“தனிமைங்கிறது ஆளுங்கள் யாரும் நம்ம கூட இல்லாம தனியா இருக்குற நிலை இல்ல. உண்மையான தனிமை என்ன தெரியுமா? அன்பு நிறைய இருந்தும் சம்பந்தவங்க கிட்ட பேச முடியாத மௌனம்தான்”
-பவிதரன்
அந்தி வானத்தின் இளஞ்சிவப்பு கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்று கொண்டிருந்த நேரம் அது. தோட்டத்தில் இருக்கும் வேப்பமரம் ஒன்றின் கீழ் நின்று கொண்டிருந்தான் அவன்.
நல்ல உயரமும் அதற்கேற்ற உடற்கட்டுமாய் முப்பதைத் தொடப் போகிறான். அடர்சிகையானது தோட்டத்து விருட்சங்களின் தயவால் வீசிய காற்றினால் கொஞ்சம் கலைந்து நெற்றியைத் தொட்டு உறவாடிக்கொண்டிருந்தது.
பிஸ்தா நிற டீசர்ட்டும், அடர்பழுப்புவண்ண காட்டன் பேண்டும் அணிந்திருந்தவனின் தோற்றத்திலிருந்த இலகுத்தன்மை அவனது மனதில் இல்லை.

இன்று நேற்றல்ல, எப்போது அவனுக்கு உலகம் தெரிந்ததோ அன்றிலிருந்து ஏதோ ஒரு காரணத்தால் அவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவிதமான இறுக்கம் மனதில் வந்து அமர்ந்துகொள்ளும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இறுகிய கண்களோடு மரத்தடியில் நின்றபடி வீட்டைப் பார்த்தான். தாத்தா கட்டிய பாரம்பரிய வீடு. கொஞ்சம் மராமத்து செய்ததால் நவீனத்தின் ரேகைகள் ஆங்காங்கே பாய்ந்திருந்தன அவ்வீட்டின் தோற்றத்தில்.
இளமாலையின் இளஞ்சிவப்பில் வீடு பார்க்க அத்துணை கம்பீரமாய் தெரிந்தது. அதன் தோற்றம் மனதை அள்ளுவதாய்!
வீட்டின் தோற்றம் கொடுக்கும் உவப்பு, அந்த வீட்டு மனிதர்களால் அவனுக்கு என்றுமே கிடைத்ததில்லை. சொல்லப்போனால் கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருவித கசப்பு மனநிலையிலேயே முழு குடும்பமும் இருப்பது அவனுக்குச் சமீபத்தில் வாழ்க்கை மீது சலிப்பை உண்டாக்கியிருந்தது.
அவன் பவிதரன். அந்த வீட்டின் தலைவர் மாணிக்கவேலுவின் மைந்தன். கடந்த ஒன்றரை வருடங்களாக அவரது தொழில்கள் அனைத்தையும் தலைமையேற்று நிர்வகித்து வருபவன்.
அவனிடம் நீண்டதொரு பெருமூச்சு வந்தபோதே வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார்கள் இரு பெண்கள். ஒருவர் அவனது அன்னை நிலவழகி. இன்னொருத்தி அவனது தங்கை மதுமதி.
இருவரது கரங்களிலும் உடமைகள் அடங்கிய பெட்டிகள், லக்கேஜ் பேக் இருந்தன. அவனது அன்னையின் முகத்தில் நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு ஆசுவாசத்தைப் பார்த்தான் பவிதரன்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த முகத்தில் அலட்சியமும், செல்வச்செருக்கும் மட்டுமே மிளிரும். சொல்லப் போனால் நிலவழகியின் குணமே அதுதான்.
ஆனால் காலம் எப்பேர்ப்பட்ட மனிதரையும் அடக்கி ஒடுக்கி வைக்க வல்லதாயிற்றே! அது நிலவழகிக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்குமா என்ன?
ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேறிய அனர்த்தங்களால் அவரிடம் இப்போது மிஞ்சியிருப்பது ஆற்றாமையும், நிம்மதிக்கான ஏக்கமும் மட்டுமே.
“பவி! இங்க வாய்யா”
நிலவழகி அழைக்கவும் அவர்களை நோக்கி சென்றான் அவன்.
அவரருகே நின்று கொண்டிருந்த மதுமதியின் முகத்தில் பவிதரன் தங்களை நெருங்கவும் அத்துணை அதிருப்தி. அவளுக்கு இந்த ஏற்பாட்டில் விருப்பமிருந்தால்தான் ஆச்சரியப்படவேண்டுமென பவிதரன் நினைக்கும்போதே தொண்டையைக் கனைத்தபடி வீட்டுக்குள் இருந்து வந்தார் மாணிக்கவேலு.
“ரெண்டு பேரும் கவனமா இருங்க. சம்பந்தம் பேசியாச்சுனு அவங்க வீட்டு ஆளுங்க கூட ரொம்ப நெருங்கவேண்டாம். கொஞ்சநாள் இவ இங்க இருந்தா சரிவராதுனுதான் அங்க அனுப்பிவைக்குறோம்ங்கிறதை ஆத்தாவும் மகளும் மறந்துடாதிங்க”
கடுமையாக இல்லாவிட்டாலும் ஒருவித கண்டிப்புடன் எச்சரிக்கும் தொனியில் மாணிக்கவேலு பேச நிலவழகியும் மதுமதியும் தலையாட்டினார்கள்.
மதுமதிக்குத் திருவனந்தபுரத்தில் வசிக்கும் தமிழ் குடும்பத்தோடு சம்பந்தம் முடிவாகியிருந்தது. நிலவழகியின் ஒன்றுவிட்ட தமக்கை ராஜம் தான் சம்பந்தத்தைப் பேசி முடிக்க துணையாய் இருந்தவர்.
அவரது வீட்டுக்குத்தான் அன்னையும் மகளும் இப்போது செல்லப்போகிறார்கள்.
அதற்கு ஏன் இவ்வளவு தூரம் மாணிக்கவேலு எச்சரிக்கிறார் என உங்களுக்குத் தோன்றலாம். மகள் மதுமதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செய்த அனைத்துக் கிறுக்குத்தனங்களையும் பார்த்தவராயிற்றே! வரும் முன் காக்கும் நடவடிக்கையாய் எச்சரிக்கை ஒன்றை அவளது மனதில் பதியவைத்துவிட்டார்.
“நீங்க டைமுக்குச் சாப்பிடுங்க” என்று நிலவழகி சொல்லவும் சரியெனத் தலையாட்டினார் மாணிக்கவேலு.
மைந்தனிடம் இறைஞ்சும் பார்வையைத் திருப்பிய நிலவழகி “அப்பாவ பாத்துக்க பவி. நான் இதுவரை இவரைத் தனியா விட்டுட்டுப் போனதில்ல. ஏதோ இப்ப சூழ்நிலை இப்பிடி ஆகிடுச்சு. பாத்துக்கயா” என்று சொல்ல
“அவர் எனக்கு அப்பா. அதை நான் எப்பவும் மறக்கமாட்டேன்.” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டான் அவன். இதற்கு மேல் என்ன சொன்னாலும் ஒரு வார்த்தை பதிலாக வரும் எனத் தெரியும் நிலவழகிக்கு.
“நீங்களும்…”
“ம்ம்.. ம்ம்ம்! சரி” அரைமனதோடு சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார் மாணிக்கவேலு.
காரை எடுத்துக்கொண்டு டிரைவர் முத்து வரவும் இரு பெண்களும் பவிதரனிடம் விடைபெற்றார்கள்.
மதுமதி இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றியவள். தனியாகப் பலமுறை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த அனுபவமுண்டு அவளுக்கு.
அதனால் தங்களுக்குத் துணையாக ஆண்கள் வரத் தேவையில்லை எனச் சொல்லிவிட்டாள் தமையனிடம். அதுவும் இப்போது செல்லப்போவது இரயிலில் தானே!
அவர்களது கார் வீட்டின் காம்பவுண்டைத் தாண்டி வெளியேறியதும் நிம்மதியாக உணர்ந்த பவிதரன் வீட்டுக்குள் வந்தபோது இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்த மாணிக்கவேலுவின் முகத்தைப் பார்த்ததும் பேச விருப்பமற்று தனது அறைக்குள் செல்ல எத்தனித்தான்.
“கொஞ்சம் நில்லுப்பா”
தந்தையும் மகனும் முகம் கொடுத்துப் பேசுவதே அரிதினும் அரிதாய் நிகழும். இது அத்தகைய அரிதானத் தருணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது போல.
“சொல்லுங்க”

மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கரிய புருவங்களைச் சுருக்கி மகன் வினவிய விதத்தில் மாணிக்கவேலுவுக்கு வார்த்தைகள் தொண்டையைத் தாண்டி வரக் கொஞ்சம் போராட்டம் செய்தன. ஆனாலும் பேசிய தீரவேண்டிய விவகாரம் என்பதால் தன்னைச் சமாளித்துக்கொண்டு ஆரம்பித்தார் பேச்சை.
“மாப்பிள்ளை வீட்டுல கொஞ்சம் அதிகமா எதிர்பாக்காங்க. என்ன செய்யலாம்?”
பவிதரன் நெற்றியைச் சுருக்கியபடி திரும்பினான்.
“புரியல”
“மாப்பிள்ளைக்கு நாம செய்யுறதா சொன்னதை விட அதிகமா எதிர்பாக்காங்க. அவர் சொந்தத் தொழில் செய்யுறதுக்கு நாம பணம் குடுக்கணும்னு சம்பந்தியம்மாக்கு ஒரு யோசனை வந்திருக்கு. அது மட்டுமில்ல, அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம பக்கம் வந்துடலாம்னு இருக்காங்களாம். அதனால தனித்தனியா இருக்காம ஒரே குடும்பமா இருந்துடலாமானு உன் பெரியம்மா கிட்ட கேட்டாங்களாம்”
பவிதரனுக்கு இந்த வேண்டுகோள் வினோதமாகத் தோன்றியது.
வரதட்சணை என்று அவர்கள் எதிர்பார்த்த அனைத்தையும் செய்யத் தயார்தான். ஆனால் சொந்தத் தொழிலுக்குப் பணம் கொடுப்பது என்றால் பேராசையாக அல்லவா தெரிகிறது?
மற்றபடி ஒரே குடும்பமாக இருப்பதில் எல்லாம் பவிதரனுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஏனெனில் மதுமதிக்காகப் பேசி முடித்திருந்த தர்ஷன் குழந்தையிலேயே தந்தையை இழந்தவன். அவனுக்கும் அவனது அன்னை சகுந்தலாவுக்கும் உறவுக்காரர்கள் அதிகம் என்றாலும் அந்தப் பெண்மணியின் உழைப்புதான் அவர்களை இந்த உலகத்தில் வாழவைத்தது எனலாம். பெரிதாக உறவுக்காரர்களிடம் நெருக்கமில்லை என்று சொல்லியிருந்தார் அவர்.
அதனால் தங்கள் வீட்டில் அவர்கள் இருப்பதில் அவனுக்கு என்ன மாற்றுக்கருத்து வந்துவிடப்போகிறது? ஆனால் மதுமதி இங்கே வந்துவிட்டால் அது சிலருக்கு நல்லதல்ல என்பது பவிதரனின் எண்ணம்.
“அவருக்குத் தொழில் செய்ய பணம் குடுத்துடலாம். ஆனா நம்ம வீட்டோட அவங்க வந்து இருக்குறதுங்கிற பேச்சு எனக்கு நல்லதா தோணல”
“யாருக்கு நல்லதில்ல?”
குற்றம் சாட்டும் தொனியில் வினவினார் மாணிக்கவேலு.
“யாருக்குனு உங்களுக்குத் தெரியாதா? அவ செஞ்ச வேலை எல்லாம் தெரிஞ்சும் மறுபடி அவளை இங்க இருக்க வச்சோம்னா யாரையும் நிம்மதியா இருக்கவிடமாட்டா”
“அவ உன் தங்கச்சி! நீ அடுத்தவங்களைப் பத்தி யோசிக்காம அவ வாழ்க்கைய பத்தி யோசி. கல்யாணத்துக்கு அப்புறம் அவ நம்ம கண் முன்னாடி வாழ்ந்தா நிம்மதியா இருக்கும் எனக்கும் உன் அம்மாக்கும்”
பவிதரன் சற்று வெளிப்படையாகவே தனது அதிருப்தியைக் காட்டினான்.
“அவ இங்க இருந்தானா அவளுக்கும் நிம்மதியில்ல, அவளுக்கு நாம பண்ணி வைக்கப்போற கல்யாணத்துக்கும் அர்த்தமில்லாம போயிடும். அவ மறுபடி ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணி வைப்பா. அவ திருவனந்தபுரத்துல செட்டில் ஆகுறதுதான் நல்லது. அப்பப்ப போய் அவளைப் பாத்துட்டு வரலாம்”
மாணிக்கவேலுவோ எரிச்சலுற்றார். அவரது எரிச்சலுக்கும் காரணமுள்ளது.
அவரது மகள் மதுமதிக்கு இது முதல் திருமணமில்லை. ஆம்! அவள் விவாகரத்து வாங்கியவள். விவாகரத்துக்குப் பிறகு கடந்த மாதம் வரை அவள் ஆடிய திருவிளையாடல்களை மாணிக்கவேலுவும் அறிவார்.
ஆனால் மகளது விவாகரத்து அவளது மறுமணத்தில் அவளுக்கு எதிரான மைனஸ் பாயிண்ட் என யோசித்தார் அவர். அதை மகனிடம் அழுத்தமாய் பதியவைத்தார்.
“அப்பிடி பாத்தா தர்ஷனுக்கும் இது ரீமேரேஜ்தானே? அவரும் டிவோர்சிதானே?”
பவிதரன் கேட்ட கேள்விக்கு மாணிக்கவேலு முதலில் திணறினார். பின்னர் தலையிலடிக்காதக் குறை.
“ஆம்பளைக்கு எத்தனாவது கல்யாணமா இருந்தாலும் அது மொத கல்யாணம் மாதிரிதான். ஆனா பொம்பளைக்கு அப்பிடி இல்ல. இதுல உன் தங்கச்சி காதலிச்சு ஒருத்தனுக்காக கல்யாண மண்டபத்துல இருந்து ஓடிப்போனவ. அதைச் சொல்லியே அவளுக்கு எத்தனை வரன் தகையாம போச்சுனு மறந்துட்டியா? ஏதோ முரளிப்பய மாட்டுனான்…”
“அவனைப் பத்தி பேசாதிங்க. உங்க பிடிவாதத்தால அவளை முரளிக்குக் கட்டி வச்சு அவ வாழ்க்கை இப்ப நிர்க்கதியா நிக்க நீங்களும் ஒரு காரணமாகிட்டிங்க. மறுபடி அதே தப்பைச் செய்யாதிங்க. அவ இங்க வந்தானா சும்மா இருக்கமாட்டா.”
மாணிக்கவேலு கோபத்தோடு சிரித்தார். மைந்தன் யாருக்காக மகளைக் கண்காணாத தொலைவுக்கு அனுப்ப நினைக்கிறான் எனத் தெரியாதவரா அவர்? எல்லாம் தெரிந்தாலும் மகளை அவ்வளவு தூரம் தள்ளி திருமணம் செய்து அனுப்பிவைக்க விருப்பமில்லை.
மதுமதியின் நிலையற்ற புத்தியையும், அலைபாயும் மனதையும் புரிந்துகொண்டவர் என்றாலும் தன் கண் முன்னே வாழ்ந்தால் மட்டுமே அவள் சரியாக இருப்பாள் என்ற எண்ணம் அவருக்கு.
கூடவே மாப்பிள்ளைக்குப் பணம் கொடுத்து வேறு தொழிலை ஆரம்பித்துக் கொடுப்பதற்கு பதிலாக தங்களது குடும்பத்தொழில் ஒன்றை அவனிடம் கொடுத்தால் நடத்திவிட்டுப் போகிறான் என்று திட்டமிட்டிருந்தார் மாணிக்கவேலு. மகன் தனது ஏற்பாட்டுக்குக் குறுக்கே வருவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவன் யோசிப்பது யாருக்காக என்பது புரிந்ததால் இன்னும் கோபம் வேறு!
கோபத்தைச் சிரிப்பில் கலந்து மகனைச் சவாலாய் ஏறிட்டார் மாணிக்கவேலு.
“நீ போன வாரம் சிகாமணி வீட்டுக்குப் போனப்பவே இப்பிடி எதாச்சும் உன் மூளைல இருக்கும்னு யோசிச்சேன். என் ஊகம் தப்பாகல”
பவிதரன் தந்தையை நிதானமாகவே ஏறிட்டான்.
“நான் அங்க போனது தெரிஞ்சுதுனா அங்க யாரைச் சந்திச்சேன்னும் தெரிஞ்சிருக்குமே. புவன் வந்திருந்தார். அவர் கிட்ட மதுமதிக்கு சம்பந்தம் பேசி முடிச்சதைச் சொன்னேன். அவ இனிமே அவரோட வாழ்க்கைல தலையிடமாட்டானு உறுதி குடுத்திருக்கேன். அவளை இங்க இருக்க விட்டா இன்னும் குழப்பத்தை உண்டாக்குவா” என்றான் அவன்.
மாணிக்கவேலுவின் முகத்தில் மகள்மீதான வருத்தம் தெரிந்தது அந்நொடியில்.
‘இந்தப் பெண் சரியாக இருந்திருந்தால் இவ்வளவு குழப்பம் ஏன் வந்திருக்கப் போகிறது?’
“அடுத்தவங்களுக்காக யோசிக்கத் தெரியாது எனக்கு. இன்னொரு தடவை என் மக வாழ்க்கை கேலிக்கூத்தா மாறக்கூடாது. அதுக்காக நான் என்ன வேணாலும் செய்யத் தயார். மருமகனை வீட்டோட வச்சுக்கிட்டு அவர் கையில நம்ம பூ வியாபாரத்தைக் குடுத்தா செஞ்சிட்டு நம்ம கண் முன்னாடி இருப்பார். இதுல எனக்கு மாற்றுக்கருத்து இல்ல.”
கடுப்போடு சொல்லிவிட்டு அவரது அறையை நோக்கிப் போய்விட்டார் மாணிக்கவேலு. மனமெல்லாம் எரிந்தது அவருக்கு.
சிகாமணி வேறு யாருமில்லை! மாணிக்கவேலுவின் உடன்பிறந்த தம்பிதான். தம்பியுடனான உறவு துண்டிக்கப்பட்டு ஒன்றரை வருடமாகிறது. ஆனாலும் மைந்தன் தம்பியின் குடும்பத்துடன், தம்பியின் சம்பந்தி குடும்பத்தோடு உறவு கொண்டாடுவது சில சமயங்களில் அவருக்கு எரிச்சலைக் கொடுக்கும்.
அந்தச் சம்பந்தி குடும்பம் ஒரு காலத்தில் மாணிக்கவேலுவின் சம்பந்திகளாக ஆகவிருந்தவர்கள். தென்தமிழகத்தில் பிரபல தொழில் குழுமமான என்.எஸ்.என் குழுமத்தின் குடும்பத்துடைய மூத்த வாரிசான புவனேந்திரனுடன் ஆடம்பரமாக மதுமதிக்கு நிச்சயதார்த்தத்தை நடத்தினார் மாணிக்கவேலு.
ஆனால் மதுமதி அவளது காதலனைத் தேடி திருமண மண்டபத்திலிருந்து ஓடிவிட, வேறு வழியின்றி சிகாமணியின் மகள் மலர்விழியை, புவனேந்திரனின் இளைய சகோதரன் மகிழ்மாறனுக்கு மணமுடித்து வைத்ததும் மாணிக்கவேலுதான்.
தனது தோட்டத்தில் பணியாற்றி வயிற்றைக் கழுவிய தம்பிக்கு அத்துணை பெரிய செல்வந்தக் குடும்பத்தின் சம்பந்தி என்ற அந்தஸ்து கிடைத்ததே மாணிக்கவேலுவுக்குக் கடுப்புதான். சூழலைச் சமாளிக்க வேறு வழியும் தெரியவில்லை.
மலர்விழி என்.எஸ்.என் குடும்பத்தின் மருமகளானாள். அதோடு போயிருந்தால் மாணிக்கவேலுக்குப் பெரிய வருத்தம் வந்திருக்காது.
தம்பியின் மருமகன் தோண்டி துருவி அவர் தம்பியை ஏமாற்றி வாங்கிய சொத்துகளைப் பற்றிய தகவலைச் சேகரித்து அதைப் பவிதரனிடம் சொல்லிவிட்டான்.
முடிவில் தம்பியிடம் திருடிய அனைத்தையும் அவரிடமே ஒப்படைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் மாணிக்கவேலு. அன்றைய தினத்திலிருந்து குடும்பத்தொழில்கள் அனைத்தும் பவிதரனின் கைவசம் போய்விட்டன.
மாணிக்கவேலுவுக்கு விருப்பமற்ற ஓய்வொன்றை அவரது மைந்தன் பரிசாக அளித்துவிட்டான். அன்றிலிருந்து இருவருக்குமிடையே சரியான பேச்சுவார்த்தை கிடையாது.
மகனும் திறமையானவன்தான். ரியல் எஸ்டேட் தொழிலையும், கட்டுமான நிறுவனத்தையும் இலாபகரமாகவே நடத்திவருகிறான்.
ஆனால் அவனது நியாயபுத்திதான் மாணிக்கவேலுவுக்குப் பெரிய தடை. கூடவே மகளின் கிறுக்குத்தனமான செய்கைகள் அவரை நிம்மதியற்ற நிலையில் ஆழ்த்தியிருந்தன.
அவருக்கு இருக்கும் ஒரே ஒரு நிம்மதி மூத்தமகள் ஷண்மதி நல்லபடியாக வாழ்வதுதான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

