“The world faded away when their eyes met – இது மாதிரி வார்த்தையாடல்கள் eye contact-ஐ ரொமாண்டிசைஸ் பண்ணுற மாதிரி இங்கிலீஸ் நாவல்கள்ல உண்டு. என்னடா வெறும் பார்வைக்கு இவ்ளோ பில்டப்பானு நான் யோசிச்ச கணங்கள் நிறைய உண்டு. வார்த்தையா படிக்கிற தருணங்கள் வாழ்க்கையா மாறுறப்ப, அது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும்னு ஈஸ்வரியோட கண்களைப் பாக்குறப்பதான் நான் புரிஞ்சிக்கிட்டேன். கண்ணை அழகாக் காட்டுறேன்னு சில நேரம் காஜல் போட்டுட்டு வருவா. அப்ப அந்தக் கண்ணைப் பாக்குறப்ப கருப்பு மையால எழுதப்பட்ட கவிதை ஒன்னு இமைங்கிற இறகு முளைச்ச மாதிரி தோணும். என்னோட நம்பிக்கை, காதல், intimacy-னு எல்லாமே அந்தக் கண்ணுல ஆரம்பிச்சுக் கண்ணுல முடியணும்னு தான் நான் ஆசைப்படுறேன்.”
-பவிதரன்
ஸ்கைலைன் இன்ஃப்ரா ப்ரைவேட் லிமிட்டடின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்கள் தர்ஷனும் மாணிக்கவேலுவும். அதன் உரிமையாளரும் மேலாண்மை இயக்குனருமான மணிபாரதி கொஞ்சம் தர்மச்சங்கடமான புன்னகையோடு அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“மகிழ்மாறன் என்னோட தொழில் வட்டாரத்துல நெருங்கிய நண்பர். அவர் உதவி கேட்டப்ப என்னால மறுக்க முடியல. பவிதரனும் திறமையான இன்ஜினியர். யாரால தான் திறமைசாலிய வேண்டாம்னு விலக்க முடியும்?”
மாணிக்கவேலு தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.
“அவனுக்குனு சொந்தமா சொத்துப்பத்து இருக்கு. நான் நினைச்சா இதே மாதிரி ஒரு கம்பெனிய அவனுக்கு உருவாக்கிக் குடுப்பேன். அப்பா மகனுக்கு இடையில வந்த சின்ன பிரச்சனையை வெளியாளுங்க ஊதிப் பெருசாக்கிட்டாங்க. என்னைக்கு இருந்தாலும் அவன் என் மகன்ங்கிறது மாறிடாது. நாளைக்கே நாங்க ராசியாகிட்டோம்னா அவன் என் கம்பெனிக்கு வந்துடுவான். அப்புறம் உங்க வேலை பாதியில நிக்குமேங்கிற அக்கறையில சொல்லுறேன். அவனை இந்த மாசத்தோட வேலையில இருந்து நிறுத்திடுங்க. நாம ஒரே தொழில்ல இருக்குறோம். நமக்குள்ள பிரச்சனை வந்தா நல்லா இருக்காது. அதனாலதான் நானும் மாப்பிள்ளையும் நேர்ல வந்து பேசிட்டிருக்கோம்.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மணிபாரதி சங்கடத்தோடு கைகளைப் பிசைந்தார்.
“அதில்ல சார், திடுதிடுப்புனு அவரை வேலைய விட்டு நிறுத்துனா மகிழ்மாறன் என்னை என்ன நினைப்பார்? உங்க மகனும் என்னைத் தப்பா நினைக்க வாய்ப்பிருக்கு.”
“புரியுது பாரதி சார். ஆனா நீங்க அவனை வேலைய விட்டு நிறுத்தலைனா தொழில் வட்டாரத்துல நமக்குள்ள பிரச்சனை வர வாய்ப்பிருக்கு. அப்புறம் உங்க இஷ்டம்.”
கரம் கூப்பியபடி எழுந்தார் மாணிக்கவேலு. அவரோடு தர்ஷனும் எழுந்தான்.
“நீங்க போங்க மாமா. நான் சார் கிட்ட பேசிட்டு வர்றேன்,” என்று மாமனாரை வெளியே அனுப்பிவைத்தான்.
அவர் போனதும் குயுக்தியான புன்னகையோடு மணிபாரதியை நோக்கினான்.

“நீங்க அவனை வேலைய விட்டு அனுப்பலனா, என் மாமனாரை வச்சு உங்களோட கன்ஸ்ட்ரக்சனுக்கு ரா மெட்டீரியல் சப்ளை பண்ணுற அத்தனை டீலர்ஸ் கிட்டவும் பேசுவேன். அப்புறம் நீங்க கட்டிட்டிருக்குற பங்களா எப்பிடி மேல எழுந்திருக்கும்? யோசிச்சு முடிவு பண்ணுங்க. அப்பனுக்கும் மகனுக்கும் நடக்குற பிரச்சனைல உங்க தலை உருளாம பாத்துக்க வேண்டியது உங்க கையிலதான் இருக்கு.”
கோணலான புன்னகையோடு சொன்னவன் மணிபாரதியின் அதிர்ச்சியைப் பரிபூரணமாக ரசித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
மாமனாரும் மருமகனும் காரிலேறி அமர்ந்தார்கள்.
“பாரதி நம்ம பேச்சைக் கேப்பாருனு நம்புறியளா மாப்பிள்ளை?”
“கண்டிப்பா கேப்பார் மாமா. நீங்க தைரியமா இருங்க.”
காரைக் கிளப்பினான் அவன்.
கார் சாலையில் செல்லும்போதே, “நம்ம மேரு பில்டர்ஸ் ஆபிசை ரினோவேட் பண்ணியாச்சு மாமா. உங்க கிட்ட இன்னொரு முக்கியமான விசயம் பேசணும். என் ஃப்ரெண்ட் சாஜன் எனக்கு நேத்து ஃபோன் பண்ணுனான்,” என்று ஆரம்பித்தான்.
மாணிக்கவேலு வெளியே வேடிக்கை பார்ப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு மருமகனின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார்.
“அவன் ரொம்ப நாளாவே என் கிட்ட ஒரு விசயம் கேட்டுட்டிருந்தான் மாமா. நீங்க இதை எப்பிடி எடுத்துப்பிங்கனு தெரியல. ஆனா என் மனசுல உள்ளதை சொல்லிடுறேன். சாஜன் இப்ப TerraUSD-னு ஒரு கிரிப்டோ கரன்சில முதலீடு பண்ணிருக்கான். போன மாசம் மட்டுமே அவனுக்குச் செமத்தியா லாபம் வந்திருக்கு. அவன் கிட்ட என் பணம் ஒரு லட்சம் இருந்துச்சு. நேத்து அதை மூணு லட்சமா என் கிட்ட குடுத்தான். கிரிப்டோ கரன்சில இன்வெஸ்ட் பண்ணுனதுல ரெண்டு லட்சம் லாபம்னு சொன்னான்.”
ஒரு லட்சம் மூன்று லட்சமாகிவிட்டதா? மாணிக்கவேலு திறந்த வாயை மூடவில்லை.
“என்ன மாமா?”
“எவ்ளோ பெரிய விசயத்தைச் செஞ்சிட்டுச் சாதாரணமா சொல்றிங்களே மாப்பிள்ளை. அதான் ஆச்சரியத்துல பேச்சு வரல.”
மாணிக்கவேலு யோசிப்பார், தயங்குவாரென நினைத்தவனுக்கு இரண்டு லட்டு கிடைத்த குதூகலம்.
“என் கிட்ட அவன் ஒரு பிளானைச் சொன்னான். நம்ம ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்சன்ல வர்ற லாபத்தை இந்த கிரிப்டோ கரன்சில போட்டோம்னா கொள்ளை இலாபத்தை அள்ளலாம். நீங்க என்ன சொல்லுறிங்க?”
மாணிக்கவேலு பணம் குட்டி போடும் என்றால் ஏன் தயங்கப்போகிறார்? உடனே தலையாட்டினார்.
“இல்ல! நான் கம்பெனில வெறும் டைரக்டர் மட்டும்தான்…”
நிறுவனத்தின் பணத்தை உபயோகிக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதைக் கோடிட்டுக் காட்டினான் தர்ஷன்.
மாணிக்கவேலு உடனடியாக, “அதுக்கு என்ன தயக்கம்? சீக்கிரமே நம்ம ஆடிட்டர் கிட்ட பேசி எல்லா டாக்குமெண்டையும் மாத்துவோம். பேங்குலயும் நான் பேசிடுறேன். நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க மாப்பிள்ளை,” என்று சொல்லிவிட தர்ஷனுக்குச் சந்தோசத்தில் இறக்கை முளைக்காத குறை மட்டுமே!
இந்தச் சில நாட்களில் பவிதரன் எங்கே வேலை செய்கிறான் என்பதை மட்டும் அவன் விசாரிக்கவில்லை. திருவனந்தபுரத்தில் இருக்கும் அவனது நண்பனான சாஜனிடம் பணத்தைப் பெருக்குவதற்கான வழிமுறைகள் பற்றிய பேச்சுவார்த்தையையும் மேற்கொண்டிருந்தான்.
கஷ்டப்பட்டு உழைத்து ஒரு காலாண்டுக்கு சில கோடிகள் இலாபம் ஈட்டுவதை விட, தொழிலில் வரும் இலாபம், ரொட்டேசனில் இருக்கும் பணத்தைக் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பல கோடிகள் இலாபம் ஈட்டுவது அவனுக்குப் புத்திசாலித்தனமாகத் தோன்றியது.
இப்போது மாமனாரின் சம்மதத்தைப் பெற்றுவிட்டான். கிரிப்டோ கரன்சியில் நிறுவனத்தின் இலாபத்தை முதலீடு செய்வதற்கான ஆயத்தங்களில் தர்ஷன் ஈடுபடும்போதே பவிதரன் – ஈஸ்வரியின் திருமண வேலைகள் ஜரூராக நடந்தேறின.
மலர்விழி மூலமாக அவர்களது அண்டைவீட்டுச் செந்தில்நாதனிடம் பவிதரனுக்காக வாடகை வீட்டுக்குப் பேசி முன்பணம் கொடுத்தாயிற்று. மணமக்கள் புதுவீட்டில் உபயோகிக்க பாத்திர பண்டங்கள் வாங்குவது, திருமண ஏற்பாட்டைச் செய்வது, இதர வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதில் பெரியவர்கள் மும்முரமானார்கள்.
ஷண்மதி, மலர்விழி, ஆதிரா மூவரும் திருமணத்திற்கான ஜவுளிகளை வாங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். பவிதரன் தனது பணத்தில் ஈஸ்வரிக்கு முகூர்த்தப்பட்டும், தாலியும் வாங்கச் சொல்லிவிட்டான்.
அனைத்து வேலைகளும் எவ்விதத் தடங்கலுமின்றி நடக்கும்போதே, நிலவழகிக்கு மகன் தங்களை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டுத் திருமணம் செய்துகொள்ளப்போவது நெஞ்சை ரணமாக்கியிருந்தது. அதை யாரிடமும் பகிரவில்லை அவர். சொன்னால் கணவரோ, மருமகனோ, மகளோ ஏதாவது ஏடாகூடமாகச் செய்து மகன் ஒரேயடியாகத் தங்களை வெறுத்துவிடுவானோ என்ற பயம் அவருக்கு.
அவ்வபோது மருமகனும் கணவரும் கிசுகிசுப்பாய்ப் பேசிக்கொள்வது வேறு அவரது அடிவயிற்றில் தீயைப் பற்றவைத்தது. ஆனால் அவர்கள் எதிலோ மும்முரமாய் இருப்பது கூட ஒரு வகையில் நல்லது என்றே தோன்றியது அந்தப் பெண்மணிக்கு.
அவருக்குக் கணவரைப் பற்றி நன்றாகத் தெரியும். திருமண விவகாரம் அவரது காதுக்குப் போனால் நிச்சயம் மாணிக்கவேலு சும்மா இருக்கமாட்டார். எனவே கணவரும் மருமகனும் வேறு உலகத்தில் கிசுகிசு பேசுவதைக் கூட கண்டும் காணாமலும் இருந்துவிட்டார். கணவருக்குத் தெரியக்கூடாதென அவர் புதைத்துவைத்த இரகசியமே மனவுளைச்சலில் அவரைத் தள்ளுவதாய்!
நதியூரில் இருக்கும் முத்தாரம்மன் கோவிலுக்குச் செல்வது போல வெள்ளிக்கிழமைகளில் அங்கே போவதும் வருவதுமாக இருந்தவரின் செவிகளில் மகனின் திருமண ஆயத்தங்கள் பற்றிய செய்திகள் விழுந்தவண்ணமாய் இருந்தன.
அனைத்துக்கும் கசப்பான புன்னகையை மட்டும் பதிலாய்த் தந்து விட்டு நகருபவருக்குக் குழலியின் வீட்டுப்பக்கம் செல்ல கால்கள் தயங்கின. மகன் நிச்சயம் தன்னை அவமானப்படுத்தப்போவதில்லை. அவன் வீட்டை விட்டுக் கிளம்பியபோது தடுக்காத தனது கோபமும், அந்த நேரத்து தயக்கமுமே நிலவழகிக்கு விரோதிகளாய்!
தாய்மார்களின் கோபமும் மனச்சுணக்கமும் அதிகநாட்கள் நீடிக்காது என்பதற்கு உதாரணமாகிப் போனார் நிலவழகி.
நதியூர் முத்தாரம்மன் கோவிலில்தான் ஈஸ்வரியை மகன் மணமுடிக்கப் போகிறான் என்ற தகவல் கிடைத்தபோது இன்னும் வேதனையில் ஆழ்ந்துவிட்டார். ஆண் வாரிசின் திருமணத்தைத் தடபுடலாய் நடத்துவதற்கு என்னென்ன கனவுகளைக் கண்டிருந்தார் அவர். அனைத்தும் இப்போது பொடிப்பொடியாய் மாறிவிட்டனவே!
திருமணத்தேதியையும் நேரத்தையும் மட்டும் பூசாரியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அதற்கு முன்னர் தன் கையால் வேப்பிலை மாலைகளைக் கட்டி முத்தாரம்மன் கோவிலில் இருக்கும் மூன்று அம்மன்களுக்கும் கொடுத்துவிட்டார் நிலவழகி.
ஈஸ்வரி பிடிக்காத மருமகள்தான். ஆனால் இனி மகனின் வாழ்க்கை அவள் அல்லவா! வேறு வழியின்றி வேண்டிக்கொண்டார் அவளுக்காகவும் சேர்த்து. திருமண நாளன்று எப்படியாவது கோவிலுக்கு வந்துவிடவேண்டுமெனத் தீர்மானித்திருந்தார்.
அவர் கோவிலுக்கு வேப்பிலை மாலைகளைக் கட்டிக்கொடுத்த விவகாரம் பூசாரி மூலமாக சிகாமணியைச் சென்றடைந்தது. அதை மறைக்காமல் பவிதரனிடம் தெரிவித்தார்.
“மதினி கல்யாணத்துக்கு வந்தாலும் நீ பொடுபொடுனு பேசிடாதய்யா. அவங்களுக்கு உன் மேல பாசம் அதிகம்.”
அன்னை வருவார் என்று பவிதரனுக்கு நம்பிக்கை இல்லை. தந்தை அதற்கு அனுமதிப்பார் என்று தோன்றவில்லை. இருப்பினும் அவர் வந்தால் தான் மரியாதைக்குறைவாக நடந்துகொள்ளப்போவதில்லை என்று உறுதியளித்தான்.
திருமணத்துக்கு முந்தைய நாளன்று பெரியவர்கள் அவர்களுக்காகப் பார்த்திருந்த வாடகை வீட்டில் பால் காய்ச்சச் சொன்னார்கள் ஈஸ்வரியை.

அதற்கு காரணம் சாட்சாத் ஈஸ்வரியே தான். மலர்விழியிடமும் ஆதிராவிடமும் பேசுகையில் தனது மனதிலிருக்கும் விருப்பத்தைச் சொல்லியிருந்தாள் அவள்.
“ஏன் மலரு நம்ம வாழ்க்கைய நமக்குச் சொந்தமான இடத்துல ஆரம்பிச்சாதானே ஒரு மாதிரி நல்ல ஃபீலா இருக்கும்?”
அவள் இவ்வாறு கேட்டதும் மலர்விழி என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திகைத்தாள் முதலில்.
“என்னலா பதில் சொல்லாம முழிக்கிற? நீயெல்லாம் என்னத்த ஒரு புள்ளைய பெத்தியோ?” ஈஸ்வரி சீண்டவும் அவள் இன்னும் திணறினாள் எனலாம்.
ஆனால் ஆதிரா அவளுக்குப் பதிலாய் ஈஸ்வரியின் எதிர்பார்ப்பு தவறில்லை என்றாள்.
“உன்னோட ஆசை ஒன்னும் தப்பில்ல ஈஸு. உன் விருப்பத்தைப் பெரியவங்க கிட்ட சொல்லி நான் சம்மதிக்க வைக்குறேன்.”
சொன்னதோடு மட்டுமில்லாமல் சம்மதமும் வாங்கிக் கொடுத்தாள் ஆதிரா.
“கல்யாணம் முடிஞ்சு பால் காய்ச்சிக் குடியேறுறதுதான் வழக்கம்,” என முதலில் முணுமுணுத்தாலும் பின்னர் இளையவர்களின் ஆசைக்காகச் சம்மதித்தார் இளவரசி. வாழப்போகிறவர்கள் அவர்கள்தானே! அவர்கள் விரும்புகிற மாதிரியே செய்துவிடலாமெனக் குழலியும் கூறிவிட்டார்.
பாத்திர பண்டங்கள், வீட்டுபயோகப்பொருட்கள் எல்லாம் புதுவீட்டில் குடியேறின பால் காய்ச்சிய தினத்தில்.
புவனேந்திரன் – ஆதிரா இருவரும் சேர்ந்து கண்ணாடி பதித்த மர பீரோ ஒன்றை தங்களின் பரிசாக அளித்திருந்தார்கள். அதனுடன் சின்னதாய் ஒரு நாற்காலியும் வரும். அதையே ட்ரஸ்சிங் டேபிளாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாள் ஆதிரா. மலர்விழியும் மகிழ்மாறனும் தங்கள் பங்குக்கு ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்கிக்கொடுத்துவிட்டார்கள்.
“இதெல்லாம் எதுக்கு?” என்ற பவிதரனின் கேள்விக்கு அவர்களது அன்பான முறைப்பே பதிலாய்.
ஈஸ்வரியின் கையால் பால் காய்ச்சி விளக்கேற்றி மங்கலகரமாய் அந்த வீட்டின் சூழலை மாற்றிவிட்டார்கள் எனலாம்.
ஒரு ஹால், ஒரு படுக்கையறை, ஒரு சமையலறையோடு நிலத்தடி தண்ணீர் இணைப்பு இருந்தது. பின்வாசலில் இடம் அதிகம். வீட்டு முன்னேயும் முற்றம் விரிந்திருந்தது. முன்னும் பின்னும் திண்ணைகள் இருந்தன. கிராமத்து வீடுகளைத் திண்ணையில்லாமல் பார்ப்பது அரிது.
“பால் காய்ச்சுன வீட்டை வெறிச்சோட விடக்கூடாது பவி. ஆம்பளைங்க எல்லாரும் இங்கயே படுத்துக்கோங்க. கோவில்ல காலையில எல்லாம் தயாரா இருக்கும். நல்லநேரத்துக்கு முன்னாடி குளிச்சு ரெடியாகி எல்லாரும் கோவிலுக்குப் போயிடலாம்,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் குழலி.
மகிழ்மாறன், புவனேந்திரன், ரவி, பவிதரனோடு சிகாமணியும் அங்கேயே தங்கிவிட்டார். குழலிக்குத் துணையாய் ஷண்மதியோடு ஆதிராவும் மலர்விழியும் இருந்தார்கள்.
தேஜஸ்வினிக்குப் புது இடம் என்பதால் தூளியில் இட்டு ஆட்டினாலும் உறக்கம் வரவில்லை. கடைசியில் குழலி தனது கையில் வைத்து தாலாட்டுப் பாடி உறங்க வைத்தார் அவளை. ஷண்மதியின் மைந்தன் இரவுணவு முடிந்ததும் உறங்கிப்போக, அவளும் அவனை அணைத்துக்கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள். குட்டி கதிர்காமன் எந்தத் தொந்தரவும் செய்யாமல் அவனது அன்னையின் மடியிலேயே உறங்கிவிட்டான்.
குழந்தைகள் இருக்கையில் இரவு நேர உறக்கம் எல்லாம் எல்லா நாட்களும் தாய்மார்களுக்குச் சாத்தியப்படாது என்பதால் அவர்களின் உடலும் விழித்திருக்கப் பழகிக்கொள்ளும். மலர்விழியும் ஆதிராவும் தங்களது குழந்தைகள் உறங்கும் வரை விழித்திருந்து குழலியிடம் கதை பேசினார்கள். திருமணவீடு என்றால் இப்படித்தான் இருக்கும்.
மறுநாள் திருமணம் என்ற நினைவே யாருக்கும் உறக்கத்தை வரவிடாது. அனைவரின் மனமும் இயல்பிலிருந்து நழுவி கொண்டாட்டத்துக்குத் தாவியிருக்கும்போது நித்திரை எல்லாம் தூரம்தானே!
எவ்வளவு நேரம் கதை பேசுவது? குழந்தைகள் உறங்கிய பிற்பாடு குழலி இரு பெண்களையும் கண்ணயரச் சொல்லிவிட்டார்.
“பிள்ளைங்க தூங்கியாச்சு. பாய் விரிச்சுத் தர்றேன். ரெண்டு பேரும் நல்லா தூங்குங்க. பிள்ளை இடையில பசியில கத்துனா மட்டும் உன்னை எழுப்பி விடுறேன் ஆதி. இல்லனா நானே தூளியில போட்டுத் தூங்க வச்சிடுறேன்.”
அன்னையர் மீது இரக்கம் வைத்த குழந்தைகள் அன்றிரவு பாதி உறக்கத்தில் அழவில்லை. மறுநாள் விடியல் அனைவருக்குமே உற்சாகமானதொரு மனநிலையோடு விடிந்திருந்தது. மடமடவெனக் குளியல், புத்தாடை அணிதல் என நேரம் அதிவேகத்தில் பறந்தது. காலையில் சிவகாமியும் நரசிம்மனும் ஆஜராகிவிட்டார்கள். மற்றவர்கள் கோவிலுக்குத் திருமணத்திற்கான ஆயத்தங்களைச் செய்யப் போய்விட்டார்கள். மணமக்களை காரிலமர்த்திக் கோவிலுக்கு அழைத்துப் போனார்கள் சிவகாமியும் நரசிம்மனும்.
மணமக்கள் கோவிலை அடைந்தபோதே இன்னொரு காரும் வந்தது. யாரென அவர்கள் பார்த்தபோதே, “அண்ணாவும் மதினியும் வர்றதா சொன்னாங்க,” என்ற ஆதிரா காரிலிருந்து இறங்கிய மிருணாளினியையும் கர்ணனையும் கண்டதும் முகம் பூரித்துப் போனாள்.
மிருணாளினிக்கு அது ஐந்தாவது மாதம். அவளைக் கரம் பிடித்துக் கோவிலுக்கு அழைத்து வந்தான் கர்ணன்.
“பிள்ளைத்தாச்சி கோயிலுக்குப் போவலாமால?” என்று கர்ணனின் ஆச்சி மருதநாயகி அங்கலாய்த்தபோது, “கொடிமரம் இருக்குற கோவிலுக்குத்தானே போகக்கூடாது. நதியூர் முத்தாரம்மன் கோவில்ல கொடிமரம் கிடையாது அத்தை. நீ மிருணாவ கூட்டிட்டுப் போ கர்ணா,” என்று எழிலரசி பச்சைக்கொடி காட்டியிருந்தார்.
அவர்களைக் கண்டதும் மணமக்களான பவிதரனும் ஈஸ்வரியும் முகம் மலர புன்னகைத்தார்கள்.
“உங்க கல்யாணத்துக்கு வந்தே ஆகணும்னு ஒரே அடம்,” என்று கர்ணன் மிருணாளினியைக் காட்ட, “அப்ப உங்களுக்கு இங்க வர்றதுல விருப்பமில்லயா?” எனத் துடுக்காக வினவினாள் ஈஸ்வரி.
“அப்பிடினு இல்லம்மா… அது வந்து…” என அவன் இழுக்க,
“சரி சரி! பொண்டாட்டி மேலயும் பிள்ளை மேலயும் அவ்ளோ அன்புனு எனக்கும் புரியுது,” என்றாள் அவள்.
“கொஞ்சநேரமாச்சும் கல்யாணப்பொண்ணா வெக்கப்படுடி,” என்று சிவகாமி கேலி செய்யவும் ஈஸ்வரி சிரித்தபடியே தலையைக் குனிந்துகொண்டாள்.
“குனியக்கூடாது. நான் தாலி கட்டுறப்ப நீ என் கண்ணைப் பாக்கணும்.”
அவளது காதில் அழுத்தமாய் விழுந்தது பவிதரனின் கட்டளை. அவனைப் பார்க்க அவளுக்குத் திகட்டவா போகிறது! தலையை நிமிர்த்தியவள் பளீரெனப் புன்னகைக்கவும் செய்தாள்.
பின்னர் என்ன? நல்ல நேரம் ஆரம்பித்துவிட அம்மன் சன்னதியில் பூசாரி கொடுத்த மாலைகளை மாற்றிக்கொண்டார்கள் ஈஸ்வரியும் பவிதரனும். மாலை மாற்றியதும் அட்சதை அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. மாங்கல்யதாரணத்துக்கான நேரம் வந்தபோது அரக்கப் பறக்க வந்து சேர்ந்தார்கள் மதுமதியும் நிலவழகியும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

