“ஆணுக்கு நடக்குற உணர்வுச் சுரண்டலை பத்தி யாருமே பேசி நான் கேட்டது இல்ல. அவன் படிக்குறதுல ஆரம்பிச்சு சம்பாதிக்கிற வரைக்கும் எதுவுமே அவனுக்காக இல்ல. குடும்பத்துக்கு ஒரு பிரச்சனைனா நேரங்காலம் தெரியாம ஓடணும். அவங்களுக்கு அரணா நிக்கணும். வருங்காலத்துக்கான நம்பிக்கை அவங்களுக்கு வரணும்ங்கிறதுக்காகத் தன்னோட சின்னச் சின்ன கனவுகளைத் தனக்குள்ள புதைச்சுக்கிட்டு சந்தோசமா இருக்குற மாதிரி நடிக்கணும். சுருக்கமாச் சொல்லணும்னா கூட்டுக் குடும்பங்கள்ல ஒரு ஆண்ங்கிறவன் தேவைப்படும்போது கடவுளா தெரிவான். அவனை வச்சு காரியம் எல்லாம் முடிஞ்சாச்சுன்னா கறிவேப்பிலையா ஒதுக்கப்படுவான். இது நிதர்சனம். அம்மா அப்பா அக்கா தங்கச்சி அண்ணன் தம்பின்னு எல்லாருக்காகவும் ஓடி களைச்சு தனக்கான கூட்டை அவன் கட்டாம இருந்தான்னா அவனுக்குச் சின்ன இளைப்பாறுதலா வாழ்க்கைத்துணைன்னு ஒருத்தி கூட இருக்கமாட்டா.”
-பவிதரன்
பவிதரனின் கார் அதிவேகத்தில் சாலையில் போய்க்கொண்டிருந்தது. மனம் அமைதியிழக்கும் பொழுதுகளில் அவன் காரை எடுத்துக்கொண்டு போய்விடுவான்.
இப்போதோ அவனது மனம் ஜீவனை இழந்து தவிக்கிறது. இந்தத் தவிப்பை எப்படி அடக்குவதெனத் தெரியாமல் மொத்த பாதிப்பையும் காரின் ஸ்டீயரிங் வீலில் காட்டிக்கொண்டிருந்தான்.
புயலாய் கடும் வேகத்தில் பயணித்த கார் ஒரு கட்டத்தில் வேகமிழந்து இயக்கத்தையும் நிறுத்தியது பெருங்குளம் என்ற கிராமத்தின் மூன்றாய்ப் பிரியும் சாலை ஒன்றில்.
மூன்று மூலைகளும் சந்திக்கும் இடத்தில் ஆலமரத்தினடியில் காரை நிறுத்திய பவிதரனின் கண்களுக்குச் சற்று தள்ளி தெரிந்த மாயக்கூத்தர் ஆலயத்தின் கோபுரமும் சுற்றுச் சுவர்களும் பெரியதொரு ஆறுதலை அளிப்பதாய்!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

எதிரே ஊரின் பெயரை மெய்ப்பிக்கும்படி பெரிய குளமொன்று விரிந்து கிடந்தது. தண்ணீர் அலைகள் மோதுவதைப் பார்த்தபடி நின்றான் பவிதரன்.
எப்போது என்ன பிரச்சனை வந்தாலும் இங்கே வந்துவிடுவான். இந்தக் குளக்கரையானது சில சமயங்களில் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதும் உண்டு. அப்போதும் கூட இந்த இடம் அளிக்கும் அமைதியை வேறு எந்த இடமும் அவனுக்கு அளிப்பதில்லை.
இப்போது அவனது மனவேதனைக்கு நிச்சயம் மருந்து தேவை. இந்தச் சூழல் மட்டுமே அவனுக்கான மருந்தாக இருக்க முடியும்.
