அவர்களை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் குழலி எதிர்பார்த்தார். திருமணத்தேதி, நேரம் எல்லாம் தெரிந்தும் நிலவழகியால் வராமல் இருக்கமுடியாதென நினைத்தவரின் எண்ணம் பொய்யாகவில்லை.
அவர்கள் இருவரையும் கண்டதும் பவிதரனின் முகம் மாறுவதைக் கவனித்த ஈஸ்வரி அவனது கரத்தைப் பற்றி அழுத்தினாள்.
“உங்கம்மாவும் தங்கச்சியும்தானே? இது நம்மளோட சந்தோசமான தருணம். அவங்களும் நம்ம கூட இருந்தா தப்பில்லயே.”
அவன் பதில் சொல்லாமல் இருக்கவும், “எந்தக் கருத்துவேறுபாடும் உங்களுக்கும் அவங்களுக்குமான உறவை முறிச்சிடாதுங்க. ப்ளீஸ்! சிரிங்க,” என்றாள் கெஞ்சும் தொனியில்.
ஷண்மதி மட்டும் முகத்தை விறைப்பாய் வைத்துக்கொண்டு அட்சதையை அள்ளி அன்னைக்கும் தங்கைக்கும் கொடுத்தாள். கொடுத்தாள் என்பதை விட அவர்களின் கையில் திணித்தாள் எனலாம். நிலவழகியின் கலங்கிய விழிகள் அவளைக் கொஞ்சம் இளகச் செய்ததால் சுருக்கென எதுவும் பேசவில்லை.
மதுமதிக்கும் அண்ணன் மீது பாசம் கிடையாதென்று சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு சுணக்கம். அதற்காக அவனது திருமணத்தைப் பற்றி முந்தைய இரவில் கண்ணீரும் கம்பலையுமாக அன்னை சொன்னதைக் கேட்ட பிறகும் வராமல் இருக்க முடியுமா?
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்னடி உன் காத்து ஏன் இங்க வீசுது?” குத்தலாகவே வினவினாள் ஷண்மதி அவளிடம்.
“என் அண்ணன் கல்யாணத்துக்கு நான் வந்திருக்கேன். உனக்கென்ன?” என வெடுக்கென அவள் பதில் சொல்ல ஏளனச்சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போனாள் ஷண்மதி.
“நல்ல நேரம் முடியப்போகுது.”
பூசாரி சொல்லவும் மாங்கல்யம் பவிதரனின் கரத்துக்கு மாறியது.
இத்தருணம் அவன் ஆசையாய் கனவுகளில் கண்டு களித்த தருணங்களில் ஒன்று! அவனுடைய காதல் கனவுகள் அனைத்துக்கும் அச்சாணியான தருணமும் கூட. கனவு நனவாக இதோ இன்னும் சில நொடிகளே மிச்சம்!
பூசணி ஆரஞ்சு நிற பட்டில் சக்கர வடிவ புட்டாக்கள் தங்க நிற ஜரிகையோடு மின்ன, நேர்த்தியான மணப்பெண் அலங்காரத்தில் எக்ஸ்ட்ரா அழகியாய் ஜொலித்த காதலியை மங்கலநாண் பூட்டித் தன்னில் சரிபாதியாய் இணைத்துக்கொண்டான் பவிதரன்.

நிமிர்ந்த தலையைக் குனியாமல் அவனது விழிகளை நேருக்கு நேராய் பார்த்தபடியே அவன் கட்டிய மாங்கல்யத்தை கழுத்தில் வாங்கிக்கொண்டாள் ஈஸ்வரி. இதழ்களில் புன்னகை உறைய மனமோ மகிழ்ச்சியில் நிறைய அவர்கள் இருவரையும் நனைத்தன அட்சதை பூக்கள்.
மூன்றாவது முடிச்சை ஷண்மதி ஆசையாய் போட்டுவிட மாங்கல்யத்தில் பூ சுற்றினார்கள் ஆதிராவும் மலர்விழியும்.
மகளின் திருமணம் எக்குறையும் இல்லாமல் இனிதே நடந்தேறியதைப் பார்த்த இளவரசியும் தட்சிணாமூர்த்தியும் நிலவழகி ஏதேனும் ரசாபாசம் செய்வாரோ என்று திணறாமல் இல்லை. அனைத்தும் ஆசிர்வாதத்துக்காக மகளும் மருமகனும் காலில் விழும்வரை மட்டுமே. பின்னர் அவர்களே பிரதானமாகிவிட நிலவழகியைப் பற்றிய தயக்கம் விடைபெற்றது இருவரிடமும்.
