“என்ன விசயம்?” ஈஸ்வரி வினவவும் தனது அடுத்த திட்டம் பற்றி அவளிடம் விவரித்தான் ஆர்வமாய்.
உம் கூட கொட்டாமல் அதைக் கேட்டு முடித்தவள் “இதெல்லாம் எதுக்கு என் கிட்ட சொல்லுறிங்க? எனக்கும் உங்க வேலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? நான் தான் சொன்னேனே, இனி எந்த விதத்துலயும் நான் உங்களுக்குத் துணையா நிக்கமாட்டேன்னு. மறந்து போச்சா?” என்று கேட்டு அவனைத் திகைக்க வைத்தாள்.
பவிதரனின் முகத்தில் கலக்கம்.
“உன் கிட்ட சொல்லாம வேற யாரு கிட்ட சொல்லுறதுடி?”
“நேத்து யாருக்கு ஏந்துக்கிட்டு என் கிட்ட எகிறுனிங்களோ அங்க போய் சொல்லுங்க. இந்த வேலைக்கும் வேட்டு வச்சு குழி தோண்டி புதைச்சு பால் ஊத்துவான் உங்க மச்சான்.”
வெடுக்கெனச் சொல்லிவிட்டுத் தனது கால்களை அவனது மடியிலிருந்து எடுத்துக்கொண்டாள் ஈஸ்வரி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சட்டென எழுந்தவளின் கையைப் பிடித்தவன் “நீ என்னை ரொம்ப காயப்படுத்துற ஈஸ்வரி. எனக்குனு இருக்குறவ நீ மட்டும்தான். உனக்குப் புரியுதா?” என்றான்.
“இதே வாய் தான் நேத்து என் கிட்ட கத்துச்சு. பொதுவுல உங்கப்பனை நியாயமான விசயத்துக்கு நான் திட்டுனது அவமானம்னா, உங்களுக்கு நியாயம் கேக்கப் போன என்னை எல்லார் முன்னாடியும் நீங்க கத்துனதும் அவமானம் தான். அதுலயும் நீங்க செஞ்சது அநியாயமான அவமானம். சுருக்கமா சொல்லணும்னா ஐ டோண்ட் டிசர்வ் யுவர் ஹார்ஷ் வேர்ட்ஸ். எனக்கு வலிக்காதா? நான் காயப்படமாட்டேனா? சை! விடுங்க” என்று கையை உதறிவிட்டுக் குழலியின் வீட்டுக்குப் போய்விட்டாள் அவள்.
அன்றைய இரவு அப்படியே கழிய மறுநாள் விடியலில் கண் விழித்தவள் பாயையும் போர்வையையும் மடித்துத் தலையணையோடு அவற்றைத் தூக்கிக்கொண்டு அவர்களின் அறைக்கு வந்தபோது அங்கே பவிதரன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.
ஈஸ்வரிக்கு அவனைப் பார்க்கையில் பாவமாய் தான் இருந்தது. இருந்தாலும் அவனது பேச்சை மன்னிக்க மனமில்லை.
பாயையும் போர்வையையும் அவற்றுக்குரிய இடத்தில் வைத்தவள் கூந்தலைக் கொண்டையிட்டபோது அங்கே மேஜை மீதிருந்த பட்டன் ஃபைலைப் பார்த்தாள்.
நேற்றைய இரவில் பவிதரன் ஆசையாய் விவரித்த அவனது திட்டம் நினைவுக்கு வந்தது. மெதுவாக அதைத் திறந்து பார்த்தவள் அவன் ஒரு காகிதத்தில் அடுத்து செய்யவேண்டியது என்னவென பட்டியலிட்டிருப்பதை வாசித்தாள்.
பழைய ரப்பர் ஸ்டாம்பு, சீலை எடுத்துப் பார்த்தவள் இங்க் பேடில் அவற்றை அழுத்தி காகிதத்தில் சீல் வைத்தாள். பவிதரன் அவனது அலுவலக முகவரியைக் கொடுத்துப் பதிவு செய்திருந்தான்.
அந்த முகவரியை இப்போது அவர்கள் இருக்கும் வீட்டின் முகவரிக்கு மாற்றி புதிய ரப்பர் ஸ்டாம்ப், சீல் தயார் செய்வதையும் காகிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.
ஈஸ்வரி அங்கிருந்த பீரோவைத் திறந்தவள் அதிலிருந்த வாடகை ஒப்பந்தத்தில் வீட்டின் முகவரியைப் பார்த்து ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டாள்.
ரப்பர் ஸ்டாம்ப், சீல், அந்தக் காகிதம் மூன்றையும் தனது ஹேண்ட் பேக்கில் வைத்தவள் பின்னர் சமையல், குளியல், வேலை என பரபரப்பானாள்.
புக் செண்டருக்கு வந்ததும் அங்கே பணியாற்றும் ஊழியரிடம் ரப்பர் ஸ்டாம்ப் செய்பவர் யாராவது தெரியுமா என விசாரித்தவள் நெல்லை சந்திப்பில் ஒருவர் செய்துகொடுப்பதாகத் தகவல் கிடைத்ததும் மதியம் அனுமதி வாங்கிக்கொண்டு அங்கே போய் புதிய ரப்பர் ஸ்டாம்ப், சீல் பற்றி குறிப்பிட்டாள்.
“இதே டிசைன்ல வேணும். அவங்க பேரு, லைசன்ஸ் நம்பர், அட்ரஸ் எல்லாம் இதுல எழுதிருக்கேன். எப்ப கிடைக்கும்?”
“இன்னைக்குச் சாயங்காலம் வந்து வாங்கிக்கோங்கம்மா” என்றவர் அதற்கான விலையையும் சொல்ல ஈஸ்வரி பணம் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.
நிழல் தரமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டே வேருக்கு நீர் வார்க்கும் மரம் போல வாய் வார்த்தைக்கு உனக்குத் துணையாய் நிற்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே பவிதரன் எடுத்து வைக்கும் அடுத்த அடிக்குத் தன்னாலானதைச் செய்துகொண்டிருந்தாள் அவள்.
அதை அவளும் அறிவாள்! ஓரளவுக்கு மேல் சில உறவுகளிடம் வைராக்கியமாய் இருக்கமுடியாது என்ற நியதியைப் புரிந்துகொண்ட மனம் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள தயங்கியது.
மாலையில் வீடு திரும்பியவள் பவிதரனிடம் ரப்பர் ஸ்டாம்பும், சீலும் இருக்கும் பாலீதீன் கவரைக் கொடுத்தாள்.

அதைச் சன்னச் சிரிப்புடன் வாங்கிக்கொண்டான்.
“ரொம்ப சிரிக்காதிங்க. உங்க கிட்ட வண்டி இல்ல. இந்த ரப்பர் ஸ்டாம்புக்காக அலைய வேண்டாம்னு செஞ்சு வாங்கிட்டு வந்தேன். அதுக்காக உங்க மேல வருத்தம் போயிடுச்சுன்னு அர்த்தமில்ல.”
முகத்தைக் கடுகடுவென வைத்துக்கொண்டு காய்ந்தவள் அவன் பதில் பேசாமல் சிரிக்கவும் தலையிலடித்துக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டாள்.
பவிதரன் செல்பவளையே பார்த்தபடி திண்ணையில் அமர்ந்திருந்தான். அவனது சண்டைக்காரியின் கோபம் கொஞ்சம் தணிந்த நிம்மதி அவனுக்கு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

