“நேசிக்கிறவங்களோட அர்த்தமில்லாத பேச்சுல செலவளிக்குற நேரமும் அவங்களுக்காகக் காத்திருக்குற நேரமும்தான் நம்ம வாழ்க்கைய அழகாக்கும்னு நான் சொல்லுவேன். இதெல்லாம் நான் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு முடியெல்லாம் நரைச்ச வயசுல ‘நாம அந்தக் காலத்துல எவ்ளோ பேசிருக்கோம்ல’னு அவனோட தோள்ல சாய்ஞ்சு பேச வேண்டிய கதை. கிட்டத்தட்ட நினைவுகளின் சேமிப்புனு வச்சுக்கோங்களேன்!”
-ஈஸ்வரி
நகரத்தின் பரபரப்பு பெருமாள்புரம் ஏ காலனி என்ற அந்தப் பகுதியையும் விட்டுவைக்காத காலை வேளை. பூமி பூஜை போடப்பட்ட பிளாட்டில் பத்தியின் மணம் கமகமத்தது.
அங்கே பைக்கில் வந்து இறங்கினான் பவிதரன். ஸ்கைலைன் இன்ஃப்ரா ப்ரைவேட் லிமிட்டடின் ஊழியன் அவன். கட்டிடப் பொறியியலாளனாக அங்கே சேர்ந்த இரண்டாம் நாள். அவனது கையிலிருக்கும் பெரிய ஜவுளி சாம்ராஜ்யத்தின் உரிமையாளர் கட்டவிருக்கிற பங்களாவின் வரைபடம் இன்று தரையில் உயிர்பெற வேண்டிய நாள்.
முதல் நாளே மேஸ்திரி இதர ஊழியர்களிடம் அறிமுகமாகியிருந்தான் பவிதரன். அவனைப் பார்த்ததும் மேஸ்திரி ஓடோடி வந்தார்.
ஒரு பக்கம் மணல், சிமெண்ட், கான்க்ரீட் கலக்கும் இயந்திரத்தோடு ஜே.சி.பியும் வந்து நின்றது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சார் இன்னைக்கே ஃபூட்டிங் குழி தோண்ட ஆரம்பிச்சிடலாமா?” என அவனிடம் வினவினார்.
பவிதரன் தனது விழிகளால் சுற்றியிருந்த இடங்களை நோட்டமிட்டான். பின்னர் ஒரு இரும்புக் கம்பியை எடுத்து வருமாறு அவரிடம் கூறினான். அவரும் எடுத்து வர, அதைத் தான் நிற்குமிடத்தில் ஒரு காலை மட்டும் மடக்கி அமர்ந்து தரையைக் குத்தி அங்கிருந்து கிளர்ந்த மண்ணை முகர்ந்து பார்த்தான். அவனது புருவங்கள் சுழித்துக்கொண்டன.

“மண்ணுல ஈரம் அதிகமா இருக்கேண்ணே! பக்கத்துல ஏதாச்சும் குளம், குட்டை, கிணறு இருந்துச்சா?”
மேஸ்திரி மோவாயைச் சொரிந்தார். பின்னர் யோசனையோடு, “அந்தப் பக்கம் ஒரு கிணறு இருந்துச்சாம் சார். ரொம்ப வருசத்துக்கு முன்னாடி மூடிட்டாங்களாம்” என்றார்.
பவிதரன் கையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு எழுந்தான்.
“இந்த இடத்துல மண்ணோட தாங்கும் திறன் கம்மி. ட்ராயிங்ல உள்ள மாதிரி அஞ்சடி குழி எல்லாம் பத்தாது. ராஃப்ட் பவுண்டேஷன் போட்டாதான் பில்டிங் காலத்துக்கும் உக்காராம நிக்கும். ஆர்க்கிடெக்ட் கிட்ட நான் பேசிக்குறேன். நீங்க அஞ்சடி குழிய ஏழடியா மாத்துங்க.”
அவன் ஒரு கட்டுமான நிறுவனத்தை இத்தனை ஆண்டுகள் மேலாண்மை செய்திருக்கிறான். சைட்டில் நடக்கும் அனைத்து வேலைகளையும் மேற்பார்வை செய்தவன். அதனால் கட்டுமானத்தளத்தில் இருக்கும் சவால்கள் அனைத்துக்குமான தீர்வுகள் அவனிடம் தயாராக இருக்கும்.
முந்தைய தினமே பவிதரன் என்ன சொல்கிறானோ அதைச் செய்யுமாறு நிறுவனத்திடமிருந்து கட்டுமானத்தள ஊழியர்களுக்கு அறிவிப்பு வந்திருந்தது. அதனால் மேஸ்திரியும் உடனடியாக ஜே.சி.பியை இயக்குபவரிடம் ஓடினார்.
ஒரு பக்கம் மார்க்கிங் நடந்துகொண்டிருந்தது.
“நூல் பிடிச்சு மூலை மட்டம் பாருங்க பாலா. இல்லனா ரூஃப் போடுறப்ப ரூம் எல்லாம் கோணலா தெரியும்.”
இளம் பொறியியலாளன் ஒருவனிடம் வேலையைத் திருந்தச் செய்யுமாறு கட்டளையிட்டான். மணல், சிமெண்ட், இரும்புக் கம்பி என அனைத்தின் தரத்தையும் அவன் பரிசோதிக்க ஆரம்பிக்கையில் ஜே.சி.பி குழி தோண்ட ஆரம்பித்தது.
பவிதரனுக்கு எதையும் இழந்த உணர்வு எழவில்லை. இந்தக் கட்டிடங்களும், கட்டுமானத்தளங்களும்தான் அவனது ஜீவநாடி. அந்தக் கட்டுமானத்தளங்களில் எழும் சத்தங்கள்தான் அவனது இதயத்துடிப்பு. ஆங்காங்கே பரபரப்புடன் நடமாடும் ஊழியர்களின் நடமாட்டம் தான் அவனது நாட்களின் உயிரோட்டம்.
இதெல்லாம் இல்லாத நாள் அவனுக்கு வெறுமையாக அல்லவா கழியும். முதலாளி என்ற நாற்காலி மட்டுமே அவனது இப்போதைய இழப்பு. மற்றபடி அவனை உயிர்ப்போடு நடமாட வைக்கும் அனைத்துமே அவனிடம் இருக்கின்றனவே!
வெயில் ஏறுவதும் வேலை நடப்பதும் அவனது பார்வையில் காட்சியாய் விரிய, பவிதரன் தனது புதிய வேலையில் மனநிறைவோடு ஆழ்ந்து போனான்.
அதே நேரத்தில் மேரு பில்டர்ஸின் அலுவலக அறையில் மேலாண்மை இயக்குநர் நாற்காலியில் அமர்ந்திருந்தான் தர்ஷன். முகத்தில் அத்துணை கர்வம்!
அவன் முன்னே பலிக்கடாக்கள் போல நின்று கொண்டிருந்தார்கள் நான்கு ஊழியர்கள்.
“இனிமே இந்தக் கம்பெனியோட எம்.டி நான். எனக்குக் கீழ தான் நீங்க நாலு பேரும் ஒர்க் பண்ணப்போறிங்க. ஆமா, அந்த அக்கவுண்டெண்ட் பொண்ணு எங்க போனா?”
கண்களைச் சுருக்கி ஈஸ்வரியைப் பற்றி வினவினான் சுமதியிடம்.
“சார்… அவ வேலைய விட்டு நின்னுட்டா.”
“ஓஹ்! அவ ரெசிக்னேஷன் லெட்டர் எங்க?” இந்தக் கேள்வி ஜீவனிடம்.
“அவ ரெசிக்னேஷன் லெட்டர் எதுவும் குடுக்கல சார்” என்றான் அவன் பணிவாக.
தர்ஷனின் முகத்தில் அதிகாரத் திமிர் குடியேறியிருந்தது அலுவலகத்திற்குள் நுழைந்தபோதே. அது இப்போது இன்னும் அதிகமானது.
“முறைப்படி ரிசைன் பண்ணாததால அவ எத்தனை நாள் வேலை பார்த்தாளோ அந்தச் சேலரியைக் கட் பண்ணிடுங்க. அவ அக்கவுண்டுல போடவேண்டாம். அவ இடத்துக்கு இன்னொரு ஆளை அப்பாயிண்ட் பண்ணுறதுக்கு ஆட்ஸ், நியூஸ் பேப்பர்னு நமக்குச் செலவு இருக்கு. அதுக்கு அந்தப் பணத்தை யூஸ் பண்ணிக்கலாம்.”
அவன் சாதாரணமாகச் சொல்ல அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ந்து போனார்கள்.
“சார்… அது எப்பிடி…”
சுமதி திணறவும், “ரொம்ப யோசிக்குறிங்களே! உங்க இடத்துக்கும் இன்னொருத்தரை அப்பாயிண்ட் பண்ணிடலாமா?” என்று கேட்க அவரோ அதிர்ந்து போனார். அவர் மட்டுமில்லை, அங்கிருந்த அனைவரும்தான்.
ஜீவனை இடுங்கிய விழிகளால் நோட்டமிட்டவன், “நீதானே அன்னைக்கு எனக்கு ஃபைல்ஸ் காட்ட மாட்டேன்னு சொன்னவன்?” என்று தலை முதல் கால் வரை சுட்டிக் காட்டி வினவ, அவனும் ஆமெனத் தலையசைத்தான்.
“வெல்! இந்த மாசக்கடைசி வரைக்கும் நீ இங்க ஒர்க் பண்ணலாம். அடுத்த மாசம் உன் ப்ளேசுக்கு வேற ஒருத்தரை அப்பாயிண்ட் பண்ணிக்கிறேன்.”
ஜீவனுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு வராத குறை. இந்த ஊதியத்தை வைத்து அவனுக்கெனச் சில பொறுப்புகள் இருக்கின்றன. திடுமென வேலையை விட்டு நிறுத்தினால் அவன் என்ன செய்வான்?
“சார் திடீர்னு இப்பிடி சொல்லுறிங்களே? நான் இந்தக் கம்பெனிக்கு விசுவாசமா உழைக்குறவன் சார்” என்றான் கலங்கிய குரலில்.
தர்ஷனின் இதழ்களில் அலட்சியப் புன்னகை.
“விசுவாசத்தை வச்சு என்ன பண்ணுறது? நீ வேலை பாக்குற. கம்பெனி சம்பளம் குடுத்துச்சு. இதுல விசுவாசம் எங்க இருந்து வந்துச்சு? மை ஃபூட்.”
உதாசீனப்படுத்துவதன் வலியை முதல்முறையாக அனுபவித்தார்கள் மேரு பில்டர்ஸின் ஊழியர்கள். ஜீவன் எவ்வளவு கெஞ்சியும் தர்ஷனின் மனம் மாறவில்லை. அவன் வேலையை விட்டுப் போயே ஆகவேண்டுமெனக் கட்டளையிட்டுவிட்டு அடுத்தடுத்த கட்டளைகளை இன்னொரு ஊழியனிடம் பிறப்பிக்க ஆரம்பித்தான்.
“இந்த ஆபிசோட இண்டீரியர் எனக்குச் சுத்தமா பிடிக்கல. அதை மாத்தணும். தென்., இந்தப் பழைய கப்போர்ட் எல்லாம் தூக்கிட்டு வேற ரேக்ஸ் வைக்கணும்.”
அவன் கட்டளையிடுவதைக் குறித்துக்கொண்டான் அந்த ஊழியன்.
இவ்வாறாக நாற்காலியிலிருந்து இறங்கியவனுக்குச் சாமானியனைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பையும், முதல் முறை நாற்காலியில் அமர்பவனுக்கு அந்த நாற்காலிக்குரிய பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் கொடுத்தது விதி. இதில் யார் தனது நிலையை உயர்த்திக்கொள்ளப்போகிறார்கள் என்பது அந்த விதிக்கே வெளிச்சம்.
பவிதரனுக்கு அன்றைய தினம் மதியம் மலர்விழியிடமிருந்து வாட்ஸ்அப்பில் செய்தி வந்திருந்தது.
“இளவரசி அத்தை கிட்ட பேசிட்டேன்ணா. அவங்களுக்கும் மாமாவுக்கும் உங்க கல்யாணத்துல முழு சம்மதம். நான் போன் பண்ணுனப்ப ஈசு இல்ல. அவ சந்தைக்குப் போயிருக்கானு அத்தை சொல்லிச்சு. இப்ப வரை நான் அவ கிட்ட சொல்லலை. நீங்க சர்ப்ரைஸ் குடுங்க அவங்களுக்கு.”
அந்த வாட்ஸ்அப் செய்தி கொடுத்த மகிழ்ச்சியோடு வேலையில் உற்சாகமாக ஈடுபட்டவன், அன்றைய தினம் சைட்டிலிருந்து கிளம்பியபோது மேஸ்திரி அவனிடம் விடைபெற வந்தார்.
“போயிட்டு வாங்கண்ணே.”
மேஸ்திரியின் புன்னகை விரிந்தது.
“இதுக்கு முன்னாடி இருந்த இஞ்சினியரு இப்பிடியெல்லாம் பேசமாட்டாரு தம்பி. ஒரு அடி தள்ளி நின்னுதான் அவர் கிட்ட எதையும் சொல்லணும்.”
“ஒரு கையோட ஐந்து விரல் கூட ஒன்னு போல இருக்குறது இல்லையேண்ணே! அப்புறம் மனுசங்க எப்பிடி ஒன்னு போல இருப்பாங்க?”
“வாஸ்தவம் தம்பி! நான் கிளம்புறேன்.”
அவர் கிளம்பியதும் பைக்கை உதைத்தான் பவிதரன். நிறுவனத்திலிருந்து அவனுக்குக் கொடுத்திருக்கும் பைக் அது. அதற்கான பெட்ரோல் செலவு எல்லாம் நிறுவனத்தின் கணக்கில்தான் எழுதப்படும். நல்ல வேளை! மரியாதையும் இருக்கிறது. ஆனால் பவிதரனுக்குள் ‘இது போதும்’ என்ற எண்ணம் மட்டும் வரவில்லை. சீக்கிரமே அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டுமென்ற முனைப்பு அவனுக்குள் தீப்பொறியாய் எரிந்து கொண்டிருந்தது.
பைக்கை எட்டி உதைத்தபோது திடுமென வேகவைத்த மரவள்ளிக்கிழங்கின் நறுமணம் அவனது நாசிக்குள் நுழைந்தது.

சில அடிகள் தள்ளி ஒரு தள்ளுவண்டியில் மரவள்ளிக்கிழங்கு புட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். இதெல்லாம் சிறுவயதில் அவனது ஆச்சி கையால் செய்து சாப்பிட்டது. நறுக்கென்ற பச்சை மிளகாயின் காரமும், எண்ணெய்யில் கண்ணாடியாய் வதங்கிய வெங்காயத்தின் சுவையும், தேங்காய்ப்பூவின் இனிப்பும் சேர்ந்து அந்தப் புட்டுக்கு இன்னும் சுவை கூட்டும்.
தள்ளுவண்டி அருகே போய் அதை வாங்கிக்கொண்டவன் பைக்கை விரட்டினான் நதியூரை நோக்கி. செல்லும் போது ரங்கநல்லூரைக் கடக்க நேரிட்டது. அப்போது சில நொடிகள் அவன் மனம் வேதனையுற்றது என்னவோ உண்மை! அவனும் சராசரி மனிதன் தானே! அந்த ஊர் எல்லையைத் தாண்டி கால்வாய் பாலத்தைக் கடந்து புளியமரங்கள் இருமருங்கிலும் நிற்கும் நதியூரின் சாலையை அடையும் வரை இந்த வேதனை யாரோ ஊசியால் அவனது இதயத்தில் கோடிழுப்பது போல அவனுக்குள் பரவிக்கொண்டிருந்தது.
சரியாய் அவன் சிகாமணியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அங்கே குழலியோடு திண்ணையில் அமர்ந்து ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தாள் ஈஸ்வரி.
பவிதரனைப் பார்த்ததும் “வந்துட்டிங்களா?” என்று விழிகள் மலர எழுந்தாள்.
பவிதரன் அவன் வாங்கி வந்த மரவள்ளிக்கிழங்கு புட்டு அடங்கிய பார்சலை அவளிடம் கொடுத்தான்.
“என்ன இது?” என்று கேட்டவளிடம்,
“ஏழிலைக்கிழங்கு புட்டு” என்றவன் குழலியிடம் “உங்களுக்கு ஞாபகம் இருக்கா சித்தி? ஆச்சி இந்தப் புட்டு அடிக்கடி செய்யும்” என்க
“ஆமா! அத்தை சோம்பேறித்தனமில்லாம பண்ணுவாங்க. அவங்க பக்குவமா கிழங்கை வெட்டி எடுப்பாங்க. உன் சித்தப்பா போன தடவை கிழங்கு விதைச்சாரு. ஆனா அறுவடை பண்ணுறப்ப பாதிக்குப் பாதி கறுத்துப் போச்சு” என்று கதை பேசலானார்.
“காபி போடட்டுமா உனக்கு?” என்று எழுந்திருக்கப் போனவரிடம்,
“வேண்டாம் சித்தி. சித்தப்பா எங்க?” என வினவினான்.
“இப்ப வந்துடுவாவ” என்றவர் ஈஸ்வரி இன்னும் கையில் பார்சலை வைத்தபடி நிற்கவும்,
“இதை ஏன் கையில வச்சுக்கிட்டு நிக்குற? போய் தட்டுல போட்டு எடுத்துட்டு வா. உங்க மாமா வர்ற வரைக்கும் நாம காத்திருக்க முடியாதுட்டி” என்றார் சிரிப்போடு.
ஈஸ்வரி வீட்டுக்குள் செல்ல, பவிதரன் அவளைப் பார்த்தபடியே “நான் கை கால் கழுவிட்டு ட்ரஸ் மாத்திட்டு வர்றேன் சித்தி” என்று சொன்னவனாய் வீட்டுக்குள் வந்தான். மலர்விழியின் அறைதான் இப்போது அவனது அறையாகியிருந்தது.
மடமடவென காட்டன் சட்டை, லுங்கிக்கு மாறியவன் ஈஸ்வரியைத் தேடி சமையலறைக்கு விரைந்தான். அவள் நான்கு தட்டுகளில் மரவள்ளிக்கிழங்கு புட்டை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
அவன் வருவதைக் காலடி சத்தத்திலிருந்து கண்டுகொண்டவள் “வேலை எல்லாம் எப்பிடி இருந்துச்சு?” என விசாரித்தாள்.
“நல்லா இருந்துச்சு. இன்னைக்கு ஃபூட்டிங் குழி தோண்டியாச்சு.”
“ஆளுங்க எல்லாம்…”
மீண்டும் அவள் வேலையைக் குறிப்பிடவும் “எல்லாமே நல்லா இருந்துச்சு. அதை விடேன். என்னைக் கவனி” என்றான் சிறுபிள்ளை போல.
மலர்விழி சொன்ன நற்செய்தியை அவளிடம் சொல்லி அவளது முகம் பூரிப்பதை ரசிக்கும் ஆர்வம் அவனுக்கு.
ஈஸ்வரி இடுப்பில் கையூன்றி அவனை முறைத்தவள் “என்ன கவனிக்கணும் முதலாளி? நல்லா தானே இருக்கிங்க” என்றாள்.
“சும்மா ஒரு நிமிசம் உன் கண்ணைப் பாத்தா போதும். லோவான பேட்டரி சார்ஜ் ஏறிடும்டி சண்டைக்காரி.”
“எப்பேர்ப்பட்ட வரிகள்!”
மீம் வரிகளை அவள் சொல்லி சிலாகிக்கவும் போலியாய் அவளிடம் கோபம் காட்டினான் பவிதரன்.
“நான் சும்மா சொல்லுறேன்னு நினைக்குறியா? நிஜமா இப்பதான் மனசு ப்ரிஸ்கா ஃபீல் பண்ணுது.”
இவர்கள் பேசும்போதே “ஏட்டி ஈஸ்வரி! விளக்கேத்துற நேரத்துல வீட்டுக்கு வராம இங்க என்ன பண்ணுத?” என்று இளவரசியின் குரல் கேட்டது வெளியே.
“ஆத்தாடி! எங்கம்மா வந்துடுச்சு போலயே! தட்டைப் பிடிங்க” எனப் பரபரத்தவளைத் தனது கைவளைவுக்குள் அனாயசமாகக் கொண்டு வந்து தன்னை நோக்கித் திருப்பினான்.

“எங்க இருந்து உங்களுக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சு?”
“சும்மா கண்ணை உருட்டாத. இந்தத் தைரியத்தைக் குடுத்தவளே நீதான். கல்யாணம் பண்ணிக்கோங்கனு கேட்டது நீயா நானா?”
“நான்தான்! அதுக்குனு…”
“என்ன நொதுக்குனு? கல்யாணம் பண்ணி நீ என்ன சொப்பு ஜாமான் வச்சா விளையாடப்போற?”
கேட்டவனின் விழிகளில் விசமமும் குறும்பும் மின்னின.
“ஏட்டி ஈஸ்வரி!”
இரண்டாம் முறையாகக் கத்தினார் இளவரசி.
“விடுங்களேன்! இல்லனா எங்கம்மா கிச்சனுக்கே வந்துடும். நேத்து அவ்ளோ தயங்குன ஆளுக்கு இன்னைக்கு என்னாச்சு?” பரிதவித்தவளின் திமிறல்கள் எதுவும் அவனது புஜத்தையும் தோள்வளைவையும் தாண்டிவிடவில்லை.
“சண்டைக்காரியோட பலம் இவ்ளோதானா?” சீண்டினான் பவிதரன்.
“நறுக்குனு கொட்டுனேன்னா மூளை கழங்கிடும். இப்பிடி ஆக்டோபஸ் மாதிரி வளைச்சுப் பிடிச்சுக்கிட்டா பீமனோட லேடி வெர்சனா இருந்தா கூட விலக முடியாது.”
பவிதரனுக்கு அவளைச் சீண்டவும், அவளது முட்டைக்கண்களில் இந்தக் கோபத்தையும் காணவும் பிடித்திருந்தது.
“ஏட்டி! காது கேக்குதா இல்லையா?”
இம்முறை இளவரசியின் குரலில் இருந்த காட்டத்தை உணர்ந்த பவிதரன் அவனே முன்வந்து அவளை விலக்கி நிறுத்தினான்.
“என் பங்கையும் சேர்த்து நீங்களே சாப்பிடுங்க. இதுக்கு மேல இங்க நின்னா உங்க மாமியாக்காரி என் காதைப் பிடிச்சு இழுத்துட்டுப் போயிடும்.”
படபடவெனப் பொரிந்தவள் வேகமாகச் சமையலறையிலிருந்து ஓடினாள்.
பவிதரன் சிரிப்போடு மூன்று தட்டுகளையும் எடுத்துக்கொண்டு முன்வாயில் திண்ணைக்கு வந்தான். அவனைக் கண்டதும் புன்னகைத்த இளவரசிக்குப் பேச்சுதான் வரவில்லை.
“சாப்பிடுறிங்களாத்தை?” எனக் கேட்டாலும் வம்படியாக அவரது கையில் தட்டைத் திணித்தான் பவிதரன்.
ஈஸ்வரி ‘அப்படி செய்யாதே’ என்று காட்டிய கண்ஜாடைகள் யாவும் வீணாய்ப் போக அடுத்த தட்டை வாங்கிக்கொண்டார் குழலி.
“ஈஸ்வரிக்கு?” என அவர் கேட்க,
“நானும் அவளும் ஒரே தட்டுல சாப்பிட்டுக்குறோம்” என்றவன் இரு பெண்மணிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான் என்றால், ஈஸ்வரியோ மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டாள்.
“ஏன் நிக்குற? இங்க வந்து உக்காரு.”
பவிதரன் சொல்ல பரிதாபமாய் விழித்தாள் அவள்.
இளவரசி தனது கையிலிருந்த தட்டில் உள்ள புட்டையும் மகளையும் மாறி மாறிப் பார்த்தார். பவிதரன் சுவாதீனமாக ஈஸ்வரியின் கையைப் பிடித்துத் தன்னருகே அமர வைத்துக் கொண்டான்.
“என்ன பண்ணுறிங்க? எங்கம்மா பாக்குது” கடித்த பற்களிடையே கிசுகிசுத்தாள் அவள்.
“பாக்கட்டும். இந்தப் பையனுக்கு நம்ம மக மேல எவ்ளோ பிரியம்னு மனசு குளிர்ந்து போவாங்க.”
“எதே?”
“சாப்பிடு” என்று ஊட்டிவிட முயன்றவனைக் கண்களால் மிரட்டியவள் தானே எடுத்துச் சாப்பிட்டாள்.
பவிதரன் சாப்பிட்டபடியே, “மலர் உங்க கிட்ட பேசுனதா சொன்னா அத்தை. நீங்களும் மாமாவும் எங்க கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லலைனு வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணிருந்தா” என்று மதியம் மலர்விழி தனக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியைக் குறிப்பு காட்டிப் பேசினான்.
இளவரசியும் ஆமோதித்தார்.
“இது எப்ப?” ஈஸ்வரி திகைக்க,
“நீ சந்தைக்குக் காய்கறி வாங்க போயிருந்தல்ல. அப்ப மலரு பேசுனா” என்றார் அவர்.
என்னிடம் யாரும் சொல்லவில்லை என அவள் திகைக்கும்போதே இளவரசி தனது சம்மதத்தைப் பவிதரனிடம் தெரிவித்தார்.
“எனக்கும் இவ அப்பாக்கும் முழுச்சம்மதம் தம்பி. எல்லாம் முறைப்படி நடந்தா எங்களுக்குச் சந்தோஷம். நாங்களும் ஒத்தைக்கு ஒரு பொட்டப்புள்ளை வச்சிருக்கோம்.”
“புரியுது அத்தை! நீங்க வருத்தப்படுற மாதிரியோ கவலைப்படுற மாதிரியோ எதுவும் நடக்காது. எல்லாம் முறைப்படி செய்ய சித்தியும் சித்தப்பாவும் இருக்காங்க. யாராலயும் உங்களுக்குப் பிரச்சனை வராது. நான் இருக்குறேன்.”
பவிதரன் நம்பிக்கையாய் உரைக்கவும் இளவரசிக்கும் அவனது பெற்றோரால் எந்தப் பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கை பிறந்தது.
மகளோடு அன்பாய் உரையாடுபவனைப் பார்த்தவருக்கு ஒரு கிராமத்துப் பெண்மணியாய் அந்தக் காட்சி சங்கடமாய் இருந்தாலும், ஒரு அன்னையாய் வருங்கால மருமகன் மகளிடம் காட்டும் ஆதுரத்தில் அவரது மனம் என்னவோ நிறைந்து போனது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

