“அரசியலானது எப்போதுமே வெற்றிடத்தை விரும்புவதில்லை. அங்கே உண்டாகும் வெற்றிடமானது நிரம்பியே ஆகவேண்டும். அதை நம்பிக்கையால் நிரப்புவதற்கு எவரும் இல்லையெனில், அவ்விடமானது பயத்தைக் கொண்டு நிரப்பப்படும்”
-எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் நவோமி க்ளெய்ன்
ராமமூர்த்தி அவரது வீட்டில் அவருக்கென அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக அலுவலக அறையில் யோசனையுடன் அமர்ந்திருந்தார். அவர் முன்னே சிதறி கிடந்த செய்தித்தாள்கள் அனைத்திலும் தலைப்புச்செய்தியாகவோ, ஒரு பக்க செய்தியாகவோ அல்லது மாவட்டச்செய்தியாகவோ அருள்மொழி சிரித்துக் கொண்டிருந்தான்.
தமிழக அரசியலில் இத்தகைய அணுகுமுறைகள் கூட இருக்குமா என பிற கட்சியினர் அதிசயித்து வியக்குமளவுக்கு அவனது நடவடிக்கைகள் இருந்தது தான் காரணம்.
இதோ அவன் அரசியலில் களமிறங்கி அறுபது நாட்கள் முடிந்தே விட்டது. இந்த அறுபது நாட்களில் அவனை அமலாக்கத் துறை விசாரித்த தினங்கள் மற்றும் அவனது சிறை தண்டனையான பதினான்கு நாட்களைத் தவிர்த்து மற்ற அனைத்து தினங்களிலும் அவன் கட்சிக்காக களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறான் என அவனைப் புகழ்ந்து தள்ளியிருந்தன பத்திரிக்கைகள்.
இந்த அறுபது நாட்களில் அவன் சந்தித்தது அரசியல்வாதிகளையோ கூட்டணி கட்சி தலைவர்களையோ அல்ல. பொதுமக்களைத் தான் அவன் சந்திருந்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
முதலில் சுந்தமூர்த்தியின் இறப்பைக் காரணம் காட்டி காவிரி பாயும் தஞ்சையில் காலை வைத்தவன் பின்னர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே நடந்த பொதுநிகழ்ச்சிகள் மற்றும் கட்சி தொடர்பான கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி மக்கள் மத்தியிலும் கட்சியினர் மத்தியிலும் நற்பெயரைச் சம்பாதித்து விட்டான்.
இதோ அடுத்தக் கட்டமாக மாணவர்களைச் சந்திக்க வேண்டுமென்பதே அவனது குறி. இளம் நெஞ்சங்களில் நல்ல தலைவர் என அவனது உருவத்தை பதிய வைக்கும் இம்முயற்சியிலும் அவன் வெற்றியடைவான் என்பதில் ராமமூர்த்திக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
இதற்கிடையே கடந்த சில தினங்களாக அவன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாவட்டங்களில் மக்கள் தங்கள் குறைகளைக் கொட்டி எழுதிய மனுக்களை அந்தந்த அரசுத்துறைகளுக்கு அனுப்பி வைத்து இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே ஆட்சியிலிருக்கப் போகும் வீரபாண்டியனின் அரசுக்கும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருந்தான்.
இதோ ராமமூர்த்தியின் முன்னே கிடந்த செய்தித்தாளில் கூட “கிட்டத்தட்ட ஃபிப்டி சிக்ஸ் மன்த்ஸ் இந்த அரசாங்கம் மக்களுக்குனு எதையுமே செய்யலங்கிறதுக்கு நாங்க கலெக்ட் பண்ணிருக்குற மனுக்கள் சாட்சி… அதுல நாங்க தில்லுமுல்லு பண்ணுனதா ஆளுங்கட்சிக்காரங்க பேசுவாங்கனு தான் மக்கள் கைப்பட எழுதுனதையும் எங்க கட்சிக்காரங்க அதை கலெக்ட் பண்ணுனதையும் வீடியோவா ரெக்கார்ட் பண்ணுனோம்… மக்களுக்கு இப்ப தேவை முதலமைச்சர் இல்ல… அவங்களுக்காக வேலை செய்யக்கூடிய ஒரு அரசாங்கம்… அரசாங்கம்ங்கிறது முதலமைச்சரும் பிரதமரும் மட்டும் தான்னு இத்தனை வருசத்துல ஒரு பொய்ப்பிம்பத்தை உருவாக்கி வச்சிருக்காங்க… அப்பிடி இல்ல… அரசாங்கம்ங்கிற குடைக்குக் கீழ முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அப்புறம் அரசுத்துறைகள், துறை சார்ந்த அதிகாரிகள் இத்தனை அத்தாரிட்டியும் அடங்குவாங்க…
இதுல நல்ல காரியங்கள் செய்யுறப்ப அதுக்கான கிரெடிட்டை டாப் மோஸ்ட் அத்தாரிட்டியான முதலமைச்சருக்குக் குடுத்து சட்டமன்றத்துல அவருக்குப் புகழ்மாலை பாடுறாங்க… ஆனா மக்கள் நலப்பணி எதுவுமே நடக்காம மக்கள் கஷ்டப்படுறப்ப மட்டும் ஈசியா அரசு இயந்திரத்த குறை சொல்லிடுறாங்க.. ஐ வாண்ட் டு சேன்ஜ் திஸ் சிச்சுவேசன்” என்று அமர்த்தலாக பேட்டியும் அளித்திருந்தான் அருள்மொழி.
கூடவே கடந்த சந்திப்பில் அவன் தன்னை மிரட்டியதும் அந்நேரத்தில் நினைவுக்கு வந்து தொலைத்தது ராமமூர்த்திக்கு. ஒருபக்கம் மக்களின் பிரதிநிதியாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு மற்றொரு பக்கம் ஆளுங்கட்சி என்ற யானையின் காதில் புகுந்த எறும்பாக அவர்களைத் துன்புறுத்தும் போதே சொந்தக்கட்சியினரில் தன் மீது அதிருப்தியில் இருப்பவர்களை ஓரணியாகத் திரள விடாமல் பார்த்துக் கொண்ட அருள்மொழியின் தந்திரத்தின் முன்னே அவரது இத்தனை வருட அரசியல் அனுபவமெல்லாம் மண்டியிட வேண்டும் போல!
ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்க பார்க்க ராமமூர்த்திக்குத் தலை வெடித்துவிடுமளவுக்கு ஆத்திரம்! மூளை சூடேறியது. தாறுமாறாக என்னென்னவோ சிந்தித்தது.
“நேத்து அரசியலுக்கு வந்த சின்னப்பய எனக்கே தண்ணி காட்டுறான்… இவனை இப்பிடியே விட்டா தமிழக முன்னேற்ற கழகம்னாலே அருள்மொழி தான்னு ஒரு பிம்பத்த உருவாக்கிடுவான்… விடக்கூடாது ராமமூர்த்தி… உன்னையே மிரட்டுனான்ல, உன் செல்வாக்கு என்னனு அவனுக்குக் காட்டியே ஆகணும்… நீ செய்யணும்னு நினைச்சது எதுவுமே தப்பில்ல… சீக்கிரமே மதுரைல கூட்டத்த கூட்டி என் பின்னாடி நிக்குற பிரமுகர்களை அவனுக்குக் காட்டுனா தான் அவன் கொஞ்சம் அடங்குவான்”
யோசித்து முடித்தவர் உடனே தனது தீவிர ஆதரவாளரும் கட்சியின் முக்கியப் பிரமுகருமான சந்திரகுமாரை மொபைலில் அழைத்துப் பேச ஆரம்பித்தார்.
“நம்ம நினைச்ச மாதிரியே இந்த மாசம் இருபத்தெட்டாம் தேதி மதுரைல நம்ம கட்சி மாநாடு நடந்தே ஆகணும்யா சந்திரா… என் செல்வாக்கு என்னனு சீக்கிரம் காட்டணும்… இத்தனை வருசம் நீ எனக்கு விசுவாசியா இருந்தது முக்கியமில்ல… இனிமே இருக்கணும்… நம்ம கட்சி ஜெயிச்சுடுச்சுனா எனக்குக் கிடைக்கப் போற பதவிய வச்சு உன்னையும் வளத்து விடுறேன்… என் மேல நம்பிக்கை வை… தெய்வநாயகம், மந்திரமூர்த்தி கூட சேர்ந்து மாநாட்டுக்கு ஏற்பாடு பண்ணு… கிட்டத்தட்ட இது மாநில அளவிலான மாநாடா இருக்கணும்யா… அந்த ராமனுக்கு மட்டுமில்ல, இந்த ராமமூர்த்திக்கும் ஒரு சொல் தான்… புரிஞ்சுதா?”
தன்னிச்சையாய் இவர் திட்டம் தீட்டிக் கொண்டிருக்க அவரது அண்ணன் மகனோ அந்தத் திட்டத்திற்கு அணுகுண்டு வைத்து தகர்த்தெறியும் நோக்கத்துடன் கட்சி பிரமுகர்களின் பட்டியலை அவனது மடிக்கணினியில் வாசித்துக் கொண்டிருந்தான்.
அதில் மாவட்டவாரியாக கட்சியின் முக்கிய நபர்களின் பெயர்கள் அடங்கியிருந்தது. அவர்களில் யார் தனக்கு எதிராக அணி திரளக்கூடியவர்கள் என்பதைக் குறித்துக் கொண்டவன் ராமமூர்த்தியிடம் சொன்னது போலவே அவர்களது தில்லுமுல்லுகளைக் கவனிக்கும் பொறுப்பை அகத்தியனிடம் கொடுக்க தீர்மானித்தான்.
அரசியலில் சிலரைத் தான் மிரட்டி பணிய வைக்க முடியும். சிலரை பணிய வைக்க பதவியாசை காட்டினால் போதும்! அதை சித்தப்பாவின் ஆதரவாளர்களிடம் சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டான் அருள்மொழி.

அவரது ஆதரவாளர்களில் மூவரைத் தேர்ந்தெடுத்தான் அருள்மொழி. அவர்கள் மூவருக்கும் கொடுக்க வேண்டிய வேலைகளின் பட்டியலை ஏற்கெனவே வானதி அனுப்பியிருந்தாள். அவன் இனி செய்யவேண்டிய வேலையென அவள் கூறியிருக்க அருள்மொழியோ அதை ராமமூர்த்தியின் ஆதரவாளர்களுக்கான வேலையாக மாற்றிவிட்டான்.
மடமடவென அவனது விரல்கள் மடிக்கணினியின் விசைப்பலகையில் நடனமாடத் துவங்கியது.
சந்திரகுமார் – நெசவாளர் குறை கேட்பு குழு தலைவர்
மந்திரமூர்த்தி – விவசாயிகள் குறை கேட்பு குழு தலைவர்
தெய்வநாயகம் – மீனவர்கள் குறை கேட்பு குழு தலைவர்
கட்சியின் லெட்டர்பேடில் அவன் தட்டச்சு செய்த விவரங்களை உதவியாளரை வைத்து செய்து முடித்திருக்கலாம். ஆனால் இந்த வேலையில் இரகசியம் காக்க விரும்பினான் அவன். காரணம் விசயம் காற்று வாக்கில் கசிந்து ராமமூர்த்தியின் செவிகளை அடைந்து விட்டால் போட்ட திட்டம் அனைத்தும் பாழாகி விடும்.
தட்டச்சு செய்துவிட்டு விரல்களைச் சொடுக்கிட்டுக் கொண்டவனின் விழிகளை யாரோ கரங்களால் மூடவும் “டேய் குட்டி பசங்களா” என்று கொஞ்சியபடி பிஞ்சு கரங்களை மெதுவாய் விலக்கினான்.
திரும்பிப் பார்த்தவனின் அருகே நின்று கொண்டிருந்தனர் யாழினி அகத்தியனின் பிள்ளை செல்வங்களான பிரகதீஷ் மற்றும் நியதி.
தங்களது முட்டைக்கண்களை உருட்டியபடி நின்றவர்கள் ஒரே குரலில் “மம்மி எப்ப வருவாங்க மாமா?” என்கவும் அருள்மொழிக்கு உருகி விட்டது.
தனக்காக இரவு பகலாக கட்சி வேலைகளை இழுத்துப் போட்டு செய்யும் யாழினியையும், தனது யூனிகார்ன் குழுமத்தின் மேலாண்மையைக் கவனித்தபடியே தனக்கு அரசியல் சூட்சுமங்களைக் கற்றுக் கொடுக்கும் அகத்தியனையும் நன்றியோடு நினைவு கூர்ந்தவன் இருவரையும் தூக்கி தன் மடியிலமர்த்திக் கொண்டான்.
“மம்மியும் டாடியும் கொஞ்சம் ஒர்க்ல பிசி… செல்லக்குட்டீஸ்கு தான் மாமா இருக்கேன்ல… என்ன வேணும்னு சொல்லுங்க… உடனே அத கொண்டு வர்றதுக்கு நானாச்சு” என்றான் அவன்.
அவர்களில் மூத்தவளான நியதி அவனது மோவாயைப் பற்றிக் கொண்டவள்
“எங்களுக்கு ஒரு கதை சொல்லுங்க மாமா… மம்மி கிட்ட கதை கேட்டு நாளாச்சு” என்று செல்லம் கொஞ்ச
“ஆமா மாமா… பாட்டி சொல்லுற கதையெல்லாம் போரடிக்குது… எல்லா கதையிலயும் ராஜாவும் ராணியும் மட்டும் தான் வர்றாங்க” என்று பிரகதீஷும் குறைபட அருள்மொழி அவர்களது குறைசொல்லும் படலத்தைக் கேட்டு உரக்க சிரித்தான்.
குழந்தைகள் சிணுங்கவும் “ஓகே ஓகே! நான் கதை சொல்லுறேன்… இது ராஜா ராணி கதை இல்ல… சாதாரண மனுசன் ஒருத்தனோட கதை” என்று அவர்களுக்குக் கதை சொல்வதில் மூழ்க ஆரம்பித்தான் அவன்.
அடுத்த சிலமணித்துளிகளுக்கு அங்கே ஆச்சரியக்குரல்களும் கிண்கிணி சிரிப்புச்சத்தமும் மட்டுமே கேட்டது. கதை முடியும் தருவாயில் குழந்தைகள் உறங்கிவிட அருள்மொழிக்கோ தொழிலிலும் அரசியலிலும் சந்தித்த இறுக்கங்கள் தளர்ந்து போனது.
அவர்களது அறையில் படுக்கை வைத்து விட்டு வெளியே வந்தவன் தமக்கைக்காகவும் அகத்தியனுக்காகவும் காத்திருக்க ஆரம்பித்தான், இனி குழந்தைகளைக் கவனிக்காது தொழில் அரசியல் என அதிலேயே மூழ்கிக் கிடக்கக் கூடாதென அவர்களிடம் பேச வேண்டும் என்ற முடிவுடன்.
அப்போது தான் வானதியிடமிருந்து மெசேஜ் வந்தது. அவனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் எப்போதும் உதவியாளரைக் கடந்து அவனிடம் செல்வதில் வானதிக்கு உடன்பாடில்லை.
ஏனெனில் தங்களது வியூகங்களோ செயல்பாட்டு முறைகளோ அருள்மொழியைத் தாண்டி மூன்றாவது நபருக்குத் தெரிந்துவிட்டால் அது செயல்படுத்தப்படும் முன்னரே தகவல் வெளியே கசிய வாய்ப்புள்ளது என்பது அவளது எண்ணம்.
எனவே தான் எந்த விசயமாயினும் நேரடியாக அருள்மொழிக்கு தகவல் அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்தாள் அவள்.
இதோ இப்போது அனுப்பியுள்ள தகவல் கூட முக்கியமானதாக தான் இருக்க வேண்டும்!
தனது வாட்சப்பை திறந்து பார்த்தவன் வழக்கம் போல அலுவல் ரீதியான வணக்கத்துடன் அருள்மொழி அவன் படித்த மவுண்ட் காலேஜில் மாணவர்களைச் சந்திக்கவிருக்கும் நிகழ்வு குறித்த தகவல்களை அனுப்பியிருந்தாள் வானதி.
அங்கே எத்தனை மணிக்கு செல்லவேண்டும் என்பதில் ஆரம்பித்து அவனுடன் யார் செல்லப் போகிறார் என்பது வரைக்கும் கச்சிதமாகத் திட்டமிட்டு அதன் சுருக்கத்தை அனுப்பியிருந்தாள். முழுவிவரமும் அவனது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு இந்நேரம் வந்திருக்கும்.
அவனது கல்லூரி சந்திப்பில் அவனுடன் வரப் போவது யாழினி என்று வானதி குறிப்பிட்டிருக்க அருள்மொழியின் புருவங்கள் யோசனையில் ஏறியிறங்கியது.
ஐ.பி.சி சார்பாக அவனுடன் வரப்போவது நிதர்சனா என்று அறிந்ததும் சலிப்பாக உணர்ந்தவன் திடீரென ஏதோ யோசனையுடன் வானதியின் எண்ணுக்கு அழைத்தான்.
அழைப்பு உடனே ஏற்கப்பட்டுவிட வேறேதும் பேசாமல் “நம்ம காலேஜுக்கு நான் போறப்ப என் கூட நீ தான் வர்ற” என்று கட்டளையிட்டான் அவன்.
மறுமுனையில் அவன் கூறியதைக் கேட்ட வானதிக்கோ கடுப்பாக இருந்தது.
“எக்ஸ்யூஸ் மீ! நான் என்ன உன் பார்ட்டி மெம்பரா? நீ ஆர்டர் போட்டதும் உன் பின்னாடி வால் பிடிச்சிட்டு வர்றதுக்கு? எனக்கு இங்க தலை போற வேலை ஆயிரம் இருக்கு மேன்… உன் கூட உன்னோட சிஸ்டரும் சனாவும் வர்றாங்கல்ல, அப்புறம் நான் எதுக்கு வரணும்?” என்று கடுகாய் பொரிந்தாள் அவள்.
அருள்மொழி அவளது தொனியில் எரிச்சலுற்றிருப்பான் என்று எண்ணியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவன் கேலியாகச் சிரித்தபடி “நீ சொல்லுற ரெண்டு பேரோட நேம் வானதியும் இல்ல, அவங்க எனக்காக வேலை பாக்குற கேம்பெய்ன் மேனேஜரும் இல்ல… உன்னோட சீஃப் மிஸ்டர் ஏ.கே மெயின் ஈவெண்ட்ஸ் எல்லாத்துலயும் என் கூட நீயும் கலந்துப்ப, அங்க அரேன்ஜ்மெண்ட்ல ப்ராப்ளம் வந்துச்சுனா ரெக்டிஃபை பண்ணுவனு சொன்னாரே… இது வரைக்கும் எந்த ஈவெண்ட்லயும் நீ என் கூட கலந்துக்கல மேடம்… பட் இதுலயும் கலந்துக்காம எஸ்கேப் ஆகலாம்னு கனவு காணாத… எனக்காக வேலை பாக்குறதுக்கு தான் உனக்குச் சேலரி குடுக்குறாங்க… நீ வர மாட்டேன்னு முரண்டு பிடிச்சா நான் ஏ.கே கிட்டவே பேசிக்கிறேன்… என்ன சொல்லுற?” என்று கிடுக்குப்பிடி போட
“சரி! நானே வர்றேன்… பட் ஒன் கண்டிஷன், அங்க போனதுக்கு அப்புறம் நீ பழைய விசயங்களை பேசுனேனா எத பத்தியும் யோசிக்காம கிளம்பி வந்துட்டே இருப்பேன்” என்று கறாராக எச்சரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் வானதி.
அருள்மொழி மொபைலை பார்த்து தோளைக் குலுக்கிக் கொண்டான். அவனது முகத்தில் அலட்சிய பாவனை குடிகொண்டுவிட்டது.
“நான் ஏன் பழைய விசயத்த பேசப்போறேன்? நீயே அத ரீகால் பண்ணி பாப்ப வானதி… எனக்கு முதல் தோல்விய குடுத்தப்ப நீயும் உன்னோட யுவாவும் சந்தோசப்பட்டதுல ஆரம்பிச்சு நீ ட்ராப் அவுட் ஆன வரைக்கும் எல்லாத்தையும் நீ மறுபடியும் நினைச்சுப் பாக்கணும்… அப்ப தான் உன் தலையில இப்ப ஏறியிருக்குற அகங்காரம் கொஞ்சமாச்சும் கீழ இறங்கும்”
அதே நேரம் வானதியோ நிதர்சனாவிடம் அருள்மொழியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
“அங்க போனா நான் எமோஷ்னலா ப்ரேக் டவுன் ஆவேன்னு தெரிஞ்சே கூப்புடுறான் அவன்… ஏன் தெரியுமா? அவனுக்கு முதல் தோல்விய அறிமுகப்படுத்துன நானே இன்னைக்கு அவனோட வருங்கால வெற்றிக்காக நாயா பேயா வேலை செய்யுறேன்னு எனக்குக் குத்திக் காட்டி சந்தோசப்படுறதுக்கு தான்! ஐ நோ அபவுட் ஹிம் வெரி வெல்” என்றவளை விசித்திரமாய் பார்த்தாள் நிதர்சனா.
அவளது பார்வையின் அர்த்தம் விளங்கியதும் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
“நமக்குப் பிடிச்சவங்களை மட்டுமில்ல, பிடிக்காதவங்களையும் நம்ம கவனமா வாட்ச் பண்ணுவோம்… எப்பிடி யுவாவோட பழக்க வழக்கம், மேனரிசம் எனக்கு அத்துப்படியோ அதே மாதிரி தான் அருளோட பிஹேவியர், அவன் எப்ப எப்பிடி ரியாக்ட் பண்ணுவான்ங்கிறதும் எனக்கு அத்துப்படி… அவன் என்னை காலேஜுக்கு கூப்புடுறான்னா அதுக்கு ஒரே ஒரு காரணம் தான் சனா… பாஸ்ட்ல நடந்த சில விசயங்களால ஹர்ட் ஆன அவனோட மேள் ஈகோவ சேட்டிஸ்ஃபை பண்ணிக்கிறது தான் அவனோட மோட்டிவ்”
என்ன தான் புலம்பினாலும் தான் அருள்மொழியோடு மவுண்ட் கல்லூரிக்குச் சென்று தான் ஆகவேண்டும் என்பதால் அதற்காக மனரீதியில் தன்னை ஆயத்தப்படுத்த தொடங்கினாள் வானதி.
நாம் வாழ்ந்து வரும் சமுதாயமானது ஆண்களின் மேலாதிக்க உணர்வினை (Male supremacy) அது அவர்களது இயல்பான உணர்வு என்று கூறியே அவர்களை வளர்த்து வருகிறது. அந்த மேலாதிக்க உணர்வின் சாராம்சமே பெண்கள் தங்களை விட ஏதோ ஒரு வகையில் குறைந்தவர்கள் என்பது தான்! அப்படியெல்லாம் தான் குறைந்தவள் இல்லை என்று ஒரு பெண் தனது செயல்பாட்டால் நிரூபிக்க முற்படும் போது சம்பந்தப்பட்ட ஆணின் ஈகோ காயப்படுகிறது. எவ்வளவு பரந்த மனப்பான்மை கொண்ட ஆணாக இருந்தாலும் இதை மட்டும் அவனால் ஏற்றுக்கொள்ள முடிவதே இல்லை.
உனக்கு நான் சளைத்தவள் இல்லை என நிரூபிக்கும் பெண்ணின் தலையில் தட்டி, நீ என்றும் எனக்குக் கீழே தான் என்று அடக்கி அமரவைக்கும் வரை சம்பந்தப்பட்ட ஆணால் நிம்மதியாகவே இருக்க முடியாது! இதுவே நிதர்சனம்!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction