அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போது அது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும் சேதங்கள் மிகவும் மோசமாக இருக்கும். அதை போல கோபமும் நம்கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்வரை யாருக்கும் எந்த சேதமும் உண்டாகாது. எப்போது அது கட்டுப்பாட்டை உடைத்து கரை தாண்டுகிறதோ அப்போது நம்மோடு சேர்ந்து நமக்கு நெருங்கியவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
-அன்பனின் சிந்தனை சிதறல்கள்
மனோ ஃப்ரெஷ் ஜூஸ் பார் அண்ட் கபே, ஆலங்குளம்…
“இந்த ஆட்டோமேட்டிக் ஃபீட் ஜூசர் இப்ப இருக்குற ஹை டிமாண்டுக்கு ஏத்தது… சம்மர் முடியுற வரைக்கும் ஜூஸ், ஃப்ரூட் ஸ்மூதிக்கான டிமாண்ட் அதிகமா இருக்கும்… வர்ற கஸ்டமர்ஸை வெயிட் பண்ணவைக்குறது நல்ல பிசினசுக்கு அழகு கிடையாது அருண்…. இதையே ஃபைனலைஸ் பண்ணிடு.. கொட்டேசன் கேளு… கொஞ்சம் பார்கைன் பண்ணி பாக்கலாம்”

அருணிடம் சொல்லிக்கொண்டிருந்தான் அன்பரசன். மனோ ஃப்ரெஷ் ஜூஸ் பார் அண்ட் கபே ஒரு வயதான அவனது தொழில் குழந்தை. அவனது தந்தை ஓய்வுக்குப் பிறகு வைத்து நடத்திய பழக்கடையை ஜூஸ் பாராக மாற்றும் எண்ணம் ஆரபியை மணப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் அவனது மூளையில் உதயமானது.
SAP ABAP சீனியர் கன்செல்டண்டாக மாதம் எண்பதாயிரம் சுளையாக சம்பாதித்த தொழில்நுட்ப நிறுவன வேலையை விட்டுவிட்டுச் சொந்தத் தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் அவனுக்குள் வந்ததும் பெரிதாக அன்பரசன் யோசிக்கவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கிட்டத்தட்ட நான்காண்டுகள் அவன் சம்பாதித்த பணத்தைச் சேமித்து வைத்திருந்தான். கூடவே மார்த்தாண்டனும் கொஞ்சம் பணம் கொடுத்தார். அந்தப் பணத்தையும் சேர்த்து ஆரம்பித்தது தான் மனோ ஃப்ரெஷ் ஜூஸ் பார் அண்ட் கபே. தந்தைக்குப் பழங்களை சப்ளை செய்தவர்களிடமே ஒப்பந்தம் போட்டுத் தனது ஜூஸ் பாருக்குத் தரும்படி செய்துவிட்டான்.
இப்போது ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் அவர்களது ஜூஸ் பாரைத் தெரியாதவர்களே இல்லை எனலாம்.
பழச்சாறு மட்டுமன்றி, ஸ்மூத்தி, பழ சாலட் மற்றும் அருகம்புல் சாறு, கோதுமைப்புல் சாறு போன்றவற்றை அருந்தவும் மனோ ஜூஸ் பாரை அணுகுபவர்கள் அனேகம்.
முதலில் ஒரு கோல்ட் ப்ரஸ் ஜூசர், ஒரு ஃப்ரிட்ஜுடன் அருணும் அவனும் மட்டுமே ஆரம்பித்த ஜூஸ் பாரில் இன்று கிட்டத்தட்ட நான்கு ஜூசர்கள் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றன.
கூடவே நான்கு பணியாட்களும் இருக்கிறார்கள். கோடை ஆரம்பித்துவிட்டதால் பழச்சாறுகளுக்கான தேவை அதிகரித்துவிட்டது. மனோ ஜூஸ் பாரில் கோல்ட் ப்ரஸ் முறையில் பழங்களிலிருந்து சாறு பிழிந்தெடுக்கப்படுவதால் சத்துக்கள் வீணாகாது என்று வாய்மொழியாகப் பரவிய தகவலும் வாடிக்கை அதிகரிக்க முக்கிய காரணம்.
எனவே கூடுதலாக ஜூசர்களை வாங்க முடிவு செய்தான் அன்பரசன். இணையத்தில் நவீன ஜூசர்களைத் தேடிச் சலித்து இறுதியாக தானியங்கி ஜூஸர்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தைக் கண்டுபிடித்தான் அருண்.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றுக்கு தனி ஜூஸரும், கரும்புச்சாறு எடுப்பதற்கு தனி மெஷினும், அன்னாசியைத் தோல் சீவி நடுவிலுள்ள தண்டை எடுத்து சாறு எடுக்கும் தானியங்கி ஜூசரும் கூட அவர்களது பட்டியலில் அடக்கம்.
“அவங்க கிட்ட வீட் க்ராஸ் ஜூசர் இருக்குதானு செக் பண்ணி அதுக்கும் ஆர்டர் போட்டுடலாம் அருண்… நமக்கு அடுத்து இருக்குற பேக்கரி காலியாகப் போறதா அப்பா சொன்னார்… அந்த இடத்தையும் சேர்த்து நம்மளே லீசுக்கு வாங்கிட்டோம்னா இன்னும் நாலு டேபிள்ஸ் போட்டுடலாம்… கவுண்டரை அந்தப் பக்கம் வச்சுட்டு ஃப்ரூட்சை டிஸ்ப்ளே பண்ணுனா சேல்ஸ் இன்னும் அதிகமாகும்”
தமையன் மடமடவென திட்டமிடுவதைப் பார்த்த அருண் புன்னகையோடு “எல்லாம் அம்முக்குட்டி பிறந்த நேரம் அண்ணா… அம்முக்குட்டியும் அண்ணி மாதிரியே உங்களுக்கு லக்கி சார்ம்… அண்ணிய மேரேஜ் பண்ணுனதும் நீங்க இந்த ஜூஸ் பாரை ஓப்பன் பண்ணுனிங்க… அப்ப ஆரம்பிச்ச வளர்ச்சி இப்ப இதை விரிவாக்குற அளவுக்குப் போயிருக்கு பாருங்க” என்று சொல்ல அன்பரசனின் இதழ்களும் முறுவலித்தன.
முறுவலிப்பின் முடிவில் முகம் இளகாமல் இறுகிப்போனது மனைவிக்குத் தன் மீதிருக்கும் கோபத்தை எண்ணி.
தமையன் மனதைப் புரிந்துகொண்ட இளவலாக அருண் அன்பரசனின் தோளை ஆதுரமாகத் தட்டிக்கொடுத்தான்.
“மூனு மாசம் மூனு செகண்ட் மாதிரி ஓடிப்போய்டும்ணா… மதினி வீட்டுக்கு வந்ததும் உங்க நிலமை என்ன, எந்த மாதிரி சிச்சுவேசன்ல நீங்க அப்பிடி நடந்துகிட்டிங்கனு சொல்லி புரியவைங்க”
“சொன்னா அவ புரிஞ்சிப்பானு நினைக்குறியா? எனக்கு நம்பிக்கை இல்ல… ஏன்னா அவ சொல்லிப் புரியவைக்கலாம்னு முயற்சி பண்ணுனப்ப நான் அவ தரப்பு நியாயத்தைக் காது குடுத்துக் கேக்கவேல்லயே… அவ மட்டும் என்னைப் புரிஞ்சிக்கணும்னு நான் நினைக்குறது அநியாயம் தானே? அடிச்சாலும் பிடிச்சாலும் ஆரு என் கூட இருக்கணும்… அவ்ளோ தான் அருண்… அதை தாண்டி நான் வேற எதையும் யோசிக்கல”
சகோதரர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் தென்காசி செல்லக்கூடிய பேருந்து ஒன்றிலிருந்து இறங்கினார்கள் ஒரு இளம் தம்பதி. கணவனுக்கு பின்னிருபதுகளில் வயது இருக்கலாம். அவனுக்கு ஒரு கால் முட்டிக்குக் கீழே அகற்றப்பட்டிருந்தது. மனைவியின் தோளைப் பிடித்து இறங்கியவன் அவள் வைத்திருந்த ஊன்றுகோல்களை வாங்கிக்கொண்டான்.
இருவரது வதனத்தில் நிரந்தர வாடகைதாரராகச் சோகம் குடியேறியிருந்தது. மெதுவாக நகர்ந்து யாரிடமோ எதையோ விசாரித்தவர்களின் பார்வை மனோ ஜூஸ் பாரின் மீது விழுந்தது. அங்கே நின்று பேசிக்கொண்டிருந்த அருணையும் அன்பரசனையும் அவர்கள் இருவரும் பார்த்துவிட்டார்கள்.
பார்த்த அடுத்த நொடியில் இருவரது முகங்களிலும் குற்றவுணர்ச்சி ஏறியது. ஒருவரை ஒருவர் தவிப்போடு பார்த்துக்கொண்டார்கள் இருவரும்.
அந்நேரத்திலா அன்பரசன் அவர்களைப் பார்க்க வேண்டும்? பார்த்தவனின் கண்கள் கோபத்தில் செவ்வரி படர்ந்து தீக்கங்குளைப் போல ஜொலித்தன.
முஷ்டியாக இறுகிய கரத்தில் ஓடிய நரம்புகள் முழங்கை வரை மடித்துவிடப்பட்ட சட்டையின் ஸ்லீவ்களுக்குள் ஏறியிறங்கின.
விட்டால் அங்கேயே அவர்களைப் பார்வையால் எரித்துவிடுவான் போல!
அவன் தங்களைப் பார்த்துவிட்டான் என்று தெரிந்ததும் இருவரும் பரிதவித்துப் போயினர். ஆனாலும் அப்படியே நிற்காமல் மனோ ஜூஸ் பாரை நோக்கி வந்தார்கள்.
“இதுங்க ரெண்டையும் யார் இங்க வரச் சொன்னாங்க? அருண், ஒரு செக்ண்ட் கூட இதுங்க கூட பேச எனக்கு விருப்பமில்ல… போகச் சொல்லிடு” அன்பரசன் கோபத்தோடு விடுத்த எச்சரிக்கையை ஒதுக்கிவிட்டுக் கைகூப்பினாள் அந்த மாற்றுத்திறனாளி இளைஞனின் மனைவி.
“நாங்க பண்ணுனது தப்பு தான்ணா… கோவத்துல அப்பிடி பண்ணிட்டோம்… எங்களை நீங்க மன்னிக்கவே மாட்டிங்களா?” கண்ணீரோடு அவள் கேட்க அந்த வாலிபனும் அன்பரசனின் கையைப் பற்றினான்.
“மச்சான், என்னை மன்னிக்க மாட்டியாடா? உன் ஃப்ரெண்ட் குமரனை மன்னிக்கமாட்டியா?” என்று உள்ளத்தை உருக்கும் குரலில் கேட்டான்.
அன்பரசன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து அவனது கரத்தை விலக்கினான்.
பின்னர் அடிக்குரலில் “இப்ப எதுக்கு இங்க வந்து புருசனும் பொண்டாட்டியும் கண்ணீர் நாடகம் ஆடுறிங்க? என்னையும் என் பொண்டாட்டியையும் பிரிச்சு என் குடும்ப வாழ்க்கைய கெடுத்தது போதாம இப்ப என் தொழிலையும் ஊத்தி மூட வைக்கலாம்னு வந்து நிக்குறிங்களா? நான் கொலைவெறில இருக்கேன் நிலா… உன் புருசனைக் கூட்டிட்டுப் போயிடு… டேய் அருண், இவங்களை என்னனு விசாரிச்சு அனுப்பி வை” என்று அருணிடம் கூறியவன் உள்ளே செல்லப் போக
“நாங்க பாப்பாவ பாக்க செங்கோட்டைக்குப் போறோம் அண்ணா… ஆருவை பாத்து மன்னிப்பு கேட்டுட்டு அப்பிடியே குழந்தையையும் பாத்துட்டு வந்துடலாம்னு இவர் சொன்னாரு… ப்ளான் பண்ணி நாங்க இங்க வரலண்ணா” என்றாள் அந்த இளம்பெண் நிலா.
அன்பரசன் பொறுமையின்றி திரும்பியவன் “உங்க ரெண்டு பேர் பார்வையும் இனிமே என் பொண்டாட்டி மேல விழக்கூடாது… அங்க நிக்குதுல்ல அந்த திருநெல்வேலி பஸ்ல ஏறி ஊருக்கு ஓடிருங்க… இல்லனா உன் புருசனுக்கு இன்னொரு காலும் இல்லாம பண்ணிடுவேன், ஜாக்கிரதை” என்று கர்ஜிக்க
“நீங்க வாங்கண்ணா… நிலா மதினி வாங்க” என்று அவசரமாக அவர்களை அங்கிருந்து நகர்த்தி வேறிடத்துக்கு அழைத்துப்போனான் அருண்.
போகிறவர்களைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த அன்பரசனின் மனமோ சுண்ணாம்பு காலவாய் போல கொதித்தது.
ஏனோ அவர்களின் இந்நிலையைக் கண்ட பின்னும் பரிதாபம் தோன்றவில்லை. மாறாக அடித்துக் கொல்லும் அளவுக்கு வெறி வந்தது. இவர்கள் தனக்குச் செய்த தீய காரியத்தை எக்காலத்திலும் அன்பரசனால் மறக்கமுடியாது.
அருண் குமரனையும் அவனது மனைவி நிலாவையும் தனியே அழைத்துப் போனான்.
“அரசு அண்ணா உங்க மேல பயங்கரமான கோவத்துல இருக்காங்க… ஹாஸ்பிட்டல்லயே உங்க கிட்ட எவ்ளோ கோவப்பட்டாங்க? அதை மறந்துட்டிங்களா? ப்ளீஸ்ணா… கொஞ்சநாள் உங்க வாழ்க்கைய கவனிங்க… அரசு அண்ணன் மனசு மாற இன்னும் நாளாகும்… உங்களுக்கு அண்ணனை பத்தி தெரியும் தானே… எந்தத் தப்பை வேணாலும் அவர் மன்னிப்பார்… ஆனா ரொம்ப நம்புற ஆளுங்க அவர் கிட்ட பொய் சொன்னா அண்ணா அவங்களை மன்னிக்கவே மாட்டார்… அவருக்கு எல்லாத்தையும் மறக்க கொஞ்சம் டைம் குடுங்க… இப்ப நீங்க செங்கோட்டைக்குப் போய் தான் ஆகணுமா?”
குமரன் தயக்கத்தோடு ஆம் என்றான். அதற்கான காரணம் என்னவென அவன் சொன்னதும் அருணுக்கு அவனது அண்ணி ஆரபி மீது மரியாதை அதிகமானது.
மனநெகிழ்வோடு “எங்க மதினி மனசு தங்கம்… அவங்களால யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது… சரி அதை விடுங்க… நீங்க பஸ்ல போனா ஏறியிறங்க கஷ்டம்… என் ஃப்ரெண்ட் ட்ராவல்ஸ் வச்சிருக்கான்… அவன் கிட்ட சொன்னா கார் அனுப்பிவிடுவான்… கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க” என்றவன் உடனடியாக அவனது நண்பனுக்கு மொபைலில் அழைப்பு விடுத்தான்.
அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் ட்ராவல்சிலிருந்து கார் ஒன்று வந்தது. அதிலேற குமரனுக்கு உதவியவன் நிலா பணம் எடுக்கவும் “அதெல்லாம் வேண்டாம்… நீங்க எங்க மதினியோட ஃப்ரெண்ட்… உங்களுக்கு நான் செய்யுற சின்ன உதவி இது… போய் மதினிய பாத்துட்டு வாங்க” என்றான்.
நிலா அவனைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு ஏறியமர்ந்தாள்.
அருண் ஓட்டுனரிடம் போனவன் “நான் தர்ஷன் கிட்ட பேசிடுறேன்ணே… இவங்களை செங்கோட்டைல கொண்டு போய் விட்டுட்டு வெயிட் பண்ணி திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போய் விட்டுருங்க… செங்கோட்டை அம்மன் சன்னதில எட்டாம் நம்பர் வீடு” என்று சொல்ல அவரும் சரியென்றுவிட்டு காரைக் கிளப்பிச் சென்றுவிட்டார்.
கார் பேருந்து நிலையத்தை விட்டு மறைந்ததும் மனோ ஜூஸ் பாருக்குள் போனவனை அதிருப்தியோடு பார்த்தான் அன்பரசன்.
“உன் மதினி மாதிரி நீயும் ஏமாளியா இருந்து அதுங்களை நம்பித் தொலைக்காத அருண்… நண்பன்னு சொல்லி என் வாழ்க்கைல விளையாடுனவன் அவன்”
“அப்பிடி இல்லண்ணா! மதினியே அவங்களை மன்னிச்சதுக்கு அப்புறம் நம்ம விரோதம் வச்சா நல்லா இருக்காதுல்ல?”
உடனே அன்பரசன் வெகுண்டெழுந்தான்.
“ஃப்ரெண்டுனு சொல்லிட்டு துரோகம் பண்ணுனவளை எல்லாம் உன் மதினி மன்னிப்பா… அவளுக்கு நான் ஒருத்தன் தான் இளிச்சவாயன்… அதான் என்னை ஃபுட்பால் மாதிரி உதைச்சு விளையாடுறா… கேட்டா எல்லாரும் நான் கோவக்காரன், பிடிவாதக்காரன், அதனால அவ அப்பிடியெல்லாம் செய்யுறானு எனக்குக் கிளாஸ் எடுப்பிங்க… இங்க பாருடா அருண், உன் மதினியோட பிடிவாதத்துக்கு முன்னாடி என் பிடிவாதம் எல்லாம் ஒன்னுமே இல்ல”
பேசிக்கொண்டே போனவன் மொபைலை எடுத்து ஆரபிக்கு வீடியோ கால் செய்தான். குழந்தை ஆரண்யாவைப் பார்க்க வேண்டுமென எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அவன் ஆரபிக்கு வீடியோ கால் செய்வது வழக்கம். அவளும் என்ன கோபம் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு அழைப்பை ஏற்று மகளின் முகத்தைக் கணவனிடம் காட்டுவாள்.

மற்றபடி ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள். அன்றும் அவ்வாறே அழைப்பை ஏற்றவுடன் மகளின் முகத்தைக் காட்டுவாள் என்று நினைத்தவன் அவனது எண்ணத்திற்கு மாறாக ஆரபியின் முகம் தெரியவும் கோபம் வடிய நிதானமானான்.
“அம்முக்குட்டி எங்க? நான் அவளைப் பாக்க தான் கால் பண்ணுனேன்” என்று எதேச்சையாகத் தான் கூறினான்.
மறுமுனையிலிருந்த ஆரபிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.
“ஆச்சி!” என்று சத்தமாக அழைத்தாள்.
அவரை ஏன் அழைக்கிறாள் என்று அன்பரசன் திகைக்கும்போதே அலமேலு ஆச்சியும் வந்துவிட்டார். அவரிடம் மொபைலைக் கொடுத்தவள்
“அவர் லைன்ல இருக்கார்… அம்முக்குட்டிய காட்டுங்க ஆச்சி… நான் வேலைய பாக்கப் போறேன்” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தாள்.
என்ன வேலை என்று திகைத்த அன்பரசன் திரையில் அலமேலுவின் முகம் புன்னகையோடு தெரியவும் திகைப்பை மறைத்து “எப்பிடி இருக்கிங்க ஆச்சி?” என்று குசலம் விசாரித்தான்.
அலமேலு நலமாக உள்ளதாகக் கூறியவர் கொள்ளுப்பேத்தியை மடியில் ஏந்திக்கொண்டு அன்பரசனிடம் காட்டினார்.
“அம்முக்குட்டி யார் போன்ல இருக்கானு பாரு… அப்பா” என்று அவர் சொல்ல அன்பரசனும் மகளது வதனத்தைக் கனிவோடு பார்த்தான்.
மூன்று மாதங்களுக்கு இன்னும் பத்து வாரங்கள் உள்ளது. எப்போது குழந்தையைப் பார்க்க வருவீர்கள் என்று விசாரித்தார் அலமேலு.
அடுத்த வாரம் வருவதாகச் சொன்ன அன்பரசன் மெதுவாக “ஆருவுக்கு ஆபரேசன் செஞ்ச உடம்பு…. டாக்டர் அவளைத் தரையில கூட உக்காந்து எழுந்திருக்க வேண்டாம்னு சொல்லிருக்காங்க… அவளை வேலை எதுவும் பாக்கச் சொல்ல வேண்டாம் ஆச்சி” என்றான்.
அலமேலுவுக்கு பேத்தி மீது அவனுக்கு இருக்கும் பாசத்தை எண்ணி வாய்கொள்ளா சிரிப்பு!
“ஆருவை நான் எந்த வேலையும் செய்யச் சொல்லுறதில்லப்பா அரசு… அவங்கம்மா எல்லா வேலையும் பாத்துக்குறா” என்றார்.
“அப்ப ஆரு ஏதோ வேலை இருக்குனு உங்க கிட்ட போனை குடுத்தப்ப சொன்னாளே?”
“அதுவா? அவ முன்னாடி சென்னைல ஒரு கம்பெனில வேலை பாத்தால்ல, அதே வேலைய இப்ப வீட்டுல இருந்து பாக்குறா… பிள்ளைப்பெத்த உடம்போடு ஏன் இதைச் செய்யுறனு கேட்டதுக்கு சும்மா இருந்தா போரடிக்குது ஆச்சினு சொல்லிட்டாப்பா உன் பொண்டாட்டி… நீயாச்சும் சொல்லி புரியவை… அம்முக்குட்டி ராத்திரி முழுக்க அழுது அவளைத் தூங்கவிடமாட்றா… பகல்ல குழந்தை தூங்குறப்ப நீயும் தூங்கி ஓய்வெடுனு சொன்னா தூக்கம் வரலனு சொல்லி லேப்டாப்போட உக்காந்துக்குறா”
அலமேலு சொல்ல சொல்ல அன்பரசனுக்கு ஆரபி மீது ஆதங்கம் பெருகியது. அறுவை சிகிச்சையில் ஆரண்யா பிறந்தபோதே இரத்த அழுத்தம் உயர்ந்ததில் சிரமப்பட்டுப்போனாள் அவள். நன்றாக ஓய்வெடுத்து உடம்பைத் தேற்றாமல் ஏன் இந்த வெட்டிவேலை என்று எரிச்சல் மண்டியது அவனுக்கு.
என் மனைவி ஏன் வேலை செய்யவேண்டுமென வீம்பு பிடித்தவன் அலமேலுவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான், இனி ஆரபியை வேலை செய்யவேண்டாமென சொல்லும் முடிவோடு! முடிவெடுத்தவன் யோசிக்காமல் செங்கோட்டைக்கும் கிளம்பினான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

