் பச்சை வண்ண கேண்டில்கள் அடங்கிய சார்ட்டில் அவளது கவனம் பதியவில்லை. என்ன பதில் சொல்வதென தெரியாமல் திகைப்போடு ஆரபி இருக்க, அன்பரசனோ மனதுக்குள் ஓடிய பரபரப்பை மறைத்தவனாக டீமிலிருந்தவர்களிடம் டெஸ்டிங்கில் வந்த பிழைகளைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

