“ஸ்கூல் படிக்கிறப்ப நாம சைக்கிள் ஸ்குவாட். ஞாபகம் இருக்கா அருள் உனக்கு? உன்னோட பெரிய சைக்கிள்ல நீ அச்சுவையும் சஞ்சையையும் வச்சு ரவுண்ட்ஸ் வருவ. நானும் வர்றேன்னு அடம்பிடிச்சா ‘நீ முதல்ல வளரு, அப்புறம் பெரிய சைக்கிளுக்கு வரலாம்னு’ சஞ்சய் கிண்டல் பண்ணுவான். நீ அப்பாவே ஸ்வீட் ஹார்ட் அருள். எனக்காக அப்பா கிட்ட பேசி என் உயரத்துக்கு ஒரு குட்டி சைக்கிள் வாங்கி குடுத்த. இப்பவும் அந்த சைக்கிள் முகிலகத்துல இருக்கு தெரியுமா?”
-வானதியின் கடிதம்…
‘டி.என் நெட்வொர்க் குழுமத்தின் வாரிசும், மேலாண்மை இயக்குனருமான ஆதர்ஷ் தன்னைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டதாகச் சஞ்சனா என்ற இளம்பெண் புகார். நான்கு மாதம் கருவுற்றிருக்கும் காதலியைக் கைகழுவிவிட்டுத் தமிழக முதலமைச்சரின் மகளைக் கரம்பிடிக்கத் திட்டம் போட்ட ஊடகக் குழுமத்தின் வாரிசு.’
தலைமைச் செயலகத்துக்குச் செல்லும் முன்னர் தினசரி செய்திகளைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்த ஜெயசந்திரனுக்கு, இந்தத் தலைப்புச் செய்தி தலையில் இடியாய் இறங்கியது.

தொலைக்காட்சியில் செய்தியின் சத்தம் கேட்டுப் பதறியடித்து வந்த கயல்விழியும் ஆதித்யனும், செய்தி வாசிப்பாளர் சொன்ன தகவலில் தலைசுற்றி மயங்கி விழாத குறை மட்டுமே!
நல்லவேளையாக அன்றைய தினம் வானதி சீக்கிரமாகவே ஜஸ்டிஸ் டுடேவுக்குச் சென்றுவிட்டதால், இந்தச் செய்தியைப் பார்ப்பதிலிருந்து அவள் தப்பித்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தலைப்புச் செய்தி அருள்மொழியின் செவியை மட்டும் விட்டுவைக்குமா என்ன? உள்ளுக்குள் குமிழிடும் உற்சாகத்தை மறைத்தவனாய்ப் படியிறங்கி வந்தவன், மொத்தக் குடும்பமும் சிலையாய்ச் சமைந்திருப்பதை ஆர்வமாய் நோக்கினான்.
“அந்த ராஸ்கல் எவ்ளோ பெரிய காரியத்தை மறைச்சிருக்கான் பாருங்கப்பா. இதுல அவங்க அம்மா நம்ம வானதியைக் குறை சொன்னாங்க. அவனை இன்னைக்கு ஒரு வழியாக்காம விடமாட்டேன் நான்” என்று முறுக்கிக்கொண்டு கிளம்பிய ஆதித்யனை ஸ்ரீநிதி அடக்கி வைத்தாள்.

கயல்விழிக்கு உடல் எல்லாம் பதறியது. எப்பேர்ப்பட்ட காமுகனிடம் மகளின் வாழ்க்கை சிக்கவிருந்தது என்று எண்ணினாலே தூக்கிவாரிப்போட்டது அவருக்கு. அதிர்ச்சியில் உறைந்தவர் அருள்மொழி வந்ததும் அவனது கையைப் பற்றிக்கொண்டார்.
“பாரு அருள்! இப்பிடிப்பட்டவன் கிட்ட தான் என் மகளை ஒப்படைக்க இருந்தோம்னு நினைச்சாலே நெஞ்சு பதறுது.”