சிகாமணி, குழலியிடமும் ஆசி பெற்றுக்கொண்டவர்கள் சிவகாமி – நரசிம்மனிடம் ஆசி வாங்கிக்கொண்டார்கள். அடுத்து ஷண்மதி – ரவியின் முறை. தங்களின் காலில் விழப்போன மணமக்களைத் தடுத்தான் ரவி.
“நமக்குள்ள எதுக்குடா ஃபார்மாலிட்டி?” என்று பவிதரனை அணைத்துத் தோளில் தட்டிக்கொடுத்தான்.
“வாழ்த்துகள்டி,” ஈஸ்வரியைத் தோளால் அணைத்து வாழ்த்திய ஷண்மதி, “நாத்தனார் முடிச்சு போட்டிருக்கேன். ஒழுங்கா உன் புருசன் கிட்ட சொல்லி அடுத்த மாசம் வரப்போற என் பர்த்டேக்கு ஒரு பட்டுச்சேலை வாங்கி குடு,” என்று உரிமையாய் பேரம் பேசினாள்.
இந்தக் கலாட்டாக்களுக்கு இடையே உரிமை தொலைத்த உறவுகளாய் பரிதாபமாய் நின்றார்கள் நிலவழகியும் மதுமதியும்.
“அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கு பவி.”
குழலி அழுத்தமாய் சொல்ல பவிதரனும் ஈஸ்வரியும் நிலவழகி பக்கம் நகர்ந்தார்கள். இருவரும் எதுவும் பேசாமல் ஆசி வாங்க குனிய நிலவழகியின் கண்களில் கண்ணீர் படர்ந்தது.
“நல்லா இருக்கணும்,” கைகள் நடுங்க ஆசிர்வதித்து இருவரையும் தூக்கிவிட்டார் அந்தப் பெண்மணி.
சங்கடமான மௌனமொன்று சில நொடிகளுக்குக் கோவிலை ஆக்கிரமித்தது. நிலவழகி தான் பரிசாய்க் கொண்டு வந்த நகைப்பெட்டியை மருமகளிடம் கொடுத்தார்.
“ஆரம் தான். அவசரத்துல வாங்குனேன்.”
ஈஸ்வரி அதை வாங்கவில்லை. காரணம் என்னவென நிலவழகிக்கும் மதுமதிக்கும் நன்றாகத் தெரியும்.
“நீங்க எனக்காக வாங்கணும்னு நினைச்சதே சந்தோசம். ஆனா இது எனக்கு வேண்டாம். என் புருசனுக்குச் சொந்தமில்லாத எதுவும் எனக்கும் சொந்தமில்ல. தப்பா நினைச்சுக்காதிங்க. நீங்க வந்தது, எங்களை ஆசிர்வதிச்சதே போதும்,” என்று அமைதியாய் மறுத்துவிட்டாள்.
நிலவழகி பெருமூச்சோடு நகைப்பெட்டியைத் தன்னிடமே வைத்துக்கொண்டார். மதுமதிக்கும் ஈஸ்வரி மறுத்ததில் வருத்தம்தான்.
இத்தனைக்கும் பவிதரன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினானில்லை. அவன் பேசுவான் என எதிர்பார்த்த நிலவழகிக்குப் பெரும் ஏமாற்றம்.
சிகாமணி இடையில் புகுந்து, “உங்க மகன் கல்யாணம் மதினி. நீங்க யாரோ போல பரிசு எல்லாம் குடுக்கணுமா என்ன?” என்று சூழலை இலகுவாக்க முயன்றார்.
நிலவழகி வெறுமெனே தலையசைத்தார்.
“என் மகனுக்குத் துணையா இருக்குறிங்க. அது போதும். நாங்க… நாங்க வந்தது அவருக்குத் தெரியாது. இன்னைக்குக் கல்யாணம்ங்கிற சேதியும் தெரியாது. கிளம்புறோம்,” என்று விடைபெற்றார் அங்கிருந்து.
மதுமதியும் அன்னையோடு கிளம்பினாள்.
அவர்கள் சென்ற பிற்பாடு பவிதரனின் உடலும் இறுக்கம் குறைந்து இலகுவானது. ஆனாலும் பெற்ற அன்னை வந்து சென்ற பாதிப்பு அவனது விழிகளில் ஈரமாய் படர்ந்திருந்தது.