இடுப்பில் கையூன்றி அலையடிக்கும் குளத்தைப் பார்த்தபடி நின்றவனுக்கு இனி தனது வாழ்க்கையில் ஈஸ்வரி இல்லை என்ற உண்மையைச் சீரணிப்பதே பெரும் சவாலாய்!
அவனைப் போலவே அவனது மொபைலும் ஜீவனிழந்து கிடந்தது. யாரிடமும் பேசப் பிடிக்காமல் ஆஃப் செய்தவனுக்கு இங்கிருந்து கண்காணாத இடத்துக்குப் போய்விடுமளவுக்கு வெறி.
இதுநாள் வரை அவன் எத்தனையோ அழுத்தமான சூழல்களை நிதானமாய்க் கடந்திருக்கிறான். ஆனால் இந்தச் சூழல், இந்த வேதனை இதெல்லாம் அவனை நிதானமடைய விடவில்லை.
எதிர்காலம் பற்றிய கனவுகள்! எதிர்பார்ப்புகள்! இப்போது அனைத்தும் வெறுமையான காகிதங்களாய் அவனைக் கேலி செய்தன.
கௌரவம் என்ற வார்த்தையே வெறுத்துப்போனது.
இந்த வார்த்தைக்காகத்தான் தகுதியற்ற ஒருவனிடம் அவனது தங்கை தள்ளப்பட்டாள். அப்போது அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இந்த வார்த்தைதான் அவனது சித்தப்பாவுக்குத் துரோகம் செய்ய தந்தையைத் தூண்டியது. காலங்கடந்து அறிந்தவனுக்குச் சித்தப்பா இழந்ததை மீட்டுக்கொடுக்க முடிந்ததே தவிர அவரது கடந்தகால அவமானங்களைத் துடைக்க முடியவில்லை.
இப்போதும் அதே கௌரவம் என்ற வார்த்தை அவனது வாழ்க்கையிலும் விளையாடிவிட்டது. இந்த முறை அவனது வலி அதீதமானது. வாழ்க்கை முழுமைக்குமானது.
இதற்கு வலிநிவாரணியே இல்லை என்பதுதான் பெரும்சோகம்.
கால்கள் வலியில் கடுக்குமளவுக்கு அதே இடத்தில் வெகு நேரம் நின்றவனுக்கு இலக்கற்ற கொந்தளித்துப் போன கடலாய் வாழ்க்கை தெரிந்தது.
மெதுவாய் தனது கையை விரித்துப் பார்த்தான்.
“என்னை விட்டுருங்க ப்ளீஸ்” ஈஸ்வரியின் குரல் செவிகளில் ரீங்காரமிட்டது. அவன் விட்டுவிட்டான். அவளை மட்டுமல்ல! யாவும் அவளே என அவனுக்குள் கட்டிவைத்திருந்த அத்துணை கனவுகளையும் சேர்த்து விட்டுவிட்டான்.
விலகுகிறேன் என்பவளை இழுத்துப் பிடித்து வைக்கும் மாயாஜாலம் எல்லாம் அறியாத சாதாரண மானுடன் அவன். வேதனையைக் குறைக்க எவ்வளவு நேரம்தான் வேடிக்கையைக் கருவியாக உபயோகிப்பான்?
ஒரு கட்டத்தில் ‘நீ திரும்பிப் போ’ என்று யாரோ அவனது காதில் சொல்வது போல பிரமை. எப்போதும் அந்த இடத்திலிருந்து கிளம்பும் முன்னர் மாயக்கூத்தர் பெருமாளின் கோவில் கோபுரத்தை நோக்கி இரு நிமிடங்கள் கண் மூடி வேண்டுவது அவனது வாடிக்கை. ஆனால் அன்று வேண்டிக்கொள்ள தோன்றவில்லை.
‘இனி எனக்கென வேண்டுவதற்கு என்ன மிச்சமிருக்கிறது?’
விரக்தியோடு காருக்கு வந்தவனைப் பார்த்து வெறும் கருந்திரையோடு சிரித்தது அவனது மொபைல். அதை உயிர்ப்பித்துவிட்டுக் காரைக் கிளப்பினான்.
மொபைல் ஆன் ஆனதும் வரிசையாய் நோட்டிபிகேஷன் வந்த வண்ணமாய் இருக்க ஒரு கண்ணை சாலையிலும் இன்னொரு கண்ணை மொபைலிலும் வைத்தபடி காரை ஓட்டிக்கொண்டிருந்தான் பவிதரன்.
ஏகப்பட்ட துண்டிக்கப்பட்ட அழைப்புகள்! ஏகப்பட்ட வாட்ஸ்அப் செய்திகள்! இதெல்லாம் அசாதாரணமாய்த் தோன்றவும் காரை ஓரங்கட்டினான்.
மொபைலை நிதானமாய் நோட்டமிட்டான்.
பெரும்பாலான அழைப்புகள் மேஸ்திரி ராமசாமியிடமிருந்தும் ஈஸ்வரியிடமிருந்தும் வந்திருந்தன. வாட்ஸ்அப் செய்திகள் எல்லாம் ஈஸ்வரியின் உபயம்.
“எங்க இருக்குறீங்க? இங்க என்னெல்லாமோ நடக்குது. சீக்கிரமா வாங்க.”
முதல் செய்தியைப் படித்ததும் பவிதரனின் மனம் பரபரப்புற்றது.
“போலீஸ் வந்திருக்காங்க. ராமசாமியண்ணனை அரெஸ்ட் பண்ணி இழுத்துட்டுப் போறாங்க. உங்களுக்குக் கால் பண்ணுனாராம். உங்க போன் சுவிட்ச் ஆஃப்னு வந்ததா சொன்னார். நான் கால் பண்ணுனப்பவும் அப்பிடித்தான் வருது. எங்க போனீங்க?”
இச்செய்தியைப் படித்த பிற்பாடும் அமைதியாக அடுத்த செய்தியைப் படிக்கும் பொறுமையை இழந்தான் பவிதரன். காரை படுவேகமாகக் கிளப்பினான்.
அடுத்து ஈஸ்வரி ஒரு வாய்ஸ் மெசேஜ் போட்டிருந்தாள். அவசரமும் அழுகையுமாகப் பின்னணியில் என்னென்னவோ குரல்கள்! ராமசாமியின் மனைவி சௌந்தரவல்லி அழுவது கூட கேட்டது.
“நம்ம கம்பெனி குடோன்ல இருந்து இரும்புக் கம்பி, எலக்ட்ரிக் வயர் பண்டில் எல்லாம் காணாம போயிடுச்சாம்; மதிப்பு இலட்சக்கணக்குல வருதாம். உங்க தங்கச்சி புருஷன் போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்திருக்கான் ராமசாமியண்ணன் மேல. அவர் கூட வேலை செய்வானுங்களே அந்தப் பீஹாரி பசங்க, அவங்களையும் போலீஸ் அடிச்சு இழுத்துட்டுப் போயிருக்காங்க. ராமசாமியண்ணனும் அந்தப் பசங்களும் அப்பிடி செஞ்சிருப்பாங்கனு நீங்களும் நினைக்குறீங்களா? ப்ளீஸ்! வாய்ஸ் மெசேஜ் கேட்டதும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க.”
அவள் காவல்நிலையத்தின் பெயரைக் குறிப்பிடவும் காரை அங்கே விரட்டினான் பவிதரன்.
மனதுக்குள் உணர்வுகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன. அவனது குடும்பத்தார் அவனுடைய முதுகுக்குப் பின்னே செய்யும் இரண்டாவது அராஜகம் இது. ஊழியர்கள் அனைவரைப் பற்றியும் அறிந்தவன் பவிதரன்.
இருபத்து மூன்றும், இருபத்து ஐந்துமாக பீஹாரிலிருந்து வந்திருக்கும் இளைஞர்கள் உழைப்பதற்கு சுணங்கவே மாட்டார்கள். ஒரு கப் காபி கொடுத்தாலும் அத்துணை நன்றியோடு சிரிப்பார்கள். அவர்கள் ஊரில் கிடைக்காத ஊதியமும், வேலைவாய்ப்பும், நல்லதொரு சூழலும் இங்கே இருப்பதால் தான் வருகிறார்கள்.
“கொஞ்சம் காசு சேர்த்துக் கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம் என் பொண்டாட்டியையும் இங்க அழைச்சிட்டு வந்திடுவேன். இங்க ஆஸ்பத்திரி, ஸ்கூல் எல்லாமே நல்லா இருக்கு. எங்க பசங்க இங்க இருந்தா படிச்சு முன்னேறும்ல.”
இருபத்தைந்து வயது இளைஞன் ஒரு முறை வேலை செய்தபடி பேசியதைக் கேட்டிருக்கிறான் பவிதரன்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும்! வடக்கிலிருந்து வந்தாலே குற்றவாளி என்று பார்ப்பது நச்சு மனநிலை. அவர்களில் மோசமானவர்கள் இருக்கலாம். மறுக்க முடியாது. ஏன் நமது ஆட்களில் திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன், பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவனே கிடையாதா?
சமீபத்தில் பரவி வரும் ‘வடக்கு ஃபோபியாவால்’ ஒன்றுமறியாத இளைஞர்களின் எதிர்காலம் நாசமாகிவிடக்கூடாதென்ற பதற்றத்தோடு காவல் நிலையத்தை அடைந்தான் பவிதரன்.
இறங்கியதுமே தங்களது நிறுவனத்தில் சட்ட ரீதியான அலுவல்களைக் கவனிக்கும் வழக்குரைஞர் ஞானபிரகாசத்தின் மொபைலுக்கு அழைத்தபடி காவல் நிலையத்தை நோக்கி நடந்தான் அவன்.
அங்கே அழுதுகொண்டிருந்த பெண்மணி ஒருவரைச் சமாதானம் செய்துகொண்டிருந்தாள் ஈஸ்வரி. பவிதரன் வருவதைக் கண்டதும் அவளது கண்களில் நம்பிக்கை.
“மதினி அவங்க வந்துட்டாங்க. இனிமே அண்ணனை வெளிய விட்டுருவாங்க,” என்று சொல்ல அழுதுகொண்டிருந்த பெண்மணியோ அவனை நோக்கி கைகூப்பினார்.
“என் வீட்டாளு (கணவர்) இந்தக் கள்ளத்தனம் எல்லாம் செய்யாது தம்பி. அது உண்டு அது வேலை உண்டுனு இருக்கும். இப்பிடிப் பழியத் தூக்கிப் போட்டு உள்ள உக்கார வச்சிட்டாவளே.”
“அழாதீங்க அக்கா. நான் போய்ப் பேசுறேன்! இவங்களோட வீட்டுக்குக் கிளம்பு. போலீஸ் ஸ்டேஷன்ல ரொம்ப நேரம் நிக்கவேண்டாம்.”
“ராமசாமியண்ணன் இல்லாம வரமாட்டேன்னு மதினி சொல்லுது.”
பவிதரன் பொறுமையிழந்து பார்த்தான். பின்னர் தனது கார்ச்சாவியை அவளிடம் நீட்டினான்.
“கார்ல உக்காருங்க ரெண்டு பேரும். அட்வகேட்டுக்குக் கால் பண்ணிருக்கேன். அவர் வந்துட்டார்னா பிரச்சனை முடிஞ்சிடும். இங்க நிக்கவேண்டாம்.”
தலையாட்டியபடியே கார்ச்சாவியை வாங்கிக்கொண்டாள் ஈஸ்வரி.
பவிதரன் காவல் ஆய்வாளரைச் சந்தித்து என்ன பிரச்சனையென வினவினான். அவனைக் கண்டதுமே ராமசாமியும் அந்த ஐந்து வடக்கு இளைஞர்களும் அழுதார்கள்.
“நாங்க திருடலனு சொன்னா நம்ப மாட்டேங்கறாங்க தம்பி.”
கூனிக் குறுகி நின்றார் ராமசாமி. இத்தனை ஆண்டு கௌரவமாய் வாழ்ந்த வாழ்க்கை போனதே என்ற வேதனை!
“அட்வகேட் இப்ப வந்துடுவார்ணே! நாம கிளம்பிடலாம்.”
அவருக்கு நம்பிக்கை கொடுத்தவன் காவல் ஆய்வாளரிடம் புகாரை வாபஸ் வாங்குவதாகச் சொல்ல, “கம்ப்ளைண்ட் குடுத்தவர் மிஸ்டர் தர்ஷன். அவர் வந்தாத்தான் சரியா இருக்கும் சார்,” என்றார் அவர்.
“அவர் என்னோட தங்கச்சி புருஷன்தான். திருட்டு நடந்ததா சொல்லப்படுற குடோன் என் கம்பெனிக்குச் சொந்தமானது. இவங்க என்னோட ஸ்டாஃப்ஸ். எனக்கு இவங்க மேல நம்பிக்கை இருக்குங்கிறப்ப கம்பெனிக்குச் சம்பந்தமில்லாத ஒருத்தன் குடுத்த கம்ப்ளைண்டைக் காரணமா வச்சு நீங்க இவங்களை இங்கயே வச்சுக்க முடியாதுல்ல?”
பவிதரன் பேசும்போதே வழக்குரைஞர் ஞானபிரகாசமும் வந்துவிட்டார்.
அவர் காவல் ஆய்வாளரிடம் பேசினார்.
“திருட்டு போன புகாரை நீங்க விசாரிங்க. ஆனா இவங்களை விட்டுருங்க. இவங்கல்லாம் அன்றாடம் வேலைக்குப் போய் பிழைக்குறவங்க.”
அவர் சாமர்த்தியமாய்ப் பேசி ராமசாமியையும் அந்த இளைஞர்களையும் காவல்துறையின் பிடியிலிருந்து விடுவித்தார். சந்தேகப்பட்டியலில் அவர்கள் எப்போதும் இருப்பார்கள், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமெனச் சொல்லி அனுப்பிவைத்தார் காவல் ஆய்வாளர்.
அங்கிருந்து வெளியே வந்ததும் அவர்கள் அனைவரின் கண்களும் வேதனையைச் சுமந்திருந்தன. அந்தப் பையன்களின் உடலில் காவல்துறை விசாரணைக்கான அடையாளமாய் கன்றிச் சிவந்த காயங்கள்!
ராமசாமி பவிதரனைக் கையெடுத்துக் கும்பிட்டார்.
“பெரிய அவமானத்துல இருந்து காப்பாத்திட்டீங்க தம்பி. எங்க மனசறிஞ்சு நாங்க கம்பெனிக்கு எந்தத் துரோகமும் செய்யல.”
அவரோடு சேர்ந்து அந்தப் பையன்களும் அழ ஞானபிரகாசம் அவர்களைச் சமாதானம் செய்தார்.
“பெருசா எதுவும் ஆகல. கேஸ் கோர்ட்டுக்கு வர்றப்ப சில நேரம் உங்களைக் கூப்பிடுவாங்க. நான் இருக்கேன். பயப்படாம போங்க.”
ஞானபிரகாசத்தை வழியனுப்பி வைக்கும் போதே சௌந்தரவல்லி அழுதுகொண்டே ராமசாமியின் கையைப் பிடித்துக்கொண்டார்.
“எனக்கு ஒன்னும் இல்ல சௌந்தரி. பசங்களைத்தான் அடிச்சிட்டாங்க.”
பவிதரன் அவர்களிடம் வந்தான்.
“எல்லாரும் வீட்டுக்குக் கிளம்புங்க. உங்க யாரோட வேலைக்கும் எந்தப் பாதிப்பும் இல்ல. இன்னும் ஒரு வாரத்துல பெருமாள்புரம் சைட்ல வேலை ஆரம்பிக்கணும். அதுவரை ரெஸ்ட் எடுங்க. மத்ததை நான் பாத்துக்குறேன்.”
சொன்னவன் கையிலிருந்த பணத்தை ராமசாமியிடம் கொடுத்தான்.
“அந்தப் பசங்களை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்கண்ணே!”
ராமசாமியும் சௌந்தரவல்லியும் அந்த பீஹாரி இளைஞர்களோடு கிளம்பியதும் காரின் கதவைத் திறந்தான் பவிதரன். உள்ளே ஈஸ்வரி இறுகிப்போன தோற்றத்தில் அமர்ந்திருந்தாள். முகமெல்லாம் வாடிப் போயிருந்தது.
அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்ததும் “எங்க போயிட்டீங்க நீங்க?” என்று கேட்டாள் கரகரத்த குரலில்.
பவிதரன் பதில் சொல்லாமல் காரைக் கிளப்பினான்.
“உங்க போனுக்குக் கால் போகலனதும் நான் பயந்துட்டேன்.”
குரல் அழுகைக்குத் தாவிவிட்டது.
அவன் பேசவில்லை. இனி பேச என்ன இருக்கிறது என்ற எண்ணம் இல்லை. ஆனால் பேசினால் மட்டும் என்ன மாறிவிடப்போகிறது விரக்தி.
அவனது மனம் வேதனையில் இருப்பதை அவளாலும் உணர்ந்துகொள்ள முடிந்தது.
“நீங்க….”
“வீட்டுல ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு உன்னை நதியூர்ல இறக்கி விட்டுடுறேன்.”
சரியெனத் தலையாட்டியவள் வேடிக்கை பார்ப்பது போல முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கண்கள் கலங்கியிருப்பதை அவனிடம் காட்டும் விருப்பமில்லை.
ரங்கநல்லூரும் வந்துவிட்டது.
“நீ கார்ல இரு. நான் வந்துடுறேன்.”
கார்க்கதவை அடைத்துவிட்டு வீட்டுக்க்குள் சென்றான் பவிதரன்.
அவன் ஹாலில் நுழையும்போதே “நல்ல காரியம் பண்ணுனீங்க மாப்பிள்ளை. நம்ம காசுல தின்னுக்கிட்டு நம்ம கிட்டவே திருட்டுப்புத்திய காட்டிருக்கானுவ. இல்லாதப்பட்டவனுங்க புத்தியே இதுதான். வேலை, சம்பளம், போனஸ்னு எவ்ளோ குடுத்தாலும் திருடி தின்ன மாதிரி இருக்காது இதுங்களுக்கு.”
மாணிக்கவேலு சொல்லவும் தர்ஷனின் சிரிப்பு சத்தம் கேட்டது.
என்ன மனிதர்கள் இவர்கள் என வெறுப்போடு அடுத்த அடி அவன் எடுத்துவைக்கும்போதே தர்ஷன் பேச ஆரம்பித்தான்.
“அத்தை இன்னைக்குக் காலைல அந்தப் பொண்ணு வீட்டுல பேசுன எதுவும் தப்பில்ல மாமா. திருட்டுப்பசங்களுக்குச் சப்போர்ட் பண்ணிட்டு வந்து போலீஸ் ஸ்டேஷன்ல என் கிட்டவே சண்டைக்கு வர்றா. நல்ல குடும்பத்துப் பொம்பளைங்க போலீஸ் ஸ்டேஷன் படி ஏறுவாங்களா? இப்பிடி ஒரு மோசமான…”
அந்த வாக்கியத்தை அவன் முடிக்கும் முன்னர் அவனது சட்டையைப் பற்றி இழுத்து நிற்க வைத்து கன்னத்தில் அறைந்திருந்தான் பவிதரன். அதுவும் ஒரு முறை அல்ல! மூன்று முறைகள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

