2005ல் உளவியல் ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்ட பகுப்பாய்வில் உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சில முக்கியமான பண்புரீதியான வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் திட்டமிடாமல் வேலைகளைச் சொதப்புவது, சுவாரசியமான சிலிர்ப்பூட்டும் உறவுகளை வெளியே தேடுவது, கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிப்பது போன்ற பண்புகளை வெளிப்படுத்துவார்களாம். ஆனால் ஆண்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தீவிரமான உடல்ரீதியான வன்முறையை நிகழ்த்துவது மூலமாக தங்களது உளப்பிறழ்வுக் குறைபாட்டை வெளிக்காட்டுவதாக அந்தப் பகுப்பாய்வின் முடிவுகள் கூறுகின்றன. அந்தக் காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையே உளப்பிறழ்வுக்குறைபாட்டினால் உருவாகும் பண்புரீதியான வேறுபாடுகளுக்கு என்ன காரணமென தெரிந்துகொள்ள போத்குமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இப்போது வரை எந்த மாற்றமும் இல்லை.
-An article from BBC
சாந்தி நிலையம்…
கூண்டில் அடைபட்ட புலி போல அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தார் கலிங்கராஜன். கிளாராவுக்கு அவரிடம் என்னவென வினவ பயமாக இருந்தது. பிள்ளைகளை நவநீதத்துடன் அனுப்பிவிட்டுக் கோபம் தணிந்து கணவரே பேசட்டுமென காத்திருந்தார் அவள்.
கலிங்கராஜனோ “ராஸ்கல் அவன் என்னையே மிரட்டுறான்… அவனை நான் சும்மாவிடமாட்டேன்… என் மரியாதைய கெடுத்துடுவானாமே… அதுக்கு அவன் உயிரோட இருந்தா தானே?” என்று உறுமிக்கொண்டே நடந்தார்.
காவல் நிலையத்திலிருந்து திரும்பியதிலிருந்து கணவரின் கோபம் கட்டுக்கடங்காமல் இருப்பதைப் பார்த்த கிளாராவுக்கு அதற்கு காரணம் ரோஷண் என்பது மட்டும் புரிந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவன் என்ன சொல்லித் தொலைத்தானோ என அவளது மனம் தவித்தது.
கலிங்கராஜன் நடப்பதை நிறுத்திவிட்டுத் தன்னை உறுத்து விழிப்பதைக் கண்டதும் பயம் பந்து போல உருண்டு தொண்டையில் வந்து நின்றது அவளுக்கு. ஒருவேளை ரோஷண் தன்னைப் பற்றிய உண்மைகளைக் கூறியிருப்பானோ? நடுங்கியது கிளாராவின் மேனி.
“என்னங்க?”
“உன்னால தான் இவ்ளோ பிரச்சனையும்… சாத்தான் பேயினு என்னை இழுத்துட்டுப் போயி இப்ப என் நிலமைய பாருடி… என்னால மெல்லவும் முடியல, முழுங்கவும் முடியல… அந்தப் போலீஸ்காரன் இனியா பாடிய குடுக்காம அலைய விடுறான்… இன்னொரு பக்கம் ரோஷண் என்னை மிரட்டுறான்… நான் உன் கிட்ட வந்து என் பிசினஸ் லாபமா போக வழி சொல்லுனு கேட்டேனாடி?”
கிளாராவின் கண்களில் அச்சம் அப்பட்டமாகத் தெரிந்தது. கூடவே சிறு நிம்மதியும். நல்லவேளையாக இன்னும் ரோஷண் கணவரிடம் எந்த உண்மையையும் சொல்லவில்லை.
“இப்பிடி ஆகும்னு நான் மட்டும் நினைச்சேனா ராஜன்? ஏதோ போறாத காலம்”
“மண்ணாங்கட்டி”
சீறியவரின் காதில் “கலிங்கராஜன் சார்” என்ற ஏகலைவனின் குரல் கேட்கவும் வெகு சிரமத்துடன் கோபத்தை மறைத்துக்கொண்டார்.
ஏகலைவனைக் கண்டதும் அவசரமாக தனது ஆடையைத் திருத்திக்கொண்டாள் கிளாரா. கண்களில் ஆர்வம் பளிச்சிட்டது. தலைமுடி எதுவும் கலைந்து இருக்குமோ என்ற கவலை வேறு!
“இனியா கேஸ்ல எதுவும் முன்னேற்றம் இருக்கா சார்?”
ஏகலைவனை அமரச் சொல்லிவிட்டுத் தானும் அமர்ந்தார் கலிங்கராஜன்.
“போலீஸ் கஷ்டடில இருக்குற ரோஷண் உண்மைய சொன்னா கேஸ் முடிஞ்சிடும்… ஆனா அவன் சொல்லுவான்னு தோணல… இன்னைக்கு ஸ்டேசன்ல என்னையே மிரட்டுறான் அவன்” என்றார் கசப்புடன்.
“போலீஸ் என்ன சொல்லுறாங்க?” ஏகலைவன் யோசனையில் இடுங்கிய விழிகளுடன் கேட்டான்.
“அவங்க என்னையும் கிளாராவையும் ரோஷண் கூட சம்பந்தப்படுத்தி கொலைகாரப்பட்டம் குடுக்காங்க ஏகலைவன்… தொழில் விருத்திக்காக நானும் இவளும் இனியாவ ரோஷண் மூலமா நரபலி குடுத்துட்டோம்னு இஷ்டத்துக்குப் பேசுறார் அந்த சப் இன்ஸ்பெக்டர்”
“புல்ஷிட்… எந்தத் தகப்பனும் இப்பிடி ஒரு காரியத்தைச் செய்வானா? கிளாரா மேடம் இனியாவை எவ்ளோ அன்பா வளத்தாங்கனு எனக்குத் தெரியும்… இந்த ஊர்க்காரங்களுக்கும் அந்த உண்மை தெரியும்… எல்லாத்துக்கும் காரணம் ரோஷண்… அவன் மூலமா சாத்தானிசம் கல்ட் குரூப் நம்ம ஊருக்குள்ள வந்தப்ப முளையிலயே கிள்ளி எறிஞ்சிருக்கணும்… நம்ம அதை செய்ய தவறிட்டோம்… இங்க நடக்குற குழப்பத்துக்குப் பின்னால ரோஷண் தான் இருப்பானோனு எனக்கும் சந்தேகம் வருது… அவனோட எம்ப்ளாயர்னு அடுத்ததா போலீஸ் என்னையும் கூப்பிட்டு விசாரிப்பாங்க போல… நிலமை இப்பிடி தறிகெட்டு கிடக்குதே கலிங்கராஜன்”
“உங்க கிட்ட வர போலீஸ் யோசிப்பாங்க சார்.. உங்களுக்கு அமைச்சர் வரைக்கும் செல்வாக்கு இருக்குது”
“என் இன்ஃப்ளூயன்சை யூஸ் பண்ணி நான் இனியாவோட பாடிய நம்ம கிட்ட குடுக்க ஏற்பாடு பண்ணட்டுமா கலிங்கராஜன்? உங்க மனசு இறந்த மகளை வச்சு இங்க நடக்குற நாடகத்தால நொந்து போயிருக்குனு என்னால புரிஞ்சிக்க முடியுது… இனியாவோட ஆத்மா இங்க நடக்குறதை பாத்து நொந்து போயிருக்கும்”
சொல்லும்போதே ஏகலைவனின் குரல் நலிந்து போனது. அவன் இனியாவுக்காக மனம் வருந்துகிறானா? ஆற்றாமையில் துடித்தது கிளாராவின் உள்ளம்.
தனது உள்ளத்தின் குமுறல்களை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மறைக்க அரும்பாடு பட்டாள் அவள்.
கலிங்கராஜன் ஏகலைவனின் கரத்தைப் பற்றி முதுகு குலுங்க அழ ஆரம்பித்தார்.
மகளின் மரணம் கொடுத்த அதிர்ச்சி, அவளது கொலைக்குத் தானும் காரணமென காவல்துறையின் சந்தேகப்பார்வையால் உண்டான வேதனை, மகளுக்கு ஈமக்கடனைக் கூட சரியான நேரத்தில் செய்ய முடியாத இயலாமை என அனைத்தும் அந்தக் கண்ணீரில் கரைந்து ஓடுவதாக எண்ணி அழுதார் மனிதர்.
அவர் அழுது முடிக்கட்டுமென காத்திருந்தான் ஏகலைவன். கிளாரா அவரது தோளைத் தொட்டதும் உதறியவர் “என் மகளுக்கு ஒரு தகப்பனா நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிவைக்கணும்னு நினைச்சேன் ஏகலைவன்… எனக்கு அவளைப் பிடிக்காது… ஆனா என் கண்ணு முன்னாடியே அவளோட சடலம் கிடந்தப்ப நான் பாதி செத்துட்டேன்… மீதி உயிரை போலீஸ்காரங்க வாங்கி முடிக்குறதுக்குள்ள என் மகளுக்குக் கடைசியா செய்ய வேண்டிய காரியத்தைப் பண்ணனும்னு நினைக்குறேன் ஏகலைவன்… உங்களால முடிஞ்சா இந்த உதவிய பண்ணுங்க” என்றார்.
இதுவரை அவர் யாரிடமும் கெஞ்சியதில்லை. கிளாராவுக்குமே எப்போதடா வழக்கு முடிவுக்கு வரும் என்ற எண்ணம் தான். அவளது கணவருக்கும் அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குக்குக் குறைவில்லை.
ஆனால் இனியாவின் மரணம் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பேசுபொருள் ஆகி சந்தேகப்படுவோர் பட்டியலில் அவளது பெயரோடு கலிங்கராஜனின் பெயரும் இடம்பெற்றதால் எந்த அரசியல்வாதியும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
பெண் விவகாரமாயிற்றே! நாளையே கலிங்கராஜனும் கிளாராவும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் தாங்களும் குற்றத்திற்கு உடந்தை என செய்தி கிளம்பி அரசியல் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்துவிடுமோ என்ற பயம் அவர்களுக்கும் இருக்குமல்லவா!
எனவே கலிங்கராஜனின் செல்வாக்கு இனியாவின் மரணத்தால் செல்லாக்காசாகிப் போனது. இப்போது ஏகலைவனிடம் உதவி கேட்டு மன்றாடும் நிலைக்கு ஆளாகிவிட்டார் மனிதர்.
ஏகலைவன் எவ்வளவு விரைவில் இறுதிகட்ட நடைமுறைகளை முடித்து இனியாவின் சடலத்தை வாங்கி தரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்கி தருவதாக உறுதியளித்துவிட்டுக் கிளம்பினான்.
அவனது வீட்டுக்கு வந்தவன் தோட்டத்தின் மூலையில் ராமபாண செடியின் அருகே யாரோ நிற்கவும் அதிர்ந்து போனான்.
“யாருங்க அது?” என உரத்தக்குரலில் அவன் கூறவும் நின்ற உருவம் திரும்பிக் கூட பார்க்காமல் ஓட்டம் எடுத்தது.
“ஏய் நில்லு”
துரத்திக்கொண்டே ஓடிய ஏகலைவன் அந்த உருவம் சில பூந்தொட்டிகளைத் தூக்கி எறிந்ததால் நிலைதடுமாறி சரிய அச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு சுவர் ஏறிக்குதித்த அவ்வுருவம் தப்பியோடிவிட்டது.
பூந்தொட்டிகளில் ஒன்று ஏகலைவனின் மார்பில் நச்சென மோதியிருந்தது. என்ன தான் திடகாத்திரமான ஆண்மைகனாக இருந்தாலும் அவனுக்கு மார்புகூடு வலித்தது.
மெல்ல சுதாரித்து எழுந்தவன் ராமபாண செடியினருகில் அந்த உருவம் என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வியோடு அச்செடியைப் பார்க்கப் போனான்.
அங்கே அவன் கண்ட காட்சியில் ஒரு நொடியில் உலகமே இருண்டு போனது.
“நோஓஓஓஓஓ”

அந்த இடமே அதிரும்படி மனம் நொறுங்க அலறினான் ஏகலைவன்.
அவனுக்கு மிகவும் பிடித்த ராமபாண செடியின் மீது கந்தக அமிலத்தை ஊற்றியிருந்தது அந்த உருவம். அமிலத்தின் வீரியத்தால் செடி பொசுங்கிக் கொண்டிருக்கும் காட்சியை ஏகலைவனால் கண்கொண்டு காண முடியவில்லை.
அப்படியே மடிந்து அமர்ந்து கண்ணீரில் கரைந்தான் அவன்.
அதே நேரம் சாந்திவனத்தில் ஜென்னி எதையோ ஒளித்து எடுத்து வந்து மிச்செல்லிடம் காட்டினாள்.
அதைப் பார்த்ததும் மிச்செல்லின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
“இதை அப்பா அம்மா கிட்ட காட்டுனியா?”
“இல்லக்கா… நான் உன் கிட்ட தான் ஃபர்ஸ்ட் காட்டுறேன்… இது இனியாக்காவோடது தானே?” என்று கை நீட்டிக் கேட்டாள் அந்தக் குழந்தை.
அந்தப் பொருள் இனியாவின் மொபைல். இத்தனை நாட்கள் காவல்துறையினரால் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படாத வஸ்து.
இனியாவுக்குக் காதலோ வேறு நட்போ இல்லாத காரணத்தாலும், அந்தக் கோணத்திலிருந்து வழக்கு வேறு கோணத்தில் பயணித்ததாலும் இப்போது வரை அவளது மொபைலைச் சோதிக்கும் அவசியம் காவல்துறைக்கும் நேரவில்லை.
மிச்செல் அந்த மொபைலை தனது மேஜை ட்ராயரில் வைத்து பூட்டு போட்டாள். இனியாவின் நினைவாக அது தன்னுடன் இருக்கட்டுமென நினைத்தாள் அவள்.
பெற்றோரிடம் இதை காட்டினால் கட்டாயம் பிடுங்கிக்கொள்வார்கள். ஏனெனில் இனியாவையே அடிக்கடி மொபைல் உபயோகிக்காதே என்றவர்கள் தானே! அவள் ஞாபகார்த்தமாக வைத்துக்கொள்வதாகச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள் என எண்ணிக்கொண்டாள் அவள்.
இன்னும் சில தினங்களில் அந்த மொபைலில் உறங்கிக்கொண்டிருக்கும் உண்மையால் மாபெரும் பூகம்பம் நேரப்போகிறதென தெரியாதவளாக தமக்கையைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப்போனாள் மிச்செல்.
அவளைத் தவிர இன்னொரு ஜீவனும் இனியாவைப் பற்றி நினைத்து சோகத்தில் மூழ்கியிருந்தது பொன்மலையில்.
அது வேறு யாருமில்லை, ரசூல் பாயின் மகள் முபீனா. இனியாவுக்கு அவள் மட்டுமே தோழி. அவளுக்கும் இனியாவைத் தவிர நெருங்கிய நட்பு என்று யாரும் கிடையாது.
இருவரும் கிண்டர் கார்டன் காலத்து தோழிகள். அவளால் எப்படி இனியாவின் நினைவுகளில் இருந்து வெளியே வரமுடியும்?
அழுது கரைந்த மகளைத் தேற்றுவதற்குள் ரசூல் பாயும் அஸ்மத்தும் ஓய்ந்து போனார்கள்.
“இப்பிடியே அழுதா இனியா திரும்பி வந்திடுவாளா? கொஞ்சம் கொஞ்சமா நீ திடமாகணும் முபீ”
அன்னையின் அறிவுரையைக் காதில் வாங்காதவளாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள் அவள்.
ரசூல் பாய் மகளின் அருகே வந்து அமர்ந்தார். அவளின் சிகையை வருடிக்கொடுத்தார்.
“போலீஸ் ரோஷணை பிடிச்சிட்டாங்கம்மா… அவனுக்குத் தண்டனை கிடைச்சிடும்… இனியாக்கு நியாயம் கிடைச்சிடும் முபீ… நீ வாப்பா சொன்னா கேப்பல்ல.. கண்ணைத் தொடச்சிட்டுச் சாப்பிடும்மா”
“அவனுக்குத் தண்டனை கிடைச்சாலும் இனியா வரமாட்டால்ல வாப்பா?”
ரசூல் பாயால் பதில் சொல்ல முடியவில்லை.
“இந்த தடவை பப்ளிக் எக்சாம்ல யார் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவோம்னு நாங்க போட்டி வச்சு படிச்சோம் தெரியுமா? இன்னும் ரெண்டு மாசத்துல பப்ளிக் எக்சாம் வரப்போகுது… என் கூட போட்டி போட இனியா இல்லையே வாப்பா? ஐ மிஸ் ஹெர் சோ மச்”
கண்ணீர் விட்ட மகளின் சோகத்தை எப்படி ஆற்றுவதென தெரியாமல் அஸ்மத்தும் ரசூல் பாயும் கலங்கிப்போனார்கள். ரோஷணுக்குத் தண்டனை கிடைத்தால் மகளின் இம்மனநிலை மாறுமென்ற சின்ன நம்பிக்கை.
ஆனால் அவர்களின் நம்பிக்கையைப் பொய்க்க வைப்பவனைப் போல இனியாவின் மரணத்துக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லையென காவல் ஆய்வாளர் மார்த்தாண்டனிடம் பிடிவாதமாக உரைத்துக்கொண்டிருந்தான் ரோஷண்.
அதே போல ஏன் பொன்மலையில் இருந்துகொண்டே சென்னையில் இருப்பதாகப் பொய் சொன்னாய் என்ற கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை.
செமன் மற்றும் ஸ்பெர்ம் மாதிரிகள் கண்டாமினெட் ஆகிவிட்டதால் அதை வைத்தும் அவன் கொலையாளி என்று உறுதிப்படுத்த முடியாத நிலை.
அவனது அமைதி மார்த்தாண்டனின் பொறுமையை அசைத்துவிட்டது. அது எப்படி ஒருவனால் இவ்வளவு அழுத்தமாகப் பொய் சொல்ல முடிகிறது என்ற ஆச்சரியம்.
எனவே அவர் உதவி ஆணையர் கமலேஷிடம் ரோஷண் அவனது வாயாலேயே குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான வழிமுறையைப் பற்றி பேசினார். அதற்காக அனுமதியும் கேட்டார். கமலேஷ் ஆணையரிடம் பேசிவிட்டுச் சொல்வதாக உறுதியளித்தார்.
ரோஷணை தனது சாதுரியத்தாலும் புதிய வழிமுறையாலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவைக்கலாமென்ற நம்பிக்கையோடு கமலேஷின் பதிலுக்காக காத்திருந்தார் மார்த்தாண்டன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

