நூலகத்துல இருக்குற அந்த அமைதி, எனக்கு ரொம்பப் பிடிக்கும். அங்க உட்கார்ந்து படிக்கிறது, வீட்டுல படிக்கிறதைவிட ஒரு தனி அனுபவம். சுத்தி இருக்குறவங்க எல்லாரும் அவங்க அவங்க உலகத்துல மூழ்கி இருப்பாங்க. யாரும் யாரையும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. அந்த அமைதி, நம்ம சிந்தனைகளைத் தெளிவாக்க உதவும். நூலகம் வெறும் புத்தகங்கள் இருக்குற இடம் மட்டும் இல்ல. அது ஒரு அறிவுச் சுரங்கம். ஒவ்வொரு முறையும் நூலகத்துக்குப் போயிட்டு வரும்போது, ஏதோ ஒரு புது விஷயத்தைக் கத்துக்கிட்டு வந்த மாதிரி ஒரு நிறைவு கிடைக்கும். என்னோட மனசுக்கு அமைதியையும், அறிவுக்குத் தீனியையும் கொடுக்கிற இந்த நூலகம், என் வாழ்க்கையில ஒரு முக்கியமான இடம்.
-விழியின் மொழிகள்
“இறையன்பு ஐ.ஏ.எஸ்சோட ‘வையத் தலைமைகொள்’ புக் இருக்கா?”
வாடிக்கையாளர் கேட்கவும் அதைத் தேடி எடுத்துக்கொடுத்தாள் மலர்விழி. இன்னொரு பக்கம் பள்ளியில் புராஜெக்ட் செய்யச் சொன்னதாக அடம்பிடித்த சிறுவனுக்காக ஷார்ட் பேப்பர் கேட்ட பெண்மணியிடம் அதை எடுத்துக்கொடுத்தாள் ஈஸ்வரி.
இருவரும் வ.உ.சி க்ரவுண்ட் அருகே இருக்கும் ஈகிள் புக் செண்டரில் பகுதிநேரம் பணியாற்றுகிறார்கள்.
மதியத்திலிருந்து ஆறு மணி வரை வேலை. அதன் பின்னர் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்கள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
எப்போதும் ஆர்வத்தோடு வேலை செய்யும் மலர்விழி அன்று யோசனைவயப்பட்டவளாக இருக்கவும் ஈஸ்வரிக்கு வருத்தம். அவளுக்குத் தெரியாதா அந்த யோசனைக்குக் காரணம் முரளி என்று.
தன் அருகில் அடுக்கிவைக்கப்பட்ட வாட்டர் பாட்டில் ஒன்றை எடுத்து மலர்விழியின் முதுகில் செல்லமாக அடித்து அவளது கவனத்தைத் தன் பக்கம் திருப்பியவள்

“அந்த வெறுவாகட்டைப்பயலைப் பத்தி யோசிக்காதனு எத்தனை தடவை சொல்லுறேன். கேக்க மாட்டியா மலர்?” என்க
“எனக்கு மட்டும் ஆசையா? என்னமோ பயமா இருக்கு ஈசு. பெரியப்பாவ வச்சு பேசுவேன்னு சொல்லிட்டுப் போறானே” என்றாள் அவள்.
“உன் பெரியப்பா சொன்னா நீ தலைய ஆட்டணுமா? முடியாதுனு சொல்லு. உன் வாய்ல என்ன கொழக்கட்டையா இருக்கு? கடவுள் தொண்டைனு ஒன்னைப் படைச்சதே சண்டை போடத்தான்”
ஈஸ்வரி சொல்லவும் மலர்விழியின் இதழில் புன்னகை அரும்பியது.
“ஹான்! இது நல்லப்பிள்ளைக்கு அழகு. இன்னைக்கு வீட்டுக்குப் போனதும் அத்தை கிட்ட எல்லாத்தையும் சொல்லு. அவங்கண்ணன் சொன்னா மாமா மண்டைய ஆட்டிடுவார். அவருக்கு மண்டைல உறைக்குற மாதிரி சொல்லிப் புரிய வை”
ஈஸ்வரி கொடுத்த தைரியம் வேலை செய்தது. வீட்டுக்குப் போனதும் குழலியிடம் அனைத்தையும் சொல்லிவிட்டாள் மலர்விழி.
“கரெஸ்பாண்டெண்ட் சார், அதான் மதுக்காவோட கொழுந்தனார் மட்டும் வரலைனா அவன் போயிருக்கவே மாட்டான்மா” என்று அவள் சொல்லி முடிக்கவும் குழலிக்கு வயிற்றில் நெருப்பு பற்றாதக் குறை.
அவர் அஞ்சியதே இதற்காகத்தான். முரளி எதையும் செய்யத் துணிபவன். அவனது தந்தையிடம் உள்ள பணமும் அதிகாரமும் யாரையும் விலைக்கு வாங்கிவிடும். எனவே அவன் ஆடாத ஆட்டம் ஆடுவான்.
மகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானால் எந்த அன்னையால் அமைதியாக இருக்க முடியும்? கணவரை அழைத்துக்கொண்டு நேரே மாணிக்கவேலுவின் வீட்டுக்கே சென்றுவிட்டார்.
பொதுவாகக் குழலி அந்த வீட்டுக்கு அவ்வளவு எளிதில் வரமாட்டார் என்று நிலவழகிக்குத் தெரியும். இரவு நேரத்தில் பெண் பிள்ளையை வீட்டில் தனியே விட்டுவிட்டு வருமளவுக்கு இவர்களுக்கு இங்கே அப்படி என்ன தலைப்போகிற வேலை?
“வா குழலி! வாங்க தம்பி. என்ன விசயம்?”
வீட்டுக்குள் கூட அழைக்காமல் வாசலில் வைத்தே பேசினார்.
“ராஜதுரை கிட்ட அவர் வீட்டுச் சம்பந்தத்துக்கு நாங்க ஒத்துக்கலனு இன்னும் மாமா சொல்லலையாக்கா?” உஷ்ணத்தில் கொதித்துப் போய்க் கேட்டார் குழலி.
நிலவழகி அலட்சியம் காட்டியவராக “அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு. இதுல உன் வீட்டுச் சம்பந்தம் பத்தி யோசிக்கத் தான் நேரம் இருக்கு பாரு. அதெல்லாம் அவங்க பேசுவாங்க. நீ கருக்கல்ல இப்பிடி பொட்டப்புள்ளைய வீட்டுல தனியா விட்டுட்டு வந்ததே தப்பு. கிளம்பு” என அவர்கள் இருவரையும் விரட்டுவதில் குறியாக இருந்தார்.
“நாங்க இங்க உக்காந்து பேச வரலக்கா. பணம் வசதிய விட ஒழுக்கமான ஒருத்தன் கையால என் பிள்ளை கழுத்துல தாலி ஏறணும்னு நாங்க ஆசைப்படுறோம். அந்த முரளிப்பய என் பிள்ளை காலேஜுக்குப் போறப்ப வழி மறிச்சு பேசிருக்கான். உங்க வீட்டு இளைய மருமவன் மட்டும் வரலனா அவன் என் பிள்ளைய காலேஜுக்கே போவவிட்டிருக்கமாட்டானாம்.”
இளைய மருமகன் என்று மகிழ்மாறனைக் குழலி குறிப்பு காட்டியதும் இவ்வளவு நேரம் நிலவழகியிடமிருந்த அலட்சியம் அகன்றது.
“என்ன சொல்லுற? மாறன் தம்பி பாத்துட்டாரா? நிஜமாவா?” எனப் பரபரத்தார்.
“ஆமா! அவர் கிட்டவே மாணிக்கம் மாமாவ காரணம் சொல்லிருக்கான் முரளி. அவர் ஏசி அனுப்புனதால கிளம்பிருக்கான்”

நிலவழகிக்கோ மகிழ்மாறனின் இறுகிய முகமும் கூரியப் பார்வையும் நினைவுக்கு வந்து நெஞ்சில் திக்கென்ற உணர்வை உருவாக்கியது.
“இங்க பாரு குழலி! நான் அவங்க கிட்ட பேசுறது ஒரு பக்கம் இருக்கட்டும். உனக்கு ஏன் இவ்ளோ வீம்பு? காசுள்ள இடம் வர்றப்ப பொட்டப்புள்ளைய தள்ளிவிட்டுரணும். இல்லனா காலத்துக்கும் வச்சு கஷ்டப்படப்போறது நீதான்! உன் மவளுக்கு வேறு எங்க இருந்து மாப்பிள்ளை வீடு வரும்? எவனும் உன் குடும்பம் இருக்குற நிலமைய பாத்துட்டு வரமாட்டான். கல்யாணம் காட்சி பாக்காம, கழுத்துல தாலி ஏறாம அந்த ஓட்டுவீட்டுலயே அவ வாழ்க்கை முடிஞ்சிடும்”
குழலிக்கு வந்ததே கோபம்! விளக்கேற்றும் நேரத்தில் ஒரு பெரிய மனுசியின் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளா இவை? காலத்துக்கும் வைத்துக் கஷ்டப்படுவது என்றால் என்ன அர்த்தமென புரிந்துதான் பேசுகிறாரா?
“அது என் கவலைக்கா! தப்பான ஒருத்தன் கையில பிள்ளைய பிடிச்சுக் குடுத்துட்டுக் காலத்துக்கும் அவன் என்ன பண்ணுவானோனு பயந்துட்டே வாழ எனக்கு விருப்பமில்ல. தள்ளி விடுறதுக்காக நான் என் பிள்ளைய பெத்து வளக்கல. உங்க மகளை இப்பிடி ஒருத்தனுக்குக் கட்டி வைப்பிங்களா? கருக்கல்ல விளக்கு ஏத்துற நேரத்துல என் பிள்ளை காலத்துக்கும் எங்க கூட இருக்கும்னு சொல்லுறிங்களே! மனசறிஞ்சு நான் எந்தப் பொட்டப்புள்ளைய பாத்தும் இப்பிடி சொன்னதில்ல. எப்பிடி உங்களால் இந்த மாதிரி பேச முடியுது? என் புருசன் உங்க கிட்ட வேலை பாக்குறார்னுதானே இவ்ளோ எளக்காரம்? கஷ்டப்பட்டாலும் நாங்க கௌரவமா வாழுறோம். காசுக்குப் புள்ளைய விக்க எனக்கும் என் புருசனுக்கும் விருப்பமில்ல. இனி உங்க வீட்டுப்படி ஏறமாட்டோம் நாங்க. என் புருசனும் உங்க கிட்ட வேலைக்கு வரமாட்டாரு. வேற ஒரு தோட்டக்காரனைப் பாத்துக்கோங்க”
குழலி ஆங்காரமாய்க் கத்தியதைக் கேட்டு வீட்டுத் தாழ்வாரத்துக்கு வந்து சேர்ந்தான் மாணிக்கவேலுவின் மைந்தன் பவிதரன். ஷண்மதிக்கும் மதுமதிக்கும் நடுவில் பிறந்தவன். மாணிக்கவேலுவின் ரியல் எஸ்டேட் பிசினஸைக் கவனிக்கிறான்.
தாய் தந்தையின் தீய எண்ணங்களும், இளையச் சகோதரியின் திமிரும் இல்லாத அன்பானப் பையன். அந்த வீட்டில் அவனும் ஷண்மதியும் மட்டும் தனிரகம். சிகாமணிக்கும் குழலிக்கும் மரியாதை கொடுத்து மலர்விழியைத் தங்கையாகவே கருதுவான்.
“என்னாச்சு சித்தி? எதுவும் பிரச்சனையா சித்தப்பா?” என மெய்யான அக்கறையுடன் கேட்டவனிடம் பாய்ந்தார் நிலவழகி.
“உன் சித்திக்காரிக்குத் திடீர்னு கிறுக்கு பிடிச்சிடுச்சு. இவ மவளுக்கு என்ன சீமைல இருந்தா மாப்பிள்ளை வரப்போறான்? ராஜதுரையண்ணன் மவன் முரளிய பேசி முடிக்கலாமானு உன் அப்பா கேட்டதுக்கு மூஞ்சிய முறிச்சுப் பேசுனா. இப்ப இங்க வந்து ஆடுறா” என்றார் வாய் கூசாமல்.
சிகாமணிக்கு அதிர்ச்சியில் பைத்தியம் மட்டும்தான் பிடிக்கவில்லை. அண்ணன் குடும்பத்துக்காக ஓடி உழைத்தபோது, அவரை ஊரார் ஏமாளியெனக் கேலி செய்தபோது வராத அதிர்ச்சி, அவரது பெண்ணைக் காலம் முழுவதும் வீட்டில் வைத்திருக்கப்போவதாக நிலவழகி சொன்னபோது வந்து தொலைத்துவிட்டதே!
ஏமாளியாக, அசட்டு மனிதனாக இருந்தாலும் சிகாமணி ஒரு தந்தை. பெற்ற மகளின் திருமணம் பற்றி அவருக்கும் ஆயிரம் கனவுகள் உண்டு. தன் தகுதிக்கேற்ற வரனாகப் பார்த்துச் சக்திக்கு மீறியாவது அவளுக்குத் திருமணம் செய்து அனுப்பிவிடவேண்டுமென அனுதினமும் யோசிப்பவரைச் செருப்பால் அடித்துவிட்டன நிலவழகியின் வார்த்தைகள். என்ன சொன்னாலும் சிரிக்கும் மனிதரின் கண்களில் பல வருடங்களுக்குப் பிறகு கண்ணீரின் சாயல்!
அவரை இப்படி பார்த்தறியாத பவிதரனுக்குச் சித்தப்பாவின் கண்ணீரில் மனம் பதறியது.
“என்னம்மா பேசுற நீ? மலரும் நம்ம வீட்டுப்பொண்ணு. மறந்துடாத” என அன்னையை அதட்டினான் அவன்.
நிலவழகிக்கு எரிச்சல் வந்தது.
“அப்பிடி நினைச்சுத்தான் உன் அப்பா வரன் பாத்தார். அதுக்கு நல்ல மரியாதை குடுத்துட்டா உன் சித்திக்காரி”
“போதும் மதினி! யார் என்ன செஞ்சாங்கனு எல்லாருக்கும் தெரியும். சின்னப்பையன் கிட்ட பொய் சொல்லாதிங்க” சிகாமணியின் குரலில் தெரிந்த அயர்ச்சியும் வருத்தமும் இதுவரை நிலவழகி கேட்டறியாதது. வாயை மூடிக்கொண்டார் அவர்.
“போதும்ங்க! நம்ம போகலாம்” கணவரின் கையைப் பற்றினார் குழலி.
“சித்தி!…” என்று தவிப்போடு அழைத்த பவிதரனிடம் மட்டும் தலையசைத்து விடைபெற்றார்கள் இருவரும்.
ரங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கையில் சிகாமணி இறுகிப் போயிருந்தார்.
“என்னங்க” என்று குழலி அழைக்க
“மலர் கிட்ட இங்க நடந்ததைச் சொல்லவேண்டாம்! இனிமே முரளி தொந்தரவு பண்ணமாட்டான்னு மட்டும் சொல்லுவோம்” என்றார்.
அந்நேரத்தில் பைக்கில் வந்து நின்றான் பவிதரன். எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் சித்தப்பா கலங்கியதை அவனால் தாங்க முடியவில்லை. அதனால்தான் காலந்தாழ்த்தாமல் ஓடி வந்திருந்தான்.
“என்ன பிரச்சனைனு என் கிட்ட சொல்லுங்க” என்று வற்புறுத்தியவனிடம் மறைக்காமல் அனைத்தையும் கொட்டித் தீர்த்தார் குழலி.

கேட்க கேட்க இரத்தம் கொதித்தது அவனுக்கு.
“நீங்க கவலைப்படாதிங்க. நான் நேரா ராஜதுரை மாமா கிட்ட பேசி பிரச்சனைய முடிச்சிடுறேன். மலர் பயப்படாம காலேஜுக்குப் போகலாம்”
ஆறுதலாகப் பேசி அவர்களுக்கானப் பேருந்து வரும்வரை காத்திருந்து வழியனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தவனைப் பிடித்துக்கொண்டார் நிலவழகி.
“அவ என்னை மதிக்காம வீட்டு முற்றத்துல நின்னு ஆடிட்டுப் போறா. நீ பின்னாடியே போவியா? அம்மைக்கு மரியாதை தராதவங்க கிட்ட பேசக்கூடாதுங்கிற ஓர்மை கூடவா இல்ல?”
“போதும்மா. ரொம்ப பேசிட்ட நீ. சித்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. மலரைப் பாத்து இப்பிடி சொல்லலாமா?”
“நீ ஏன் அம்மாவ திட்டுற? அவங்க இருக்குற நிலமைக்கு நம்ம எதிர்ல நிக்கவே தகுதி கிடையாது” என்று இடையில் புகுந்த மதுமதியை வெட்டுவது போல முறைத்தான் அவன்.
“முதல்ல நீ உன் வாழ்க்கைய காப்பாத்திக்க பாரு. புவன் மாமா கால் பண்ண பண்ண எடுக்கமாட்டேங்குறியாமே! என்ன நினைச்சிட்டிருக்க நீ? அன்பை உதாசீனம் செஞ்சா, நாளைக்கு ஒரு துளி அன்புக்காக நீ ஏங்குறப்ப உனக்கு அதைக் குடுக்க யாரும் இருக்கமாட்டாங்க. அம்மா, அப்பாவோட காலம் முடிஞ்சிடுச்சு. அவங்க குணத்தை அப்பிடியே நீயும் பாலோ பண்ணி உன் வாழ்க்கைய நாசமாக்கிக்காத”
பவிதரன் கடித்து வைத்ததில் மதுமதி கப்சிப். நிலவழகியோ ஓரமாக ஒதுங்கிக்கொண்டார்.
அதே நேரம் வீட்டுக்குப் போய் சேர்ந்த குழலியும் சிகாமணியும் மலர்விழியிடம் இனி முரளியின் தொந்தரவு அவளுக்கு இருக்காதெனப் பவிதரன் வாக்குறுதி கொடுத்ததைச் சொன்னார்கள்.
“பவியண்ணாவ நான் நம்புறேன்” என்று நிம்மதியாகச் சொல்லிவிட்டுப் போனவளின் எதிர்காலத்தை எப்படி வளமாக்குவது என்று புரியாமல் நின்றார்கள் இருவரும்.
நாளை முதல் பூந்தோட்டத்தில் வேலை இல்லை. வருமானத்துக்கு வழி? மாபெரும் கேள்வி அவர்கள் முன்னே பூதாகரமாக நின்றது.
ஆனால் அந்தக் கலக்கத்தைப் போக்கும் விதமாக மறுநாள் காலையில் பவிதரனோடு தம்பியின் வீடு தேடி வந்துவிட்டார் மாணிக்கவேலு.
கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மலர்விழி பவிதரனிடம் மட்டும் சிரிப்போடு குட்மானிங்கை உதிர்த்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாள்.
மாணிக்கவேலு இளைய சகோதரரிடம் தண்மையாகப் பேசினார்.
“உன் மதினிக்காரிக்குக் கோட்டி பிடிச்சிருக்குனு நினைச்சுக்க சிகாமணி, அவ சொன்னதைப் பெருசுபடுத்தாம இப்பவே என் கூட தோட்டத்துக்கு வா”
“இல்லண்ணே! அது சரியா வராது!”
பணிவாகவே மறுத்தார் சிகாமணி. மாணிக்கவேலு மனதில் பொங்கிய கோபத்தை மறைத்துக்கொண்டு பேசினார்.
“ஒரு காலத்துல அது உன் தோட்டமா இருந்ததுதானே சிகாமணி?”
“என் கடன்சுமைய நீங்க ஏத்துக்கிட்டிங்கண்ணே! என் சொத்து முழுக்க வித்தும் கடனை அடைக்க முடியாம நான் திணறுனப்ப நீங்கதான் அதை அடைச்சு எனக்குப் பிழைக்க ஒரு வேலையும், இருக்க இந்த வீடும் குடுத்திங்க. அந்த நன்றி எப்பவும் எனக்கு இருக்கும். ஆனா இனிமே உங்க தோட்டத்துக்கு நான் வரல. எனக்கு உழைக்க தெம்பு இருக்கு. மூட்டை தூக்கியோ, வாழக்காய் சுமந்தோ என் பிள்ளைய கரை சேர்த்துடுவேன். நீங்க தேடி வந்து பேசுனதே சந்தோசம்ணே”
பவிதரன் இப்போது குறுக்கிட்டான்.
“இந்த வயசுல உடம்பு ஒத்துழைக்கணுமே சித்தப்பா?”

“காசில்லாதவங்க உடம்புக்கு வயசாகுறதே தெரியாதுப்பா மவனே! நாங்க இளமையா இருக்கோம்னு எங்க உடம்பை நம்ப வச்சிக்கிட்டே இருந்தாதான் கடைசி வரைக்கும் கால்வயித்துக்கஞ்சிக்காக ஓட முடியும்”
குழலி அனைவருக்கும் காப்பி கொண்டு வந்து கொடுத்தார். அவருக்கு மாணிக்கவேலுவிடம் பேச விருப்பமில்லை.
மாணிக்கவேலு காபியை அருந்தியபடியே “உன் முடிவை மாத்திக்கிட்டா நான் சந்தோசப்படுவேன். இல்லனாலும் உன் இஷ்டம். அதுக்காக மது கல்யாணத்துக்கு நீயும் உன் குடும்பமும் வராம இருந்துடாதிங்க சிகாமணி” என்று சொல்ல
“வருவோம்ணே. வராம எங்க போயிடப்போறோம்? மது எனக்கும் பிள்ளை மாதிரிதான்”
பட்டும் படாமலும் சிகாமணி பேசுவது மாணிக்கவேலுவின் அனுபவத்தில் இதுவே முதல் முறை. இப்போதும் பாசத்தில் அவரை அழைக்கவில்லை. தோட்டத்தைப் பராமரிக்கச் சிகாமணியைப் போல இன்னொரு ஆள் கிடையாது. தினமும் எத்தனை மூடை பூக்கள் மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகின்றன, எவ்வளவு தொகை பாக்கி என அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் சிகாமணி. பார்ப்பதற்கு அசட்டு மனிதனாக இருந்தாலும் வேலையில் படு விவரம்.
இதெல்லாம் வெளியாள் ஒருவனிடம் எதிர்பார்க்க முடியுமா?
மதுமதியின் திருமணத்திற்கான வேலைகளுக்கு வெளியாட்களை வைக்கவும் பயம். வீட்டில் கை வைத்துவிட்டால்?
சிகாமணியும் சரி, குழலியும் சரி பணம், நகை என ஆசைப்படுபவர்கள் இல்லை. அவர்களின் வளர்ப்பு என்பதால் மலர்விழியும் அப்படியேதான் இருப்பாள்.
அதை விட முக்கியமாக சம்பந்தியின் இளையமகன் சிகாமணியின் குடும்பம் திருமணத்துக்கு வரவேண்டுமெனக் கட்டளையிடாதக் குறை. மகளின் வாழ்க்கை சிறக்கவேண்டுமென மாணிக்கவேலு இவ்வளவு தூரம் பேசுகிறார் என்பதை அங்கிருந்த யாரும் அறியவில்லை.
“நீங்க வீடு தேடி வந்திருக்கிங்க மாமா. உங்க மனசைக் கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்ல. நாங்க மதுவோட கல்யாணத்துக்குக் கண்டிப்பா வருவோம். அதுக்கு முன்னாடி என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கூப்பிடுங்க. ஆனா என் மக அங்க வரமாட்டா. அது சரியா வராது” என்று சொல்லிவிட்டார் குழலி.
அதில் பவிதரனுக்குத்தான் வருத்தம்.
“என்ன சித்தி இப்பிடி பேசுறிங்க? ஷண்மதி அக்கா மலர் வரலனா வருத்தப்படுவா. நான் இருக்கேன் சித்தி. நான் மலரை யாரும் எதுவும் சொல்லாம பாத்துக்குறேன்” என்று வாக்கு கொடுத்தான்.
சிகாமணியும் குழலியும் அனைத்துக்கும் சரியெனச் சொல்லியே பழகியவர்கள். ஓரளவுக்கு மேல் அவர்களால் பிடிவாததை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள்.
“அடுத்த வாரம் தாலிக்குப் பொன்னுருக்க மாப்பிள்ளை வீட்டுக்குப் போறோம். ஞாயித்துக்கிழமைதான். நம்ம மலரை மதிக்குத் துணையா இருக்க அனுப்பி வை சிகாமணி. உங்களைக் கூப்பிட பவி கார் கொண்டு வருவான்” என்று சொல்லிவிட்டு மகனோடு கிளம்பினார் மாணிக்கவேலு.
கூடவே தனது பக்கத்து உறவினர்கள் யாரெல்லாம் தாலிக்குப் பொன்னுருக்கும் நிகழ்வுக்கு வருவார்கள் என்று பவிதரன் மூலமாக நரசிம்மனிடம் தெரிவிக்கவும் செய்தார். அச்செய்தியை நரசிம்மனும் தனது இளைய மகனிடம் கூறிவிட்டார்.
“அவர் தம்பிதான் தோட்டத்தை எல்லாம் பாத்துக்குறாராம். தம்பி சம்சாரத்துக்கு உடம்பு சரியில்லனு நிச்சயதார்த்தத்துக்கு வரலயாம். சம்பந்தி சொல்லுறார். தாலிக்குப் பொன்னுருக்குறப்ப வருவாங்களாம் மாறா”

இதெல்லாம் மகிழ்மாறனால் நம்ப முடியவில்லை. தனது பேச்சு தந்தைக்கும் தமையனுக்கும் உறுத்தலாக இருக்கக்கூடாதென அமைதியாக இருந்துவிட்டான்.
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction