இன்னைக்குக் காலையில எழுந்ததும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு உணர்வு! பக்கத்துல யாரும் இல்லை, போன்ல எந்த மெசேஜும் இல்லை. ஒரே அமைதி. இந்த அமைதியில என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச என் புத்தக உலகத்துக்குள்ள புகுந்துட்டேன். ஏன் நான் புத்தகத்தோடவே நேரத்தைச் செலவளிக்குறேன் தெரியுமா? மனுஷங்க கூடப் பேசணும்னா, யோசிக்கணும்; நம்ம பேசுறது அவங்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதானு கணக்கு போடணும். ஒரு வேளை நம்ம பேசுறது தப்பாயிடுமோ, சங்கடமா ஆயிடுமோனு ஒரு பயம். ஆனா ஒரு புத்தகத்தோட பேசறதுனா அப்பிடியில்ல. அங்க எந்தக் கட்டுப்பாடும் இல்லை. நாம அழுதாலும் சரி, சிரிச்சாலும் சரி, நம்ம இரகசியத்தைப் பகிர்ந்துகிட்டாலும் சரி, அது எதுவும் பேசாது. அப்படியே அமைதியா நம்ம கூடவே இருக்கும்.
-விழியின் மொழிகள்
யாரோ முகத்தில் தண்ணீர் தெளிக்கவும் மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்தாள் மலர்விழி.
“என்னாச்சு மலர்? ஏன் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்த?” ஈஸ்வரி பதற்றமாகக் கேட்க, மயங்கி எழுந்தவளின் பார்வையோ அவள் பின்னே நின்று கொண்டிருந்தவனை அல்லவா பயத்தோடு நோக்கியது.
“மெதுவா எழுந்திரு” இவ்வளவு நேரம் குற்றப்பத்திரிக்கை வாசித்த பேராசிரியை மீனாவுக்குக் கூட பரிதாபம் பிறந்துவிட்டது அவளது நிலையைப் பார்த்ததும்.
மலர்விழியின் கையைப் பற்றித் தூக்கிவிட்டார் அவர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மகிழ்மாறனின் விழிகளில் ஆராய்ச்சிப்பார்வை.
“இந்தா தண்ணி குடி” என்று ஈஸ்வரி தண்ணீர் தம்ளரை நீட்ட வாங்கி மடமடவென அருந்தினாள் மலர்விழி.
“நீ அந்த புக் ஷாப் பொண்ணுதானே?” இடையே அதிகாரமாய் அவனது குரல் ஒலித்ததும் கை தடுமாற தண்ணீர் தம்ளரும் தடுமாறியது. தண்ணீர் சிந்தியதால் நனைந்த கழுத்தைத் துப்பட்டாவால் துடைத்துக்கொண்டாள் மலர்விழி.

“ஆ..ஆமா சார்”
அவளது பயத்துக்குக் காரணம் ‘அந்தக் கல்லூரியின் கறாரான விதிமுறைகளே!’ ஒழுங்கீனமானச் செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கத் தயங்காத மேலாண்மை அவர்களுடையது.
‘அக்கவுண்டன்சி பிடிக்காது, அக்கா சொன்னாள் என்று வகுப்பைக் கட் அடித்தது எவ்வளவு பெரிய தவறு’ என்று உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டிருந்தாள்.
‘ஒருவேளை உன் பெற்றோரை அழைத்து வா என்று சொல்லிவிட்டால்?’
“அங்க பார்ட் டைம் ஒர்க் பண்ணுறியா?” மீண்டும் மகிழ்மாறனிடமிருந்து கேள்வி பிறக்க ஆமென அசைந்தது மலர்விழியின் தலை.
“எதுக்காக?”
“அப்பா… அப்பாவோட சம்பளம் வீட்டுச்செலவுக்கே சரியா போயிடும் சார். ஃபீஸ் கட்ட…”
“காலேஜ் ஃபீஸ் கட்டுறதுக்காக பார்ட் டைம் ஜாப்புக்குப் போற பொண்ணு செய்யுற வேலையா இது?”
வகுப்பைக் கட் அடித்ததைக் குறிப்புக் காட்டி கேட்டான் அவன்.
மலர்விழி தலையைக் குனிந்துகொண்டாள்.
“சாரி சார். இனிமே இப்பிடி செய்யமாட்டோம்” அவளுக்குப் பதிலாக ஈஸ்வரி வாக்கு கொடுத்தாள்.
“இப்ப செஞ்சதுக்கானக் காரணம் என்ன?”
நல்லவேளையாக அவள் மயங்கியதுமே துறைத்தலைவரும், முதல்வரும் அவசரவேலை வந்ததாகச் சொல்லிக் கிளம்பிவிட்டார்கள். அவர்கள் முன்னிலையில் மகிழ்மாறன் இவ்வளவு அதட்டலாக விசாரித்திருந்தான் என்றால் அழுதே தீர்த்திருப்பாள் மலர்விழி.
“இவளோட அக்கா புவன் சார் காலேஜுக்கு வந்திருக்காங்களானு பாத்துட்டு வரச் சொன்னா சார். அதனாலதான்”
ஈஸ்வரி உண்மையைக் கூறிவிட்டாள்.
“இது என்ன புதுக்கதை?” கூர்மை ஏறியது அவனது பார்வையில் மட்டுமில்லை, குரலிலும்தான்.
“கதை இல்ல சார். இவ அக்கா, ஐ மீன் பெரியப்பா பொண்ணு மதுமதியைப் புவன் சார் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க”
ஈஸ்வரி சொல்லவும் நம்பாதப் பார்வை பார்த்தான் மகிழ்மாறன். பெண் வீட்டார் தரப்பிலிருந்து இப்படி ஒரு சொந்தம் இருப்பதாக எந்தத் தகவலும் கூறவில்லையே!
அவர்கள் தரப்பிலிருந்து வந்த அனைவரோடும் ஒப்பிடுகையில் மலர்விழியின் தோற்றம் அத்துணை எளிமையாக இருந்தது அவனது சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது.
“இது கதையா இல்ல உண்மையானு இப்ப தெரிஞ்சிடும்” என்றவன் தனது மேஜையில் இருக்கும் தொலைபேசியைக் காட்டினான்.
“உன் பெரியப்பா நம்பர் தெரியும்ல”
“தெரியும் சார்”
“அவருக்கு இப்பவே கால் பண்ணு. நான் பேசுறேன்”
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவன் ஆணையிட மலர்விழியோ ‘பெரியப்பாவுக்கு இந்த விவகாரம் தெரிய வந்தால் கோபப்படுவாரே’ என்று பயந்தபடி தொலைபேசியின் பட்டன்களைத் தட்டினாள்.

அழைப்பு ஏற்கப்பட்டு “அலோ” என்று உச்சஸ்தாயியில் சிகாமணியின் மூத்த சகோதரரான மாணிக்கவேலுவின் குரல் கேட்டதும் ஸ்பீக்கர் பட்டனைத் தட்டிவிட்டான் மகிழ்மாறன்.
“அலோ யாருல பேசுதது? போனைப் போட்டுட்டு அமைதியா நின்னா என்ன அர்த்தம்?”
“வணக்கம் மாமா!”
ரிசீவரை மலர்விழியிடமிருந்து வாங்கியவன் ஓரமாகப் போய் நிற்குமாறு கட்டளையிட அவளும் ஒதுங்கி நின்றாள். தனது இருக்கையில் அமர்ந்தவன் பேராசிரியையையும் அமருமாறு சைகை காட்டினான்.
மறுமுனையில் மாணிக்கவேலு அவனது குரலைக் கண்டறிந்துவிட்டார்.
“ஐயோ சின்ன மருமவனா பேசுதது? மன்னிச்சிடுங்க தம்பி. தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்ததும் கொஞ்சம் பொடுபொடுனு பேசிட்டேன்”

சின்ன மருமகனா? மெதுவாக விழிகளை மகிழ்மாறன் பக்கம் திருப்பினாள் மலர்விழி.
‘புவனேந்திரனின் சகோதரனா இவன்? அவரிடமுள்ள கனிவும், புன்னகை ததும்பும் வதனமும் மிஸ்சிங்’
தன்னை ஒருத்தி ஆராய்ச்சியுடன் பார்ப்பதைக் கண்டுகொள்ளாமல் மாணிக்கவேலுவிடம் பேசிக்கொண்டிருந்தான் அவன்.
“அதெல்லாம் பிரச்சனை இல்ல. உங்களுக்கு ஒரு தம்பி இருக்காராமே?”
என்ன குரலில் மலர்விழியிடம் விசாரணை நடந்ததோ அதே குரல் அவரிடமும் கொக்கியாய்க் கேள்வியைக் கேட்டது.
“அது… ஆமா. ஒருத்தன் இருக்கான், பேரு சிகாமணி.”
“சம்பந்தம் பேசுனப்ப அவரைப் பத்தி நீங்க சொல்லவேல்லையே”
“சொல்லுத அளவுக்கு அவன் ஒன்னும் முக்கியமானவன் இல்ல தம்பி. வெட்டிப்பய. பொழைக்கத் தெரியாதவன்”
மாணிக்கவேலு பேச பேச மலர்விழியின் கண்களில் கண்ணீர்.
‘இந்த மனிதரின் தோட்டத்திற்காக உழைப்பவர் என் தந்தை. அவர் இல்லாவிட்டால் ஒன்றுக்கு இரண்டாகத் தோட்டங்களை யார் கவனிப்பார்கள்? மூன்று ஆட்களுக்கான வேலையை ஒருவரிடம் வாங்கிவிட்டு அரை சம்பளம் கொடுக்கும் மனிதர் என் தந்தையைப் பற்றி இகழ்ச்சியாகப் பேசுகிறார்’
மகிழ்மாறன் மலர்விழியின் முகத்தைக் கவனித்தபடியே “எப்பிடிப்பட்டவரா இருந்தாலும் அவர் உங்களோட கூடப்பிறந்தவர். நீங்க எங்க கிட்ட இந்த விவரத்தைச் சொல்லிருக்கணும்” என்றான் அழுத்தமாக.
மாணிக்கவேலு மறுமுனையில் தடுமாறினார். இப்போது சிகாமணியைப் பற்றி தவறாகச் சொன்னால் இவன் தன்னைப் பற்றி வேறுவிதமாக எண்ணிவிடுவான் என யோசித்தவர் சமாளித்தார்.
“கல்யாணத்தப்ப சொல்லிக்கிடலாம்னு இருந்தேன் தம்பி. எப்பிடியும் அவன் இல்லாம என் மவ கல்யாணம் நடக்கப்போறதில்ல.”
“ம்ம்! நல்லது. உங்க தம்பியோட பொண்ணு நம்ம காலேஜ்லதான் படிக்குறாங்களா?”
“ஆமா தம்பி. எம்.காம் முதல் வருசம். என் மவ மாதிரி நல்லா படிக்கிற பிள்ளையா இருந்தா என் செலவுல இஞ்சினியரிங் படிக்க வச்சிருப்பேன். மலருக்குப் படிப்பு வராது. அதை மறைக்க லைப்ரரி படிப்பு படிக்கப்போறேன்னு சொல்லிக்கிட்டு கிடந்துச்சு. நான்தான் சத்தம் போட்டு பி.காம்ல சேர்த்துவிட்டேன். குணத்துல குறை சொல்ல முடியாது தம்பி. குனிஞ்ச தலை நிமிராம காலேஜுக்குப் போவும்! வரும்! என் மவ கூட இன்னைக்கு மருமவனை விசாரிச்சிட்டு வானு அவ கிட்ட சொல்லிவிட்டா”
அவரிடம் பேசியபடியே மலர்விழியின் ஐ.டி கார்டில் இருந்த அவளது மாணவர் அடையாள எண்ணைத் தனது கணினியில் தட்டி, அதிலிருக்கும் மாணவர்கள் பற்றிய டேட்டாபேஷில் அவளது மதிப்பெண் விவரங்களைப் பார்வையிட்டான் மகிழ்மாறன்.
இளங்கலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள். முதுகலையிலும் போன செமஸ்டரில் மதிப்பெண் ஒன்னும் குறைவில்லை. ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாகவும் மதிப்பெண் இல்லை. அதிகம் அடி வாங்கியது கணக்குப்பதிவியலில்தான் போல’
விழிகளை உயர்த்தியவன் “நீங்க எம்.காம் ஃபர்ஸ்ட் இயருக்கு அக்கவுண்டன்சி எடுக்குறிங்களா மேடம்?” எனப் பேராசிரியையிடம் கேட்க அவர் ஆமெனத் தலையசைத்தார்.
இப்போது மகிழ்மாறனுக்கு முழு விவகாரமும் புரிந்துபோனது.
‘தமக்கை சொன்னது ஒரு காரணம்! இந்தப் பெண்ணுக்கே வணிகவியல் என்ற விருப்பமில்லாத பாடத்தின்மீது பிடிப்பு இல்லை’
மலர்விழியைப் பற்றி ஊகித்துக்கொண்டான் அவன்.
“சரி! கல்யாணத்துக்கு உங்க தம்பி குடும்பம் வருவாங்கனு நம்புறேன். எங்கப்பாக்கு இந்த ஒளிவு மறைவு, அந்தஸ்தை வச்சு ஆளுங்களுக்கு மரியாதை குடுக்குறதெல்லாம் பிடிக்காது”
கட்டளையிடும் பாணியில் சொல்லிவிட்டு மாணிக்கவேலுவின் அழைப்பைத் துண்டித்தான் மகிழ்மாறன்.
“சோ, உனக்கு அக்கவுண்டன்சியும் அவ்ளோவா பிடிக்காது இல்லையா?”
மலர்விழியும் ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“எல்லா நேரத்துலயும் நமக்குப் பிடிச்சது வாழ்க்கைல கிடைக்கணும்னு எதிர்பாக்கக் கூடாது. கிடைச்ச விசயத்தை ஏத்துக்கிட்டு அதுல பெஸ்ட்னு ப்ரூவ் பண்ணனும். புரியுதா?”

அவளது படிப்பைக் குறிப்பு காட்டி அவன் அறிவுரை சொல்லவும், சரியெனத் தலையாட்டினாள் மலர்விழி.
“நீங்க போகலாம். மேடம், க்ளாஸ் கட் அடிச்சதுக்கு என்ன பனிஷ்மெண்டோ அதை நீங்களே குடுத்துடுங்க”
பேராசிரியை மீனா அவனிடம் சொல்லிக்கொண்டு ஈஸ்வரியோடு வெளியேற, மலர்விழி தயக்கத்தோடு அங்கேயே நின்றாள்.
“நீ இன்னும் கிளம்பலையா?”
“அது… இந்த விசயம் எங்க பெரியப்பாக்குத் தெரிய வேண்டாம் சார்! தெரிஞ்சா அவர்..”
“சொல்லமாட்டேன். நீ போகலாம்”
“தேங்க்யூ சார்”
வேகமாகச் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் மலர்விழி.
“உன் அக்காவையா புவன் சாருக்குப் பேசிருக்காங்க?” என ஆச்சரியமாகக் கேட்டபடி வணிகவியல் துறைக்கு மலர்விழியையும் ஈஸ்வரியையும் அழைத்துப்போன பேராசிரியை நிறுமக்கணக்கு பற்றிய முக்கிய விபரங்களை ஒரு அசைன்மெண்டாக எழுதி வருமாறு சொல்லிவிட்டார்.
பிரச்சனை முடிந்ததென நிம்மதி பெருமூச்சு விட்டாள் மலர்விழி.
அதே நேரம் மகிழ்மாறனோ தந்தையின் எண்ணுக்கு அழைத்து மாணிக்கவேலு தங்களிடம் மறைத்த விவகாரத்தைக் கூறிவிட்டான்.
“பணத்துக்கு முக்கியத்துவம் குடுக்குற ஆளா தெரியுறார். நல்லா விசாரிச்சிங்கதானே?”
“விசாரிச்சவரைக்கும் அவரைப் பத்தி எல்லாருமே நல்லவிதமாதான் சொன்னாங்க மாறா. அவரோட தம்பி குடும்பம் எப்பிடிப்பட்டதுனு நமக்குத் தெரியாதே! அவங்க பக்கம் கூட தப்பு இருக்கலாம்”
“இருக்கலாம்பா! அதுக்காக இருக்குற உறவை மறைக்குறது நல்லா இல்ல.”
தனது எண்ணத்தைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு அடுத்து மலர்விழியைப் பற்றிய சிந்தனை எழவில்லை. அவனுக்கு முன்னே இருந்த பொறுப்புகள் அவனை இழுத்துக்கொண்டன தங்களுக்குள்!
அதே நேரம் அவன் சிகாமணியின் குடும்பத்தைப் பற்றி விசாரித்ததை அறிந்ததும் மாணிக்கவேலுவுக்குள் ஒருவித அமைதியின்மை.
“நம்ம மேல வருத்தம் எதுவும் வந்திருக்குமோ?” என மனைவி நிலவழகியிடம் கேட்டு மாய்ந்து போனார் அவர்.
“முன்னாடியே சொல்லியிருக்கலாம். நீதான் சொல்லவேண்டாம்னு என்னைத் தடுத்துட்ட” என்று அவரைக் குற்றம் சாட்டவும் நிலவழகிக்கு வந்ததே எரிச்சல்!
“ஆமா! உங்க தம்பி பெரிய மிராசு பாருங்க. இப்பிடி ஒரு குடும்பத்தைச் சொந்தம்னு சொன்னா நம்ம கௌரவத்துக்கு நல்லா இருக்காதுனுதான் மறைக்கச் சொன்னேன்” என்றவர் “இப்ப என்ன? நாம போய் கல்யாணத்துக்கு வானு கூப்பிட்டா உங்க தம்பியும் தம்பி குடும்பமும் வராமலா இருக்கப்போறாங்க? நல்லச்சாப்பாடு கிடைக்கும்னு சொன்னாலே உங்க தம்பி ஆளா பறப்பாரே!” எனச் சொல்லும்போது அத்துணை இகழ்ச்சியும் ஏளனமும் அவரது குரலில்.
சிகாமணி உணவுப்பிரியர். அதை அவ்வளவு இளக்காரமாகச் சொல்லிக் காட்டினார் நிலவழகி.
உடன்பிறந்தவனை மனைவி மட்டம் தட்டுகிறாளே என்ற சகோதர உணர்வின்றி மாணிக்கவேலுவும் அதற்கு சிரித்துவைத்தார்.
அந்நேரத்தில் அவருக்கு அழைப்பு வந்தது யாரிடமிருந்தோ. அதை ஏற்றவர் “சரிங்க மச்சான்! நீங்க எதுக்கும் கவலைப்படாதிய…. எல்லாம் முடிஞ்சுதுனு நினைச்சுக்கிடுங்க… அப்பிடியே ஆத்தூர் நிலம்… சரிங்க மச்சான். பேசி முடிச்சிடுதேன்…” என படபடவெனப் பேசிவிட்டுத் துண்டித்தார்.
“போன்ல யாரு?”
“ராஜதுரை மச்சான்”
“நிலம் பத்தி பேசுனிங்களா?”

“இல்ல! அவரு மவன் முரளி இருக்கான்ல. அவனுக்கு மலரைப் பிடிச்சிருக்குதாம். காலேஜுக்குப் போறப்ப பாத்திருக்கான் போல. கட்டுனா அவளைத்தான் கட்டுவேன்னு பிடிவாதமா ஒத்தக்காலுல நிக்கானாம்”
நிலவழகி உதட்டைச் சுழித்து மோவாயைத் தோளில் இடித்துக்கொண்டார்.
“அவ பெரிய உலக அழகி பாருங்க! கையில காதுல எல்லாம் கவரிங்கு. இத்துப்போன நாலு சுடிதாரு. என்னத்தைக் கண்டு மயங்குனானோ?” என்று அவர் பேச
“அது நமக்கு முக்கியமில்ல அழகி. இந்தச் சம்பந்தத்தை முடிச்சுக் குடுத்தா ஆத்தூர் நில விவகாரத்தைச் சுமூகமா செஞ்சு குடுக்குறதா ராஜதுரை சொல்லுறாப்ல. என்ன செய்யலாம்?”
ராஜதுரை போன்ற செல்வந்தரின் வீட்டுக்கு மலர்விழி மருமகளாகப் போவதில் நிலவழகிக்குச் சிறிதும் இஷ்டமில்லை.
‘இம்மாதிரி வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு தகுதி வேண்டாமா? அவள் செல்வந்தரின் மருமகளானால் என் மகளுக்கு நிகராக அவளது தரமும் சமுதாயத்தில் உயர்ந்துவிடுமே! இத்தனை வருடங்கள் அந்தக் குடும்பத்தைத் தட்டிவைத்தது எல்லாம் வீணாகிவிடுமே’
மனதுக்குள் பொறாமையில் கொந்தளித்தார் அவர்.
“ரொம்ப யோசிக்காத அழகி. அந்த முரளிப்பயலுக்கு நிலையானப் புத்தி கிடையாது பொம்பளை விவகாரத்துல. நாம காலந்தாழ்த்தி அவன் வேற ஒருத்திய பிடிக்குதுனு போயிட்டான்னா நமக்கு நிலம் கிடைக்காது”
‘முரளி பெண்கள் விவகாரத்தில் சரியில்லை போலவே! இதுபோதுமே!’
சந்தோசமாகச் சம்மதித்தார் நிலவழகி. இருவருமாகச் சேர்ந்து அப்போதே சிகாமணியின் வீட்டுக்குப் போய் அவரைச் சம்மதிக்கவைக்கத் தீர்மானித்தார்கள்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் இருவரும் நதியூரில் இருந்தார்கள்.
அவர்கள் போய் நின்ற சுண்ணாம்புக்காரை போட்ட ஓட்டுவீடுதான் மாணிக்கவேலு – சிகாமணியின் தந்தையும் தாயும் வாழ்ந்த பூர்வீக வீடு.
அந்த மனிதர் உழைத்து பணம், நிலம் எல்லாம் சேர்த்தப் பிறகு ரங்கநல்லூரில் வீடு வாங்கி குடிபெயர்ந்தார். சொத்துகளை இரு மகன்களுக்கும் சமமாத்தான் பிரித்துக்கொடுத்தார்.
அவரது மரணதுக்குப் பிறகு மாணிக்கவேலுவின் நரிக்குணத்தால் தன் பங்கு சொத்தை இழந்து நின்ற சிகாமணிக்கும் அவரது குடும்பத்துக்கும் மிஞ்சியது அந்தச் சுண்ணாம்புக்காரை வீடு மட்டுமே!
அந்த வீட்டைக் கொடுத்தற்கு இரண்டு வருடங்கள் சிகாமணி தோட்டத்தில் உழைத்ததற்கான ஊதியத்தில் பணம் பிடித்தவர் மாணிக்கவேலு.
எப்போதுமே அவருக்கும் நிலவழகிக்கும் சிகாமணியின் குடும்பம் தங்களது சொந்தம் என்ற உணர்வு கிடையாது. மற்ற ஊழியர்களைப் போலத்தான் நடத்துவார்கள். வேலை ஏவுவார்கள். சொந்தவேலைகளையும் செய்ய வைப்பார்கள். கூலி மிச்சம் என்ற எண்ணம்.
இதெல்லாம் சிகாமணியின் வெள்ளந்தி உள்ளத்துக்குப் புரியவேண்டுமே! தனது பொறுப்பின்மையால் வந்த கடன்சுமையை அடைத்த சகோதரன் அவருக்குத் தெய்வம். மதினியும் அவ்வாறே!
மாணிக்கவேலு – நிலவழகியின் குணங்களை நன்றாகப் புரிந்து வைத்திருந்தவர் குழலி மட்டுமே! காரியமில்லாமல் மூத்தவரும் அவரது மனைவியும் தங்களைத் தேடிவரமாட்டார்கள் என்று எத்தனையோ முறை கணவரிடம் எடுத்துச் சொல்லி ஒரு கட்டத்தில் அமைதியாகிப் போனவர் அப்பெண்மணி.
இதோ இப்போது கூட அவர்கள் தன் வீட்டுக்கு வந்ததும் அதே எண்ணம்தான் அவருக்கு.
வீட்டுக்குள் அழைத்து, அமரவைத்து, அவர்களே வாயைத் திறக்கட்டுமெனக் காத்திருந்தார்.
“சிகாமணி இன்னும் வரலையா?”
“சாப்பிட வர்ற நேரம்தான் மாமா”
பேசிக்கொண்டிருக்கையிலேயே ஓட்டமும் நடையுமாக அங்கே வந்து சேர்ந்தார் சிகாமணி.
“வாங்கண்ணே! வாங்க மதினி. ரொம்ப நாள் கழிச்சு வீடு தேடி வந்திருக்கிய” எனப் புன்னகை முகமாக வரவேற்றார் இருவரையும்.
“எல்லாம் நல்ல விசயமாதான்” என்று இழுத்தார் நிலவழகி.
“மதுவுக்கு ஒரு இடம் தகைஞ்ச மாதிரி சீக்கிரம் மலருக்கும் தகையணும்னு உன் மதினி சொல்லிக்கிட்டே இருந்தா சிகாமணி. அப்பதான் எனக்கு நம்ம ராஜதுரை மவன் முரளி இருக்கானே, அவனோட ஞாபகம் வந்துச்சு. அவரு மவன் நம்ம மலரைப் பாத்துப் பிடிச்சிருக்குனு சொன்னானாம். மச்சான் போன் பண்ணுறப்ப சொன்னாரு. சிகாமணி வீட்டுல பேசிடுனு கேட்டுக்கிட்டாரு. இந்த வாரம் பொண்ணு பாக்க வரச் சொல்லிடுவோமா?” என்று கேட்டார் மாணிக்கவேலு.
சிகாமணி ஏதோ சொல்லப்போக அதற்குள் குறுக்கிட்டார் குழலி.
“இப்பவே என்ன அவசரம் மாமா? அவ படிச்சு முடிக்கட்டுமே”

இதைக் கேட்டு மாணிக்கவேலு அதிருப்தியுற்றாரோ இல்லையோ அவரருகே அமர்ந்திருந்த நிலவழகி எரிச்சலுற்றார்.
“பெரிய உலக அழகிய பெத்ததா நினைப்பு. கஞ்சிக்கு வழியில்லனாலும் பகுமானத்துக்குக் குறைச்சலில்ல” என்று வாய்க்குள் முணுமுணுத்தவர் பின்னர் சத்தமாக “இப்பவே அவளுக்கு வரன் தகைஞ்சாதான் உண்டு. அவ என்ன எங்க மது மாதிரியா? எங்க மதுக்கு ஐ.டில வேலை. எங்க அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி பெரிய இடத்து மாப்பிள்ளை தகைஞ்சுது. நாங்க லேட் பண்ணவா செஞ்சோம்? நாங்களே அப்பிடினா உன் நிலமை என்னனு யோசி குழலி. ராஜதுரை அண்ணன் ஒரு பொட்டுத் தங்கம் வேண்டாம்னு சொல்லுறார். அவரே மருமவளுக்கு நகை போட்டுக் கல்யாணம் செஞ்சு வச்சிடுறதா சொல்லுறார். இதை விட நல்ல இடம் உன் மகளுக்குக் கிடைக்குமா?” என்று அதிகாரமாகக் கேட்டார்.
குழலிக்கு அவர் தங்களை உதாசீனப்படுத்தியதில் வருத்தமில்லை. இது காலம் காலமாக நடப்பதுதான். ஒரு சின்ன கடனைக் காரணம் காட்டி பூர்வீகச்சொத்தில் சிகாமணிக்கு இருந்த பங்கை எழுதி வாங்கிக்கொண்டு போனால் போகிறதென இந்த வீட்டைக் கொடுத்து தங்களைத் துரத்தியபோதே குழலிக்கு மனம் விட்டுப்போனது.
சிகாமணியின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தி சொத்தை எழுதி வாங்கிய பிறகு அவரைத் தோட்டக்காரர் போல நடத்துவதிலும் குறை வைக்கவில்லை மாணிக்கவேலுவும், நிலவழகியும்.
அவரது மகள்கள் ஷண்மதியும் மதுமதியும் போட்டுக் கிழிந்த துணிகளை மலர்விழிக்குக் கொடுத்தனுப்பும்போது கூட கலங்காத குழலியின் மனம், இப்போது மகளின் வாழ்க்கையை நாசம் செய்வது போல மாணிக்கவேலுவும் நிலவழகியும் ஒரு சம்பந்தத்தைக் கொண்டு வந்ததில் வெம்பியது.
‘பணம் இல்லை என்றால் விரும்பிய வாழ்க்கையை வாழும் உரிமை கூட கிடையாது இந்த உலகத்தில்!’
ராஜதுரையின் மகனுடைய நடத்தையைப் பற்றி ஒட்டுமொத்த நதியூரும் அறியும். பெண்கள் விசயத்தில் மோசம். போதாக்குறைக்கு டாஸ்மாக் குத்தகை வேறு! ஊரை அடித்து உலையில் போட்டுச் சம்பாதித்த பணம் யாருக்கு வேண்டும்?
இம்முறை தான் பேசாவிட்டால் அந்த அயோக்கியனோடு தன் மகளின் வாழ்க்கையை இணைத்துவிடுவார்கள் என்ற பதற்றத்தில் வேகமாகவே மறுத்தார் குழலி.
“எங்க தகுதிக்கேத்த மாதிரி இடத்துல இருந்து ஒழுக்கமான மாப்பிள்ளை வருவார்னு நான் நம்புறேன்கா. அந்த முரளிப்பய நடத்தை சரியில்ல. ஆணோ பொண்ணோ கற்பு ஒன்னுதானே. வசதியான இடம்னு யோசிச்சு, கிளிய வளர்த்து குரங்கு கையில குடுக்க முடியாது”
குழலியின் குரலில் தொனித்த அசாத்தியமான உறுதி மாணிக்கவேலுவையும், நிலவழகியையும் அசர வைத்துவிட்டது.
அப்போதே நாக்கைப் பிடுங்குவது போல கேட்டுவிடலாமா என்று நிலவழகி நினைத்தார்.
ஆனால் அவரது கணவர் பொறுமையாக இரு என்று கண் காட்டவும் அமைதியானார்.
‘மருமகனின் தம்பிக்கு இவர்கள் திருமணத்துக்கு வராவிட்டால் சந்தேகம் வந்துவிடும். கல்யாணவேலை வேறு இருக்கிறது. கூலிக்கு ஆள் வைத்தால் கூட சிகாமணி, குழலி, மலர்விழியைப் போல வேலை செய்யமாட்டார்களே!’
“சரி! அப்புறம் உங்க இஷ்டம்”
இருவரும் எழுந்து கொண்டார்கள். காரிலேறியபோது கூட நிலவழகியின் எரிச்சல் அடங்கவில்லை.
“என்ன வாய் பேசுறா பாருங்க. காலத்துக்கும் இவ மவளுக்குக் கல்யாணம் ஆகப்போறதில்ல. காலம் முழுக்க முதிர்கன்னியா கூடவே வச்சு அழகு பாத்துக்கட்டும்”
“அதை விடு. ராஜதுரைக்கு என்ன பதில் சொல்ல? அந்த முரளிப்பயலுக்கு மலரைப் பிடிச்சிருக்குதாம்”
“என் தம்பியும் தம்பி சம்சாரமும் முடியாதுனு சொல்லிட்டாங்கனு சொல்லுங்க”
வீட்டுக்கு வந்ததும் நிலவழகி மதுமதியிடம் நடந்ததைச் சொல்ல அவளோ உதட்டைச் சுழித்தாள்.
அவளும் குறை சொல்ல முடியாதப் பேரழகிதான். ஆனால் பணக்காரவீட்டுப்பெண் என்ற கர்வம் உண்டு. ஐ.டி துறை வேலையும், பெங்களூருவின் வாழ்க்கை முறையும் அவளை இன்னும் ஆணவமுள்ளவளாக மாற்றியிருந்தது.
ஏனோ மலர்விழியைப் பார்த்தாலே பிடிக்காது அவளுக்கு! தன்னைப் போல கலகலப்பாக யாரிடமும் பேசப் பழகத் தெரியாத பட்டிக்காடு என்ற எண்ணம்.

“ஏன் அவங்க வீட்டு விவகாரத்துல தலையிடுறிங்க? நம்ம கிட்ட வேலை பாக்குற எல்லாரை மாதிரி சிகாமணி சித்தப்பாவும் ஒரு வேலைக்காரன்னு சொல்லுவிங்க. இப்ப என்ன அக்கறை? அந்த மதுக்குக் கல்யாணம் ஆனா என்ன? ஆகலைனா என்ன?”
மதுமதிக்குமே மலர்விழி தன்னைப் போல செல்வந்தர் குடும்பத்துக்கு மருமகளாகப் போவதில் விருப்பமில்லை. அவள் தன்னை விட கீழே இருந்தால்தானே இஷ்டத்துக்கு வேலை ஏவ முடியும். தான் போட்டு வீணடித்த உடைகளை அணிபவள், பகுதிநேர வேலைக்குச் சென்று சொந்தமாக உடை வாங்கியபோதே மதுமதிக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
அவளது சகோதரி ஷண்மதிக்கு இந்த எண்ணமெல்லாம் கிடையாது. அதனால்தானோ என்னவோ சகோதரியிடமும் மதுமதி ஒதுங்கிக்கொள்வாள்.
தனது நிச்சயதார்த்தத்துக்கு மலர்விழியும் சித்தப்பா குடும்பமும் வரக்கூடாதெனப் பிடிவாதம் பிடித்தவளாயிற்றே!
“உங்கப்பா ஆத்தூர்ல ஒரு நிலம் கிரயம் பண்ணுறதா இருக்கார்டி. அதுல கொஞ்சம் வில்லங்கம் இருக்கு. அதுக்கு ராஜதுரை உதவி நமக்குத் தேவை. அவர் மகன் அந்தக் கழுதை மேல ஆசைப்படுறான். நமக்கு அவர் செய்யப்போற உதவிக்குக் கைமாறா இந்த மலரை அந்த வீட்டுக்கு அனுப்பிவைக்கலாம்னு பாத்தா அவ ஆத்தாக்காரியே மகளோட வாழ்க்கைய கெடுக்குறா. விட்டுத் தள்ளு”
அன்னையும் மகளும் மாறி மாறி மனதிலிருந்த சுயநல எண்ணங்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.
கல்யாண வேலை தலை மேலிருக்க, அதன் பின்னர் அவர்களுக்கு மலர்விழியின் திருமணத்தைப் பற்றி யோசிக்க எங்கே நேரமிருந்தது?
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction