“அரசன் ஆற்றலுடையவனாக இருப்பின் அவனது குடிமக்களும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பர். ஒருவேளை அரசன் பொறுப்பற்றவனாக இருப்பாயினாயின் அவனது குடிமக்கள் அவனைப் போலவே பொறுப்பற்றவர்களாக இருப்பதோடு உழைப்பையே மறந்துவிடுவர். அத்துடன் பொறுப்பற்ற அரசன் எதிரிகளின் கரங்களில் எளிதில் வீழ்ந்துவிடுவான். எனவே அரசன் என்பவன் எப்போதும் விழிப்புடன் இருக்க கடமைப்பட்டவன்”
-சாணக்கியர்
கிஷோரிடமிருந்து பெற்ற வீடியோவை அருள்மொழி சமயோஜிதமாகப் பயன்படுத்திக் கொண்டான். இறந்தவர்களின் தாயும் மனைவியும் கதறும் வீடியோவுடன் ‘காவல்துறை அராஜகத்தால் பறி போன இரு உயிர்கள்’ என செய்திவாசிப்பாளர்கள் கணீர் குரலில் அறிவிக்கும் செய்தி பரபரப்பான மாலைநேர செய்திகளில் ஒளிபரப்பானது.
முதலில் யூனிகார்ன் நியூஸில் ஒளிபரப்பான அச்செய்தி மெதுமெதுவாக ஆளுங்கட்சிக்கு எதிரான ஊடகநிறுவனங்கள் மற்றும் நடுநிலை செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பாக சமூக ஊடகங்கள் வழக்கம் போல ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்ய துவங்கியது.
ஆளுங்கட்சி மீது அதிருப்தியிலிருந்த அனைவருக்கும் இச்செய்தி ஒரு பொன்னான வாய்ப்பாக அமைய அவர்கள் இத்தருணத்தை நன்கு உபயோகித்துக் கொண்டனர்.
இரட்டை மரணம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் நடந்தும் அத்துறையின் சார்பாகவோ ஆளுங்கட்சி தரப்பிலிருந்தோ யாரும் அறிக்கை வெளியிடாதது வேறு பல்வேறு சந்தேகங்களுக்கும் ஊகங்களுக்கும் வழிவகுத்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சம்பந்தப்பட்டவர்கள் நடந்தது இது தான் என்று சொல்லாத காரணத்தால் நடந்த மரணத்திற்கான காரணங்கள் அவரவர் போக்கில் சொல்லப்பட்டன.
மரணமடைந்தவர்கள் வாழ்ந்த கிராமம் இருந்த கன்னியாகுமரி மாவட்ட த.மு.க செயலாளரோ யூனிகார்ன் நியூஸின் ரிப்போர்ட்டர்கள் மரணமடைந்த இருவரது வீட்டை அடைந்த சமயத்தைத் தங்கள் கட்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
மரணமடைந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்க அவர்களின் நிலையை நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த போது அம்மனிதர் இடைபுகுந்து தனது ஊகத்தை உண்மையான காரணமாக உருவேற்றி கூற ஆரம்பித்தார்.
ரிப்போர்ட்டர் அவரிடம் மைக்கை நீட்டியதும் கொதிக்கத் துவங்கினார் மனிதர்.
“இறந்து போன ரெண்டு பேரும் இந்த ஊருக்காரங்களுக்கு நல்ல பழக்கமானவங்க… எந்தக் கெட்ட சவகாசமும் இல்லாதவங்க… அவங்க மேல இத்தனை வருசத்துல ஒரு குத்தம் யாராலயும் சொல்லமுடியாது… அவங்க உண்டு அவங்க கடை உண்டுனு இருந்தாங்க”
“அவங்க கடை வச்சிருந்தாங்களா?”
“ஆமா சார்… பெரியவரு பேரு தாணு… அவரு மளிகை கடை வச்சிருந்தார்… அவரோட மகன் விஜயன் அதுக்குப் பக்கத்துலயே செல்போன் கடை ஒன்னு வச்சிருந்தான்… ரொம்ப நியாயமானவங்க ரெண்டு பேரும்”
“அவங்க இறக்குறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சுனு தெரியுமா?”
