எப்படியாவது வருங்கால மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கி மதுமதியையும் தன் பார்வைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வைராக்கியமாகவே உருப்பெற்றுவிட்டது மாணிக்கவேலுவின் மனதில்.
தந்தையின் பிடிவாதப் பேச்சைக் கேட்ட பவிதரனுக்கு அதற்கு மேல் வீட்டிலிருக்க பிடிக்கவில்லை.
இவ்வளவு நடந்தும் தந்தை மாறவில்லை என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. அவர் மாறுவார் என்று அவன் எதிர்பார்க்கவும் இல்லை.
சில காரணங்கள்! சில பிடிவாதங்கள்! சில தவறான புரிதல்கள்! இவைதான் தங்கள் குடும்பத்தினரின் நடுவே கண்ணுக்குத் தெரியாத வேலியை அமைத்திருப்பதைப் பவிதரன் அறிந்திருந்தான்.
செல்வந்தக் குடும்பங்களில் வளரும் பிள்ளைகளுக்கு அவர்களது பெற்றோரின் கௌரவத்தையும், செல்வப்பெருமையையும் தூக்கிச் சுமக்கும் கடமை பிறக்கும்போதே வந்துவிடுகிறது.
இங்கே திருமணங்கள் வருங்கால தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகள் மட்டுமே.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதற்காக அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சமெனச் சொல்லிவிடமுடியாது. இப்படி பாடுபட்டுச் சொத்து சேர்ப்பது கூட பிள்ளைகள் நல்லபடியாக வாழவேண்டுமென்ற அன்பின் அடிப்படையில்தான். ஆனால் பணம் சேர சேர அதைக் கட்டிக் காப்பாற்றுவது மட்டுமே முன்னுரிமை பெற்றுவிட, அன்பும் பாசமும் பின்தங்கிவிடுகின்றன உறவுகளுக்கு நடுவே.
இச்சூழல் பல ஆண்டுகளாக நிலவுகிறது பவிதரனின் குடும்பத்துக்குள்.
சில நேரங்களில் சித்தப்பா மகள் மலர்விழி மீது அவனுக்குப் பொறாமை கூட வருவதுண்டு. சித்தியும் சித்தப்பாவும் அத்துணை கஷ்டத்திலும் அவள் மீது உயிராய் இருப்பதைப் பார்க்கையில் ஏக்கமும் வரும் அவனுக்கு.
அவர்களுக்குப் பணத்திற்கான தேவை அதிகம். ஆனால் பணம் பிரதானமில்லை. இல்லாதப் பணத்தைக் கட்டிக்காப்பாற்ற அன்பை டீலில் விடும் அவசியம் நேர்வதில்லை அவர்களுக்கு.
என்ன தான் குடும்பத்தினர் மீது அதிருப்தி இருந்தாலும் பவிதரனுக்கு அவனது தமக்கை சின்னதொரு ஆசுவாசமாய் இருந்தாள். மூத்தவள் ஷண்மதி அப்படியே அவனது ஆச்சியைப் போல. வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப் பேசுபவள். அன்புக்கும் குறைவிருக்காது அவளிடம்.
ஆனால் மதுமதி அப்படியல்ல. மாணிக்கவேலுவும் நிலவழகியும் சரிசமமாகக் கலந்த கலவை அவள். தமையனிடம் பாசமும் உண்டு. ஆனால் அவள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதால் அதைவிட அதிகமாய் கோபமும் உண்டு.
அவளது செயல்களால் அடுத்தவரது வாழ்க்கை தலைகீழாகிறது என்பதை எப்போது அவள் புரிந்துகொள்வாள் எனப் பவிதரன் கவலைப்படாத இரவுகள் இல்லை.
அவளுக்கு மறுமணம் செய்து வைத்து இங்கிருந்து தொலைவிற்கு அனுப்பிவிட்டால் புதிய இடமும் புது சூழலும் அவளுக்குப் பக்குவத்தைக் கொடுக்குமென அவன் யோசித்திருக்க, மாணிக்கவேலுவோ வீட்டோடு மருமகனாக தர்ஷனை அமர்த்தும் முடிவில் பிடிவாதமாய் இருக்கிறார்.
எப்போதும் இம்மாதிரி சூழல்களில் கடுப்பு அதிகமானால் காரை எடுத்துக்கொண்டு ரங்கநல்லூரிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வரை போய்விடுவான் பவிதரன். காரை ஓட்டும்போது கோபம் குறைந்து மனம் ஒரு நிலைக்கு வருவதாய் உணர்வான்.
இப்போதும் காரை வேகமாகக் கிளப்பி வீட்டை விட்டு வெளியேறினான் பவிதரன்.
கார் ரங்கநல்லூர் பஜாரை அடைந்தபோது சித்தப்பா சிகாமணியிடமிருந்து அழைப்பு மொபைலில்!

காரை ஓரங்கட்டிவிட்டு “சொல்லுங்க சித்தப்பா” எனப் பேச ஆரம்பித்தான் அவன்.
“நம்ம தட்சிணாமூர்த்தி இருக்கார்ல, அவர் மவ ஈஸ்வரி காலேஜ் முடிச்சிடுச்சு தம்பி. நம்ம மலர் கூட புக் சென்டர்ல வேலை பாத்த அனுபவம் இருக்கு அந்தப் புள்ளைக்கு. தட்சிணாமூர்த்தி கிட்ட வேலைக்குப் போகணும்னு சொல்லிச்சாம். உனக்குத் தெரிஞ்ச இடத்துல எதுவும் வேலை இருந்தா சொல்லுதியா தம்பி?”
பவிதரன் மோவாயைத் தடவினான்.
‘அந்த வாயாடிக்கு ஏற்ற வேலை எங்கிருக்கிறது? எங்கே போனாலும் நிச்சயம் அவளது வாய்த்துடுக்கால் வேலையை நிரந்தரமில்லாமல் ஆக்குவது திண்ணம்’
“சித்தப்பா… அந்தப் பொண்ணு கொஞ்சம் ஓவரா வாய் பேசுமே” என்றான் யோசனையோடு.
“சின்னப்புள்ளை தம்பி. ஆனா வேலைல கெட்டினு நம்ம மலர் சொல்லிருக்கா. நான் நாளைக்குத் தட்சிணாமூர்த்திய உன் ஆபிசுக்கு வரச் சொல்லட்டா?”
“சரி சித்தப்பா. வரச் சொல்லுங்க! மூர்த்தி மாமா கிட்ட பேசிட்டா நல்லது”
அவரிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு ஈஸ்வரி என்ற பெயரைக் கேட்டதே, இத்துணை நேரம் அவனுக்குள் இருந்த கொந்தளிப்பு மனநிலையை மாற்றுவதாய்!
ஆலிவ் நிறமும், முட்டைக் கண்களுமாய் அவளே எதிரில் நிற்பது போல ஒரு மாயை!
சன்னச்சிரிப்போடு காரைக் கிளப்பியவனுக்குள் இப்போதிருந்தது லாங் டிரைவ் செல்லும் எண்ணம் மட்டுமே!
வருத்தமாய் வாழத்தான் பெரிய பெரிய காரணங்கள் வேண்டும். ஆனால் சந்தோசமாய் வாழ சின்னதொரு சந்தோசம், அந்தச் சந்தோசத்தின் காரணியாய் ஏதோ ஒரு மனிதர் இருந்தால் மட்டும் போதும்.
இந்தத் தியரி பவிதரனுக்குள் வேலை செய்ய ஆரம்பிக்க அவனும் காரை உற்சாகமாகக் கிளப்பினான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

