ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் கெவின் டட்டன் தன்னுடைய ‘The wisdom of Psychopaths: What Saints, Spies and Serial Killers can teach us about success’ என்ற புத்தகத்தில் உளப்பிறழ்வுக்குறைபாட்டின் நேர்மறையான பண்புகள் சிலவற்றை பற்றி குறிப்பிட்டுள்ளார். உளப்பிறழ்வு என்பது காய்ச்சல் தலைவலி போல முழுமையான ஒரு நோய் அல்ல. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அளவில் பாதிப்பை உண்டாக்கும். சிலர் அதனால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுத் தீவிரநிலையை அடைவார்கள். சிலருக்கோ அறிகுறியோடு முடிந்துவிடும் என்கிறார் மார்ஷ். உளப்பிறழ்வுக்குறைபாட்டைப் பற்றி சமுதாயத்தில் நிலவும் கட்டுக்கதைகளையும் தவறான புரிதல்களையும் அகற்றவேண்டிய நேரம் இது தான் என மார்ஷ் உட்பட உளவியலாளர்கள் அனைவரும் கருதுகிறார்கள்.
-An article from BBC
இதன்யா காட்டுப்பாதையில் இனியாவின் சடலம் கிடைத்த இடத்தில் நின்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள். வலது பக்கம் திரும்பினால் அடர்ந்த காடு பசுமை கரம் நீட்டி வரவேற்றது.
“காட்டுக்கு இவ்ளோ பக்கத்துல உங்க ஊர் இருக்குதே… காட்டுவிலங்கு தொந்தரவு உண்டா பெரியவரே? ஃபாரஸ்ட் டிப்பார்ட்மெண்ட் கெடுபிடிலாம் எப்பிடி?”
“இந்தக் காட்டுல ஓநாயும் நரியும் பெருகிக் கிடக்குதுங்க மேடம்… பறக்குற அணில்னு ஒன்னு சொல்லுவாங்கல்ல, ரிசர்வ் ஃபாரஸ்ட் எல்லை ஆரம்பிக்கிற இடத்துல தான் அந்த அணில் உண்டு… அங்க போக ஃபாரஸ்ட் டிப்பார்ட்மெண்டு ஆளுங்க கிட்ட அனுமதி வாங்கணும்… அப்பப்ப நரியும் ஓநாயும் கிளம்பி ஊருக்குள்ள வந்துடும்… அதுக்கு ஏத்த மாதிரி தான் நாங்க வீடு கட்டிருக்கோம்… ஆடு மாடுங்களை பாதுகாப்பா பட்டில அடைச்சு வச்சிடுவோம்… அதை மீறியும் சமீபத்துல ரெண்டு தடவை ரெண்டு சினையாட்டை ஓநாய் தூக்கிட்டுப் போயிடுச்சு” என்றார் முருகையா.
இதன்யாவுக்கு அதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருந்தது. சினையாக இருக்கும் ஆட்டை விடவா ஓநாய் பலசாலி என எண்ணி வியந்தவளின் பார்வைக்கு சற்று தொலைவில் இருந்த சக்கரவர்த்தி தேயிலை தோட்டம் புலப்பட்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“உங்க ஊர்ல இந்த ஒரு எஸ்டேட் தான் இருக்குதா பெரியவரே?”

“ஆமாங்க மேடம்”
அப்போது இதன்யாவின் பார்வை முருகன் கோவிலை வலம் வந்தது.
“இந்தக் கோவிலுக்குத் தானே உங்க சின்னம்மா அடிக்கடி வருவாங்கனு சொன்னிங்க! அங்க போய் பாக்கலாமா?”
“இப்பவா? மணி பன்னிரண்டு ஆகுதே மேடம்… நடை சாத்துற நேரம்” என தயங்கினார் முருகையா.
“சோ வாட்? முருகனுக்கு ஆயிரம் கண்… நடை சாத்துனதுக்கு அப்புறம் போனாலும் அவருக்கு நான் வந்தது தெரியும்”
இதற்கு மேல் என்ன வாதிடுவது? இதன்யாவை பொன்மலை முருகனின் கோவிலுக்கு அழைத்துப்போனார் முருகையா.
கோவில் பழம்பெருமை வாய்ந்தது என்று தலவரலாறைச் சொல்லிக்கொண்டே வந்தார். இதன்யா அவர் சொன்ன புராணக்கதையைச் செவிமடுத்தபடியே கோவிலைக் கண்களால் ஆராய்ந்தபடி நடந்தாள்.
அவளது கால்கள் ஒரு இடத்தில் ப்ரேக் போட்டது போல நின்றன.
“என்னாச்சுங்க மேடம்?”
“அந்த சி.சி.டி.வி ஒர்க் ஆகுமா?”
“ஆகும் மேடம்… தைப்பூசத்திருவிழா எங்க ஊர்ல ரொம்ப பெருசா கொண்டாடுவோம்… அப்ப வெளியூர் ஆளுங்க வருவாங்க… அவங்க காட்டுப்பாதை கிட்ட போயிடக்கூடாதுனு கண்காணிக்குறதுக்காக வச்ச கேமரா அது… இது வரைக்கும் ரிப்பேர் ஆனதில்ல”
“நான் இந்த சி.சி.டி.விய செக் பண்ணணும்… எங்க கண்ட்ரோல் ரூம் இருக்கு?”
“அந்தப் பக்கம் நம்ம போனப்ப ஒரு ரூம் இருந்துச்சுல்ல.. அது தான் மேடம்”
முருகையா வழிகாட்ட கோவிலின் சி.சி.டி.வி கண்ட்ரோல் அறைக்குப் போனாள் இதன்யா.
அங்கே இருந்த ஊழியர் அவளை யாரென்பது போல பார்க்கவும் தனது டிப்பார்ட்மெண்ட் ஐ.டியை எடுத்துக் காட்டினாள். உடனே மரியாதையோடு எழுந்தார் ஊழியர்.
“எனக்கு சில ஃபூட்டேஜஸை செக் பண்ணணும் சார்… ஸ்டோர் பண்ணுற சிஸ்டம் இங்க தானே இருக்குது?”
“ஆமா மேடம்… எந்த தேதி வீடியோ பாக்கணும்? ஏன் கேக்குறேன்னா அந்த இனியா பொண்ணு டெட்பாடி கிடைச்சுதுல்ல, அந்தப் புதன்கிழமை ஏர்லி மானிங்ல இருந்து சி.சி.டி.வி ரிப்பேர் ஆகிடுச்சு… யார் காரணம்னு ஒன்னும் புரியல… அதுக்கு முன்னாடி உள்ள க்ளிப்பிங்ஸ் எல்லாம் இருக்கும்… அதுல உங்களுக்கு வேண்டிய ஆதாரம் எதுவும் இருக்கா மேடம்?”
இதன்யாவுக்குச் சப்பென்று போனது. இருப்பினும் மூளையில் ஏதோ பொறி தட்டியது.
இனியா செவ்வாயன்று கோவிலுக்கு வந்தவள் புதன்கிழமை காட்டுப்பாதையருகே சடலமாகக் கிடைத்திருக்கிறாள். ஒருவேளை அவள் காட்டுக்குள் போய் கொலைகாரனிடம் மாட்டியிருந்தால்? அவளது முகத்தில் கூட ஏதோ ஒரு மிருகத்தின் காலடிதடம் இருந்ததே!
உடனடியாக செவ்வாய் முழுவதும் பதிவான வீடியோ பதிவுகளை ஒளிபரப்பச் சொன்னாள் இதன்யா.
‘ஃபாஸ்ட் ஃபார்வேர்ட்’ மூலம் பார்த்த வீடியோவில் காலையில் காட்டுப்பாதையில் இனியா ஒரு வாலிபனோடு நடந்து போகும் காட்சி வரவும் “ஸ்டாப் த வீடியோ” என்றவள் “ஜூம் பண்ணுங்க” என்கவும் ஊழியரும் அக்காட்சியை ஜூம் செய்தார்.
“பெரியவரே இது உங்க சின்னம்மா தானே… கூடப்போற பையன் யாருனு தெரியுதா?” என்று கேட்க முருகையாவும் உற்று கவனித்தார்.
வயோதிக கண்களால் சி.சி.டி.வியில் பதிவான இளைஞனை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
கண்களைச் சுருக்கிப் பார்த்தவர் அந்த ஆடவன் முடி வெட்டியிருக்கும் முறையைப் பார்த்துவிட்டு “இது… இந்தப் பையன் நிஷாந்து ஆச்சே! நம்ம ஏகலைவன் ஐயாவோட மருமகன்… ஆமா! இது அவனே தான்…. என்னடா மேல் மண்டைல மட்டும் முடிய வச்சுக்கிட்டு கீழ ஒட்ட சிரைச்சிருக்கனு கேட்டதுக்கு என்னமோ ஸ்டைலுனு சொல்லிச் சிரிச்சிட்டுப் போனான் மேடம்… இது அவனே தான்… நிஷாந்து” என்றார்.
“சரியா பாத்து சொல்லுங்க பெரியவரே…. நீங்க ஒன்னும் ஆள் மாத்தி சொல்லிடலையே?”
“என் கண்ணுக்குத் தான் வயசாகிடுச்சு மேடம்… என் மூளைக்கு ஞாபகசக்தி இன்னும் குறையல… இது ஏகலைவன் ஐயா மருமகன் நிஷாந்து தான்” என்று ஒரே போடாக போட்டார்
எதற்கும் இருக்கட்டுமென பென்ட்ரைவ் ஒன்றை கொண்டு வந்திருந்தாள் இதன்யா. அதை கண்ட்ரோல் ரூம் ஊழியரிடம் கொடுத்து குறிப்பிட்ட வீடியோ பதிவை மட்டும் அதில் ஏற்றித் தருமாறு கூறினாள் இதன்யா.
வீடியோ பதிவுடன் கூடிய பென்ட்ரைவை வாங்கிகொண்டவள் “எதுவும் உறுதியாகுறதுக்கு முன்னால இதைப் பத்தி வெளிய சொல்லக்கூடாது” என்று இருவரிடமும் கறாராகக் கூறிவிட்டு முருகன் கோவிலில் இருந்து மீண்டும் சாந்திவனத்துக்குக் கிளம்பிவிட்டாள் அவள்.
முருகையாவுக்குத் தான் மனம் ஆறவில்லை. புலம்பிக்கொண்டே வந்தார்.
“அவனை விசாரணை வளையத்துக்குள்ள கொண்டு வர்றதுக்கு இன்னும் சில ஆதாரம் வேணும் பெரியவரே… நீங்க இப்பிடி புலம்புறதை அவன் தப்பித் தவறி கேட்டுட்டான்னா உங்க சின்னம்மாக்கு இந்த ஜென்மத்துல நியாயம் கிடைக்காது” என இதன்யா அதட்டியதும் அமைதியானார் அவர்.
சாந்திவனத்துக்கு வந்ததும் இதன்யா செய்த முதல் காரியம் இனியாவின் மொபைல் மற்றும் மடிகணினியைக் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது தான்.
“இனியாவோட மொபைல் எங்க போச்சுனு தெரியல மேடம்… அடிக்கடி மொபைல் யூஸ் பண்ணக்கூடாதுனு இவர் திட்டி போனை வாங்கி வச்சார்… பட் ஒன் வீக்ல போன் காணாம போயிடுச்சு… இனியாவும் அதை எடுக்கலனு சொன்னா” என்றாள் கிளாரா.
குழந்தைகளிடம் மேற்கொண்ட விசாரணை அந்த வீட்டிலிருந்த ஒவ்வொருவரின் முகமூடியையும் கிழித்தெறிந்திருந்ததால் கிளாராவிடம் இயல்பாகப் பேச முடியவில்லை இதன்யாவால்.
விசாரணையில் புது தகவல்கள் எதுவும் கிடைத்ததா என மற்ற மூவரிடமும் இதன்யா விசாரித்தபோதே ஜானும் நவநீதமும் திருதிருவென மகேந்திரனைப் பார்க்க அவரோ முறைத்தார்.
“ஸ்டேஷனுக்குப் போய் பேசலாம் மேடம்” என்றார் அவர்.
இதன்யா அங்கிருந்து கிளம்பும் முன்னர் வீட்டிலிருக்கும் யாரும் இந்த வழக்கு முடியும் முன்னர் பொன்மலையைத் தாண்டி எங்கும் செல்லக்கூடாதென எச்சரித்துவிட்டுச் சென்றாள்.
காவல் வாகனம் சாந்திவனத்திலிருந்து கிளம்புவதைப் பார்த்தபடி தனது வீட்டின் பால்கனியில் நின்று காபி அருந்திக்கொண்டிருந்தான் ஏகலைவன். யாரோ சிறப்பு விசாரணை குழு வரப்போவதாக காவல் நிலையத்திலிருந்து ஒரு ஏட்டு மூலமாக அவனுக்குத் தகவல் வந்திருந்தது.
இதனால் வழக்கின் போக்கு மாறுமா என சிந்தித்தபடி அவன் நிற்கையிலேயே நிஷாந்த் அங்கே வந்தான்.
“வரச் சொன்னிங்களா மாமா?”
“ஆமா! நீ இனிமே இங்க இருக்கவேண்டாம் நிஷாந்த்”
“ஏன்… ஏன் மாமா? நான் எதுவும் தப்பு பண்ணலையே… நீங்க சொன்னிங்கனு ராக்கிய பாத்தா கூட ஒதுங்கிடுறேன் மாமா… இனியாவ பத்தி வேற யார் கிட்டவும் நான் பேசல”
“நீ இப்ப வரைக்கும் சரியா இருக்குற… ஆனா நாளைக்கே நீ மாறலாம்… உன்னால அக்கா நிம்மதி கெட்டுப் போயிடக்கூடாது… அதனால உன்னை மும்பை ஆபிசுக்கு அனுப்பலாம்னு இருக்கேன்… அங்க ராகேஷ்னு ஒருத்தர் இருப்பார்… அவர் வியாபார நுணுக்கத்தை உனக்குக் கத்துக் குடுப்பார்… இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு ஃப்ளைட்”
“மாமா என்னோட டிகிரி…”
“டிகிரி என்னடா டிகிரி… அதை டிஸ்டென்ஸ் மோட்ல முடிச்சிடலாம்… உன் காலேஜ்ல பேசவேண்டியது என் பொறுப்பு… நீ மும்பைக்குக் கிளம்ப லக்கேஜ் எடுத்து வை”
“அம்மாவ விட்டுட்டு நான் மட்டும் எப்பிடி மாமா போறது?”
“நீ தனியா போறனு யார் சொன்னாங்க? அக்காவும் உன் கூட வரப்போறாங்க… இனிமே உனக்கு எல்லாமே மும்பை தான்… பொன்மலைப்பக்கமே நீ வரக்கூடாது”
ஏகலைவனின் குரலில் பிடிவாதம் தொனிக்க வேறு வழியின்றி தலையாட்டி வைத்தான் நிஷாந்த்.
அதே நேரம் பொன்மலை காவல் நிலைய அலுவலக அறையில் நிஷாந்தும் இனியாவும் காட்டுக்குள் போகும் வீடியோ பதிவை மற்ற மூவருக்கும் போட்டுக் காட்டினாள் இனியா.
மார்த்தாண்டனின் கண்கள் அகல விரிந்தன.
“இந்தப் பையன் இனியாவோட ஃப்ரெண்ட்னு சொன்னானே… கான்ஸ்டபிள் ஊர்க்காரங்க கிட்ட விசாரிச்சப்ப இவன் செவ்வாய்கிழமை ஊர்லயே இல்லனு சொன்னதா ரெக்கார்ட் இருக்கு மேடம்… ராஸ்கல் பொய் சொல்லிருக்கான்” என பற்களை நறநறத்தார் அவர்.
“எந்த சஸ்பெக்டும் லட்டு மாதிரி உண்மைய நம்ம கையில கொண்டு வந்து குடுக்கமாட்டாங்க மார்த்தாண்டன்… நீங்க ஒரே கோணத்துல கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணி நிறைய சாட்சிகளை மிஸ் பண்ணிட்டிங்கனு நான் சொல்லுவேன்… இனியாவோட மொபைல் அண்ட் லேப்டாப்பை எப்பிடி கஸ்டடிக்கு எடுக்க மறந்திங்க? சக்கரவர்த்தி எஸ்டேட் தவிர வேற எங்கயாச்சும் சி.சி.டி.வி இருக்குதானு கூட தேடல… சாத்தான் ரோஷண்ணு அதை மட்டுமே குறிவச்சு போயிருக்கிங்க… அதான் கொலைகாரனுங்க உங்களுக்கே செக் வச்சிட்டாங்க” மார்த்தாண்டன் செய்த தவறைக் கூறினாள் இதன்யா.
உடனே “இனியாவோட மொபைல் அண்ட் லேப்டாப்பை சைபர் க்ரைம் ஆபிசர்ஸ் கிட்ட குடுத்து அதுல இருந்து நமக்குத் தேவையான இன்ஃபர்மேசனை எடுக்கச் சொல்லணும் இதன்யா மேடம்… நான் அந்த வேலைய கவனிக்குறேன்” என முரளிதரன் கூறினார்.
“ஓ.கே… நீங்க அந்த வேலைய பாருங்க… இன்னைக்கு என்கொயரில எதுவும் புதுசா தெரிய வந்துச்சா?” முரளிதரனிடம் கேட்டாள்.
“நான் விசாரிச்ச வரைக்கும் கலிங்கராஜனுக்கு இனியா மேல பெருசா பாசம் இல்ல… அதை அவரே ஒத்துக்கிட்டார்… ரோஷணை எப்பிடி தெரியும்னு கேட்டதுக்கு அவரோட ஒய்ப் கிளாரா அறிமுகப்படுத்தி வச்சதா சொன்னார்… தொழில்ல சரியா லாபம் இல்ல போல… இப்ப ஏகலைவன் சக்கரவர்த்தியோட முதலீட்டுக்காக காத்திருக்கிறதா சொன்னார்”
“இது ஆல்ரெடி மார்த்தாண்டன் விசாரிச்சது தானே… புதுசா எதுவும் தெரியலையா?”
“கலிங்கராஜனுக்கு அவரோட மனைவி கிளாராவோட நடத்தை மேல சந்தேகம் இருக்கு… அவங்க யார் கூடவே ஈ.எம்.ஏல இருக்காங்கனு சந்தேகப்படுறார்”
இது புதியத் தகவல் தானே! குறித்து வைத்துக்கொண்டாள் இதன்யா.
அவளது விசாரணையில் கிடைத்த தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தாள்.
“அந்த வீட்டுல இருந்த சர்வெண்ட்சுக்கும் இனியாவுக்கும் இடையில நிறைய உரசல்கள் நடந்திருக்கு… கிளாராக்கும் இனியாக்கும் கூட ஏதோ பிரச்சனை நடந்ததா குழந்தைங்க சொன்னாங்க… இன்னொரு முக்கியமான தகவலை மிச்செல் சொன்னா… இனியாவும் நிஷாந்தும் அடிக்கடி மொபைல்ல பேசிக்கிறது கலிங்கராஜனுக்குத் தெரிஞ்சிருக்கு… அதுக்காக தான் இனியாவோட மொபைலை அவர் வாங்கி வச்சிருந்திருக்குறார்… இனிமே நிஷாந்த் கூட பேசாதனு திட்டிருக்குறார்… மகளோட காதல் விவகாரம் தெரிஞ்சிருந்தும் மார்த்தாண்டன் கிட்ட இனியா யாரையும் லவ் பண்ணலனு பொய் சொல்லிருக்கார் அந்த மனுசன்” என இதன்யா சொல்லி முடித்தாள்.
இப்போது மார்த்தாண்டனின் முறை. கிளாரா இனியாவைப் பற்றி கூறியதை ஒப்பித்தார்.
இனியாவுக்கு எப்போதுமே கலிங்கராஜனின் பாசத்தை வெல்வதே குறிக்கோளாக இருந்திருக்கிறது. ஆனால் கலிங்கராஜனுக்கோ முதல் மனைவி குமுதாவின் மீதிருக்கும் அளவுக்கடந்த காதல் மகள் மீது வெறுப்பாக மாறிவிட்டிருந்தது. அதை அவ்வளவு எளிதில் போக்க முடியாதென தெரிந்தும் தந்தையின் அன்பை ஜெயிக்கப் போராடியிருக்கிறாள் அந்தச் சிறுபெண்.
யாரும் அன்பாகப் பேசினால் உருகிப்போகும் குணம் அவளுக்கு. இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் ஆன்லைனில் யாரோ முகம் தெரியாத நபரோடு பேசி நட்பாகியிருந்தாள் என்று கிளாரா சொல்லியிருக்கிறார். அந்நபரைச் சந்தித்தே ஆகவேண்டுமென அடிக்கடி சொல்வாளாம்.
அதோடு பொன்மலை முருகன் கோவிலைச் சுத்தம் செய்தால் கடவுள் அருளால் தந்தை மனம் மாறுவார் என்று நம்பினாள் அந்தச் சிறுபெண்.
இவ்வளவு தான் மார்த்தாண்டனுக்குக் கிடைத்த புதிய தகவல்.
மகேந்திரன் விசாரித்தது வேலைக்காரர்களை விசாரித்தார் அல்லவா!
முருகையாவைப் பற்றி மூவருமே நல்லவிதமாகக் கூறினார்கள். ஆனால் நவநீதம் – ஜான் இருவரும் குமாரியைப் பற்றி நல்லவிதமாகக் கூறவில்லை.
“கிளாராம்மாவ கைக்குள்ள போட்டிருக்கா சார் அவ… அவளைக் கேக்காம கிளாராம்மா எந்த முடிவும் எடுக்கமாட்டாங்க” இதைச் சொன்னவள் நவநீதம்.
“அவங்க ரெண்டு பேரும் அடிக்கடி ரகசியமா பேசிப்பாங்க சார்” இது ஜானின் வாக்குமூலம்.
“குமாரி என்ன சொன்னாங்க?”
“அவங்க ஜானையும் நவநீதத்தையும் குறை சொன்னாங்க… ஒரு தடவை ரெண்டு பேரும் கிளாராவுக்குத் தெரியாம ஏதோ பணம் திருடி மாட்டிக்கிட்டாங்களாம்… அதை இனியா கண்டுபிடிச்சு திட்டுனதா சொன்னாங்க குமாரி”
அனைத்தையும் கேட்டு முடித்த இதன்யாவுக்கு இந்த வழக்கில் சந்தேகப்படுவோர் பட்டியல் நீண்டுகொண்டே போவதாகத் தோன்றியது.
முதலில் நிஷாந்தைக் கவனிப்போமென நினைத்தவளுக்கு மறுநாள் சைபர் க்ரைம் பிரிவிலிருந்து கிடைத்த தகவல்கள் பெரியதொரு முடிவை எடுக்கும் சூழலை உருவாக்கின.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