“நான் விசாரிச்ச வரைக்கும் பக்கத்துக்கடைக்காரங்க சொன்னது இது தான் சார்… அவங்க கடைய சாத்திட்டு வீட்டுக்கு கிளம்புறது நைட்டு பத்து மணிக்கு தானாம்… ஆனா அன்னைக்கு ஆறு மணிக்கு ரோந்து வந்த போலீஸ் வண்டில இருந்த போலீஸ்காரரு ரெண்டு பேரையும் விசாரிக்கணும்னு சொல்லி கடைய சாத்த சொல்லிருக்காரு… அவங்களும் கடைய சாத்திட்டு அந்த வண்டிலயே ஏறிப் போயிருக்காங்க… அப்ப தான் மத்த கடைக்காரங்க அவங்கள கடைசியா பாத்துருக்காங்க… அன்னைக்கு நைட்டு பெரியவரு அவங்க வீட்டுக்காரம்மாவுக்கு போன் பண்ணி காத்தால வீட்டுக்கு வந்துடுவோம்னு தான் சொல்லிருக்காரு… அப்பிடி சொன்னவரு காலைல செத்துட்டாருனு செய்தி வந்தா அந்தம்மாவோட நிலமை எப்பிடி இருக்கும்னு யோசிச்சு பாருங்க”
“போலீஸ் கஸ்டடில நடந்த இந்த இரட்டை மரணத்துக்கு என்ன காரணமா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?”
“இங்க பக்கத்துல கடுவிளைனு ஒரு ஊரு இருக்கு சார்… அது கடலை பாத்த கிராமம்… அங்க புதுசா ரெண்டு பேக்டரி கட்டுறதுக்கு கவர்மெண்டு பெர்மிசன் குடுத்திருக்காங்க… அந்த பேக்டரி வந்துச்சுனா சுத்தி இருக்குற கிராமம் எல்லாமே நிலத்தடி தண்ணி, சுத்தமான காத்து இல்லாம நாசமாயிடும்னு இங்க இருக்குற சமூக ஆர்வலர்கள் கிராமத்து மக்களோட சேர்ந்து ஒரு மாசமா போராட்டம் நடத்துறாங்க.. இத உங்க சேனல்ல கூட போட்டிங்களே… அந்தப் போராட்டக்குழுவோட தலைவரை இடையில போலீஸ் அரெஸ்ட் பண்ணுனாங்க… அதுக்கப்புறம் அவரு ரிலீஸ் ஆனாரு… ஆனா ஒரு வாரத்துல அவரை யாரோ லாரி ஏத்தி கொன்னுட்டாங்க…
அதுல பேக்டரி ஆரம்பிக்க இருந்த முதலாளிங்களுக்கும் இந்த தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கும் கனெக்சன் இருக்குறதா சொல்லுறாங்க… இந்தக் கொலை சம்பந்தப்பட்ட ஆதாரத்த யாரோ விஜயனோட கடைல ரிப்பேர் பாக்க குடுத்த போன்ல வச்சிருந்தாங்கனு சொல்லுறாங்க… அந்த ஆதாரத்த விஜயன் அவருக்கு நெருக்கமான பத்திரிக்கை நண்பனுக்கு அனுப்புனத யாரோ போலீசுக்கு துப்பு குடுத்துட்டாங்க… இந்த விசயம் வெளிய வந்தா ஆளுங்கட்சி பேருக்குக் கலங்கம் வரும்னு போலீஸ்காரங்க நைட்டோட நைட்டா தாணுவையும் விஜயனையும் விசாரணைக்கு கூட்டிட்டுப் போறோம்னு சொல்லி அடிச்சே கொன்னுட்டாங்க”
“நீங்க சொல்லுறதுலாம் யூகமா இல்ல உண்மையா?”
“நான் சொல்லுறத நம்பலனா இந்த ஆறுமுகத்த கேளுங்க… இவரு தான் தாணுவோட பக்கத்துக்கடைக்காரரு… எல்லாத்தையும் கண்ணால பாத்தவரு இவரு தான்” என்று அந்நபர் இன்னொரு நபரை கைகாட்ட ரிப்போர்ட்டரின் மைக் அவர் பக்கம் சென்றது.
அந்த ஆறுமுகம் என்ற நபரும் இச்சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் விஜயனின் கடையில் ஒரு இளைஞன் அவனது மொபைலைக் காட்டி நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்ததை குறிப்பிட்டார்.
“இரண்டு மணிக்கூறு அந்தப் பயலும் விஜயனும் பேசிக்கிட்டு இருந்தாங்க… அப்புறம் இன்னொரு ஆளும் வந்தான்… அவனை அடிக்கடி மைக்கோட இந்தப் பக்கம் பாத்திருக்கேன்… ஏதோ நியூஸ் சேனல் ரிப்போர்ட்டர்னு சொல்லிக்குவான் அவன்… தாணுவும் விஜயனும் இறந்துட்டாங்கங்கிறத முதல்ல லோக்கல் சேனல்ல போட்டு நியூஸ் ஆக்குனவன் அவன் தான்… அப்புறம் தான் போன்ல விஜயனோட அம்மையும் வீட்டுக்காரியும் பேசுற வீடியோ வந்துச்சு… ரெண்டு பேரும் இறந்துட்டாங்க… இது இயற்கையான சாவு இல்லனு போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்தா அத போலீஸ்காரங்க எடுத்துக்க மாட்றாங்க”
இதைத் தொடர்ந்து தாணுவின் மனைவியும் அவரது மருமகளும் அழுது அரற்றும் காட்சியும் ஒளிபரப்பானது.
“உசரமும் ஆகிருதியுமா இருக்குற என் மவனை அடிச்சு கொல்லக் கூட ஆறு மாசம் ஆகுமே… இப்பிடி ஒரே ராத்திரில ரெண்டு பேரையும் கொன்னு என் குடும்பத்த சிதைச்சிட்டாவளே”
இதே செய்தி இதே வீடியோவுடன் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாக்கப்பட காவல்துறை தரப்பும் ஆளுங்கட்சி தரப்பும் வாய் மூடி மௌனகீதம் இசைத்தார்கள்.
அதை எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொண்டார்கள்! பிரதான எதிர்கட்சியான தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் சார்பில் அருள்மொழி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டான்.
“மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சியின் அடிவருடியாக மாறி கூலிப்படையினரைப் போல விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை படுகாயப்படுத்தி மரணத்திற்கு தள்ளியுள்ள இச்செயலை தமிழகம் என்றைக்கும் மறக்காது. இந்த மக்கள் விரோத அரசும் அதன் கைப்பாவையாக இயங்கி வரும் காவல்துறையும் சேர்ந்து அரங்கேற்றிய இத்துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தாணுமாலையன் மற்றும் விஜயனின் குடும்பத்தினருக்கு த.மு.கவின் ஆழ்ந்த இரங்கல்கள்!”
அவனது கட்சி ஐ.டி.விங்கிற்கு லட்டு போல கிடைத்த இச்செய்தியை அவர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். விளைவு அந்தச் சம்பவம் நடந்து பரபரப்பான செய்திகள் உலா வந்து ஒரு நாள் கழித்து முதலமைச்சர் வீரபாண்டியன் ஏற்பாடு செய்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரிடம் சாரமாரியாக கேள்விக்கணைகள் வீசப்பட்டது.
அவரோ “விசாரணைக்கு கூட்டிட்டுப் போன இடத்துல போலீஸ் அவங்கள விசாரிக்க மட்டும் தான் செஞ்சிருக்காங்க… ரெண்டு பேருக்கும் ஏற்கெனவே இருந்த உடல் உபாதையால தான் அவங்க மூச்சு திணறி இறந்திருக்காங்க” என்று அவசரப்பட்டு வாயை விட்டார்.
இன்னும் காவல்துறை சார்பாக இரட்டை மரணம் குறித்து புகார் ஏற்கப்படவில்லை. அத்துடன் பிரேத பரிசோதனை முடிவே வராத நிலையில் முதலமைச்சரின் இத்தகைய கூற்றுக்கு அடிப்படை எதுவென பத்திரிக்கையாளர்கள் வினவ வீரபாண்டியன் அவசரமாக அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அவர் பேசிய வீடியோ அடுத்தடுத்து ஒளிபரப்பாக இறந்தவர்கள் சார்பாக நீதி கேட்டவர்களோ “முதலமைச்சர் இப்பிடியா பொறுப்பில்லாம இஷ்டத்துக்குப் பேசுவார்? இறந்த ரெண்டு பேரும் அவரோட ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டுல தானே வாழ்ந்தாங்க… அவங்களோட மரணத்துக்கு போலீஸ் தான் காரணம்னு பட்டவர்த்தனமா தெரிஞ்சதுக்கு அப்புறம் முதல்வர் அந்த இறப்பை கேலிக்கூத்தாக்குற மாதிரி மூச்சுத்திணறலால இறந்தாங்கனு சொன்னா என்ன அர்த்தம்? உயர்பதவில இருக்குறவங்க வார்த்தைய விடுறப்ப யோசிச்சு விடமாட்டாங்களா? இது இந்தக் கொலைக்குக் காரணமான போலீஸ் ஆபிசர்சை காப்பாத்துற முயற்சி மாதிரி தான் தோணுது… ஆனா நாங்க தாணுவுக்கும் விஜயனுக்கும் நீதி கிடைக்குற வரைக்கும் ஓயமாட்டோம்” என்று கொந்தளித்து போயினர்.
இந்த இரட்டை மரணம் (கொலை) சம்பவம் தமிழக மக்களின் மனதில் ஆளுங்கட்சி குறித்து தவறான எண்ணத்தையும் பயத்தையும் ஏற்படுத்திவிட்டது.
இவ்வளவுக்கும் காரணமான கிஷோர் வானதியிடம் தனது காலரை தூக்கிவிட்டு பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தான்.
“பாத்தல்ல ஐயா ஷேர் பண்ணுன வீடியோவோட மகிமைய… ரூலிங் பார்ட்டி தலைய பிச்சிக்கிட்டு இருக்காங்க… நம்மள பாத்து விமர்சனம் பண்ணுன முதலமைச்சர் இப்ப ப்ரஸ் மீட்ல உளறி கொட்டுறார்… பாக்கவே சந்தோசமா இருக்கு நதி”
அவன் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருக்க வானதியோ திக்பிரமை பிடித்தவளைப் போல கணினி திரையை வெறித்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.
“ஹலோ மேடம்! நான் பேசுறத கேக்குறீங்களா?”
வானதிக்கும் கணினிக்கும் இடையே அவன் கையசைத்துக் காட்டும் போது நிதர்சனா அந்த அறைக்குள் பிரவேசித்தாள்.
“என்னடா காத்துல படம் வரைஞ்சிட்டிருக்க?” என்று கிஷோரை கேலி செய்தவளிடம் விசயத்தை கூறினான் அவன்.
நிதர்சனாவுக்கு வானதியின் அமைதிக்கான காரணம் விளங்கிவிட்டது.
“கிஷோர் நீ போய் உன் டீம் மெம்பர்ஸ் கிட்ட இண்டர்வியூ நாளைக்குனு இன்ஃபார்ம் பண்ணிடு”
“ஏன்? நதி இன்னைக்குத் தானே சொன்னா?”
“டைம் பாருடா மடையா… ஆல்ரெடி லேட் ஆயிடுச்சு… நதி ஒன் வீக்கா ரெஸ்ட் இல்லாம வேலை பாக்குறா… இன்னைக்கு அவளும் நானும் ஏர்லியரா கிளம்பலாம்னு இருக்கோம்… நீ உன் டீமுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு பேலன்ஸ் இருக்குற ஒர்க்கை முடிச்சிடு”
“ஓகே! டன்”
பெருவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு அவன் வெளியேறவும் நிதர்சனாவின் கரம் வானதியின் தோளைத் தொட்டது.
“யுவா நியாபகமா?”
பதில் சொல்லாமல் நிதர்சனாவை ஏறிட்ட வானதியின் கண்களில் கண்ணீர்த்திரை.
நிதர்சனா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இருவரது ஷோல்டர் பேக்கையும் எடுத்துக் கொண்டவள் வானதியை அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
இருவரும் சுவரில் பதிக்கப்பட்டிருந்த கருவியில் கைரேகையைப் பதித்துவிட்டு கிளம்பினர்.
தன்னுடன் நிதர்சனாவும் ஒரே கேபில் அமரவும் வானதி கேள்வியாய் நோக்க அவளோ
“நீ டூ டேய்சா சரியில்ல… உன்னை தனியா விடுறதுக்கு எனக்குப் பயமா இருக்கு நதி… நானும் உன்னோட ஃப்ளாட்ல தான் இன்னைக்கு நைட் இருக்கப்போறேன்”
“எனக்கும் ஒன்னுமில்ல சனா… நீ தேவையில்லாம ஒரி பண்ணிக்காத”
“அப்பிடியா? ஒன்னுமில்லாதவ தான் டூ டேய்சா லஞ்சை ஸ்கிப் பண்ணுறீயா? எனக்குத் தெரிஞ்சு லஞ்ச் மட்டும் தான் சாப்பிடல… அப்ப கண்டிப்பா ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டிருக்க வாய்ப்பே இல்ல… டின்னர் மட்டும் கடனேனு கொறிச்சிருப்ப… ஏன்னா நைட் சாப்பிடலனா தூக்கம் வராதுங்கிற கேஸ் நீ… சம்திங் இஸ் ஈட்டிங் யூ… அது என்ன கருமமா வேணாலும் இருக்கட்டும்… பட் என்னால உன்னை இப்பிடி பாக்க முடியல… சோ கொஞ்சம் ஷட்டப் பண்ணிட்டு வழக்கமா கேக்குற மியூசிக்கை கேளுங்க மேடம்”
இதற்கு மேல் நிதர்சனாவிடம் வாதம் செய்ய விரும்பாத வானதி அவளது வசிப்பிடமான கந்தசாமி நகர் வரும் வரை வாய் திறக்கவில்லை.
இருவரும் ரெசிடென்சியல் கம்யூனிட்டியின் லிப்டில் ஏறும்போதே வானதியின் மொபைல் அருளின் அழைப்பில் அதிர்ந்தது.
நிதர்சனா எட்டிப் பார்க்கவும் அழைப்பைத் துண்டித்தாள் வானதி.
“யாருடி?”
“ப்ச்! வேற யாரு? நம்ம யாருக்காக வேலை பாக்குறோமோ அந்த தெய்வம் தான்”
சலித்துக்கொண்டபடி தங்களது தளத்தில் லிப்ட் நின்றதும் வெளியே வந்தாள் வானதி. அவளைத் தொடர்ந்து வந்த நிதர்சனாவோ
“ஏய் ஒர்க் பத்தி எதுவும் சொல்ல கூப்பிட்டா என்னடி பண்ணுவ?” என்று பரபரக்க
“உன் ஒர்க் டெடிகேசனை நான் வியக்குறேன் தாயே! ஆனா இப்ப அவன் கூப்புடுறது அதுக்கு இல்ல… ஐ நோ வெரி வெல் அபவுட் ஹிம்… சோ இப்ப நீங்க ஷட்டப் பண்ணுங்க மேடம்” என்று அவளது வாயை அடைத்துவிட்டு ஃப்ளாட்டுக்குள் நுழைந்தாள் வானதி.
நிதர்சனாவும் விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டே இருந்த வானதியின் மொபைல் தொடுதிரையில் ‘அருள்மொழி காலிங்’ என்ற எழுத்துக்கள் மாரத்தான் ஓடுவதைப் பார்த்தபடி தொடர்ந்து வந்தாள்.
வானதி மொபைலை ஹால் டீபாயின் மீது வைத்தவள் “எனக்குக் கொஞ்சம் கசகசனு இருக்கு… குளிச்சுட்டு வர்றேன் சனா… அதுக்கு அப்புறம் ஸ்விகில ஆர்டர் பண்ணிக்கலாம்” என்று கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொள்ள நிதர்சனாவும் தலையாட்டியபடி சோபாவில் அக்கடாவென சரிந்தாள்.
மீண்டும் அருள்மொழியின் அழைப்பின் உபயத்தால் மொபைல் அதிர வானதியின் அறைக்கதைவை ஒருமுறை பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றாள் நிதர்சனா.
குரலைத் தாழ்த்திக்கொண்டவள் “சொல்லுங்க சார்” என்கவும் மறுமுனையில் வேறொரு பெண்ணின் குரல் கேட்டதில் அமைதியானான் அருள்மொழி.
“ஹலோ சார் லைன்ல இருக்கீங்களா? இருந்தா என்ன விசயம்னு சொல்லுங்க… நதி குளிக்க போயிருக்குறா… நான் அவ ஃப்ரெண்ட் நிதர்சனா பேசுறேன்” என்று பதில் வரவும்
“ஓ! நத்திங் சீரியஸ்… நீ அவளோட மவுண்ட் காலேஜ்ல ஒன்னா படிச்ச ஃப்ரெண்ட் தானே” என்று வினவினான் அருள்மொழி.
“காலேஜ்ல மட்டுமில்ல சார், நாங்க சைல்ட்குட்ல இருந்தே ஃப்ரெண்ட்ஸ் தான்… அவளுக்காக தான் நான் மவுண்ட் காலேஜ்ல பொலிட்டிக்கல் சயின்ஸ் எடுத்தேன்… அவளுக்காக ஒன் இயர் ட்ராப் அவுட் ஆகி அப்புறமா அவ கூட சேர்ந்தே டிகிரிய முடிச்சேன்… அப்புறம் ஒரே ப்ளேஸ்ல வேலைக்கும் சேர்ந்தேன்… ஏன்னா நதினா எனக்கு உயிர்”
“அது சரி… அவ திமிருக்கு உன்னைத் தவிர வேற யாரும் அவளுக்கு ஃப்ரெண்டா இருக்க முடியாது… எனி ஹவ், மேடம் என்னோட கால்சை ஏன் அட்டெண்ட் பண்ணல?”
“ஐ டோன்ட் நோ சார்… பட் நீங்க அபிஷியலா எதாச்சும் சொல்லணும்னா என் கிட்ட சொல்லலாம்… நான் அவளுக்கு கன்வே பண்ணிடுறேன்”
“ஏன் அத மேடம் கேட்டுக்க மாட்டாங்களா? டூ யு லைக் டு ஒர்க் அஸ் அ மீடியேட்டர் பிட்வின் அஸ்?”
நிதர்சனா மானசீகமாக பற்களை நறநறத்துக் கொண்டாள். அவளது மனசாட்சியோ ஏன் வானதி இவனை அடிக்கடி வறுத்தெடுக்கிறாள் என இப்போது புரிகிறதா சனா என அவளிடம் கேட்டு அவளது கடுப்பை வாங்கிக் கட்டிக்கொண்டது.
பின்னர் “உன்னால என் கிட்ட மட்டும் தானே கடுகடுக்க முடியும்… நீ தைரியமான ஆளா இருந்தா லைன்ல இருக்குற நெடுமரத்து கிட்ட இதே கடுப்பை காட்டேன் பாப்போம்” என்று அவளைச் சீண்டிவிட்டு அடங்கியது.

நிதர்சனா அதனுடன் மல்லு கட்டிய நேரத்தில் பின்பற்றிய அமைதியை அருள்மொழி தயக்கம் என எடுத்துக்கொண்டு வழக்கமான அலட்சியத்துடன் பேசினான்.
“லுக்! அந்த வானதி வானத்துல ஏறி நிலாவ பிடிக்கப் போயிருந்தாலும் சரி, கீழ இறங்கி வந்ததும் எனக்குக் கால் பண்ண சொல்லு” என்று அதிகாரத்துடன் அவன் கட்டளையிட
“ஓகே சார்! பை த வே நீங்க என்னை நீ வா போனு சிங்குலர்ல கூப்புடுறது நல்லா இல்ல” என்று கமுக்கமாக பதிலளித்தாள் நிதர்சனா.
அருள்மொழியோ “உனக்கு என்னை நல்லா தெரியும்… எனக்கும் வானதி கூடவே சுத்திட்டிருந்ததால உன் முகம் பரிச்சயம் தான்… அதோட இப்ப நான் பேசுறது அபிஷியலா இல்லயே… சோ சிங்குலர்ல பேசலாம்… தப்பில்ல” என்று அமர்த்தலாக விடை பகர்ந்து அவளது ஒட்டுமொத்த எரிச்சலையும் வாங்கி கட்டிக்கொண்டதை அறியாதவனாக அழைப்பைத் துண்டித்தான்.
கடுப்புடன் மொபைல் தொடுதிரையை முறைத்த நிதர்சனா வானதியின் அறையில் அரவம் கேட்கவும் “அடியே நீ அந்த அருள்மொழிய கழுவி ஊத்துறப்பலாம் அந்தாளுக்குச் சப்போர்ட் பண்ணுனது எவ்ளோ பெரிய தப்புனு இன்னைக்கு ரியலைஸ் பண்ணிட்டேன் நதி… ஷப்பா, என்ன ஒரு மண்டைக்கனம்ங்கிற?” என்று படபடத்தபடி அங்கே சென்றாள்.
அங்கே அவளது தோழியோ தலையைக் கூட துவட்டாது பாத்ரோபுடன் கையில் யுவராஜின் புகைப்படம் அடங்கிய சட்டத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
கூந்தலிலிருந்து சொட்டிய நீருக்குப் போட்டியாக கண்களும் நீரைச் சொரிந்து கொண்டிருந்தது.
நிதர்சனா வேகமாக அவளருகே சென்றவள் அதை விட வேகமாக யுவராஜின் புகைப்படத்தைப் பிடுங்கினாள்.
“சனா”
“வாய மூடு… முதல்ல தலைய துவட்டிட்டு ட்ரஸ் சேஞ்ச் பண்ணு… நான் அதுக்குள்ள ஃபேஸ்வாஷ் பண்ணிட்டு ஸ்விகில லைட் புட்டா ஆர்டர் பண்ணுறேன்… எதுவா இருந்தாலும் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் உன் மனசுல இருக்குற துன்பத்தை பூராவும் நீ கொட்டு… அதை கேக்குறதுக்கு என்னோட காது தயாரா இருக்கு… ஆனா நோ மோர் டியர்ஸ்”
கண்டிப்பான அவளது தொனியில் வானதியின் கண்ணீர் நின்றது. நிதர்சனாவும் சொன்னது போலவே முகம் கழுவிவிட்டு வானதியின் இலகு உடையை கடன் வாங்கி அணிந்துகொண்ட பின்னர் ஸ்விகியில் உணவை ஆர்டர் செய்துவிட்டு பால்கனியில் கிடந்த இருக்கையில் காற்றாட அமர்ந்தாள்.
வானதி அங்கே வந்தவள் தனக்காக காத்திருப்பவளை கண்டு ஒரு நிமிடம் மனம் நெகிழ்ந்தாள்.
வாழ்க்கை என்னிடமிருந்து விலைமதிப்பற்ற என் அன்பு சொந்தங்களை பிரித்திருக்கலாம்! ஆனால் அந்த வாழ்க்கையால் கூட இவளை என்னிடமிருந்து பிரிக்க முடியவில்லை! இது தான் நட்பின் மகத்துவம் போல!
அமைதியான மனதுடன் நிதர்சனாவின் அருகே அமர்ந்தவள் அவள் ஏன் அருள்மொழியைத் திட்டினாள் என்று வினவி அவளின் படபட பட்டாசு பேச்சை கேட்க துவங்கினாள். நிதர்சனாவும் அவளுக்கே உரித்தான கேலி குரலில் ஏற்ற இறக்கத்துடன் தனக்கும் அருள்மொழிக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலை நகைச்சுவையாக நடித்துக் காட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் மனம் விட்டு சிரித்தாள் வானதி. நண்பர்கள் நமது பலகீனம் எதுவென அறிந்திருந்தாலும் நமக்குச் சுட்டிக்காட்டுவது நமது பலம் என்னவென்பதை தான்! ஏன் அவர்கள் நமக்கு முக்கியமானவர்கள் தெரியுமா? காலமாற்றத்தால் நாம் அநேகரால் வெறுக்கப்படும் போதும், விரும்பத்தகாதவர்களாய் மாறும் போதும் நமது நண்பர்கள் நம்மை விரும்புவார்கள்! எவ்வித அசூயையுமின்றி நம்முடன் கரம் கோர்த்து பயணிப்பார்கள்!
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction