“ஒருத்தரோட பிரசன்னமும், மௌனமும் கூட மனசை ஆட்டுவிச்சிடும்னு சமீபநாட்கள்ல எனக்குப் புரியுது. நான் நினைச்சா இதெல்லாம் தேவையில்லனு அவங்க கிட்ட பேசிட முடியும். ஏன் நான் இதையெல்லாம் ஒரு தவிப்போட ரசிக்குறேன்? ஒருத்தரோட ஆர்வமான பார்வையும் பேச்சும் என் நிதானத்தோட வேர் வரைக்கும் ஊடுருவுதுனு தெரிஞ்ச அப்புறமும் நான் எதுவும் செய்யாம அமைதியா இருக்குறேன். இதுக்கெல்லாம் அர்த்தம் எனக்கும் அவங்க மேல ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்குங்கிறதுதானே? ஆனா ஒன்னு, இந்த ஈர்ப்பை நானும் என் மனசும் அங்கீகரிக்கப்போறதே இல்ல. அதுல நான் தெளிவா இருக்குறேன்”
-ஈஸ்வரி
மருத்துவமனையிலிருந்து பவிதரனது காரை வீடு வரை ஓட்டி வந்து அவனது சிரமத்தைக் குறைத்துவிட்டார் ராமசாமி.
“நான் வாரேன் தம்பி. கை பத்திரம். புண்ணு ஆறுற வரைக்கும் கையில தண்ணி படாம பாத்துக்கோங்க. நான் வரட்டுமா?”
“போயிட்டு வாங்கண்ணே! தேங்க்ஸ்”
நன்றி சொல்லி அவரை வழியனுப்பிவைத்தவன் படியேறியபோதே செருப்புகள் கிடப்பதைப் பார்த்தபடி வீட்டுக்குள் வந்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஷண்மதியின் குரல் கேட்டது. கூடவே அவளது கணவன் ரவியும் வந்திருந்தான் போல. இருவரையும் பவிதரனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் ஆவலாய் உள்ளே போனான்.
“மாமா”
ஷண்மதியின் மைந்தன் பிரபு வந்து அவனது கால்களைக் கட்டிக்கொள்ள மாணிக்கவேலுவிடம் பேசிகொண்டிருந்த ஷண்மதியும் ரவியும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தார்கள்.
அடுத்து அவர்களின் கவனம் போனதென்னவோ பவிதரனின் கட்டு போடப்பட்ட கரத்தை நோக்கியே!
“என்னாச்சுடா கையில?”
பதறியடித்து எழுந்து அவனிடம் வந்தாள் ஷண்மதி.
“சைட்டுல தகரம் கையில கிழிச்சிடுச்சுக்கா. வேற ஒன்னுமில்ல” என்றவன் “மாமா வேலை எல்லாம் எப்பிடி போகுது?” எனச் சினேகமாய் ரவியிடம் விசாரிக்க
“நல்லா போகுது மாப்ளை. சைட்டுல இருக்கப்ப கவனமா இருடா. டி.டி போட்டியா?” என அவனும் அதட்டலாய் அதே சமயம் அக்கறையோடு வினவினான்.
“போட்டுட்டேன் மாமா. என்ன திடீர் விஜயம்?”

“மது கல்யாணம் பத்தி பேச மாமா வரச் சொன்னாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு பவி. ஒருவழியா அவளுக்கும் நல்ல வாழ்க்கை அமையப்போகுது”
ரவி சொன்னதும் சோஃபாவில் அமர்ந்திருந்த மாணிக்கவேலுவின் முகத்தில் இறுமாப்பு குடியேறியது.
“உங்களுக்கு இருக்குற சந்தோசம் கூட அவ உடன்பிறந்தானுக்கு இல்ல மாப்பிள்ளை. அதான் எனக்குப் பெரிய தலையிடியா இருக்கு”
அவர் குத்தலாகப் பேசவும் பவிதரனுக்குள் ஜிவ்வென்று கோபம் ஏறியது.
“நான் ஒன்னும் அவளுக்கு எதிரி இல்ல. நான் சொல்லுற எல்லாம் நல்லதுக்காகத்தான்னு உங்களுக்குப் புரியும்” சுள்ளெனப் பதிலடி கொடுத்தான் அவன்.