“அதான் தெரிஞ்சிடுச்சுல்ல அத்தை. இனி நடக்கப்போறதை பாக்கலாம். டென்ஷன் ஆகாதிங்க.”

“அருள் சொல்லுறதுதான் சரி. இப்ப அழுது டென்ஷன் ஆகி கோவப்பட்டா என்ன மாறப்போகுது? இந்தச் சம்பந்தத்தை முறிச்சிடுவோம். வானதி தப்பிச்சிட்டானு சந்தோஷப்படுவோம்” என்றாள் ஸ்ரீநிதி நிதர்சனம் உணர்ந்தவளாய்.
ஆதித்யனுக்கு மனம் ஆறவில்லை.
“அவனை அப்பிடியே விடணுமா? அவன் கை காலை உடைச்சாதான் எனக்கு ஆத்திரம் அடங்கும்” எனக் குதித்தான் அவன்.
அருள்மொழி அவனது கேலியாய்ப் பார்த்தான்.
“நீங்க போய் அடிப்பீங்க. ‘முதலமைச்சர் மகனின் அராஜகம்’னு எதிர்க்கட்சியோட நியூஸ் சேனல் இதை பிரைம் டைம்ல போடுவான். இதால யாருக்கு நஷ்டம்? உங்கப்பாக்கு தினமும் கட்சிக்காரங்களால டிசைன் டிசைனா தலைவலி வரும். இதுல உங்க பங்குக்கு ஒன்னையும் சேர்த்துவிடப் போறீங்களா?”
ஜெயசந்திரன் சுதாரித்தது இந்தப் பேச்சைக் கேட்டுத்தான். மகனை ஊன்றிப் பார்த்தவர், “இவன் சொல்லுறதுதான் சரி. நீ கையை காலை வச்சிட்டுச் சும்மா இருந்தாலே போதும். இந்தச் சம்பந்தம் நடக்காதுனு சொல்லிடலாம்” என்றவர், “கல்யாண ஏற்பாடு எல்லாம் செஞ்ச அப்புறம் இப்பிடி ஆகிடுச்சே. எதிர்க்கட்சிக்காரன் சும்மாவே நக்கலடிப்பான், சொந்தக்காரன் அதுக்கும் மேல பேசுவான்” என்றார் புகைச்சலுடன்.
கயல்விழியின் கவலையே உறவுகளை நினைத்துதான்.
“அரசியல்ல அவன் ஆடாத ஆட்டம் ஆடுறான், பிள்ளைங்க வாழ்க்கை எப்பிடி இருக்கும்? இப்பிடித்தான் ஆகும்” என்பார்களே!
மகளுக்குத் திருமணம் என்று உறவுக்காரர்களில் ஆரம்பித்து நண்பர்கள் வட்டாரம் வரை பெருமையடித்தாயிற்று. இப்போது திருமணச் சம்பந்தம் முறிந்தது என்றால் அது எப்பேர்ப்பட்ட தலைகுனிவு!
“எனக்கும் என் வயித்துல வளருற குழந்தைக்கும் முதலமைச்சர் தான் நியாயம் வாங்கித் தரணும். நான் இதை இப்பிடியே விடப்போறதில்ல” என்று கோபமும் கண்ணீருமாகத் தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண் சஞ்சனா.
ஜெயசந்திரன் உதவியாளரை அழைத்தார். முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் தள்ளிவைக்கச் சொல்லிவிட்டார். பத்திரிகையாளர்கள் கூட்டம் வராமல் பார்த்துக்கொள்ளுமாறு அவர் கட்டளையிட்டபோது அருள்மொழி குறுக்கிட்டான்.
“நீங்க பிரஸ்ஸை சந்திக்கலனா அது பேசுபொருள் ஆகும்.”
சட்டெனத் திரும்பி அவனைப் பார்த்தார் ஜெயசந்திரன்.
“எப்பிடிச் சொல்லுற?”
“அந்தப் பொண்ணு தெளிவா முதலமைச்சர் தனக்கு நியாயம் வாங்கித் தரணும்னு சொல்லுறா. இந்த நேரத்துல பிரஸ்ஸைக் கூட்டி அந்தப் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கும்னு நீங்க பேசினா, இத்தனை வருஷ ஆட்சில வந்த சின்னச் சின்ன பிரச்சனையைக்கூட மக்கள் மறந்துடுவாங்க. மக்கள் மனசுல உங்களுக்கு நல்ல பிம்பம் ஒன்னு உருவாகும். காசு குடுத்து பி.ஆர் (PR) வேலை செஞ்சாலும் இந்தப் பிம்பத்தை உருவாக்குறது கஷ்டம். என்ன ஆதிண்ணா, நான் சொல்லுறது கரெக்ட் தானே?” என்று ஆதித்யனிடம் கேட்க, அரசியல் வியூக வகுப்பாளனாக அவனும் தலையாட்டினான்.
“அருள் சொல்லுறதும் சரிதான்பா. நீங்க பிரஸ் மீட் குடுங்க. ஆனா நான் வரல. என்னால பிரஸ் முன்னாடி பொறுமையா பேச முடியாது. அவங்க எடக்குமடக்கா கேள்வி கேட்டாங்கன்னா நான் பர்ஸ்ட் அவுட் ஆகிடுவேன். நீங்க இராஜேந்திரன் சித்தப்பாவ கூடவே வச்சுக்கோங்க” என்றான்.
இராஜேந்திரன் – அகத்தியனின் தந்தை. கட்சிக்காகத் தன்னலமில்லாமல் உழைப்பவர்களில் அவரும் ஒருவர்.
ஜெயசந்திரன் கூரிய விழிகளால் அருள்மொழியை ஒரு முறை ஆராய்ச்சியாய்ப் பார்த்தவர், பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கச் சம்மதித்தார். மனைவி இன்னும் அருள்மொழியின் கையைப் பிடித்தபடி நிற்கவும், “நீ என் கூட பிரஸ் மீட்டுக்கு வர்ற” என்றார் அவனிடம் ஆணையாக.
“நானா? எந்த வகையில அங்க நான் இருக்குறது உங்களுக்கு யூஸ்ஃபுல்?”

“இங்க யார்கிட்டயும் இல்லாத சட்ட அறிவு உன்கிட்ட இருக்கு. நிதானமா சூட்சுமமா பேசவும் தெரியுது. இக்கட்டான சூழலைத் திறமையா சமாளிக்குற குணம் உன் அப்பனுக்கு உண்டு. அதை உன்கிட்டயும் பாக்க முடியுது. வா என்கூட.”
அருள்மொழி சம்மதமாகத் தலையாட்டினான்.
“நீங்க டென்ஷன் ஆகக்கூடாது அத்தை. நான் வந்துடுவேன்” என்று சொன்னவன் ஜெயசந்திரனோடு கிளம்பினான்.
கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஜெயசந்திரனின் கார் கிளம்ப, பின்னிருக்கையில் அருள்மொழியோடு அமர்ந்திருந்தவரின் முகத்தில் யோசனைக் கோடுகள். இடையிடையே அவனையும் பார்த்து வைத்தார். தலைமை அலுவலகம் வந்ததும் அங்கே நின்ற பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஆயாசமாக இருந்தது அவருக்கு. நல்லவேளையாக அகத்தியனின் தந்தை இராஜேந்திரன் அவர்களைக் கட்டுப்படுத்தியிருந்தார்.
முதலமைச்சராக, அரசியல்வாதியாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்க அவர் யோசித்ததேயில்லை. இப்போது வந்திருப்பதோ புதுவிதமானச் சிக்கல். மகளின் வாழ்க்கை இதில் கேள்விக்குறியாகியிருக்கிறது. கொஞ்சம் நிதானம் தவறி அவர் ஒரு வார்த்தையை விட்டாலும் அது வரவிருக்கும் தேர்தலில் எதிரொலிக்கும். பெருமூச்சோடு அவர் இறங்க, தொடர்ந்து இறங்கினான் அருள்மொழி.
“தலைவரே! எல்லாரையும் மீட்டிங் ரூமுக்கு வரச் சொல்லிடுறேன். தம்பி! நீ தலைவரோட போப்பா.”
உதவியாளரும் கமாண்டோக்களும் ஜெயசந்திரனை யாரும் நெருங்காத வண்ணம் பார்த்துக்கொண்டார்கள். அருள்மொழிக்கு இந்த அரசியல் சூழல் புதிதாக இருந்தது. கொஞ்சம் சுவாரசியமாகவும்.
பத்திரிகையாளர் சந்திப்பு அறையில் ஏமாந்த பெண்ணை முன்னிறுத்தியே கேள்விகள் வைக்கப்பட்டன.
“அந்தப் பொண்ணு சஞ்சனா உங்க மேல நம்பிக்கை இருக்குனு சொல்லிருக்காங்க சார். உங்க பதில் என்ன?”
“நானும் ஒரு பொண்குழந்தைக்குத் தகப்பன். என்னை நம்பி நியாயம் கேட்ட அந்தப் பொண்ணுக்கு நிச்சயம் எல்லாவிதத்துலயும் நானும் இந்த அரசும் துணையாக இருப்போம். சம்பந்தப்பட்டவங்க மேல சட்ட நடவடிக்கை எடுக்குறதுக்கான வேலைகள் சீக்கிரமே ஆரம்பிக்கும்.”
“சொந்த மகளுக்குச் சரியான கணவனைத் தேர்ந்தெடுக்காதவரா தமிழ்நாட்டு மக்களுக்குச் சரியான ஆட்சியைக் குடுப்பார்னு வரப்போற சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசியிருக்கிறாரே! அதுக்கு உங்க பதில்?”
ஜெயசந்திரனுக்குத் தலை சூடானது. அவரது பார்வை மாறியதில் அதைக் கண்டுகொண்டான் அருள்மொழி.
“எக்ஸ்கியூஸ் மீ!”
அந்த நிருபரின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பினான் அவன். அனைவரின் கண்களும் கேமராக்களும் அவன் பக்கம் திரும்பின.

“அரசியல்ல சொந்த வாழ்க்கை பத்தி விமர்சனம் செய்யுறது முதிர்ச்சியில்லாத செய்கையா தெரியுது. முதலமைச்சரோட அணுகுமுறையை அரசியல் ரீதியா விமர்சனம் செய்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு எல்லா உரிமையும் இருக்கு. இது முதலமைச்சரோட சொந்த வாழ்க்கையைக் குறித்த பிரச்சனை. இதுல கேள்வி எழுப்பவோ கேலி செய்யவோ யாருக்கும் உரிமை இல்லனு நான் நினைக்கிறேன். அரசு இயந்திரம், சட்ட ஒழுங்குனு எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேக்க வேண்டிய துறைகள் நிறைய இருக்கு. அவரோட கவனத்தை அந்தப் பக்கம் பதிச்சிருந்தார்னா இந்நேரம் அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்கவே மாட்டார். அவரோட சின்னப்பிள்ளைத்தனமான கேலிப்பேச்சை நியாயப்படி நீங்க கண்டிச்சிருக்கணும்.”
நிமிர்வாக அவன் பதில் சொன்ன விதத்தில் கேள்வி கேட்ட நிருபரோடு மற்றவர்களின் வாய்களும் மூடிக்கொண்டன.
அருள்மொழி இங்கே பத்திரிகையாளர்களைச் சமாளித்த நேரத்தில், ஜஸ்டிஸ் டுடேவில் வானதி கொதித்துப் போயிருந்தாள். ஆதர்ஷின் முகத்திரையை சஞ்சனா கிழித்துக் காட்டியதில் அதிர்ச்சியும் கோபமும் அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.
“ரிலாக்ஸ்! இதுவே கல்யாணத்துக்கு அப்புறம் தெரிய வந்திருந்தா உன் வாழ்க்கை என்னாகியிருக்கும்? காட் இஸ் கிரேட் வானதி” என்றாள் மூத்த புலனாய்வுப் பத்திரிகையாளரான ஸ்ராவணி.
“அப்பிடி இல்ல ஸ்ராவணிக்கா. அந்த ராஸ்கலை நினைச்சா எனக்கு ஆத்திரமா வருது. காதலிச்சவளைக் கர்ப்பமாக்கிட்டு என் கையில நிச்சயதார்த்தத்துல மோதிரம் போட்டிருக்கான். இந்த அடாசிட்டி ஆம்பளைங்களுக்கு எங்க இருந்து வருது? நினைக்க நினைக்கத் தலை எல்லாம் சூடாக்குது. நான் அவனை அவ்ளோ ஈஸியா விடப்போறதில்ல.”

கொந்தளித்தவளின் முகத்தில் ரௌத்ரகாரத்தின் அனல்! இடையே விஷ்ணு பிரகாஷும் வந்து பேசியதில் கொஞ்சம் தணிந்தவள், இடையே தொலைக்காட்சியில் தந்தை முகம் வாட அமர்ந்திருப்பதையும் அருள்மொழி அவருக்காகப் பேசுவதையும் பார்த்தாள்.
வானதிக்கு ஜெயசந்திரனின் முகம் இப்படிச் சோர்ந்திருப்பதைப் பார்க்கப் பார்க்க வெறியானது. அவளைப் பொறுத்தவரைக்கும் அவளது தந்தை ஹீரோ. அவரை இந்நிலையில் தள்ளிய ஆதர்ஷின் செய்கைகளை அவள் அருவருத்தாள்.
மொத்த வெறியையும் காரின் ஸ்டீயரிங் வீலில் காட்டி வீடு வந்து சேர்ந்தவள், இருளின் கருமையோடு போட்டி போடுவது போல ஆதர்ஷின் தந்தையுடைய ஜாகுவார் முகிலகத்தின் தரிப்பிடத்தில் நிற்பதைப் பார்த்ததும் கோபத்தில் அறிவிழந்தாள்.
செருப்பைக்கூடக் கழற்றாமல் அவள் ஆவேசத்தோடு வீட்டுக்குள் நுழையும்போது ஆதர்ஷின் தந்தை தணிந்த குரலில் ஜெயசந்திரனிடம் பேசுவது கேட்டது.
“பையன் கொஞ்சம் கேசுவலா பழகிட்டான். அந்தப் பொண்ணுக்குச் செட்டில்மெண்ட் குடுத்து அனுப்பிலாம்னு இருக்கோம். கல்யாணம் நிச்சயிச்ச தேதியில நடக்கட்டும் சம்பந்தி.”
“இப்பிடிப் பேச உங்களுக்கு அசிங்கமா இல்ல?”
கோபத்தில் கத்தியபடி வந்த வானதியை அங்கே யாரும் அப்போது எதிர்பார்க்கவில்லை. ஆதர்ஷின் தந்தை முகம் மாற, அவனது அன்னையோ மகனுக்காகப் பேச முன்வந்தார்.
“அவன் மனசுல இந்த நிமிஷம் நீ மட்டும்தான் இருக்க வானதி.”
“யாருக்கு வேணும் அந்த இடம்? நான் என்ன போக்கிடம் இல்லாத நாடோடியா, உங்க மகன் மனசுல குடியிருக்குறதுக்கு? அவன் செஞ்ச மாதிரி நான் யாரோ ஒருத்தன் கூட பழகிட்டு நாலு மாசம் புள்ளையோட வந்து நின்னா, கேசுவலா பழகிட்டேன்னு என்னை ஏத்துப்பீங்களா நீங்க? அதென்ன ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயம்? செட்டில்மெண்ட் குடுப்பேன்னு வெட்கமே இல்லாம சொல்லுறீங்க. காதல்ங்கிற போர்வைல உங்க மகன் அந்தப் பொண்ணை ஏமாத்துனது என்ன கணக்கு?”

வானதி கொதித்துக் குமுறுவதை மேல்தளத்தில் இருந்து கோணல் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் அருள்மொழி. அவனுக்கு இதெல்லாம் பார்க்கச் சுவாரசியமாக இருந்தது.
‘ஆக இவளுக்கு ஒழுக்கக்கேடு என்பது பிடிக்காத ஒன்று’ – மனதில் குறித்துவைத்துக் கொண்டான் அவன்.
“அந்தப் பொண்ணு ஹனி டிராப் பண்ணி என்னை ஏமாத்திட்டா வானதி!”
குரல் வந்தது வாயிலில் இருந்து. ஆதர்ஷ் தான்! அருள்மொழிக்கு அவனைப் பார்த்ததும் அருவருப்பு. ஆனால் வானதிக்கோ ஆத்திரம் தலைக்கேறியது.

வேகமாகப் போய் அவனது சட்டை காலரைப் பற்றியவள், “ஏன்டா நீ செஞ்ச பொறுக்கித்தனத்தை அவ தைரியமா சொன்னா ஹனி ட்ராப்னு ஏமாத்துறியா? ஹனி ட்ராப் பண்ணுறவ எதுக்கு மீடியாவுக்குப் போனா, எதுக்கு கமிஷனர் ஆபீஸ்ல உன் மேல கம்ப்ளைண்ட் குடுத்தா? இவ்ளோ தூரம் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தும் நீ சமாளிக்கப் பாக்குற. உனக்கு என்னைப் பாத்தா எப்பிடித் தெரியுது? எச்சில் இலையில சாப்பிடுறவ மாதிரியா? ஒழுக்கமா, தன்னோட வாழ்க்கையைப் பிணைச்சுக்கிட்ட பொண்ணுக்கு உண்மையான கமிட்மெண்ட்டோட வாழத் தெரியாத ஆம்பளை எச்சில் இலைக்குச் சமம். சீ! நீயெல்லாம் என்ன ஜென்மம்?” என்று வசைமாரி பொழிந்தாள்.
ஆதர்ஷ் அவளது கையைப் பற்ற வரவும், பொறுமையிழந்து கன்னத்தில் பளாரென அறைந்தவள், “உன்னால இன்னைக்கு என் அப்பாவைக் கண்டவன் எல்லாம் கேலியாப் பேசுறான். என் அப்பா உன்னால மீடியா முன்னாடி பேச முடியாம உக்காந்திருந்தார். உன்னை எல்லாம்…” என்று பேசிக்கொண்டே காலில் இருந்த செருப்பை அவள் கழற்றிக் கையில் எடுக்கவும், நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்து மாடிப்படியில் வேகமாக இறங்கி ஓடிவந்தான் அருள்மொழி.
மற்றவர்கள் அவளது கோபத்தைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றார்கள். எச்சூழலிலும் நிதானமிழக்காத பெண் என்று பெயர் வாங்கியவளாயிற்றே!
அவனது வேகத்தையும் மீறி ஆதர்ஷின் கன்னத்தில் வானதியின் செருப்பு முத்தமிட்டுவிட, அடுத்த அறை வைக்கும் முன்னர் வானதியை அவனை விட்டு விலக்கித் தன்னிடம் இழுத்துக் கொண்டான் அருள்மொழி.

“என்னை விடு அருள்! என் கை வலிக்குற வரைக்கும் இவனை அடிக்கணும்.”
“கண்ட்ரோல் யுவர்செல்ப் வானதி. இது நல்லா இல்ல.” அருள்மொழி அவளை அடக்கியவன், செருப்பைப் பிடுங்கித் தூர எறிந்தான்.
“விடு என்னை!” என்று திமிறியவளின் கையைப் பற்றியவன்,
“பேசி இவங்களை அனுப்பி வைச்சிடுங்க” என்று ஆதித்யனிடம் சொன்னபடியே வானதியை அவளது அறைக்குள் அழைத்துச் சென்றான்.
“விடு அருள் என்னை! அந்த ராஸ்கல் மூஞ்சியை உடைச்சாதான் என் ஆத்திரம் அடங்கும்” எனக் கத்திக்கொண்டே வந்தவள் மீண்டும் வெளியேறப் பார்க்க, அவளது கையைப் பற்றி இழுத்து வலுக்கட்டாயமாகப் படுக்கையில் அமரவைத்தான் அருள்மொழி.
“படிச்சவ மாதிரி நடந்துக்க வானதி. அதான் அடிச்சிட்டல்ல, ரிலாக்ஸ்.”
“முடியாது! என்ன தைரியத்துல அவங்க கல்யாணத்தை வச்சுக்கலாம்னு பேச வந்திருப்பாங்க? அந்த ராஸ்கல் ஹனி டிராப்னு கதை விடுறான். ஹனி ட்ராப்பாம், மை ஃபுட்!”
அவள் பேசிக் கொண்டிருக்கையிலேயே அருள்மொழி அந்த அறையை விட்டு வெளியேறியவன், கதவை வெளிப்புறமாகத் தாழிட்டான். வானதி உள்ளே இருந்து கதவைத் திறக்குமாறு கத்தியதற்கு அவன் இரங்கவேயில்லை.

ஏனோ அவள் இப்படி கத்திக் கத்தித் தொண்டையைப் புண்ணாக்கிக் கொள்வதைப் பார்க்கச் சகிக்கவில்லை. கண்ணாடி கதவு பக்கம் வந்தவளிடம் சாவியைக் காட்டியவன் சைகையால் அவளிடம் பேசினான்.
“ஆதர்ஷும் அவன் பேரண்ட்ஸும் போன அப்புறம் கதவைத் திறந்துவிடுறேன்.”
உட்புறமிருந்தவளோ கதவை உடைக்குமளவுக்குக் கோபத்தில் கத்தினாள். ‘பொறுமை’ எனக் கை காட்டிவிட்டு அருள்மொழி போய்விட, வானதி அந்த அறைக்குள் கூண்டுப்புலியாய் அடைபட்டுக் கிடந்தாள்.
வெளியே ஜெயசந்திரன் ஆதர்ஷின் தந்தையிடம், “இந்தச் சம்பந்தம் முறிஞ்சிட்டதா நினைச்சுக்கோங்க. இன்னொரு பொண்ணைக் கர்ப்பமாக்கிட்டு என் மகளோட கல்யாணத்துக்குத் தயாரானது உங்க மகன் செஞ்ச பெரிய துரோகம். அதுக்கான விலையை நீங்க குடுக்கணும். கிளம்பிடுங்க. இல்லனா கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ள வேண்டியதா இருக்கும்” என்று இறுகிய முகத்தோடு எச்சரித்தார்.
மூவரும் பேரம் படியாதக் கவலையோடு வெளியேற, ஆதித்யனும் ஜெயசந்திரனும் ‘அடுத்து என்ன செய்வது?’ என்ற குழப்பத்தோடு சோஃபாவில் அமர்ந்தார்கள்.
இந்த இரணகளத்தில் கயல்விழியின் பார்வை அருள்மொழியை விட்டு மட்டும் அகலவேயில்லை. காலையில் கணவரோடு கட்சி அலுவலகம் சென்றது, நிருபர்களின் கேள்வியைச் சமாளித்தது, இதோ இப்போது கோபத்தில் குமுறிய மகளைக் கட்டுப்படுத்தியது என அனைத்தையும் கண்களில் ஈரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
அவரது மனம் அருள்மொழியையும் வானதியையும் இணைத்துப் பார்த்தது அந்நொடியில்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

