தாமஸின் ‘சோசியோபாத் வேர்ல்ட்’ என்ற வலைப்பூ உளப்பிறழ்வுக் குறைபாட்டாளரோடு வாழும் வாழ்க்கை எப்படி இருக்குமென்பதை பற்றிய பதிவுகளை உள்ளடக்கியுள்ளது. அதில் தாமஸ் ‘சைக்கோபாத்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘சோசியோபாத்’ என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறார். அதை மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பதால் பயன்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார் அவர். தாமஸ் எழுதிய ‘A Life spent hiding in Plain Sight’ என்ற புத்தகம் 2012ல் வெளியாகி பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டு வருகிறது.
-An article from BBC
காவல் ஆணையர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள் இதன்யா. அவள் முன்னே இனியாவின் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை இருந்தது.
முந்தைய தினம் எய்ம்ஸ் மருத்துவக்குழுவும், தடயவியல் குழுவும் சேர்ந்து அரசு மருத்துவமனைக்கு வந்து மூன்று மணிநேரங்கள் எஸ்.பி மற்றும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அந்த இரண்டாவது பிரேத பரிசோதனையைச் செய்து முடித்து உடனடியாக அறிக்கையையும் அளித்திருந்தார்கள்.
அந்த அறிக்கை முதல் பிரேத பரிசோதனையில் விளக்கப்படாத சில உண்மைகளைக் கூறியது.
இனியாவைக் கட்டாயம் இரண்டு நபர்கள் வன்புணர்வு செய்திருக்கிறார்கள் என அந்த அறிக்கை உறுதிபடுத்தியது. கூடவே கொலைகாரர்களில் ஒருவனின் டி.என்.ஏக்கள் சில கிடைத்திருப்பதாகவும் கூறியது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதில் முக்கியமானது இனியாவின் உமிழ்நீரில் கிடைத்த டி.என்.ஏ. அது அவளது டி.என்.ஏவோடு பொருந்தவில்லை. ஒருவேளை கொலைகாரர்களில் யாரோ ஒருவன் அவளை முத்தமிட்டிருக்கலாம் என்று சொன்னது அறிக்கை.
பொதுவாக இம்மாதிரி உமிழ்நீர் மற்றும் வாயிலிருந்து எடுக்கப்படும் திரவ மாதிரிகளில் கலந்திருக்கும் அன்னிய டி.என்.ஏக்களை இருபத்து நான்கு மணிநேரத்துக்குள் மட்டுமே சரியாகக் கண்டறிந்து வகைப்படுத்த முடியும். இந்த வழக்கில் இத்தனை நாட்கள் கழித்து டி.என்.ஏவைக் கண்டறிந்தது நம்ப முடியாத சம்பவம் என்று நினைத்தாள் இதன்யா.
தொடர்ந்து வாசித்தவள் அடுத்த வரியில் ஏமாற்றமடைந்தாள். காரணம் கொலைகாரர்களின் ஸ்பெர்ம் மற்றும் செமன் மாதிரிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டு கண்டாமினேட் ஆகியிருந்தல்லவா! இன்னொரு முறை எடுக்க முயற்சி செய்தபோது மருத்துவ மற்றும் தடயவியல் குழுவால் குறிப்பிடத்தக்க மாதிரிகளை எடுக்க முடியவில்லை. காரணம் இனியாவின் உடலின் கீழ்ப்பகுதியை அந்தக் கொலைகாரர்கள் தண்ணீரால் சுத்தம் செய்திருக்கலாம், அதனால் வெஜைனாவில் முன்னர் எடுத்தது போல இப்போது மாதிரிகளை எடுக்க முடியவில்லை என்றது அந்த அறிக்கை.
செர்விக்ஸ் பகுதியில் கிடைத்த சில மாதிரிகள் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருந்தன. காரணம் இனியாவுக்கு அந்த சமயத்தில் சிறுநீர்ப்பாதை தொற்று இருந்திருக்கலாம், அதற்கு காரணமான ஈ-கோலை போன்ற பாக்டீரியங்கள் ஸ்பெர்ம் மற்றும் செமனிலுள்ள டி.என்.ஏக்களில் தொற்றுண்டாக்குவதால் அவற்றை வைத்து ‘டி.என்.ஏ ப்ரொஃபைலிங்’ செய்தால் சரியான முடிவு கிடைக்காது என்று பிரேத பரிசோதனைக்குழுவினர் குறிப்பிட்டிருந்தார்கள்.
முதல் பிரேத பரிசோதனையின் போது இனியாவின் பிறப்புறுப்பிலிருந்து எடுக்கப்பட்ட செமன் மற்றும் ஸ்பெர்ம் மாதிரிகள் கண்டாமினேட் ஆனதற்கும் இந்த பாக்டீரிய தொற்று காரணமாக இருந்திருக்கலாம் என கூடுதல் தகவல் வேறு.
இனியாவின் ஆடைகளில் செமன் மற்றும் ஸ்பெர்ம் மாதிரிகள் கிடைக்கவில்லை. ஆனால் அவளது மேற்சட்டையில் இருந்து இரண்டு முடியிழைகள் கிடைத்துள்ளதாக ஆறுதல் தகவல் ஒன்றும் இருந்தது.
மற்றபடி தெளிவான கைரேகைகள் எதுவும் கிடைக்கவில்லை. தனிப்பட்ட கைரேகைகள் இருந்தால் தான் அவற்றை வைத்து ஆளை அடையாளம் கண்டறிய முடியும். இங்கேயோ இனியாவின் உடலின் மேற்பாகத்திலிருந்த கைரேகை பதிவுகளில் கொலைகாரர்கள் இருவரின் கைரேகைகளும் கலந்திருந்தன. கூடவே ஏதோ ஒரு மிருகத்தின் கால்தடம் அவள் முகத்தின் வலப்பக்கத்தில் பதிந்திருந்தது. அதை மனதில் குறித்து வைத்துக் கொண்டாள் இதன்யா.
மொத்தத்தில் முதல் பிரேத பரிசோதனையில் கண்டறிய இயலாத சில டி.என்.ஏக்கள் கிடைத்ததும், இனியாவின் மரணத்துக்கு இருவர் காரணம் என்ற உண்மை உறுதிப்படுத்தப்பட்டதும் ஒருவகையில் முன்னேற்றமாகவே தோன்றியது இதன்யாவுக்கு.
அவள் அறிக்கையைப் படித்து முடித்தபோது காவல் ஆணையர் வந்தார்.
எழுந்து சல்யூட் வைத்தவள் “ப்ளீஸ் சிட்டவுன் இதன்யா” என்றதும் அமர்ந்தாள்.
“இந்த கேஸ்ல நீங்களும் ஏ.சி.பி முரளிதரனும் உண்மைய கண்டுபிடிப்பிங்கனு நம்புறேன்… எங்க தரப்புல இருந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ண நீங்க மார்த்தாண்டனையும் மகேந்திரனையும் செலக்ட் பண்ணுனதா கமலேஷ் சொன்னார்… அவங்க மேல டிப்பார்ட்மெண்டல் என்கொயரி நடந்து முடிஞ்சிருக்கு”
“அவங்க தான் சஸ்பெக்டோட தற்கொலைக்குக் காரணம்னு என்கொயரி கமிசன் இன்னும் சொல்லலையே சார்… பெனிஃபிட் ஆப் த டவுட் அடிப்படைல அவங்களை நான் செலக்ட் பண்ணுனேன்… இந்த கேஸ்ல ஆரம்பத்துல இன்வால்வ் ஆனவங்க அவங்க தான்… சஸ்பெக்ட் லிஸ்ட் தயாரிச்சு விசாரிக்கவும் செஞ்சிருக்காங்க… சம்பந்தமில்லாத யாரோ ஒரு இன்ஸ்பெக்டரைப் போட்டா மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறது போல இருக்கும்… அவங்க குடுத்த ரிப்போர்ட்ஸ் இருந்தாலும், ஐ பெர்ஷனலி நீட் தெம் டு அசிஸ்ட் மீ இன் திஸ் கேஸ்”

“ஷ்யூர் இதன்யா… ஆல் த பெஸ்ட்”
கரம் குலுக்கினார் காவல் ஆணையர். இதன்யா மரியாதைநிமித்தம் கை குலுக்கிவிட்டு இரண்டாம் பிரேத பரிசோதனை அறிக்கையோடு அங்கிருந்து வெளியேறினாள்.
வெளியே வந்தவள் உதவி ஆணையர் கமலேஷ் வரவும் சினேகமாகப் புன்னகைத்தாள். ஐ.பி.எஸ்சில் அவளுக்கு முந்தைய பேட்ச் அவர்.
ஒரே இடத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் நட்புரீதியானப் பழக்கமும் உண்டு. இதன்யாவைப் பார்த்ததும் அவரும் நட்பாகச் சிரித்தார்.
“வெல்கம் இதன்யா ப்ராணேஷ்”
“கரெக்சன்… இதன்யா வாசுதேவன்”
“வாட்?”
கமலேஷ் அதிர “வீ ஆர் செப்பரேட்டட் சீனியர்… டிவோர்ஸ் கேஸ் ஃபேமிலி கோர்ட்ல போகுது” என்றபடி அவரோடு நடந்தாள் இதன்யா.
“ஐ டோண்ட் எக்ஸ்பெக்ட் திஸ் இதன்யா” என்றார் கமலேஷ் ஆற்றாமையோடு.
“மேரேஜ்ல உங்க ஜோடிய பாத்தப்ப உஷா ‘மேட் ஃபார் ஈச் அதர்’னு சொன்னா… இப்ப நீங்க பிரிஞ்சதைக் கேள்விப்பட்டா வருத்தப்படுவா” என்று தனது மனைவியைப் பற்றி குறிப்பிடவும் இதன்யா புன்னகைத்தாள்.
“மேட் ஃபார் ஈச் அதர்ங்கிற ஸ்தானத்துக்காக ஒரு பொண்ணு நிறைய தியாகம் பண்ணனும் சீனியர்… அந்த தியாகம் அவளோட கெரியர், ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள், ஃபேமிலி எதுவா வேணாலும் இருக்கலாம்… அன்ஃபார்சூனேட்லி ப்ராணேஷோட மனைவியா இருந்த இதன்யாவுக்கு இந்த மாதிரி தியாகங்கள் செஞ்சு பழக்கமில்லயே… ரெண்டு பேரும் ஒரே வேவ் லெங்த்ல போகமாட்டோம்னு புரிஞ்சுது… சோ நான் பிரிஞ்சிட்டேன்… ஆறு மாசம் ஆகுது சீனியர்” என்றாள் அவள்.
கமலேஷ் நாகரிகம் தெரிந்தவர் என்பதால் பேச்சுவார்த்தையை இனியாவின் படுகொலை வழக்கு பக்கம் திருப்பினார்.
“மார்த்தாண்டனும் முட்டி மோதிப் பார்த்தார்… கடைசில அவர் மேலயே என்கொயரி கமிசன் வந்தது தான் மிச்சம்… இந்த கேஸ்ல விக்டிமோட பேரண்ட்ஸ் மேலயே அவருக்குச் சந்தேகம்… பட் அதை ப்ரூவ் பண்ண சரியான ஆதாரம் கிடைக்கல… இன்னைக்கு விக்டிமோட பாடிய அவ ஃபேமிலி கிட்ட ஒப்படைக்கப் போறாங்க… அங்க என்ன ட்ராமாலாம் நடக்கப்போகுதோ?” என கமலேஷ் சொன்னதும் இதன்யாவுக்கு அங்கே நடப்பதை நேரில் பார்த்தால் என்ன என தோன்றியது.
கமலேஷிடம் விடைபெற்றாள் அவள்.
“ஃப்ரீயா இருந்தா சண்டே வீட்டுக்கு லஞ்சுக்கு வரணும்… உஷா வில் பி ஹேப்பி டு சீ யூ”
“கண்டிப்பா சீனியர்”
தனது பைக்கில் காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து கிளம்பியவள் நேரே அரசு மருத்துவமனையில் போய் நின்றாள்.
காவல்துறைக்கே உரித்தான கம்பீரமான உடல்மொழியைக் கூடியமட்டும் வெளிப்படுத்தாமல் இருக்க முயன்றவளாக யாரோ போல அங்கே நின்று கொண்டவளின் பார்வையில் அழுதபடி ஒரு ஓரமாக இருந்த பெரியவர் முருகையா பட்டுவிட்டார்.
இனியாவின் உயிரற்ற உடல் வெளியே கொண்டுவரப்பட்டபோது பெருங்குரலெடுத்து அழுதார் அவர்.
“நீ இல்லாம சாந்திவனம் இருளடைஞ்சு போச்சு… உன்னைக் கொன்னவன் யாருனு கூட யாருக்கும் கவலைக்கும் இல்ல… எல்லாரும் சுயநலவாதிங்க சின்னம்மா”
அவர் பேசுவதைக் காதில் போட்டுக்கொண்டவள் அங்கே காக்கி நிற கால்சராயும் டீசர்ட்டும் அணிந்து வந்த நபரும் இஸ்லாமியர் ஒருவரும் அந்தப் பெரியவரிடம் ஆறுதல் சொல்வதையும் கேட்க நேரிட்டது.
“பெரியவரே! டிப்பார்ட்மெண்ட்ல இனியா கொலை வழக்கை விசாரிக்க ஸ்பெஷல் என்கொயரி டீம் வந்திருக்கு… அதுல இருக்குற ஏ.சி.பி மேடம் ரொம்ப திறமையானவங்க… கட்டாயம் இனியாவோட கொலைக்குக் காரணமான ரெண்டு பேரை அவங்க சட்டத்துக்கு முன்னாடி நிறுத்துவாங்க” என்றார் அந்த காக்கி கால்சராய்க்காரர்.
‘டிப்பார்ட்மெண்ட்’ என்ற வார்த்தையும் காக்கி வண்ண கால்சராயும் அவர் காவல்துறை அதிகாரி என்பதைச் சொல்லாமல் சொல்லின இதன்யாவுக்கு.
“எல்லாரையும் விசாரிக்கனும் சார்… முக்கியமா அந்த ஜான் பய, குமாரி, நவநீதம் இவங்க மூனு பேரையும்… சின்னம்மா இருந்தப்ப இனியா இனியானு உருகுவாங்க… இப்ப கவலையே இல்லாம நடமாடுதுங்க”
அவர் சொன்ன பெயர்களை மனதுக்குள் குறித்துவைத்துக்கொண்டாள் இதன்யா.
இனியாவின் உடலோடு மருத்துவ வாகனம் கிளம்பியது. அதைத் தொடர்ந்து கார் ஒன்றும் கிளம்பிப்போனது. அந்தக் காரில் இருந்த நபர் தான் இனியாவின் தந்தையாக இருக்கவேண்டுமென ஊகித்துக்கொண்டாள் அவள்.
அதற்கு மேல் அங்கே இருக்காமல் பெரியவரும் இஸ்லாமியரும் கிளம்பிவிட அந்தக் காவல்துறை அதிகாரியும் இடத்தைக் காலி செய்தார். பைக்கில் ஏறியபோது கண்களை அவர் அழுத்தியவிதம் அழுதிருப்பதை புரியவைத்தது இதன்யாவுக்கு.
ஒருவேளை இவர் தான் அந்த மார்த்தாண்டனாக இருக்குமோ என ஐயத்தோடு இதன்யாவும் பொன்மலை காவல் நிலையம் செல்ல தனது பைக்கைக் கிளப்பினாள்.
அரசு மருத்துவமனையிலிருந்து பொன்மலைக்குக் கொண்டுவரப்பட்டது இனியாவின் உடல்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் என்பதால் அதிகநேரம் வைத்திருக்கக்கூடாது. மருத்துவ வாகனம் சாந்திவனத்தை அடைந்ததும் கிளாரா ஓடோடி வாயிலுக்கு வந்தாள்.
இனியாவின் முகத்தை இறுதியாகப் பார்த்ததும் கண்ணீர் மட்டுமே அவளது மொழியாக மாறிப்போனது.
கலிங்கராஜன் எவ்வளவோ சொல்லியும் பிள்ளைகள் தங்களின் அக்காவைக் கடைசியாகப் பார்க்கவேண்டுமென அடம்பிடித்து வந்து நின்றார்கள்.
இனியாவின் உடலைப் பார்த்ததும் நித்திலராஜனும் ஜென்னியும் ஓவென கதறியழுதார்கள்.
மிச்செல்லுக்குக் கண்ணீர் முட்டியது. தமக்கையுடன் சேர்ந்து வளர்ந்த தருணங்கள், குறும்பு செய்த பொழுதுகள், இனியாவின் அன்பு எல்லாம் நினைவுக்கு வர இனி அவை எதுவும் இல்லை என்ற எண்ணமே அவளை மூர்ச்சையடைய வைத்தது.
“மிச்செல் என்னாச்சும்மா?”
பதறிய நவநீதம் ஜானை அழைக்க அவர் அவளை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்.
கூடியிருந்த ஊர்மக்களில் நிஷாந்தும் ராக்கியும் கூட அடக்கம். நிஷாந்த் காதலியை இறுதியாக ஒரு முறை பார்க்க வந்திருந்தான். சாவித்திரியின் பரிதவித்த முகம் மனக்கண்ணில் வரவும் அருகில் போகாமல் தூரத்தில் நின்றுகொண்டான்.
கல்லாய் சமைந்திருந்த கலிங்கராஜனிடம் “சார் சுடுகாட்டுக்குப் போயிடலாமா?” என்று மருத்துவ வாகன ஓட்டுனர் கேட்க அவரும் போகலாமென்றார்.
கலிங்கராஜனின் தோளை ஆறுதலாக அழுத்தினான் ஏகலைவன்.
“என் சர்வெண்ட்ஸ் வெட்டியான் கிட்ட சொல்லி தகனத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க கலிங்கராஜன்… வாங்க கிளம்புவோம்” என அவரை மயானத்திற்கு அழைத்துச் சென்றான்.
நெருங்கிய உறவுகள், ஊரார்களில் ஆண்கள் மட்டுமே அங்கே செல்வது வழக்கம். ஊரில் மரணம் நேர்ந்தால் அனைவரும் இறுதி சடங்கில் பங்கெடுப்பது பொன்மலையில் வழக்கம். அனைத்து குடும்பத்து ஆண்களும் மயானத்திற்கு செல்வது இறந்தவருக்குத் தாங்கள் கொடுக்கும் மரியாதை என்ற எண்ணம் அவர்களுக்கு.
அந்த வகையில் நிஷாந்தும் ராக்கியும் பாதிரியார் பவுலுடன் மயானத்திற்கு சென்றார்கள்.
இனியா என்ற அன்பும் அழகும் கொண்ட இளம்பெண் சடலமாக விறகு குவியல் மீது கிடத்தப்பட்டாள். கொள்ளிக்குடம் உடைத்த கலிங்கராஜன் அவளது சிதைக்குத் தீ மூட்ட அக்னிக்கு என்ன வெறியோ தெரியவில்லை, இனியாவின் உடலை தனது ஆளுமைக்குள் கொண்டு வந்து திகுதிகுவென எரிய ஆரம்பித்தது.
தன்னைக் கொன்றவர்கள் யாரென்ற உண்மையைச் சொல்லாமலேயே சாம்பாலாகத் தொடங்கியது அவளது உடல். இந்தப் பிடிசாம்பலில் அடங்கிப்போகப் போகிற வாழ்க்கையில் தான் எத்துணை போராட்டங்கள்! இது தான் வாழ்வின் முடிவென ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும். அந்த முடிவு கொடுமையான முடிவாக இல்லாமலிருக்க வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் விருப்பம். பாவம்! இனியாவுக்கு மட்டும் அந்தக் கொடுப்பினையை கொடுக்க மறந்தாரோ பொன்மலை முருகன்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