“ஏன்பா அவன் என்ன செஞ்சாலும் குதர்க்கமாவே எடுத்துக்குறிங்க? மது கல்யாண மண்டபத்துல இருந்து ஓடிப்போனதுல ஆரம்பிச்சதுதான் எல்லா பிரச்சனையும். அடுத்தடுத்து நீங்க எடுத்த முடிவுனால அவ வாழ்க்கை தலைகீழா மாறிப்போச்சு. அப்ப இருந்து நடக்குற ஒவ்வொரு பிரச்சனைலயும் எவ்ளோ கஷ்டப்பட்டு பவி நம்ம குடும்ப மானத்தைக் காப்பாத்துனான்னு மறந்துட்டிங்களா? இப்ப வரைக்கும் மது செய்யுற ஒவ்வொரு மடத்தனமான காரியத்தையும் மத்தவங்க ஏன் சகிச்சுக்குறாங்க? உங்க மகள்ங்கிற எண்ணத்துலயா? இல்லப்பா. பவிதரனோட தங்கச்சிங்கிற ஒரே காரணத்துக்காக மட்டும்தான். அவன் நியாயஸ்தன். அந்தக் குணம்தான் நம்ம குடும்பத்துக்கு எந்தக் கெட்டது நடந்தாலும் ஒரேயடியா நம்ம குடும்பம் அழியாம காப்பாத்துது.” எனத் தம்பிக்கு ஆதரவாய் வந்து நின்றாள் ஷண்மதி.
ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவளாயிற்றே மதுமதியைப் பற்றி. தம்பியின் பயம் எதனால் என்பதும் அவளுக்குத் தெரியும். இன்றைய சூழலில் மலர்விழியின் கணவன் மகிழ்மாறனும், அவனது தமையன் புவனேந்திரனும் பவிதரனிடம் அன்பையும் நட்பையும் பூண்டிருக்கிறார்கள்.
புவனேந்திரனின் வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்க மதுமதி என்னவெல்லாம் செய்தாள்? அவனது மனைவி ஆதிராவின் மனதில் சந்தேக விதையைத் தூவி அதன் மூலம் புவனேந்திரனையும் ஆதிராவையும் பிரிக்க நினைத்தவளாயிற்றே! அதுவும் புவனேந்திரனின் ஹோட்டலுக்காக உருவாக்கப்பட்ட மென்பொருளைப் பரமாரிக்கும் கணினி பொறியாளர் என்ற வேலையைப் பயன்படுத்தி!
வேறு யாராவது மதுமதியின் இடத்தில் இருந்திருந்தால் கட்டாயம் நிலமை படுமோசமாகியிருக்கும். பவிதரனுக்காக மட்டும்தான் ஒவ்வொரு முறையும் மதுமதியின் கிறுக்குத்தனங்களை இரு சகோதரர்களும் சகித்துக்கொண்டு போகிறார்கள் என்பது மாணிக்கவேலுவின் மனதுக்கே தெரியும்.
ஆனாலும் இத்துணை நியாயபுத்தி கையாலாகதவனுக்கு மட்டுமே இருக்கும் என்பது அவரது எண்ணம்.
ஷண்மதி கொதித்ததும் மாணிக்கவேலு வேறு வழியின்றி அடங்கினார். வீட்டு மருமகனின் முன்னிலையில் சண்டையிட அவருக்கும் விருப்பமில்லை.
தந்தை – மகன் இருவரது கொதிப்பும் அடங்கிய பிறகு குடும்பமாய் சென்று ஹோட்டலில் இரவுணவை முடித்துக்கொண்டார்கள். ரவியும் ஷண்மதியும் கிளம்பியபோது தனியே பவிதரனை அழைத்தார்கள்.
“இவர்தான் உன் கிட்ட ஏதோ சொல்லணும்னாரு” கணவனைக் கை காட்டினாள் அவள்.
“என்ன மாமா?”
“உங்கப்பா சொல்லுறதை எல்லாம் பெருசுபடுத்தாத மாப்ளை. அவருக்கு மக வாழ்க்கைய செட்டில் பண்ணி விட்டுடணும்னு ஆசை. கொஞ்சம் யோசிச்சுப் பாரு. உங்க சொந்தக்காரங்க, இதுக்கு முன்னாடி அவர் முன்னாடி பேச பயந்தவனெல்லாம் மதுமதி பிரச்சனைக்கு அப்புறம் அவரை எப்பிடியெல்லாம் முதுகுக்குப் பின்னாடி பேசிருப்பாங்க? அவரும் ஒரு வகையில பாவம்டா. கொஞ்சம் பொறுத்துக்க. தர்ஷனும் நல்ல மாதிரியா தான் தெரியுறாப்ல. எதுவும் பிரச்சனை பண்ணுனா நான் உன் அக்கா எல்லாம் எதுக்கு இருக்குறோம்? நாங்க பாத்துக்க மாட்டோமா? இனியாச்சும் ஒரே குடும்பமா ஒற்றுமையா இருங்கடா.”
“நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் மாமா”
“மதி உங்க அப்பா கிட்ட பேசிருக்கா. இனி அவர் குதர்க்கமா பேசமாட்டார் உன்னை. தகப்பனும் பிள்ளையும் முறைச்சிக்கிட்டு இருந்தா வீட்டுல நிம்மதி இருக்காதுனு சொன்னதும் அவர் கொஞ்சம் யோசிக்குற மாதிரி தெரியுது. இனிமே எல்லாம் நல்லதா நடக்கும்டா. சியர் அப்”
“ரொம்ப தேங்க்ஸ் மாமா!”
பவிதரன் ரவியைக் கட்டியணைத்துக்கொள்ள ஷண்மதி தம்பியின் முதுகைச் சுரண்டினாள்.
“போதும்டா! பாசம் நிரம்பி பாதையில ஓடுது. யாரும் வழுக்கி விழுந்துடப் போறாங்க.”
அவள் கேலி செய்ய இவ்வளவு நேரம் உர்ரென்ற முகத்தோடு இருந்த மாணிக்கவேலுவின் முகத்திலும் புன்னகையின் சாயல்.
வீடு வந்து சேர்ந்த பிறகு தந்தையும் மகனும் பேசிக்கொள்ளாமல் அவரவர் அறைகளில் முடங்கினார்கள்.
அதே நேரம் ஈஸ்வரியின் வீட்டிலும் இரவுணவு முடிந்திருந்தது.
மலர்விழியோடு வாட்சப்பில் அரட்டை அடித்தபடி சாப்பிட்டு முடித்தவள் காற்றாட திண்ணையில் அமர்ந்து அரட்டையைத் தொடர்ந்தாள்.
“சுமதியக்கா, ஜீவன் அண்ணா, மயூரி அக்கா மூனு பேரும் ரொம்ப நல்லா பேசுறாங்க. சுரேந்தர் அண்ணன் மட்டும் பேசாது அவ்ளோவா. கூச்ச சுபாவமாம்”
மேரு பில்டர்சின் சக ஊழியர்களைப் பற்றி தோழியிடம் வாட்சப்பில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“எங்கண்ணன் எப்பிடி?”
மலர்விழி கேட்டதும் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திகைத்தாள் ஈஸ்வரி.
முன்பென்றால் நெடுமரம், பனைமரமென ஏதோ ஒரு அடைமொழியைப் போட்டுப் பவிதரனைக் கிண்டல் செய்திருப்பாள். இப்போது எடுத்ததும் கலாய்க்க வரவில்லை. என்ன இருந்தாலும் சம்பளம் கொடுக்கும் முதலாளி என்ற செண்டிமெண்ட் ஒரு பக்கம் இருந்தாலும் வேறு ஏதோ ஒன்று அவளது கேலி கிண்டலுக்கு முற்றுபுள்ளி வைத்திருந்தது.
“என்னலா நீ எப்ப பாத்தாலும் எங்கண்ணனைக் கிண்டல் பண்ணிட்டிருப்ப? இப்ப அவர் ஆபிசுலயே வேலை பாக்குற. ஒன்னும் சொல்லாம இருக்குற. ஈசு நல்லவளா ஆகிட்டாளா?”
மலர்விழியிடமிருந்து செய்தி வந்ததும் ஈஸ்வரி ஆச்சரியப்பட்டுப்போனாள்.
“இதையே தான் அந்த நெடுமரமும் கேட்டுச்சு மலர்”
“இப்பதான் பழைய ஈசு எட்டிப் பாக்குறா”

“கிண்டல் பண்ணாத மலர். உங்கண்ணன் இப்ப சம்பளம் குடுக்குற முதலாளி. கேலிப்பேச்சு பேச எனக்கென்ன பைத்தியமா?”
“காரியக்காரி நீ”
தோழிகள் இருவரும் பேசும்போதே பவிதரனின் கையில் காயம் பட்டதை மலர்விழியிடம் தெரிவித்தாள் ஈஸ்வரி. அதிர்ச்சியாகும் எமோஜி ஒன்றும், அழுகையுடன் கூடிய எமோஜி ஒன்றும் பதிலாக வந்தது அவளிடமிருந்து.
“எப்பிடி?”
சைட்டில் நடந்ததைச் சொன்ன ஈஸ்வரி “ராமசாமியண்ணன் இருக்காருல, அவரைத்தான் அப்புறம் ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போகச் சொன்னேன்.” என்றாள்.
நேரம் போய்க்கொண்டே இருக்க இரவு வணக்கம் சொல்லிவிட்டு ஆன்லைனிலிருந்து விடைபெற்றார்கள் இரு தோழியரும்.
கார்க்கதவைத் திறந்துவிடுகையில் விழிவீச்சில் உறைந்து அமர்ந்த நிலை நினைவுக்கு வந்ததும் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டவளுக்கு உறக்கமும் தொலைந்து போனது.
மறுநாள் அலுவலகத்துக்கு வந்ததும் ரிஜிஸ்டரையும் ரசீது புக்கையும் சுமதியிடம் ஒப்படைத்தாள்.
“முதல் நாள் அனுபவம் எப்பிடி இருந்துச்சு?” சுமதி விசாரிக்க
“அதை ஏன் கேக்குறிங்க? இரத்தக்களரியா இருந்துச்சு” என்றவள் சைட்டில் நடந்த அனைத்தையும் கூறினாள்.
பேசிக்கொண்டிருக்கும்போதே அவளது விழிகள் பவிதரனின் அலுவலக அறையை நொடிக்கொரு தரம் தழுவி மீண்டன.
‘என்ன இப்படி பார்த்துத் தொலைக்கிறோம்?’
தன்னைத்தானே கடிந்துகொண்டாள்.
‘அவர் உன்னோட முதலாளி ஈசு… ஒரு ஸ்டாஃபா போய் காயம் எப்பிடி இருக்குனு விசாரிக்கிறதுல தப்பில்லை’ என்று மனதைத் தேற்றிக்கொண்டாள். ஆனால், அவளுக்குத் தெரியும், அவள் கேட்கத் துடிப்பது ஒரு மேலதிகாரியிடம் கேட்கும் வெறும் நலம் விசாரிப்பு மட்டுமல்ல என்று.
சரியாக அந்நேரத்தில் சுமதி ஒரு கோப்பினை அவளிடம் கொடுத்து “இதுல சார் கிட்ட சைன் வாங்கிட்டு வந்துடும்மா” என்று சொல்ல மகிழ்ச்சியோடு கிளம்பினாள்.
மெல்ல எழுந்து அவன் அறையை நோக்கி நடந்தாள். கதவருகே நின்றபோது இதயம் ஒரு நிமிடம் தாளம் தப்பித் துடித்தது போன்ற உணர்வு. மெல்லக் கதவைத் தட்டினாள்.
“உள்ள வரலாமா?”
“வா” உள்ளிருந்து கேட்டது அழுத்தமானக் குரல்.
அறைக்குள் நுழைந்தவளின் பார்வை, மேஜை மீது இருந்த கோப்புகளைத் தாண்டி பவிதரனின் வலது கைக்குத்தான் முதலில் சென்றது. அங்கே ஒரு வெள்ளை நிற பேண்டேஜ் ஒட்டப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது.
“குடு” இடது கரத்தை நீட்டியவனிடம் கோப்பினைக் கொடுத்தாள்.
வேலை முடிந்தது என வெளியேறி இருக்கலாம். ஆனால் போகத் தோன்றவில்லை.
தனக்கு முன்னே கிடந்த நாற்காலியின் மேல்முனையை அழுந்தப் பற்றியவள் “அது… இப்ப வலி எப்பிடி இருக்கு?” என்று வினவினாள்.
அவளே மறைக்க நினைத்தாலும் மெல்லிய தடுமாற்றம் தொனித்தது அவளது குரலில்.
பவிதரன் கோப்பினை மூடிவிட்டு நிமிர்ந்தான். ஈஸ்வரியின் விழிகளில் தெரிந்த தவிப்பும், திணறலும் அந்த அறையின் ஏ.சியின் குளிர்ச்சியைத் தாண்டி அவனுக்குள் மெல்லிய வெப்பத்தைக் கடத்தியது.
“ம்ம்! ராமசாமியண்ணன் கூட போனேன். கட்டு போட்டிருக்காங்க. காயம் ஆறுற வரைக்கும் டெய்லி ட்ரஸ்சிங் பண்ண சொல்லிருக்காங்க.”
சொன்னவனின் விழிகளில் அளவிடும் பார்வை! இதழ்களிலோ இதமானப் புன்னகை.
“அதில்ல… துருப்பிடிச்ச இரும்பு… அதான் ஒரு பயம்.” சொல்லிவிட்டுச் சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டாள் ஈஸ்வரி.
‘இதையெல்லாம் இவனிடம் சொல்லவேண்டுமா? உன் நாக்கே உனக்கு எதிரி ஈஸ்வரி’
அவளது முகபாவனையைப் பொறுமையாக ரசித்தான் பவிதரன்.
“பயப்படுற அளவுக்கு ஒன்னுமில்ல” என்றபடி தனது இருக்கையில் இருந்து முன்பக்கம் சாய்ந்து மேஜை மீது கரங்களைக் கோர்த்து வைத்து அமர்ந்தான்.
“நேத்து யாருமே என் காயத்துக்குப் பெருசா ரியாக்ட் பண்ணல. நீ ஏன் அவ்ளோ டென்சன் ஆன?” அவன் குரலில் இருந்த நிதானத்தோடு கூடிய குறுகுறுப்பு ஈஸ்வரியைத் தவிப்பில் ஆழ்த்தியது.
தனது பதற்றத்திற்கானக் காரணம் என்னவென அவனிடம் சொல்லிவிட்டால் இந்தக் குறுகுறுப்பு அடங்கிவிடும்.
“நேத்து அந்த இடத்துல இரத்தம் பார்த்ததுல இருந்து, ஒரு மாதிரி சங்கடமா இருந்துச்சு. சிலருக்கு அடுத்தவங்க அடிபட்டதைப் பார்த்தா நெஞ்சுக்குள்ள ஒரு வலி வரும்ல! எனக்கு அது கொஞ்சம் அதிகம்னு வச்சுக்கோங்களேன்! அதனால வந்த டென்சன்” என்றாள். அவள் எதையும் மறைக்க முயலவில்லை, தன் இயல்பைச் சொன்னாள்.
“இது புதுசா இருக்கே?” என்றவனின் பார்வை விசமத்தோடு கனிந்தது.

அந்தக் கனிந்த பார்வையைத் தாங்கிக்கொள்ள அவளால் இயலவில்லை. தான் போட்டு வைத்திருக்கும் வேலியை அந்தப் பார்வை லேசராய்த் துளைக்கும் உணர்வு!
இதற்கு மேல் இங்கிருந்தால் தனது மனதின் பரிதவிப்பை விழிகளும் வதனமும் பிரதிபலித்துவிடும் என அஞ்சினாள் அவள்.
“அது… நான் வேலையைப் பாக்கப்போறேன்” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, பதற்றத்துடன் அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் வெளியேறிய பின், அந்த அறையில் நிலவிய நிசப்தத்தில் ஈஸ்வரியின் வாசனை மட்டும் எஞ்சி நின்றது போல ஒரு மாயை. பவிதரன் மெல்லச் சாய்ந்து அமர்ந்து, அவள் நின்றிருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளது அந்த நேரத்துப் பதற்றமானத வெறும் மனிதாபிமானம் மட்டுமல்ல என்று அவனது உள்ளுணர்வு சொன்னது.
இத்தனை நாட்கள் தயக்கத்தால் நெய்யப்பட்ட ஒரு மெல்லிய திரையின் பின்னே நின்றவளிடமிருந்து இப்போது எட்டிப் பார்த்த உண்மையான அக்கறை, அவன் இதுவரை சந்திக்காத ஒரு புதுமையான அனுபவமாய் இனித்தது.
‘சண்டைக்காரி என்னமோ செஞ்சிட்டா’
மானசீகமாகச் சொல்லிக்கொண்டான் அவன்.
பவிதரனின் அறையை விட்டு வெளியேறிய ஈஸ்வரிக்குத் தன் கால்கள் தரையில் பதிகிறதா என்பதே தெரியவில்லை. பவித்ரனின் அந்த லேசர் பார்வை இன்னும் அவளது முதுகின் பின்னால் தகிப்பது போன்றதொரு பிரமை!
தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தவள், படபடக்கும் நெஞ்சின் மீது கை வைத்து மூச்சினைச் சீராக்க முயன்றாள்.
‘ஏன் இப்பிடி உளறிவச்ச ஈசு? பயம், இரத்தம் பாத்தா நெஞ்சு வலிக்கும்னு சின்னப்புள்ளைத்தனமா பேசி வச்சிட்டு வந்திருக்க?’
தன்னைத்தானே நொந்துகொண்டவளுக்குத் தான் பேசாவிட்டாலும் பவிதரனின் லேசர் பார்வை தனது முகத்திலிருந்து மனம் உணரும் தவிப்பைப் பரிபூரணமாகக் கிரகித்துவிடும் என்பது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது.
இது சரியில்லை! மூளைக்குள் அலாரம் ஒன்று ஆம்புலன்சின் சிவப்பு விளக்கோடு அலறியது.
இந்த வயதில் ஒரு ஆடவனின் கண்கள் ஒரு பெண்ணை ஆர்வத்தோடு பார்ப்பது சகஜமான ஒன்று. ஆனால் ஈஸ்வரிக்கு இருக்கும் சிரமம் பவிதரனை யாரோ ஒரு ஆடவனாகக் கருதில் கடக்க முடியவில்லை என்பதுதான்.
கணினி முன்னே அமர்ந்தவள் தனது தலையில் தானே குட்டிக்கொண்டாள்.
“இன்னொரு தடவை நெடுமரம் முன்னாடி நின்னா நிதானமா தெளிவா பேசு. கிறுக்கு மாதிரி உளறிவைக்காத”
தனக்குத்தானே எச்சரிக்கை விடுத்துக்கொண்டாள்.
ஒரு ஆடவனின் கோபத்தை விட அபாயமானது அவனது கனிந்த பார்வை. அதை எதிர்கொள்வது ஒரு பெண்ணுக்கு அத்துணை சுலபமில்லை, அந்தப் பெண்ணின் மனம் அவன்பால் சலனமுற்றிருந்தால்!
அந்தப் பார்வையின் கனிவில் உறைந்து கிடக்கவேண்டுமென்று தனக்குள் எழுந்த சலனத்தை விலக்க முயன்றவளாய் மீண்டும் கணினியின் விசைப்பலகையில் விரல்களை ஓடவிட்டாள்.
அடுத்தவர் வலியைக் கண்டு பதறும் அவளது அந்த ‘இயல்பு’, பவிதரன் விஷயத்தில் மட்டும் ஏன் ஒரு கவிதை போல இத்துணை அழகாகவும், அதே சமயம் வேண்டாத ஒரு சுமை போல இத்துணை பாரமாகவும் மாறுகிறது? பெருமூச்சுடன் வேலையில் ஆழ்ந்தாள் ஈஸ்வரி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