ஈஸ்வரி அவனை ஏறிட்டவள், “அவங்களை இருந்து சாப்பிட்டுட்டுப் போகச் சொல்லிருக்கலாம் நீங்க,” என்க,
“அவங்க இங்க வந்தது, நம்ம கல்யாணத்துல கலந்துக்கிட்டது அப்பாக்குத் தெரிஞ்சா வீட்டுல பூகம்பம் வெடிக்கும். அதைத் தவிர்க்கணும்னு நினைக்குறாங்க. போகட்டும் விடு,” என்றான் அவன்.
“எத்தனை நாள் மறைக்க முடியும்? இந்நேரத்துக்கு அந்தக் கரிமுடிவான்…”
“சூ! என்னடி இது? இப்பதான் கல்யாணம் ஆகியிருக்கு. தேவையில்லாதவனை நினைச்சு ஏன் கோவப்படுற? அதுவும் கோவில்ல வச்சு என்ன வார்த்தை பேசுற நீ? இன்னைக்கு ஒரு நாள் சண்டைக்காரி அவதாரத்தைக் கழட்டி வைச்சிட்டு என் பொண்டாட்டியா அமைதியா இரு,” என்று அவளை அமைதியாக்கினான் பவிதரன்.
“அவன் விசயத்துல எனக்கு என்னைக்குமே மனசு அமைதியாகாது. எனக்கு வரவேண்டிய சம்பளத்தைக் கூட பிடிச்சுக்கிட்டான். அதுக்காகவே எக்ஸ்ட்ரா டோஸ் விடலாம் அந்த…”
படபடவெனப் பொரிந்தவளின் உதட்டின் மீது ஆட்காட்டி விரலை வைத்து அமைதியாக இரு என கண்ஜாடை காட்டினான் பவிதரன்.
அஞ்சனம் பூசிய விழிகளில் மயிற்பீழியாய் இமைகள் சிறகடிக்க கருவிழிகளிலோ கலவரம் தெரிந்தது.
“என்னைப் பத்தி மட்டும் இந்த வாய் இனிமே பேசணும். புரியுதா?” என மிரட்டினான் செல்லமாய்.
ஈஸ்வரி பதில் சொல்லாமல் தலையை ஆட்ட இக்காட்சியைக் கணவனிடம் காட்டினாள் மிருணாளினி.
“இந்தச் சீனை போட்டோ எடு.”
கர்ணன் புருவங்களை உயர்த்தியவன் “ஏன்டி?” என்க,
“அந்த போட்டோவ சென்னைல நம்ம வீட்டு ஹால்ல மாட்டி வைக்கணும். இல்லனு வையேன், நாளைக்கு நீ உன்னோட ஒருதலைக்காதல் ஞாபகத்துல என் பொண்ணுக்கு ஈஸ்வரினு பேர் வச்சிடுவ,” என்றாள் அவள் நமட்டுச்சிரிப்போடு.
கர்ணன் தலையில் அடித்துக்கொண்டான்.
“பிள்ளைத்தாச்சிய திட்டக்கூடாதுனு கிழவி சொல்லிருக்கு. இல்லனு வையேன்!” என்ற பில்டப் வேறு.

“அட தேவதாஸ் சார்! இதுக்கே கோச்சுக்கிட்டா எப்பிடி? அடுத்து ஈஸ்வரிக்கு அண்ணன் முறை செய்ய நீங்க தான் போகணும்,” என்று அவள் மீண்டும் சீண்டி அவனைச் சினக்க வைத்தாள்.
“என்ன ஒரே சத்தமா இருக்கு? பொண்ணு மாப்பிள்ளைய பால் பழம் சாப்பிட வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகணும். கிளம்புங்க.”
சிவகாமியின் குரலில் அனைவரும் அடுத்தத் திருமணச்சடங்குக்காக ஆயத்தமானார்கள்.
அன்பானவர்கள் சூழ்ந்து நின்று கொடுத்த மனநிறைவை, எதிர்பாரா உறவுகளின் வருகை கொஞ்சம் திணறடித்தாலும், மணநாளின் மகிழ்ச்சி குன்றாமல் அற்புதமான தருணங்களோடும், முழுமை பெற்ற ஓவியத்தின் அழகியலோடும் நிறைவுற்றது பவிதரன் – ஈஸ்வரியின் திருமணம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

